Military debacle at Elephant Pass set to
trigger political crisis in Sri Lanka
ஆனையிறவில் இராணுவம் வீழ்ச்சி கண்டமை இலங்கையில் அரசியல்
நெருக்கடியை தூண்டிவிடும்
By a correspondent
25 April 2000
வடக்கில்
இரண்டு விரகி முக்கியத்துவம் வாய்ந்த இராணுவ முகாம்களான
ஆனையிறவும் இயக்கச்சியும் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் ஏப்பிரல்
22ம் திகதி வீழ்ச்சி கண்டுள்ளது. இது ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க
அரசாங்கம் முகம் கொடுத்துள்ள அரசியல் நெருக்கடியை
மேலும் உக்கிரமாக்குவது நிச்சயம்.
நாட்டின்
ஏனைய பாகத்தை யாழ்ப்பாணக் குடாநாட்டுடன் இணைக்கும்
இந்த ஆனையிறவில் அமைந்துள்ள முகாமைக் காக்க கடும்
இராணுவப் பாதுகாப்பு ஏற்பாடுகளை பொதுஜன முன்னணி அரசாங்கம்
செய்திருந்தது. கடந்த 4 வாரங்களாக இப்பகுதியில் கடும் சண்டை
இடம் பெற்று வருவதோடு இரு தரப்பினரும் பீரங்கித் தாக்குதல்களிலும்
ஷெல் அடிகளிலும் ஈடுபட்டு வந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகள்
ஆனையிறவுக்கு தெற்கேயுள்ள இராணுவ பாதுகாப்பு நிலைகளை
கைப்பற்றியதோடு கடல் மார்க்கத் தொடர்புகளையும் துண்டித்தனர்.
வெற்றிலைக்கேணியை சூழவுள்ள இடங்களைக் கைப்பற்றியதன்
மூலமும் சமீபத்தில் பிரதான பெருந்தெரு விநியோக வழிகளை துண்டித்ததன்
மூலமும் ஆனையிறவு முகாம் அடியோடு தனிமைப்படுத்தப்பட்டது.
யுத்தம்
தொடர்பான செய்திகள் அரசின் கடும் தணிக்கைக்கு உட்பட்டு
இருப்பதாலும் பத்திரிகையாளர்கள் யுத்த முனைக்கு செல்வது
தடை செய்யப்பட்டுள்ளதாலும் ஏப்பிரல் 22 சனிக்கிழமை
ஆனையிறவிலும் இயக்கச்சியிலும் இடம் பெற்ற சம்பவங்கள்
தொடர்பான அறிக்கைகள் தெளிவற்றதாக உள்ளன. தமிழீழ
விடுதலைப் புலிகளின் செய்திகளின்படி 1000 இலங்கை இராணுவத்தினர்
கொல்லப்பட்டதாகவும் 48 மணித்தியாலங்களாக இடம் பெற்ற
உக்கிரமான சண்டையின் பின்னர் இராணுவத்தினர் ஆனையிறவையும்
இயக்கச்சியையும் கைவிட்டு யாழ்ப்பாண நகரை நோக்கி
பின்வாங்க நேரிட்டதாகவும் தெரிகிறது.
விடுதலைப்
புலிகளின் அறிக்கை கூறியதாவது: "தமிழீழ விடுதலைப் புலிகளின்
விசேட படையினரும் கொமாண்டோ பிரிவினரும் அதிகாலையில் [ஏப்பிரல்
22] இயக்கச்சி இராணுவ முகாமினுள் ஊடுருவி பல்முனைத் தாக்குதல்களில்
ஈடுபட்டதோடு நன்கு பலப்படுத்தப்பட்ட முகாமை, பல
மணிநேர உக்கிரமான போரின் பின்னர் கைப்பற்றினர். முகாமின் நடு
மையத்தினுள் ஊடுருவிய விடுதலைப் புலிகளின் கொமாண்டோக்கள்
பல இராணுவ கனரக வாகனங்களையும் தாங்கிகளையும், கவச
வாகனங்கையும் ஆயுதக் குதங்களையும் நாசமாக்கினர்".
அத்தோடு
விடுதலைப் புலிகள் தாம் இலங்கை இராணுவத்தின் கவச வாகனங்களையும்,
பீரங்கிகளையும் இன்னும் பல ஆயுதங்களையும் பெருமளவில் கைப்பற்றிக்
கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். ஊர்ஜிதம் செய்யப்படாத
செய்தியை மேற்கோள் காட்டி "ரொயிட்டர்" வெளியிட்ட
செய்தியில் பெருமளவிலான இலங்கை இராணுவத்தினர் எதிரியின் கட்டுப்பாட்டுக்குள்
வந்த பகுதிக்குள் சிக்குண்டு போய்க் கிடப்பதாகக் கூறியுள்ளது.
இந்த
இராணுவ நடவடிக்கைகள் பற்றி அறிவிப்பதில் பெரும் தாமதம்
காட்டி வந்த இலங்கை இராணுவ அதிகாரிகள், ஒரு மாபெரும்
இராணுவத் தோல்வி என வர்ணிக்கத் தக்க ஒன்று இடம் பெற்றுள்ளதாகக்
காட்டிக் கொள்ள முயன்றனர். வீழ்ச்சிகண்ட இந்த ஆனையிறவு
முகாம் விசேட இராணுவ டிவிசன்கள் உட்பட 17000 படையாட்களைக்
கொண்டிருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு பீரங்கிகளும்
கவச வாகனங்களும், விமானப் படைகளும் ஆதரவு வழங்கி வந்தன.
இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பாலித்த பெர்னான்டோ மிகச்சாதாரணமாக
கூறியதாவது: "கடும் சண்டை தொடர்கின்றது. இராணுவம்
பாதுகாப்பு பிராந்தியத்தை ஆனையிறவுக்கு வடக்கே நகர்த்தியுள்ளது."
பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட தகவல்களின்படி அரசாங்கத்
தரப்பில் 8 இராணுவ அதிகாரிகள் உட்பட 80 பேர் இறந்துள்ளதோடு,
19 அதிகாரிகள் உட்பட 457 பேர் காயமடைந்துள்ளனர். இந்த
அறிக்கை குறைந்த பட்சம் 150 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாக
குறிப்பிட்டு இருந்தது.
இலங்கை
இராணுவம் தற்சமயம் சுமார் 500000 மக்கள் வாழும் யாழ்ப்பாண
நகரைச் சுற்றிலும் உள்ள தனது இராணுவ நிலைகளை ஸ்திரப்படுத்துவதில்
ஈடுபட்டுள்ளது. இராணுவம் 1995/96ல் விடுதலைப் புலிகளிடமிருந்து
யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியது.அச்சமயத்தில் கொழும்பு
அரசாங்கத்தின் 1 இலட்சம் படையினரில் மூன்றில் ஒரு பங்கினர்
யாழ்ப்பாணம் பகுதியில் நிறுத்தப்பட்டுஇருந்தனர். இது முக்கிய
கடற்படை, விமானப்படை தளங்களையும் உள்ளடக்கிக் கொண்டு
இருந்தது. யாழ்ப்பாணக் குடாநாட்டின் ஏனைய பகுதிகளிலும்
கடும் மோதுதல் இடம் பெற்று வருகின்றது. பெயர் குறிப்பிட விரும்பாத
ஒரு இலங்கை அதிகாரி சீ.என்.என். (CNN)
செய்திச் சேவைக்கு தெரிவிக்கையில், விடுதலைப் புலிகளின்
போராளிகள் விமானத்தள [பலாலி] பிராந்தியத்துக்கு நெருக்கமாகத்
தமது பீரங்கிப் படைகளை நிறுத்துவதைத் தடை செய்வதிலேயே
இராணுவம் பெரிதும் அக்கறை காட்டி வருவதாகக் குறிப்பிட்டார்.
தமிழீழ
விடுதலைப் புலிகள் வடக்கு நோக்கிச் செல்லும் தமது நடவடிக்கையில்
தொடர்ந்து ஈடுபடும் எனவும் ஆனையிறவுக்கு வடக்கில்
இராணுவத்தால் புதிதாக அமைக்கப்பட்ட காவல் அரண்களை
நிர்மூலமாக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இராணுவ ஆய்வாளர்கள்
ஆனையிறவு முகாம் இழக்கப்பட்டதை 1954ல் பிரான்சிய காலனித்துவ
படைகளுக்கு வியட்னாமில் டியன் பியன் பூ (Dien Bien Phu) வில்
ஏற்பட்ட தோல்வியுடன் ஒப்பிட்டுள்ளனர். இறுதியில் இது
பிரான்சை இந்தோசீனத்தில் இருந்து வெளியேறத் தள்ளியது.
இராணுவத் தணிக்கை காரணமாக இந்த ஆனையிறவு தோல்வியைப்
பற்றி அறிக்கை செய்ய முடியாது போயுள்ள நிலையிலும் கடந்த
"சண்டே டைம்ஸ்" [ஏப்பிரல் 23] பத்திரிகை குறிப்பிட்டதாவது:
"ஆனையிறவு யாழ்ப்பாணத்துக்கான நுழைவாயிலாகும். இந்த
விரகி முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் ஏற்பட்டுள்ள தோல்வியானது
இராணுவ நிலைமையை தலையெடுக்க முடியாத விதத்தில் சங்கடத்துக்குள்ளாக்கும்.
இதன் இயற்கை விளைவாக அரசியல் நிலைமை தொடர்ந்தும்
பாதிக்கப்படும். இது நாட்டின் பெரிதும் அக்கறைக்குரிய ஒரு
விடயமாகும். இதன் அடிப்படை இதுதான்: "ஆனையிறவில் ஏற்படும்
எந்த ஒரு பின்னடைவும் இராணுவ ரீதியிலும் அரசியல் ரீதியிலும்
பேரழிவு மிக்கதாக இருக்கும்".
ஆனையிறவு வீழ்ச்சி
கண்டமை அரசாங்கத்தில் ஏற்கனவே இருந்து கொண்டுள்ள பதட்டத்தை
சந்தேகத்துக்கு இடமற்ற விதத்தில் மோசமடையச் செய்வதோடு
உயர் மட்ட இராணுவ அதிகாரிகளுக்கு எதிரான ஒரு தொகை
புதிய குற்றச் சாட்டுக்களை தூண்டிவிடச் செய்யும். கடந்த
நவம்பரில் வன்னியில் விடுதலைப் புலிகள் துரித கதியில் 10 இராணுவ
முகாம்களை கைப்பற்றியதைத் தொடர்ந்து இடம் பெற்ற ஒரு
தொகை கணிசமான தோல்விகளின் தாக்கத்தினால் இராணுவம்
ஏற்கனவே தடுமாறிக்கொண்டு இருந்தது. ஏப்பிரல் [2000]
தொடக்கத்தில் இராணுவம் தனது ஏழு உயர்மட்ட அதிகாரிகளை
கட்டாய ஓய்வில் அனுப்பியது. வன்னி தோல்விகளைத் தொடர்ந்து
அமைக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில்
மேஜர் ஜெனரால் தொடக்கம் மேஜர் பதவி நிலை அதிகாரிகள்
இங்ஙனம் கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டவர்களுள் அடங்குவர்.
ஆனையிறவில்
நிலைமை மோசமடைந்து வருவதைத் தடுக்கும் ஒரு நடவடிக்கையாக
தற்சமயம் லண்டனில் வைத்திய சிகிச்சை பெற்றுவரும் ஜனாதிபதி
குமாரதுங்க இராணுவத் தலைமைப் பீடத்தில் மேலும் மாற்றங்களைச்
செய்யும் "பக்ஸ்" செய்தியை அனுப்பியிருந்தார். 1988-89
காலப்பகுதியில் இலங்கையின் தென் பகுதியில் கிராமப்புற இளைஞர்களுக்கு
எதிரான பயங்கர நடவடிக்கையில் ஈடுபட்டவராக பிரபல்யமான
மேஜர் ஜெனரால் பெரேரா யாழ்ப்பாணக் குடா நாட்டின்
சர்வ அதிகாரமும் கொண்ட இராணுவத் தளபதியாகவும் (Overall
operation commander - OOC) இராணுவ நடவடிக்கைகளின்
கூட்டுத் தளபதியாகவும் (Joint chief of operation ) நியமனம்
செய்யப்பட்டார். இதே சமயம் ஜெனரால் றொஹான் தலுவத்த
பாதுகாப்பு அதிகாரிகளின் தலைமைப் பதவிக்கு (Chief of
defence staff) நியமனம் செய்யப்பட்டார்.
இப்பதவி சடுதியாக குமாரதுங்கவினால் வழங்கப்படும் வரை இவர்
கடந்த மே 1999 வரை இப்பதவியை வகித்து வந்தார்.
இந்தப்
பெரிதும் ஒழுங்கீனமான இராணுவப் பதவி மாற்றங்கள், அரசாங்கம்
ஆழமான நெருக்கடியில் மூழ்கியுள்ளதைச் சுட்டிக் காட்டுகின்றது.
அரசாங்கத் தரப்பிலான பிளவுகளும் வெளிப்பட்டுள்ளன. ஜனாதிபதி
நாட்டில் இல்லாத சமயத்தில் பிரதி பாதுகாப்பு அமைச்சர்,
ஜெனரால் அனுருத்த ரத்வத்த பாதுகாப்பு அமைச்சராக
கருமமாற்ற நியமனம் செய்யப்படவில்லை. ஜனாதிபதி குமாரதுங்க
பாதுகாப்பு, நிதியமைச்சர் போன்ற முக்கிய பதவிகளையும் வகிக்கின்றார்.
ஜனாதிபதி ஆனையிறவுதோல்வி பற்றி எந்த ஒரு அறிக்கையையும்
வெளியிடாத போதிலும் பிரிட்டனுக்கான தமது விஜயத்தை சுருக்கிக்
கொண்டு அவர் கொழும்பு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கொழும்பில்
உள்ள வெகுஜனத் தொடர்பு சாதனங்கள் ஏற்கனவே பொதுஜன
முன்னணி அரசாங்கத்தை தாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.
யுத்தத்துக்கு ஆதரவான 'ஐலண்ட்' பத்திரிகை அதனது முன்பக்க
ஆசிரியத் தலையங்கத்தில் எச்சரிக்கை செய்துள்ளது: "வடக்கில்
உள்ள இராணுவம் படுமோசமான பேராபத்துக்கு முகம்
கொடுத்துள்ளது. இலங்கையில் உள்ளவர்களின் நிலைமையும்
இதுவே. இந்நாட்டைக் காப்பாற்ற தமது உயிர்களை அர்ப்பணம்
செய்ய முன் வந்த இளைஞர்கள் பிளவுபடுத்தப்பட்டுள்ளனர். ஒவ்வொரு
வருடமும் பல நூறு கோடிக்கணக்கான ரூபாக்கள் செலவிடப்பட்டுள்ளன.
எமது படைகளின் எண்ணிக்கை பயங்கரவாதிகளின் எண்ணிக்கையை
விட அதிகமானதோடு பெரிதும் சிறந்த முறையில் ஆயுதபாணியாக்கப்பட்டும்
உள்ளனர். ஆனால் பின்வாங்கச் செய்யப்பட்டுள்ளோம். இது நீண்டு
செல்ல முடியுமா?" இப்பத்திரிகை கிளர்ச்சியாளர்களை தோற்கடிக்கச்
செய்ய புதிய மூலோபாயங்களை அமுல் செய்யும்படி குமாரதுங்கவை
வேண்டிக் கொண்டுள்ளது.
எதிர்க் கட்சியான
யூ.என்.பி. இந்த திடீர் மாற்றத்தின் பேரில் அராசாங்கத்தை கண்டனம்
செய்ததோடு ஆனையிறவு வீழ்ச்சியைப் பற்றி கலந்துரையாட
பாராளுமன்றத்தின் ஒரு அவசரக் கூட்டத்தைக் கூட்டும்படியும்
வழக்கமான விதத்தில் அழைப்பு விடுத்துள்ளது. அரசாங்கம், பயங்கரவாதத்துக்கு
எதிரான தேசிய இயக்கம், சிங்கள வீரவிதான போன்ற சிங்கள
சோவினிச அமைப்புக்களின் நெருக்குவாரங்களுக்கும் உள்ளாகியது.
ஏப்பிரல் மாத முற்பகுதியில் இவை ஒரு ஆர்ப்பாட்டத்தையும்
நடாத்தின. விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டும் யுத்தத்தை உக்கிரமாக்கும்படி
இவை கோரின.
ஆனையிறவு
தோல்வியானது திறமையற்ற இராணுவத் தலைமையினதோ அல்லது
யுத்தத்தை குமாரதுங்க அரசாங்கம்தொடர முடியாது
போனதையோ விட இலங்கை ஆயுதப் படைகளின் படுமோசமான
வியாதியைப் பிரதிபலிக்கின்றது. உண்மையில் யுத்தத்துக்கு ஒரு
முடிவுகாணும் பிரச்சாரத்தின் அடிப்படையில் 1994ல் ஆட்சிக்கு வந்ததில்
இருந்து குமாரதுங்க இராணுவ நடவடிக்கைகளை பிரமாண்டமான
முறையில் உக்கிரமாக்கினார். கடைசியாக இடம் பெற்ற டிசம்பர்
ஜனாதிபதி தேர்தலில் குமாரதுங்க தனது எதிர்ப்பாளர்களின்
சோவினிச கூச்சல்களை எல்லாம் மிஞ்சும் விதத்தில் தமது ஆட்சிக்காலத்தில்
யாழ்ப்பாணத்தைத் திரும்பக் கைப்பற்றியதைச் சுட்டிக் காட்டி
வந்தார்.
ஆனால் 17
வருடகால யுத்தத்தில் 60000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதோடு
இன்னும் பலர் காயமடைந்ததோடு வீடுகளையும் இழந்தனர்.
இன்று யாழ்ப்பாணக் குடாநாட்டில் இடம்பெறும் யுத்தத்தில்
5000க்கும் அதிகமான மக்கள் யுத்த களமாக மாறியுள்ள பளை,
பச்சிலைப்பள்ளி பகுதிகளில் அகப்பட்டுப் போயுள்ளனர். இவர்கள்
ஏப்பிரல் மாதத்தின் முற்பகுதியில்அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில்
ஈடுபடத் தள்ளப்பட்டனர். அரசாங்க அதிபர் அலுவலகத்துக்கு
வெளியே [யாழ்ப்பாணக் கச்சேரி] இடம் பெற்ற 2000 பேர்
கலந்து கொண்ட ஒரு நேருக்கு நேர் மோதலில் ஆர்ப்பாட்டத்தை
ஏற்பாடுசெய்த தலைவர்கள், தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு
எதிராக இராணுவம் தமிழ்ப் பொது மக்களை மனிதக் கேடயங்களாகப்
பயன்படுத்துவதாக குற்றம் சாட்டினர்.
தொடர்ந்துவரும்
யுத்தம் தொழிலாளர் வர்க்கத்தினுள்ளும் நகர்ப்புற, கிராமப்புற
ஏழைகளிடையேயும் பரந்த அளவிலான எதிர்ப்பை உருவாக்கியுள்ளது.
இவர்கள் இந்த உக்கிரமான தாக்குதலில்களின் பளுவை
நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சுமக்க நேரிட்டது.
யுத்தத்துக்கான எதிர்ப்பு படையாட்களிடையேயும் பிரதிபலிக்கின்றது.
இவர்களில் பலர் பொருளாதாரத் தேவைகளுக்காகவே
இராணுவத்தில் சேர நேரிட்டுள்ளது. கடந்த ஆண்டில் வன்னியில்
இடம் பெற்ற மோதுதலில் பல இராணுவ படைப் பிரிவுகள் பிளவுபட்டு
ஓட்டம் பிடித்தன அல்லது பெருமளவில் இராணுவத்தில் இருந்து
தப்பி ஓடினர்.
இந்த வருடத்
தொடக்கத்தில் 15000 மேலதிக படையாட்களைத் திரட்டும்
நடவடிக்கை அடியோடு தோல்வி கண்டது. இராணுவ உயர்
அதிகாரிகள் தேசாபிமான அழைப்புக்களை விடுத்த போதிலும்
இராணுவம் ஆக 1386 படையாட்களை மட்டுமே காலக்
கெடுவின் இறுதியில் -மார்ச் மாத முடிவில்- திரட்டிக் கொள்ள
முடிந்தது. இராணுவ படையாட்களிடையே போராட்ட விருப்பு வீழ்ச்சி
கண்டுபோனமை ஆனையிறவின் தோல்விக்கு பங்களிப்பு செய்துள்ளது
என்பதில் சந்தேகம் கிடையாது. மறுபுறத்தில் இது
மனவுறுதியைமேலும் வீழ்ச்சி காணச் செய்வதில் இணைந்து கொள்ளும்.
இலங்கையின்
பெரும் வர்த்தக நிறுவனங்களின் கணிசமான பகுதியினர் யுத்தத்துக்கு
ஒரு முடிவு காணத் தள்ளப்பட்டுள்ளனர். வெளிநாட்டு முதலீட்டுக்கும்
பொருளாதார ஸ்திரப்பாட்டுக்கும் இது ஒரு தடையாக இருந்து
கொண்டுள்ளதாக அவர்கள் இப்போது கருதுகின்றனர். நோர்வே,
ஐரோப்பிய யூனியனின் ஆதரவோடு பேச்சுவார்த்தை மூலம் யுத்தத்துக்கு
ஒரு முடிவுகாண அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும்
இடையே பேச்சுவார்த்தையை ஆரம்பித்து வைப்பதில் ஈடுபட்டுள்ளது.
ஆனால் இருதரப்பினரும் முன்னொரு போதும் இல்லாத அளவில்
எட்ட நின்று கொண்டுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு
தீவின் வடக்கு- கிழக்கு மாகாணங்களில் ஒரு தனிநாட்டை அமைக்கப்
போராடி வருகின்றது. இதே சமயம் மாகாணங்களுக்கு ஒரு
வரையறுக்கப்பட்ட அதிகாரத்தை வழங்குவதை உள்ளடக்கிய
அரசியலமைப்பு சட்ட மாற்றங்களுக்கான சாத்தியத்தை ஏற்படுத்தும்
அரசாங்கத்துக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகள்
ஸ்தம்பித்துப் போயுள்ளது.
இறுதியாகக்
கிடைத்த இராணுவ ரீதியிலான வெற்றிகள், எந்த ஒரு அதிகாரப் பகிர்வு
பொதியையும் நிராகரித்து பூரண சுதந்திரத்தைக் கோரும்
விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டை மட்டுமே பலமடையச் செய்யும்.
ஏப்பிரல் 22ம் திகதி விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரான
அன்டன் பாலசிங்கம் தமிழ் கார்டியனிடம் (Tamil Guardion) தெரிவித்ததாவது:
"விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு நோர்வே தூதுக்குழுவை
வன்னிக்கு விஜயம் செய்யும்படியும் கொழும்பு ஆட்சியாளர்களுடனான
பேச்சுவார்த்தைகளுக்கு ஏற்பாடு செய்யும் விதத்தில் தமது
தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் பேச்சுவார்த்தை நடாத்தும்படியும்
அழைப்புவிடுத்துள்ளது".
குமாரதுங்க
அதிகரித்த விதத்தில் ஒரு தெளிவான கொள்கையற்ற ஒரு அரசியல்வாதியாகவே
இருந்து வந்துள்ளார். இணக்கப்பாட்டுக்கு கொணர
முடியாததை இணக்கப்படுத்த முயற்சித்து வந்துள்ளார்: யுத்த
பேரிகையின் மூலம் சிங்கள சோவினிஸ்டுகளுக்கு அழைப்பு விடுத்து வந்துள்ளார்.
இதே சமயம் யுத்த எதிர்ப்பு உணர்வுகளை சமாதான உடன்படிக்கைகளுக்கு
வாக்குறுதியளிப்பதன் மூலம் தணிக்க முயன்றுள்ளார். அவர்
பெருமளவுக்கு தனது அரசியல் ஆதரவு அடிப்படையை இழந்து
போயுள்ளதோடு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜக்
கட்சி உள்ளடங்கலான ஒரு ஓட்டை உடைசல் கூட்டரசாங்ககட்சிகளிலேயே
தங்கி நின்று கொண்டுள்ளார். ஆனையிறவை இழந்தமையானது
அரசியல் ரீதியில் வட்டத்தை விரிவுபடுத்திக் கொள்ளும் அவரது முயற்சியை
மேலும் ஸ்தாபிதம் செய்து கொள்ள முடியாது போயுள்ளதோடு
ஆளும் வர்க்கத்துக்கு ஒருதெளிவான பதிலீடு இல்லாத நிலைமைகளில்
அரசாங்கத்தின் வீழ்ச்சியை துரிதப்படுத்தவும் முடியும்.
|