Sri Lanka: Inquests fail to charge
jailers responsible for the killing of two Tamil detainees
தமிழ்க் கைதிகளைக்
கொன்ற அதிகாரிகளைக் கண்டு பிடித்து தண்டிக்கும் விசாரணை
தோல்வி
By Vilani Peiris
29 March 2000
Use this version to print
கடந்த ஜனவரியில் களுத்துறைச் சிறைச்சாலையில்
சிறைக் காவலர்களுடனான மோதுதலில் கொல்லப்பட்ட இரண்டு
தமிழ் கைதிகளின் மரணம் தொடர்பான விசாரணையில் அதைக்
கொலையெனத் தீர்மானிக்கவோ அல்லது கொலைக்குப்
பொறுப்பானவர்களைக் கண்டுபிடிக்கவோ தவறிவிட்டது. இந்த
இரு கொலைகள் பற்றியும் மேலும் விசாரணை நடாத்தும்படி
பொலிசார் பணிக்கப்பட்ட போதிலும் விசாரணை பல வாரங்களுக்கு
இழுபட்டுச் சென்றதே தவிர எவரும் கைது செய்யப்படவோஅல்லது
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவோ இல்லை.
ஜனவரி 6ம் திகதி அந்தனிப்பிள்ளை ஜேசுதாசன்
கொல்லப்பட்டார். மறு நாள் சிவரத்தினம் ஸ்ரீகுமார் கொல்லப்பட்டார்.
களுத்துறைச் சிறைச்சாலையில் தள்ளப்பட்டுள்ள தமிழ்க் கைதிகளின்
எதிர்ப்பையும் உண்ணாவிரதப் போராட்டத்தையும் படுகொடூரமான
முறையில் உடைத்து எறியும் பொருட்டு சிறை அதிகாரிகள் கலகங்களில்
ஈடுபட்டனர். இந்தச் சிறைச்சாலையில் நூற்றுக் கணக்கான
தமிழ்க் கைதிகள், பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள்
என பெயர் சூட்டப்பட்டு இலங்கையின் படுமோசமான பாதுகாப்புச்
சட்டங்களின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் கொலைகள், ஜனாதிபதி சந்திரிகா
குமாரதுங்கவுக்கு எதிரான டிசம்பர் 18ம் திகதிய கொலை முயற்சியைத்
தொடர்ந்து, அரசாங்கமும் வெகுஜனத் தொடர்புச் சாதனங்களும்
தூண்டிவிட்ட ஒரு இனக்கலவர சூழ்நிலையின் பின்னணியில் இடம் பெற்றது.
பொலிசாரும் இராணுவத்தினரும் கொழும்பிலும் மற்றும் நகரங்களிலும்
ஒரு தொடர்ச்சியான தேடுதல் நடவடிக்கையில்ஈடுபட்டதோடு
ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கைது செய்யப்பட்டு பொலிஸ்
நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டனர்.
ஜனவரி முதல் வாரத்தில் ஒரு பிரபல வழக்கறிஞரும்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளருமான
குமார் பொன்னம்பலம் 'இனங்காணப்படாத' துப்பாக்கிக்
கொலைகாரர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்த
விதத்தில் பார்க்கும் போது களுத்துறைச் சிறைச்சாலைக்
கொலை விசாரணைகளை உத்தியோகபூர்வமான முறையில் பூசி
மெழுகும் போக்குகள் தொழிற்பட்டுள்ளன. இந்தக் கொலையில்
சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தம்மால் அடையாளம் காட்ட
முடியும் என்ற சக கைதிகளின் கண்கண்ட சாட்சியங்கள் இத்தீர்ப்பில்
புறக்கணிக்கப்பட்டுள்ளன. பல சிறைக் காவலர்கள் ஏற்கனவே
அடையாளங் காணப்பட்டனர். ஆனால் பொலிசார் கொலையுண்டவர்களின்
வழக்கறிஞர்களுக்கு தெரிவித்ததாவது: "கண்கண்ட சாட்சியங்கள்
பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த விடயம் சட்ட மாஅதிபருக்கு
சமர்ப்பிக்கப்படும்."
விசாரணை நடாத்திய மஜிஸ்திரேட்டுகள் மரணத்துக்கான
காரணத்தை ஸ்தாபிதம் செய்வதுடன் விடயத்தை நிறுத்திக் கொண்டனர்.
ஜனவரி 17ம் திகதி முடிவடைந்த முதலாவது விசாரணை, சிறை அதிகாரிகள்
பாவித்த ஒரு துப்பாக்கிச் சூட்டினால் ஏற்பட்ட காயங்களால்
ஸ்ரீகுமார் மரணமடைந்ததாக தெரிவித்தது. பெப்பிரவரி 17ம் திகதி
முடிவடைந்த இரண்டாவது மஜிஸ்திரேட் விசாரணை, ஜேசுதாசன்
ஒரு மொட்டையான ஆயுதத்தினால் முதுகெலும்பில் ஏற்பட்ட கடும்
காயத்தினாலும், முறிவினாலும் இறந்ததாக குறிப்பிட்டது.
ஸ்ரீகுமாரின் மரண விசாரணை தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாது
என அவரின் சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர் கே.எஸ்.இரத்தினவேல்
நீதிமன்றத்தில் தெரிவித்தார். "அரசின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த
ஒரு நபர் இறந்தது தொடர்பான ஒரு விசாரணையில் மஜிஸ்திரேட்டுக்கு
பிரமாண்டமான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நீதிமன்றத்தில்
இதுகாறும் முன்வைக்கப்பட்ட சாட்சியங்களில் இருந்து மரணத்துக்கான
காரணத்தைக் கண்டறிவதோடு மட்டுமன்றி, மரணம் ஒரு
கொலை எனவும் கூட பிரகடனம் செய்ய வேண்டும்".
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் மனித உரிமைகள்
கமிட்டியின் ஒருங்கிணைப்பாளரான கே.எஸ்.இரத்தினவேல், இந்த
மரண விசாரணை அந்தரங்கமாக (in camera)
இடம்பெறச் செய்யப்பட்ட முயற்சியையும் எதிர்த்திருந்தார்.
இரத்தினவேல் சுட்டிக் காட்டியதாவது: இந்த இரண்டு சிறைக்
கைதிகளும் அரசின் தடுப்புக் காவலில் இருந்த போது இறந்துள்ளனர்.
ஆதலால் இந்த விசாரணை எவரும் தகவல்களை வழங்கக்
கூடிய விதத்திலான ஒரு திறந்த இடத்தில் நடாத்தப்பட வேண்டும்.
மார்ச் 7ம் திகதி பொலிசார் ஜேசுதாசனின்
மரணம் தொடர்பாக ஒரு அடையாள அணிவகுப்பு நடாத்த ஏற்பாடு
செய்திருந்த போதிலும் இது ஏப்பிரல் 6ம் திகதி வரை தாமதம்
செய்யப்பட்டது. இந்தக் கொலை இடம் பெற்ற நாளில் கடமையில்
ஈடுபட்டிருந்த சகல சிறை அதிகாரிகள் உட்பட 157 பேரை உள்ளடக்கிய
ஒரு அசாதாரணமான அணிவகுப்பை நடாத்த பொலிஸ் திட்டமிட்டதால்
இந்நிலை ஏற்பட்டது. எவ்வளவுக்கு எவ்வளவு இந்த அடையாள
அணிவகுப்பை நடாத்துவதில் தாமதம் ஏற்படுகின்றதோ அவ்வளவுக்கு
அவ்வளவு சிறைக்கைதிகள் அச்சுறுத்தல்களுக்கும் பயமுறுத்தல்களுக்கும்
பலியாக நேரிடுகிறது. வவுனியாவைச் சேர்ந்த இளைஞரான
ஜேசுதாசன் சிறை வைக்கப்பட்டிருந்த களுத்துறைச் சிறையின்
'எப்' சிறைக் கூடத்தில், கைதிகள் தாம் முகம் கொடுத்த
படுமோசமான அடக்குமுறை நிலைமைகளுக்கு எதிரான எதிர்ப்பு
நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். 'எப்' வாட்டுக்கும் ஏனைய
வாட்டுகளுக்கும் இடையே மேலதிக நுழை வாசல்கள் ஏற்படுத்தப்பட
வேண்டும் என்பதுகைதிகளின் கோரிக்கைகளில் ஒன்றாகும். இப்போது
கைதிகள் கோவிலுக்கும் நூல் நிலையத்திற்கும் வைத்திய நிலையத்துக்கும்
விலங்கிடப்பட்ட நிலையிலேயே கொண்டு செல்லப்படுகின்றனர். கைதிகள்
ஒரு இராணுவச் சோதனை முகாமைத் தாண்டிச் செல்ல வேண்டியுள்ளது.
இதனால் தமது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள்
தெரிவித்தனர்.
ஆரம்ப பேச்சுவார்த்தை
கைதிகளுக்கும் சிறை அதிகாரிகளுக்கும் இடையே
இடம் பெற்ற ஆரம்ப பேச்சுவார்த்தைகள் தோல்வி கண்டன.
ஜனவரி 6ம் திகதி சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்துடன் இடம்
பெற்ற ஒரு கலந்துரையாடலில் ஒரு தனி நூல் நிலையம், கோவில்,
வைத்திய நிலையத்தை ஏற்படுத்த அவர் இணங்கினார் ஆனால் இந்த
மேலதிக நுழைவாசல் ஏற்படுத்தும் கோரிக்கைக்கு இணங்க
மறுத்து விட்டார்.
சிறைச்சாலை ஆணையாளர் இந்த சலுகைகளை
வழங்கிய அதே சமயம் சிறைக் கூடங்களை சோதனையிட வேண்டும்
எனவும் கோரினார். கைதிகள் ஆயுதங்களை மறைத்து வைத்திருப்பதாகவும்
ஒரு கலகத்துக்கு தயார் செய்வதாகவும் தெரிவித்தார். கைதிகள்
இந்தக் குற்றச்சாட்டுக்களை நிராகரித்த போதிலும் சிறைக்
கூடங்களை சோதனையிட இணக்கம் தெரிவித்தனர்.
இறுதிச் சுற்றுப் பேச்சுவார்த்தைகள், சிறை
அதிகாரிகளைக் குண்டாந்தடிகளுடனும் மற்றும் ஆயுதங்களுடனும்
கைதிகளின் வார்ட்டுக்குள் ஊடுருவச் செய்வதற்கான ஒரு சூழ்ச்சியாகவே
இடம் பெற்றது என்பது இப்போது நன்கு தெளிவாகியுள்ளது.
'எப்' சிறைக்கூடக் கைதியான ரமேஷ் மோகன்
நீதிமன்றத்துக்கு வழங்கிய வாக்கு மூலத்தில் இந்தப் பேச்சுவார்த்தைகளின்
பின்னர் உணவு உண்ணும் இடத்தில் 'பொதிகளுடன்'
(Bags) ஒன்று கூடும்படி வேண்டப்பட்டதாகத்
தெரிவித்தார். ஆயுதம் தாங்கிய அதிகாரிகள் வார்ட்டுக்குள் நுழைந்து
கைதிகளின் ஒரு பிரதிநிதியான தமிழ்செல்வத்தை கைதிகளை ஒரு வரிசையில்
நிறுத்த உதவுமாறு கேட்டனர். அவர் முன்னால் வந்ததும் ஒரு
அதிகாரி எதிர்ப்பைத் தூண்டிவிட்டு அவரை ஒரு குண்டாந்தடியால்
தாக்கினார்.
சிறைச்சாலைக்கு மேலாக பெரும் கற்கள் எம்மீது
வீசப்பட்டன. நாம் சகல திக்கிலும் ஓடினோம். அதைத் தொடர்ந்து
கண்ணீர் புகை தாக்குதல் இடம் பெற்றது. எனது கண்கள் பற்றி
எரிவது போல் உணர்ந்தேன். தண்ணீர் தொட்டி பக்கம் ஓட்டம்
பிடித்தேன். அங்கு நாம் சிறைக் காவலர்களால் மீண்டும் தாக்கப்பட்டோம்."
என ரமேஷ் தெரிவித்தார்.
ஜேசுதாசனுக்கு எதிராக இடம் பெற்ற தாக்குதலை
விபரிக்கையில் ரமேஷ் கூறியதாவது: ஜேசுதாசன் தாக்குதல் இடம்
பெறுவதைக் கண்டு மறுபுறத்துக்கு ஓட முயற்சித்தார். அவரும்
கூட தாக்குதலுக்கு இலக்கானார். அவர்களது பெயர்களை
நான் அறிந்திராத போதிலும் அவரைத் தாக்குவதில் ஈடுபட்டவர்களை
எனக்குத் தெரியும்; அடையாளம் காட்ட முடியும். நான் சம்பவத்தை
ஒரு 20 அடி தூரத்தில் இருந்து கவனித்துக் கொண்டிருந்தேன்.
"சம்பவம் நடந்த இடத்தில் [சிறைச்சாலை]
ஆணையாளர் நாயகத்தையும் அவருடன் வந்த ஆட்களையும் மிகவும்
தெளிவாகக் கண்டேன். எனது இந்த வாக்குமூலத்தின் பின்னர் எனக்கு
ஏதேனும் ஒரு தீங்கு ஏற்படுமானால் அது நான் இன்று இங்கு
இதைக் கூறுவதன் காரணமாக ஏற்பட்டதாகவே இருக்கும்."
இலங்கையின் சிறைச்சாலை உயர் அதிகாரியான ஆணையாளர் நாயகம்
இந்த விசாரணையில் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை.
ஆனால் களுத்துறை சிறைச்சாலை "சுப்பிரின்டென்ட்" (superintendent)
கே.எம்.ஆர்.குலதுங்க அளித்த வாக்குமூலம் கைதிகளுக்கு எதிரான
தாக்குதல் முன் கூட்டியே திட்டமிடப்பட்டது என்பதைக் காட்டிக்
கொண்டுள்ளது.
குலதுங்க கூறியதாவது: "எனது வேண்டுகோளின்
பேரில் சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்துடனும் அவரின்
உதவியாளர்களுடனும் ஒரு கோஷ்டி சிறைக் காவலர்களும்
கொழும்பில் இருந்து வந்தனர். ஒரு சாத்தியமான கலகத்தை
கட்டுப்படுத்தவே இங்ஙனம் செய்யப்பட்டது. களுத்துறை சிறைச்சாலை
அதிகாரிகள் சிறைச்சாலை வார்ட்டுக்குள் செல்ல அஞ்சினர். சில
வேளைகளில் கைதிகள் எமது அதிகாரிகளின் கட்டுப்பாட்டையும் மீறி
விடுவதுண்டு. ஆதலால் வார்ட்டுக்களில் தேடுதல் நடாத்த வேண்டி
இருந்தது. ஆதலால் உதவி ஆணையாளர் ஹேர்பட், தேடுதல்
நடவடிக்கைகளில் களுத்துறை சிறைச்சாலை அதிகாரிகளை
பயன்படுத்த வேண்டாம் என எனக்கு உத்தரவிட்டார். கொழும்பில்
இருந்து வந்த 12 ஆட்களை அந்த பணியை செய்யும்படி வேண்டினார்".
மறுநாள் 'சீ' வார்ட்டில் ஸ்ரீகுமார் கொல்லப்பட்டார்.
அவர் கணனி பாடநெறியை பயிலும் பொருட்டு யாழ்ப்பணத்தில்
இருந்து கொழும்புக்கு வருகை தந்தபோது கைது செய்யப்பட்டார்.
அவர் கல்யாணம் செய்தவர். ஒரு குழந்தைக்கு தந்தை."
வார்ட் 'சீ' யைச் சேர்ந்த ஒரு கைதியான
பசுபதி தர்மராஜா என்ன நடைபெற்றது என்பதை விசாரணையில்
விளக்குகையில் கூறியதாவது: "ஜனவரி 7 காலை கதவைத் திறக்க
வந்த அதிகாரிகளிடம் முதல் நாள் வார்ட் 'எப்' ல் என்ன நடந்தது
என விசாரித்தோம். ஆனால் அவர்கள் அசம்பாவிதத்தைப் பற்றி
எதுவும் கூற மறுத்துவிட்டனர். அதைத் தொடர்ந்து சிறைச்சாலை
'சுப்பிரென்டனுடன்' ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்யும்படி கேட்டோம்.
அதற்கும் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. அதற்குப் பதிலாக அவர்கள்
பிரதான வாசல் கதவைப் பூட்டியதோடு ஒரு அதிகாரி எச்சரிக்கை
விசிலும் ஊதினார். விளைவுகளை எம்மால் புரிந்து கொள்ள முடிந்தது.
1997ல் இதே களுத்துறை சிறைச்சாலையில் எப்படி இரண்டு சிறைக்
கைதிகள் வெட்டிக் கொல்லப்பட்டனர் என்பதை நாம் ஏற்கனவே
தெரிந்து கொண்டிருந்தோம்.
"இதைத் தொடர்ந்து ஒரு கும்பல் சிறைக்
காவலாளிகள் குண்டாந்தடிகளுடனும் பாதுகாப்பு கேடயங்களுடனும்
எம்மைநோக்கி வருவதைக் கண்டோம். நாம் அவர்கள் உள்ளே
வருவதை அனுமதிக்கவில்லை. உள்ளிருந்து பிரதான வாசல் கதவைத்தள்ளிப்
பிடித்துக் கொண்டோம். அப்போது முன்னால் வந்த அதிகாரி
ஒருவர் சுப்பிரிண்டனைச் சந்திக்க நாம் வாய்ப்பளிக்க வேண்டும்
என்றார். சுப்ரின்டன்ட் மூடப்பட்ட அறைக்குள் வந்தார். அவர்
வந்தது தான் தாமதம் தாக்குதலை ஆரம்பிக்குமாறு அதிகாரிகளை
வேண்டினார். ஒரு அதிகாரி வெளியே பார்க்கும் [கதவு] துவாரத்தின்
ஊடாகச் சுட்டார்".
மற்றொரு கைதியான அப்துல் ஹமீட், ஸ்ரீகுமார்
எப்படி இறந்தார் என்பதை நீதி மன்றத்தில் விபரித்தார்: "களஞ்சிய
அறையில் வேலை செய்துகொண்டிருந்த ஒரு அதிகாரி ஸ்ரீகுமாரை
சுட்டார். இச்சமயத்தில் வார்ட் 'சீ' யின் பிரதான வாசல் கதவு
உடைத்துத் திறக்கப்பட்டது. இந்த மரணத்துக்கு காரணமான
துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவரை எனக்குத் தெரியும்.
என்னால் அவரை அடையாளங் காட்ட முடியும். இத்துப்பாக்கிப்
பிரயோகம் காரணமாக பலர் காயமடைந்தனர். ஸ்ரீகுமார்
சுடப்பட்ட தினத்தன்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
நான் அவருக்கு சமீபமாக நின்று கொண்டிருந்தேன்".
சற்குணநாதன் சந்திரநாதன் என்ற கைதி சாட்சியமளிக்கையில்
ஸ்ரீகுமார் இரண்டு கைகளையும் உயர்த்தியபடி பிரதான வாசல்
கதவை நோக்கியபடி சென்றதாகவும் இரண்டு அதிகாரிகள் அவரை
கூட்டிச் சென்றதாகவும் தெரிவித்தார். ஒரு சில நிமிடங்களின் பின்னர்
துப்பாக்கிச் சூட்டு சத்தங்களைக் கேட்டதாகவும் ஸ்ரீகுமார்
நிலத்தில் இரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டதாகவும் தெரிவித்தார்.
களுத்துறை சிறை சுப்பிரின்டென்ட் குலதுங்கவும் ஸ்ரீகுமாரின் இந்த
மரண விசாரணையில் சாட்சியமளித்தார். கலகத்தில் ஈடுபட்ட கைதிகளை
அடக்கக் கண்ணீர் புகையும் இறப்பர் ரவைகளையும் பாவிக்கும்படி
உத்தரவிட்டதாகவும், துப்பாக்கியை பயன்படுத்த கட்டளையிடவில்லை
எனவும் குறிப்பிட்டார்.
பின்னர் தனது அறிக்கைக்கு முரணான விதத்தில்
குலதுங்க கூறியதாவது: "முதல் நாள் தாக்குதலில் காயமடைந்த
கைதிகளை காவல் செய்யும் பணியில் களுத்துறை ஆஸ்பத்திரியில் ஈடுபட்டிருந்த
ஒரு அதிகாரி ஆயுதக் களஞ்சியத்தில் ஆயுதத்தை திருப்பி ஒப்படைக்கசென்ற
போது அவர் ஒரு தன்னியக்க துப்பாக்கியை பாவித்தது தெரிய வந்தது.
இந்த அதிகாரி இது உண்மையென ஒப்புக் கொண்டுள்ளார். துப்பாக்கியை
தாம் பாவித்ததை ஏனைய சிறைச்சாலை அதிகாரிகள் ஊர்ஜிதம் செய்தனர்.
ஜனவரி 6ம், 7ம் திகதிகளில் இடம் பெற்ற மரணங்களின்
பின்னர் சிறைச்சலை அதிகாரிகள் ஒரு தண்டனை நடவடிக்கையாக
தமிழ்க் கைதிகளை மாகாணச் சிறைகளுக்கு மாற்றினர். இதில்
பதுளை, கண்டி, அனுராதபுரம், மட்டக்களப்பு, காலி அத்தோடு
கொழும்பு சிறைகளும் அடங்கும். கண்டி சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டவர்களில்
சுப்பு உதயகுமாரும் அருணாசலம் யோகேஸ்வரனும் அடங்குவர்.
அட்டன் பகுதியைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்களான
இவர்கள் சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் வழக்கு
விசாரணைக்காக ஒரு வருடத்துக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை விடுதலை செய்ய சோசலிச சமத்துவக் கட்சி பிரச்சார
நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. களுத்துறை வார்ட் 'சீ'யில் தமது
உயிர்களுக்கு ஆபத்து ஏற்பட்ட விதத்தை அவர்கள் சோசலிச சமத்துவக்
கட்சி பிரதிநிதிகளிடம் விபரித்தனர்: "சிங்களக் கிறிமினல் குற்றவாளிகளைக்கொண்டிருந்த
அறைகள் ஒரு வயர் பின்னல் வலையினால் பிரிக்கப்பட்டு இருந்தது.
தமிழருக்கு எதிரான இனவாத யுத்தம் 1983ல் ஆரம்பித்ததில் இருந்து
சிறைச்சாலைகளில் இடம் பெற்ற தாக்குதல்களை நாம்
சகலரும் அறிவோம். சிறைச்சாலை அதிகாரிகள் தமிழ் கைதிகளை
தாக்க சிங்கள சிறைக் கைதிகளை எப்போதும் பயன்படுத்தினர்.
1983ல் வெலிக்கடை சிறைச்சாலையில் இவர்கள் 53 தமிழர்களை
கொலை செய்தனர்.
இக்கைதிகள் சிறைச்சாலை நிலைமையைப் பற்றியும்
குறிப்பிட்டனர்: "நாம் சிறைக் கூட்டுக்குள் இருந்து வெளியே
கூட்டிச் செல்லப்படுவது கிடையாது. இதனால் சுத்தமான காற்றை
சுவாசிக்க முடியாமல் போயுள்ளது. அன்றாடைய அவசியப்
பொருட்களான பால் மாவு, பற்பசை, சவர்க்காரம் ஆகியன
எமக்கு வழங்கப்படுவதில்லை. எமக்கு புதினப் பத்திரிகைகள்,
தொலைக் காட்சிகள், றேடியோக்கள் தடை செய்யப்பட்டுள்ளன.
வெளியே என்ன நடக்கிறது என்பதைத் தன்னும் நாம் அறியோம்.
திடீரென எங்கேனும் ஒரு குண்டு வெடிப்பு இடம் பெற்றது தான்
தாமதம் அதிகாரிகள் சிங்களக் கிறிமினல் கைதிகளைக் கொண்டு எம்மைத்
தாக்குவதற்கு அதை சந்தர்ப்பமாக்கிக் கொள்கிறார்கள்.
இதே ஆபத்துக்கு ஏனைய தமிழ் கைதிகளும் முகம்கொடுக்கிறார்கள்."
ஜனவரி 28ம் திகதி சிங்கள கிறிமினல் கைதிகள் கொழும்பின் முக்கியச்
சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மூன்று தமிழ் பெண்களை
தாக்க சிறை அதிகாரிகளால் தூண்டி விடப்பட்டனர். களுத்துறைச்
சிறைச்சாலையில் இடம் பெற்ற மரணங்கள் பற்றிய பெரிதும் வரையறுக்கப்பட்ட
விசாரணைகளும் பொலிஸ் குற்ற புலனாய்வுகளும் தமிழ் கைதிகளுக்கு
எதிரான உடல் ரீதியான வன்முறைகளை தொடர்ந்து நடாத்த
நாடு பூராவும் உள்ள சிறைச்சாலை அதிகாரிகளுக்குச் சுதந்திரம்
வழங்கியுள்ளது.
|