Print Version|Feedback
Nine years since Sri Lankan civil war ended in massacre of Tamils
இலங்கையின் உள்நாட்டுப் போர் தமிழ் மக்களை படுகொலை செய்வதில் முடிந்ததற்குப் பிந்தைய ஒன்பது ஆண்டுகள்
By K. Nesan and V. Gnana,
18 May 2018
இருபத்தியோராம் நூற்றாண்டின் மிகவும் அவப்பெயர் பெற்ற படுகொலைகளில் ஒன்றின் நினைவு தினத்தை இன்று உலகெங்கிலும் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுதிரண்டு அனுசரித்துக் கொண்டிருக்கின்றனர். இருபத்தியாறு ஆண்டுகால இரத்தவெள்ள உள்நாட்டுப் போர் ஒன்றின் பின்னர், இலங்கை இராணுவமானது, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உயிருடனிருந்த தலைமை உள்ளிட்ட 40,000 க்கும் அதிகமான தமிழ் மக்களை, இலங்கையின் வட-கிழக்கில் இந்தியப் பெருங்கடல் கரையில் இருக்கும் முள்ளிவாய்க்காலில் சுற்றிவளைத்திருந்தது. எந்த முன்னெச்சரிக்கையும் இன்றி, அங்கு சிக்கியிருந்த ஒவ்வொருவரையும் படுகொலை செய்வதற்கு ஒரு ஆவேசமான பீரங்கி குண்டுகளின் மழையை அது தொடுத்தது.
முள்ளிவாய்க்காலில் இருந்த ஒருவரும் இந்த படுகொலையிலிருந்து தப்பிவிடவில்லை. வீடுகள், மருத்துவமனைகள், பாடசாலைகள் மீதும் அப்பாவி மக்கள் மீதும், அத்துடன் குழந்தைகளும், கர்ப்பிணிப் பெண்களும் வயது முதிர்ந்தவர்களும் பாதுகாப்பு தேடி தஞ்சமடைந்திருந்த பதுங்கு குழிகளின் மீதும் இராணுவம் கண்மூடித்தனமாக குண்டுகளை பொழிந்தது. கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்குப் பின்னர், இப்போதும் இலங்கை இராணுவம் இந்த பகுதிக்கு செல்ல முடியாமல் தடை விதித்திருக்கின்றது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் தமது நேசத்திற்குரியவர்களுக்காக துக்கம் அனுசரிப்பதில் இருந்தும் தடுத்துக் கொண்டிருக்கிறது.
மக்களின் இதயங்களில் பீதியை விதைக்கும் பொருட்டு தொலைக்காட்சியில் நேரலையில் ஒளிபரப்பப்பட்ட ஒரு குரூரபயங்கர நடைமுறையில், இலங்கை அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனின் உடலை அடையாளம் காட்டுவதற்காக புலிகளின் இரண்டு கட்சிமாறிகளைக் கூட்டிவந்தது. சேற்றில் கிடந்த அந்த உடல் உண்மையில் பிரபாகரனுடையது தான் என்று தொலைக்காட்சி கேமராக்களுக்கு முன்பாக அவர்கள் உறுதிப்படுத்தியதன் பின்னர், இராணுவம் அந்த உடலை எரித்தது.
இன்று இந்த படுகொலை இலங்கையில் சிங்கள, தமிழ், முஸ்லீம் தொழிலாளர்களாலும் மற்றும் உலகெங்கிலுமுள்ள மில்லியன் கணக்கான தொழிலாளர்களாலும் ஒருமித்து திகிலுடன் நினைவுகூரப்படுகின்றது. இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் எச்சரிக்கைகளை இது துன்பியலான விதத்தில் ஊர்ஜிதம் செய்திருந்தது: முன்னாள் காலனித்துவ நாடுகளில், முதலாளித்துவ ஆளும் வர்க்கங்கள் வரலாற்றுரீதியாக ஒரு ஜனநாயக ஆட்சியை உருவாக்கவோ அல்லது தேசிய மற்றும் மத எல்லைகளைக் கடந்து மக்களை ஐக்கியப்படுத்தவோ திறனற்றவை ஆகும். சோசலிசத்துக்கான ஒரு புரட்சிகரப் போராட்டத்தில் சர்வதேச அளவில் அணிதிரட்டப்பட்ட தொழிலாள வர்க்கத்தின் தோள்களிலேயே இந்தக் கடமைகள் விழுகின்றன.
ஆயினும் முள்ளிவாய்க்கால் படுகொலைக்கான அரசியல் பொறுப்பைக் கொண்டிருப்பது அதனை நடத்திய கொழும்பின் இலங்கை ஆட்சி மட்டுமன்று, உலகெங்குமான அரசாங்கங்கள் இதில் சம்பந்தப்பட்டுள்ளன. விடுதலைப் புலிகள் மீது இலங்கை இராணுவம் அதன் இறுதித் தாக்குதலை தொடுத்த வேளையில், இந்தியா, சீனா, பாகிஸ்தான் மற்றும் ஏகாதிபத்திய சக்திகள் அனைத்துமே கொழும்பிற்கு இராணுவ மற்றும் இராஜதந்திர ஆதரவை வழங்கின. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் கனடா ஆகியவை, முள்ளிவாய்க்காலில் சிக்கியிருந்த அப்பாவி மக்களைக் காப்பாற்றுவதற்கு இலங்கை அரசாங்கத்துடன் மத்தியஸ்தம் செய்யுமாறு அழைப்பு விடுத்து தமிழர்கள் செய்த பாரிய ஆர்ப்பாட்டங்களை உதாசீனம் செய்தன.
படுகொலைக்கு முந்தைய நாளில், விஞ்சமுடியாத சிடுமூஞ்சித்தனத்துடன் பேசிய அன்றைய அமெரிக்க ஜனாதிபதியான பராக் ஒபாமா, தமிழீழ விடுதலைப் புலிகள் தமது ஆயுதங்களைக் கீழே போட வேண்டும், முள்ளிவாய்க்காலில் இருக்கும் அப்பாவி மக்களைப் பாதுகாக்க வேண்டும் ஆதலால் “முதலில் கீழே போடுங்கள்” என்று தெரிவித்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகளை பொறுத்தவரை அதன் தோல்வியானது, முதலாகவும் முதன்மையாகவும், வட-கிழக்கு இலங்கையில் ஒரு தமிழ் முதலாளித்துவ தனிநிலப் பகுதியை கட்டியெழுப்புகின்ற அதன் தேசியவாத மற்றும் பிரிவினைவாத முன்னோக்கில் மூலத்தை கொண்டிருந்தது.
போர் முடிந்து மூன்று நாட்களுக்கு பின்னர் மே 21 அன்று, உலக சோசலிச வலைத் தளம் எழுதியது: “தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகளும் அவர்களது தலைமையும் இலங்கை இராணுவத்தால் ஈவிரக்கமற்று படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர். ஆயினும், தமிழ் மக்களது நெருக்கடியான நிலைமை மீதான அனுதாபமும் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகளுக்கு நேர்ந்த கொடூரமான கதியும், அடிப்படையான படிப்பினைகள் கற்றுக் கொள்வதில் இருந்து தடுத்து விடக்கூடாது.
“26 ஆண்டுகளுக்கு முன்பாக உள்நாட்டுப் போர் தோற்றம் கண்டதில் இருந்தே, தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டமானது நாட்டின் வடக்கு, கிழக்கில் ஒரு குட்டியரசை அமைப்பதற்கு ஏதேனும் ஒரு பெரும் சக்தியின் ஆதரவை வெல்கின்ற ஒரு மூலோபாயத்துடன் பிணைந்ததாகவே இருந்தது.
“1987 இல், இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் வழங்கிய ஆதரவு இந்திய இராணுவத்தை இலங்கையின் வடக்குப் பகுதிக்கு வரவழைத்தது, அங்கு அது ஆயிரக்கணக்கில் அப்பாவித் தமிழ் மக்களை கொன்று குவித்தது. ஒரு சுதந்திர அரசை உருவாக்க உதவும் என்ற நப்பாசையில் இந்திய முதலாளித்துவ வர்க்கத்திற்கு கீழ்ப்படிய தமிழீழ விடுதலைப் புலிகள் உடன்பட்டிருந்தனர்.
“தொடர்ந்துவந்த தசாப்தங்களில், ஏகாதிபத்திய ஆதரவுக்கு விண்ணப்பம் செய்து வந்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகள், தீவில் ஒரு குட்டியரசை உருவாக்குவதற்கான தமது நோக்கம் பரந்த தமிழ் மக்களது வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துவதற்கானது அல்ல, மாறாக சர்வதேச மூலதனத்துக்கு மலிவு உழைப்பை வழங்கக் கூடிய ஒரு முதலாளித்துவ பொருளாதாரத்தை உருவாக்குவதே என்பதை தொடர்ந்து தெளிவுபடுத்தி வந்திருக்கிறது.”
எனினும், தமிழீழ விடுதலைப் புலிகள் படுகொலை செய்யப்பட்டமை கொழும்பில் இருந்த ஊழலடைந்த ஆட்சிக்கு ஒரு புதிய வாழ்க்கைக்கான மறுமலர்ச்சிக்கு வழிவகுக்கவில்லை. தமிழர்களை இரத்தத்தில் மூழ்கடிப்பதற்கான அதன் முயற்சியானது பிரிட்டனில் இருந்து உத்தியோகபூர்வ சுதந்திரமடைந்தது முதலாக இலங்கை முதலாளித்துவத்தை ஆட்டிப்படைத்து வந்திருக்கும் வறுமை மற்றும் இனமோதல் பிரச்சினைகளை தீர்த்துவிடவில்லை.
2009க்குப் பின்னர், அது தனது தமிழர் விரோத வகுப்புவாதக் கொள்கைகளை முடிவுக்குக் கொண்டுவந்து விடவுமில்லை. இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் வாழ்க்கையை மேம்படுத்தி விடவுமில்லை. போரின் போது இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கானோர் இன்னமும் தற்காலிக கூரைகளின் கீழ் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர், இன்னும் ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகள் அழிக்கப்பட்டதற்கான இழப்பீடுக்காக இப்போதும் காத்துக் கொண்டிருக்கின்றனர். இராணுவத்தால் கடத்திச் செல்லப்பட்ட தமது பிள்ளைகளைத் திரும்பக் கொண்டுதர வேண்டி தாய்மார்கள் வருடக்கணக்காக இந்துக்கோயில்கள் முன்பாக ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்கின்றனர். போருக்குப் பின்னர் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்குப் பதிலாக, கொழும்பு, இன்னும் பல தமிழர்களைக் கைது செய்து சித்திரவதை செய்து வந்திருக்கிறது.
இலங்கையின் உள்நாட்டுப் போருக்கு இட்டுச் சென்ற அடிப்படை முரண்பாடுகளில் எதுவும் தீர்க்கப்பட்டு விடவில்லை. சர்வதேச நாணய நிதியத்தின் உத்தரவிலான சிக்கன நடவடிக்கைகள், ஊதியங்கள் மற்றும் வாழ்க்கை நிலைமைகள் மீதான தாக்குதலால் பெரும் கோபம் தூண்டப்பட்ட நிலையில், கொழும்பு அவசரகால நிலை ஒன்றை அறிவித்திருக்கிறது, ஊரடங்கு உத்தரவுகளைத் திணித்திருக்கிறது, அத்துடன் முஸ்லீம் விரோதக் கலவரங்களுக்கு மௌனமாக ஆதரவளித்து வந்திருக்கிறது.
அதேநேரத்தில், இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கின்ற பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்களும் உழைக்கும் மக்களும், வர்க்கப் போராட்டத்தின் ஒரு உலகளாவிய மீளெழுச்சியின் மத்தியில், சிக்கன நடவடிக்கைகள் மற்றும் தனியார்மயமாக்கங்களுக்கு எதிராக இலங்கை முழுவதிலும் மற்றும் ஒட்டுமொத்த இந்தியத் துணைக்கண்டமெங்கிலும் பெருகி வருகின்ற ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களது அலை ஒன்றில் இணைந்து கொண்டிருக்கின்றனர். இந்தக் கோரிக்கைகள், தொழிலாள வர்க்கத்தை கொழும்பு ஆட்சியுடனான ஒரு புரட்சிகர மோதலுக்குள் கொண்டுவரும்.
2015 ஜனவரியில், அமெரிக்க பொறியமைவிலான ஆட்சிமாற்ற நடவடிக்கை ஒன்று, இலங்கையில் “ஜனநாயகத்தையும்” “நல்லாட்சியையும்” கொண்டுவருவதற்காக என்று கூறி, ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவை வெளியேற்றி விட்டு, மைத்திரிபால சிறிசேனாவை ஜனாதிபதியாக அமர்த்தியது. உண்மையில், சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் “ஆசியாவை நோக்கிய திருப்பம்” என்பதன் பின்னால் நிற்கின்ற ஒரு ஆட்சியை கொழும்பில் உருவாக்குவதே வாஷிங்டனின் நோக்கமாய் இருந்தது.
போர்க் குற்றவாளிகளை தலைமைப் பதவிகளில் நியமித்து, ஆரம்பம் முதலே, ஒரு மோசடியான அரசியல் சூழ்ச்சியின் மூலமாகவே இந்த அரசாங்கம் உருவாக்கப்பட்டது. பதில் பாதுகாப்புத் துறை செயலாளராக 2009 படுகொலையை மேற்பார்வை செய்த சிறிசேன, இந்தப் படுகொலையை நேரடியாகத் திட்டமிட்டு செயல்படுத்திய இலங்கையின் இராணுவத் தளபதியான ஜெனரல் சரத் பொன்சேகாவை தனது அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டிருந்தார். இராஜபக்ஷ இன்று தமிழ், முஸ்லீம் விரோத அரசியலை முன்னெடுக்கும் முன்னணி முதலாளித்துவ எதிர்க்கட்சி அரசியல்வாதியாக இருக்கிறார்.
மேலும், 2009 தொடக்கம், தமிழ் தேசியவாதிகள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வெளிப்படையான கைக்கருவிகளாக எழுந்திருக்கின்றனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் இன் அரசியல் அங்கமாக 2001 இல் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு தனி அரசுக்கான தனது கோரிக்கையை கைவிட்டதோடு, இலங்கையின் ஒற்றையாட்சி அமைப்பு முறைக்குள் செயற்படவிருப்பதாக கூறியது, மீண்டும் இது “சர்வதேச சமூக”த்தின் தலையீட்டின் மீதே தங்கி இருக்கின்றது. இந்த அடிப்படையில், அமெரிக்க ஆதரவுடனான ஆட்சிமாற்ற நடவடிக்கையில் அது பங்குகொண்டதுடன் இலங்கையின் போர்க் குற்றங்கள் மீது வழக்கு விசாரணை நடத்தப்படுவதற்கும் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவதற்குமான தனது கோரிக்கைகளையும் கைவிட்டது.
இந்த ஏப்ரலில் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றுக்கு எதிராக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரான ஆர்.சம்பந்தன், சிக்கன நடவடிக்கைகளில் இருந்தும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் பெருகும் போர் பதட்டங்களில் இருந்தும் ஆதாயமடைவதற்கான தனது முன்னோக்கினை அப்பட்டமாய் எடுத்துவைத்தார்: “நாம் ஒரு சிறிய நாடு, ஆனாலும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இராணுவரீதியாகவும் பொருளாதாரரீதியாகவும் மூலோபாயரீதியில் மிகவும் முக்கியமானதொரு இடத்தில் நாம் இருக்கிறோம். இந்தியப் பெருங்கடல் பகுதியின் பொருளாதார மையமாக நம்மால் ஆக முடியும். நமது பொருளாதாரம் மேம்படுமானால் பரந்த மற்றும் பெரிய சந்தைகளுக்கான அணுகல் நமக்குக் கிடைக்கும்….”
இலங்கையின் முதலாளித்துவக் கன்னைகளுக்கும், ஏகாதிபத்தியப் போர் மற்றும் சமூக சிக்கன நடவடிக்கைகளுக்கும் எதிராய் இந்தியத் துணைக்கண்டமெங்கிலும் அனைத்து இன மத பேதங்களையும் கடந்து தொழிலாளர்கள் மத்தியில் எழுந்து கொண்டிருக்கின்ற எதிர்ப்புக்கும் இடையே ஒரு வர்க்கப் பிளவு பிரித்து நிற்கிறது. சர்வதேச தொழிலாள வர்க்கத்தையும் அதன் புரட்சிகரத் தலைமையைக் கட்டியெழுப்புவதையும் நோக்கித் திரும்புவதே தீர்மானகரமான கேள்வியாகும்.
சோசலிச சமத்துவக் கட்சியும் (SEP) சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பும் (IYSSE) போர் மற்றும் இனவாதத்திற்கு எதிரான போராட்டத்தை தமது வேலைகளின் மையத்தில் கொண்டுள்ளன. இந்த கொடூரமான படுகொலையின் நினைவுதினத்தில், இலங்கையிலும் மற்றும் இந்திய துணைக்கண்டமெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களது ஆதரவுக்கு அழைப்பு விடுகின்றோம்.