An air of desperation in Sri Lankan ruling circles as the
LTTE makes further advances
தமிழீழ விடுதலைப் புலிகள் மேலும் முன்னேறி வருவதால்
இலங்கை ஆளும் வட்டாரங்கள் அவஸ்தை கண்டுள்ளன
By our correspondent
4 May 2000
Use
this version to print
வட மாகாணத்தின் யாழ்ப்பாணக் குடாநாட்டின்
பெரிதும் பலப்படுத்தப்பட்ட ஆனையிறவு முகாமில் இருந்து ஏப்பிரல்
22ம் திகதி "தந்திரோபாய படைவிலக்கலில்" ஈடுபடுவதென
இலங்கை இராணுவம் எடுத்த தீர்மானம் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப்
புலிகள்அமைப்பு இப்பிராந்தியத்தில் இன்னும் பல விரகி முக்கியத்துவம்
வாய்ந்த நிலைகளைத் துரிதமாகக் கைப்பற்றிக் கொள்ள வழிவகுத்துள்ளது.
கடந்த வார இறுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள், ஆனையிறவில் இருந்து
வடக்கே 15 கி.மீ. அப்பால் உள்ள பளை இராணுவமுகாமையும்
புலோப்பளையையும் கைப்பற்றியுள்ளது.
விடுதலைப் புலிகள் இப்போது 500,000 சனத்
தொகையைக் கொண்டதும் இலங்கையின் இரண்டாவது
மாபெரும் நகரமுமான யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றும்
நோக்கில் தனது படைகளையும் பீரங்கிகளையும் ஏவுகணைகளையும்
நகர்த்திக் கொண்டு முன்னேறி வருகின்றது. இராணுவம் அதன் முக்கிய
கடற்படைத் தளங்களில் ஒன்றான கிளாலி, கடும் மோட்டார்
தாக்குதலுக்கு உள்ளாகி வருவதை ஒப்புக் கொண்டுள்ளது. அத்தோடு
விடுதலைப் புலிகள் 12 கி.மீ. நீளமான முக்கிய விநியோக பாதையையும்
(MSR)
கைப்பற்றிக் கொண்டுள்ளதாகக் கூறியுள்ளது.
யுத்தப் பிராந்தியத்தில் இருந்து சகல பத்திரிகையாளர்களையும்
தள்ளி வைக்கும் இலங்கை அரசாங்கத்தின் கடும் செய்தித் தணிக்கை
காரணமாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் அற்ப சொற்பமாகவே
உள்ளன. ஆனால் விடுதலைப் புலிகளின் படைகள்தற்சமயம் யாழ்ப்பாண
நகரில் இருந்து 30 கி.மீ. அப்பால் நின்று கொண்டுள்ளதாகவும்,
பலாலி விமானப் படைத் தளத்தின் மீதானதாக்குதல்களின் பொருட்டு
தனது பீரங்கிகளை நகர்த்தி வருவதாகவும் தெரிகிறது. இலங்கை
இராணுவத்துக்கு கடற் பிரதேசத்தை தவிர விமான வழியே ஒரே
மார்க்கமாக உள்ளது. படைகளுக்கான விநியோகங்களைத் தருவிக்கவும்
சரி, படைகளைக்கொணர்ந்து குவிக்கவும் சரி இன்றுள்ள ஒரே
மார்க்கம் இதுவே.
இலங்கை இராணுவம் ஒரு பெரும் இராணுவ
பேராபத்தின் விளிம்பில் நின்று கொண்டுள்ளதாகத் தெரிகின்றது. இலங்கை
இராணுவத்தின் 1 இலட்சம் படையாட்களில் 35000- 40000 இடைப்பட்ட
படையாட்கள் இன்று யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருந்து
வெளியேறுவதற்கான தரைவழிப் பாதையில்லாமல் அடைபட்டுப்
போயுள்ளனர். அவர்கள் எண்ணிக்கையில் பெரிதும் சிறிய அளவிலான
விடுதலைப் புலிகளின் படையணிக்கு முகம் கொடுத்துள்ள போதிலும்,
ஆனையிறவின் வீழ்ச்சியைத் தொடர்ந்து ஆயுதத் தளபாடத் தட்டுப்பாட்டுக்கு
முகம் கொடுத்துள்ளனர்; மனவுறுதியும் வீழ்ச்சி கண்டுள்ளது. இலங்கைத்
தரைப்படைத் தளபதியின் கருத்துப்படி விடுதலைப் புலிகள் அங்கு
நிலை கொண்டுள்ள இலங்கை இராணுவப் படையாட்களிடம் உள்ளதைக்
காட்டிலும் சக்திவாய்ந்த ஆயுதங்களைக் கொண்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் நிலை கொண்டிருந்த ஐக்கிய
நாடுகள் சபையின் அதிகாரிகள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். ஏனைய
அரச சார்பற்ற ஏஜன்சிகளும் (NGO)
இங்ஙனம் வெளியேறிவிடும் என்பதை
இது சமிக்கை செய்துள்ளது. சீ.என்.என். செய்தி சேவை ஒரு சர்வதேச
நிவாரணப் பணி அதிகாரியை மேற்கோள் காட்டி (CNN)
கூறுகையில் பின்வருமாறு குறிப்பிட்டது:
"எதிர்வரும் நாட்கள் மிகவும் மோசமடையும் என்ற அச்சம்
காரணமாக இங்குள்ள மக்களிடையே ஒரு பெரும் நிச்சயமற்ற
நிலை இருந்து கொண்டுள்ளது". கடந்த வாரம் நகரில் உணவுப்
பொருட்களின் விலைகள் 50% முதல் 100% வரை அதிகரித்தன. ஏனைய
அறிக்கைகளின்படி இராணுவம் அங்கிருந்து வெளியேறுவதற்கான
ஒரு தயாரிப்பாக பலாலி விமானப் படைத் தளத்தை நோக்கி தனது
படைகளையும் கனரக ஆயுதத் தளபாடங்களையும் நகர்த்த
ஆரம்பித்து விட்டதாகத் தெரிகின்றது.
இந்தப் படு மோசமான உள்நாட்டு யுத்தம்
1983ல் இருந்து இடம் பெற்று வருகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகள்
வடக்கு கிழக்குமாகாணங்களில் ஒரு தனித் தமிழ் நாட்டை
ஸ்தாபிதம் செய்யப் போராடி வருவதோடு 1995 டிசம்பரில் யாழ்ப்பாண
நகரையும் யாழ்ப்பாணக் குடா நாட்டின் பெரும் பகுதியையும்
இராணுவம் திரும்பக் கைப்பற்றும் வரை, 1990ல் இருந்து இப் பிராந்தியத்தைத்
தனது பிடிக்குள் கொண்டிருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளின்
இன்றைய தாக்குதல்கள் 1999 நவம்பரில் இலங்கை இராணுவம்
வன்னியில் அதனது ஒரு தொகை பெரும் முகாம்களைக் கைவிட்டு
ஓட்டம் பிடித்ததில் இருந்து துரித வளர்ச்சி கண்டது.
கொழும்பில் அரசியல், இராணுவ அமைப்புக்கள்
ஸ்தம்பிதம் கண்டு போயுள்ளன. இராணுவத் தளபதிகள் வடக்கில்
இடம் பெற்ற தோல்விகள் பெரும் திடீர் மாற்றங்கள் அல்ல
எனவும் விரகி முக்கியத்துவம் வாய்ந்த முகாம்களின் வீழ்ச்சி ஒரு
"தந்திரோபாய ரீதியான படைவிலக்கல்" மட்டுமே
எனக் காட்ட முயற்சித்து வருகின்றனர். ஆனையிறவு முகாம் வீழ்ச்சி
கண்டதன் பின்னர் இராணுவம் தனது பாதுகாப்பு நிலைகளை வடக்கு
நோக்கி மீள நிலை நிறுத்தி வருவதாகவும் 80 படையாட்களும் 8
அதிகாரிகளும் கொல்லப்பட்டதாகவும் இராணுவ அறிக்கைகள்
தெரிவித்தன. மறுநாள் விடுதலைப் புலிகள் 126க்கு மேற்பட்ட சடலங்களை
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் அனைத்துலகக் குழுவிடம் (ICRC)
ஒப்படைத்தது. இதன் பின்னர் ஏப்பிரல்
30ம் திகதி பளை வீழ்ச்சி கண்டதைத் தொடர்ந்து இராணுவம் 13
படையாட்கள் இறந்ததாக அறிவித்த போதிலும் விடுதலைப் புலிகள்
42 சடலங்களை வன்னியில் ஒப்படைத்தனர். இது நாளுக்கு நாள்
மோசமடைந்து வரும் இலங்கை அரசாங்க இராணுவ
நிலைமையை பூசி மெழுகுவதற்கான ஒரு பொய்ப் பிரச்சாரம்
என்பதில் சந்தேகம் கிடையாது.
ஏப்பிரல் கடைசி வாரத்தில் பிரித்தானியாவில் இருந்து
நாடு திரும்பிய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க இராணுவம்
பின்னடைந்து போனதை- தற்காலிகமானது எனக் கூறி- ஒப்புக்
கொண்டார். அன்றில் இருந்து அவர் நாட்டை ஒரு "யுத்த
நிலைமைக்கு" தயார் நிலையில் வைப்பதில் ஈடுபட்டார். முழுக்கவனத்தையும்
யாழ்ப்பாணத்துக்கு திருப்பும் விதத்தில் மூன்று மாத காலங்களுக்கு
"அத்தியாவசியமற்ற" அபிவிருத்தித் திட்டங்கள் அனைத்தும்
இடைநிறுத்தம் செய்யப்பட்டன. சமீபகால யுத்தத்தில் இராணுவம்
இழந்து போன ஆயுதத் தளபாடங்களையும் தோட்டாக்களையும்
கொள்வனவு செய்ய அனைத்துலக ஆயுத விநியோகஸ்தர்களுடன் ஒரு
வெறிபிடித்த பேச்சுவார்த்தைகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக
அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்தடவையாக ஆயுதப் படைகளின் சகல
தொண்டர் படைகளும் சேவைக்கு அழைக்கப்பட்டுள்ளன.
கதிர்காமர்- வாஜ்பாய் சந்திப்பு
இதே சமயம் சந்திரிகா குமாரதுங்கவின்
வெளிநாட்டு அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் தற்சமயம் புதுடில்லியில்
இருந்துகொண்டுள்ளதோடு இராணுவம் உடனடியாக இராணுவ
உதவியை வேண்டியுள்ளதாக அப்பட்டமாகத் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் தொடர்ந்து முன்னேற்றம் அடையுமிடத்து யாழ்ப்பாணத்தில்
இருந்து தமது படைகளை அப்புறப்படுத்த உதவும் திட்டத்தையும்
இது உள்ளடக்கிக் கொண்டிருந்தது. 35000 படையாட்களையும்,
இராணுவத் தளபாடங்களையும் அங்கிருந்து விரைவில் அப்புறப்படுத்துவதற்கான
கடற்படை, ஆகாயப்படை சக்தியை இலங்கை இராணுவம் கொண்டிருக்காததும்
இதற்குக் காரணமாகும். கதிர்காமர் இந்தியப் பிரதமர் அடல்
பிஹாரி வாஜ்பாயை நேற்று சந்தித்த போதிலும் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டது.
இந்திய வெளிநாட்டு விவகார அமைச்சர் "இலங்கையிலான இந்திய
இராணுவத் தலையீட்டை அடியோடு நிராகரித்துவிட்டார்."
எதிர்வரும் அக்டோபரில் இலங்கையில்
பாராளுமன்றத் தேர்தல் இடம்பெற வேண்டியுள்ளது. இதனால்
அரசாங்கத்துக்கும் எதிர்க் கட்சியான யூ.என்.பி.க்கும்
இடையேயான கசப்பான குற்றச்சாட்டுக்கள் உக்கிரம் கண்டுள்ளன.
யாழ்ப்பாணம் விடுதலைப் புலிகளிடம் வீழ்ச்சி காண்பதானது
குமாரதுங்கவுக்கு ஒரு பிரமாண்டமான அரசியல் அடியாகும்.
1994ல் அவர் சமாதானத்தை ஏற்படுத்தும் வாக்குறுதிகளுடன் ஆட்சியைக்
கைப்பற்றினார். ஆனால் படிப்படியாக யுத்தத்தை உக்கிரமடையச்
செய்தார். 1995 டிசம்பரில் யாழ்ப்பாணத்தை விடுதலைப்
புலிகளிடம் இருந்து திரும்பிக் கைப்பற்றியதை தனக்கு ஒரு
பெருமையாக்கிக் கொண்டார். ஆதலால் கசப்பான பதில் குற்றச்
சாட்டுக்கள் மேலாதிக்கம் செலுத்திக் கொண்டுள்ளன.
ஏப்பிரல் 27ம் திகதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய
உரையில் குமாரதுங்க இராணுவத்தின் பெரும் பின்னடைவுகளுக்கான
பொறுப்பை யூ.என்.பி.யின் தலையில் கட்டியடிக்க முயன்றார்.
அவர் கூறியதாவது: "இராணுவ நடவடிக்கைகள் தொடர்பான
யூ.என்.பி. அரசாங்கத்தின் பலவீனமான நிலைப்பாடுகளின்
காரணமாக 1983ல் இருந்து நாம் ஒரு பலவீனமான இராணுவத்தை
உரித்தாக்கிக்கொள்ள நேரிட்டது. அந்தக் காலத்தில் நடந்தது
என்னவெனில் அரசாங்கம் ஆயுதப் படைகளைப் பலப்படுத்துவதற்குப்பதிலாக
விடுதலைப் புலிகளை பலப்படுத்தியது".
யூ.என்.பி.யும் அரசாங்கத்தை குற்றம் சாட்டுவதில்
பின் நிற்கவில்லை. யூ.என்.பி. தவிசாளர் (Chairman)
கரு ஜயசூரிய ஏப்பிரல் 23ல் வெளியிட்ட
அறிக்கையில் கூறியதாவது: "(ஆனையிறவு) முகாம் வீழ்ச்சி கண்டதற்கு
படையாட்களின் திறமையின்மையன்றி அரசாங்கம் தனது அரசியல்
நலன்களின் பேரில் யுத்தத்தை நடாத்துவதே காரணம்"
என்றார். இதற்கு மேலும் பலம் சேர்க்கும் விதத்தில் யூ.என்.பி.
தலைவர் விக்கிரமசிங்க தெரிவித்ததாவது: "ஆனையிறவின் வீழ்ச்சிக்கு
குமாரதுங்கவின் நிர்வாகமும் சில திறமையற்ற இராணுவ
அதிகாரிகளுமே பொறுப்பாளியாவர்".
ஆனால் ஆளும் வட்டாரங்களில் ஒரு தேசிய
அரசாங்கத்தை அமைக்கும்படி கோரும் கணிசமான அளவு
நெருக்குவாரமும் இருந்து கொண்டுள்ளது. ஏப்பிரல் 27ம்
திகதிய 'டெயிலி மிரர்' ஆசிரியத் தலையங்கம் கூறியதாவது: "துக்கத்துக்கிடமான
முறையில் (வெளிநாட்டு பயணத்தின் பின்னர்) நாடு திரும்பிய பின்னர்
திரு. விக்கிரமசிங்க அரசாங்கத்துடன் சேர்ந்து நெருக்கடியை
கையாள்வதற்கான தனது பங்கைச் செலுத்துவதற்குப் பதிலாக
முன்னுக்குப் பின் முரணான கோசங்களை இசைக்க ஆரம்பித்தார்.
அவர் ஆனையிறவு பின்னடைவுக்கான முழுப் பழியையும் அரசாங்கத்தின்
மீது சுமத்தியுள்ளார். அவரது சில கருத்துக்கள் பயங்கரவாதிகளின்
மனநிலையை பலப்படுத்துமே அல்லாது பாதுகாப்பு படைகளை
அல்ல.
உண்மையில் முழுத் தேசமும் நாட்டின் இணைப்பை
கட்டிக்காக்கும் அவர்களின் வீரம் செறிந்த போராட்டத்துக்குக்
கடமைப்பட்டுள்ளது".
அந்தரங்க பேச்சுவார்த்தை
ஏப்பிரல் 29ம் திகதி ஜனாதிபதி குமாரதுங்க எதிர்க்
கட்சி தலைவரையும் யூ.என்.பியையும் இந்த இராணுவ நிலைமை
தொடர்பானஅந்தரங்க பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். விக்கிரமசிங்க,
தொடா்பு சாதனங்களைஅமுலில் உள்ள இராணுவ தணிக்கையை
எதி்ா்க்கும்படி அழைப்பு விடுத்ததன் பின்னர் பொதுஜன
முன்னணி அரசாங்கம் இராணுவ ஆஸ்பத்திரிக்கு யூ.என்.பி.யினர் திரட்டிய
மருந்துப் பொருட்களையும் வைத்திய சாதனங்களையும் கையளிக்க
விதிக்கப்பட்டு இருந்த தடையை நீக்கியது. குமாரதுங்கவுடனான
பேச்சுவார்த்தைகளில் இடம் பெற்ற விடயங்களை அம்பலப்படுத்தாது
மூடுமந்திரமாக வைத்திருக்கவும் விக்கிரமசிங்க உடன்பட்டார்.
இந்தப் பேச்சுவார்த்தைகள் மே 2ம் திகதி இடம்
பெற்ற போதிலும் இரு தரப்பினரும் அதன் உள்ளடக்கத்தைக்
கலந்துரையாடாதிருக்க உடன்பட்டனர். இது அவர்கள் ஏதோ
ஒரு வடிவிலான தற்காலிகக் கூட்டை நோக்கி விரைந்து கொண்டுள்ளதைக்
காட்டுகின்றது. யூ.என்.பி. வெளியிட்ட ஒரு அறிக்கை ஒரு யுத்த
சபையை (War council) அமைக்க
அழைப்பு விடுத்தது. இதில் திறமைசாலிகளான சிரேஷ்ட இராணுவ
அதிகாரிகள் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் எனவும்
"பிராந்திய ஒருமைப்பாட்டைக் காக்கவும் மட்டுமல்லாது
சட்டத்தையும் ஒழுங்கையும் பேணவும்" இது அவசியம்
என்றது. "விஷயமறிந்த வட்டாரங்களை"மேற்கோள் காட்டி
பத்திரிகைகள் வெளியிட்ட செய்திகள், குமாரதுங்க ஒரு தேசிய
பாதுகாப்பு சபையை அமைக்கும் பிரேரணையை முன்வைத்துள்ளதாகவும்
இது ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், சபாநாயகர்
அரசியற் கட்சிகளின் தலைவர்கள் என்போரை உள்ளடக்கவுள்ளதாகவும்
தெரிவிக்கப்பட்டது.
அத்தகைய ஒரு தேசிய ஐக்கிய ஆட்சி
முறையானது தவிர்க்க முடியாத விதத்தில் யுத்தத்தை உக்கிரமாக்குவதோடு
தொழிலாளர், ஒடுக்கப்படும் மக்களது- தமிழ்,சிங்கள- வாழ்க்கைத்
தரத்தையும் ஜனநாயக உரிமைகளையும் துவம்சம் செய்யும்
தாக்குதல்களை மேலும் உக்கிரமாக்குவதாக விளங்கும்.
"அத்தியாவசியமற்ற" அபிவிருத்தித் திட்டங்களை இடைநிறுத்தி
விடுவதென்ற குமாரதுங்கவின் முடிவு, யுத்த முயற்சிகளின் பேரில்
தொழிலாளர், விவசாயிகளை தியாகம் செய்யும்படி நெருக்கும்
ஒரு தெளிவான செய்தியாகும். இராணுவத் தரப்பில் மரணங்களாலும்
தப்பியோட்டங்களாலும் ஏற்பட்ட வெற்றிடங்களை நிரப்ப கட்டாய
இராணுவ சேவையை திணிக்கும் கோரிக்கைகள் கொழும்பு பத்திரிகைகளில்
ஏற்கனவே விடுக்கப்பட்டுள்ளன. அத்தோடு இராணுவத் தொண்டர்
படைச் சேவையை பெறமுடியாது போயுள்ளது.
இதே சமயம் கொழும்பில் தமிழர் எதிர்ப்பு
சோவினிச சூழ்நிலை ஒன்றை சிங்கள சோவினிச குழுக்கள் தூண்டிவிட்டுள்ளன.
இவை பொதுஜன முன்னணி அரசாங்கமும் யூ.என்.பி. எதிர்க்கட்சியும்
"தாய்நாட்டை பிரிக்க" ஒத்துழைப்பதாக குற்றம் சாட்டியுள்ளன.
ஏப்பிரல் 26ம் திகதி சிங்கள வீரவிதானவும் பயங்கரவாதத்துக்கு
எதிரான தேசிய இயக்கமும் 'சிங்கள உறுமய' (Sinhala
Heritage Party) என்ற பெயரில் ஒரு
புதிய கட்சியை ஆரம்பித்துள்ளன.
இந்த சிங்கள சோவினிஸ்டுகள் அரசாங்கத்துக்கும்
விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகளில்
நோர்வே ஏற்பாட்டாளராக இயங்குவதை எதிர்த்து சமீபத்தில்
ஆர்ப்பாட்டம் நடாத்தியதோடு இப்போது வெளிநாட்டு
இராணுவத் தலையீட்டுக்கான பிரச்சாரத்திலும் இணைந்து கொண்டுள்ளன.
ஒரு அசிங்கமான அரசியல் சுற்றுமாற்று நடவடிக்கையாக இந்நாட்டின்
உயர் மட்ட பெளத்த பிக்குகளை உள்ளடக்கிய தேசிய பெளத்த
சங்க சபை, யாழ்ப்பாணம் விடுதலைப் புலிகளின் கைக்குள் வீழ்ச்சி
காண்பதை தடுக்க இந்தியா படைகளை அனுப்ப வேண்டும் என
இவ்வாரம் கோரியது. 1987ல்
இந்திய- இலங்கை உடன்படிக்கையின் கீழ் இந்தியப் படைகள் யாழ்ப்பாணத்துக்கு
அனுப்பப்படுவதை இந்த பிக்குகள் பலமாக எதிர்த்தனர்.
ஏப்பிரல் 3ம் திகதி 'ஐலன்ட்' பத்திரிகை தனது
ஆசிரியத் தலையங்கத்தில் இந்தியாவிடம் இருந்தும் அமெரிக்காவிடம்
இருந்தும் இராணுவ உதவிக்கு அழைப்பு விடுத்தது. "இன்று இந்திய-
இலங்கை உறவுகள் நல்ல நிலையில் உள்ளன. இந்திய- அமெரிக்க
உறவுகள் கடந்த தசாப்தத்தில் ஒரு பிரமாண்டமான மாற்றம்
கண்டுள்ளது. சமீபத்தில் ஜனாதிபதி பில் கிளின்டனின் வெற்றிகரமான இந்திய
விஜயத்தின் மூலம் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவும் இந்தியாவும்
அனைத்துலக பயங்கரவாதத்தை எதிர்த்து கையுயர்த்த அர்ப்பணம்
செய்து கொண்டுள்ளன. அந்த அர்ப்பணம் விசுவாசமானதெனில்
அந்த அர்ப்பணம் பெரிதும் சாத்தியமான முறையில் வெளிப்பாடாக
வேண்டாமா?" என்றது.
இப்போதைக்கு இந்தியா இலங்கையின் வேண்டுகோளை
நிராகரித்து விட்ட போதிலும் குமாரதுங்க அரசாங்கம் குறைந்தபட்சம்
பகிரங்கமாகத் தன்னும் அமெரிக்காவுக்கு ஒரு வேண்டுகோளை
விடுக்கவில்லை. ஆனால் 17
வருட கால யுத்தத்தில் ஒரு தெளிவான திருப்புமுனையாகவும் இந்தியத்
துணைக் கண்டம் பூராவும் மூலோபாயத் திருப்பமாகவும்
இராஜதந்திர ரீதியில் அல்லது இராணுவ ரீதியில் ஒரு பெரும் தலையீட்டை
நிராகரித்துவிட முடியாது.
|