Print Version|Feedback
Fifty years after May-June 1968, the class struggle erupts in France
1968 மே-ஜூனுக்கு ஐம்பது ஆண்டுகளின் பின்னர், பிரான்சில் வர்க்கப் போராட்டம் வெடிக்கிறது
Alex Lantier
7 April 2018
1968 மே-ஜூன் பிரெஞ்சு பொது வேலைநிறுத்தத்திற்கு அரை நூற்றாண்டு காலம் கழித்து, பிரான்சில் வர்க்கப் போராட்டமானது ஒரு புதிய மற்றும் வெடிப்பான கட்டத்திற்குள் நுழைந்து கொண்டிருக்கிறது. தொழிலாள வர்க்கத்திற்கும் ஒட்டுமொத்த ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவுடனான பிரெஞ்சு அரசாங்கத்திற்கும் இடையில் புரட்சிகரத் தாக்கங்கள் கொண்ட ஒரு மோதல் எழுந்து கொண்டிருக்கிறது.
பிரெஞ்சு தேசிய இரயில்வேயை (SNCF) தனியார்மயமாக்கும் ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் உத்தரவாணைக்கு எதிராக சென்ற வாரத்தில் நடந்த வேலைநிறுத்தம் பிரான்சின் பொதுப் போக்குவரத்தின் பெரும்பகுதியை மூடியது. ஊதிய உயர்வு கோரி போராட்டம் நடத்துகின்ற ஏர் பிரான்ஸ் அலுவலர்களும் பொதுசேவையாக அங்கீகரிக்கக் கோரி போராடுகின்ற மின்வாரிய மற்றும் துப்புரவுத் தொழிலாளர்களும் இரயில்வண்டித் தொழிலாளர்களின் போராட்டத்துடன் கரம்கோர்த்தனர். பல்கலைக்கழகக் கல்விக்கான அணுகலை சிரமமாக்குகின்ற புதிய தேர்வு விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
வர்க்கப் போராட்டத்தின் ஒரு பரந்த சர்வதேச எழுச்சியின் மத்தியில் இந்த அபிவிருத்திகள் நடக்கின்றன. இந்த ஆண்டு ஏற்கனவே ஜேர்மனி, துருக்கி, மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் உலோக மற்றும் வாகன உற்பத்தித் தொழிலாளர்களின், பிரிட்டனில் இரயில்வே தொழிலாளர்களின், மற்றும் பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் ஆசிரியர்களது பரந்த பிரிவுகளின் பெரும் வேலைநிறுத்தங்களைக் கண்டிருக்கிறது.
ஐரோப்பிய வரலாற்றில் மிகப்பெரும் வேலைநிறுத்தமான 1968 மே-ஜூன் பிரெஞ்சு பொது வேலைநிறுத்தத்தின் 50வது ஆண்டின் நிழலில் இந்தப் போராட்டங்கள் நடைபெறுகின்றன. தொழிலாள வர்க்கத்தின் அந்த பாரிய அணிதிரள்வு பிரெஞ்சு முதலாளித்துவத்தையும் ஜெனரல் சார்ல்ஸ் டு கோலின் ஆட்சியையும் வேர் வரை உலுக்கியது. மாணவர் ஆர்ப்பாட்டங்கள் மீதான அடக்குமுறையால் தூண்டப்பட்ட வெகுஜன கோபம் 10 மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்கள் பங்குபெற்ற ஒரு வேலைநிறுத்தமாய் வெடித்தது, பிரான்ஸ் எங்கிலும் தொழிற்சாலைகளின் மீது செங்கொடிகள் பறந்தன.
டு கோலை இரண்டு காரணிகள் காப்பாற்றின. முதலாவது, அப்போது தொழிலாள வர்க்கத்தின் தலைமையான கட்சியாக இருந்த ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் (PCF) எதிர்ப் புரட்சிகரமான பாத்திரம். ஊதிய அதிகரிப்புகளுக்கான பிரதிபலனாய் தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்ப அது ஒழுங்கமைத்து, புரட்சிகர சூழ்நிலையைக் காட்டிக்கொடுத்ததன் மூலம் தொழிலாளர்களை விரக்திகாணச் செய்து 1969 இல் கோலிஸ்ட்டுகள் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட அனுமதித்தது. இரண்டாவது காரணி அந்த வேலைநிறுத்தமானது 1945-1975 வரையான போருக்குப் பிந்தைய எழுச்சியின் உச்சத்தில் வெடித்திருந்தது. முதலாளித்துவம் விட்டுக்கொடுப்புகளை செய்து, கால அவகாசம் பெற்று தன் பதிலிறுப்பைத் தயார் செய்ய அவசியமான அளவுக்கு ஆதாரவளங்களைக் கொண்டிருந்தது. அதிலிருந்து அது பிரெஞ்சு உற்பத்தித் தொழிற்சாலைகளை ஒன்றுமில்லாது செய்து பாரிய வேலைவாய்ப்பின்மை மற்றும் சிக்கன நடவடிக்கையின் கொள்கைகளை அமல்படுத்துவதற்கு சென்றது.
இன்று, வர்க்கப் போராட்டத்திற்கு எந்த சீர்திருத்தவாத சாத்தியங்களும் கிட்டப் போவதில்லை. உலக முதலாளித்துவத்தின் நெருக்கடி ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்ததை விடவும் மிக ஆழமானதாய் இருக்கிறது. 1991 இல் சோவியத் ஒன்றியம் ஸ்ராலினிசத்தால் கலைக்கப்பட்டு 1992 இல் ஐரோப்பிய ஒன்றியம் ஸ்தாபிக்கப்பட்டதற்குப் பிந்தைய கால் நூற்றாண்டு காலப்பகுதியானது, சமத்துவமின்மை ஆழமடைந்து செல்வதையும் மத்திய கிழக்கு, ஆபிரிக்கா மற்றும் யூரோஆசியா எங்கிலும் ஏகாதிபத்திய போர் முனைப்பு தீவிரப்பட்டுச் செல்வதையும் கண்டிருக்கிறது.
மக்ரோன் பின்வாங்கப் போவதில்லை. உலகத்தை மறுபங்கு போடுவதற்கான ஏகாதிபத்தியப் போட்டியில் இணைந்து கொள்வதற்காக, பிரெஞ்சு ஆளும் வர்க்கம், வர்க்க உறவுகளை தீவிரமான விதத்தில் மறுகட்டுமானம் செய்து கொண்டிருக்கிறது. பெரும் ஐரோப்பிய சக்திகள் அனைத்தும் மீள்ஆயுதபாணியாகின்ற நிலையில், மக்ரோன் 2024க்குள்ளாக இராணுவ கட்டமைப்பிற்காக 300 பில்லியன் யூரோக்களை செலவிடுவதற்கும், கட்டாய இராணுவச் சேர்க்கையை மீண்டும் கொண்டுவருவதற்கும், செல்வந்தர்களுக்கு பில்லியன் கணக்கான யூரோக்கள் வரிவெட்டுக்களை அளிப்பதற்கும் வாக்குறுதியளித்திருக்கிறார். இராணுவ எந்திரத்திற்கு நிதியாதாரம் திரட்ட அரசு செலவினத்தையும் ஓய்வூதியங்கள், பொது சுகாதாரப் பராமரிப்பு, மற்றும் வேலைவாய்ப்பின்மைக் காப்பீடு ஆகியவை உள்ளிட்ட அடிப்படை சேவைகளையும் வெட்டுவதற்கு அவர் திட்டமிடுகிறார்.
பிரான்சை ஒரு இராணுவமயப்பட்ட போலிஸ் அரசாக மாற்றுவதற்கு முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை, மக்ரோன் அரசாங்கத்தைக் கீழிறக்குவதற்கும் அரசு அதிகாரத்திற்கான போராட்டத்தில் பிரான்சிலும் மற்றும் ஐரோப்பாவெங்கிலும் உள்ள தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்குமான ஒரு புரட்சிகரப் போராட்டத்தின் மூலம் மட்டுமே தொழிலாளர்கள் எதிர்த்து நிற்க முடியும். இந்தப் போராட்டம் தொழிலாள வர்க்கத்தில் ஒரு புதிய புரட்சிகரத் தலைமையை கட்டியெழுப்புவதற்கான அவசியத்தை கூர்மையாக முன்நிறுத்துகிறது.
சோசலிசத்துக்கு ஆதரவாய் பேசுவதாக பொய்யாகக் கூறிக் கொள்கின்ற அமைப்புகளுடன் 1968 முதலாகவே தொழிலாள வர்க்கத்திற்கு பாரிய அனுபவங்கள் உள்ளது. PCF 1968 இல் அது வகித்த பாத்திரத்தாலும் 1991 இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்படுவதற்கு ஆதரவளித்ததாலும் அழிவைச் சந்தித்தது. 1969 இல் ஸ்தாபிக்கப்பட்ட சோசலிஸ்ட் கட்சி (PS) சிக்கன நடவடிக்கைகள் மற்றும் போருக்கான பிற்போக்குத்தனமான முதலாளித்துவக் கட்சியாக தன்னை நிரூபணம் செய்தது, அக்கட்சியில் இருந்துதான் மக்ரோனும் எழுந்திருந்தார்.
PS ஐ உருவாக்குவதில் ஒரு முக்கிய பாத்திரம் வகித்த, ட்ரொட்ஸ்கிசத்தில் இருந்து ஓடிய பல்வேறு ஓடுகாலிகளின் குட்டிமுதலாளித்துவ வம்சாவளிகளைப் பொறுத்தவரை —Lutte ouvrière, பப்லோவாத முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சி (NPA), அல்லது லம்பேர்ட்வாத சுதந்திர ஜனநாயக தொழிலாளர் கட்சி (POID) ஆகியவை— அவை உயர்-நடுத்தர வர்க்கத்தின் சலுகையுடைய அடுக்குகளுக்காகப் பேசுகின்றன.
தொழிலாளர்கள் இந்தக் குழுக்களுடன் தமக்கு உள்ள விரோதம் குறித்து இப்போது அதிகமான அளவில் அறிந்து கொண்டு வருகின்றனர். முன்னாள் லம்பேர்ட்வாதியும் முன்னாள் PS செனட்டருமான ஜோன் லூக் மெலோன்சோனை சமீபத்தில் ஒரு ஆர்ப்பாட்டத்தில் இருந்து ஆர்ப்பாட்டக்காரர்கள், “மெலோன்சோனே, போய்விடு”, “PS உடன் போ” “செனட்டரே, நீங்கள் அத்தனை அழுக்கு ஒப்பந்தங்களையும் செய்தீர்கள்” மற்றும் “கடவுளும் வேண்டாம், முதலாளியும் வேண்டாம், அல்லது மெலன்சோனும் வேண்டாம்” போன்ற முழக்கங்களை எழுப்பி, வெளியேற்றினர்.
வர்க்கப் போராட்டத்தை மட்டுப்படுத்துவதற்காக, PS மற்றும் தொழிற்சங்கங்கள் தொடங்கி போலி-இடதுகள் வரை நீண்டு செல்கின்ற ஒரு கூட்டணிக்கு NPA ஆலோசனை அளிக்கிறது: “திறந்திருக்கும் பாதையானது, பொதுவான கோரிக்கைகளைச் சுற்றி தொழிற்சங்கங்களையும், கட்சிகளையும் சமூக இயக்க அமைப்புகளையும் ஒன்றாகக் கொண்டுவருகின்ற ஒரு ஐக்கிய முன்னணியை, ஒரு பரந்த ஒருமிப்புக்காய், மக்ரோனை பின்வாங்கச் செய்வதற்கான ஒரு பொது வேலைநிறுத்தத்திற்காய் ஒரு நீண்ட-கால முன்னோக்கைக் கொண்ட ஒரு முன்னணியை, பின்னுகின்றவிதமாய் விரிவுபடுத்தப்பட முடியும்.”
இது சிடுமூஞ்சித்தனமான இரட்டைநாக்குப் பேச்சு ஆகும். ஒரு பிற்போக்குத்தமான அரசியல்வாதியை “பின்வாங்க” செய்வதற்காக ஒரு பொது வேலைநிறுத்தத்தின் திசையில் தொழிலாளர்கள் நகர்ந்து கொண்டிருக்கவில்லை, மாறாக அவரைப் பிடித்து வெளியில் தள்ளுவதற்காக அதனைச் செய்து கொண்டிருக்கிறார்கள். தவிரவும், மக்ரோன் இப்போது தொழிலாளர்களைக் குறிவைத்து திட்டமிடும் சிக்கன நடவடிக்கைக் கொள்கைகளை அமல்படுத்த உதவிய கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களின் ஒரு பரந்த கூட்டணியைத்தான் NPA ஊக்குவித்துக் கொண்டிருக்கிறது. NPA இன் அறிக்கையை ஒருவர் எளிமையான ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பாராயின், “நாங்கள் உங்களைக் காட்டிக்கொடுக்கிறோம்” என்பதே அது கூறுவதாய் இருக்கும்.
இராணுவவாதம் மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்கான எதிர்ப்பை களைத்துப் போகச் செய்து மக்ரோனின் கொள்கைகள் நிறைவேற அனுமதிப்பது என்ற கவனமாய் ஒத்திகை பார்க்கப்பட்ட ஒரு பாத்திரத்தையே NPA யும் அதன் கூட்டாளிகளும் வகிக்கின்றன. தொழிற்சங்கங்கள், ஜூன் வரையில், வாரத்தில் இரண்டு நாட்கள் என சுழற்சி முறை போக்குவரத்து வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துக்கொண்டிருக்கின்றன. இது பொதுமக்களுக்கு அசவுகரியத்தையும் எரிச்சலையும் அளிக்கக்கூடிய அதேநேரத்தில், மக்ரோனை அதிகாரத்தில் விட்டுவைக்கும் என்பதோடு வேலைநிறுத்தம் முடியும் வரை காத்திருந்து விட்டு அதன்பின்னர் SNCF ஐ தனியார்மயமாக்கும் தனது உத்தரவாணையை –சென்ற மாதத்தில் தான் தொழிற்சங்கங்களுடன் அதனை அவர் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்– பிரகடனம் செய்வதற்கு அவரை அனுமதிக்கும்.
தொழிலாளர்களுக்கு மக்ரோனுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எதுவொன்றும் இல்லை. அவருடைய கொள்கை, முறையற்றதும் ஜனநாயக-விரோதமானதும் ஆகும். 2016 இல், மக்ரோனின் உத்தரவாணைக்கு அடிப்படை கட்டமைப்பை வழங்குவதும், தொழிற்சங்கங்களும் முதலாளிகளும் பேசி தொழிலாளர் சட்டத்தில் கொடுக்கப்பட்ட பாதுகாப்புகளை நிறுத்தி வைக்க அனுமதிப்பதும், ஊதியங்கள் மற்றும் வேலை நிலைமைகள் மீது தாக்குவதுமான PS இன் தொழிலாளர் சட்டத்தில் தொழிற்சங்கங்கள் பேரம்பேசின. 70 சதவீத மக்கள் எதிர்ப்பு தெரிவித்த போதும், நாடாளுமன்றத்தில் வாக்களிப்பு கூட இல்லாமலேயே, அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்தி, இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
அவசரகால நிலையின் காலத்தில் ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டின் PS அரசாங்கமானது தொழிலாளர் சட்டத்திற்கு எதிரான பெருந்திரள் போராட்டங்களை வன்மையாக ஒடுக்கியது. இந்த அவசரகால நிலை என்பதே, சிரியாவில் நேட்டோவின் பினாமிப் போரை நடத்துவதில் உதவிய உளவு முகமைகளின் அரவணைப்பின் கீழ் உண்மையில் வேலைசெய்து கொண்டிருந்த இஸ்லாமிய வலைப்பின்னல்களால் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கான பதிலிறுப்பாய் திணிக்கப்பட்ட, ஒரு அரசியல் மோசடியாக இருந்தது.
மக்ரோன் சென்ற ஆண்டில் வேறுதெரிவற்று தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த முன்னாள்-வங்கியாளருக்கும் மக்கள்விரோத நவ-பாசிச வேட்பாளரான மரின் லு பென்னுக்கும் இடையிலான தெரிவுக்கு முகம்கொடுத்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் பங்குபெற்ற வாக்காளர்களில் பாதிக்கும் குறைவானவர்கள் மக்ரோனின் கட்சிக்கு பெரும்பான்மை அளித்தனர். அவ்வாறிருந்தும், நாடாளுமன்றம் PS இன் தொழிலாளர் சட்டத்திற்கு பரந்த அதிகாரங்களைக் கூட்டும் ஒரு வழிவகைச் சட்டத்திற்கு வாக்களித்து, மக்ரோன் உத்தரவாணைகள் மூலமாக வேலை நிலைமைகளை வெட்டுவதற்கு அனுமதித்தது. இந்த சட்டவழியின் படி, வாகன உற்பத்தித் துறையில் வேலை வெட்டுக்களுக்கும் இரசாயனத் துறையில் குறைந்தபட்ச ஊதியத்திற்கும் குறைவான ஊதியங்களுக்கும் வழிவகை செய்கின்ற ஒப்பந்தங்களுக்கு தொழிற்சங்கங்கள் ஏற்கனவே ஒப்புதலளித்து விட்டிருக்கின்றன.
மக்ரோனுக்கு எதிராக அபிவிருத்தி கண்டு வரும் புரட்சிகரப் போராட்டங்கள், தொழிலாளர்களை 1968 க்குப் பிந்தைய காலத்தில் “இடதாக” சொல்லி கடந்து போயிருக்கும் கட்சிகளுடன் தவிர்க்கவியலாமல் மோதலுக்குள் கொண்டுவரும். இதுவே நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) பிரெஞ்சு பிரிவாக PES (Parti de l’égalité socialiste சோசலிச சமத்துவக் கட்சி) ஸ்தாபிக்கப்பட்டதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுவதாகும். இது பிரான்சில் ட்ரொட்ஸ்கிசத்தின் பிரசன்னத்தை மறுஸ்தாபகம் செய்து, போலி-இடதுகளுக்கும் மற்றும் அத்தனை முதலாளித்துவக் கட்சிகளுக்கும் எதிரான தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர அணிதிரட்டலுக்காகப் போராடுகிறது.
தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் சிக்கன நடவடிக்கையை அமல்படுத்துவதில் பகிரங்கமாக பங்கேற்றுவருகின்ற நேரத்தில், PES, பிரான்ஸ் எங்கிலும் வேலையிடங்களிலும், பள்ளிகளிலும் மற்றும் தொழிலாள-வர்க்க சமூகங்களிலும் சாமானியர் அமைப்புகள் (rank-and-file organizations) உருவாக்கப்பட அழைப்பு விடுக்கிறது. ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகத்தின் சமூகத் தாக்குதல்களுக்கும் மற்றும் போர்த் திட்டங்களுக்குமான எதிர்ப்பை விவாதிப்பதற்கும் ஒழுங்கமைப்பதற்கும் தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் களம் தருவதற்கு இவை இன்றியமையாதவையாக இருக்கின்றன.
அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகவும், பொருளாதார வாழ்வை தனியார் இலாபத்தின் அடிப்படையில் அல்லாது சமூகத் தேவையின் அடிப்படையில் மறுஒழுங்கு செய்வதற்காகவும், சாமானியர் அமைப்புகளின் மற்றும் வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சியை ஐரோப்பிய மற்றும் சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தில் இருக்கின்ற ஒரு சர்வதேசியவாத, சோசலிச மற்றும் போர்-எதிர்ப்பு இயக்கத்துடன் இணைப்பதற்கும் PES போராடுகின்றது. போராட்டத்தில் இறங்குகின்ற தொழிலாளர்களிடமும் இளைஞர்களிடமும் PES ஐயும் ICFI ஐயும் ஆதரிப்பதற்கும், அதன் வேலைத்திட்டத்தை கற்பதற்கும், ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் இணைந்து அதனைக் கட்டியெழுப்புகின்ற முடிவை மேற்கொள்வதற்கும் PES அழைப்பு விடுக்கின்றது.