Sri Lankan government delays postal corporatisation
bill as workers threaten work-to-rule campaign
தபாற் திணைக்களத்தை
கூட்டுத்தாபனமாக்கும் மசோதா: தொழிலாளர்களின் சட்டப்படி
வேலை செய்யும் இயக்க அச்சுறுத்தலால் பின்தள்ளப்பட்டுள்ளது
By Dianne Sturgess
4 July 2000
Use
this version to print
இலங்கை பொதுஜன முன்னணி
அரசாங்கம் தபாற் கூட்டுத்தாபன மசோதாவை பாராளுமன்றத்தில்
சமர்ப்பிப்பதை ஒத்திவைக்கத் தள்ளப்பட்டுள்ளது. இந்தப் புதிய
மசோதா, இன்றைய தபால் திணைக்களத்தை ஒரு இலாபமீட்டும்
கூட்டுத்தாபனமாக்குவதை நோக்கமாகக் கொண்டது. இது
தபால் சேவையை பூரணமாகக் தனியார்மயமாக்கும் இலக்கிலான
முதல் நடவடிக்கையாகும். இரண்டு வாரங்களுக்கு முன்னர்
தபால் ஊழியர்கள் அவசரகால விதிகளையும் மீறி ஒரு சட்டப்படி
வேலை செய்யும் பிரச்சார இயக்கத்தை ஆரம்பித்தனர். கடந்த
வியாழக்கிழமை நள்ளிரவில் இருந்து தபால் தொழிற்சங்கங்கள் சட்டப்படி
வேலை செய்யும் இயக்கத்தை மீண்டும் ஆரம்பிக்கப் போவதாக
பயமுறுத்தியதையடுத்து ஜூலை 5ம் திகதி பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு
வர இருந்த மசோதா ஐந்தாவது தடவையாக ஒத்திப்போடப்பட்டது.
தபால், தொலைத் தொடர்பு அமைச்சர் மங்கள
சமரவீர, தபால் தொழிற்சங்கத் தலைவர்களுக்கும் அரசாங்க
அதிகாரிகளுக்கும் இடையே இடம் பெற்ற பேச்சுவார்த்தையின்
பின்னர் இந்த ஒத்திவைப்பு தீர்மானத்தை கடந்த வியாழக்கிழமை
வெளியிட்டார். தொழிற்சங்கங்கள் இந்த மசோதா அடியோடு
வாபஸ் பெறப்பட வேண்டும் என வலியுறுத்தி வந்த போதிலும்
அரசாங்கம் இந்த மசோதாவை சட்டமாக்குவதை ஒத்திப்போட
சமிக்கை காட்டியதைத் தொடர்ந்து இந்தக் கோரிக்கையை
கைநழுவ விட்டுவிட்டு பிரச்சார இயக்கத்தை இரத்துச் செய்தன.
அரசாங்கமும் தொழிற்சங்கத் தலைவர்களும்
எந்த ஒரு மோதுதலையிட்டும் கவலை கொண்டுள்ளனர். இது
ஒரு பரந்த அரசாங்க எதிர்ப்பு இயக்கமாக வெடிக்குமோ
என அவர்கள் அஞ்சுகின்றனர். கூட்டுத்தாபனமாக்கும் திட்டத்தின்
பேரிலான தபால் ஊழியர்களின் எதிர்ப்பு, சர்வதேச நாணய நிதியத்தினதும்
உலக வங்கியினதும் நெருக்குவாரத்தின் பேரில் அரசாங்கத்தின் சிக்கன
நடவடிக்கைகளுக்கு இருந்து வரும் ஒரு பரந்த அளவிலான எதிர்ப்பைப்
பிரதிபலிக்கின்றது. நாட்டில் நீண்டுவரும் உள்நாட்டு யுத்தத்தில்
பிரிவினைவாதத் தமிழீழ விடுதலைப் புலிகள் ஈட்டிய ஒரு தொகை வெற்றியைத்
தொடர்ந்து அரசாங்கம் கடந்த இரண்டு மாதங்களில் இராணுவச்
செலவீனங்களை அதிகரித்துள்ளது. இது வாழ்க்கைத் தரத்தை
மேலும் அதிகரித்துள்ளது.
கூட்டுத்தாபனமாக்கும் நடவடிக்கைக்கு
எதிரான தபால் ஊழியர்களின் பிரச்சார இயக்கம், சம்பள உயர்வு
கோரி இலட்சக்கணக்கான தோட்டத்துறை தொழிலாளர்கள்
ஜூன் 11ம் திகதி ஆரம்பித்த இரண்டு மணித்தியால வேலை நிறுத்தத்தைத்
தொடர்ந்து ஆரம்பமாகியது. இரண்டு மாதங்களுக்கு முன்னர்
பொதுஜன முன்னணி அரசாங்கம் நடைமுறைப்படுத்திய படுகொடூரமான
அவசரகால விதிகளின் கீழ் இந்த வேலை நிறுத்தம் சட்டவிரோதமானது.
இந்த எதிர்ப்பு நடவடிக்கைகள் முதலாளிகளுடனும் அரசாங்கத்துடனும்
ஒரு மோதுதலுக்கு இட்டுச் செல்வதற்கான சமிக்கைகள்
தென்பட்டதைத் தொடர்ந்து சம்பள உயர்வு கோரி இடம்பெற்ற
9 நாள் பிரச்சாரத்தின் பின்னர் தோட்டத்துறை தொழிற்சங்கத்
தலைவர்கள் தோட்ட முதலாளிகளுடன் ஒரு உடன்படிக்கையில்
கைச்சாத்திட்டனர்.
ஒரு மாதத்துக்கு முன்னர் தபால், தொலைத்
தொடர்பு அதிகாரிகள் சங்கத்தின் (UPTO)
உறுப்பினர்கள் அதன் நீண்டகால பொதுச் செயலாளரான
என்.பி.ஹெட்டியாராச்சியை, தபால் கூட்டுத்தாபன
மசோதாவை தயார் செய்வதில் அரசாங்கத்துடன் ஒத்துழைத்தார்
என்ற குற்றச்சாட்டின் பேரில் பதவி நீக்கம் செய்தது. ஜூன் 4ம்
திகதி நடைபெற்ற ஒரு பேராளர் மகாநாட்டில் அரசாங்கத்தின்
திட்டங்களுக்கு அங்கத்தவர்களிடையே நிலவி வரும் பலத்த எதிர்ப்பை
பிரதிபலிக்கும் விதத்தில் ஹெட்டியாராச்சியை பதவி நீக்கம் செய்வதற்கு
ஆதரவாக 180 பேரும் எதிராக 15 பேரும் வாக்களித்தனர்.
இந்தப் புனர்நிர்மாண வேலைத்திட்டத்தின் மொத்தச்
செலவான 46 மில்லியன் டாலரில் 37 மில்லியன் டாலர்களை உலக வங்கி
நிதியீட்டம் செய்கின்றது. இந்தப் புதிய கூட்டத்தாபனம் "வர்த்தக
கொள்கை"களின் அடிப்படையில் நடாத்தப்படும் என அரசாங்க
நிறுவன சீர்திருத்தக் கமிட்டியின் (Public
Enterprises Reform Committee) பணிப்பாளர்
நாயகம் கூறியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தபால்
திணைக்களம் சராசரியாக 10 பில்லியன் ரூபாக்கள் (125 மில்லியன்
டாலர்கள்) நட்டமடைந்து வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னைய யூ.என்.பி. அரசாங்க காலத்தில் இலாபகரமான வர்த்தக
தபால் சேவைகள் தனியார் தபால் சேவைகளிடம் கையளிக்கப்பட்டது.
இவை தற்போதைய புதிய தபால் சேவைகளின் சட்ட மறுசீரமைப்பின்
ஒரு பாகமாக சட்டரீதியானதாக்கப்படும்.
மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் புதிய கூட்டுத்தாபனம்
"இலாபமற்ற" தபால் கந்தோர்களை இழுத்து மூடுவதோடு
தபால் கட்டணங்களை பெருமளவில் அதிகரிக்கும். இதனால்
பெரிதும் பாதிக்கப்படுவோர் இன்னும் கூட சீரான தபால்
சேவை வசதிகளற்ற கிராமப்புற மக்களே. ஒரு "சுயேச்சை
ஓய்வூதிய" திட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான தபால் சேவை
தொழில்கள் ஒழித்துக்கட்டப்படும். எதிர்ப்புக்களைத் திசைதிருப்பும்
பொருட்டு இந்தத் திட்டம் 10 ஆண்டுகளுக்கு குறைவான
சேவைக் காலம் கொண்ட தபால் ஊழியர்களுக்கு "ஒரு
விசேட ஓய்வூதிய திட்டத்தை" அமுல் செய்வதையிட்டும்
ஆலோசித்து வருகின்றது.
இந்தத் திட்டத்தை தயார் செய்கையில் அரசாங்கம்
தொழிற்சங்கங்களின் ஆதரவை திரட்டத் திட்டமிட்டு செயற்பட்டு
வந்தது. பிரதி தபால், தொலைத் தொடர்புகள் அமைச்சர் தேசிய
தொலைக்காட்சி சேவைக்கு அளித்த ஒரு பேட்டியில் அரசாங்கம்
"முன்னொருபோதும் இல்லாத விதத்தில் கிட்டத்தட்ட ஒரு
வருடகாலமாக தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டதோடு
அவர்களின் கருத்துக்களை அறியவும் அவர்களது பிரேரணைகளை
மசோதாவினுள் சேர்க்கவும் முயன்று வந்ததாகவும்" தெரிவித்தார்.
கடந்த ஜூலையில் (1999) உலக வங்கியின் ஆரம்பிப்புக்களின் அடிப்படையில்
அரசாங்கத்தினதும் உலக வங்கியினதும் தொழிற்சங்கங்களதும்
பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஒரு "முத்தரப்பு கமிட்டி"யை
அது நிறுவியது. தபால் தொழிலாளர்களின் எதிர்ப்பைத் தகர்க்கும்
விதத்தில் மூல மசோதாவில் ஒரு தொகை வெளிப்பூச்சு மாற்றங்களைச்
செய்தது.
1996ல் அரசாங்கம் முதற் தடவையாக இந்தக்
கூட்டுத்தாபன பிரேரணையை முன்வைத்த நாளில் இருந்து தபால்
ஊழியர்கள் தனியார்மயமாக்கத் திட்டங்களை எதிர்த்துப்
போராடும் தமது தயார் நிலையை வெளிக்காட்டிக் கொண்டனர்.
ஆனால் தொழிற்சங்கங்களோ இந்தப் பிரச்சார இயக்கத்தை
ஒரு தொகை மறியல் போராட்டங்கள், சட்டப்படி வேலை செய்யும்
இயக்கம், கூட்டங்கள், சட்டநடவடிக்கை சூழ்ச்சிகளுடன் நிறுத்திக்
கொண்டன. எவ்வாறெனினும் இதே வேளையில் தொழிற்சங்கத்
தலைவர்கள் மாற்றங்களை எதிர்க்காது விட்டுவிட்டு அவற்றின் சுமூகமான
அமுலாக்கத்துக்கு துணை போகும் விதத்தில் "முத்தரப்பு கமிட்டி"யில்
பங்கு கொள்வதன் மூலம் தம்மை தயார் செய்து கொண்டனர்.
மாஜி தொழிற்சங்கச் செயலாளர் இந்த முத்தரப்பு
கமிட்டியில் கொண்ட ஈடுபாடு தொழிலாளர்களை ஆத்திரமடையச்
செய்ததோடு ஏனைய தொழிற்சங்கத் தலைவர்களை அதற்கு
எதிராகச் செயற்படத் தள்ளியது. ஆனால் அவரின் இடத்துக்குப்
புதிதாக நியமிக்கப்பட்ட உபாலி நவரத்ன- சோவினிச ஜே.வி.பி. அங்கத்தவர்-
அதிலிருந்து ஒன்றும் வேறுபட்டவர் அல்ல.
நவரத்னவுடன் தொடர்பு கொண்டபோது அவர்
கூறியதாவது: கூட்டுத்தாபனமாக்குவதை தொழிற்சங்கம் எதிர்க்கும்
அதே நேரத்தில் தபால் சேவைகள் "மறுசீரமைக்கப்பட"
வேண்டும் என்பதை ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
"நிர்வாகம் திறமைமிக்கதாக செயற்படவேண்டும்; திணைக்களம்
அபிவிருத்தி செய்யப்படவேண்டும் என்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம்.
முதலீடு உலக வங்கியில் இருந்தோ அல்லது வேறு எங்கிருந்து
தான் வந்தாலும் நாம் எதிர்ப்பில்லை" என எனக்கு அவர்
குறிப்பிட்டார். புதிய தொழிற்சங்கத் தலைவர்கள் "திறமையான
நிர்வாகம்" என்ற பேரில் தபால் ஊழியர்களின் தலையில்
அதிகரித்த அளவிலான வேலைப் பளுவை கட்டியடிக்கத் தாம் தயாராக
இருப்பதாக காட்டும் சமிக்கையை அரசாங்கத்துக்கு வழங்கியுள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை நவரத்ன, மசோதா அடியோடு வாபஸ்
பெறப்பட வேண்டும் என வலியுறுத்துவதற்கு புறமுதுகு காட்டினார்.
மேலும் நவரத்னவும் ஏனைய யூ.பீ.டீ.ஓ. (UPTO)
தலைவர்களும் மாஜி செயலாளர் முத்தரப்பு
கமிட்டியில் பங்குகொள்வதை ஆதரித்தவர்கள். ஹெட்டியாராச்சி
கூட்டுத்தாபன மசோதாவை அங்கீகரித்த அதே வேளையில் தமது
தொடர்புகளை அம்பலப்படுத்திக் கொண்டதை தொடர்ந்தே
இவர்கள் அவரில் இருந்து விலகிக் கொண்டனர். ஹெட்டியாராச்சி
பதவி நீக்கம் செய்யப்பட்டதை ஊர்ஜிதம் செய்யக் கூட்டப்பட்ட
பேராளர் மகாநாட்டில் இரு கோஷ்டிகளும் உடல்ரீதியான தாக்குதலில்
இறங்கும் அளவுக்கு படுமோசமான வாய்த் தர்க்கங்களில் ஈடுபட்டன.
ஆனால் இந்தக் குழப்ப நிலைமையானது முழுத் தலைமையினதும்
வரலாற்றையும் வேலைத்திட்டத்தையும் கடும் ஆய்வுக்கு உள்ளாக்குவதைத்
தடுப்பதையே இலக்காகக் கொண்டிருந்தது.
குறிப்பாக யூ.பி.டீ.ஓ. தலைவர்கள், சோசலிச
சமத்துவக் கட்சியின் (SEP)
அங்கத்தவர்களும் ஆதரவாளர்களும் இந்த மகாநாட்டில்
கலந்து கொண்ட பேராளர்களிடையே துண்டுப் பிரசுரம்
விநியோகிப்பதை தடுக்க முயன்றனர். பொலிசாருக்கு அழைப்பு
விடுத்த இவர்கள் சோ.ச.க. வை அங்கிருந்து வெளியேற்றுமாறு
கோரினர். ஆனால் அவர்களின் முயற்சி பலிக்கவில்லை. பல தொழிற்சங்க
பேராளர்களும் சோ.ச.க. அங்கத்தவர்களிடம் தமது தலைவர்களில்
தாம் நம்பிக்கையிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
தென்மாகாணத்தில் இருந்து இப்பேராளர் மகாநாட்டுக்கு
வருகை தந்திருந்த தபால் அலுவலக பேராளர் ஒருவர் ஆத்திரத்துடன்
பின்வருமாறு குறிப்பிட்டார்: "இரண்டு கன்னையும் நாய்ச் சண்டையில்
ஈடுபட்டுள்ளன. எமது பிரச்சினைகளை கலந்துரையாட இடம் இல்லை.
மசோதா பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அரசாங்கம்
அவசரகால சட்டத்தை பாவித்து இதை அமுல் செய்யப் பார்க்கிறது.
இதற்கு எதிராக என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி எவரும்
பேசுவதாக இல்லை" எனத் தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள மத்திய தபால் பரிவர்த்தனை
நிலையத்தைச் சேர்ந்த ஒரு தொழிலாளி பின்வருமாறு குறிப்பிட்டார்:
"யுத்த நெருக்கடியை பயன்படுத்தி அரசாங்கம் அவசரகால
விதிகளைத் திணித்துள்ளதோடு அத்தியாவசிய பொருட்களின் விலைகளையும்
அதிகரித்துள்ளது. பொதுஜன முன்னணி கடந்த காலப்பகுதியில் செய்ய
முடியாது போனவற்றை செய்வதில் ஈடுபட்டுள்ளது. இந்த
நிலைமையிலேயே தபால் சேவை மசோதா கூட சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதைப்பற்றிப் பேசாமல் இந்த தொழிற்சங்கத் தலைவர்கள் குத்துச்
சண்டையில் இறங்கியுள்ளனர். தொழிற்சங்கம் அவர்களுக்கு ஒரு
பெரும் சொத்தாகியுள்ளது".
மத்திய மலைநாட்டின் பேராதனையைச் சேர்ந்த
மற்றொரு தபால் தொழிலாளி பின்வருமாறு குறிப்பிட்டார்:
"எட்டு ஆண்டுகளாக இந்த தொழிற்சங்கத்தில் நான் அங்கத்தவனாக
உள்ளேன். தலைமைப் பீடத்தின் இந்தக் கன்னைகளிடையே நான் எந்தவிதமான
வேறுபாட்டையும் காணவில்லை. இரண்டும் ஒன்றையே செய்கின்றன.
இவர்களிடையே எதையும் தெரிவு செய்வது கடினம்" என்றார்.
திணைக்களம் கூட்டுத்தாபனமாக மாற்றப்படும் போது விரக்தி
காரணமாக சில ஊழியர்கள் தமது தொழில்களில் இருந்து விலகலாம்.
ஏனையவர்கள் இன்றைய உரிமைகளை இழக்க நேரிடலாம் எனவும்
அவர் மேலும் தெரிவித்தார்.
|