Sri Lankan unions call off plantation pay campaign
இலங்கை தொழிற் சங்கங்கள் தோட்டத்
தொழிலாளரின் சம்பள அதிகரிப்பு பிரச்சாரத்தை கைவிட்டன
By Dianne Sturgess
27 June 2000
Use
this version to print
சம்பள உயர்வு
கோரி 450,000 தேயிலை, இறப்பர் தோட்டத் தொழிலாளர்கள்
நடாத்தி வந்த இரண்டு மணித்தியால வேலை பகிஷ்கரிப்பையும்
மெதுவாக வேலை செய்யும் இயக்கத்தையும் இலங்கை பெருந்தோட்டத்
தொழிற்சங்கங்கள் நிறுத்திக் கொண்டுள்ளன. தொழிலாளர்களின்
முழு அளவிலான போராட்டம் அபிவிருத்தி காணும் ஒரு நிலைமை ஏற்பட்டு
வந்த நிலையில் தொழிற் சங்கங்கள் இலங்கை முதலாளிமார் சம்மேளனத்துடன்
ஜூன் 20ம் திகதி ஒரு உடன்பாட்டுக்கு வந்துள்ளன.
தொழிற்சங்கங்களின் அங்கத்தவர்களில் பலர் ஒரு
பலமான நடவடிக்கையில் இறங்குவதன் அவசியத்தை வலியுறுத்திவந்த
நிலையில் தொழிற்சங்கத் தலைவர்கள் தோட்டத் தொழிலாளர்களின்
போர் குணத்துக்கு விலங்கு மாட்டும் விதத்தில் ஜன் 11ம் திகதி வரையறுக்கப்பட்ட
தொழிற்சங்க நடவடிக்கைகளையும் நிறுத்திக் கொண்டனர்.
முதலாளிமார் சம்மேளனம், ஒரு சிறிய அளவிலான
அடிப்படைச் சம்பள உயர்வுக்கு இணக்கம் தெரிவித்துள்ளது.
இது இரண்டு வருட கால சம்பள உறைவையும் ஏற்படுத்தும். தேயிலைத்
தோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளம் ரூபா 95 ல் இருந்து
ரூபா 101 ஆக அதிகரிக்கும். இறப்பர் தோட்ட தொழிலாளர்கள்
மூன்று ரூபா சம்பள அதிகரிப்பை மட்டுமே பெறுவர். (ரூபா 95
ல் இருந்து ரூபா 98)
தேயிலை, இறப்பர் தோட்டத் தொழிலாளர்களின்
சம்பளம், தேயிலை, இறப்பர் விலை உயர்வு தொழிலாளரின்
வேலை நாள் எண்ணிக்கையை பொறுத்து ரூபா 121 ஆகவும் (தேயிலை
தொழிலாளி) ரூபா 112 ஆகவும் (இறப்பர் தொழிலாளி) அதிகரிக்கும்.
இந்த சம்பள அதிகரிப்புக்கள் தொழிற் சங்கத்
தலைவர்கள் கோரியதைக் காட்டிலும் குறைவானது. இவர்கள்
ஆரம்பத்தில் முன்வைத்த சம்பள உயர்வு தொகையை பல முறை
அடிதலையாக மாற்றினர். ஆரம்பத்தில் தொழிற்சங்கங்கள் நாள்
சம்பளமாக ரூபா 150 கோரினர். பின்னர் இது ரூபா 131 க்கு வீழ்ச்சி
கண்டு, இறுதியில் ரூபா 123 க்கு குழிபறிந்து போயிற்று.
மேலும் ஜூன் 2ம் திகதி இலங்கை மத்திய வங்கி
இலங்கை ரூபாவை (சராசரியாக) இரண்டு வீதத்தினால் பணமதிப்பிறக்கம்
செய்யத் தீர்மானம் செய்தது. இது அமெரிக்க டாலருடன்
தொடர்புபட்ட விதத்தில் இடம்பெற்றது. இந்த மதிப்பிறக்கம்
அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை அதிகரிக்கும். இதனால்
இந்த அற்ப சொற்பமான சம்பள அதிகரிப்பையும் அது வாயில்
போட்டு விழுங்கிக் கொள்ளும்.
சில பருவ காலங்களில் தொழிலாளர்களுக்கு
தினசரி வேலை கிடைப்பதில்லை. இதனால் அவர்களின் மாதாந்த
வருமானம் ரூபா 2500 க்கும் குறைவாக வீழ்ச்சியடைகிறது. சமீபத்தில்
இடம்பெற்ற விலை அதிகரிப்புக்கள் பொதுஜன முன்னணி அரசாங்கத்தின்
யுத்தச் செலவீனங்களை நிதியீட்டம் செய்யவே இடம் பெற்றுள்ளது.
இது இந்தத் தொழிலாளர்களை படு மோசமாகப் பாதித்துள்ளது.
சிலர் உணவுச் செலவுகளையும் ஈடுசெய்ய முடியாதவர்களாகவும்,
போஷாக்கின்மைக்கு ஆட்பட்டவர்களாகவும் உள்ளனர்.
தொழிற்சங்கத் தலைவர்கள் முதலாளிகளுடனும் பொதுஜன முன்னணி
அரசாங்கத்துடனுமான எந்தவொரு மோதுதலையும் தவிர்த்துக்
கொள்வதிலேயே பெரும் அக்கறை காட்டுகின்றனர். இவை யாழ்ப்பாணக்
குடாநாட்டு நிலைமைகளால் அரசியல் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளன.
பெரிதும் வரையறைக்குட்பட்ட சம்பள அதிகரிப்பு பிரச்சார
இயக்கத்தின் போதும் தொழிலாளர்கள் தொழிற்சங்கத் தலைவர்களால்
கீறப்பட்ட கோடுகளை தாண்டிச் செல்ல முயன்றுள்ளனர்.
முதலாளிமார் சம்மேளனத்துடன் ஆரம்பத்தில்
இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் மூலம் உடன்பாட்டுக்கு
வரமுடியாது போனதால் தொழிற்சங்கங்கள் சம்பள அதிகரிப்பின்
பேரிலும் 'நாட்டில் அமைதியும் சாந்தியும்' ஏற்படவும் பிரார்த்தனை
இயக்கத்தை ஆரம்பித்தன. அவர்கள் தொழிலாளர்களை இரண்டு
மணித்தியாலம் வேலை செய்வதை நிறுத்தும்படியும் கோவில்களில்
பிரார்த்தனையில் ஈடுபடும்படியும் கோரினர். அதைத் தொடர்ந்து
வேலைக்குத் திரும்பி, மெதுவாக வேலை செய்யும் இயக்கத்தை
முன்னெடுக்கும்படி கோரினர். அத்தோடு இத் தொழிற்சங்கத்
தலைவர்கள் அவசரகாலச் சட்ட விதிகளை சுட்டிக்காட்டி, நீண்ட
தூரம் செல்ல வேண்டாம் எனவும் தொழிலாளர்களை எச்சரித்தனர்.
பொதுஜன முன்னணி அமைச்சரவை அங்கத்தவரான
ஆறுமுகம் தொண்டமான் ஜூன் 12ம் திகதி தொழிலாளர்கள் மத்தியில்
பேசுகையில்: நாட்டில் உள்ள நிலைமை காரணமாக நாம்
வேலை நிறுத்தம் செய்ய முடியாது. அதனால் தான் நாம் இத்தகைய
ஒரு இயக்கத்தை ஆரம்பித்தோம்" என்றார். அத்தோடு
அவர் "நீங்கள் வேலைநிறுத்தங்களில் ஈடுபடக் கூடாது"
எனவும் எச்சரித்தார்.
இந்தப் பிரச்சார இயக்கத்தில் தோட்டத்
தொழிற்சங்க கூட்டுக் கமிட்டி (JPTUL),
லங்கா தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் (LJEWU)
என்பனவும் கலந்து கொண்டன. இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும்
(CWC)
ஸ்ராலினிச கம்யூனிஸ்டுக் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சியை உள்ளடக்கிய
தோட்ட தொழிற்சங்க கூட்டுக் கமிட்டியும் பொதுஜன முன்னணி
அரசாங்கத்தின் பங்காளிகள். லங்கா தேசிய தோட்டத்
தொழிலாளர் சங்கம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலானது.
பொதுஜன முன்னணி அரசாங்கத்தில் முன்னர் பிரதி
அமைச்சராக விளங்கிய பீ.சந்திரசேகரன் தலைமையிலான மலையகத்
தொழிலாளர் முன்னணி இந்தப் பிரச்சார இயக்கத்துக்கு ஆதரவு
வழங்க மறுத்துவிட்டது. இருப்பினும் அதன் பல அங்கத்தவர்கள் பிரச்சாரத்தில்
பங்குகொண்டனர்.
தொழிற்சங்கங்கள் அரசாங்கத்துக்கு என்னதான்
சேவகம் செய்பவையாக இருந்த போதிலும் தோட்ட முதலாளிகள்
இந்தப் பிரச்சார இயக்கம் நிறுத்தப்பட வேண்டும் என்பதில்
உறுதியாக இருந்தனர். தொழிற்சங்கங்களுக்கு முதலாளிமார் சம்மேளனம்
அனுப்பி வைத்த கடிதத்தில் பின்வருமாறு பிரகடனம் செய்திருந்தது:
அவசரகாலச் சட்ட விதிகளின் கீழ் உத்தேச வழிபாட்டு பிரச்சாரம்
சட்ட விரோதமானது. தோட்ட நிர்வாகம் சட்ட நடவடிக்கை
எடுக்க அதிகாரம் கொண்டுள்ளதை கவனத்தில் கொள்ளவும்"
என்றது. தோட்ட நிர்வாகிகள் தொழிலாளர்களுக்கு எதிரான
பயமுறுத்தல்களில் ஈடுபட்டனர். தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள்
தமிழ் பேசுபவர்கள். சில தோட்டங்களில் தோட்ட அதிகாரிகள்
புதிதாகப் பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு கதவடைப்புச்
செய்தனர். ஏனைய தொழிலாளர்களுக்கு அரை நாள் சம்பளமே
வழங்கப்படும் என மிரட்டப்பட்டனர்.
பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களில்
பெரும்பான்மையினர் 19ம் நூற்றாண்டின் கடைப்பகுதியில் பிரித்தானிய
காலனித்துவ ஆட்சியாளர்களால் தென் இந்தியாவில்- தமிழ் நாட்டில்-
இருந்து இலங்கைக்கு வலுக் கட்டாயமாக தருவிக்கப்பட்ட
தொழிலாளர்களின் பரம்பரையைச் சேர்ந்தவர்கள். இவர்களில்
பலர் இன்னமும் குட்டி லயன் அறைகளிலேயே- 12 அடி நீளம் அகலம்-
ஜீவிக்கின்றனர். இவை காலனித்துவ ஆட்சிக் காலத்தில் ஒரே வரிசையில்
அமைக்கப்பட்டவை.
இலாபம் வீழ்ச்சி காணும் நிலைமைக்கு முகம்
கொடுத்துள்ள தோட்டக் கம்பனிகள் பெருமளவிலான வேலைச்
சுமையை செய்யும்படி வேண்டுகின்றனர். இதன் மூலம் தமது உற்பத்திச்
செலவைக் குறைக்க முயற்சிக்கின்றனர். முதலாளிகள் இங்குள்ள சம்பளம்
இத்துறையில் போட்டியிடும், கென்யா தென்ஆபிரிக்கா, இந்தியாவில்
வழங்கப்படும் சம்பளத்தைக் காட்டிலும் அதிகமானது என
வாதிடுகின்றனர். அத்தோடு முதலாளிகள் உற்பத்தி திறனை அதிகரிக்கவும்
உழைப்புப் படையை குறைக்கவும் திட்டமிட்டு வருவதாகத் தெரிகின்றது.
இலங்கை மத்திய வங்கி அறிக்கையின்படி 1999ல் தேயிலை
ஏற்றுமதி மூலம் கிடைத்த வருமானம் 15 வீதத்தினால் வீழ்ச்சி கண்டுள்ளது.
ஏற்றுமதி விலைகள் 12 சத வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது. 1998ல்
ரஷ்யாவில் ஏற்பட்ட நிதி நெருக்கடி ஒரு முக்கிய காரணியாகும்.
இதனால் இலங்கை விற்பனைகள் பெருமளவு பாதிக்கப்பட்டன.
உலகச் சந்தையில் இறப்பர், தெங்கு கைத்தொழில் பொருட்களும்
நஷ்டம் அடைந்துள்ளன.
1972ல் தேசியமயமாக்கப்பட்ட பெருந்தோட்டக்
கைத்தொழிலை 1996-97ல் பொதுஜன முன்னணி அரசாங்கம் தனியார்மயமாக்கியது.
தனியாருடைமையின் கீழ் வேலைப் பளு ஏற்கனவே கணிசமான அளவு
அதிகரித்துள்ளது. இதனால் தொழிலாளர்களை பல எதிர்ப்புக்களிலும்
வேலைநிறுத்தங்களிலும் ஈடுபடச் செய்தது.
தொழிற்சங்கத் தலைவர்களின் உதவி, தோட்ட முதலாளிமார்,
சம்பளத்தையும் சகிக்க முடியாத வாழ்க்கைத் தரத்தையும்
கீழ்மட்டத்தில் வைத்திருப்பதைச் சாத்தியமாக்கின. உதாரணமாக
1998ல் தொழிலாளர்கள் ரூபா.150 நாட் சம்பளம் கோரினர்.
ஆனால் தொழிற்சங்கங்களோ இந்தக் கோரிக்கையை
ரூபா.115 ஆக குறைத்தன. 600,000 தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில்
ஈடுபட்டதைத் தொடர்ந்து பொதுஜன முன்னணி அரசாங்கம் இதில்
தலையிட்டதோடு தொழிற்சங்கங்களை ரூபா.95 க்கு இணங்கச்
செய்தது. இது வெறும் ரூபா.12 சம்பள அதிகரிப்பாகவே இருந்தது.
கோபமடைந்த தொழிலாளர்கள் தொழிற்சங்கத் தலைவர்களை
கண்டனம் செய்ததோடு வேலை நிறுத்தத்தை மேலும் நான்கு
நாட்களுக்குத் தொடர்ந்தனர்.
உலக சோசலிச வலைத் தளத்துக்கு (WSWS)
அளித்த பேட்டியில் தோட்டத் தொழிலாளர்கள் தாம் தொழிற்சங்கங்களின்
பிரச்சாரத்தையிட்டு அதிருப்தி கொண்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
பென்மூர் தோட்டத்தைச் சேர்ந்த ஒரு தொழிலாளி தெரிவித்ததாவது:
"தொழிற்சங்கத் தலைவர்களின் கொள்கை சந்தர்ப்பவாதமாகும்.
அவர்கள் தோட்ட நிர்வாகத்துடன் இரண்டறக் கலந்து செய்ற்படுகின்றார்கள்.
சம்பள உயர்வு கிட்டுமா என நாம் அவர்களைக் கேட்ட
போது அது ஒரு போராட்டம் எனத் தெரிவித்தனர்".
பண்டாரவளைக்கு சமீபமாக உள்ள எஸ்லபி தோட்டத்தைச்
சேர்ந்த ஒரு தொழிலாளி தோட்ட முதலாளிமாருக்கும், அரசாங்கத்துக்கும்
எதிரான போராட்டத்தைத் தட்டிக்கழிக்கவே தொழிற்சங்கத்
தலைவர்கள் பிரார்த்தனை இயக்கத்தில் ஈடுபட்டனர் என்றார்.
அட்டனுக்குச் சமீபமாகவுள்ள ஒரு தோட்டத்
தொழிலாளி இன்றைய விலைவாசி உயர்வினால் ரூபா.200 நாட்சம்பளம்
கூட போதுமானது அல்ல எனக் கூறினார். சில வருடங்களுக்கு
முன்னர் வாழ்க்கைச் செலவு சீராக்கல் கூட தொழிற்சங்கத்
தலைவர்களின் அங்கீகாரத்துடன் நீக்கப்பட்டதை அவர் நினைவு கூர்ந்தார்.
"அந்த நாற்றம் கண்ட கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்தாகாது
இருந்திருக்குமேயானால் தொழிலாளர்களின் சம்பளம், சுயமாக
ரூபா.150 க்கும் மேலாக அதிகரித்து இருக்கும்" என்றார்.
தொழிற்சங்கங்களின் ரூபா.22 சம்பள அதிகரிப்பினால்
தமது நிலைமையில் மாற்றம் ஏற்பட்டு விடாது என்பதே ஏனைய
தொழிலாளர்களது நிலைப்பாடாகும். இந்தக் குறைந்த சம்பளத்தை
தீர்மானிக்கும் முன்னர் தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களுடன்
ஆலோசனை நடாத்தவில்லை எனவும் அவர்கள் முறைப்பட்டனர்.
|