Workers Struggles
தொழிலாளர்
போராட்டங்கள்
Use
this version to print
பெரு
ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைய
முயற்சி
பேருவின் தலைநகரான லீமாவில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்குள்
சுமார் ஆயிரம் ஆர்ப்பாட்டக்காரர்கள் பெப்பிரவரி 16ம் திகதி
நுழைந்து கொள்ள முயன்றுள்ளனர். இராணுவமும் பொலிசாரும்
பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராகக் கண்ணீர் புகை
தாக்குதலில் ஈடுபட்டனர். ஜனாதிபதி புஜிமோரின்
பொருளாதாரக் கொள்கையை எதிர்த்தும் ஏப்பிரல் 9ம் திகதி
நடைபெற உள்ள தேர்தலில் அவர் மூன்றாவது தடவையாகவும்
ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுவதற்கு எதிராகவும்
தொழிலாளர், ஆசிரியர்கள், மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில்
ஈடுபட்டனர்.
ஒரு நாள் பூராவும் இந்த ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதியின் கொடும்பாவிக்கு தீமூட்டியும்
ஆர்ப்பாட்ட சுலோகங்களை கோஷித்தும் தமது எதிர்ப்பை வெளிக்காட்டிக்
கொண்டனர். புஜிமோர்வாக்குகளைச் சுருட்டிக் கொள்ளும்
பொருட்டு வீடமைப்பு திட்டங்களை துஷ்பிரயோகம் செய்வதையும்
இவர்கள் கண்டனம் செய்தனர்.
மொறாக்கோ
அரசாங்கத்தின் கல்விக் கொள்கைக்கு எதிராக ஆசிரியர்கள்
வேலை நிறுத்தம்
அரசாங்கத்தின் கல்விக் கொள்கைக்கு எதிராக மொறாக்கோவின்
ஆரம்ப, இடைநிலை பாடசாலை ஆசிரியர்கள் பெப்பிரவரி 17ம் 18ம்
திகதிகளில் இரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர்களின்
சுதந்திர ஆசிரியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் மொஹமட்
பென்ஜெலவுன் அண்டலவுஸ்கி ஆசிரியர்களின் கோரிக்கைகளை நசுக்கும்
அரசாங்கத்தின் முயற்சியைக் கண்டனம் செய்ததோடு ஆசிரியர் சம்பளம்
மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிக்கும்படியும் வேண்டிக்
கொண்டார். அத்தோடு பதவி உயர்வுகளில் "பரந்ததும்
நீதியானதுமான திருத்தங்கள்" செய்யப்பட வேண்டும் எனவும்
அவர் வேண்டினார்.
மொறாக்கோ தொழிலாளர் பொது சங்கம், மொறாக்கோ
தொழிலாளர் சங்கம் என்பன இந்த வேலை நிறுத்தத்துக்கு
ஆதரவு வழங்கியுள்ளன. இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளாத
ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் பெப்பிரவரி 23ம் திகதி வேலைநிறுத்தத்துக்கு
அழைப்பு விடுத்துள்ளது.
நைஜீரியா
தொழிலாளர் நடை பவனி
நைஜீரிய ஐக்கிய தொழிலாளர் முன்னணியின் 5000 தொழிலாளர்களும்
ஆதரவாளர்களும் பெப்பிரவரி 17ம் திகதி நைஜீரியாவின் தலைநகரான
மனாகுவாவேயின் வீதிகளூடாக நடை பவனியொன்றை நடாத்தினர்.
அரசாங்கத்தின் ஊழல்கள், தொழிலாளர்களதும் விவசாயிகளதும்
வறுமைக்கு பொறுப்பான காரணிகளை நீக்கும்படி அவர்கள் கேட்டுக்
கொண்டனர்.
சமூக நலன்புரி சேவைகளை தனியார்மயமாக்கும் சட்டவிதிகளை
அகற்றும்படி தொழிற்சங்கத் தலைவர் குஸ்னடாவோ பொரொஸ்
வேண்டினார். தொழிலாளர்களின் ஓய்வூதியத்தை பாதிக்கும் பிரச்சினைகளைப்
பற்றிய பேச்சுவார்த்தைகளுக்கு தயாராகுமாறும் அவர் அரசாங்கத்துக்கு
அழைப்பு விடுத்தார்.
தனியார் துறை தொழிலாளர்கள் பேரம் பேசும் உரிமையைக்
காக்கும் பொருட்டு சட்ட விதிகளை இயற்றும்படியும் எரிபொருள்,
பொதுப் போக்குவரத்து வரிகளைக் குறைக்கும்படியும் நைஜீரிய
ஐக்கிய தொழிலாளர் முன்னணி (FUT)
தெரிவித்துள்ளது. கல்வி சுகாதார சேவைகளின் பலவீனங்களையும்,
பொருட்களின் விலை உயர்வையும் கண்டனம் செய்யும் சுலோகங்களை
நடை பவனியில் இறங்கிய தொழிலாளர் கோஷித்தனர்.
கனடா
கல்காரி ஹொரால்ட் தொழிலாளர் போராட்டம் 6 மாதங்களைத்
தாண்டியுள்ளது
கனடாவில் இருந்து வெளிவரும் கல்காரி ஹொரால்ட் புதினப்
பத்திரிகை தொழிலாளர் போராட்டம் 6 மாதங்களைத் தாண்டியுள்ளது.
இப் போராட்டம் நவம்பர் 8ம் திகதி ஆரம்பமாகியது.
ஹொரால்ட் பத்திரிகை நிறுவன அதிபரான கொன்ராட் பிளாக்
தொழிலாளர்களின் தொழிற்சங்கத்தோடு எந்த ஒரு உடன்படிக்கையையும்
செய்து கொள்ள மறுத்துள்ளார். கத்தோலிக்க பிஷப்புக்கும்
பிளாக்குக்கும் இடையே சமீபத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின்
பின்னர் சில கத்தோலிக்கக் குருமார் பிரச்சினைக்கு தீர்வு காண்பவர்களாக
தோன்றினர்.
தொழிலாளர் அமைப்பு ரீதியாக அணிதிரளும் உரிமையை
முழுமனே அங்கீகரிக்க வேண்டும் என்ற தேவாலயத்தின் ஒழுக்க
விதிகளை பிளாகா புரிந்து கொண்டுள்ளாரா என "கதலிக்
ரிஜிஸ்டார்" (Catholic Registrar) பத்திரிகை
எழுப்பிய கேள்விக்கு, பிஷப் பிரடெரிக்ஹென்றி "உதவாக்கரையான
கம்யூனிஸ்ட்" என கண்டனம் செய்து ஆசிரியர் பிளாக் தலையங்கம்
தீட்டியிருந்தார். அல்பேர்ட்டா பிரதமர் ரூல்ப் கிளேன் "பத்திரிகையாளர்கள்
வேலைநிறுத்தத்தில் ஈடுபட எதுவிதத்திலும் இடமளிக்க முடியாது
எனத் தெரிவித்துள்ளார் தொழிற் சங்கத்தின் கோரிக்கையை கணக்கெடுக்காமல்
பிரச்சினைக்கு தீர்வு காண ஒரு தொழில் பிணக்கு தீர்வாளரை
நியமனம் செய்வதை கிளேன் தொடர்ந்து நிராகரித்து வருகின்றார்.
இந்தியா:
16000 தொழிலாளர்கள் வேலை நீக்கம்
இந்திய மத்திய பிரதேச மாநில அரசாங்கம் 1998ல் அரசாங்க
நிறுவனங்களில் சேவைக்கு ஆட்திரட்டிய அமைய தொழிலாளர்களை
வேலை நீக்கம் செய்துள்ளது. இதில் 9000 பேர் வனபரிபாலன
திணைக்களத்தைச் சேர்ந்தவர்கள். இந்த நியமனங்கள் உரிய
முறையில் இடம்பெறவில்லை எனக் கூறி இந்த வேலை நீக்கத்தை
மாநில அரசாங்கம் நியாயப்படுத்த முயன்றுள்ளது. ஆனால் இந்த
தொழில் வெட்டு, அரசாங்கத் துறை தொழில் வெட்டின் ஒரு
பாகமாகும். எதிர்வரும் ஐந்து வருடங்களுள் மத்திய பிரதேச
மாநிலத்தின் நிறுவனங்களில் தொழில் புரியும் 60000 அரச ஊழியர்களை
ஓய்வு பெறச் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அத்தோடு இந்த
வெற்றிடங்களை நிரப்புவதில்லை எனவும் தீர்மானம் செய்யப்பட்டுள்ளது.
இலங்கை:
தாக்குதலை எதிர்த்து தோட்டத் தொழிலாளர்
வேலை நிறுத்தம்
தோட்டத் தொழிலாளி மீது தோட்ட முகாமையாளர்
நடாத்திய தாக்குதலைக் கண்டிக்கும் முகமாக டிக்கோயாஇன்வெரி
குறூப்பைச் சேர்ந்த 500 தோட்டத் தொழிலாளர்கள் மார்ச்
9ம் திகதி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்தத் தாக்குதல்
சம்பவம் பற்றி விசாரணை நடாத்த இணக்கம் காணப்பட்டதால்
தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட்டனர். இத்தாக்குதலில்
சம்பந்தப்பட்ட தோட்ட முகாமையாளரை உடனடியாக
இடமாற்றம் செய்யும்படியும் தொழிலாளர்கள் கோரினார்கள்.
சேவை நிலைமைகள் படு மோசமானதாக இருப்பதோடு
இந்த முகாமைத்துவம் தம்மை "அடிமைகள்" போல்
நடாத்துவதாகவும் தொழிலாளர்கள் தெரிவித்தனர். நாளாந்த
சம்பளத்தைப் பெற்றுக் கொள்ள தொழிலாளர்கள் ஒரு நாளுக்கு
16 கிலோ தேயிலைக் கொழுந்து பறிக்க வேண்டும். இதில் ஒரு
கிலோ குறைந்தாலும் அரை நாள் சம்பளமே கிடைக்கும்.
நாம் சரியாக காலை 8 மணிக்கு சேவைக்குச்
செல்ல வேண்டும். 5 நிமிடம் தன்னும் சுணங்கினாலும் வேலை வழங்க
மாட்டார்கள். சேவைக்கு செல்ல சுணங்கியதால் நான் ஒரு
தடவை 500 ரூபா தண்டனையாக செலுத்த நேரிட்டது. "நிர்வாகம்
எமது வீடுகளை பழுது பார்ப்பது கிடையாது. தண்ணீரோ ஏனைய
வசதிகளோ கிடையாது. எவரும் நிர்வாகத்தின் தீர்மானத்தை விமர்சனம்
செய்தால் அது தண்டனைக்குரிய விடயமாகி விடுகிறது. இந்த இலட்சணத்தில்
வேலை செய்ய முடியாததால் பல தொழிலாளர்கள் சேவையில்
இருந்து முன் கூட்டியே ஓய்வு பெற்றுவிடுகின்றார்கள்" என
பூபாலன் என்ற தொழிலாளி தெரிவித்தார்.
தொழிற் சங்கங்களின் பிற்போக்கு நடவடிக்கைகளைப்
பற்றிக் குறிப்பிடுகையில் அவர் கூறியதாவது: "நான் இலங்கை
தொழிலாளர் காங்கிரஸ் (CWC) அங்கத்தவன்.
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட வேளையில் அதைப் பற்றி கலந்துரையாட
தொழிற்சங்க அலுவலகத்துக்குச் சென்றேன். ஆனால் நாம் அங்கு
செல்வதற்கு முன்னரே தோட்ட நிர்வாக அதிகாரிகள் தொழிற்சங்க
பிரநிதிகளையும் கூட்டிக் கொண்டு தொழில் அலுவலகத்துக்கு
போய்விட்டார்கள். தொழிலாளர்கள் இப் பேச்சுவார்த்தையை
நிராகரித்தார்கள். எம்மை ஒடுக்குவதும் ஏமாற்றுவதும் தொழிற்சங்கமே.
அது நிர்வாகத்துடன் சேர்ந்து செயற்படுகின்றது."
ரெலிகொம் ஊழியர் பிரச்சாரம்
இலங்கை ரெலிகொம் கம்பனியின் ஊழியர்கள், சகல
ஊழியர்களுக்கும் சமத்துவமான போனஸ் வழங்கும்படி கோரி
மார்ச் 29ம் திகதி கொழும்பு தலைமையகத்தின் எதிரில் மறியல்
போராட்டத்தில் ஈடுபட்டனர். நத்தார் தினத்தின் பேரில் ரூபா
20000 மும் சிங்கள-தமிழ் புதுவருடத்தின் பேரில் ரூபா. 10,000ம் வழங்கும்படி
அவர்கள் கோரினார்கள். தற்சமயம் 1 1/2 மாதச் சம்பளமே
போணசாக வழங்கப்படுகின்றது. அதுவும் இரண்டு பகுதியாக வழங்கப்படுகிறது.
ஊழியர்களின் இப் பிரச்சார இயக்கத்தின் பெறுபேறாக இம்முறை
புத்தாண்டுக்காக ரூபா.10,000 போணசாக வழங்கப்பட்டுள்ளது.
இந்தப் போராட்டத்தை மேலும் முன்னெடுக்க
ஊழியர்கள் தயாராகி வருகின்றார்கள். மார்ச் 29ம் திகதி இடம்
பெற்ற பிரச்சாரத்தில் சுமார் 3000 ரெலிகொம் ஊழியர்கள் பங்கு
கொண்டனர்.
வங்கி ஊழியர்கள் உரிமை வெட்டுக்களை எதிர்த்து
போராட்டம்
தனியார் வங்கி ஊழியர்களின் ஜனநாயக உரிமைகள் வெட்டப்படுவதற்கும்
ஊழியர்கள் வங்கி நிர்வாகத்தினால் வேட்டையாடப்படுவதற்கும்
எதிராக மார்ச் 26ம் திகதி கொழும்பு கோட்டை புகையிரத நிலைய
முன்றலில் மறியல் போராட்டம் ஒன்றை நடாத்தினர். இது இலங்கை
வங்கி ஊழியர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் சீ.எம்.யூ,
தபால் தொலைத் தொடர்புஊழியர் சங்கம் உட்பட மேலும்
பல தொழிற் சங்கங்களும் கலந்து கொண்டன.
இந்த ஊழியர் வேட்டையின் ஒரு பாகமாக ஹட்டன்
நஷனல் வங்கி, கொமர்ஷல் வங்கிகளைச் சேர்ந்த 9 ஊழியர்கள்
சேவையில்இருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர். இன்னும்
பலர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வங்கி அலுவலகத்தில்
தொழிற்சங்க கிளைக் கூட்டம் நடாத்தவோ அல்லது தொழிற்சங்கத்
தலைவர்கள் அங்கத்தவர்களைச் சந்திக்கவோ இதுகாறும்
இருந்து வந்த உரிமைகள் தடை செய்யப்பட்டுள்ளது. கூட்டு ஒப்பந்தம்
1998 ஏப்பிரலுடன் காலவதியாகிவிட்ட போதிலும்,புதிய கூட்டு ஒப்பந்தத்தில்
கைச்சாத்திட வங்கி நிர்வாகம் மறுத்துவிட்டது. இதற்கு மாறாக
இந்தக் கூட்டு ஒப்பந்தம் தொடர்பாக தலைநீட்டிய பிரச்சினைகளை
தொழில் நீதிமன்றத்துக்கு கொண்டு சென்று, தனியார் வங்கி ஊழியர்களின்
சம்பள அதிகரிப்பை ஸ்தம்பிதம் அடையச் செய்துள்ளது.
தமிழ் ஆசிரியர்கள் பிரச்சாரம்
வவுனியா, திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த
தமிழ் ஆசிரியர்கள் ஏப்பிரல் 5-6ம் திகதிகளில் சுகவீன விடுமுறை போட்டு,
சேவைகளை பகிஷ்கரித்தனர். தவறான முறையில் அச்சிடப்பட்டுள்ள
தமிழ் பாடசாலை நூல்களை திருத்தி அச்சிட வேண்டும். புதிதாகசேவைக்கு
திரட்டப்பட்ட ஆசிரியர்களுக்கு உரிய சம்பளம் கிடைக்க வேண்டும்.
உரிய முறையில் பதவி உயர்வுகள் இடம்பெற வேண்டும் என்பன உட்பட்ட
ஒரு தொகை கோரிக்கைகளை ஆசிரியர்கள் முன்வைத்திருந்தனர்.
இப்பிரச்சாரத்தின் பெறுபேறாக வவுனியா திருகோணமலை
மாவட்டப் பாடசாலைகளை அடியோடு இழுத்து மூட நேரிட்டதாக
தெரிகிறது. தமது கோரிக்கைகளையிட்டு கல்வி அதிகாரிகள் உரிய
நடவடிக்கை எடுக்காது போகும் பட்சத்தில் இப்பிரச்சாரத்தைத்
தொடர்ந்தும் முன்னெடுக்கப் போவதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
|