ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Sri Lankan plantation workers demonstrate for higher wages

இலங்கை தோட்டத் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரி ஆர்ப்பாட்ட பேரணி நடத்தினர்

By M. Thevarajah
29 September 2018

செப்டம்பர் 23 அன்று ஆயிரத்திற்கும் அதிகமான தோட்டத் தொழிலாளர்கள்  ஊதிய உயர்வு கோரி இலங்கையில் தேயிலை உற்பத்தி செய்யப்படும் மத்திய மலையக பகுதியான தலவாக்கலை நகரின் தெருக்களில் இறங்கி போராடினர். கிட்டத்தட்ட அனைத்து தோட்டங்களில் இருந்தும் தொழிலாளர்கள் போராட்டத்தில் பங்குபெற்றனர். இதனால் தலவாக்கலை நகரம் ஸ்தம்பித்து நின்றது. தொழிலாளர்களுக்கு ஆதரவாக சிறு வர்த்தக உரிமையாளர்கள் தங்கள் கடைகளை மூடியிருந்தனர்.

கூட்டு ஒப்பந்தத்தை “அடிமை ஒப்பந்தம்” என கண்டனம் செய்தும் தமக்கு கிடைக்கும் ஊதியம் வாழ்வதற்கு போதாது என்றும் தொழிலாளர்கள் கோஷங்களை எழுப்பினர். தங்களது பிள்ளைகளின் படிப்புக்கு செலவு செய்வது ஒரு புறம் இருக்க, உயிர்வாழ்வதற்கு போதுமான அளவுக்கு சம்பாதிக்க முடியவில்லை அல்லது அவர்களுடைய குடும்பத்தினருக்கு தினம் போதுமான அளவு சாப்பாடு கொடுக்க முடியவில்லை, என்று அவர்கள் கூறினர்.


தலவாக்கலை ஆர்ப்பாட்ட ஊர்வலத்தின் ஒரு பகுதியினர்

ஆர்ப்பாட்ட ஊர்வலத்தைத் தொடர்ந்து தலவாக்கலை நகர சபை மைதானத்தில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு  அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சராக இருக்கும் தேசிய தொழிலாளர்கள் சங்க (NUW) தலைவர் ப. திகாம்பரம் தலைமை தாங்கினார்.

தேசிய தொழிலாளர்கள் சங்கம், மலையக மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணி உட்பட ஏழு தொழிற்சங்கங்கங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மலையக மக்கள் முன்னணி தலைவர் வி. ராதாகிருஷ்ணன் மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசனும் அரசாங்க அமைச்சர்களாக உள்ளனர்.

தொழிற்சங்கங்களை தூக்கிப் பிடிக்கும் முயற்சியாக ஆர்ப்பாட்டத்தில் பேசுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் அழைக்கப்பட்டிருந்தார். தொழிற்சங்க அதிகாரிகள் சொன்னதையே திருப்பிச் சொல்லிய அவர், இலங்கை ஜனாதிபதியும் பிரதமரும் தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான தீர்வு வழங்க தலையிட வேண்டும், என்றார்.

இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது, தோட்டத் தொழிலாளர்களுக்கு ஏற்புடைய ஊதியத்திற்கு போராடுவதற்காக அல்ல. மாறாக வாழ்க்கை செலவு அதிகரிப்பு மற்றும் சமூக நிலமைகள் சீரழிவின் மத்தியில், தொழிலாளர்களின் வறிய-மட்டத்திலான ஊதியம் சம்பந்தமாக அதிகரித்து வரும் கோபத்தை திசை திருப்பி விடுவதற்காகவே இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தோட்டக் கம்பனிகளுக்கும் அரசாங்கத்துக்கும் சலுகைகள் கொடுக்குமாறு அழுத்தம் கொடுக்க முடியும் என்ற மாயையை பரப்ப தொழிற்சங்க அதிகாரிகள் முயன்றனர். எவ்வாறெனினும் திகாம்பரம், ராதாகிருஷ்ணன் மற்றும் மனோ கணேசனும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருந்துகொண்டு, சர்வதேச நாணய நிதியம் ஆணையிடும் சிக்கன நடவடிக்கைகளை ஆதரித்து வருகின்றனர்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான இரண்டு வருட கூட்டு ஒப்பந்தம் அக்டோபரில் காலாவதியாகிறது. பிரதான தோட்டத் தொழிற் சங்கங்களான இலங்கைத் தொழிலாளர்கள் காங்கிரஸ் (இ.தொ.கா), லங்கா ஜாதிக தோட்டத் தொழிலாளர் சங்கம் (LJEWU) மற்றும் பெருந்தோட்ட தொழிற் சங்க கூட்டுக் கமிட்டியும், தோட்டக் கம்பனிகளுடன் மூடிய கதவுகளுக்குள் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளன. தோட்டக் கம்பனிகளுக்கும் தொழிற் சங்கங்களுக்கும் இடையிலான இந்த இரண்டு வருட கால கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நடவடிக்கை 1992 முதல் வழக்கத்தில் இருந்து வருகிறது.

கடந்த ஞாயிறு அன்று ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்த ஏழு தொழிற்சங்கங்கள், வழக்கமாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதில்லை. அவை எப்போதும் ஏனைய தொழிற்சங்கங்கள் கம்பனிகளுடன் செய்துகொள்ளும் இரகசிய உடன்படிக்கைகளை அங்கீகரித்தே வந்துள்ளன. இந்த முறை, தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் 1,000 ரூபா நாள் சம்பள கோரிக்கையை மட்டுப்படுத்தி சிதறடிப்பதற்காகவே “நியாயமான” ஊதியம் என கூறப்படுவதைக் கோருகின்றன. தொழிலாளர்களின் 1,000 ரூபா கோரிக்கையானது தற்போதைய 500 ரூபா நாள் சம்பளத்தை 100 சதவீதம் உயர்த்தக் கோருவதாகும். தற்போது ஒரு அமெரிக்க டொலர் 172 ரூபாயாகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து கிட்டத்தட்ட 10 சதவீத அளவுக்கு ரூபாயின் மதிப்பு குறைந்துள்ளது.

கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக, தோட்டக் கம்பனிகளுக்கும் அரசாங்கத்திற்கும் எதிராகவும் தொழிற்சங்கங்களை மீறியும் பல்வேறு போராட்டங்கள் வெடித்திருக்கின்றன. கடந்த ஆகஸ்ட் மாதம் 1,000 ரூபா நாள் சம்பளம் கோரி, தலவாக்கலையில் இருந்து 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அக்கரபத்தனையில் வேவர்லி மற்றும் கிலாஸ்கோ தோட்டங்களில் இரண்டு தொழிலாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினர். அவர்களுக்கு ஆதரவாக அப்பகுதியில் இருந்து கிட்டத்தட்ட 2,000 தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர்.

தொழிலாளர்களின் கோரிக்கை சம்பந்தமாக நடவடிக்கை எடுப்பதாக போலியாக கூறிக்கொண்ட ஒரு உள்ளூர் மலையக மக்கள் முன்னணி தலைவரால் அந்த வேலைநிறுத்தம் தடம்புரளச் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து வாழ்க்கைச் செலவு உயர்வுக்கு எதிராக அக்கரபத்தனையில் டொரிங்டன் தோட்டத்திலும் டிக்கோயாவில் டில்லரி தோட்டத்திலும் போராட்டங்கள் இடம்பெற்றன.

கடந்த ஞாயிறு ஆர்ப்பாட்டத்தின்போது, “தோட்டக் கம்பனிகள் நியாயமான ஊதிய உயர்வு வழங்க மறுத்தால், நாங்கள் கம்பனிகளை விரட்டிவிட்டு தோட்டங்களை தொழிலாளர்களுக்கு ஒப்படைத்துவிடுவோம்” என்று திகாம்பரம் அறிவித்தார். “புகையிரத ஊழியர்கள் மற்றும் தபால் தொழிலாளர்களதும் ஊதியக் கோரிக்கைகளைத் தீர்ப்பதற்கு ஜனாதிபதி சிறிசேன தலையிட்டதைப் போல், தோட்டத் தொழிலாளர்ளின் ஊதியப் பிரச்சனையை தீர்ப்தற்கு இந்த அரசாங்கம் தலையிடவேண்டும்” என்று மலையக மக்கள் முன்னணி தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தோட்டத் தொழிலாளர்கள் மீது தங்கள் அதிகாரத்த்தை தக்கவைத்துகொள்ள ஏக்கத்துடன் முயலும் இரண்டு தொழிற்சங்க தலைவர்களின் பொய்களே இவை. அதே நேரம், அவர்கள் அமைச்சர் பதவிகளை தக்கவைத்துகொண்டு தொழிலாளர்கள் மீதான தாக்குதல்களையும் ஆதரிக்கின்றனர்.

நியாயமான ஊதிய உயர்வு கொடுக்காவிட்டால் கம்பனிகளை அபகரிப்பதாக திகாம்பரம் விடுக்கும் அச்சுறுத்தலானது முற்றிலும் வெற்று வாய்ச்சவடால் ஆகும். சலுகைகள் வழங்குவதற்கு மாறாக, சில தோட்டங்களில் கம்பனிகள் வருவாய்-பகிர்வு எனப்படுவதை திகாம்பரத்தின் NUW உட்பட தொழிற்சங்கங்ளின் ஆதரவுடன் நடைமுறைப்படுத்த ஆரம்பித்துள்ளன.

இந்த சீரழிக்கும் முறைமையின் கீழ், தொழிலாளர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பங்களுக்கு சுமார் 1,000 தேயிலைச் செடிகள் பராமரிப்பதற்கு ஒதுக்கப்படுகின்றன. அவர்கள் கம்பனியின் தொழிற்சாலைக்கு அனைத்து அறுவடைகளையும் கொடுக்க வேண்டும். பின்னர் கம்பனி தனது இலாபத்தை எடுத்துக்கொண்டு வழங்கப்பட்ட கருவிகள், உரம் மற்றும் பிற செலவுகளை கழித்துக்கொண்டு தொழிலாளர்களின் “பங்கை” கொடுக்கும்.

இலங்கை ஜனாதிபதி தலையிட வேண்டும் என்ற இராதாகிருஷ்ணனின் கோரிக்கையானது தோட்டத் தொழிலாளர்களை இருட்டடிப்புச் செய்யும் முயற்சியாகும். உண்மையில் அவருடைய அரசாங்கம், ஏற்கனவே புகையிரதம் மற்றும் தபால் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டங்கள் மீது கோடூரமான பொலிஸ் தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டுள்ளது. இந்த போராட்டங்களில், சிறிசேன தொழிலாளர்களின் கோரிக்கைகளை “கவனத்தில்” எடுப்பார் எனும் பயனற்ற வாக்குறுதிகளைத் தொடர்ந்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தை முடித்துகொண்டன.

இந்த வாய்ச்சவடாலுக்குப் பின்னால், தோட்டத் தொழிற்சங்கங்கள் இதே போன்ற தாக்குதல்களுக்கான அடித்தளத்தை உருவாக்கி வருவதோடு, கம்பனிகளின் இலாபத்தை பெருக்கும் வருமான-பகிர்வு முறைமையை பரந்த அளவில் நடைமுறைப்படுத்தவும் தொழிலாளர்களின் குறைந்தபட்ச உரிமைகளையும் நலன்புரி சேவைகளையும் அழிப்பதற்கும் ஆதரவளிக்கின்றன.

கூட்டு ஒப்பந்த கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ள பிரதான தொழிற்சங்கமான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் (இ.தொ.கா.) தலைவர் முத்து சிவலிங்கம், ஆர்ப்பாட்டம் செய்த தொழிலாளர்களை வெளிப்படையாக கண்டனம் செய்துள்ளார். “ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களால் கூலியை அதிகரிக்கமுடியாது. பெருந்தோட்டத் தொழிற் துறையை அபிவிருத்தி செய்வது பற்றிய கலந்துரையாடலில் நாங்கள் ஈடுபடவேண்டும். அதுவே இறுதியில் சம்பளத்தை அதிகரிக்கும்,” என்று அவர் அறிவித்தார்.

கடந்த மாதம் கூட்டு ஒப்பந்த கலந்துரையாடலின் போது, எந்தவொரு ஊதிய அதிகரிப்பையும் வழங்க வெளிப்படையாக கம்பனிகள் மறுத்துவிட்டன. மாறாக “தேயிலை தொழிற்துறையைப் பாதுகாக்குமாறு” தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுத்தன. தொழிற்சங்கங்கள், தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராக கம்பனிகளுடன் கூட்டாக செயற்படுகின்றன என்பதை முத்து சிவலிங்கத்தின் கருத்து வெட்ட வெளிச்சமாக காட்டியுள்ளது.

1,000 ரூபாய் நாள் சம்பளம் தனது ஒரு நாள் செலவுகளுக்கே போதுமானதல்ல, என எடின்பரோ தோட்டத்தின் ஒரு தொழிலாளியான எம். யோகேஸ்வரன், கடந்து ஞாயிறு போராட்டத்தின் போது உலக சோசலிச வலைத் தள நிருபர்களிடம் கூறினார்.

“ஒரு கிலோ அரிசி 100 ரூபா, ஒரு கிலோ மா 100 ரூபா. ஒரு தேங்காய் 70 அல்லது 80 ரூபாய். எரிவாயு மற்றும் சீனி விலைகள் கூட அண்மையில் அதிகரித்துள்ளன. ஆனால் இந்த தொழிற்சங்கங்கள் “நியாயமான” ஊதிய “உயர்வை” மட்டுமே கேட்கின்றன.

“தொழிற்சங்கங்கள் கம்பனிகளுடன் ரகசியப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுவருவதுடன் அவை என்ன கோரின என்று நமக்கு சொல்ல மறுக்கின்றன. அவர்கள் கடந்த முறை செய்ததைப் போன்று மீண்டும் எங்களை அவர்கள் ஏமாற்றுவார்கள். எங்களுடைய கோரிக்கைகளுக்காக போராடுவதற்கு தொழிற்சங்கங்கள் தயாராக இல்லை ஆனால் அவர்களுடைய சொந்த வரப்பிரசாதங்களுக்கே முயற்சிக்கின்றன.”

வருவாய்-பகிர்வு பற்றியும் அவர் கவலை தெரிவித்தார். “நான் நினைக்கிறேன் இந்த திட்டம் தொழிலாளர்களுக்கு ஆபத்தானது. நாங்கள் ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி மற்றும் ஏனைய சமூக நலன் வசதிகளையும் இழந்து விடுவோம்” என்று கூறிய அவர், பிள்ளைகள் உட்பட அனைத்து குடும்பங்களும் தோட்டவேலை செய்யவேண்டும், என எச்சரித்தார். “இது எங்கள் பிள்ளைகளின் கல்வியை படுமோசமாகப் பாதிக்கும். இந்த முறைமையை தோற்கடிக்க நாம் ஏதாவது செய்யவேண்டும்.”

தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமான நடவடிக்கை குழுக்களை கட்டியெழுப்புவதன் மூலம் ஏற்றுக்கொள்ளக் கூடிய சம்பளத்திற்கான போராட்டத்தை தங்களது கைகளில் எடுக்க வேண்டும், அத்துடன் சோசிலச வேலைத் திட்டத்திற்காகவும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்காகவும் முன்னெடுக்கும் பரந்த போராட்டத்தின் பாகமாக பெருந்தோட்டங்களை தொழிலாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப் போராட வேண்டும், என உலக சோசலிச வளைத் தள நிருபர்கள் விளக்கினர்.

இந்த கலந்துரையாடலை கேட்டுக்கொண்டிருந்த அதே தோட்டத்தைச் சேர்ந்த மற்றொரு தொழிலாளியான ஆர். நாகேந்திரன் கூறியதாவது: “அரசாங்க அமைச்சர்களாக இருந்துகொண்டு எங்களுடைய உரிமைகளுக்காக இந்த தொழிற்சங்க தலைவர்கள் போராட முடியும் என்று நாங்கள் நம்பவில்லை. அவர்கள் தங்களது வரப்பிரசாதங்களைப் பாதுகாப்பதற்காக தொழிலாளர்களைப் பிளவுபடுத்துகின்றனர். நடவடிக்கை குழுக்கள் அமைப்பதைப் பற்றி எங்களிடம் ஒருவர் பேசுவது இதுதான் முதல்முறை. அது தொடர்பான கலந்துரையாடலுக்காக எங்களுடைய தோட்டத்துக்கு வருமாறு நாங்கள் உங்களை அழைக்க விரும்புகிறோம்.

அக்கரபத்தனை, ஹென்போல்ட் தோட்டத்தைச் சேர்ந்த எஸ். ரவிசந்திரன், “எங்களுக்கு சம்பள உயர்வு வேண்டும், அதனால்தான் நாங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோம். ஆனால் எங்களுக்கு தொழிற்சங்க தலைவர்கள் மீது நம்பிக்கையில்லை. இந்த போராட்டத்தை தொடர்வதற்காக எங்கள் தோட்டத்தில் அடுத்த வாரம் நாங்கள் ஒரு ஆர்ப்பாட்டத்தினை ஏற்பாடு செய்யவிருக்கிறோம்,” எனக் கூறினார்.