An ongoing political stalemate in Sri Lanka over a
negotiated settelement to the war
யுத்தத்துக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாணும்
இலங்கையின் முயற்சிகளில் அரசியல் ஸ்தம்பித நிலை தொடர்கிறது
Wije Dias
17 April 2000
கடந்த இரண்டு வருடங்களாக இலங்கையின்
பெரும் வர்த்தக, நிதி நிறுவனங்களின் முன்னணி பிரதிநிதிகள் 16 வருடங்களுக்கு
மேலாக இலங்கையின் வடக்கு- கிழக்கு மாகாணங்களில் தமிழீழ
விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிராக இடம் பெற்று வரும் யுத்தம்
தொடர்பாக பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காணும் விடயத்தில்,
இலங்கையின் முக்கிய அரசியல் கட்சிகள் இணக்கத்துக்கு வருவது
நாடு முகம் கொடுத்துள்ள முதலும் முக்கியமுமான விடயமென
வலியுறுத்தி வந்துள்ளன.
அவர்களின் வாதத்தின்படி அத்தகைய ஒரு ஏற்பாடு இல்லாமல்
இலங்கை பூகோளரீதியான பொருளாதாரத்தில் இருந்து மேலும்
தள்ளிவைக்கப்பட்டு விடுவதோடு உலகளாவிய ரீதியிலான முதலீடு, நிதி
மூலதனத்தை ஈர்க்கும் போராட்டத்தில் தோல்வி காணவும்
நேரிடும்.
ஆனால் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் பொதுஜன முன்னணி
அரசாங்கமும் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான முக்கிய எதிர்க்
கட்சியான யூ.என்.பி.யும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை
ஆரம்பிப்பதற்காகத் தன்னும் ஒரு கூட்டு உடன்பாட்டுக்கு வரத்
தவறிவிட்டன.
ஒரு "சமாதான திட்டம்" தொடர்பாக ஒரு
உடன்பாட்டை எட்ட இக்கட்சிகள் தவறியமை வெறுமனே முன்னணி
முதலாளித்துவஅரசியல்வாதிகளின் தனிப்பட்ட இலாயக்கற்ற
நிலையின் வெளிப்பாடு மட்டும் அல்ல; சந்தேகத்துக்கு இடமற்ற
விதத்தில் இவை இதில் ஒரு பாத்திரத்தை வகித்த போதிலும் இது
ஒரு மிகவும் அடிப்படையான போக்கின் வெளிப்பாடாகும்.
பிராந்தியங்களுக்கு அல்லது மாகாணங்களுக்கு அதிகாரப் பகிர்வை
வழங்கும் அரசியல் பொதியின் அடிப்படையில் பிரச்சினையை முடிவுக்குக்
கொணரும் அரசியலமைப்பு தீர்வு எனப்படுவது இராணுவத்தின் ஒரு
பகுதியினருடன் வலதுசாரி சிங்கள சோவினிச சக்திகளின் வன்முறைகளைக்
கட்டவிழ்த்து விடுமோ என இந்த இரண்டு கட்சிகளும் அஞ்சுகின்றன.
"ஒற்றையாட்சி சிங்கள அரசு"க்கு எதிராக அதைப்
பலவீனப்படுத்திவிடுமோ என அஞ்சுகின்றனர்.
யூ.என்.பி.யும் சரி பொதுஜன ஐக்கிய முன்னணியின் தலைமைப் பங்காளியான
சிறீலங்கா சுதந்திரக் கட்சியும் சரி தமிழர் எதிர்ப்பு இனவாதத்துள்
தலைமூழ்கிப் போன வரலாறு படைத்தவை. கடந்த காலத்தில்
தாம் கைதூக்கி விட்டதும் அடிப்படையாகக்கொண்டிருந்ததுமான
சக்திகளிடமிருந்து அத்தகைய ஒரு வன்முறைக்கு முகம் கொடுக்க
வேண்டி நேரிடுமோ என எண்ணுகின்றனர்.
இந்த அரசியல் நிலைமைகள் தான் யுத்தத்துக்கு ஒரு தீர்வு
காணும் சமாதான பேச்சுவார்த்தைகளுக்கும் பேரம்பேசல்களுக்குமான
அடிப்படையாகியுள்ளன. முதலாளி வர்க்கத்தின் நெருக்குவாரம்
காரணமாக இந்த இரண்டு கட்சிகளும் ஒரு "சமாதான திட்டத்தை
அபிவிருத்தி செய்யவும் யுத்தத்துக்கு நிதி வளங்களை திசைதிருப்புவதற்கு
முடிவு கட்டவும்- குறைந்த பட்சம் இதற்கு முடிவுகட்டுபவர்களாகத்
தன்னும் தம்மைக் காட்டிக் கொள்ள வேண்டும் என உணர்ந்துள்ளன.
எவ்வாறெனினும் இவற்றில் எவை தன்னும் கடும் எதிர்ப்புக்கான
சாத்தியங்களில் இருந்து தோன்றக் கூடிய ஆபத்தின் மத்தியில் ஒரு
திட்டவட்டமான திட்டத்தை நடைமுறைக்கிட விரும்பவில்லை.
இதன் பெறுபேறாக அரசியலமைப்புத் திட்டம் சம்பந்தமான
பேச்சுவார்த்தைகள்- அரை தன்னாட்சி பிராந்தியங்களில் அல்லது
மாகாணங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் அரசியல் அதிகாரங்களைப்
பெற்றுக் கொள்ளும் விதத்தில் ஒரு பேச்சுவார்த்தை மூலமான
தீர்வை எட்டுவதன் அடிப்படையிலான அணுகுமுறை- கட்சித் தலைவர்கள்
சூழ்ச்சிகளிலும் காலங்கடத்துவதிலும் முன்னொரு போதும் இல்லாத
விதத்தில் ஈடுபட்டுள்ளதால் ஒரு கேலிக்கூத்தாக மாறும்.
இன்றைய இறுதி திருப்பங்களின் மத்தியில் இந்த இரண்டு கட்சிகளுக்கும்
இடையேயான பேச்சுவார்த்தைகள் குறைந்த பட்சம் ஆகஸ்ட்
வரைக்கும் தொடரும் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்தக்
காலதாமதத்துக்கு விக்கிரமசிங்கவும் குமாரதுங்கவும் ஏப்பிரல்
மாதத்தில் இருந்து தொடர்ந்து ஆஜராகாது இருந்து வருவதே
முக்கிய காரணமாகச் சொல்லப்படுகின்றது. அவர்கள்
வெளிநாடு செல்லாது நாட்டில் இருந்திருந்தாலும் கூட
பெரிதாக ஒன்றும் நடந்திராது என்பதை நடந்து முடிந்த பேச்சுவார்த்தைகள்
பற்றிய ஆய்வு எடுத்துக் காட்டுகின்றது.
இது சம்பந்தமாக கருத்துத் தெரிவிக்கையில் இலங்கையில்
வெளியாகும் 'சன்டே லீடர்' பத்திரிகை கூறியதாவது: செவ்வாய்க்கிழமை[மார்ச்
21] இடம் பெற்ற கூட்டம் குறிப்புக்களை திருத்துவது சம்பந்தமாக
ஒரு மணித்தியாலத்துக்கு மேலாக செலவிட்டது.மற்றொரு மணித்தியாலத்தை
பொதுஜன முன்னணி அரசாங்கத்துக்கும் யூ.என்.பி.க்கும்
இடையேயான அரசியல் பிணக்குகளை கலந்துரையாட ஒதுக்கியது.
30 நிமிடங்கள் மட்டுமே அரசியலமைப்பு சீர்திருத்தங்களின் பேரில்
செலவிடப்பட்டது.
இறுதியாக ஒரு இருதரப்பு அரசியலமைப்பு பொதி உருவாகுமிடத்து
அது ஆகஸ்ட் நடுப்பகுதிக்கு முன்னதாக- பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கு
ஒரு கிழமைக்கு முன்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு,
பொதுத் தேர்தல் நடாத்தப்படும். இந்தப் பிரேரணைகள் அங்கீகரிக்கப்பட்டாலும்
கூட அடுத்த தேர்தல் திகதி [அக்டோபர்] வரை தமிழீழ விடுதலைப்
புலிகளுடனான பேச்சுவார்த்தைகள் இடம்பெற மாட்டாது.
விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தைகளின் பேரில் ஒரு
பொது அணுகுமுறையை ஆய்வு செய்யவென பொதுஜன முன்னணி
அரசாங்கத்தையும் யூ.என்.பி. யையும் ஒருங்கிணைக்க எடுக்கப்பட்ட
முதல் முயற்சி இது அல்ல. பிரித்தானிய வெளிநாட்டு அமைச்சின்
இராஜாங்கச் செயலாளர் லியாம் பொக்ஸ் 1997 ஏப்பிரல் 03ம்
திகதி இலங்கைக்கு விஜயம் செய்தது இதற்காகவே. எவ்வாறெனினும்
அவை எல்லாம் அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நடாத்தும்
பேச்சுவார்த்தைகளைப் பற்றி எதிர்க் கட்சித் தலைவருக்கும்
யூ.என்.பி.க்கும் தொடர்ந்து அறிவிக்க வேண்டும் என்பதன்
பேரிலான ஒரு உடன்படிக்கையாகவே விளங்கின.
கடந்த ஆண்டில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் குமாரதுங்க,
லியாம் பொக்ஸ் உடன்படிக்கை பற்றி உச்சாடனம் செய்ததோடு
விடுதலைப் புலிகளுடன் அந்தரங்கமானதும் தனிப்பட்டதுமான
அணுகுமுறைகளையும் கடைப்பிடித்தார். குமாரதுங்கவினால்
நேரடிப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க முடியாது
போனமையும் அதைத் தொடர்ந்து இடம்பெற்ற இராணுவப் பின்னடைவுகளும்
பொதுஜன முன்னணி ஆட்சியாளர்களின் நிலைப்பாட்டில் மாற்றம்
கொணர்ந்தது. சிங்கள சோவினிஸ்டுகளின் யுத்த வெறிக் கூச்சலைத்
தணிக்கும் பொருட்டு குமாரதுங்க யூ.என்.பி. விடுதலைப்
புலிகளுடன் இரகசியக் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டுள்ளதாகக்
குற்றம் சாட்டியது. இலங்கை இராணுவத்துக்கு தோல்வியை ஏற்படுத்தும்
பொருட்டு இராணுவப் பெரும் புள்ளிகளுடன் சேர்ந்து யூ.என்.பி.
சதி செய்வதாகவும் குற்றம் சாட்டியது. கடந்த ஆண்டு டிசம்பர்
21ம் திகதி இடம் பெற்ற ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தில்
பொதுஜன முன்னணியின் முக்கிய அங்கமாக விளங்கியது இதுவே.
எவ்வாறெனினும் தேர்தலில் வெற்றி கண்டதைத் தொடர்ந்து
அவரின் இசை நாதம் மாற்றம் கண்டது. குமாரதுங்கவின் பதவிப்
பிரமாண உரையில் யுத்தத்துக்கு ஒரு முடிவு காணும் பொருட்டு
யூ.என்.பி.யையும் விடுதலைப் புலிகளையும் ஆதரவு வழங்குமாறு
அழைப்பு விடுத்தார். இருப்பினும் எந்த ஒரு முரண்பாடும் இல்லாத
கொள்கையைக் கொண்டிராததாலும் தீவிரவாத வலதுசாரி சிங்கள
சோவினிஸ்டுகளின் நெருக்குவாரங்களுக்கு உள்ளானதாலும் இந்த
'ஒலிவ்' (Olive) மரக் கிளையை நீட்டிய
ஒரு சிலநாட்களுக்குள்ளேயே குமாரதுங்க தன்னைக் கொலை
செய்யும் நடவடிக்கையில் யூ.என்.பி. இறங்கியுள்ளதாகக் குற்றம்
சாட்டினார்.
இந்தக் கட்டத்தில் பொதுஜன முன்னணிக்கும் யூ.என்.பி.க்கும்
இடையே மட்டுமன்றி விடுதலைப் புலிகளுக்கும் பொதுஜன முன்னணிக்கும்
இடையே பேச்சுவார்த்தைகளை ஒழுங்கு செய்வதில் இருந்து
கொண்டுள்ள தடையை நீக்க ஒரு ஏற்பாட்டாளராக மாற
நோர்வே அரசாங்கம் தலையிட்டது. மாஜி நோர்வே வெளிநாட்டு
அமைச்சர் கூட் வொலிபெக் லண்டனுக்கு விஜயம் செய்ததோடு,
விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரான அன்டன் பாலசிங்கத்துடனும்
பேச்சுவார்த்தை நடாத்தினார். இலங்கைக்கு விஜயம் செய்து
சந்திரிகா குமாரதுங்காவுடனும் யூ.என்.பி. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடனும்
ஒரு அரசியலமைப்பு கலந்துரையாடலை நடாத்துவதற்கு முன்னர்
வொலிபெக் இப்பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
யூ.என்.பி.க்கும் பொதுஜன முன்னணிக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகள்
மார்ச் 09ம் திகதி ஆரம்பமாகின. இந்த நிலைப்பாட்டில் இருந்து
இவ்விரு கட்சிகளும் தமது அந்தஸ்தை பூதாகரப்படுத்திக் காட்ட
முயன்றன. 1994ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் பெற்ற வாக்குகளை
விட 11 சதவீத வாக்குகள் வீழ்ச்சி கண்ட நிலைமையிலும் தேர்தல்
குழறுபடிகள் பற்றிய பெரும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட
நிலையிலும் இந்நடவடிக்கையில் குமாரதுங்க ஈடுபட்டார்.
பொதுஜன முன்னணி வேலைத் திட்டத்துக்குபொதுமக்களின் அங்கீகாரத்தை
பெற்றுவிட்டதாக குமாரதுங்க கூறி வந்தார்.
விக்கிரமசிங்க இந்த 'பொதுமக்களின் அங்கீகாரம்' பற்றிய பேச்சைக்
கணக்கில் எடுக்காது அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும்
இடையேயான இரகசியப் பேச்சுவார்த்தைகள் பற்றிய விடயத்தைத்
தூக்கிப் பிடித்ததோடு, அதைப் பற்றிய சிறு விளக்கத்தையும் வழங்கினார்.
இந்த வாக்குவாதங்கள் பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்ததுதான்
தாமதம் அவை வீழ்ச்சி கண்டு போனதைச் சுட்டிக் காட்டின.
இருப்பினும் ஆளும் வட்டாரத்திலான கருத்து, இப் பேச்சுவார்த்தைகள்
தொடரவேண்டும் என்பதாக விளங்கியது. குறைந்த பட்சம் யுத்தத்தை
ஒரு முடிவுக்கு கொணர ஏதோ இடம் பெற்று வருவதாகக் காட்ட
வேண்டும் என்பதே ஆளும் வட்டாரங்களின் நிலைப்பாடாக விளங்கியது.
டைம்ஸ் குறூப் பத்திரிகை நிறுவனத்தைச் சேர்ந்த 'டெயிலி மிறர்'
[மார்ச்11] பத்திரிகை இதையிட்டு எச்சரிக்கை செய்கையில்
கூறியதாவது: "ஆபத்தில் இருந்து மீட்கும் வேலைத்திட்டத்தைக்
கெடுக்க அனாவசியமான நடவடிக்கைகளிலும் கூப்பாடுகளிலும்
மாட்டிக்கொள்ளாது இருக்க வேண்டும். இன்றைய முயற்சியை
ஆதரிப்பவர்கள் சகலருக்கும் அந்தப் பெரும் அவசியம் இருந்து
கொண்டுள்ளது. சில காலத்துக்கு நீண்ட செல்லவுள்ள பேச்சுவார்த்தைகளுக்கு
முட்டுக்கட்டை போடும் எந்த ஒரு நடவடிக்கையில் இருந்தும்
விலகிக்கொள்ளும் பெரும் அவசியம் சிறப்பாக வெகுஜனத்
தொடர்புச் சாதனங்களுக்கு இருந்து கொண்டுள்ளது"
என்றது.
முதல் மூன்று சுற்றுப் பேச்சுவார்த்தைகளிலும் அதிகாரப் பகிர்வு
பொதி தொடர்பான இரண்டு விடயங்கள் மட்டுமே கலந்துரையாடப்பட்டன.
முதலாவது, ஜனாதிபதியால் நியமனம் செய்யப்படும் பிராந்திய
ஆளுனர்கள் பாராளுமன்றத்துக்கு பொறுப்புச் சொல்ல வேண்டியவர்களாக
இருப்பர். இரண்டாவது, அரசு பிராந்தியங்களின் ஒன்றியம் என்ற
பேரால் அழைக்கப்படும். இங்கு யூ.என்.பி. இன்று இருந்து
கொண்டுள்ள மாகாணப் பெயரையே பிரேரித்தது. தமிழ் கட்சிகளின்
கோரிக்கையின் பேரிலேயே பிராந்தியங்கள் என்ற பெயர்
உபயோகிக்கப்பட்டதாக பொதுஜன முன்னணித் தூதுக்குழு விளக்கியது.
இறுதியில் யூ.என்.பி. கோரிக்கைக்கு இணங்கிப் போயிற்று.
இந்தப் பேச்சுவார்த்தைகள் மாதக் கணக்கில் இழுபட்டுச்
செல்ல உள்ள அதே வேளையில் சிங்கள சோவினிஸ்டுகள் தமிழர் எதிர்ப்பு
இனவாதத்தைத் தூண்டிவிட முயற்சிக்கின்றனர். இங்கு பெளத்த பிக்குகள்
முன்னணியில் நின்று கொண்டுள்ளனர். நான்கு பெளத்த பீடங்களதும்
மகாநாயக்க தேரர்களின் கையொப்பங்களுடன் ஜனாதிபதிக்கு
அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
"உத்தேச சமாதான பேச்சுவார்த்தைகள் நாட்டுக்கும்
தங்களுக்கும் கெடுதியை ஏற்படுத்துமேயொழிய எந்தவொரு
நன்மையையும் ஏற்படுத்தாது என நாம் நம்புகின்றோம். ஒரு
தேசப்பற்றுள்ள ஒரு நாட்டுத் தலைவி என்ற ரீதியில் சகல பேச்சுவார்த்தைகளையும்
நிறுத்தும்படியும் அரச சக்தியை கையாண்டு தாமதியாது
கொடிய பயங்கரவாதத்தை நசுக்கும்படியும் நாட்டைப் பிளவுபடுத்தும்
பிரேரணைகளை கைவிடும்படியும் நாம் தங்களுக்கு இப்போது
ஆலோசனை கூறுகின்றோம். இந்த இலக்கில் தங்களுக்கு எமது
ஆசீர்வாதங்கள் கிட்டும்."
இந்தப் பிரகடனத்தின் மூலம் பலமூட்டப்பட்ட பயங்கரவாதத்துக்கு
எதிரான தேசிய இயக்கமும் ஜே.வி.பி.யும் பொலிஸ் விதிகளையும் மீறி
வீதியில் இறங்கியதோடு அதன் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள்
நோர்வே தூதரகத்துக்கு ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில்சென்றனர்.
கொழும்பு ஆட்சியாளர்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும்
இடையேயான பேச்சுவார்த்தையில் ஏற்பாட்டாளராக நோர்வே
செயற்படுவதை எதிர்ப்பதாக இவை கூறிக்கொண்டன. தூதுவரை
சந்திக்க இவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து
பயங்கரவாதத்துக்கு எதிரான தேசிய இயக்கத்தின் ஆதரவாளர்கள்
தூதரக மதில் சுவரால் ஏறிக் குதிக்க முயன்றனர். பொலிசார் சும்மா
பார்த்துக் கொண்டு நிற்கவே இவர்கள் இதைச் செய்தனர்.
ஏனைய சக்திகளும் இந்த அரசியல் ஸ்தம்பித நிலைமையை
பயன்படுத்திக்கொள்ள
முயற்சிக்கின்றன. "விடுதலைப்
புலிகளுடனான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகையில் எமது
இராணுவ நடவடிக்கை உக்கிரமடையும்" என மார்ச் 17ம்
திகதி இடம்பெற்ற வெளிநாட்டு பத்திரிகையாளர் மகாநாட்டில்
பேசிய குமாரதுங்க குறிப்பிட்டார். இலங்கை இராணுவத் தளபதி
சிறீலால் வீரசூரிய முதற்தடவையாக படைகளுக்கு ஆட்திரட்டும்
அழைப்பை விடுத்தார்.
"யுத்தத்தை விரைவாக ஒரு முடிவுக்கு கொணர இராணுவம்
அவசியமான போர்வீரர்களின் எண்ணிக்கையை பூர்த்தி செய்யும் பிரச்சினைக்கு
முகம் கொடுத்துள்ளது. வெற்றியீட்டுவதற்கான ஒரே தடைக்கல்
இதுதான். ஆதலால் காரியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன்
மூலம் இராணுவத்தின் இன்றைய பலத்தை அதிகரிக்கும் அவசியத்தை
உணர்ந்து கொண்டுள்ளோம். நாட்டைக் காக்கும் இந்தத்
தீர்க்கமான வரலாற்றுக் கட்டத்தில் உங்களின் புத்திரர்களை
இராணுவத்தில் சேரும்படி ஊக்குவியுங்கள்."
இராணுவத் தளபதி யுத்தத்துக்கு இளைஞர்களின் அவசியத்தை
மேலும் வலியுறுத்தி வருகையில் இனவாத சக்திகள் தெற்கில் தமிழீழ
விடுதலைப் புலிகள் சிவிலியன்கள் மீது மேற்கொண்ட குண்டு வெடிப்புகளால்
உருவான ஆத்திரத்தையும் குழப்ப நிலையையும் பயன்படுத்திக்
கொண்டுள்ளன. அவர்கள் ஒரு சட்ட விரோத குண்டர் கும்பல்களுக்கான
நிலைமையை சிருஷ்டிக்க இதைச் சாதகமாக்கிக் கொண்டுள்ளனர்.
இதன் மூலம் தமிழ் மக்களுக்கு எதிரான எதிர்ப்பைத் தூண்டிவிட
முயற்சித்துள்ளனர்.
மார்ச் மாதக் கடைப் பகுதியில் -6 நாட்களில்- கொழும்பு
மாநகர சபை எல்லைக்குள் தமிழர்களுக்கு எதிரான 7 தாக்குதல்கள்
இடம் பெற்றுள்ளன. இரண்டு தமிழ் இளைஞர்கள் பஸ்ஸினுள்ளும்
புகைவண்டியினுள்ளும் தாக்கப்பட்டனர். ஓடும் புகைவண்டியில்
இருந்து பாடசாலை மாணவன் வெளியே தள்ளப்பட்டார். ஒரு
தமிழ் வழக்கறிஞர் வீதியில் கத்திக்குத்துக்கு இலக்கானார். தமிழ்
பத்திரிகை வாசித்த தமிழ் முதியவர் ஒருவர் வீதியில் வைத்துத் தாக்கப்பட்டார்.
'புலி' எனக் கூறி கோவில் ஐயர் ஒருவர் ஒரு கும்பலினால்
பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இச்சம்பவங்கள் எல்லாம் தொழிலாளர் வர்க்கத்துக்கு
ஒரு எச்சரிக்கையாக ஒலிக்க வேண்டும். சமாதானம் பற்றிய
ஆறு வருடகால மோசடிக் கோசங்களின் பின்னரும் யுத்தத்துக்கு
முடிவு கட்ட அவர்களிடம் எதுவிதமான வேலைத்திட்டமும்
கிடையாது என்பதை பொதுஜன முன்னணி ஆட்சியாளர்கள் காட்டிக்
கொண்டுள்ளனர். அதற்கு மாறாக அவர்கள் பெரிதும் தீவிர
வலதுசாரி சக்திகளுக்கான விளை நிலத்தை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளனர்.
|