Clinton interview sparks warnings of WTO split
கிளின்டனின் பேட்டியில் 'உலக வர்த்தக அமைப்பின்' (WTO)
பிளவிற்கான எச்சரிக்கை
Nick Beams
3 december 1999
ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி பில்
கிளின்டன் சியாற்றில் பத்திரிகை ஒன்றிற்கு வழங்கிய பேட்டியில்
''தொழில் நிலைமை'' (Labour Stadards)
எனப்படுவதை வர்த்தக உடன்படிக்கையில் சேர்த்துக் கொள்ளும்படி
விடுத்த வேண்டுகோளானது உலக வர்த்தக அமைப்பின் (WTO)
சுற்று ஆரம்பமாவதற்கு முன்னரே அது உடைந்துவிடக் கூடுமோ
என்ற எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.
2002ல் உலக வர்த்தக அமைப்பின் தலைமை இயக்குனர்
பதவியை பொறுப்பேற்கவிருக்கும் தாய்லாந்து வர்த்தக அமைச்சர்
சுபாச்சி பனிச்சபகாடி (Supachi Panichapakdi)
கருத்து தெரிவிக்கையில், கிளின்டனின் நோக்கமானது அமைப்பையே
சிதறுண்டு போகச் செய்துவிடக்கூடும் என எச்சரித்துள்ளார்.
"இது ஐக்கிய அமெரிக்க நிர்வாகத்துக்கு
ஒரு முக்கியமான விடயம் என்பதை நான் அறிவேன். ஆனால் வர்த்தகத்
தடையை தொழில் உரிமை மீறல் சட்டத்துடன் இணைப்பது உண்மையில்
பெரிய தீங்கை ஏற்படுத்தும் எனக் குறிப்பிட்டதுடன், முன்னேற்றம்
அடைந்துவரும் நாடுகளின் வர்த்தக அமைச்சர்களை எதிர்வரும்
புதிய வர்த்தக உடன்படிக்கைகளிலிருந்து வெளியேறச் செய்யத்தூண்டுவதாக
இருக்கும்" எனவும் தெரிவித்தார்.
தொழில் நிலைமையை மீறும்போது, வர்த்தகக்தடையை
நடைமுறைப்படுத்துவதற்கு தெளிவான தந்திரத்தை கிளின்டன்
கோடிட்டுக் காட்டியதைத் தொடர்ந்து முரண்பாடுகள்
வெளிவரத் தொடங்கின. ஐக்கிய அமெரிக்காவின் உத்தியோக பூர்வமான
அந்தஸ்தைக் காட்டிலும் இது பெரிதும் உச்சிக்கு சென்றுவிட்டது,
அதாவது ஓரு செயற்பாட்டுக்குழுவை உலக வர்த்தக அமைப்பிற்குள்
(WTO) ஏற்படுத்தி அந்தப் பிரச்சனையை
ஆராய்தல் வேண்டும் என்பதாகும்.
எல்லாவற்றுக்கும் முதலாவதாக நாங்கள்
செய்யவேண்டியது என்னவெனில் ஐக்கிய அமெரிக்காவின் நிலைப்பாட்டிற்கு
ஏற்ற வகையில் வர்த்தகம், தொழில் இரண்டும் இணைந்த ஒரு
செயற்குழுவை WTO விற்குள் ஏற்படுத்துவதுடன்,
அந்த செயற்குழுவானது தொழில் நிலைமையின் மையப் பாகங்களை
அபிவிருத்தி செய்யவேண்டும். பின்னர் அவைகள் ஒவ்வொரு வர்த்தக
உடன்படிக்கைகளினதும் பகுதிகள் ஆகவேண்டும். முடிவில் வர்த்தக
உடன்படிக்கைகளின் ஏற்பாடுகளை மீறும்போது கட்டுப்பாடுகளை
விதிக்கும் ஒரு வர்த்தக அமைப்பை நான் ஆதரிக்க முடியும்"
என்றும் குறிப்பிட்டார்.
தொலைபேசிப் பேட்டியின்போது கிளின்டனினால்
தெரிவிக்கப்பட்ட கருத்தை பற்றி அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதியான
சார்ளின் பார்ஷெவ்ஸ்கி (Charlene Barshefsky)
கூறியதாவது ''கடவுளே! அவர் எல்லாவற்றையும் உடைத்துவிட்டார்
என பெருமூச்சுவிட்டார்'' அப்பேட்டி வெளியிடப்பட்டதைத்
தொடர்ந்து அமெரிக்க வர்த்தக உத்தியோகத்தர்கள் இப்பேட்டியின்
''தீங்கைக் கட்டுப்படுத்தும்'' நடவடிக்கைகளில் ஈடுபட்டு,
கிளின்டனின் பதிலீடான நோக்கத்தைப் பற்றி தெரிவித்துள்ளதாகவும்,
இது WTO இன் உடனடியான குறிக்கோள்களைப்
பற்றியது அல்ல எனவும் வலியுறுத்தினர்.
புதன்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர்
மாநாட்டில் பேசிய பார்ஷெவ்ஸ்கி (Barshefsky)
உத்தியோகபூர்வ நிலைப்பாட்டில் நின்று கொண்டு அமெரிக்க
பிரேரணையானது தன்னை பாதுகாப்பதற்கான திட்டம் அல்ல
எனவும், உத்தேசிக்கப்பட்ட செயற்குழு -பேரம்பேசலில்
ஈடுபடாத ஒரு ஆய்வு செயற்குழு என்பதைத் தெளிவுபடுத்துகின்றது"
எனத் தெரிவித்தார்.
ஆனால் இந்தப் பேட்டி வெளியிடப்பட்டதும் சர்வதேச
ரீதியான போட்டியாளர்களுக்கு எதிரான ஐக்கிய அமெரிக்காவின்
கைத்தொழில்களை பாதுகாக்கும் ஒரு அமைப்பை உருவாக்குவதே
என்பதை ஊர்ஜிதம் செய்தது. தொழில் உரிமைகள் சம்பந்தமான
ஐக்கிய அமெரிக்காவின் நிலைப்பாடு, அபிவிருத்தி அடைந்து வரும்
நாடுகள் எனப்படுவனவற்றின் பயத்தை அண்ணளவாக உறுதி செய்துள்ளது.
பேட்டி வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து
மலேசியாவின் வர்த்தகம் மற்றும் கைத்தொழில் செயலாளர்
டாஸ்மட் கலாமுதீன் (Drasmat Kalamuddin)
வறிய நாடுகளின் மிகுந்த பயத்தை அக்கருத்துகள் உறுதிப்படுத்தியுள்ளன
எனத் தெரிவித்துள்ளார். ''நாங்கள் எப்பொழுதும் இவைதான் ஐக்கிய
அமெரிக்காவின் பூர்வாங்க வேலைகளின் பின்னால் உள்ள நோக்கம்
என்பதையிட்டு நெடுங்காலமாக சந்தேகப்பட்டோம்; இப்பொழுது
இது தான் நீண்டகால நோக்கம் என்பது தெளிவாகியுள்ளது. WTO
இன் வர்த்தக, தொழில் நிலமைகளுக்கு எந்தவித ஆதரவும் வழங்கமாட்டோம்."
தொழில் நிலைமை பற்றி 'டைம்ஸ் ஒப் இந்தியா' (Times
of India) பத்திரிகையின் ஆசிரியத் தலையங்கம்
தெரிவித்ததாவது: "இச்சம்பவங்கள் சம்பந்தமாக
மனிதாபிமான காரணங்களின் பேரில் அரச சார்பற்ற நிறுவனங்களும்,
தொழிற்சங்கங்களும் இவை தொடர்பாக கவனத்தை செலுத்தியபோது,
மேற்கு நாடுகள் தம் பொருளாதார நலன்களை பாதுகாக்கும்
நோக்கத்தின் அழுத்தத்தை எதிரொலிக்கச் செய்தன. பின்தங்கிய
நாடுகளை, தங்கள் பண்டங்களையும், சேவைகளையும்
தடையின்றி உள்ளேகொண்டுவருவதற்கு நிர்ப்பந்தித்ததுடன் அவற்றிற்கான
தமது பொறுப்புகளில் இருந்து தம்மை அந்நியப்படுத்திக் கொள்வதில்
அபிவிருத்தியடைந்த நாடுகள் உறுதியாக இருந்தன.
உருகுவே சுற்றுவட்டப் (Uruguay Round)
பேச்சுவார்த்தையின்போது, ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பா,
ஜப்பான் ஆகிய நாடுகள் முன்கூட்டியே பின்தங்கிய நாடுகளின் ஆடை
உற்பத்தி மற்றும் வர்த்தக உற்பத்திகளை சுயாதீனமாக அணுகுவதற்கான
உரிமை நீண்டகாலத்திற்கு முன்னரே உறுதிப்படுத்தப்பட்டிருந்த
போதும் தமது தீர்வைப் பட்டியல், சேவைகள், அதிகார உரிமைப்பத்திரம்
ஆகியவற்றை மேலும் ஏற்றுக்கொள்ளவலியுறுத்தின. இப்பொழுது இந்தக்
கடைசி எல்லை முடிவுக்கு வந்துகொண்டிருப்பதுடன், எந்தக்
கட்டுப்பாடும் இல்லாது சுயாதீனமாக இயங்குவதற்கான
வழிவகைகளை இந்நாடுகள் தேட முயன்றுள்ளன.
பத்திரிகை ஆசிரியத் தலையங்கம் மேலும் தெரிவிக்கையில்,
ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகள் தொழிலாளரின் சமூக
நலன்களையிட்டு உண்மையான அக்கறை கொண்டிருந்தால்
அவை தமது சொந்த ட்ரான்ஸ்நஷனல் நிறுவனங்களை பாரபட்சமற்றதொழில்
செயற்பாடுகளையும் தொழிலாளர்களின் சுயாதீமான நடவடிக்கைகளையும்
ஏற்றுக்கொள்ளப் பணிக்கவேண்டும். தொழிலாளர்கள் சர்வதேச
எல்லைகளை கடந்து சுயாதீனமாக அணிதிரள்வதை கிளின்டன் ஒப்புக்கொள்ளும்
வரை, அவரது தொழில் உரிமை சம்பந்தமான கருத்துக்கள்
வெறும் பாசாங்காகும்.
தற்போதைய வர்த்தக அமைப்பின் மீதான அதிருப்தியும்,
புதிய ஒரு அமைப்பிற்கான முன்மொழிவும் முக்கிய முதலாளித்துவ
நாடுகளின் நலன்களையே வெளிப்படுத்துகின்றது என்பது வறிய
நாடுகளின் பிரதிநிதிகளின் உத்தியோகபூர்வ அறிக்கைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
குறைவிருத்தி நாடுகள் (LDC) சார்பாக
பங்களாதேஷின் வர்த்தகம் மற்றும் கைத்தொழில் அமைச்சர்
ரபாயில் அஹமத் (Tafail Ahmed) எழுப்பிய
கருத்துக்கள், உருகுவே சுற்று தாராளவாதக் கொள்கைகளை
நடமுறைப்படுத்தியிருந்த போதிலும் அவர்கள் மேலும் பின்தள்ளப்பட்டுள்ளதாக
எடுத்துக் கூறினார்.
எங்களுடைய தாராண்மைவாதக் கொள்கையின்
முயற்சிகள் எப்படியிருந்தபோதும் உலகளாவிய ரீதியில் வர்த்தகம்
மற்றும் முதலீடு ஆகியவற்றின் அதிகரிப்பில் இலாபத்தை பெற்றுக்
கொள்வதில் இருந்து தவறிவிட்டோம். தாராளமயமாக்கமானது
அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் அனுகூலம் அடைவதற்குப்
பதிலாக அவர்களின் வர்த்தக சென்மதி நிலுவை விகிதமானது 70ம் ஆண்டுகளுடன்
ஒப்பிடும்போது 90ம் ஆண்டுகளில் 3% அதிகரித்ததுடன், சராசரி உற்பத்தி
விகிதம் 2% வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.
அவர் கூறியதாவது: குறைவிருத்தி நாடுகள் (LDC)
தொடர்ந்தும் "உலகப் பொருளாதாரத்தின் முக்கியமான
போக்கிலிருந்து ஓரங்கட்டப்பட்டுள்ளதுடன்'' செல்வந்த மற்றும்
வறிய நாடுகளுக்கிடையிலான தனிநபர் வருமானத்தின் விகிதம் மேலும்
விரிவடைந்து செல்கின்றது.
இந்தியாவின் வர்த்தக, கைத்தொழில் அமைச்சர்
முரசொலிமாறன் இதே மாதிரியான கருத்துக்களை வெளியிட்டார்.
"நீண்டகாலமாக எங்களுடைய மதிப்பீடானது, உருகுவே சுற்று
உடன்படிக்கைகள் சகல அங்கத்துவ நாடுகளுக்கும் சிறப்பாக
உதவியளிக்கவில்லை என்பதேயாகும். அங்கே பாரதூரமான
இடைவெளிகள் உண்டு. அந்த இடைவெளிகள் யாவும் அவசரமாகக்
கவனிக்கப்பட வேண்டியவைகளாகும்" என்றார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ''விவசாயம்,
நெசவு தொடர்பாகச் ஆடை உற்பத்தி உடன்படிக்கைகள் மூலம்
கிடைக்கும் என எதிர்பார்த்த இலாபங்கள் செயற்படுத்த
முடியாமல் போனமை "மிகவும் கவனத்திற்குரிய"
விடயமாகும். மேலும் முன்னேற்றமடைந்துவரும் நாடுகள் வர்த்தகப்
போட்டிகளை சம்பாதித்துக் கொண்டுள்ளனர். இதனால்
"பொருட்களை குவித்தலுக்கு எதிரான அல்லது மானிய
உதவிகளுக்கான விசாரணைகள் கூடுதலான எண்ணிக்கையில் ஆரம்பமாகியுள்ளன."
தொழில் நிலைமை பிரச்சினை பற்றிய கிளின்டனின்
நோக்கத்திற்கான சகல எதிர்ப்பாளர்களின் நிலையை அவர்
வலியுறுத்திக் கூறியதுடன், தொழிற் பிரச்சினையானது ஏற்கனவே 1996ல்
சிங்கப்பூரில் நடந்த WTO வின் அமைச்சர்கள்
மாநாட்டில் "முதலும் முடிவுமாக" தீர்மானிக்கப்பட்டுவிட்டது.
அதில் தொழிலாளர் தொடர்பான விடயங்கள், சர்வதேச
தொழிலாளர் அமைப்புக்களின் அதிகார வரம்பிற்குட்பட்டுள்ளதே
தவிர WTO வினது அல்ல எனவும்
தெரிவித்தார்.
"ஏதோவொரு வடிவத்தில் இவற்றினை WTO
விற்குள் புதிதாக புகுத்துவதற்கு எடுக்கும் முயற்சிகள் அனைத்தையும்
இந்தியா எந்த வகையிலும் உறுதியாக நிராகரிக்கும். மேலும்
ஏதாவது நகர்வுகள் இருக்குமானால் அவை ஆழ்ந்த
பிளவுகளையும் அவநம்பிக்கைகளையும் ஏற்படுத்தி அது எங்களுடைய
எதிர்காலத் திட்டம் தொடர்பான பொதுவான உடன்பாடுகளைப்
பாதிக்கக் கூடியதாக அமைந்துவிடும்."
தன்சானியா நாட்டின் கைத்தொழில் மற்றும் வர்த்தக
அமைச்சர் இடி சிம்பா (Iddi Simba)
14 அங்கத்துவ நாடுகளைக் கொண்ட தென்னாபிரிக்க முன்னேற்றமடைந்துவரும்
சமூகம் (South Afirican Development Community)
சார்பாகப் பேசும்போது, உருகுவே உடன்பாட்டை அமுலுக்குக்
கொண்டுவந்த காலம் தொடக்கம், "தென்னாபிரிக்க
முன்னேற்றமடைந்துவரும் சமூகத்தின் அங்கத்தவர்கள் அதை
நடைமுறைப்படுத்துவதனால் எழும் பல பிரச்சினைகளால் நெருக்கடிக்கு
உள்ளாகியுள்ளனர்" என்றார்.
உலக சனத்தொகையின் பெரும்பான்மை மக்களை
உள்ளடக்கியுள்ள வறிய நாடுகளின் அக்கறைக்குரிய முக்கியதுறை,
அறிவு (புத்திஜீவி) சொத்துரிமை தொடர்பான வர்த்தக உடன்படிக்கையாகும்-
Treaty on Trade--Related Aspect of Itellectual Property-
(TRIPS) உலக வங்கியின்
பொருளாதார நிபுணரான பேர்னாட் ஹொக்மன் (Bernard
Hockman) இன் கருத்தின்படி அமெரிக்காவின்
மருந்து உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் இலாபத்தினை பாதுகாக்கும்
அமெரிக்க மருந்தக கூட்டுத்தாபனத்துடன் ''அபிவிருத்தியடைந்து
வரும் மற்றும் குறைவிருத்தி நாடுகள்'' செய்துகொண்ட உடன்படிக்கையின்
பேரில் மொத்தமாக அவை 15 பில்லியன் டொலர்களை செலவிட
நேரிட்டுள்ளது.
ஜனவரி தொடக்கம் நடைமுறைக்கு வந்துள்ள TRIPS-
இன் மருத்துவ உடன்படிக்கையின் கீழ், மருத்துவ செலவுகள் 10%
ஆகவும் அடுத்த 10 வருடத்தின் நடுப்பகுதியில் 50% மாகவும் அதிகரிக்கும்.
இந்தியாவின் நலன்புரிச் சேவைக்கான செலவு கிட்டத்தட்ட $1.3
பில்லியனாகவும், இந்தோனேசியா பிலிப்பைன்ஸ் மற்றும் தாய்லாந்து
நாடுகளில் இது முறையே 133, 237, 189 மில்லியன் டொலர்களாகவும்
இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
TRIPS உடன்படிக்கை,
வறிய நாடுகளுக்கு விவசாய, ஆடை சந்தைகளுக்கான
சாதகமான வழிகளை பாதுகாப்பாக வளங்கும் என்ற உத்தரவாதத்தின்
கீழேயே பாதுகாக்கப்பட்டது. ஆனால் இச்சந்தைகளை திறப்பதற்கான
வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. தற்போதைய உடன்படிக்கையின்
அடித்தளத்தில் 2005ம் ஆண்டிற்கான புடவை ஏற்றுமதித் திட்டம்
அமெரிக்காவிற்கு 15%-50%ற்கும் இடைப்பட்டதாகவும் ஐரோப்பிய
ஒன்றியத்திற்கு 20%-25%ற்கும் இடைப்பட்டதாகவும் இருக்கும்.
இது ஏனைய கைத்தொழில் பொருட்களின் சராசரி மட்டத்துடன்
ஒப்பிடுகையில் 3.5%மாகும்.
வெள்ளிக்கிழமை நடைபெறவிருக்கும் அமைச்சர்கள்
மட்ட கூட்டத்தின் வர்த்தக உடன்படிக்கைக்கான புதிய சுற்று
பேச்சுவார்த்தைக்கான "பூரணமாகப் பூர்த்தியானதுமான
நிகழ்ச்சிநிரல்", குறிப்பிட்டகால அட்டவணையின் முடிவில் பூர்த்தியாகிவிடும்
என்ற "முழு நம்பிக்கையை" அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதியான
சார்ளின் பார்ஷெப்கி (Charlene Barshefky)
தெரிவிக்கையில், முக்கிய முதலாளித்துவ நாடுகளுக்கிடையே இது
தொடர்பாக ஆழமான பிளவுகள் இன்னமும் இருந்து கொண்டுள்ளன.
ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், கொறியா மற்றும்
நோர்வே ஆகிய நாடுகள் ஐ.நா.வினதும், விவசாயப் பொருட்களை
ஏற்றுமதி செய்யும் நாடுகளினதும் (CAIRNS)
கோரிக்கைகளுக்கும் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன.
விவசாயத்திற்கு மானியம் வழங்குவதை முடிவுக்கு கொண்டுவருவதையும்,
கிராமிய மக்களின் ''பன்முக தொழிற்பாட்டை'' கருத்தில் எடுக்கவேண்டிய
அவசியத்தையும் வற்புறுத்தினர். ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள்,
வீதிகளில் நடைபெறும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இப்பாதுகாப்பு
ஏன் இன்னமும் தொடர வேண்டும் என்பதற்கான ஒரு எடுத்துக்காட்டு
என்றனர்.
ஐரோப்பிய சமூகத்தின் வர்த்தக ஆணையாளர்
பாஸ்கல் லாமி (Pascal Lamy) இக்கூட்டத்தில்
பேசும்போது, ஏற்றுமதிப் பொருட்களுக்கான மானியம் மேலும்
குறைக்கப்படுவதும், உள்நாட்டு உற்பத்திக்கான ஆதரவும், சுங்கவரிகளும்
''மேசையின் மேல்'' உள்ளன. இதன் அர்த்தமானது ''வர்த்தகம்
அற்ற பிரச்சினைகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
நாங்கள் அதுவரை இப்பிரச்சினைகளை ஏற்றுக்கொள்ள
முடியாது."
ஐரோப்பாவின் கோரிக்கையான முதலீடுகள் சம்பந்தமான
சமரசம், போட்டி, வர்த்தக முன்னேற்றத்திற்கான உதவி
என்பவற்றை இவர் முன்வைத்தார். இக்கோரிக்கைகள் ஐரோப்பாவின்
விவசாய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் என்ற அடித்தளத்தில்
அமெரிக்காவால் நிராகரிக்கப்பட்டன.
உருக்கு மற்றும் ஏனைய ஏற்றுமதிகளை கட்டுப்படுத்தும்
ஐக்கிய அமெரிக்காவின் பொருட்களை குவிப்பதற்கு எதிரான
தனது கோரிக்கைகளை, யப்பான் புதிய வர்த்தக சுற்றின் நிகழ்ச்சி
நிரலில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்திவருகின்றது.
ஐக்கிய அமெரிக்கா இவ்விடயம் பற்றி விவாதிக்க மறுத்து விட்டது.
புதன்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் பார்ஸ்வஸ்கி
(Barshefky) யிடம் இது தொடர்பாக
கேட்டபோது, குவியல் தொடர்பான பிரச்சனை மேசையில்
இருக்கின்றது எனவும், இது வெளிப்படையாக தீர்க்கப்பட்ட பிரச்சனை
அல்ல எனவும், இதுதவிர குவியல் தொடர்பான புதிய பேச்சுவார்த்தைகள்
தேவையென ஐக்கிய அமெரிக்கா கருதவில்லை என்பதை மட்டும்
ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார்.
உத்தியோகபூர்வ வர்த்தக வட்டாரங்கள் இப்பொழுது
ஒரு நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றது. இறுதியில் அனைவரும்
ஒருகூட்டு அறிக்கையை வெளியிட்டாலும் முக்கிய பொருளாதார
மற்றும் அரசியல் வட்டாரங்களில் இப்பிளவுகள் யாவும் தீர்க்க
முடியாத அளவு பெரிதாக இருக்கும் என கவலை தெரிவித்துள்ளனர்.
வியாழக்கிழமை வெளிவந்த பிரித்தானிய 'பினான்ஸியல்டைம்ஸ்'
(Financial Times) இன் ஆசிரியத்
தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது யாதெனில், "WTO
இல் உள்ள கேள்வியானது ''குழப்பத்திலிருந்து எவ்வளவை காப்பாற்றமுடியும்''
என்பதாகும். எப்படியிருந்த போதும் புதிய உடன்படிக்கை பிரச்சினைக்குரியதாக
இருக்கும். ஏனெனில் ''புதிய சுற்றின் தன்மை தொடர்பான ஐக்கிய
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் இணக்கம்
காணமுடியாமையும், அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் பேரில்
WTO இனை ஐக்கிய அமெரிக்காவும்
மற்றும் ஐரோப்பிய ஒன்றியமும் மனிதநேயம் கொண்டதாக காட்ட
முயலுவதும் ஆகும்."
அது மேலும் தொடர்வது என்னவெனில் ''முன்னேற்றமடைந்துவரும்
நாடுகள் பங்குபற்றாமல் புதிய சுற்றை வல்லரசுகள் ஆரம்பிக்க
முடியாது. ஆனால் WTO ஐ
மனிதநேயம் கொண்டதாக காட்ட முயல்வது, முன்னேற்றமடைந்துவரும்
நாடுகளுக்கு, இது ஏகாதிபத்தியத்தின் பாசாங்கான ஒழுக்கமாக
தோற்றமளிக்கும்''.
''அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளை போட்டியிடக்கூடிய
சந்தைகளுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு அனுமதிப்பதன்
மூலம் செல்வந்த நாடுகள் WTO
ஐ மனிதத் தன்மை கொண்டதாக்க முடியும். ஆனால் ஐரோப்பிய
ஒன்றியம் விவசாயத்தை தாராள மயமாக்குவதை எதிர்க்க உத்தேசித்துள்ளது.
ஐக்கிய அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் புடவை மற்றும்ஆடையணிகளின்
இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான அவர்களது
பொறுப்பில் இருந்து தோல்வி கண்டுவிட்டன''.
''கிளின்டனின் பிரேரணையான WTO
இன் செயற்குழுவை உருவாக்கி, தொழில் நிலைமையை பாதுகாப்பது,
வர்த்தக தடைகள் மூலம் செய்யப்படலாம் என்பது ஒரு
கனமான பலகை மெல்லிய முனையில் நிற்பது போன்றது. அமெரிக்காவும்
மற்றும் ஐரோப்பிய ஒன்றியமும் இப்பொழுது முரண்பட்டுக்
கொண்டுள்ள நிலையில் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கு
எதுவுமே பதிலுக்கு வழங்காமல் பயமுறுத்திக் கொண்டிருக்கின்றன.
இந்தப்பாதை ஒரு முட்டுச்சந்தியை சென்றடைந்துள்ளது."
பரந்த நோக்குடைய தலமைத்துவத்திற்கு அழைப்புவிடுத்த வண்ணம்
அந்த ஆசிரியத் தலையங்கம் நிறைவு பெறுகின்றது. WTO
பற்றி திங்கட்கிழமை வெளியான முன்னைய ஆசிரியத் தலையங்கத்தில்
இவ்வாறு தேவையான "அறிவுமிக்க தலைமையை" கிளின்டன்
வழங்கும் சாத்தியம் உள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால்
இறுதியாக வெளிவந்த 'பினான்ஸியல் டைம்ஸ்' (Financial Times)
கருத்துகளின்படி கிளின்டன் அதை "சிதறடித்துவிட்டார்"
என்பதாகும்.
|