Print Version|Feedback
Indian Stalinists seek to divert discontent into an alliance with capitalist parties
இந்திய ஸ்ராலினிஸ்டுகள் மக்கள் அதிருப்தியை முதலாளித்துவக் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதற்குள் திசைதிருப்ப முயற்சிக்கின்றனர்
By Arun Kumar
15 September 2018
இந்திய மார்க்சிச கம்யூனிஸ்ட் கட்சி (Communist Party of India-CPM) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (Communist Party of India-CPI) போன்ற இந்தியாவின் பிரதான ஸ்ராலினிச பாராளுமன்றக் கட்சிகள், முதலாளித்துவ காங்கிரஸ் கட்சி மற்றும் பல்வேறு பிராந்திய முதலாளித்துவக் கட்சிகள் உடன் ஏற்படுத்திக் கொள்ளும் தங்களது சந்தர்ப்பவாத கூட்டணிகளுக்குப் பின்னால் தொழிலாள வர்க்கம் மற்றும் கிராமப்புற உழைப்பாளர்களது பெருகிவரும் அதிருப்தியை திசைதிருப்ப முயன்று வருகின்றனர். செப்டம்பர் 10 அன்று பந்த் (பொது வேலைநிறுத்தம்) நடத்த அவர்கள் விடுத்திருக்கும் அழைப்பில் இந்த அரசியல் தந்திரங்கள் தெளிவாகக் காணப்பட்டன.
சிபிஎம் மற்றும் சிபிஐ கட்சிகளும், மற்றும் அவர்கள் வழிநடத்தும் இடது முன்னணியில் உள்ள அவர்களது கூட்டணிக் கட்சிகளும் இணைந்து, எரிபொருள் விலை உயர்வுகளையும், பிரதம மந்திரி நரேந்திர மோடி அரசாங்கத்தின் ஏனைய பொருளாதாரத் தாக்குதல்களையும் எதிர்த்து பந்த் நடத்த கடந்த திங்களன்று அழைப்பு விடுத்திருந்தனர். பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸூம் அதே நாளில் பந்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.
முன்நிகழ்ந்திராத இந்திய ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி மற்றும் உயரும் எரிபொருள் விலைகள், வாழ்க்கைத் தரங்களில் ஒரு நிலையான வீழ்ச்சியுடன் சேர்ந்து, மோடியின் இந்து மேலாதிக்கவாத பாரதிய ஜனதாக் கட்சி (BJP) தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக அதிகரித்துவரும் சமூக எதிர்ப்பை உருவாக்கியுள்ளன.
இருப்பினும், இந்த பந்த் குறித்த அழைப்பிற்கு நாடு முழுவதிலும் இருந்து பகுதியளவிலான பதிலிறுப்பு தான் கிடைத்துள்ளது. இது, ஸ்ராலினிஸ்டுகள், காங்கிரஸ் மற்றும் காங்கிரசின் பந்த் அழைப்பில் இணைந்த பிராந்தியக் கட்சிகள் மீதான தொழிலாள வர்க்கத்தின் நம்பிக்கையின்மைக்கான ஒரு அறிகுறியாக உள்ளது. மோடி அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகள் ஊற்றெடுக்கும் முதலீட்டாளர்- சார்பு நவ-தாராளவாத பொருளாதார “சீர்திருத்தங்களுக்கு” இந்த அனைத்துக் கட்சிகளும் அர்ப்பணித்துள்ளன.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (United Progressive Alliance-UPA), 2004 முதல் 2014 வரையிலும் அதிகாரத்தில் இருந்தபோது அதே கொள்கைகளை நடைமுறைப்படுத்தியது. மேலும், 1991ல் நவ-தாராளவாத பொருளாதாரக் கொள்கைகளை ஆரம்பித்தது கூட இந்த காங்கிரஸ் கட்சி அரசாங்கம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஸ்ராலினிச சிபிஎம் தலைமையிலான இடது முன்னணி, இதையொத்த பொருளாதாரக் கொள்கைகளை நடைமுறைப்படுத்திய அனைத்து பிஜேபி அல்லாத அரசாங்கங்களுக்கும் ஆதரவளித்து வந்துள்ளது என்பதுடன், மேற்கு வங்கம், திரிபுரா மற்றும் கேரள மாநிலங்களில் ஆட்சியில் இருந்த போது இந்த “சீர்திருத்தங்களை” தாமே செயல்படுத்தியும் உள்ளது.
வடகிழக்கு இந்தியாவில், பிஜேபி ஆளும் அசாம் மாநிலத்தின் தலைநகரமான கவுஹாத்தியில் இந்த பந்த் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. பெரும்பாலான கடைகள், சந்தைகள், பெட்ரோல் நிலையங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. பொது போக்குவரத்து கிட்டத்தட்ட அங்கு முடங்கிப் போனது. ஆர்ப்பாட்டங்களை நடத்திய நூற்றுக்கணக்கான காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களை பொலிசார் கைதுசெய்தனர். பிஜேபி ஆட்சி செய்யும் திரிபுராவில் கூட, கடைகள், சந்தைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. மேலும், அரசாங்க அலுவலகங்களிலும் வங்கிகளிலும் வருகை குறைவாக இருந்ததாகவும் கூறப்பட்டது.
தென்னிந்தியாவில், சிபிஎம் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி செய்யும் கேரள மாநிலத்தில், பொது போக்குவரத்து வாகனங்கள் ஓடவில்லை என்பதுடன், கல்லூரிகளும் கடைகளும் மூடப்பட்டிருந்தன.
அதேபோல, தென்னிந்தியாவில் கர்நாடக மாநிலத்தின் பல பகுதிகளிலும், மற்றும் பீஹார், பஞ்சாப், ஹரியானா, ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலங்களின் மற்றும் வடக்கில் யூனியன் பிரதேசமான சண்டிகரின் சில பகுதிகளிலும் பந்த் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.
பகுதியளவிலான பங்கேற்பு என்றாலும், தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற உழைப்பாளர்களின் பங்கேற்பு என்பது போராட்டத்திற்கு அவர்கள் தயாராக இருப்பதை சுட்டிக்காட்டுகிறது. இருந்தாலும், பிஜேபி அரசாங்கம் மற்றும் முதலாளித்துவ சமூக ஒழுங்கு ஆகியவற்றிற்கு எதிராக உருவாகியுள்ள அமைதியின்மையை தணிக்கவும், தொழிலாள வர்க்கத்தின் ஒரு அரசியல் இயக்க அபிவிருத்தியை தடுத்துநிறுத்தவும் முயலும் நடவடிக்கைகளுக்குத் தான் ஸ்ராலினிசக் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. அதாவது, தற்போது நிலவும் மிகப்பெரும் எதிர்ப்பை பாதுகாப்பான அரசியல் வழிமுறைகளாக திசைதிருப்புவது தான் அவர்களது நோக்கமாக இருந்து வருகிறது.
ஸ்ராலினிஸ்டுகள், தனியாக பந்திற்கு அழைப்பு விடுப்பதன் மூலம் சற்று “சுதந்திரமாக” செயல்படுவதாக காட்ட முயற்சித்தனர். இருப்பினும், காங்கிரஸ் கட்சி பந்திற்கு அழைப்பு விடுத்திருந்த அதே நாளில் அவர்களும் அழைப்பு விடுத்ததன் மூலம் காங்கிரஸ் உடனான அவர்களது தொடர்புகளை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றனர். ஏப்ரலில், அதன் கட்சி மாநாட்டின் போது சிபிஎம், காங்கிரஸ் உடனான ஒரு தேர்தல் கூட்டணிக்கு முன்மொழிந்தது.
2014 தேசியத் தேர்தல்களில் அதன் அவமானகரமான தோல்வியைத் தொடர்ந்து, ஒன்றையடுத்த மற்றொரு தேர்தல் தோல்வியால் பாதிக்கப்பட்டுவந்த காங்கிரஸ், 2019ல் அதிகாரத்திற்கு திரும்புவதற்கான முயற்சியில் பிஜேபி தலைமையிலான அரசாங்கத்தின் மீது அதிகரித்துவரும் விரோதப்போக்குடன் தன்னை இணைத்துக் கொள்ள முயன்று வருகிறது.
சிபிஎம் உடன் இணைந்த தொழிற்சங்கங்கள் செப்டம்பர் 5 அன்று தில்லியில் ஏற்பாடு செய்திருந்த “சிவப்புக் கொடி பேரணி” என்பது, 2019 தேசிய பாராளுமன்றத் தேர்தல்களுக்காக, வலதுசாரி பிராந்திய மற்றும் சாதிவாத கட்சிகள், அத்துடன் காங்கிரஸூடன் ஒரு தேர்தல் தளத்தை தயார் செய்வதற்கான சூழ்ச்சி நடவடிக்கையின் ஒரு பகுதியாக இருந்தது.
அது பதவியிலிருந்த மூன்று மாநிலங்களில் மேற்கு வங்கம் மற்றும் திரிபுரா ஆகிய இரண்டு மாநிலங்களில் அது வாக்கெடுப்பில் வெளியேற்றப்பட்ட பின்னர் மற்றும் அதன் பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கைகள் மற்றும் ஆதரவு தளங்களில் உருவான கடுமையான வீழ்ச்சியை எதிர்கொண்ட நிலையில், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் மத்தியிலான அதிருப்தியை சுரண்டுவதற்கு ஒரு பேரணியை ஏற்பாடு செய்ய சிபிஎம் முயன்றது.
சிபிஎம் உடன் இணைந்த இந்திய தொழிற்சங்கங்களின் மையத்தின் (Centre for Indian Trade Unions - CITU) தலைவர் கே.ஹேமலதா பேரணியின் போது, “தீவிரப்பட்ட கூட்டு போராட்டங்கள்” பிஜேபி “அதன் தாராளவாத மற்றும் வகுப்புவாத பிளவுற்ற திட்ட நிரலை இன்னும் ஆக்கிரோஷமாக செயல்படுத்தும்” வகையில் 2019ல் அதன் அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள முடியாது என்பதை இது உறுதிப்படுத்தும் என தெரிவித்தார். சிபிஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி இவ்வாறு தெரிவித்தார்: “எதிர்வரும் நாட்களில் நாங்கள் எங்களது போராட்டத்தைத் தீவிரப்படுத்த வேண்டும்… இந்த அரசாங்கம் வெளியேற வேண்டும்.”
பிஜேபி அரசாங்கத்தை எது பிரதியீடு செய்யும் என்பது பற்றி ஸ்ராலினிஸ்டுகள் மௌனம் சாதிக்கின்றனர். இருப்பினும், காங்கிரஸ் தலைமையிலான மற்றொரு முதலாளித்துவ அரசாங்கமே அவர்களுக்கான மாற்றீடு என்பது தெளிவானதே. குறிப்பாக, 2004-14 காலகட்ட காங்கிரஸ் கட்சித் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA) அரசாங்கம் மற்றும் 1996-98 காலகட்ட ஜனதா தளம் தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்கம் (United Front government) போன்ற “மாற்றுக்கள்”, ஸ்ராலினிச ஆதரவுடன் பெருவணிக வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளன. குறிப்பாக, தாராளமயக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் சாக்குப்போக்கில் UPA அரசாங்கம், பாரிய தூண்டுதல்களை ஏற்படுத்தியுள்ளதுடன், அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் நெருங்கிய மூலோபாய கூட்டாண்மையையும் உறுதிப்படுத்தியுள்ளது.
1991 முதல் தொடர்ச்சியான அரசாங்கங்களால் நிறைவேற்றப்பட்ட முதலீட்டாளர் சார்பு நடவடிக்கைகள் விளைவித்த வறுமை மற்றும் விரிவடைந்துவரும் சமூக சமத்துவமின்மை காரணமாக ஆழ்ந்த வர்க்க விரோதங்கள் நிலவுகின்றன.
பெரு முதலாளித்துவ வர்க்கத்தின் ஒரு சிறிய சிறுபான்மையினர் மற்றும் உயர் நடுத்தர வர்க்கத்தின் சலுகை பெற்ற பிரிவினரும் மட்டுமே, கால் நூற்றாண்டுக்கும் அதிகமான பொருளாதாரச் சீர்திருத்தங்களால் பயனடைந்துள்ளனர். மேலும், மொத்த மக்கள்தொகையில் சுமார் 70 சதவிகிதத்தினர் நாளொன்றுக்கு 2 அமெரிக்க டாலர் (144 ரூபா) வருவாயைக் கொண்டு வாழ்க்கையை நகர்த்தி வருகின்ற நிலையில், நாட்டின் மக்கள்தொகையில் முதல் ஒரு சதவிகிதத்தினர் ஒட்டுமொத்த வருமானத்தின் கிட்டத்தட்ட கால் பங்கை அனுபவிப்பதுடன், நாட்டின் மொத்த வளத்தில் 60 சதவிகிதத்தை தங்களுக்கு சொந்தமாக்கிக் கொண்டுள்ளனர்.
WSWS எச்சரித்தது போல: “பிஜேபி அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகள், ‘பெரு முழக்க’ முதலீட்டாளர் சார்பு சீர்திருத்தங்கள், மற்றும் வகுப்புவாதத் தூண்டுதல்கள் ஆகியவை எப்போதும் விரிவடைந்துவரும் சமூக எதிர்ப்பைத் தூண்டிவரும் நிலைமைகளின் கீழ், அதனை தேர்தல் அரசியலின் இறுதி கட்டத்திற்குள் திருப்பி விடவும் மற்றும் மக்கள் சார்பு கொள்கைகளை மேற்கொள்ளும்படி முதலாளித்துவ ஸ்தாபகத்திடம் பயனற்ற விண்ணப்பங்களை விடுப்பதற்கும் ஸ்ராலினிஸ்டுகளைச் சார்ந்துள்ளது. அதில் உள்ளடங்குவது என்னவெனில் பெருகிவரும் சமூக எதிர்ப்பை பிஜேபி இனால் அடக்கி ஒடுக்க முடியவில்லை என்று நிரூபிக்கப்படும் சமயத்தில் சிபிஎம், ஒரு ‘மதச்சார்பற்ற’ மாற்று பெருவணிக அரசாங்கத்தை உருவாக்குவதிலும், -அது ஒரு ‘பெரும் பழமைக் கட்சியான” காங்கிரசின் கட்டுப்பாட்டின் கீழ் முன்னுரிமை பெற்ற ஒரு கட்சியாக இருக்க வேண்டும் என்று விரும்பப்படும் நிலையில்- அதனை தக்க வைப்பதிலும் தனக்குள்ள முன்னணிப் பாத்திரத்தை மீண்டும் எடுத்துக் கொள்கிறது.
“இந்த ஆபத்தான முட்டுக்கட்டையை உடைத்தெறிய, இந்தியாவின் தொழிலாளர்களுக்கும் உழைப்பாளர்களுக்கும் முற்றிலும் புதியதொரு மூலோபாயம் தேவைப்படுகிறது. அதாவது, முதலாளித்துவ வர்க்கத்தின் அனைத்துக் கன்னைகளுக்கும் எதிரான தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் அணிதிரட்டலை அடிப்படையாகக் கொண்ட ஒரு மூலோபாயம் தேவை என்பதுடன், அது வகுப்பவாத பிற்போக்குத்தனத்திற்கு எதிரான போராட்டம் மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கான பாதுகாப்பை ஒரு தொழிலாள வர்க்க அரசாங்கம் மற்றும் சமூகத்தின் சோசலிச மறுஒழுங்கமைவுடன் ஒருங்கிணைப்பதாக இருக்க வேண்டும்.
ஆசிரியர் பின்வரும் கட்டுரையையும் பரிந்துரைக்கிறார்:
இந்திய ஸ்ராலினிச மாநாடு பெருவணிக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை நாடுகிறது
[30 April 2018]