Sri Lankan SEP calls on all workers to reject deduction
of two days' wages for war
யுத்தத்துக்காக இரண்டு நாள் சம்பளத்தை வெட்டும்
முடிவை பகிஷ்கரியுங்கள்! இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி
அனைத்துத் தொழிலாளர்களையும் வேண்டுகிறது.
Statement by the SEP of Sri Lanka
5 June 2000
Use
this version to print
நாட்டின் வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் சிறுபான்மையினருக்கு
எதிராக இடம்பெற்று வரும் யுத்தத்துக்காக, மாதம் இரண்டு
நாள் சம்பளத்தை தொடர்ச்சியாக பங்களிப்பு செய்யும்படி
மே 23ம் திகதி ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க விடுத்த வேண்டுகோளை
பகிஷ்கரிக்குமாறு இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி அனைத்துத்
தொழிலாளர்களையும் கோருகின்றது.
இது ஒரு வேண்டுகோள் வடிவில் இருந்தாலும்,
வேலை நிறுத்தம் மற்றும் பத்திரிகைச் சுதந்திரம் உட்பட்ட
ஜனநாயக உரிமைகளை கடுமையாக வெட்டித்தள்ளி உள்ள அரசாங்கத்தின்
அவசரகாலச் சட்ட விதிகளின் கீழேயே இந்த சம்பள வெட்டுக்கான
வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் காட்டுமிராண்டி யுத்தத்துக்காக தங்களின்
சம்பளம் வெட்டப்படுவதை எதிர்க்குமாறு அனைத்து வேலைத்தளங்களிலும்
உள்ள தொழிலாளர்களை வேண்டிக்கொள்ளும் ஒரே அரசியல்
கட்சியாக சோ.ச.க. மட்டுமே இருந்து கொண்டுள்ளது. 1983ல்
ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தினால் ஒடுக்கப்படும் தமிழ்
மக்களுக்கு எதிராக ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த யுத்தம்,
தற்போது பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் கீழ் கடுமையாகத்
தொடர்ந்து கொண்டுள்ளது. இது தொழிலாளர்களதும் ஏழைகளதும்
யுத்தம் அல்ல.
இதன் காரணமாகவே சோ.ச.க. யுத்தத்துக்கு
ஒரு மனிதனையோ அல்லது ஒரு ரூபாவையோ வழங்கக் கூடாது
என மிக ஆரம்பத்திலேயே வேண்டிக் கொண்ட அதே வேளை,
அதன் உடனடித் தீர்வாக தீவின் வடக்குக் கிழக்கிலிருந்து இலங்கை
இராணுவத்தை வெளியேற்ற தொழிலாளர்களும் ஏழைகளும்
போராட வேண்டும் என வலியுறுத்தி வந்தது.
முன்னைய தொழிலாளர் வர்க்கக் கட்சிகளான,
லங்கா சமசமாஜக் கட்சி (LSSP),
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (CPSL),
மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (CWC),
ஆகிய கட்சிகள் பொதுஜன முன்னணி அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதோடு
அதன் யுத்த முயற்சிகளுக்கும் அவசரகாலச் சட்ட அடக்குமுறைகளுக்கும்
ஆதரவளித்து வருகின்றன. ஸ்ராலினிச இலங்கைக் கம்யூனிஸ்டுக் கட்சி
வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: "யாழ்ப்பாணக்
குடா நாட்டில் விடுதலைப் புலிகளின் தாக்குதலை தாங்கி நிற்கும்
அதே வேளை, அரசாங்கத்தின் ஆணையின் மூலம் மனித, மற்றும்
பொருள் வளங்களை திரட்டிக் கொண்டு, தாக்குதல் குழுக்களை
கலைக்க வகை செய்வதே தற்போதைய உடனடித் திட்டமாகும்."
தனது முன்னோடிக் கட்சியான லங்கா சமசமாஜக்
கட்சியின் கூட்டரசாங்க அரசியலுக்கு எதிராக எழுச்சியுற்றிருந்த
தொழிலாளர் பகுதியை பொறிக்குள் சிக்கவைக்கும் முயற்சியில்,
அதிலிருந்து பிரிந்து 1970ல் அமைக்கப்பட்ட நவ சமசமாஜக் கட்சி
யுத்தத்துக்காக சம்பளத்தை வெட்டும் வேண்டுகோள்
தொடர்பாக வாய்திறக்கவில்லை.
அரசாங்கத்தின் திட்டங்கள் தொடர்பாக
ந.ச.ச.க. வின் மெளன உடன்பாடானது, தான் முன்னணி அமைத்துக்
கொண்டுள்ள சிங்கள சோவினிச மக்கள் விடுதலை முன்னணியின் (JVP)
கொள்கையுடன் இணைந்து கொண்டுள்ளது. ஜே.வி.பி. தனது நிலைப்பாடு
தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; "எந்தச் சூழ்நிலையிலும்
ஈழத்தை விட்டுக் கொடுக்கவும், விடுதலைப் புலிகளை புதிய வெற்றிகளுக்குச்
செல்லவும் அனுமதிக்காது" என தெரிவித்துள்ளது.
அண்மையில் இடம்பெற்ற மோதுதல்களில் இலங்கை
இராணுவம் தோல்விகண்டதன் பின் விளைவுகளைத் தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ள
இந்த அறிக்கை, யுத்த பிரச்சாரகர்களை ஊக்குவிக்கும் நோக்கைக்
கொண்டுள்ளது. ஜே.வி.பி.க்கும் பொதுஜன முன்னணிக்கும் இடையிலான
வேறுபாடு, அரசாங்கம் போதுமான திடசங்கற்பத்துடன் யுத்தத்தை
தொடரவில்லை என்பதேயாகும். வேறு வார்த்தைகளில்
சொன்னால்: இதனடிப்படையில், ஜே.வி.பி.- ந.ச.ச.க கூட்டுக்கு
யுத்தம் தொடர்பான ஒரு கொள்கை இருக்குமானால், அது
அரசாங்கம் தொழிலாளர்களிடம் போதுமானளவு கோரவில்லை
என்பதாகவே இருக்கும்.
யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரும் முன்னணியின்
சமாதாண அறைகூவல்கள் மக்களை திகைக்கவைத்து குழப்பியடிக்கும்
நோக்கத்தைக் கொண்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியும்
பொதுஜன முன்னணியும் அம்பலமாகியுள்ளதோடு, அவர்கள் மீதான
அவநம்பிக்கை வளர்ச்சிகண்டுவரும் ஒரு நிலைமையில், சிறந்த
முறையில் முதலாளித்துவத்தைப் பாதுகாப்பதற்கும், யுத்தத்துக்கு
எதிரான மக்களின் எதிர்ப்பை கட்டுப்படுத்தவும் தாங்கள் உட்பட்ட
ஒரு புதிய முதலாளித்துவ முன்னணி உண்டு என்பதை ஆளும் வர்க்கத்துக்கு
வலியுறுத்துவதே ஜே.வி.பி.யினதும் ந.ச.ச.க.வினதும் உண்மையான
நோக்கமாகும். ந.ச.ச.க- ஜே.வி.பி. கூட்டணி வடக்குக் கிழக்கில்
இருந்து இலங்கை இராணுவத்தை வெளியேற்றுவதுக்கோ அல்லது
யுத்தச் செலவுகளை முடிவுக்கு கொண்டுவருவதுக்கோ எந்த
ஒரு உறுதியான கோரிக்கையையும் கூட முன்வைக்கத் தவறியது,
இதன் அடிப்படையிலேயேயாகும்.
கடுமையான பத்திரிகைத் தணிக்கை உட்பட, யுத்தத்தாலும்
ஜனநாயக உரிமைகள் மீதான தடைகளாலும் தம்மீது கட்டியடிக்கப்பட்டுள்ள
அதிகரித்துவரும் சுமைகளால், தொழிலாளர், ஏழைகள் மற்றும்
மத்தியதர வர்க்கப் பகுதியினர் மத்தியில் வளர்ச்சி கண்டுவரும் எதிர்ப்புக்கு
இது எதிரிடையாக உள்ளது.
மத்திய வங்கி ஊழியர் சங்கத்தால் வெளியிடப்பட்டுள்ள
அறிக்கை குறிப்பிடுவதாவது: "பொதுஜன முன்னணி அரசாங்கம்
முன்னெடுத்துள்ள- ஒடுக்கப்படும் தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தத்தை
கடுமையாக்கி, சிங்களத் தமிழ் தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்படும்
மக்களின் ஜனநாயக உரிமைகளை நசுக்கி நாடு முழுவதையும் யுத்த
நிலைமையில் தள்ளும்- நடவடிக்கைகளை நாங்கள் உறுதியாகவும்
வன்மையாகவும் கண்டிக்கின்றோம்.
"அதேவேளை, அரசாங்கத்தின் பிற்போக்குக்
கொள்கைகளுக்கு ஆதரவளித்து வரும் அரசியல் கட்சிகளதும்
தொழிற்சங்கள் மற்றும் ஏனைய அமைப்புக்களதும் வெறுப்பூட்டும்
நடவடிக்கைகளையும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
"இலங்கையிலும் அனைத்துலகிலும் உள்ள
தொழிலாளர் வர்க்கத்தையும், ஜனநாயக உரிமைகளை மதிக்கும்
அனைத்து புத்திஜீவிகளையும், அமைப்புகளையும் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளவை
தொடர்பாக கவனம் செலுத்துமாறு நாம் வேண்டுகின்றோம்:
"இந்த யுத்தம் இலங்கையில் உள்ள சிங்களம்
மற்றும் தமிழ் பேசும் மக்களின் யுத்தம் அல்ல. இது ஒடுக்கப்படும்
தமிழ் மக்களுக்கு எதிரான சிங்கள சோவினிச ஆளும் வர்க்கத்தின்
யுத்தமாகும்.
"ஆகவே ஒரு மனிதனோ, ஒரு ரூபாயோ அல்லது
ஏதாவது உபகரணமோ இந்த யுத்தத்துக்கு வழங்கப்படக் கூடாது!"
20,000 தொழிலாளர்களைக் கொண்ட இலங்கை
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாகம், பொதுஜன முன்னணி
அரசாங்கம் குறிப்பிட்ட தொகைக்கும் மேலாக, தொழிலாளர்களிடம்
இருந்து 7 நாட்களுக்கான ஊதியத்தை பாதுகாப்பு நிதிக்காக
வெட்ட முயற்சித்தவேளை, கூட்டுத்தாபனத்தில் உள்ள ஒரு தொழிற்சங்கமான
அகில இலங்கை எண்ணெய்த் தொழிலாளர் சங்கம், இந்த சம்பள
வெட்டைக் கண்டித்து ஒரு கடிதம் அனுப்பியிருந்தது.
"நாட்டின் அவசரகால நிலைமை கருதி
தொழிலாளர்களிடம் இருந்து ஒரு வார சம்பளத்தை அர்ப்பணிக்குமாறு,
(கூட்டுத்தாபன) தலைவராலும் ஏனைய இரண்டு அதிகாரிகளாலும்
கையொப்பமிடப்பட்ட அறிக்கை ஒன்றின் மூலம் எமக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு நாம் எந்த வகையிலும் இணங்க முடியாது, எமது தொழிற்சங்க
அங்கத்தவர்களிடம் இருந்து பணத்தொகையை வெட்ட வேண்டாம்
என வேண்டிக் கொள்ளும் அதே வேளை, நேரடியாகவோ
மறைமுகமாகவோ அவர்களை இந்த சேகரிப்புக்கு ஒத்துழைக்கும்படி
நெருக்க வேண்டாம் எனவும் வேண்டிக் கொள்கின்றோம்,"
என அக்கடிதம் குறிப்பிட்டுள்ளது.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பொறியியற்
பிரிவைச் சேர்ந்த அனைத்துத் தொழிலாளர்களும் கூட இரண்டு
நாள் சம்பளத்தை வெட்டிக் கொள்வதற்கு இணங்க மறுத்துள்ளனர்.
இவை யுத்தத்தால் வளர்ச்சி கண்டுவரும் வெறுப்பின்
அறிகுறியாகவும், சோசலிச சமத்துவக் கட்சியின் நிலைப்பாட்டினை
(நாட்டின் வடக்குக் கிழக்கில் இருந்து இலங்கை இராணுவத்தை
வெளியேற்றி யுத்தத்தை உடனடியாக நிறுத்த தொழிலாளர் வர்க்கம்
போராட வேண்டும்) நிரூபிப்பதாகவும் உள்ளது.
|