World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

Sri Lankan artists speak out against the war

இலங்கை கலைஞர்கள் யுத்தத்தை எதிர்த்து குரல் கொடுக்கின்றார்கள்

By a correspondent
28 June 2000

Use this version to print

பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல் காரணமாக யாழ்ப்பாணத்தில் இருந்து வரும் இலங்கை இராணுவம் ஒரு தொகை பெரும் தோல்விகளுக்கு உள்ளானதைத் தொடர்ந்து, பொதுஜன முன்னணி அரசாங்கம் முழு நாட்டையும் ஒரு யுத்த நிலைமையின் கீழ்க் கொணர்ந்ததோடு அரசியல் ஆதரவுக்கு சிங்கள சோவினிச, தீவிர வலதுசாரி அமைப்புக்களிலும் சாய்ந்து கொண்டுள்ளது.

கடந்த மாதம் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க சகல அரசியல் கட்சிகளையும் நெருக்கடி நிலைமையையிட்டு கலந்துரையாட அழைப்பு விடுத்து இருந்தமை இதற்கு நல்லதொரு உதாரணமாகும். அதற்கு வருகை தந்திருந்தவர்களில் நீண்ட நேரம் உரை நிகழ்த்த அனுமதி வழங்கப்பட்டது சிங்களயே மகா சம்மத பூமிபுத்திர கட்சிக்கேயாகும் (Sinhala's Sons of the Soil Party). தமிழருக்கு எதிரான இனக்கலவரங்களைத் தூண்டிவிட முயற்சித்து வரும் இந்த பாசிச அமைப்பு, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சகல ஆதரவாளர்களுக்கும் மரண தண்டனை விதிக்கும்படி அரசாங்கத்தை வேண்டிக்க கொண்டது. ஒரு சில நாட்களின் பின்னர் குமாரதுங்க இந்தத் தீவிரவாதக் குழுக்கள் வழங்கிய ஆதரவுக்காக அவற்றுக்கு பகிரங்கமாக நன்றி தெரிவித்தார்.

பொதுஜன முன்னணி (PA) லங்கா சமசமாஜக் கட்சியையும் (LSSP) ஸ்ராலினிச இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியையும் (CPSL) உள்ளடக்கி கொண்டுள்ளதோடு, தொழிற்சங்கங்களின் ஆதரவுடன் ஆட்சி நடாத்துகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆதரவாளர்களுக்கும் பொதுஜன முன்னணியையும் அதன் யுத்த கொளைகையையும் எதிர்ப்பவர்களுக்கும் எதிரான மரண அச்சுறுத்தல் புதிய ஒரு தோற்றப்பாடு அல்ல. கடந்த ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற தேர்தல்களில் பொதுஜன முன்னணி ஆதரவு குண்டர்களின் தாக்குதல்களையிட்டு பல முறைப்பாடுகள் செய்யப்பட்டன. எவ்வாறெனினும் யுத்தத்துக்கு எதிரான பொதுஜன எதிர்ப்பின் அதிகரிப்புக்குச் சமாந்தரமாக பொதுஜன முன்னணி எதிர்ப்பாளர்கள் மீதான அத்தகைய தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.

அத்தகைய தாக்குதல்கள், கொள்ளைகள், தீவைப்புக்கள், கொலை அச்சுறுத்தல்களுக்கு உள்ளானவர்களுள் பிரபல கலைஞர்களும் நடிக, நடிகையர்களும் அடங்குவர். இவர்களில் சிலர் முன்னர் எதிர்க்கட்சியான யூ.என்.பி.க்கு ஆதரவு வழங்கியவர்கள். ஏனையவர்கள் பொதுஜன முன்னணியின் யுத்தக் கொள்கைக்கு எதிரான கலைத்துறைப் படைப்புக்களில் ஈடுபட்டவர்கள். தொடர்ந்தும் எதிர்க் கட்சிகளுக்கு ஆதரவு வழங்கினால் அல்லது விமர்சனப் பாணியிலான கலை நடவடிக்கைகளில் ஈடுபடின் கொலை செய்யப்படுவர் என்ற பயமுறுத்தலும் இவர்களில் சிலருக்கு விடுக்கப்பட்டுள்ளது.

இதே சமயம் அரசாங்கம் இந்தக் தாக்குதல்களுக்கும் தனக்கும் சம்பந்தம் கிடையாது என்றுள்ளது. தாக்குதல்களுக்கு உள்ளான கலைஞர்களின் தொடர்ச்சியான வேண்டுகோள்களுக்கு இடையேயும் அரசாங்கம் எதுவிதமான நடவடிக்கையும் எடுக்க மறுத்துவிட்டது.

முதலாவது தாக்குதல் டிசம்பர் 16ம் திகதி இடம் பெற்றது. பொதுஜன முன்னணி மாகாண சபை உறுப்பினரான லசந்த அலகியவண்ண தலைமையிலான ஒரு குழு, யூ.என்.பி.க்கு ஆதரவான பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருந்த கலைஞர்களைத் தாக்கியது. இதில் பலர் படுகாயமடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து டிசம்பர் 25ம் திகதி- குமாரதுங்க மீண்டும் ஜனாதிபதியாக நூலிழையில் தெரிவு செய்யப்பட்ட நான்கு நாட்களின் பின்னர்- மற்றொரு சம்பவம் இடம்பெற்றது. அனைத்துலகப் பாராட்டைப் பெற்ற திரைப்பட, நாடக நடிகையான அனோஜா வீரசிங்கவின் வீட்டின் மீது கைத்துப்பாக்கி சூடுகள் இடம்பெற்றதோடு, கைக்குண்டுகளும் வீசப்பட்டன. இதற்கு ஒரு கிழமையின் பின்னர்- ஜனவரி 2ம் திகதி அனோஜாவின் வீடு தீவைத்துக் கொழுத்தப்பட்டது. இதனால் அவரின் அரும் பெரும் நினைவுச் சின்னங்களும் அவர் நடித்த பல படங்களின் தனிப் பிரதிகளும் நாசமாக்கப்பட்டன. மூன்றாவது தடவையாக அனோஜா வீரசிங்கவின் வீட்டிற்கு விஜயம் செய்த இக்காடையர் கும்பல், யுத்த எதிர்ப்பு நாடகமான 'ட்ரொஜன் வுமன்' (Trojan Women) நாடகத்தில் ஹெகப் (Hecabe) பாத்திரத்தில் அவர் நடிப்பதை கைவிடும்படி கூறியது.

ஜனவரி 26ம் திகதி இரண்டு பொப் இசைக் கலைஞர்களான ரூகாந்த குணதிலக, சந்திரலேகா பெரேரா வீட்டினுள் 10 காடையர்கள் பலவந்தமாக நுழைந்தனர். இந்த தம்பதிகளின் தலைக்கு கைத்துப்பாக்கியினால் குறிவைக்கப்பட்டதோடு அவர்களின் முடி மயிர்கள் வெட்டித் தள்ளப்பட்டது. அத்தோடு அவர்கள் பெற்றோலினால் குளிப்பாட்டப்பட்டனர். இந்தப் பாடகர்களின் வாய்களுக்குள் கைத்துப்பாக்கியை திணித்த காடையர்கள், "அரசாங்க எதிர்ப்பு" அரசியல் மேடைகளில் ஏறமாட்டோம் என வாக்குறுதி வழங்காது போனால் அவர்களை கொலை செய்யப் போவதாக மிரட்டினர். ரூகாந்தவும் சந்திரலேகாவும் கடந்த ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது ஒரு யூ.என்.பி. கூட்டத்தில் பாடியிருந்தனர். அத்தோடு ரூகாந்த 'ட்ரொஜன் வுமன்' என்ற நாடகத்துக்கும் இசையமைத்திருந்தார். இந்தத் தாக்குதல் இக்கலைஞர்களின் இரண்டு குழந்தைகளுக்கும் சந்திரலேகாவின் தாயாருக்கும் முன்னால் இடம்பெற்றது.

இந்த "ட்ரொஜன் வுமன்' இயக்குனரான தர்மசிறி பண்டாரநாயக்க, அனோஜாவுக்கும் ரூகாந்தவுக்கும் எதிரான தாக்குதலை பகிரங்கமாகக் கண்டனம் செய்ததும் அவருக்கு தொலைபேசி மூலம் கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டதோடு அந்த நாடகத் தயாரிப்பை நிறுத்தும்படி கடிதங்களும் வந்தன.

இந்தத் தாக்குதல்களினால் அதிர்ச்சியடைந்த பல பிரபல கலைஞர்கள் பெப்பிரவரியில் 'வன்முறைக்கு எதிரான கலைஞர்கள்' (Artists against Voilence) என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தியதன் மூலம் தமது ஜனநாயக, கலை நிர்மாண உரிமைகளை காக்க முயன்றனர். இந்த வன்முறைக்கு எதிரான கலைஞர்கள் அமைப்பின் ஸ்தாபித அறிக்கை, நிலைமையை முன்னைய யூ.என்.பி. ஆட்சியாளர்களின் கீழான நிலைமைகளுடன் ஒப்பிட்டதோடு, தாக்குதல்கள் கலைஞர்களுக்கு இடையேயான தனிப்பட்ட தகராறுகளின் பெறுபேறாக இடம் பெற்றவை எனக் காட்ட பொதுஜன முன்னணி அரசாங்க அமைச்சர்கள் எடுத்த முயற்சிகள் சிரிப்புக்கிடமானவை எனவும் தெரிவித்தது.

"இந்த தாக்குதல்களை நாம் வெறும் கொள்ளை அல்லது தனிப்பட்ட பகைமை காரணமாக ஏற்பட்டவை எனக் கொள்ளவில்லை என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்" என அந்த அறிக்கை குறிப்பிட்டது. யூ.என்.பி. ஆட்சிக் காலத்தில் றிச்சாட் டி சொய்சாவின் (1989ல் ஜனாதிபதி பிரேமதாசவின் மெய்க்காப்பாளரால் அவரின் இல்லத்தில் இருந்து கடத்திச் செல்லப்பட்டு அடித்துக் கொல்லப்பட்ட ஒரு பிரபல நடிகரும் பத்திரிகையாளரும்) கொலைக்குப் பின்னர் அவரின் தாயாருக்கு 'சுவர்க்கத்தில் இருந்து' என்ற கையொப்பத்துடன் கூடிய கொலைப் பயமுறுத்தல்கள் தொடர்ச்சியாக விடுக்கப்பட்டு வந்தன. அத்தகைய கடிதங்கள் இப்போது தர்மசிரிக்கு கிடைத்து வருகின்றன. இது கொலையாளிகள் கும்பலில் சில யூ.என்.பி.யில் இருந்து பொதுஜன முன்னணிக்கு எப்படி இடம் பெயர்ந்துள்ளன என்பதைக் காட்டுகின்றது.

கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்துக்கும் மனித உரிமைகளுக்கும் எதிரான ஒரு பெரும் அச்சுறுத்தலான இதை ஒரு பயங்கரமான தீய கனவைச் சித்தரித்துக் காட்டும் ஒரு எச்சரிக்கையாக நாம் உணர்கின்றோம். ஒரு போதுமே வன்முறைகளில் ஈடுபட்டிராத கலைஞர்களைக் கொல்வது அல்லது கொலை முயற்சியில் ஈடுபடுவது இப்போது ஒரு விநோதமான திருப்பத்தை எட்டிக் கொண்டுள்ளது. இது நம் சகலருக்கும் ஒரு கெட்ட சகுனமாகி உள்ளது".

'வன்முறைக்கு எதிரான கலைஞர்கள்' (AAV) அமைப்பை நிர்மாணித்ததைத் தொடர்ந்து உலக சோசலிச வலைத் தளத்துடன் பேசிய (WSWS) தர்மசிரி பண்டாரநாயக்க யுத்தத்தின் பயங்கரங்களுக்கு எதிராக பேசும் பொருட்டு ஈயூரிபைட்சின் (EURIPIDES) நாடகத்தை- ட்ரொஜன் யுத்தத்தில் (Trojan War) வெற்றி கண்ட கிரேக்கர்களின் கரங்களில் அகப்பட்ட 'ட்ரொஜன் வுமன்' (Trojan Women) களின் தலைவிதியை இது விவரிக்கின்றது- தெரிவு செய்ததற்கான காரணத்தை விளக்கினார்.

"நான் தெரிந்தெடுத்த வாழ்க்கைப் பணி கலையின் முன்னேற்றத்துக்காக பாடுபடுவதேயாகும். யூ.என்.பி. ஆட்சிக் காலத்தின் போது நான் நான்கு நாடகங்களையும் 12 திரைப்படங்களையும் நெறிப்படுத்தினேன். நான் 'ஏகாதிபதி' (சர்வாதிகாரி) 'தவள பீஷண' (வெள்ளை பயங்கரம்) என்ற நாடகங்களை இக்காலப் பகுதியில் தயாரித்தேன். இந்த இரண்டாவது நாடகத்தை மேடையேற்றுவதை நிறுத்தும்படி நான் கேட்கப்பட்டேன். கொலைப் பயமுறுத்தல் காரணமாக நான் நாட்டில் இருந்து வெளியேற நேரிட்டது. பொதுஜன முன்னணி அரசாங்க காலத்தில் நான் நெறிப்படுத்திய முதல் நாடகம் 'ட்ரொஜன் வுமன்' (Trojan Women) என்பதாகும்" என பண்டாரநாயக்க கூறினார்.

கடந்த பெப்பிரவரியில் பிரபல இசைக் கலைஞரான குணதாச கப்புகே உலக சோசலிச வலைத் தளத்துடன் பேசுகையில் கலைஞர்கள் மீதான வன்முறைத் தாக்குதல்கள் அரசியல் நோக்கம் கொண்டவை எனவும் ஜனநாயக உரிமைகள் மீதான ஒரு பாரதூரமான தாக்குதலை பிரதிநிதித்துவம் செய்வதாகவும் தெரிவித்தார். "நான் வலியுறுத்தும் ஒரு விடயம் என்னவெனில் மக்கள் தமது அரசியல் அபிப்பராயங்களின் அடிப்படையில் நின்றுகொள்ளும் சுதந்திரத்தைக் கொண்டிருக்க வேண்டும். குணதாச கப்புகே பொதுஜன முன்னணிக்கு ஆதரவளிக்கும் உரிமையைக் கொண்டுள்ளதைப் போல ரூகாந்த யூ.என்.பி.க்கு ஆதரவளிக்கும் உரிமையைக் கொண்டிருக்க வேண்டும். அந்த அடிப்படை ஜனநாயக உரிமையை மக்களுக்கு மறுப்பது தவறானது".

தாக்குதலுக்கு உள்ளானவர்கள் அல்லது பயமுறுத்தப்பட்டவர்களுள் பெரிதும் பிரபல்யமானவர்கள் 'ட்ரொஜன் வுமன்' நாடகத்துடன் தொடர்புபட்டவர்களாக இருப்பது தற்செயலானது அல்ல. பிரசன்ன வித்தானகேயின் புரஹந்த கலுவர' (பெளர்ணமி தின மரணம்) வுடன் சேர்ந்து 'ட்ரொஜன் வுமன்' நாடகம் நடைபெற்று வரும் உள்நாட்டு யுத்தத்துக்கு எதிராக வளர்ச்சி கண்டுவரும் ஒரு கலை வெளிப்பாடாகும்.

கடந்த 17 வருடங்களாக சிங்கள இனக்குழுவை அடிப்படையாகக் கொண்ட அரசாங்கத்துக்கும் இலங்கையின் வடக்கு- கிழக்கு மாகாணங்களில் ஒரு இனக்குழு தமிழ் அரசினைக் கோரும் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான யுத்தத்தில் பல்லாயிரக் கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். குமாரதுங்கவின் பொதுஜன முன்னணி அரசாங்கம் 1994ல் யுத்தத்துக்கு முடிவு கட்டவும் யூ.என்.பி.யின் தொழில் வெட்டுக்களையும் தனியார்மயமாக்கல் வேலைத்திட்டத்தை நிறுத்தவும் வாக்குறுதி அளித்ததைத் தொடர்ந்து முதலாவதாக ஆட்சிக்குத் தெரிவு செய்யப்பட்டது.

சமாதானத்துக்குப் பதிலாக கடந்த ஆறு வருட கால பொதுஜன முன்னணி ஆட்சி உயிரிழப்புக்களை அதிகரிக்கச் செய்கின்றதும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களைக் கொண்டதுமான யுத்தத்தை பெருமளவில் விஸ்தரித்தது. யுத்தத்தின் போது கொல்லப்பட்டவர்களில் அரைவாசிக்கும் அதிகமானோர் பொதுஜன முன்னணி ஜனாதிபதி ஆட்சிக் காலத்திலேயே கொல்லப்பட்டனர். குமாரதுங்க ஆட்சி பற்றிய சலனங்களுக்கு தோள்கொடுத்த பெருமளவிலான கலைஞர்களும், எழுத்தாளர்களும், திரைப்பட இயக்குனர்களும் பொதுஜன முன்னணி அரசாங்கத்தின் யுத்தக் கொள்கையில் வெறுப்படைந்து, தனித்து பொதுஜன முன்னணி ஆட்சிக்கு எதிராக மட்டுமல்லாது யுத்தத்தை உக்கிரமாக்க வேண்டும் எனக் கோரிய சகலருக்கும் எதிராகக் குரல் கொடுக்க ஆரம்பித்தனர்.

ஜனவரியில் இடம் பெற்ற தாக்குதலைத் தொடர்ந்து தலைமறைவாகி இருந்து வந்த அனோஜா வீரசிங்க வெகுஜனத் தொடர்பு சாதனங்களுக்கு வரைந்த ஒரு பகிரங்கக் கடிதத்தில் குறிப்பிட்டதாவது: "ட்ரொஜன் வுமன்' நாடகத்தில் பங்குகொள்ள முடிந்ததை நான் ஒரு மாபெரும் அதிர்ஸ்டமாகக் கணிக்கின்றேன். நான் நடிக்கப்போகும் கடைசிப் பாத்திரம் அதுவா? அந்த ஐந்து மாதங்களின் ஒவ்வொரு வினாடிகளிலும் எனது சொந்த நாடு தீப்பற்றி எரிவதை நான் கண்டேன். நான் இதை எனது நித்திரையிலும் கண்டேன். இன்றைய யுத்தத்தினால் உருவாக்கப்பட்ட பேரழிவை எனது நாட்டுக்கு எடுத்துச் சொல்ல நான் உயிர் வாழ்வேனா? அந்த நாடகத்தில் நடிக்கும் ஒரே குழந்தை- சிறிய குழந்தை- அன்புடன் என்னை கட்டித் தழுவும் போது எனது இதயம் துக்கத்தில் கண்ணீர் வடித்தது. அக்குழந்தை தனது சொந்த தாய்க்கும் எனக்கும் இடையே வேறுபாட்டை காணவில்லை. இந்த நச்சுத்தனமான உலகின் கொடுமைகளை அவன் அறியான். அதே போல் நான் அவனை முத்தமிட்ட போதெல்லாம் எனது சகோதரர்களினதும் சகோதரிகளதும் குழந்தைகளை முத்தமிடும் உணர்வு எனக்கு ஏற்பட்டது. தமிழ் இரத்தத்துக்கு வாசனை கிடையாது. அது ஒரு மனித குழந்தையின் வியர்வையாகவும் மனித இரத்தத்தின் உஷ்ணமாகவும் இருந்ததை நான் உணர்ந்தேன்...

"நாடகத்தைப் பார்க்க வந்த தமிழ் சகோதரிகள் என்னைக் கட்டித் தழுவிப் பாராட்டிய போது அவர்கள் எவ்வளவு அன்பைச் சொரிந்தார்கள். அவர்கள் என்னை ஒரு சிங்களப் பெண்ணாகக் கண்டார்களா? அன்றைய தினத்தில் அவர்கள் என்னை ஒரு மனித உயிராகவும் அவர்களில் ஒருவராகவுமே கணித்தார்கள். இத்தகைய நிகழ்வுகள் ஏற்பட்ட பல சந்தர்ப்பங்கள் இருந்தன. கலைஞர்களான நாம் தேசிய, மத, ஜாதி பிளவு போன்ற குறுகியவற்றைத் தாண்டி எந்தளவுக்குச் சென்றுள்ளோம்.

"காடைத்தனங்களால் எனது சகல உடமைகளும் சாம்பலாகின. இது எவ்வளவு பிரமாண்டமான அதிசயம் மிக்க தலைவிதி? ஆண்டவன் இந்தக் கடும் சோதனைக்கு என்னை உள்ளாக்கியதன் மூலம் மேலும் பக்குவமடைந்த கலைஞன் ஆக்கியுள்ளான் போலும். சாம்பலிலும் தூசியிலும் இருந்து ஹேகப் (Hecabe) தோன்றுவது போலவே அனோஜாவும் தோன்றுவாள். நான் இந்த அதிகாரப் பேராசை கொண்ட அரசியலின் நிஜ பண்பை முழு உலகத்துக்கும் அம்பலப்படுத்துவேன்" என்றுள்ளார் இந்த உணர்வுகளும் வன்முறைக்கு எதிரான கலைஞர்கள் (AAV) அமைப்பின் தோற்றமும் யுத்தத்துக்கும் பொதுஜன முன்னணி அரசாங்கத்துக்கும் எதிராகப் பரந்துபட்டுவரும் எதிர்ப்பின் அறிகுறிகளாகும்.