Print Version|Feedback
Watch: David North interviewed on Sri Lanka’s English-language Channel Eye TV
இலங்கையின் ஆங்கில மொழி Channel Eye தொலைக்காட்சி டேவிட் நோர்த்தை பேட்டி கண்டது
10 October 2018
உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரும் அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியத் தலைவருமான டேவிட் நோர்த் இலங்கையில் கடந்த வாரத்தில் கொழும்பில் பொதுக் கூட்டங்களிலும் கண்டியில் உள்ள பேராதனை பல்கலைக்கழகத்திலும் உரைகள் நிகழ்த்தினார். ஏராளமானோர் பங்குபெற்ற இந்த நிகழ்வுகள் நான்காம் அகிலத்தின் ஸ்தாபகத்தின் எண்பது ஆண்டுகள் நிறைவையும், பின்னாளில் இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியாக ஆன புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் ஸ்தாபிக்கப்பட்ட 50 ஆண்டுகள் நிறைவையும் கொண்டாடும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
அக்டோபர் 8 அன்று இலங்கையின் மிகவும் பிரபலமான ஆங்கில மொழி தொலைக்காட்சி காலை நிகழ்ச்சியான “Rise and Shine” இல் நான்காம் அகிலத்தின் 80 ஆண்டுகள் குறித்து நோர்த் கலந்துரையாடினார். ஷரோன் மஸ்காரென்ஸ் மற்றும் வருண சோலங்க ஆராச்சி ஆகியோர் நேர்காணல் செய்தனர்.
டேவிட் நோர்த் நேர்காணல், தமிழ் துணைத் தலைப்புகளுடன்
R&S: இப்போது நாம் நிகழ்ச்சியின் கடைசிப் பகுதிக்கு வந்திருக்கிறோம். நீங்கள் வரலாற்றில் ஆர்வம் உள்ளவர்களாக இருந்தால், இது நீங்கள் கவனமாக, மிகக் கவனமாக உங்கள் கவனத்தை செலுத்த வேண்டியது இந்தப் பகுதிக்காகும்; ரஷ்யாவில் அக்டோபர் புரட்சியில் லெனினுக்கு இணையான தலைவராய் திகழ்ந்த லியோன் ட்ரொட்ஸ்கியால் ஸ்தாபிக்கப்பட்ட நான்காம் அகிலத்தின் எண்பதாவது ஆண்டு நிறைவையும் சோசலிச சமத்துவக் கட்சியின் ஐம்பதாவது ஆண்டு நிறைவையும் கொண்டாடும் விதமாக சோசலிச சமத்துவக் கட்சி இலங்கையில் உரையாற்ற அழைத்திருக்கின்ற ஒருவர், வரலாற்றின் படிப்பினைகளை குறித்தும் சோசலிசத்துக்கான போராட்டம் குறித்தும் இன்று நம்முடன் கலந்துரையாட இருக்கிறார். இன்று நம்முடன் கலந்துரையாடவிருப்பவர் நான்கு தசாப்தங்களாக சர்வதேச சோசலிச இயக்கத்தில் ஒரு முன்னணிப் பாத்திரம் வகித்து பிரமாண்டமான அனுபவ வளம் கொண்டிருப்பவராவார். உலக சோசலிச இயக்கத்தின் வரலாற்றில் சர்வதேச அளவில் மிகவும் பிரசித்தமான ஒரு கட்சியைச் சேர்ந்த அவர் எழுதிய, நாம் காக்கும் மரபியம், லியோன் ட்ரொட்ஸ்கியைப் பாதுகாத்து, மற்றும் ரஷ்யப் புரட்சியும் முடிவடையாத இருபதாம் நூற்றாண்டும் மற்றும் இன்னும் ஏராளமான புத்தகங்கள் சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கின்றன. அவர் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவருமாவார். பேராதனை மற்றும் கொழும்பில் நடந்த கூட்டங்கள் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளுக்குப் பின்னர் இன்று டேவிட் நோர்த் எம்முடன் கலந்துரையாட நமது அரங்கத்திற்கு வந்திருக்கிறார், எங்களுக்கு நேரம் ஒதுக்கியதற்கு மிகவும் நன்றி.
DN: என்னை கலந்துரையாட அழைத்ததற்கு நன்றி.
R&S: உங்களுடன் கலந்துரையாடுவதில் மகிழ்ச்சி. நன்றி. இந்த விஜயம் இதுவரை எப்படி போய்க் கொண்டிருக்கிறது?
DN: மிக உற்சாகமூட்டுவதாக இருந்திருக்கிறது. இதுவரை இரண்டு கூட்டங்கள் நடந்திருக்கிறது, கண்டியில் உள்ள பேராதனை பல்கலைக்கழகத்தில் ஒன்றும் நேற்று கொழும்பில் நடந்த ஒரு கூட்டத்திலுமாய் இரண்டு உரைகள் நிகழ்த்துவதற்காக நான் அழைக்கப்பட்டிருந்தேன். அக்கூட்டங்களில் ஏராளமானோர் பங்குபெற்றனர், பங்குபெற்றவர்கள் மத்தியில் பெரும் ஆர்வமும் உற்சாகமும் இருந்தது. ஆகவே இந்த உரைகள் நிகழ்த்துவது உற்சாகமூட்டுவதாய் இருந்தது.
R&S: நன்று, 80வது ஆண்டுதினத்தைக் கொண்டாடும் நேரத்தில், சோசலிசத்துக்கான போராட்டம் இன்று எப்படி இருக்கிறது, அன்றைய நாட்களில் எப்படி இருந்தது. இந்த காலகட்டத்திலான ஒட்டுமொத்தமான பரிணாமத்தை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?
DN: உண்மையில் இது வெளிப்படையாகவே மிகவும் சிக்கலானதாகும். ட்ரொட்ஸ்கி 1938 இல் நான்காம் அகிலத்தை ஸ்தாபித்தார். ஸ்ராலினின் தலைமையிலான சோவியத் ஒன்றியத்தின் சீரழிவுக்கும் சோவியத் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தினால் மார்க்சிச சர்வதேசியவாதத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் காட்டிக்கொடுக்கப்பட்டதற்கும் எதிராக அவர் நடத்திய போராட்டத்தின் உச்சகட்டமாக அது அமைந்திருந்தது. ஸ்ராலின் புரட்சிக்கு புதைகுழி தோண்டுபவராக இருந்தார் என்பதும் அதிகாரத்துவமானது, இறுதியில் சோவியத் ஒன்றியத்தின் அழிவுக்கு இட்டுச் செல்லக் கூடும் என்பதும் அவரது அடிப்படையான கருத்தாக்கங்களில் இடம்பெற்றிருந்தன. இது ஒரு சிறுபான்மை நிலைப்பாடாக இருந்தது. கடுமையான ஒடுக்குமுறை நிலைமைகளின் கீழ் அவர் இதற்காகப் போராடினார். இறுதியில் அவரே கூட அதிகாரத்துவத்தினால் கொல்லப்பட்டார். தொழிலாள வர்க்கத்தில் புரட்சிகரத் தலைமைக்கான நெருக்கடிதான் மனித குலத்தின் அடிப்படைப் பிரச்சினையாக இருந்தது என நான்காம் அகிலம் ஸ்தாபிக்கப்பட்டபோது அவர் கூறினார். இந்த நாட்டிலும் கூட பாரிய சோசலிச இயக்கங்கள் இருந்தன என்ற உண்மையையும் தாண்டி சோசலிச இயக்கம் சந்தித்த தலைவிதியினால் அது பின்னர் ஊர்ஜிதம் செய்யப்பெற்றது. லெனினும் ட்ரொட்ஸ்கியும் போராடி வந்திருந்த புரட்சிகர சர்வதேசியவாதத்தின் கோட்பாடுகளைக் கைவிட்டதன் ஒரு விளைவாக அந்த சோசலிச இயக்கங்கள், இறுதியில் தோற்கடிக்கப்பட்டன. இன்று நாம் பல வகையிலும் 1930களை ஒத்திருக்கின்றதொரு காலகட்டத்தில் இருக்கிறோம். 1938 பாசிசத்தின் வளர்ச்சி, போரின் உடனடியான அச்சுறுத்தல், எதேச்சாதிகாரவாதம், பொருளாதார நெருக்கடி ஆகியவற்றின் ஒரு காலகட்டமாக இருந்தது; இன்று உலகத்தில் நிறைய விடயங்கள் மாறி விட்டிருக்கின்ற போதிலும் கூட, நிலைமையை எடுத்துப் பார்த்தீர்களானால், நிச்சயமாக நாம் ஒரு உலகப் பொருளாதார நெருக்கடியின் மத்தியில் இருக்கிறோம், இது பாரிய எண்ணிக்கையிலான உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரங்கள் மோசமடைந்து செல்வதில் வெளிப்பட்டிருக்கிறது. சர்வதேச புவி அரசியல் மோதல்கள் தீவிரமாய் அதிகரித்துச் செல்லும் ஒரு நிலைக்கு நாம் முகம்கொடுத்திருக்கிறோம், அவை போரின் அபாயத்தையும் தங்களுடன் கொண்டிருக்கின்றன; அத்துடன் உலகெங்கும் தீவிரமான வலதுசாரி இயக்கங்கள் மேலெழுவதை நாம் காண்கின்றோம். இதற்கு உதாரணமாக அமெரிக்காவில் ட்ரம்ப் அதிகாரத்துக்கு வந்தமை, ஜேர்மனியில் நவ-நாஜி இயக்கங்கள் புத்துயிர் பெற்றமையை காணலாம்.
எதேச்சாதிகாரத்தின் மீளெழுச்சி குறித்து பெரிய அளவில் விவாதங்கள் நடக்கின்றன. ஆனாலும் அதற்கான அடிப்படைக் காரணம் எங்கே அமைந்திருக்கிறது என்றால் முதலாளித்துவ அமைப்புமுறையின் நெருக்கடியில், சமூக சமத்துவமின்மையின் திகைப்பூட்டும் வளர்ச்சியில் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்காகப் பேசுவதாக கூறிக் கொள்வோர் ஒரு உண்மையான சோசலிச வேலைத்திட்டத்தை முன்னெடுக்கத் தவறியதில் அமைந்திருக்கிறது. உண்மையில் வரலாற்றின் படிப்பினைகள் குறித்து பேசுவதற்காக நான் இங்கே அழைக்கப்பட்டேன். இத்தகையதொரு காலகட்டத்தில் வரலாற்றில் இருந்து நாம் என்ன கற்றுக் கொள்ள வேண்டும் என்று வரலாறு நமக்கு சொல்லித் தருகிறது. நடந்து முடிந்ததைப் பற்றி கவலைப்படுவானேன் என்று கூறக் கூடிய பலர் இருக்கிறார்கள்தான். அரசியல் முற்றிலும் நடைமுறைவாதப்பட்டதாக இருக்கிறது. ஆனால், சோசலிசத்துக்கான போராட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கான அரசியலை கவனத்துடன் நடத்த வேண்டுமென்றால், அதற்கு நீங்கள் அரசியலின் படிப்பினைகளைக் கற்றாக வேண்டும் என்பதே எங்களது பார்வையாகும். அதிலும் இன்று உலகெங்கிலும் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் சோசலிசத்திற்கான ஆதரவு ஒரு மிகப்பெரும் மீளெழுச்சி கண்டு வருவதை நாம் பார்க்கிறோம். பல காரணங்களினால் அவர்கள் சென்ற நூற்றாண்டின் வரலாற்று அனுபவங்களைக் குறித்த ஒரு அடிப்படை அறிவு பெறுவதிலிருந்து தடுக்கப்பட்டிருக்கின்றனர். இந்த நாட்டிலும் கூட, அதாவது, இங்கே ஒரு சக்திவாய்ந்த சோசலிச இயக்கம் இருந்திருந்தது, அப்படியிருந்தும் மற்ற பல நாடுகளில் போலவே இங்கும் நாசகரமான பின்விளைவுகளைக் கொண்ட சந்தை மேலாதிக்கம், தாராளவாதப் பொருளாதாரக் கொள்கைகளின் மேலாதிக்கம் இருந்து வந்திருக்கிறது. இப்போது சோசலிசத்தின் ஒரு மீளெழுச்சி நடைபெற்று வருகிறது, சில மாபெரும் வரலாற்று அனுபவங்களைத் திறனாய்வு செய்வதும் அந்த அடிப்படையில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு பிரதிநிதித்துவம் செய்கின்ற சர்வதேச சோசலிச இயக்கத்தின் ஒரு மறுகட்டுமானத்திற்கு அடித்தளங்களை அமைப்பதுமே எனது விரிவுரைகளின் நோக்கமாய் இருந்தது.
R&S: குறிப்பிட வேண்டியதொரு விடயம் என்னவென்றால், மற்ற சில செய்திகள் சொல்கின்றன, இளைஞர்கள் மத்தியில், குறிப்பாக அமெரிக்காவிலும் ஐக்கிய இராச்சியத்திலும், இந்த தொழிற்சங்கங்களில் சில அவற்றின் ஆதரவை தொலைத்து விட்டிருக்கின்றன என்று. அத்துடன் அவை தமது குரலையும் தணித்துக் கொள்கின்றன, அத்துடன் தொழிலாளர்கள் ஏதேனும் வெற்றிகளை, அதாவது அவர்களது வாழ்க்கைத் தரங்களில் பெற விரும்பும்போதும் கூட அவை முறையாகக் குரல் கொடுப்பதில்லை. குறிப்பாக அந்த நாடுகளில் உள்ள அரசியல் பொறிகள், குறிப்பாக அந்த நாட்டிலானவை, குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அது விடயத்தில் உங்கள் சிந்தனைகள் மற்றும் யோசனைகள் என்ன?
DN: நன்று, அதை ஒரு விரிவான அர்த்தத்தில் வைத்துப் பார்க்க விரும்புகின்றேன், இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய தொழிலாள வர்க்க அமைப்புகளான தொழிற்சங்கங்கள் மற்றும் பல்வேறு சோசலிச கட்சிகள் எல்லாமே ஏதோ ஒருவகையில் ஒரு தேசியப் பொருளாதாரக் கொள்கையின் கட்டமைப்புக்குள்ளாக வேலைசெய்வதாகவே நான் கருதுகிறேன். நாம் உலகளாவிய பொருளாதாரத்தின் ஒரு உலகளாவிய சமூகத்தில் வாழ்கிறோம். ஒரு காலத்தில் மேலெழுந்து கொண்டிருந்த தொழிற்சங்கங்கள், இன்று அந்த நிலையும் கூட இல்லை, அந்த மேலெழுச்சி சமயத்திலும் கூட, எப்போதோ காலம்கடந்து விட்டிருந்த தேசிய அரசின் கட்டமைப்புக்குள் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கே முனைந்தன. ஒரு உலகளாவிய மூலோபாயம் உங்களிடம் இல்லாமல் தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்காக உங்களால் போராட முடியாது. ஒரு சர்வதேசரீதியாக ஒருங்கிணைந்த பொருளாதாரத்தில் உலகெங்கிலுமிருக்கும் தொழிலாளர்களை ஒருவர் எவ்வாறு ஐக்கியப்படுத்த முடியும்? ஆக, நான்காம் அகிலம் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு சர்வதேச மூலோபாயத்தைக் கொடுக்கிறது என்பதுதான் துல்லியமாக அதன் அடிப்படை அரசியல் அடித்தளமாக இருக்கிறது. சோசலிசத்திற்கான போராட்டம் தேசியப் போராட்டமல்ல. அது சர்வதேசப் போராட்டம். அதற்கு தேசியப் பாதை ஏதுமில்லை. தேசியப் பாதையானது தவிர்க்கவியலாது வலதுசாரி அரசியலுக்கு, அதாவது தொழிலாளர்களை தமது சொந்த ஆளும் உயரடுக்குகளுக்கு பின் கொண்டுவரும் முயற்சியிலான வர்த்தகப் போர்களுக்கு இட்டுச் செல்கிறது, அது போருக்கான பாதையாகும். ஆக, ஒன்று தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதற்கான ஒரு சர்வதேச சோசலிசக் கொள்கையை நாம் கொண்டிருக்க வேண்டும், இல்லையேல் தேசிய அரசுகளுக்கு இடையிலான சண்டை மற்றும் போர் என்ற முதலாளித்துவக் கொள்கையே நம்மிடம் மிஞ்சும் என்பது தான் இன்று ஒரே தெரிவாக இருக்கிறது.
R&S: நல்லது. இதற்கான காரணமாக நீங்கள் கூறுவது, தொழிலாள வர்க்கம் அதன் ஆரம்பகால தலைவர்களில் இருந்து விலகி மாறுபட்ட புதிய வளரும் தலைவர்களை நோக்கிச் செல்கின்றது என்பதுதானே. ஆக, அதற்கு என்ன காரணம் இருக்க முடியும்? இது ஆளுமைப்பண்புகளா அல்லது வேறேதேனுமா?
DN: மார்க்சிஸ்டுகளான நாம் இறுதிஆய்வில் புறநிலைக் காரணங்கள் என்ன என்பதில்தான் எப்போதும் அக்கறை கொள்கிறோம். தனிநபர்கள் மீது கவனத்தை செலுத்தி, இந்த மனிதர் மோசமானவர் அந்த மனிதர் மோசமானவர் என்று ஒருவர் கூறலாம். ஆனால் இறுதியில் உண்மையான பிரச்சினைகள், பொருளாதார ஒழுங்கமைப்பின் தவிர்க்கவியலாத வர்க்க நலன்களிலேயே கண்டுகொள்ளலாம்; ஒரு காலகட்டத்தில், ஒரு சமூக சீர்திருத்தத்திற்கான காலகட்டத்தில், ஆளும் உயரடுக்கினர் சற்று முற்போக்கான ஆளுமைகளை கொண்டுவரலாம், அதற்கு பெரும்பகுதி காரணம் அவர்கள் தொழிலாள வர்க்கத்தின் ஒரு எழுச்சியைக் குறித்து அஞ்சுவதே ஆகும். ஆனால் ஒரு பொருளாதார நெருக்கடியின் காலகட்டத்தில் முதலாளித்துவத்திற்கு எந்த முற்போக்கான மாற்றுகளையும் முன்வைப்பதற்கு இயலுவதில்லை, அவர்கள் ட்ரம்ப் போன்ற ஆளுமைகளைத் தோண்டியெடுக்கிறார்கள், நவ-நாஜி இயக்கங்களைத் தோண்டியெடுத்து மேலமர்த்துகிறார்கள். இதுவும் சென்ற நூற்றாண்டின் வரலாற்று அனுபவத்தில் இருந்து நாம் எடுத்துக் கொள்ளக் கூடிய ஒரு படிப்பினை என்று கூறுகிறேன். ஆகவே இந்த முறை அந்த அனுபவத்தை மீண்டும் நடைபெறுவதற்கு நாம் அனுமதிக்க முடியாது, ஏனென்றால் பின்விளைவுகள் மேலும் பேரழிவுகரமானதாக இருக்கும், இன்றைய உலகப் போர் என்பது அணு ஆயுதங்களுடனான உலகப் போராகும், ஆகவே போருக்கு எதிராக ஒரு போராட்டம் இருக்கப் போகிறதென்றால் அதற்கு உலகெங்குமான தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவது அவசியமாயிருக்கும்.
R&S: இது, உங்களின் [ரஷ்யப் புரட்சியும்] முடிவுறாத 20ஆம் நூற்றாண்டும் புத்தகம். ஆனால் என்னைப் போன்றவர்களுக்கு எல்லாமே இன்று முடிந்து விட்டிருப்பதைப் போலத்தான் தென்படுகிறது. குறிப்பான தரவுகளைக் கொண்டு கேட்பதாயிருந்தால், சீனா மாதிரியான ஒரு நாட்டை எடுத்துக் கொண்டீர்களானால், அவர்கள் வளர்ச்சி-குறைந்த நாடுகளில் முதலீடு செய்கிறார்கள் கடனுதவி அளித்து ஆதரிக்கிறார்கள், பின் நீங்கள் அந்த நிதியளிப்புகளை ஒருவகையான சிக்குபொறிகளாகக் காண்கிறீர்கள். இவை அனைத்தையும் ஒரு வட்டமாக பூர்த்திசெய்தால் சீனா ஒரு ஏகாதிபத்திய அரசாகவே தெரிகிறது. நீங்கள் இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
DN: வரலாற்றின் பிரச்சினைகள் ஏன் மிக முக்கியமானவை என்பதற்கான காரணங்களில் இதுவும் குறிப்பாக, நீங்கள் கேட்ட இந்தக் கேள்வியையும் காரணங்களில் ஒன்றாகக் கூறலாம். சீன சோசலிச இயக்கத்தின் நெடிய வரலாற்றின், சீனப் புரட்சியின் முரண்பாடுகளின் கட்டமைப்புக்குள்ளாக நிறுத்திப் பார்க்காமல், இன்று சீனாவில் இருக்கின்ற நிலைமைகளை ஒருவர் சரியாகப் புரிந்து கொள்ள முடியும் என்று நான் கருதவில்லை. உண்மை என்னவென்றால் சீனப் புரட்சியின் மூலோபாயம் குறித்த பிரச்சினை நான்காம் அகிலத்தின் அபிவிருத்தியில் ஒரு முக்கிய பிரச்சினையாக இருந்தது. நான்கு வர்க்கக் கூட்டு மற்றும் தனியொரு நாட்டில் சோசலிசம் ஆகிய ஸ்ராலினிசத் தத்துவங்கள் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆழமான நோக்குநிலை பிறழ்வுக்கும், ஒரு தொடர் பேரழிவுகரமான தோல்விகளுக்கும், விவசாயிகளின் நோக்குநிலைமாற்றத்திற்கும் இட்டுச் சென்றன; ஒரு பெரிய கதையை சுருக்கமாகச் சொல்வதானால், குறிப்பிட்ட நிலைமைகளின் கீழ் மாவோயிச ஆட்சியை முதலாளித்துவப் பொருளாதாரத்திற்கு மாற்றியமை, மிகச் செறிந்த பொருளாதார வளர்ச்சியை உருவாக்கியது, ஆனால் 80 அல்லது 90 வருடங்களுக்கு முன்பாக சீனாவின் பரந்த மக்கள் முகம்கொடுத்த அதே அடிப்படை வரலாற்றுப் பிரச்சினைகளுக்கே இப்போதும் அவர்கள் முகம்கொடுத்து நிற்கின்றனர். ஏகாதிபத்தியத்தின் யதார்த்தத்தை சீனா எவ்வாறு கையாளப் போகிறது. ஒரு மிகச் சிக்கலான வரலாற்று அனுபவத்தை எளிய சொற்றொடர்கள் மூலம் சுருக்கமாய் கூற முயற்சிப்பதை தவிர்ப்பதே நல்லது என்று நினைக்கிறேன். வெளிப்படையாக சீனா அதன் உலகளாவிய செல்வாக்கை விரிவுபடுத்தப் பார்க்கிறது. ஆனால் அந்தப் பாதை, சீனாவின் எழுச்சியை ஏற்றுக் கொள்ளத் தயாரில்லாத அமெரிக்காவுடன் விட்டுக்கொடுக்காத மோதலுக்குள் அதனைக் கொண்டுசெல்கிறது. சீனா, இப்போது இலங்கைக்கு ஒரு மிகப்பெரும் கடனுதவி செய்திருக்கிறது என்பதை புரிந்துகொள்கிறேன். அது நிச்சயமாக அமெரிக்காவை கோபப்படுத்துகிறது. இலங்கை போன்றதொரு நாடு இந்த புவியரசியல் நலன்களது போட்டியின் சூறாவளிமையத்தில் சிக்கிக் கொள்கிறது, முதலாளித்துவ அடிப்படையில் இந்தப் பிரச்சினைகள் தீர்க்கப்படுவதற்கான எந்த நல்ல முற்போக்கான கட்டமைப்பும் அங்கே இல்லை என்ற உண்மையை இது அடிக்கோடிட்டுக் காட்டுவதாய் நான் கருதுகிறேன். நீங்கள் சுட்டிக்காட்டுவதைப் போல, ஒவ்வொரு கடனுதவியும், கொடுக்கின்ற நாட்டின் முக்கியமான நிபந்தனைகளுடன்தான் கொடுக்கப்படுகிறது, ஒரு முதலாளித்துவ அடிப்படையில் செயல்படுகின்ற எந்தவொரு நாடும் பொதுநலங்களின் அடிப்படையில் செயல்படுவதில்லை.
சீன ஆளும் உயரடுக்கிற்கும் மார்க்சிசம் அல்லது சோசலிசத்திற்கும் இனியும் எந்த சம்பந்தமுமில்லை. ஆனாலும், சீனாவின் பரந்த மக்கள் மீதான உலக அளவில் உள்ள பிரச்சினைகளின் ஒரு மிகக் கூர்மையான வெளிப்பாடாக சீனாவின் பிரச்சினைகளை நாம் புரிந்து கொள்வது அவசியம் என்று நான் கருதுகிறேன். முடிவில், முதலாளித்துவ அபிவிருத்திப் பாதை அதன் வரலாற்றுப் பிரச்சினைகளை தீர்க்க இயலவில்லை. ஆகவே, சீனாவில் சோசலிசத்தின் மறுஎழுச்சியை நாம் பார்க்கப் போகிறோம், பார்ப்போம் என்றே நான் கருதுகிறேன், அந்த அபிவிருத்தியில் ட்ரொட்ஸ்கிச இயக்கம் ஒரு முக்கிய பாத்திரம் வகிக்கவிருக்கிறது என்றும் நான் கருதுகிறேன்.
R&S: அத்துடன் திரு. நோர்த், பின்தங்கிய நாடுகளைக் குறித்து பேசும்போது, இன்று ஏராளமான நாடுகள் பின்தங்கிய நாடுகளாய் இருக்கின்றன, இடைமருவு வேலைத்திட்டம் என்று வருகையில் நீங்கள் குறிப்பிட்டீர்கள், முதலாளித்துவத்தின் மரண ஓலமும் நான்காம் அகிலத்தின் பணிகளும் என்ற தலைப்பிலான ட்ரொட்ஸ்கியின் 1938 ஆவணம் இன்றும் பொருத்தமானதாய் இருப்பதாகக் கூறினீர்கள். அந்த வேலைத்திட்டம் பின்தங்கிய நாடுகளில் எவ்வாறு பொருத்தமானதாய் இருப்பதாக சொல்கிறீர்கள். அது குறித்த உங்களது கருத்துக்கள் என்ன?
DN: முதலாளித்துவ அபிவிருத்தி தாமதமான நாடுகள் தொடர்பாக ட்ரொட்ஸ்கி முன்னெடுத்த அடிப்படையான கருத்தாக்கத்தில், நாங்கள் பின்தங்கிய என்ற வார்த்தையை கலாச்சாரரீதியாக ஒப்பிட்டு பயன்படுத்துவதில்லை, அது முதலாளித்துவ அபிவிருத்தியின் வரலாறு குறித்த ஒரு பிரச்சினை, மாறாக அது ஏகாதிபத்தியத்துடனான காலனித்துவ அல்லது நவ காலனித்துவ உறவில் இருந்து தப்பித்த நாடுகள் தொடர்பானதாகும். அங்கு தேசிய முதலாளித்துவம், ஏகாதிபத்திய நலன்களுடன் உலக முதலாளித்துவ நலன்களுடன் பிணைந்திருந்த காரணத்தால் போராட்டத்திற்கு அது தலைமை கொடுக்க முடியாது, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தை வழிநடத்தக் கூடியதும் வளர்ச்சிகுறைந்த நாடுகளை இன்றைய வார்த்தைகளைக் கொண்டு கூறுவதானால் உலக வங்கி அல்லது சர்வதேச நாணய நிதியத்தின் பிடிகளில் இருந்து விடுதலை செய்யக் கூடியதுமான ஒரேயொரு உண்மையான புரட்சிகர சக்தி தொழிலாள வர்க்கம் மட்டுமேயாகும் என்பதே ட்ரொட்ஸ்கி கூறியதாகும். தொழிலாள வர்க்கம் சர்வதேச மூலதனத்துடன் கட்டுப்பட்டு இல்லாததுடன் உலகப் பொருளாதாரத்தை ஒரு சமத்துவமான, ஜனநாயகப்பட்ட மற்றும் விஞ்ஞானபூர்வமாக திட்டமிட்ட அடிப்படையில் மறுஒழுங்கு செய்வதற்கு உலகளாவிய போராட்டத்தின் பகுதியாக அது இருந்தாக வேண்டும், இவ்வாறாக நிரந்தரப் புரட்சித் தத்துவத்தின் அடிப்படையான கருத்தாக்கம் மீண்டும் மீண்டும் ஊர்ஜிதம் பெற்றது. அதாவது, ஆபிரிக்கா முழுமையிலும், ஆசியா முழுமையிலுமான பல நாடுகளும் தாங்கள் வளர்ச்சிக்கான ஒரு தேசியப் பாதையை கண்டிருந்ததாகக் கூறின. ஆனால் அவை அனைத்துமே வெளிநாட்டுக் கடன்களை சார்ந்திருப்பது மற்றும் மலிவூதிய உழைப்பை வழங்குவதை சார்ந்திருப்பது என்ற ஒரே நெருக்கடியில் உள்ளன. ஆக நிச்சயமாக வளர்ச்சிக்கான பாதை அதுவல்ல. தொழிலாள வர்க்கம்தான் ஜனநாயக மற்றும் சோசலிசப் போராட்டத்திற்கான தலைவனாக இருந்தாக வேண்டும் என்ற இருபதாம் நூற்றாண்டில் நிரந்தரப் புரட்சிக் கருத்தாக்கத்தில் ட்ரொட்ஸ்கி எழுப்பிய அதே அடிப்படையான பிரச்சினை இன்றும் உண்மையாகத் திகழ்கிறது.
R&S: சோசலிச சமத்துவக் கட்சி, சோசலிச சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பு (IYSSE) என்ற ஒரு இளைஞர் இயக்கத்தைக் கொண்டிருக்கிறது. அதன் இளைஞர்களுக்கான வேலைத்திட்டமானது கல்வித்துறை வெட்டுக்கள், தனியார்மயமாக்கம், நல உதவிகளது வெட்டுக்கள், வேலைவாய்ப்பின்மை, சமூக நல வெட்டுக்கள் ஆகிவற்றுக்கு எதிரான ஒரு வேலைத்திட்டத்துடன் இணைந்து முன்வைக்கிறது. இதில் என்னவிதமான முன்னேற்றத்தைக் காண்கிறீர்கள்? ஏனென்றால் அது குறித்து இங்கு பரபரப்பான பேச்சாக இருக்கிறது.
DN: உலகெங்கும் இது மிக உற்சாகமூட்டுவதாகவே இருக்கிறது. நீங்கள் அதனை கண்டிப்பாகப் பார்த்திருப்பீர்கள் என்றே நினைக்கிறேன், அமெரிக்காவில் அது மிகவும் மலைப்பூட்டக் கூடிய அளவில் இருக்கிறது ஏனென்றால் வேறெந்தவொரு நாட்டிலும் அமெரிக்காவில் இருந்தளவிற்கு சோசலிசத்திற்கு எதிராக இந்தளவுக்கு பிரச்சாரம் இருந்து வந்தது கிடையாது. இந்த புதிய தலைமுறையின் இளைஞர்கள் முதலாளித்துவத்தின் யதார்த்தங்களில் இருந்து பெற்றிருக்கக் கூடிய அனுபவம், வாய்ப்புக்களின்மை, கண்ணியமான வேலைகள் இல்லாமை, அமெரிக்காவைப் பற்றிப் பேசும்போது பள்ளிகளுக்குச் செல்லும் இளைஞர்கள் கல்லூரிகளை விட்டு வெளியேறும் போது பெருந்தொகை கடன்களுடன் வெளிச்செல்கிறார்கள், ஒரு குடும்பத்தை ஆரம்பிக்க தேவையான வளங்கள் அவர்களிடம் இருப்பதில்லை என்ற உண்மை, இவையெல்லாமும் அத்துடன் நமது சமூகத்தின் இடைவிடாத வன்முறை மற்றும் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்ற இடைவிடாத போர்கள் எல்லாமுமாய் சேர்ந்து இப்போதிருக்கும் அமைப்புமுறையான, முதலாளித்துவத்தை நோக்கி, இளைஞர்கள் மத்தியில் ஒரு ஆழ்ந்த அந்நியப்படலை உருவாக்கி விட்டிருக்கின்றன; முதலாளித்துவம் என்ற வார்த்தை அமெரிக்காவிலும் மற்ற பல நாடுகளிலும் மீண்டும் அசிங்கமான ஒரு வார்த்தையாக ஆகிக் கொண்டிருக்கிறது. சோசலிசத்திலான ஆர்வம் இருக்கிறது, இது மிகவும் முற்போக்கானதும் ஆரோக்கியமானதும் ஆகும். அதன் வரலாற்றில் சோசலிசம் என்பது என்ன என்ற அறிவுதான் இப்போது மிகவும் மிகக் குறைந்த அளவிலேயே இருக்கிறது. அதற்கு விரிவான கல்வி அவசியமாக இருக்கிறது, சோசலிச சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பு அந்தப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. அது, தனது இயக்கத்தை உலகெங்கும் கட்டியெழுப்பிக் கொண்டிருக்கிறது, சோசலிச சர்வதேசியவாதக் கோட்பாடுகளில் இளைஞர்களுக்கு கல்வியூட்டிக் கொண்டிருக்கிறது. ஸ்ராலினிசத்திற்கு எதிரான போராட்டத்தின் வரலாற்றில் இளைஞர்களுக்கு பரிச்சயமூட்டிக் கொண்டிருக்கிறது. நிறைய இளைஞர்களுக்கு என்ன ஒரு கேள்வி இருக்கிறதென்றால், அவர்களுக்கு சோசலிசம் வேண்டும் ஆனால் சர்வாதிகாரம் வேண்டாம் ஸ்ராலின் ஆட்சி போன்றதொரு ஆட்சி வேண்டாம். ஸ்ராலினிசத்தின் குற்றங்களுக்கு எதிரானதொரு போராட்டம், உண்மையான சோசலிச ஜனநாயகம் மற்றும் சர்வதேசியவாதத்திற்கான ஒரு போராட்டம் அங்கே இருந்தது என்று அவர்கள் அறிந்து கொள்கின்ற போது அது அவர்களை மிகவும் ஈர்ப்பதாக இருக்கிறது, இலங்கை மற்றும் உலகெங்கிலும் IYSSE இந்தப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. தேசியப் பின்னணி, இனப் பின்னணி, மதப் பின்னணி மற்றும் பாலினப் பின்னணிகளைத் தாண்டி மக்களை ஐக்கியப்படுத்துகின்ற ஒரு சர்வதேச இயக்கமாக எங்கள் இயக்கம் இருக்கிறது என்ற உண்மையில் நாங்கள் மிக மிக பெருமிதம் கொள்கிறோம். இப்பின்னணிகள் எல்லாம் பெரிய பிரச்சினைகள் அல்ல. உலகப் பொருளாதாரத்துடன் மக்கள் கொண்டுள்ள உறவு, உழைக்கும் மக்களாக அவர்கள் கொண்டுள்ள பொதுவான தன்மை, மற்றும் முன்னேற்றத்திற்கும் சோசலிசத்திற்கும் அவர்களை ஐக்கியப்படுத்துவதற்குள்ள அவசியம் ஆகியவை தான் இன்று பெரும் பிரச்சினைகளாகும்.
R&S: துரிதமாய் கேட்க விரும்புகிறேன்: கொழும்பு மற்றும் பேராதனைக்கு விஜயம் செய்திருக்கிறீர்கள். அந்த கூட்டங்கள் எப்படி இருந்தன? எங்கள் மக்களிடம் இருந்து என்னவிதமான பதிலிறுப்பு கிடைத்தது? என்ன நினைக்கிறார்கள், என்ன கேள்விகள் கேட்டார்கள்?
DN: பிரமிக்கத்தக்க வரவேற்பு கிட்டியது. ஒரு ட்ரொட்ஸ்கிஸ்டாக இருக்கக் கூடிய எவரொருவரும் ட்ரொட்ஸ்கிச இயக்கத்துடன் பரிச்சயமுள்ள எவரொருவரும் இங்கே ட்ரொட்ஸ்கிசத்தின் ஒரு மாபெரும் வரலாறு இருப்பதை அறிவார்கள், இலங்கையில் இருக்கும், முன்னர் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் என்று அழைக்கப்பட்ட சோசலிச சமத்துவக் கட்சியுடன் பல தசாப்தங்களுக்கு நெருங்கி வேலை செய்திருப்பதில் நான் மிகவும் பெருமிதப்படுகிறேன். இங்கே இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளராக இருக்கும் விஜே டயஸ், சர்வதேச அளவில் பிரபலமான ஒரு ஆளுமையாவார், அவருடனான தோழமையை கண்டு நான் மகிழ்ந்தேன். இந்த நாட்டில் பெரும் துன்பத்திற்குக் காரணமாக இருந்த படுபயங்கரமான உள்நாட்டுப் போரின்போது சிங்கள மற்றும் தமிழ் மக்களின் ஐக்கியத்திற்காக எமது கட்சி போராடியதை அனைவருமே அறிவார்கள். இவ்வாறாக, சர்வதேசியவாதக் கோட்பாடுகள் இங்கே இலங்கையில் எமது தோழர்களால் செயலுறுத்தப்பட்டிருக்கின்றன. இந்த முக்கியமான ஆண்டுநிறைவை ஒட்டி என்னை இங்கே பேச அழைத்தது எனக்கு கவுரவமாகும். இது இப்போது SEP ஆக இருக்கும் RCL ஸ்தாபிக்கப்பட்ட ஐம்பதாவது ஆண்டாகும், 1968 இல் அது ஸ்தாபிக்கப்பட்டது.
R&S: நல்லது, நீங்கள் ஏராளமான கருத்தரங்குகள் நடத்துவதற்காக நாட்டின் மத்திய பகுதிகளுக்கும் சென்று வந்திருக்கிறீர்கள் என்பது எனக்கு தெரியும். சோசலிசம் தொடர்பாக வரும்போது, அவ்வாறே சமூக சீர்திருத்தங்கள் என்று வரும்போதும், இலங்கை எந்த விடயத்தில் மேம்பட வேண்டியிருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள். இலங்கையிடம் எது இல்லாமல் இருக்கிறது, அதற்கு எது தேவையாக இருக்கின்றது?
DN: முதலில், உங்கள் நாடு முற்றிலும் ஒரு அற்புதமான நாடு. ஒரு அற்புதமான நாட்டில் செறிந்த அரசியல் கலாச்சாரமும் வரலாறும் கொண்டதொரு நாட்டில் சில புகைப்படங்கள் எடுத்துக் கொள்வதற்கும் என்னால் சில மணி நேரங்களைத் தேடிப் பிடிக்க முடிந்ததைக் குறித்து எனக்கு ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. ஆயினும் இத்தகைய எல்லா நாடுகளையும் போலவே, ஒரு சிறிய நாடாக, ஏகாதிபத்தியத்தினால் ஒடுக்கப்பட்ட ஒரு காலனித்துவ வரலாறைக் கொண்ட ஒரு நாடாக, வளங்களின் பற்றாக்குறை அதற்கு இருக்கிறது. மலிவு உழைப்பு, அதிமட்ட சுரண்டல் மற்றும் சுதந்திர வர்த்தக மண்டலங்கள் போன்றவற்றை வழங்காமல், உலகப் பொருளாதாரத்தின் வளங்கள் அதற்கு அவசியமாயுள்ளது. நான் சொல்ல வருவது என்னவென்றால், இவையெல்லாம் இந்த நாட்டின் மக்கள் ஒடுக்குவதற்கான வழிவகைகளாக இருக்கின்றன என்கிறேன். ஆக, தேவையான அத்தனை விடயங்களும் உலகப் பொருளாதாரத்தின் மறுஒழுங்கமைப்பின் மூலமாக மட்டுமே பெறப்பட முடியும். இதை விட எளிமையான ஒரு பதில் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஏனென்றால் இது ஒரு மலைப்பூட்டும் வேலை தான். ஆனால் மிகப் பெரியதாக இருக்கும் இந்தியாவை நீங்கள் பார்த்தீர்களென்றால் கூட, அவர்களும் இதேபோன்ற பிரச்சினைகளையே முகம்கொடுக்கின்றனர். ஆக, சோசலிச சர்வதேசியவாத வேலைத்திட்டம் மட்டுமே நாம் முகம்கொடுத்து நிற்கின்ற பெரும் பிரச்சினைகளுக்கு ஒரேயொரு உருப்படியான பதிலிறுப்பாகும். உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என்ற பழைய சொற்றொடரை உண்மையுடன் பயன்படுத்த வேண்டியிருக்கிறது, உலக சோசலிசப் புரட்சியின் கட்சியை கட்டியெழுப்ப வேண்டியிருக்கிறது. அதுவே தேவைப்படுவதாகும். பெரும் வரலாற்றுப் பிரச்சினைகளுக்கு எளிமையான பதில்கள் வரலாற்றில் இருக்கவில்லை. அவை கடினமான பதில்களாக சிக்கலான பதில்களாகவே இருக்கின்றன. ஆயினும் எங்களுக்குப் பின்னால் ஒரு பரந்த அனுபவம் இருக்கிறது, அத்துடன் நாம் ஒரு புதிய நூற்றாண்டில் இருக்கிறோம். வரலாறு முடியவில்லை என்பதை நாம் ஏற்கனவே அறிவோம். நாம் அதன் மத்தியில் இருக்கிறோம். ஆனால் இந்த முறை நாம் சரியாக செயல்பட வேண்டும், கடந்த காலத்தின் படிப்பினைகளைத் தேற்றம் செய்து கொண்டு, தொழிலாள வர்க்கத்தினை அதிகாரத்தில் அமர்த்தி ஒரு புதிய உலகை உருவாக்கக் கூடிய ஒரு இயக்கத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்.
R&S: மிக்க நன்றி டேவிட். எங்களுடன் கலந்துரையாடியதற்கு நன்றி. புரட்சி குறித்து அதாவது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற மாற்றங்கள் மற்றும் தாக்கங்கள் குறித்து உண்மையாகவே நிறைய விடயங்களை நாங்கள் கற்றுக் கொண்டோம். எம்முடன் இருப்பவர் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவராவர். உங்களை மீண்டும் சந்திப்பதில் மிகவும் விருப்பமாக உள்ளோம். மிகமிக விருப்பமானதாக இருக்கும். மிக்க நன்றி.