Fighting erupts again as Sri
Lankan government imposes censorship clampdown
இலங்கை அரசாங்கம் தணிக்கையை
திணித்த நிலையிலும் சண்டை மீண்டும் மூண்டுள்ளது
By Dianne Sturgess
10 May 2000
Use
this version to print
யாழ்ப்பாணக் குடாநாட்டில்
35000-40000 க்கும் இடைப்பட்ட இராணுவப் படையாட்களை
வாபஸ் பெற இடமளிக்கும் விதத்தில் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப்
புலிகள் (LTTE)
கொழும்பு பொதுஜன முன்னணி அரசாங்கத்துக்கு முன்வைத்த ஒரு
தற்காலிக யுத்த நிறுத்த ஏற்பாடுகள் நிராகரிக்கப்பட்டதைத்
தொடர்ந்து மே 10ம் திகதி வடக்கில் மீண்டும் மோதுதல்கள்
வெடித்தன.
அரசாங்க அதிகாரபூர்வமான
பேச்சாளரும் தணிக்கை அதிகாரியுமான ஆரிய ரூபசிங்க, இலங்கையின்
இரண்டாவது பெரிய நகரமும் 5 இலட்சம் மக்களைக் கொண்டதுமான
யாழ்ப்பாண நகரத்தில் இருந்து 25 கி.மீற்றர் தென் மேற்கே உள்ள
அரசாங்க பாதுகாப்பு படைகளின் பாதுகாப்பு நிலைகள் மீது விடுதலைப்
புலிகள் நடாத்திய இரண்டு தாக்குதல்களை இராணுவம் முறியடித்துள்ளதாகத்
தெரிவித்தார். "அன்று அதிகாலை அதிக எண்ணிக்கையிலான பயங்கரவாதிகள்
பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள படையாட்கள் மீது
இரண்டு தொடர்ச்சியான தாக்குதல்களை நடாத்தினர்"
என ஆரிய ரூபசிங்க குறிப்பிட்டார். முதலாவது தாக்குதல் 30 நிமிடங்களும்
இரண்டாவது 15 நிமிடங்களும் இடம் பெற்றுள்ளது. விடுதலைப் புலிகள்
இயந்திரத் துப்பாக்கிகள் மூலமும் ஏவுகணை குண்டு வீச்சுக்களாலும்,
ஷெல் அடிகளாலும் தாக்குதல் நடாத்தினர்.
இந்தச் செய்தி எந்தளவுக்கு
உண்மையானது என்பது தெளிவாக இல்லை. ஏனெனில் அரசாங்கத்
தகவல்களை மட்டுமே பெறக் கூடியதாக உள்ளது. மே 3ம்
திகதி அரசாங்கம் படு கொடூரமான தணிக்கை விதிகளை அமுல் செய்தது.
இவை புதிய அவசரகால அதிகாரங்களின் ஒரு பாகமாக வெளியிடப்பட்டன.
இவை வேலை நிறுத்தங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் நசுக்கும்
புதிய அவசரகால விதிமுறைகள் ஆகும். அத்தோடு இந்த விதிமுறைகள்,
இராணுவம் யுத்தத்தின் பேரில் சாதனங்களையும் ஆளணிகளையும்
வலுக் கட்டாயமாக சுவீகரித்துக் கொள்ளும் அதிகாரத்தையும்
வழங்கியுள்ளது. இந்த புதிய தணிக்கை விதிகள் அமுலுக்கு வருவதற்கு
முன்னரும் ஆட்சியாளர்கள், பத்திரிகையாளர்கள் யுத்தம் இடம்
பெறும் பகுதிகளுக்கு விஜயம் செய்வதை தடுத்தனர். இராணுவ
தொடுவைகள் ஊடாகவன்றி வேறு விதத்தில் யாழ்ப்பாணத்துடன்
தொலைபேசி தொடர்புகளை வைத்துக் கொள்ள வழியில்லை.
பொதுஜன முன்னணி அரசாங்கம்,
ஏப்பிரல் 22ம் திகதி விரகி முக்கியத்துவம் வாய்ந்த ஆனையிறவு
முகாமும் ஏப்பிரல் 30ம் திகதி பளை இராணுவ முகாமும் வீழ்ச்சி
கண்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட ஒரு தொகை அவமானம் மிக்க
தோல்விகளின் காரணமாக இராணுவத்தின் மனோநிலையில் ஏற்பட்ட
தளர்ச்சியை புனருத்தாரணம் செய்யும் கையாலாகாத்தனமான
முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இந்த ஒவ்வொரு தோல்விகளுக்கும்
முன்னதாக இராணுவப் பேச்சாளர்கள், ஒரு ஆபத்தான நிலைமை
உருவாகி இருப்பதை பூசி மெழுக முயன்று வந்துள்ளனர். இராணுவத்தினர்
எண்ணிக்கையில் சிறியதும் கனரக ஆயுதங்களைக் கொண்டிராததும்
விமான ஆளணி உதவிகளற்றதுமான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால்
முறியடிக்கப்பட்டனர்.
அரசாங்க இராணுவம், விடுதலைப்
புலிகள் மேலும் வடக்கு நோக்கி முன்னேற இடமளிக்க முடியாத
ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. அங்ஙனம் முன்னேறின் படைகளை விரைவாகக்
குவிக்கவும் வெளியேற்றவும் தீர்க்கமான இடமாக இருந்து
கொண்டுள்ள பலாலி விமான நிலையத்துக்குச் சமீபமாக தமது நீண்ட
தூரம் செல்லும் ஏவுகணைகளையும், பீரங்கிகளையும் விடுதலைப்
புலிகள் நிலைநிறுத்துவதை சாத்தியமாக்கிவிடும். 'டைம்ஸ் ஒப் இந்தியா'
பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் இலங்கை இராணுவ வட்டாரங்கள்,
படைகள் பலாலியை தொடர்ந்தும் தமது பிடியில் வைத்திருப்பதை
ஊர்ஜிதம் செய்யப் போராடி வருவதை சுட்டிக் காட்டின.
1990-1995 க்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் விடுதலைப் புலிகள்
யாழ்ப்பாண நகரத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் கொணர்ந்திருந்த
சமயத்திலும் இராணுவம் இந்த முக்கிய வசதிகளைத் தொடர்ந்தும்
தமது கையில் கொண்டு இருந்தது.
யாழ்ப்பாணக் குடாநாட்டில்
உள்ள இராணுவ நிலைகளை தக்க வைக்க அரசாங்கம் புதிய
ஆயுதங்களையும், யுத்த தளபாடங்களையும் கொள்வனவு செய்துள்ளதாக
அறிவித்துள்ளது. கடந்த வாரம் இராணுவ விநியோகங்களை ஏற்படுத்திக்
கொள்ளும் புதிய ஒரு மார்க்கமாக அரசாங்கம் இஸ்ரேலுடன்
இராஜதந்திர உறவுகளை மீள ஸ்தாபிதம் செய்து கொண்டுள்ளதாக
அறிவித்தது. இந்தியா இலங்கைக்கு இராணுவ உதவிகளை வழங்குவதை
நிராகரித்துவிட்ட போதிலும், இந்திய விமானப் படைத் தளபதி அனில்
யஸ்வந் டிப்னிஸ் தற்சமயம் இலங்கையில் இருந்து கொண்டுள்ளதோடு
ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுடனும் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார்.
இந்த வாரம் ஒரு ரூஷ்ய இராணுவ தூதுக் குழுவும் கொழும்பு வந்துள்ளது.
அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில்
உள்ள யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடபாகத்தில் உள்ள குழப்ப
நிலைமையைப் பற்றியும் 'டைம்ஸ் ஒப் இந்தியா' மற்றொரு செய்தியை
வெளியிட்டிருந்தது. "இங்குள்ள (இந்தியா) சமூக அமைப்புக்களின்
படி தமிழ் அகதிகளுக்கும் அகதியின் உறவினர்களுக்கு ஊடாகக்
கிடைத்துள்ள தகவல்களின் படியும் அந்தப் பகுதிகளில் உணவு மற்றும்
சிவில் விநியோகங்கள் வேகமாக வற்றிப் போய்க் கொண்டுள்ளன.
போராளிகள் ஆனையிறவை கைப்பற்றிக் கொண்டமையானது இந்த
மக்களுக்கான தண்ணீர் விநியோக மூலங்களை வெட்டித் தள்ளியுள்ளது.
இப்பிராந்தியத்திலான துப்பாக்கிச் சூடுகளுக்கும் குண்டுவீச்சுக்களுக்கும்
மத்தியில் அவர்கள் மன்னார் கரையோரமாக தப்பித்து ஓடுவதற்கான
வழியைக் காண்பதை பெரிதும் கடினமாக்கியுள்ளது".
திங்கட்கிழமை விடுதலைப் புலிகள்
ஒரு யுத்த நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்தமையானது- நடைமுறையில்
யாழ்ப்பாணக் குடாநாட்டின் கட்டுப்பாட்டை சரணடையச்
செய்வது- நாட்டின் தென்புறத்தில் இருந்து வந்த கிராமப்புற
இளைஞர்களையும், முக்கியமாக பொருளாதாரக் காரணங்களுக்காக
இராணுவத்தில் சேர்ந்து கொண்டவர்களையும் உள்ளடக்கிய
இலங்கை இராணுவப் படையாட்களிடையே மேலும் மனத்தளர்ச்சியை
உண்டு பண்ணும் இலக்கிலான திட்டமிட்ட ஒரு நடவடிக்கையாகும்
என்பதில் எதுவித சந்தேகமும் கிடையாது. அது மேலும் கூறியதாவது:
"வன்முறைகளும் இரத்தக்களரியும் மேலும் உக்கிரமடைவதை
தடை செய்யவுமே" யுத்த நிறுத்தம் வேண்டுமெனக் கோருவதாகவும்
இதை நிராகரிப்பது "பாரதூரமான பேரழிவுகளைக் கொண்ட
இராணுவ தோல்விகளை" உருவாக்கும் எனவும் எச்சரித்தது.
ஆரம்பத்தில் அரசாங்கம்
யுத்த நிறுத்த யோசனைகளை தூக்கி வீசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அரசாங்கப் பேச்சாளர் ரூபசிங்க கூறியதாவது: "இப்போதைக்கு
எதுவும் கூறுவதற்கில்லை. இந்தப் பிரேரணையை ஆய்வு செய்ததன்
பின்னர் நாம் எமது நிலைப்பாட்டை உங்களுக்கு அறியத் தருவோம்"
என்றாா். எவ்வாறெனினும் நேற்று அரசாங்கம் கடூரமான
தொனியில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருந்து படைவிலக்கல்
இடம் பெறாது என அறிவித்தது. நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில்
ஆற்றிய உரையில் குமாரதுங்க கூறியதாவது: "5 இலட்சம் யாழ்ப்பாணத்
தமிழ் மக்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் தமது பாசிசப் பிடியை மீண்டும்
கொண்டிருக்க நாம் இடமளிக்க மாட்டோம்" என்றுள்ளார்.
ஒரு பெரும் இராணுவத்
தோல்விக்கு தலைமை தாங்கிய பிரதி அமைச்சர் அனுருத்த ரத்வத்த
பாராளுமன்றத்தில் பேசுகையில் கூறியதாவது: "இறுதி மனிதன்
உள்ளவரை நாம் போராடுவோம். ஒரு யுத்த நிலைமையின் கீழ்
தற்காலிக பின்னடைவுகள் ஏற்படலாம். அது யுத்தம் அடியோடு
தோல்வி கண்டு போனதைக் குறிக்காது" என்றாா். அவர்
தனது வாயடிப்பில் மேலும் கூறியதாவது: "நாம் யாழ்ப்பாணத்தைக்
காப்பதோடு மட்டுமல்லாது நாம் மீண்டும் ஆனையிறவு இராணுவ
முகாமைக் கைப்பற்றுவோம்" என்றார்.
ஆனையிறவு வீழ்ச்சி கண்டதன்
பின்னர் எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, முதலில் யுத்தம்
சம்பந்தமான ஒரு விவாதத்துக்கு அழைப்பு விடுத்தது. அத்தோடு
நாடு பூராவும் நீண்டுவரும் அரச அவசரகாலச் சட்டத்துக்கு
எதிராக வாக்களிக்கப் போவதாகவும் எச்சரிக்கை செய்தது.
ஆனால் இந்த விடயத்தில் யூ.என்.பி. எம்.பீ.க்கள் பொதுஜன முன்னணி
அரசாங்கம் பக்கம் நின்று கொண்டனர். அவர்கள் அவசரகாலச்
சட்ட நீடிப்பு வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாததோடு கடந்த
வாரம் பிரகடனம் செய்யப்பட்ட புதிய அவசரகாலச் சட்ட
விதிகளுக்கு எதிராக எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஏற்கனவே பல அமைப்புக்கள்
புதிய தணிக்கை விதிகளை எதிர்த்து குரல் கொடுத்துள்ளன. இந்த
தணிக்கை விதிகள், வெளிநாட்டு செய்தி நிருபர்கள் உட்பட சகலரையும்
செய்தி வெளியிடப்பட முன்னதாக அதன் பிரதியை அரசாங்க தணிக்கை
அதிகாரியிடம் சமர்ப்பிப்பதை கட்டாயமாக்கியுள்ளது.
பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம்,
இந்த தணிக்கை விதிகளை "மக்களின் கருத்து வெளிப்பாட்டு
சுதந்திரத்துக்கு எதிரான ஒரு அப்பட்டமான அத்துமீறல்"
எனக் கண்டனம் செய்துள்ளது. இந்த விதிகள் திருத்தப்படாது
போனால் தாம் சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக
தெரிவித்துள்ளது. இலங்கை புதினப் பத்திரிகை சமூகம், இந்த தடைகளை
விலக்கும்படி கோரியுள்ளது. தேசிய நெருக்கடி காலத்தில் எத்தகைய
பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக
பத்திரிகைகள் பெரிதும் பக்குவம் கண்டுள்ளதாக அது மேலும்
குறிப்பிட்டுள்ளது.
பாரிசை தலைமையகமாகக்
கொண்டியங்கும் 'Reporters
without borders' (RWB) என்ற
அமைப்பு தணிக்கை விதிகளை நீக்குமாறு கோரி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அத்தோடு இலங்கையில் தொழிற்படும் உழைக்கும் பத்திரிகையாளர்களின்
பாதுகாப்பை ஊர்ஜிதம் செய்யும்படியும் அரசாங்கத்தை அது
வேண்டிக் கொண்டுள்ளது. இந்த RWB
பேச்சாளர் வின்சன்ட் புரோசெல் கூறியதாவது: "இராணுவ
நிலைமை மிகவும் தீர்க்கமானது. ஆனால் இந்தப் படு பயங்கரமான
விதிகளைத் திணிப்பது சரியான தீர்வு என நான் நினைக்கவில்லை"
என்றாா்.
அவசரகால விதிகளைப் பாவித்து
ஏற்கனவே ஆர்ப்பாட்டங்களும் கூட்டங்களும் தடை செய்யப்பட்டுள்ளது.
நவ சமசமாஜக் கட்சியும் ஜே.வி.பி. யும் புதிய விதிகளுக்கு எதிராக
நடாத்த இருந்த எதிர்ப்பை அரசாங்கம் இதைத் தடை செய்ததும்
கைவிட்டுவிட்டனர். ஆனால் அதே நாளன்று புதிதாக அமைக்கப்பட்டுள்ள
சோவினிச சிங்கள உறுமய கட்சியின்- யுத்தத்துக்கு பேராதரவு காட்டுவோர்-
300 அங்கத்தவர்கள் கொழும்பில் அணி திரள முடிந்ததோடு பொலிசார்
அரை மனதோடு நடாத்திய நடவடிக்கைகளைத் தொடர்ந்தே
அவர்கள் கலைந்து சென்றனர்.
வெகுஜனத் தொடர்பு சாதன
அமைச்சர் மங்கள சமரவீர, வெளிநாட்டு நிருபர்களுக்கு கடந்தவாரம்
வழங்கிய பேட்டியில் இந்த தணிக்கை 'இந்த தீர்க்கமான காலப்பகுதிக்கே
அமுலில் இருக்கும் எனவும் பல மாதங்களுக்கல்ல வாரங்களுக்கே
இருக்கும்" எனவும் குறிப்பிட்டார். ஆனால் வடக்கில் இருந்து
வரும் அவஸ்தையான இராணுவ நிலைமையின் கீழும், தெற்கில் இருந்து
வரும் பரந்த அளவிலான அரசாங்க எதிர்ப்பினாலும் குமாரதுங்க
குறுகிய காலத்தினுள் இந்த விதிகளை தன்பாட்டில் நீக்கி விடுவார்
என்பதற்கான சாத்தியம் பெரிதும் குறைவாகும்.
|