Print Version|Feedback
German government crisis: The working class needs its own strategy against anti-refugee agitation, militarism and war
ஜேர்மன் அரசாங்க நெருக்கடி: அகதிகள்-விரோத கிளர்ச்சி, இராணுவவாதம் மற்றும் போருக்கு எதிராக தொழிலாள வர்க்கத்திற்கு அதன் சொந்த மூலோபாயம் தேவை
By Johannes Stern
26 June 2018
புதிய ஜேர்மன் அரசாங்கம் பொறுப்பேற்று 100 நாட்கள் ஆன நிலையில், கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியம் (CDU), கிறிஸ்தவ சமூக ஒன்றியம் (CSU) மற்றும் சமூக ஜனநாயகக் கட்சி (SPD) இவற்றிற்கிடையிலான கூட்டின் தன்மை பற்றிய சோசலிச சமத்துவக் கட்சியின் (Sozialistische Gleichheitspartei –SGP) அனைத்து எச்சரிக்கைகளும் உறுதிப்படுத்தப்பட்டு இருக்கின்றன.
மூன்றாம் தடவையாக அமைந்த இந்த மகா கூட்டணி, நாஜி ஆட்சியைத் தூக்கி வீசியதற்குப் பின்னர் அமைந்த மிக வலதுசாரித்தன்மை கொண்ட ஜேர்மன் அரசாங்கமாகும். அது பரந்த அளவில் ஜேர்மனியை மறு ஆயுதமயப்படுத்துகிறது, பொலீஸ் அரசு நடவடிக்கைகளை அமல்படுத்துகிறது, சமூக வெட்டுக்களின் ஒரு புதிய சுற்றினை தயாரித்துக்கொண்டிருக்கிறது மற்றும் அதிவலது ஜேர்மனிக்கான மாற்று (AfD) கட்சியின் அகதிகள்-எதிர்ப்புக் கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ளது.
CDU க்கும் CSU க்கும் இடையிலான தற்போதைய வாதம் வளர்ந்துவரும் மக்கள் எதிர்ப்பினை எதிர்கொள்கையில் இந்த பிற்போக்கு வேலைத்திட்டத்தை அமல்படுத்துவதா என்பதிலில்லை, மாறாக இன்னும் சொல்லப்போனால் எப்படி சிறப்பாக அதனை அமல்படுத்துவது என்பதுதான். புலம்பெயர்ந்தோரை நேரடியாக ஜேர்மன் எல்லைக்கு விரட்ட வேண்டும் என்று கோரும் உள்துறை அமைச்சர் ஹோர்ஸ்ட் சீஹோபர் (CSU) இன் “தேசிய தீர்வு” மற்றும் சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் (CDU) இன் “ஐரோப்பிய தீர்வு” என்று அழைக்கப்படுவது இரண்டுமே அகதிகளை பரந்த அளவில் திருப்பி அனுப்புதல் மற்றும் ஒடுக்குதல் சம்பந்தப்பட்டதாகும்.
இந்த வாரத் தொடக்கத்தில் நடந்த செய்தியாளர் மாநாட்டில் மேர்க்கெல் அறிவித்தார்: “CDU வும் CSU வும் எமது நாட்டுக்குள் குடியேற்றத்தை எப்படி சிறப்பாக ஒழுங்குசெய்வது, கட்டுப்படுத்துவது மற்றும் குறிப்பிடத்தக்க வகையில், வரும் மக்களின் எண்ணிக்கையைக் குறைப்பது என்பது பற்றிய ஒரு பொதுவான இலக்கைக் கொண்டிருக்கின்றன, எனவே 2015 போன்ற நிலைமை மீண்டும் நிகழாது மற்றும் நிகழ முடியாது என நாம் நம்புகிறோம்.”
மகா கூட்டணியின் “பொது இலக்கு” ஏற்கனவே கூட்டரசாங்கத்தின் உடன்பாட்டில் வடிவமைக்கப்பட்டுள்ளது, அது “ஐரோப்பிய எல்லையை மற்றும் கடலோரக் காவற்படையை (Frontex) ஒரு உண்மையான ஐரோப்பிய எல்லைப் பொலீசாக அபிவிருத்தி செய்தல்” மற்றும் “உள் எல்லைகளைத் திறமான வகையில் பாதுகாத்தல்” இரண்டையும் அறிவித்தது.
இந்த நிகழ்ச்சிநிரல் இப்பொழுது ஈவிரக்கமற்ற முறையில் அமல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த சிலநாட்களாக, ஐரோப்பிய ஒன்றியமும் அதன் தேசிய அரசாங்கங்களும் ஜேர்மன் மற்றும் ஐரோப்பிய வரலாற்றில் மிக இருண்ட காலங்களை நினைவூட்டும் ஒரு தொடரான முன்மொழிவுகளைச் செய்துள்ளன. கடந்த செவ்வாயன்று, ஐரோப்பிய அவையின் போலந்து தலைவர் டொனால்ட் டுஸ்க் வட ஆபிரிக்காவில் உள்ள புலம்பெயர்ந்தவர்களுக்காக கூடுதல் “இடைத்தங்கல் முகாம்களை” ஏற்படுத்த அழைப்பு விடுத்தார். இவை புலம்பெயர்ந்தோர் கடுமையான இழிவுக்குள்ளாக்கப்படும் தடுப்பு முகாம்கள் ஆகும். கடந்த ஆண்டு, CNN மற்றும் சர்வதேச பொதுமன்னிப்புச் சபை இரண்டும் புலம்பெயர்ந்தோர் லிபியாவில் சித்திரவதை செய்யப்பட்டு, அடிமைகளாக விற்கப்படுகின்றனர் மற்றும் ஐரோப்பிய நிதியூட்டப்பட்ட முகாம்களில் வைத்துக் கொல்லப்படுகின்றனர் என்று அம்பலப்படுத்தின.
ஜூன் இறுதியில் திட்டமிடப்பட்டிருக்கும் ஐரோப்பிய அவைக் கூட்டத்திற்கு முன்னர் ஜேர்மன் அரசாங்கமானது இத்தாலியில் உள்ள புதிய கூட்டரசாங்கத்துடன் மிக நெருக்கமாக ஒத்துழைக்கிறது, அவ்வரசாங்கம் தயாரித்துவரும் நடவடிக்கைகள் பாசிசத்தின் ஆயுதக்கிடங்கில் இருந்து நேரடியாக முளைவிடுவனவாகும். “அனைத்து 600,000” புலம்பெயர்ந்தோரையும் இத்தாலியிலிருந்து வெளியேற்றுவதாக அவர் அச்சுறுத்தியதை அடுத்து, அதிவலது உள்துறை அமைச்சர் இத்தாலியின் லிகா கட்சியின் மத்தேயு சல்வீனி, நாட்டிலுள்ள அனைத்து சிந்தி மற்றும் ரோமர்களும் எண்ணப்பட்டு பதிவு செய்யப்படுவார்கள் என்று அறிவித்தார். இது இத்தாலிய வரலாற்றில் முன்னோடி நிகழ்வைக் கொண்டிருக்கிறது. இரண்டாம் உலகப் போரின் பொழுது பாசிச சர்வாதிகாரியான பெனிட்டோ முசோலினி, அழிப்புக்கான நாஜி கடூழியச்சிறை முகாங்களுக்கு யூதர்களை அனுப்பும் முன்னர் அவர்களை பதிவு செய்தார்.
பல தொழிலாளர்களும் இளைஞர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். மீண்டும் ஒருமுறை ஐரோப்பா எங்கிலும், அதன் கடந்த கால இழிவுகளின் தீய அறிகுறிகள் மோதுவது எப்படிச் சாத்தியமானது என்று அவர்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
இதற்கான விடைக்கு சமூக மற்றம் அரசியல் அபிவிருத்திகளைப் பற்றிய ஒரு மார்க்சிச புரிதல் தேவைப்படுகிறது. கடந்த வாரம், உலக சோசலிச வலைத் தளம் “தொழிலாள வர்க்கமும், புலம்பெயர்ந்தவர்கள் மீதான உலகளாவிய போரும்” என்று தலைப்பிடப்பட்ட ஒரு அறிக்கையை வெளியிட்டது, அது அறிவிப்பதாவது: “புலம்பெயர்ந்தோர் மீதான கொடூரமான மற்றும் சட்டத்திற்குப் புறம்பான தாக்குதல்கள் ஆழமான சமூக சமத்துவமின்மையின் வளர்ச்சியுடனும் தடையின்றி விரிவடையும் ஏகாதிபத்திய போரின் தீவிர வெடிப்போடும் பிணைந்துள்ளது.”
அது மேலும் விளக்குகிறது: “புலம்பெயர்ந்தோர் மீதான தாக்குதல் ஓர் உலகளாவிய நிகழ்வுபோக்கு என்ற உண்மையானது, வெறுமனே ட்ரம்பினதும் அவரது ஐரோப்பிய சமபலங்களினதும் பாசிசவாத சித்தாந்தத்தின் விளைபயன் அல்ல என்பதைத் தெளிவுபடுத்துகிறது. அதற்கு மாறாக, அது முதலாளித்துவ தேசிய அரசு அமைப்புமுறையின் புறநிலை நெருக்கடி மற்றும் வரலாற்று திவால்நிலைமையின் கேடுகெட்ட வெளிப்பாடாகும், இது முன்னொருபோதும் இல்லாத பூகோளமயப்பட்ட பொருளாதார ஒருங்கிணைப்புடன், அதிகரித்தளவில் வன்முறை மோதலுக்கு வந்து, போர் மற்றும் ஒடுக்குமுறையை உருவாக்கி கொண்டிருக்கின்றது.”
ஜேர்மன் மகா கூட்டணிக்குள்ளே உள்ள தற்போதைய மோதல், புலம்பெயர்ந்தோர், அகதிகள் மற்றும் தொழிலாள வர்க்கம் ஒட்டுமொத்தத்திற்கும் எதிராக எப்படி ஆளும் வர்க்கம் மிகவும் சக்திமிக்க வகையில் பயங்கரத்தை ஒழுங்கு செய்யலாம் என்பதில்தான் மையப்படுத்தியுள்ளது. ஆனால் அகதிகள் பிரச்சினையானது ஜேர்மன் அரசியலின் முழு ஒளிக்கற்றையையும் வலதுக்கு நகர்த்துவதற்கும் கூட பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்தமாத ஆரம்பத்தில் நடைபெற்ற ஜி-7 உச்சிமாநாட்டின் தோல்வியையும் அமெரிக்காவுடனான வெளிப்படையான ஒரு வர்த்தக யுத்த வெடிப்பையும் தொடர்ந்து, ஜேர்மன் ஆளும் வர்க்கமானது ஐரோப்பாவில் எப்படி சிறப்பாக அதன் சர்வாதிகாரத்தை அமல்படுத்துவது மற்றும் உலக ரீதியாக ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் புவிசார் மூலோபாயம் மற்றும் பொருளாதார நலன்களை முன்னெடுப்பது என்பதன் மீதான ஒரு உக்கிரமான உள்விவாத குழப்பத்தில் சிக்கிக்கொண்டுள்ளது.
CDU, SPD, பசுமைக் கட்சியினர் மற்றும் இடது கட்சியின் பரந்த தட்டினரால் ஆதிரிக்கப்படும் மேர்க்கெலை சுற்றியுள்ள பிரிவானது, பாரிசுடன் வளர்ந்துவரும் பதட்டங்கள் இருப்பினும், பிரான்சுடன் இராணுவ மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை முன்னேற்றுவதற்கு விரும்புகிறது. மேர்க்கெல் மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனால் ஜூன் 19 அன்று ஒப்புதலளிக்கப்பட்ட மேஸபேர்க் அறிக்கையானது, “எமது பொதுவான வெளியுறவு மற்றும் பாதுகாப்புக்கொள்கையில் ஐரோப்பிய ஒன்றியம் முடிவெடுப்பதை விரைவுபடுத்துவதற்கும் ஒப்படைப்பதற்கும் புதிய வழிகளை ஆய்வு செய்தலுக்கு” அழைப்பு விடுத்தது. குறிப்பாக பிரகடனமானது மற்றவற்றுக்கு இடையில், “ஐரோப்பிய ஒன்றிய பாதுகாப்புச் சபை”, ஒரு பொதுவான மூலாபாய கலாச்சாரத்தை அபிவிருத்தி செய்தல், ஒரு “ஐரோப்பிய தலையீட்டு முன்முயற்சி”, மற்றும் “இராணுவத் திறமைகளின் தொடர்ச்சியான அபிவிருத்தி” இவற்றுக்கு அழைப்பு விடுத்தது.
உலகிலுள்ள மூன்று பெரிய அணுவாயுத வல்லரசுகளுக்கு எதிராக ஐரோப்பாவை ஒரு சுதந்திரமான இராணுவக் கூட்டாக ஒன்றுசேர்த்து உருவாக்கும் அதன் நோக்கத்தில் ஜேர்மன் அரசாங்கம் எந்த இரகசியத்தையும் விட்டுவைக்கவில்லை. ஜூன் 20 அன்று ஜேர்மன் வெளிவிவகார அமைச்சர் ஹைக்கோ மாஸ் (SPD) “ஐரோப்பாவுக்காக – ஐரோப்பா ஐக்கியப்படலுக்கு எழுந்துநிற்கத் துணிக” என்ற தலைப்பில் முக்கிய குறிப்புடைய ஒரு பேச்சை வழங்கினார். ’அமெரிக்கா முதலில்’ என்ற ட்ரம்ப்பின் சுயநலம் மிக்க கொள்கை என்று அவர் குறிப்பது, அரசின் இறையாண்மையையும் சர்வதேச சட்டத்தையும் ரஷ்ய தாக்குதல் மற்றும் அரக்கனின் விரிவாக்கம் அதாவது சீனா இவற்றுக்கு அவரது பதிலாக ஒரு சுதந்திரமான ஜேர்மன்-ஐரோப்பிய வெளிவிவகார மற்றும் பாதுகாப்புக் கொள்கையை கோரினார். முதலாவது மற்றும் இரண்டாவது உலக யுத்தங்களுக்கு முன்பே ஜேர்மன் வல்லரசின் திட்டங்களில் வகுத்தெடுக்கப்பட்ட இந்த மூலோபாயத்தை அமுல்படுத்தல் என்பது, ஒரு தீவிர தேசியவாத வேலைத்திட்டத்தைக் கோருகின்றது.
சீஹோபர் இன் CSU, சுதந்திர ஜனநாயகக் கட்சி (FDP), அதிவலது AfD Bundestag இல் (பாராளுமன்றத்தில்) பிரதிநிதித்துவம் செய்யும் இதர கட்சிகளின் பிரதிநிதிகள் அதிகரித்த அளவில் மற்றும் வெளிப்படையாகவே இதனை வெளிப்படுத்துகின்றனர். சில நாட்களுக்கு முன்னர்தான், பவேரியா அரசின் முதல்வர் Markus Söder, ஐரோப்பாவிலும் உலகிலும் “நேர்த்தியான முறையில் அமைந்த பன்முகத்தன்மையின்” காலகட்டம் “முடிவுகளை எடுக்கும் தனித்தனி நாடுகளால்” அகற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று அறிவித்தார். அதன் விளைவாக “ஜேர்மனிக்கான மரியாதை” நாமும்கூட நமது சொந்த நலன்களை அடைய முடியும் என்ற உண்மையை அடிப்படையாகக் கொண்டாக வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.
மக்ரோனுடனான ஒத்துழைப்பு பற்றி CSU விமர்சனத்தைக் கொண்டிருக்கிறது. பிரான்கோ-ஜேர்மன் உச்சிமாநாட்டிற்கு அடுத்த நாளே சீஹோபர் புகார்செய்தார்: CSU வின் பங்கேற்பு இல்லாது அத்தகைய ஒரு பேரத்தை முடிக்கும் பாணி நல்லதல்ல. அது ஏற்கப்பட முடியாது.” மேர்க்கெல் மற்றும் மக்ரோனுக்கு இடையிலான ஒப்பந்தம் அடுத்த மகா கூட்டணி உச்சிமாநாட்டில் விவாதிக்கப்படும். “ஒவ்வொரு முன்மொழிவும் எவ்வளவு செலவு பிடிக்கும் என்று நாம் அறியும்பொழுது மட்டுமே நாம் அதனைத் தீர்மானிக்கலாம் மற்றும் முடிவு செய்யலாம் என்று அவர் மேலும் சேர்த்தார்.
அரசாங்கத்தரப்புக் கட்சிகள், அடுத்த சில நாட்களாக தேசிய மற்றும் ஐரோப்பிய மட்டத்தில் ஏனைய இதர கூட்டங்களோடு சேர்த்து, மக்களின் முதுகுக்குப் பின்னால் அவர்களின் பிற்போக்கு வேலைத்திட்டங்களை மேலும் அபிவிருத்தி செய்ய கூட்டின் உச்சி மாநாட்டை பயன்படுத்த விரும்புகின்றன என்பது தெளிவாகும். மகா கூட்டணி புதிதாக நிறுவப்பட்டது —கடந்த பொதுத்தேர்தலில் அது பலமான வகையில் வாக்களிக்கப்பட்ட பின்னர்— வங்கிகள், வர்த்தக குழுக்கள், இராணுவம், இரகசிய சேவைகள் மற்றும் அரசியல் கட்சிகள் மூடப்பட்ட கதவுகளுக்குப் பின்னால் பலமாதங்களாக பேச்சுவார்த்தை செய்தும் மறைசூழ்ச்சி செய்தும் வந்த ஒரு சதியின் வெளிப்பாடாகும். CDU, CSU மற்றும் SPD அதிகாரத்தில் இருந்து 100 நாட்களுக்கு பின்னர் ஒரு உடன்பாட்டை இப்பொழுது எட்டமுடியுமா என்பது இன்னும் பார்க்கப்பட வேண்டும். கூட்டணி வெடிப்பது பற்றியும் மேர்க்கெலின் முதல்வர் பதவி விரைவில் முடிவுக்கு வருவது பற்றியும் இப்பொழுது வெளிப்படையாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
தான் தேசிய எல்லைக் கட்டுப்பாடுகளை திணித்தால் தன்னை நீக்குவதற்கெதிராக சீஹோபர் சான்செலரை எச்சரித்தார். “இந்த அடிப்படையில் ஒரு அமைச்சரை நீங்கள் வெளியேற்றினால்,” அவர் Passauer Neue Presse இடம் கூறினார்: “தனது நாட்டின் பாதுகாப்பையும் ஒழுங்கையும் பற்றிக் கவலைப்படும் ஒருவர், உலகின் முதலாவதாக இருப்பார்” என்றார். “அப்போது நாம் எங்கே இருக்கிறோம்? மூன்று கூட்டணிக் கட்சிகளில் ஒன்றின் தலைவராக இருந்தார் மற்றும் அவரது கட்சியின் முழு ஆதரவுடன் செயல்பட்டார்” என அவர் அறிவித்தார். “உள்துறை அமைச்சரின் வேலையில் நாட்டின் முதல்வருக்கு திருப்தி இல்லை என்றால், கூட்டணியை முடித்துக்கொள்வது சிறந்தது” என்று அவர் அறிவித்தார்.
அரசாங்க சர்ச்சை எப்படி வளர்கிறது என்பது ஒரு பொருட்டல்ல, ஒன்று தெளிவாக இருக்கிறது: முன்முயற்சி ஆளும் வர்க்கத்தின் கரங்களில் தொடர்ந்து இருந்தால், அது இராணுவவாதம் மற்றும் மீள ஆயுதமயமாக்கல், சமூக வெட்டுக்கள் மற்றும் அகதிகளுக்கு எதிரான யுத்தம் பற்றிய அதன் கொள்கைகளை முன்னெடுக்கமட்டுமே செய்யும்.
அதன் அளவுக்குறி AfD ஆகும். கடந்த வியாழன் அன்று கட்சித் தலைவர் அலெக்சாண்டர் கவுலாண்ட், Potsdamer Neue Nachrichten க்கு ஒரு பேட்டி அளித்தார், அதில் மகா கூட்டணி AfD கொள்கையை ஏற்றுக்கொண்டது என்ற உண்மையைக் கொண்டாடினார். “பேரளவிலான புலம்பெயர்தல் பற்றி மக்கள் பேசுகின்றனர் என்பதை நாம் உறுதிப்படுத்தி இருக்கிறோம். இதற்கிடையில் சம்பவங்கள் பெரிதும் மாறி உள்ளன,” என்றார் அவர்.
“புகலிட சுற்றுலா ஒரு முடிவுக்கு வந்தாக வேண்டும் என்று திரு Söder சொன்னபொழுது, அல்லது Mr. Dobrindt (Bundestag இல் CSU கன்னையின் தலைவர்) திருப்பி அனுப்புதலுக்கு எதிரான தொழிற்துறை பற்றிக் குறிப்பிட்டபொழுது” அவர் எடுத்துக்காட்டுகளை மேற்கோள் காட்டினார். அவர் தொடர்ந்தார், “அத்தகைய சூத்திரப்படுத்தல்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் எம்மிடமிருந்து வந்திருந்தால், நாம் அதி வலதாக மற்றும் வெளிநாட்டினரை வெறுப்போராக, ஒழிகவென்று முழக்கமிடப்பட்டிருப்போம்.”
AfD இன் வெளிநாட்டவர் மீதான வெறுப்பைக் கிளறிவிடல் அதிகாரபூர்வ கொள்கையில் மேலாதிக்கம் செய்கின்றது என்ற உண்மையானது — சிலவாரங்களுக்கு முன்னர்தான் பேர்லினில் கவுலாண்ட் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு எதிராக பல்லாயிரக்கணக்கான மக்கள் எதிர்ப்பில் ஈடுபட்டார்கள் என்ற உண்மை இருப்பினும் — பிரதானமாக SPD, பசுமைக் கட்சி மற்றும் இடது கட்சியால் வலதுபுறத்திற்கு எடுக்கப்பட்ட திடீர் பக்கச்சாய்வின் காரணத்தால் ஆகும்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்புவரை, கவுலாண்ட் இடது கட்சியின் பாராளுமன்ற கன்னையின் தலைவர் சாரா வாஹன்கினெக்ட் ஐ “விருந்தோம்பலை தவறாகப் பயன்படுத்துவோரின் விருந்தோம்பல் உரிமை பறிக்கப்படும்” என்ற அவரது கூற்றுக்காக புகழ்ந்தார். இன்றோ, வாஹன்கினெக்ட் போலி இடதுகளின் பாராட்டைப் பெற “எல்லைகளைத் திற்ப்பது” “அப்பாவித்தனம்” ஆக இருக்கும் என்கிறார்.
லைப்சிக்கில் இடது கட்சியின் சமீபத்திய கட்சி மாநாட்டில் ஒரு நேர்காணலில், SAV (தொழிலாளர் அகிலத்திற்கான குழுவின் ஜேர்மன் பகுதியான சோசலிச மாற்று) இன் தேசியப் பேச்சாளர் Sascha Stanicic கூட “தேவையின் உணர்வில் உள்ள சொற்றொடர், உதவாது” என்று அறிவித்து, “எல்லைகளைத் திறத்தலுக்கு” எதிராகப் பேசினார்.
இது அதிவலதுகளின் கைகளில் நன்றாகப் பயன்படுத்தப்படுகின்றன !
AfD இலிருந்து இடது கட்சிக்குள்ளே உள்ள மற்றும் அதனைச் சுற்றியுள்ள போலி இடது போக்குகளுடன் மகா கூட்டணி வரை —முழு அரசியல் ஸ்தாபகத்தினாலான வலதுபுறத்துக்கான முன்னோக்கிய திடீர் ஓட்டத்தை— அம்பலப்படுத்தும் மற்றும் தொழிலாள வர்க்கத்திற்கான ஒரு சுதந்திரமான மூலோபாயத்தை வடிவமைக்கும் ஒரே கட்சி சோசலிச சமத்துவக் கட்சி (Sozialistische Gleichheitspartei) ஆகும்.
வலதுசாரி சதித்திட்டத்தை அம்பலப்படுத்தும் பொருட்டு, தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் ஆளும் வர்க்கத்தின் அனைத்துக் கன்னைகளுக்கும் எதிராக ஒரு போரை அறிவித்தாக வேண்டும் மற்றும் நனவாக ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும். ஜேர்மனி மற்றும் ஐரோப்பா முழுவதிலும் உள்ள 20ம் நூற்றாண்டில் இருமுறை இந்தக் கண்டத்தை முட்டுச்சந்தில் கொண்டு வந்து நிறுத்திய முதலாளித்துவ பிற்போக்கிற்கு எதிரான மாற்று, சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு சக்திமிக்க இயக்கத்தைக் கட்டுவதும் ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளுக்காகப் போராடுவதும் ஆகும்.