Sri Lankan President tries to push
through anti-democratic constitution
இலங்கை ஜனாதிபதி ஜனநாயக விரோத அரசியல்
சீர்திருத்தத்தை பலாத்காரமாக நடைமுறைக்கிட முயற்சிக்கின்றார்.
By K. Ratnayake
4 August 2000
Use
this version to print
இலங்கை ஜனாதிபதி சந்திரிகா
குமாரதுங்க நேற்று பாராளுமன்றத்தில் முன்வைத்த அரசியல் சீர்திருத்தம்,
தமிழ் சிறுபான்மையினருக்கு எதிரான 17 வருடகால உள்நாட்டு யுத்தத்தால்
எழுந்துள்ள அரசியல் நெருக்கடியின் புதிய கட்டத்தை வெளிக்
கொணர்ந்துள்ளது.
தற்போதைய பாராளுமன்றத்தின் ஆயுள் காலம்
முடிவுறும் தினமான ஆகஸ்ட் 24ம் திகதிக்கு முன்னதாக இதனை
நடைமுறைக்கிடும் ஒரு நிலையற்ற பிரயத்தனமாகவே, இந்த
அரசியல் சீர்திருத்த பொதியை பாராளுமன்றத்தின் ஒரு விசேட அமர்வில்
ஜனாதிபதி சம்பிரதாய பூர்வமாக முன்வைத்தார். புதிய பாராளுமன்றத்திற்கான
தேர்தல்கள் நவம்பர் 9ம் திகதிக்கு முன்னர் இடம்பெறும்.
பிராந்தியங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளித்து
வடக்கு-கிழக்குக்கான இடைக்கால நிர்வாக சபையை (Interim
Council) உருவாக்கும் திட்டத்தின் மூலம்
நாட்டில் இடம்பெற்று வரும் நீண்ட கால உள்நாட்டு யுத்தம்
முடிவுக்கு வருவதோடு "தேசிய சமாதானத்தையும்"
கொண்டு வரும் என, கூச்சல் நிறைந்த சபையில் குமாரதுங்க
அதிகாரபூர்வமாக வெளிப்படுத்தினார். அவர் பிரிவினைவாத தமிழீழ
விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு
(LTTE) இதனை அனுப்புவதாகவும்,
"ஆனால் விடுதலைப் புலிகள் அந்த யோசனைகளை நிராகரிப்பார்களேயானால்,
நாம் யுத்தத்தைத் தொடர்வோம்" எனவும் குறிப்பிட்டார்.
எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின்
(UNP) உறுப்பினர்கள் ஊ... என சத்தமிட்டு
குமாரதுங்கவின் இரண்டு மணித்தியால பேச்சை கேலி செய்ததோடு,
"ஒரு குடிகாரி நாட்டை விற்றுவிட்டாள்" என இடைக்கிடையே
கோசமெழுப்பினர். ஏனைய எதிர்க் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள்
சீர்திருத்த மசோதாவின் பிரதிகளை கிழித்து தீ மூட்டுகையில், ஐ.தே.க.
தலைவர் ரணில் விக்கிரமசிங்க வெளிநடப்புச் செய்தார்.
ஐக்கிய தேசியக் கட்சி இந்தப் புதிய
மசோதாவை எதிர்ப்பதில் தம்மை அர்ப்பணித்துக் கொண்டுள்ள
சிங்கள உறுமய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி (JVP),
மற்றும் பிரதான பெளத்த மத குருக்கள் உட்பட்ட இனவாத
வலதுசாரி சிங்கள சோவினிஸ்டுகளுடன் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது.
தீர்வுப் பொதி தமிழர்களுக்கு அளவு கடந்த அதிகாரத்தை வழங்குவதோடு,
நாட்டைப் பிரித்து, பெளத்தத்தின் சிறப்புரிமை வாய்ந்த அரசியல்
அந்தஸ்த்தையும் முடிவுக்கு கொண்டுவருவதாக சோவினிஸ்டுகள் குற்றம்
சாட்டும் அதே வேளை, பகிரங்க விவாதமோ அல்லது பெளத்த
பெரும் மத குருமாரினதும், மகா சங்கத்தினதும் ஆசியோ இல்லாமல்
திட்டங்களை விரைவுபடுத்துவதாக ஐ.தே.க. குமாரதுங்க மீது குற்றம்
சாட்டுகின்றது.
பாராளுமன்றத்திலிருந்து பல கிலோ மீற்றர்களுக்கு
அப்பால், ஜே.வீ.பி.யினரால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான
ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பொலிசார் மோதிக்கொண்ட
அதே வேளை, பெளத்த மத குருமார் மத்திய கொழும்பில் தமது
சொந்த கண்டனத்தை வெளிக்காட்டினர். இந்த மாற்றங்கள்
அமுல் செய்யப்படுமானால் ஆயிரக் கணக்கான பிக்குக்கள்
"சாகும் வரை உண்ணாவிரதம்" இருப்பதாக தெரிவித்த
மகா சங்கத்தினருடன், அதிகாரப் பகிர்வுப் பொதிக்கு எதிராக
ஒரு தேசிய ரீதியிலான பிரச்சாரத்தை முன் எடுப்பதாக ஜே.வி.பி.
உறுதியளித்துள்ளது. ஆகஸ்ட் 7ம் திகதி தீர்வு யோசனை மீதான பாராளுமன்ற
விவாதம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு நாட்களின் பின்னர் ஆகஸ்ட்
9ம் திகதி- வாக்கெடுப்பு இடம்பெறவுள்ள வேளையில், இந்த
குழுக்கள் தமிழ் மக்களுக்கு எதிரான ஒரு இனவாத மோதுதலை
தூண்டிவிடுவதை அடிப்படையாகக் கொண்டுள்ளன. பாராளுமன்றம்
இடம்பெறும் போது 10,000 மதகுருமார்களைக் கொண்ட ஒரு
ஆர்ப்பாட்டத்துக்கு திட்டமிடப்பட்டுள்ளது.
சிங்கள இனவாதிகளை சமாதானப்படுத்திக் கொண்டும்
பலவிதமான தமிழ் முதலாளித்துவத் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துக்
கொண்டும் ஒரு ஆபத்தான கயிற்றின் மேல் நடந்துகொண்டு தீர்வுப்
பொதியை முன் தள்ளுவதற்காக கடந்த இரண்டு மாதங்களாக
குமாரதுங்க முயற்சித்து வருகின்றார். அவர் இரு கட்சிகளுக்கும்
இடையிலான ஒருமைப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில், ஐ.தே.க.வுடன்
ஒரு தொடர் பேச்சுவார்த்தையை ஜூலை மாதத்தில் ஆரம்பித்து
வைத்தார். ஆனால் ஐ.தே.க. இரண்டு வாரங்களுக்கு முன்னர்
திடீரென பேச்சுவார்த்தைகளை முறித்துக் கொண்டது. அதிலிருந்து
அவர் தனது ஆளும் கூட்டணியை பலப்படுத்தவும், தமிழ் கட்சிகளின்
ஆதரவை உறுதிப்படுத்தவும், எதிர்க் கட்சியான ஐ.தே.க.வின்
பாராளுமன்ற உறுப்பினர்களை தீர்வு யோசனையை நடைமுறைக்கிடுவதற்கு
ஆதரவாக வெற்றி கொள்ளவும் தீவிரமான பேச்சுவார்த்தைகளில்
ஈடுபட்டுவருகிறார்.
தமிழ் கட்சிகளின் ஆதரவானது அவரது திட்டத்தை
வெற்றி கொள்வதற்கான ஒரு திருப்புமுனையாகும். மட்டுப்படுத்தப்பட்ட
சுயாட்சிக்கான மாற்றத்தில், ஒரு அரசியல் அதிகார அந்தஸ்த்தையும்
மற்றும் ஏனைய சலுகைகளையும் வழங்குவதன் மூலம் -இடைக்கால
நிர்வாக சபையானது ஐந்து வருடத்திலிருந்து 10 வருடத்திற்கு விஸ்தரிக்கும்
வகையில் அமையும் என அவர் பேச்சளவில் உறுதியளித்துள்ளார்-
விடுதலைப் புலிகளை தனிமைப்படுத்தவும் தீர்வுப் பொதியை தமிழ் மக்கள்
மீது கட்டியடிக்கவும் தமிழ் முதலாளித்துவக் கட்சிகளை
பயன்படுத்த ஜனாதிபதி எத்தனித்துள்ளார்.
ஜூலை 28ம் திகதி, குமாரதுங்க தமிழர் விடுதலைக்
கூட்டணியையும் (TULF)
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தையும் (PLOTE)
சந்தித்தார். வார இறுதியில் -ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும்
கட்சி- இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுடனும் கலந்துரையாடல்
நடாத்தினார்(CWC).
திங்கள் இரவு அவர் மற்றொரு தமிழ்
கட்சியான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியை சந்தித்தார்(EPDP).
இந்த ஏற்பாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளும்
சேர்த்துக் கொள்ளப்படாவிட்டால் தீர்வுப் பொதிக்கு ஆதரவளிக்கப்
போவதில்லை என த.வி.கூ. குறிப்பிட்டிருந்தது. விடுதலைப் புலிகள்,
இந்த அரசியல் சீர்திருத்தத்தை நிராகரித்துள்ள போதிலும், தீவில்
ஒரு தனியான அரசை அமைப்பதற்கு குறைந்த எதையும் ஏற்றுக்
கொள்ளத் தயாரில்லை என அறிவிக்கவில்லை.
திங்கட்கிழமை இடம்பெற்ற ஒரு விசேட கூட்டத்தில்,
குமாரதுங்க தனது அமைச்சரவை புதிய திட்டத்தை ஏகமனதாக
அங்கீகரிப்பதற்கான நம்பிக்கையை உறுதிப்படுத்தினார். ஜனாதிபதியின்
சுகயீனமான தாய் -பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க- கூட்டத்திற்கு
சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்டார். "தேவையானால்
இரண்டு கைகளாலும் வாக்களிப்பதாக" அவர் குறிப்பிட்டார்.
ஆயிரக்கணக்கான பிக்குகள் அரசியல் சீர்திருத்தத்திற்கு எதிராகவும்
தொடர்ச்சியான யுத்தத்துக்காகவும் புதன்கிழமை பிரார்த்தனை
கூட்டம் நடாத்திய சமயம் குமாரதுங்க மகா சங்க தலைவர்களை
கண்டியில் சந்திக்க முயற்சித்தார்.
புதிய அரசியல் சீர்திருத்தத்திற்கான ஐ.தே.க.வின்
ஆதரவை உறுதிப்படுத்தி கொள்வதற்கான இறுதி நிமிட முயற்சியில் கடந்த
புதன்கிழமை ஜனாதிபதி ஈடுபட்ட போதும், அது வெற்றியளிக்கவில்லை.
அன்றைய தினம் தீர்வுப் பொதி நாட்டின் உயர் நீதிமன்றத்தின் பூரண
அங்கீகாரத்துக்காக முன் வைக்கப்பட்டது. மூன்று நீதிபதிகளின் தீர்ப்போடு,
தேசிய ரீதியிலான பொதுஜன வாக்கெடுப்புடனும் பாராளுமன்றத்தில்
மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளுடன் மாத்திரமே
அது நடைமுறைக்கிடப்பட முடியும். ஐ.தே.க, சிங்கள உறுமய கட்சி,
ஜே.வி.பி. மற்றும் மகா சங்கத்தினர் அனைவரும் சட்டரீதியான எதிர்ப்பை
தெரிவித்திருந்தனர். ஆகஸ்ட் 24ம் திகதி இன்றைய பாராளுமன்றத்தின்
முடிவுக்கு முன்பதாக வாக்கெடுப்பு நடத்தப்படாவிட்டால்
அதன் தாக்கத்தால் இந்தத் திட்டங்கள் வலிமையிழந்துவிடும்.
சி.உ.க. பொதுஜன முன்னணியினால் நியமனம் செய்யப்பட்ட பிரதம
நீதியரசரின் ஆளுமையை சவால் செய்தது. இறுதியாக தீர்வுப்
பொதியை அனுமதித்து தீர்ப்பு வழங்கியது.
குமாரதுங்கவின் பொதுஜன முன்னணி அரசாங்கம்,
1994ல் ஐ.தே.க. மீதான பரந்த வெறுப்பை சுரண்டுக் கொண்டும்
அவர்களின் உள்நாட்டு யுத்த நடவடிக்கைகளை விமர்சித்துக்
கொண்டும் ஆட்சி பீடம் ஏறியது. பொதுஜன முன்னணி யுத்தத்தை
நிறுத்துவதாகவும் ஜனநாயகத்தை உருவாக்கி வாழ்க்கை
நிலைமைகளை உயர்த்துவதாகவும் உறுதியளித்தது. ஆனால் 1995ல்
விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தைகள் முறிவடைந்த
வேளையில் அரசாங்கத்தின் திட்டங்களை விடுதலைப் புலிகள் ஏற்றுக்
கொள்ளச் செய்வதற்காக "சமாதானத்துக்கான யுத்தம்
ஒன்று" அவசியம் என குறிப்பிட்ட குமாரதுங்க, யுத்தத்தை உக்கிரமாக்கினார்.
1995ல் யுத்தம் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருந்த வேளையில்
முதலாவது அதிகாரப் பரவலாக்கல் பொதி முன்வைக்கப்பட்டது.
1997ல் அது சட்டரீதியான வரைவாக்கப்பட்ட வேளையில், அரசாங்கம்
குறிப்பிடத்தக்க வகையில் அதன் வரையறுக்கப்பட்ட முன்னைய திட்டங்களின்
வலுவைக் குறைத்தது.
கடந்த ஆண்டில் விடுதலைப் புலிகள் குறிப்பிடத்தக்க
இராணுவ முன்னேற்றங்களை கண்டதன் பின்னரே இந்த புதிய சீர்திருத்தத்தில்
மாற்றுத் திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. இந்த ஆண்டின் ஏப்பிரல்
மாதத்தில் முக்கிய இராணுவ தளமான ஆனையிறவு தளத்தின் வீழ்ச்சி
ஒரு உடனடியானதும் ஆழமானதுமான அரசியல் நெருக்கடியை
கொழும்பில் உருவாக்கியுள்ளதுடன், இது விடுதலைப் புலிகள் யாழ்
குடாநாட்டை கைப்பற்றிக்கொள்ளும் விளிம்பிற்கு வந்ததை
தொடர்ந்து மிகவும் மோசமாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து
குமாரதுங்க யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்காக விடுதலைப்
புலிகளுடனான பேச்சுவார்த்தைக்கு சில உயர்மட்ட சக்திகளதும்
இலங்கையின் பெரும் வர்த்தகர்களில் கணிசமான பகுதியினரதும்
அழுத்தத்துக்கு உள்ளானார். பயனளிக்காத ஒரு தொடர் பேச்சுவார்த்தைகளின்
பின்னர், அரசாங்கம் அவசர அவசரமாக புதிய திட்டங்களை
உருவாக்கியது.
ஜூலை 25ம் திகதி ஐ.தே.க.வுடனான பேச்சுவார்த்தை
முறிவடைந்த நிலையிலும், அதிகாரப் பரவலாக்கல் ஓரம் கட்டப்பட்டிருந்த
நிலையிலும் குமாரதுங்க லண்டனுக்கு பறந்தார். இந்தப் பயணம்
மருத்துவ தேவைக்கான ஒரு தனிப்பட்ட பிரயாணமாக சித்தரிக்கப்பட்டாலும்,
தீர்வுப் பொதியை அடுத்த தேர்தலுக்கு முன்னர் முன்வைப்பதற்கான
அழுத்தம் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது
தெளிவாகியுள்ளது.
பேச்சுவார்த்தையின் பண்பு கடந்த வாரம் பிரித்தானிய
அரசாங்கம் அறிவித்த புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின்
மூலம் மறைமுகமாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இது இயற்றப்படுமானால்
இந்த தீர்மானத்தின் மூலம் பிரித்தானியா விடுதலைப் புலிகளை
"பயங்கரவாத இயக்கமாக" பிரகடனப்படுத்துவதன்
மூலம் ஐக்கிய இராச்சியத்தில் அதன் சகலவிதமான நடவடிக்கைகளுக்கும்
தடை விதிக்க முடியும். இந்தப் பயமுறுத்தல் சந்தேகமில்லாமல்
விடுதலைப் புலிகளையும் அதே போல் கொழும்பு அரசாங்கத்தையும்
பேரம்பேசல் மேசைக்கு தள்ளுவதற்கான அழுத்தத்தை வழங்க
பயன்படுத்தப்படும்.
"இலங்கையில் இழக்கப்பட்டு வரும் சந்தர்ப்பங்கள்"
(Missing Opportunities in Sri Lanka)
என்ற தலைப்பில் கடந்த வாரம் வெளியிடப்பட்டுள்ள உலக வங்கி
அறிக்கை ஒன்றில் 1984 தொடக்கம் 1996 வரையான யுத்தச் செலவு
1,831 பில்லியன் ரூபாய்கள் (23 பில்லியன் அமெரிக்க டாலர்) என
கணக்கிட்டுள்ளதுடன் யுத்தம் நிறுத்தப்பட்டால் மாத்திரமே முதலீடு
அதிகரிக்கும் எனவும் சுட்டிக் காட்டியுள்ளது. இந்த யுத்தம்
பொருளாதாரச் சீர்கேட்டை மாத்திரம் உருவாக்கிவிடவில்லை.
ஆனால் இந்தியத் துணைக் கண்டத்தில் இன முரண்பாடுகளும் சில
பிரிவினைவாத இயக்கங்களும் தலைநீட்டிக் கொண்டுள்ள ஒரு
நிலைமையில் அரசியல் மற்றும் சமூக ஸ்திரமின்மையின் பெறுபேராக
அச்சுறுத்தல்களும் வெடித்துள்ளது.
அரசியல் திட்டத்தை மாற்றும் பொதுஜன முன்னணியின்
திட்டத்தின் முழு அமைப்பும் பிற்போக்கான ஜனநாயக விரோத
கொள்கைகளுக்குக் கீழ்ப்படிந்ததாகும். நேற்று வரை பல
மாதங்களாக தீர்வுப் பொதியை வெளியிடுவது தொடர்பாக இடம்பெற்ற
பேச்சுவார்த்தைகள் பகிரங்க ஆய்வுகள் எதுவுமின்றி மூடிய கதவுகளுக்குள்ளேயே
இடம்பெற்றது.
புதிய அரசியல் அமைப்பு சட்டத்தின் கீழ் 1978ல்
நிறைவேற்று அதிகாரத்தை பலப்படுத்த அறிமுகம் செய்யப்பட்ட
நிறைவேற்று ஜனாதிபதி முறை மேலும் ஆறு ஆண்டுகளுக்கு நீடிக்கப்படுவதோடு
குமாரதுங்க ஆறு ஆண்டுகாலம் தொடர்ந்தும் ஆட்சியில் இருப்பதை
சாத்தியமானதாக்கியுள்ளது. இந்தப் பதவியை ஒழித்துக் கட்டும்
வாக்குறுதியுடனேயே அவர் 1994ல் ஆட்சிப் பீடம் ஏறினார். இப்பதவி
யுத்தத்தை முன்னெடுக்கவும் தொழிலாளர், ஒடுக்கப்படும் மக்களின்
ஜனநாயக உரிமைகளை துவம்சம் செய்வதிலும் ஒரு முக்கிய பாத்திரம்
வகித்தது.
உத்தேச அரசியல் அமைப்புச் சட்டம்
அவசரகாலச் சட்டங்களைத் திணிக்கும் அரசாங்கத்தின் வல்லமையையும்
பலப்படுத்தும். தற்சமயம் அவசரகாலச் சட்டப் பிரகடனம்
ஒரு பாராளுமன்றப் பெரும்பான்மை பலத்தின் மூலம்
மாதாமாதம் புதுப்பிக்கப்பட வேண்டும். இது இனி 100 நாட்களாக
நீடிக்கப்படும். யூ.என்.பி. 1979ல் பிரகடனம் செய்ததில் இருந்து
நாட்டின் வடக்கு-கிழக்கு மாகாணங்களில் ஒரு அவசரகால
நிலைமை அமுலில் உள்ளது. 1983ல் தமிழர் எதிர்ப்புக் கலவரங்களைத்
தொடர்ந்து இது நாடு முழுவதற்கும் விஸ்தரிக்கப்பட்டது. 1994ல்
அதிகாரத்துக்கு வந்ததும் குமாரதுங்க இதனை சிறிது காலம்
தளர்த்தினார். இது 1995ல் மீண்டும் வடக்கு-கிழக்கில் அமுல் செய்யப்பட்டது.
1996ல் அவர் மீண்டும் அவசரகால நிலைமையை நாடு முழுவதற்கும்
விஸ்தரித்தார்.
இந்த வருடம் மே மாதத்தில் அரசாங்கம்
ஒரு படுகொடூரமான அவசரகால விதிகளைப் பிரகடனம் செய்ததோடு,
செய்திகளை இருட்டடிப்புச் செய்யும் தணிக்கை விதிகளையும் திணித்தது.
இதன் கீழ் சகல வேலை நிறுத்தங்களும் பொதுக் கூட்டங்களும்
ஆர்ப்பாட்டங்களும் சட்ட விரோதமாக்கப்பட்டன. புதிய
அரசியல் அமைப்புத் திருத்தம் அவசரகால விதிகளையும் அத்தோடு
நாட்டின் படு கொடூரமான பாதுகாப்புச் சட்டத்தையும்,
பயங்கரவாதத் தடைச் சட்டத்தையும் தமிழ் சிங்களத்
தொழிலாளர்களுக்கு எதிராக ஒரே விதத்தில் பயன்படுத்தப்பட்ட
மற்றும் அடக்குமுறைச் சட்டங்களையும் உள்ளடக்கிக் கொண்டிருக்கும்.
புதிய அரசியல் அமைப்புச் சட்டத் திருத்தம்
தமிழர்களுக்கு எதிரான பாகுபாடுகளுக்கு முடிவு கட்டிவிடும்
என்ற குமாரதுங்கவின் வாதத்தை சந்தியில் நிறுத்தும் விதத்தில் 1972ல்
சிறீலங்கா சுதந்திரக் கட்சி லங்கா சமசமாஜக் கட்சி கூட்டரசாங்கத்தினால்
அரச மதமாக பெளத்தத்தை பிரகடனம் செய்யும் சரத்துக்களை
தன்னகத்தே கொண்டுள்ளது. புதிய அரசியலமைப்புச் சட்டம்
அரசினை "பெளத்த மதத்துக்கு முதன்மைத்தானம் வழங்குதல்
வேண்டும்" என்பதோடு பெளத்த மத விவகாரங்களுக்குப்
பொறுப்பான அமைச்சர், பெளத்த மத குருமார் பீடத்தையும்
கலந்தாலோசித்தல் வேண்டும் என்கிறது. மீண்டும் பெளத்த
மதத்துக்கு ஒரு சிறப்புரிமை அரசியலமைப்பு அந்தஸ்த்து வழங்குவதோடு
வலதுசாரி மேலாதிக்கம் கொண்ட பெளத்த பிக்குகளுடன் ஒரு
நேரடி உறவையும் ஸ்தாபிதம் செய்கின்றது. இதன் மூலம் இந்த
அரசியல் தீர்வுப் பொதி, மதப் பாகுபாட்டையும் இனவாதத்தையும்
மேலும் பலப்படுத்தியுள்ளது.
மேலும் இந்த அதிகாரப் பகிர்வு யோசனைகள்
தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு-கிழக்கு
மாகாணங்களுக்கென ஒரு இடைக்கால நிர்வாக சபையை ஸ்தாபிதம்
செய்வதன் மூலம் இனவாதப் பிளவுகளை உக்கிரமாகத் தூண்டிவிடுகிறது.
இந்த சபைக்கான பிரதிநிதிகள் (தேர்தல் மூலம்) தெரிவு செய்யப்படாது,
தற்சமயம் உள்ள இனவாத அடிப்படையிலான கட்சிகள், அமைப்புக்களின்
பிரதிநிதிகளாக ஜனாதிபதியினால் நியமனம் செய்யப்படுவர். முதல்
அமைச்சர் ஒரு தமிழராகவும் முதலாவது பிரதி அமைச்சர் ஒரு
முஸ்லீம் ஆகவும் இரண்டாவது பிரதி அமைச்சர் ஒரு சிங்களவராகவும்
இருப்பர்.
தமிழ் கட்சிகள், காணிகள் சம்பந்தமாக இடைக்கால
சபைக்கு கூடிய அதிகாரங்கள் வழங்க புதிய அரசியலமைப்பு தவறிவிட்டதாக
கண்டனம் செய்துள்ளன. காணி ஒரு இனவாத விவகாரமாகியுள்ளது.
ஏனெனில் 6 தசாப்தங்களுக்கு மேலாக சிங்கள முதலாளி வர்க்கம்
தமிழ் பிராந்தியங்களில் தென் மாகாணங்களின் ஏழை சிங்கள விவசாயிகளை
குடியமர்த்தும் ஒரு கொள்கையைக் கடைப்படித்து வந்துள்ளது.
ஒரு நீண்ட காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ள இக்கொள்கையானது
சில மாவட்டங்களில் சனத் தொகை அமைப்பு முறையை மாற்றி விட்டது.
சிறப்பாக கிழக்கு மாகாணத்தில் தமிழ் கிராமிய ஏழைகளிடையே
ஒரு ஆழமான கசப்புணர்வையும் பதட்டத்தையும் கொழுந்து விட்டு
எரியச் செய்துள்ளது.
ஒரு தொகை முக்கிய விடயங்களில் இந்த சபைகள்
மொத்தத்தில் பெரும்பான்மை வாக்கை மட்டுமன்றி தமிழ், சிங்கள,
முஸ்லீம் சமூகங்கள் ஒவ்வொன்றினதும் பெரும்பான்மையையும்
வேண்டி நிற்கும். சிறுபான்மை சனத்தொகையினரை அப்புறப்படுத்துவதற்கான
நெருக்குவாரத்தை இச்சமூகங்கள் ஒவ்வொன்றினதும் சோவினிஸ்டுகள்
தூண்டிவிட்டுக் கொண்டிருப்பர். வடக்கு- கிழக்கு மாகாணங்களில்
மட்டுமன்றி நாடுபூராகவும் சிங்களவர் பெரும்பான்மையாக
வாழும் பகுதிகளில் இருந்து தமிழர்களையும், தமிழர்களின் கட்டுப்பாட்டுக்கு
உட்பட்ட வடக்கில் இருந்து முஸ்லீம்களையும் சிங்களவர்களையும்
அப்புறப்படுத்தும் ஆபத்து இருந்து கொண்டுள்ளது.
வேறுவார்த்தைகளில் சொன்னால் புதிய ஏற்பாடுகள்
சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு மாறாக அரசியல் வாழ்வில்
இன, மதக் கட்சிகளின் பாத்திரத்தை பலப்படுத்துவதோடு, அவநம்பிக்கையையும்
பதட்டத்தையும் அதிகரிக்கச் செய்யும். இது இன்றுள்ள இனக்குழுப்
பிளவுகளை மேலும் இறுக்கமாக்குவதோடு பால்கன்
நாடுகளைப் போன்ற ஒரு இனக்குழு சுத்திகரிப்புக்கும் இனக்கலவரங்களுக்குமான
நிலைமைகளைச் சிருஷ்டிக்கும்.
|