ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

David North addresses press conference in Sri Lanka

டேவிட் நோர்த் இலங்கையில் பத்திரிகையாளர் மாநாட்டில் உரையாற்றினார்

By David North 
2 October 2018

அக்டோபர் 1, திங்களன்று கொழும்பின் தேசிய நூலக மாநாட்டு மண்டபத்தில் நடத்திய ஒரு பத்திரிகையாளர் மாநாட்டில், உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரான டேவிட் நோர்த் பின்வரும் கருத்துக்களை வெளியிட்டார். அக்டோபர் 3, மற்றும் அக்டோபர் 7 இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி ஏற்பாடு செய்துள்ள இரண்டு கூட்டங்களில் நோர்த் உரையாற்றவுள்ளார். தேசிய தொலைக்காட்சி சேவையான ரூபவாஹினி, அரசுக்கு சொந்தமான சுயாதீன தொலைக் கட்சி (ITN), கேபிடல் ரேடியோ மற்றும் லங்கா வெப் நியூஸ் ஆகியவற்றின் பத்திரிகையாளர்கள் இந்த நிருபர்கள் மாநாட்டில் கலந்து கொண்டனர்.

முதலாவதாக, நான்காம் அகிலத்தின் 80 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இரண்டு விரிவுரைகளை வழங்குவதற்காக இலங்கைக்கு என்னை அழைத்தமைக்காக நான்  சோசலிச சமத்துவக் கட்சிக்கு நன்றி கூற விரும்புகிறேன். உண்மையில், இந்த ஆண்டு நாம் இரட்டை ஆண்டு நிறைவை கொண்டாடுகிறோம். சோசலிச சமத்துவக் கட்சி, 1968ல், நான்காம் அகிலத்தின் இலங்கைப் பகுதியாக அது ஸ்தாபிக்கப்பட்டதன் 50 வது ஆண்டு நிறைவையும் நாம் கொண்டாடுகிறோம். இன மற்றும் மத பின்னணிக்கு அப்பால் இலங்கையில் உள்ள தொழிலாள வர்க்கத்தின் அனைத்து பிரிவுகளையும் ஐக்கியப்படுத்துவதற்காக சோசலிச சமத்துவக் கட்சி அரை நூற்றாண்டு காலமாக முன்னெடுத்த கொள்கைப் பிடிப்பான போராட்டம், நன்கு பிரசித்தி பெற்றதாகும். அது உலகெங்கிலும் உள்ள சோசலிஸ்டுகளை ஈர்த்துள்ளது.


கொழும்பு பத்திரிகையாளர் சந்திப்பில் டேவிட் நோர்த் உரையாற்றுகிறார்

கொழும்பிலும் கண்டியிலும் எனது விரிவுரைகள் இருபதாம் நூற்றாண்டின் அரசியல் வரலாற்றில் முக்கிய நிகழ்வுகளை குவிமையப்படுத்தியதாக இருக்கும்: 1938 செப்டம்பரில் லியோன் ட்ரொட்ஸ்கியால் நான்காம் அகிலம் ஸ்தாபிக்கப்பட்டமை, ட்ரொட்ஸ்கி 15 ஆண்டுகளுக்கு முன்னர் 1923ல் தொடங்கிய போராட்டத்தின் உச்சக்கட்டமாக இருந்தது. ஸ்ராலின் மேலும் மேலும் சக்திவாய்ந்த மற்றும் துரோகச் செயல்களைச் செய்துவந்த போல்ஷிவிக் கட்சியிலும் சோவியத் ஆட்சியிலும் அதிகாரத்துவ சீரழிவுக்கு எதிராகப் போராடவே 1923ல் ட்ரொட்ஸ்கி இடது எதிர்ப்பு இயக்கத்தை ஸ்தாபித்தார். ஸ்ராலினிச ஆட்சியானது தனி நாட்டில் சோசலிசம் என்ற தவறான மற்றும் மார்க்சிச-விரோத பதாகையின் கீழ், சோவியத் ஒன்றியத்திற்குள் ஆளும் அதிகாரத்துவத்தின் பொருள்சார் நலன்களையும் சலுகைகளையும் பாதுகாப்பதன் பேரில், உலக சோசலிசத்திற்கான போராட்டத்தை அடிபணியச் செய்த நிலையில், இந்த போராட்டம் சர்வதேச பரிமாணத்தை எடுத்தது.

மார்க்சிசத்தின் புரட்சிகர சர்வதேசிய வேலைத்திட்டத்தை ஸ்ராலின் தேசியவாத அடித்தளத்தில் நிராகரித்தமை, 1927ல் சீனாவில் மற்றும் 1933ல் ஜேர்மனியில் போன்று தொழிலாள வர்க்கத்தின் தொடர்ச்சியான தோல்விகளுக்கு வழி வகுத்தது. உண்மையில், ஸ்ராலினிஸ்டுகள் முன்னெடுத்த பேரழிவுகரமான கொள்கைகளின் விளைவால், 1933ல் ஜேர்மனியில் நாஜிக்கள் அதிகாரத்திற்கு வந்தமை, ஒரு புதிய புரட்சிகர சர்வதேச அமைப்பை உருவாக்குவதற்காக நேரடியாக அழைப்பு விடுக்க ட்ரொட்ஸ்கியை தூண்டியது. ஸ்பானிய புரட்சியை ஸ்ராலினிஸ்டுகள் காட்டிக் கொடுத்தமை மற்றும் 1936ல் சோவியத் ஒன்றியம் பூராவும் பரவி வந்த எதிர்-புரட்சிகர பயங்கரத்தை ஸ்ராலின் முன்னெடுத்தமை போன்ற அடுத்து வந்த சம்பவங்கள், நான்காம் அகிலத்தை அமைப்பதற்கு ட்ரொட்ஸ்கி அழைப்பு விடுத்தது சரி என்பதை உறுதிப்படுத்தின.

இந்த நிகழ்வுகள் கேள்விக்கிடமின்றி பெரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும்; மற்றும் அவற்றை மீளாய்வுக்கும் பகுப்பாய்வுக்கும் உட்படுத்துவதற்காக இந்த விரிவுரைகளை அர்ப்பணிப்பது நிச்சயம் பொருத்தமானதாகும். ஆனால், பல ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த நிகழ்வுகளுக்கும் சமகால ஆர்வத்துக்கும் உள்ள தொடர்பு என்ன? நான்காம் அகிலத்தின் செயற்பாடுகளில் தற்போது ஈடுபடாத தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் புத்திஜீவிகள் ஏன் இந்த விரிவுரைகளில் கலந்து கொள்ள வேண்டும்? என நீங்கள் கேட்கலாம்.

இந்த நியாயமான கேள்விகளுக்கு பதிலளிப்பதற்காக, 1938ல் நிலவிய உலக நிலைமைகளை நினைவுபடுத்த என்னை அனுமதியுங்கள். ஒரு தசாப்தத்திற்கு முன்பு 1929ல் வோல் ஸ்ட்ரீட் சரிவுடன் தொடங்கிய உலகளாவிய பொருளாதார நெருக்கடியின் பிடியில் முதலாளித்துவ அமைப்புமுறை சிக்கியிருந்தது. பெரும் பொருளாதார மந்த நிலையானது முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் தொழிலாள வர்க்கத்தின் மீது பிரமாண்டமான துன்பங்களை திணித்திருந்தது. உலகம் முழுவதிலும் ஜனநாயகம் பின்வாங்கிக்கொண்டிருந்தது. பெருகிவந்த சமூக கோபத்திற்கு முகங்கொடுத்த நிலையில் தனது அரசியல் ஆட்சியை நிலைநிறுத்துவதற்காக, ஆளும் உயரடுக்குகள் பல்வேறு வடிவமான சர்வாதிகார ஆட்சிகளையும் உருவாக்கின. இதில் நாஜி மூன்றாம் அரசுதான் மிகவும் கொடூரமானதாக இருந்தது. ஏகாதிபத்திய சக்திகளின் வெளியுறவுக் கொள்கையானது மேலும் மேலும் இராணுவவாத பண்பை எடுத்தன. இது முதன்முதலில் கொடூரமான காலனித்துவ போர்களில் வெளிப்பாட்டைக் கண்டது. ஜப்பானிய ஏகாதிபத்தியம் 1932ல் மஞ்சூரியாவை கைப்பற்றியது. 1935ல் முசோலினி எத்தியோப்பியா மீது படையெடுத்தார். பெரும் வல்லரசு மோதல்கள் இடைவிடாமல் தீவிரமடைந்ததுடன், மனிதகுலம் முதலாவதை விட கொடூரமான இரண்டாம் உலகப் போரில் மூழ்கப் போவது வெளிப்படையாகியது.

1938 செப்டம்பரில் நான்காம் அகிலத்தின் ஸ்தாபக மாநாடு நடந்தபோது இருந்த உலக நிலைமை இதுவேயாகும். ட்ரொட்ஸ்கி மாநாட்டிற்கு எழுதிய வேலைத்திட்ட ஆவணம், அந்த சகாப்தத்தை "முதலாளித்துவத்தின் மரண ஓலம்" என வரையறுத்தது. இந்த அசாதாரண ஆவணத்திலிருந்து இரண்டு பந்திகளை மேற்கோள் காட்ட எனக்கு அனுமதியுங்கள்:

பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கான பொருளாதார முன்நிபந்தனை, ஏற்கனவே பொதுவில் முதலாளித்துவத்தின் கீழ் அடையக் கூடிய மிக உயர்ந்த பலனளிப்பை எட்டியுள்ளது. மனிதகுலத்தின் உற்பத்தி சக்திகள் தேக்கநிலையில் உள்ளன. ஏற்கனவே புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் மேம்படுத்தல்களும் பொருள் செல்வத்தின் அளவை உயர்த்தத் தவறிவிட்டன. முழு முதலாளித்துவ அமைப்பு முறையினதும் சமூக நெருக்கடி நிலைமைகளின் கீழ் நிலவுகின்ற தீர்க்கமான நெருக்கடி, மக்களின் மீது மிக அதிகமான இழப்புக்கள் மற்றும் துன்பங்களை விளைவித்துள்ளன. அதன் திருப்பமாக, வளர்ந்துவரும் வேலையின்மை, அரசின் நிதி நெருக்கடியை ஆழப்படுத்துவதுடன் நிலையற்ற நாணய முறைகளை கீழறுக்கின்றது. பாசிச ஆட்சிகளைப் போலவே ஜனநாயக ஆட்சிகளும் ஒரு திவால்நிலையில் இருந்து இன்னொரு திவால்நிலைக்கு மாறிக்கொண்டிருக்கின்றன.

முதலாளித்துவ வர்க்கம் எந்த வழியையும் காணவில்லை. ஏற்கனவே முதலாளித்துவம் பாசிசத்தை கையில் எடுக்கத் தள்ளப்பட்டுள்ள நாடுகளில், இப்போது பொருளாதார மற்றும் இராணுவ பேரழிவை நோக்கி கண்களை மூடிக்கொண்டு சறுக்கிச் செல்கின்றது. உதாரணமாக, முதலாளித்துவ வர்க்கம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு, தேசிய குவிப்புக்களின் செலவில் ஜனநாயகத்தின் ஆடம்பரத்தை அனுமதித்து வந்த, வரலாற்று ரீதியாக சலுகை பெற்ற நாடுகளில் (பெரிய பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா முதலிய), மூலதனத்தின் அனைத்து பாரம்பரிய கட்சிகளும் விருப்பமின்மையின் விளிம்பில் தடுமாற்ற நிலையில் உள்ளன.

1938ல் முதலாளித்துவ உலகத்தைப் பற்றிய ட்ரொட்ஸ்கியின் விளக்கமானது, சொற்களை மாற்றாமலேயே 2018ல் நிலவும் நிலைமைகளை விவரிப்பதற்கு மிக நன்றாக பயன்படும். ட்ரொட்ஸ்கி இன்றும் உயிருடன் இருந்திருந்தால், சமகால உலகத்தை புரிந்து கொள்வது அவருக்கு மிகவும் கடினமாக இருந்திருக்காது என்று நான் நினைக்கின்றேன். நிச்சயமாக, அவர் கணினிகள், செல் தொலைபேசிகள் மற்றும் சமூக ஊடகங்களை பயன்படுத்துவது எப்படி என்று கற்றுக் கொள்ள வேண்டியிருந்திருக்கும். ஆனால் அவருடைய வரலாற்று மற்றும் அரசியல் முன்கணிப்புகளை மாற்றுவதற்கு எந்தவொரு காரணமும் இருந்திருக்காது. சமகாலத்திய சகாப்தமும் முதலாளித்துவத்தின் "மரண ஓலமே" தான். உண்மையில், அந்த வரலாற்று மரணம் ஓலத்தின் அச்சமூட்டும் மற்றும் வன்முறையான கட்டத்தை நாம் விரைவாக நெருங்கிக் கொண்டிருப்பதற்கான பல அறிகுறிகள் உள்ளன.

கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு முன்னர், கிழக்கு ஐரோப்பாவிலும் சோவியத் ஒன்றியத்திற்குள்ளும் ஸ்ராலினிச ஆட்சிகள் கலைக்கப்பட்டதை அடுத்து, முதலாளித்துவ ஆளும் உயரடுக்கின் சித்தாந்தவாதிகள் "வரலாற்றின் முடிவை" அறிவித்தனர். முதலாளித்துவமானது மீண்டும், எல்லா காலத்திற்கும், சோசலிசத்திற்கும் மேலாக அதன் சவால் செய்ய முடியாத மேன்மையை நிரூபித்துள்ளதுடன், மனிதகுலம் இனிமேல் கேளிக்கைகளோடு மகிழ்ச்சியுடன் உலகளாவிய நிதி சந்தைகளின் சூடான பிரகாசத்தின் கீழே, உயர்ந்து வரும் செழிப்பு, உலகளாவிய ஜனநாயகம் மற்றும் நித்திய சமாதானத்தின் ஆடம்பர தோட்டத்தில் வாழும், என பிரகடனம் செய்தனர்.

இப்போது நமக்கு தெரிந்தவாறு, இந்த பெருமிதமான கணிப்புகள் யதார்த்தமாகவில்லை. பூகோள முதலாளித்துவ அமைப்புமுறை குவிந்துவரும் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நெருக்கடிகளால் சூழப்பட்டுள்ளது. 1929 இன் சரிவைக் காட்டிலும் குறைவில்லாத 2008 ஆம் ஆண்டின் பொருளாதார சரிவு, முழு பொருளாதார அமைப்பினது பலவீனத்தையும் அம்பலப்படுத்தியுள்ளது. அதன் வழிவந்த பெறுபேறு, மலையெனக் குவியும் கடன்கள் மற்றும் பிரமாண்டமான சமூக சமத்துவமின்மை ஆகும். முதலாளித்துவ அரசாங்கங்கள், முதன்முதலாவதாக அமெரிக்க, ஒட்டுமொத்த மக்கள் தொகையினரின் இழப்பில் செல்வந்தர்களை பிணையெடுத்தன. இந்தச் செயல்பாட்டில், அவர்கள் முதலாளித்துவ ஜனநாயகத்தை ஒரு அரசியல் மோசடியாக, உலகப் பொருளாதாரத்தை ஆளும் பில்லியனர் தன்னலக்குழுக்களின் ஆட்சிக்கான ஒரு மூடிமறைப்பாக மதிப்பிழக்கச் செய்தனர். இது வலதுசாரி வாய்சவடால்கள் மற்றும் பாசிச இயக்கங்களின் எழுச்சிக்கு காரணமாகியுள்ளது. அமெரிக்காவில், டொனால்ட் ட்ரம்ப்பின் பெயரால் வெள்ளை மாளிகை ஒரு வெளிப்படையான குண்டர் கும்பலால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. ஜேர்மனியில், பாசிசம் மீண்டும் தலை தூக்குகின்றது. பொருளாதார நெருக்கடியினதும் "பயங்கரவாதத்தின் மீதான போர்" என்ற பதாகையின் கீழ், ஏகாதிபத்தியங்களால் தொடங்கப்பட்ட கொடூரமான இராணுவ நடவடிக்கைகளதும் பலிகடாக்களான அப்பாவி அகதிகள், உலகம் பூராவும் முதலாளித்துவத்தால் உருவாக்கப்பட்ட நிலைமைகளுக்கு குற்றம் சாட்டப்படுவதோடு பழிவாங்கப்படுகிறார்கள்.

1930களில் போலவே, புவிசார் அரசியல் மோதல்கள் இடைவிடாது தீவிரமடைவது, ஒரு மூன்றாம் உலகப் போருக்கு தவிர்க்க முடியாமல் வழிவகுக்கின்றது. இந்தப் போர், மிகப் பயங்கரமான விளைவுகளுடன் அணு ஆயுதங்களோடு நடக்கும். நான்காம் அகிலத்தின் ஸ்தாபக ஆவணத்தில் ட்ரொட்ஸ்கி எழுதியிருக்கும் வார்த்தைகள், சமகாலத்திற்கு தீவிரமாக பொருந்துகின்றன.

நிச்சயமாக, முதலாளித்துவம் ஒரு புதிய யுத்தத்தினால் அதனது மேலாதிக்கத்திற்கு ஏற்படப்போகும் மரண ஆபத்தைப் பற்றி நன்கு அறிந்திருக்கும். ஆனால் அந்த வர்க்கம், 1914 இன் ஆரம்ப கட்டத்தை விட, இப்போது ஒரு போரைத் தவிர்ப்பதற்கு முற்றிலும் இலாயக்கற்றுள்ளது. ஒரு சோசலிச புரட்சி இன்றி, அடுத்த வரலாற்று காலகட்டத்தில், மனித குலத்தின் ஒட்டுமொத்த கலாச்சாரத்தையும் ஒரு பேரழிவு அச்சுறுத்திக்கொண்டிருக்கின்றது.

ட்ரொட்ஸ்கி எழுதிய “அடுத்த வரலாற்று காலகட்டம்” இப்போது நாங்கள் வாழ்ந்துகொண்டிருக்கும் காலகட்டமே ஆகும். மேலோங்கி வரும் முதலாளித்துவ கொந்தளிப்புக்கு ஒரு முற்போக்கான பதிலை மனித இனம் தேடிக்கொண்டிருக்கின்றது. அதற்கு வறுமை, சுரண்டல் மற்றும் யுத்தம் அற்ற ஒரு எதிர்காலம் வேண்டும். மதம், இனம் மற்றும் தேசியப் பகைமைகளைக் கொண்ட உலகம் அன்றி, மனித ஒற்றுமையை அடிப்படையாகக் கொண்ட உலகமே உழைக்கும் மக்களுக்கு அவசியம். அதனாலேயே உலகம் முழுதும் –முதலாளித்துவ வளர்ச்சியினதும் எதிர் நடவடிக்கையினதும் கோட்டையான அமெரிக்காவிலும் கூட- சோசலிசத்திற்கு ஆதரவும் ஆர்வமும் வளர்ச்சியடைகின்றது. ஆனால், இன்று சோசலிசத்திற்கான போராட்டமானது வரலாற்று அறிவினால் கல்வியூட்டப்பட வேண்டியதாகும். அதனாலேயே, 1938ல் நான்காம் அகிலம் ஸ்தாபிக்கப்பட்டமை மற்றும் எண்பது ஆண்டு கால அதன் வரலாற்றில அது கடந்து வந்த போராட்டங்களைப் பற்றிய ஒரு ஆராய்வு, மிகப் பெருமளவு சமகால பொருத்தத்தைக் கொண்டுள்ளது.