ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Seven days in March: The Trump administration and the breakdown of American democracy

மார்ச் மாத ஏழு நாட்கள்: ட்ரம்ப் நிர்வாகமும், அமெரிக்க ஜனநாயகத்தின் முறிவும்

Patrick Martin
15 March 2018

இவ்வாரம் ட்ரம்ப் நிர்வாகம் எடுத்துள்ள தொடர்ச்சியான பல நடவடிக்கைகள் அந்த அரசாங்கத்தின் எதேச்சதிகார குணத்தையும், அமெரிக்காவில் ஜனநாயக ஆட்சிவடிவங்களின் முறிவையும் அம்பலப்படுத்துகின்றன.

செவ்வாயன்று, ட்ரம்ப் கேள்விமுறையின்றி வெளியுறவுத்துறை செயலர் றெக்ஸ் ரில்லர்சனை நீக்கியதுடன், ட்ரம்பின் நெருக்கமான ஆதரவாளரும் CIA இன் தற்போதைய இயக்குனருமான மைக் பொம்பியோவை கொண்டு அவர் பிரதியீடு செய்யப்படுவதாக அறிவித்தார். அது 140 எழுத்துக்கள் கொண்ட ஒரு ட்வீட் செய்தியில் அறிவிக்கப்பட்ட போது, அந்நேரத்தில் ரில்லர்சன் ஊடகங்கள் வழியாக அந்த பதவிமாற்றத்தை அறிந்து கொண்டதாக செய்திகள் குறிப்பிட்டன.

அரசின் உயர்மட்ட அதிகாரி ஒருவரை மாற்றிய விதம் மிகமுக்கியத்துவம் வாய்ந்ததாகும். ட்ரம்ப் அவரின் மந்திரிசபையைத் துதிபாடிகளின் ஒரு கூட்டமாக, அவருக்கு மட்டுமே விசுவாசமாக இருக்கும் ஒன்றாக கையாள்கிறார், அவ்வாறு அவர்கள் நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறார். வெளியுறவுத்துறை செயலர் பதவி என்பது மந்திரிசபையில் உயர்ந்த பதவியாகும். அது வரலாற்றுரீதியில் மிகப்பெரிய கௌரவத்தைத் தாங்கியுள்ளதுடன், அப்பதவி வகிப்பவர் ஜனாதிபதிக்கு அடுத்து சட்ட வரிசையில் நான்காவது முக்கிய நபராக இருக்கிறார்.

ட்ரம்ப் மக்களிடையே மதிப்பற்றவர்களை தேர்ந்தெடுக்கிறார், பகிரங்கமாக அவர்களை அவமதித்து, பின்னர் குப்பைகளைப் போல அவர்களைத் தூக்கி வீசுகிறார். இது தனிநபர்கள் மீதான அவரது அவமரியாதையை மட்டுமல்ல, மாறாக அவர்கள் வகிக்கும் பதவி மீதான அவரின் அவமரியாதையையும் எடுத்துக்காட்டுகிறது.

அதே ட்வீட் அறிக்கை ரில்லர்சனின் இடத்தில் பொம்பியோவை இருத்துவதாக அறிவித்தது, ஒரு உளவுத்துறை அதிகாரி அமெரிக்க அரசின் வெளியுறவு பிரதிநிதியாக முக்கிய பதவிக்கு மேலுயர்த்தப்படுவது இதுவே முதல்முறையாகும். பொம்பியோ பதவியில் சிஐஏ இன் துணை இயக்குனர் ஜினா ஹாஸ்பெல்லை இருத்துவதாகவும் ட்ரம்ப் அறிவித்தார். தாய்லாந்தில் உள்ள ஓர் இரகசிய சிஐஏ சிறைச்சாலையில் நீரில் மூழ்கடித்தல் உட்பட, CIA இன் ஆள்கடத்தல் மற்றும் சித்திரவதைப்படுத்தும் திட்டத்தை வழிநடத்தியதில் அவர் வகித்த பாத்திரத்திற்காக ஹாஸ்பெல் இழிபெயர் பெற்றவராவார்.

இவை எல்லாம் ஒரு வார காலத்திற்குள் வெள்ளை மாளிகையிலிருந்து வெளிப்பட்ட வெளிப்படையான முடிவுகள் மற்றும் நடவடிக்கைகளில் சமீபத்தியவை மட்டுந்தான்:

* புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிராக பாரிய ஒடுக்குமுறையை தீவிரப்படுத்துவதற்கு எதிரான எந்தவொரு எதிர்ப்பையும் நசுக்க நீதிமன்றங்களை பயன்படுத்தக் கோரி, நீதித்துறை கலிபோர்னியா மாநிலத்திற்கு எதிராக மனுத் தாக்கல் செய்தது. அமெரிக்க-மெக்சிகோ எல்லையை ஒட்டி அவர் முன்மொழிந்திருந்த தடுப்புச் சுவருக்கான மாதிரிகளைப் பார்வையிட ட்ரம்ப் தென் கலிபோர்னியா சென்றிருந்த போது, அம்மாநில அதிகாரிகள் குற்றவாளிகளுக்கு உதவுவதாகவும், புலம்பெயர்ந்தவர்களால் படுகொலை செய்யப்படும் அபாயத்திற்கு பொலிஸ்காரர்களை உட்படுத்துவதாகவும் அறிவித்தார்.


* பல ஆலோசகர்களின் வலியுறுத்தல்களை நிராகரித்து, அவர்களில் ஒருவர் எதிர்ப்பைக் காட்ட இராஜினாமாவே செய்தார் என்ற நிலையிலும், ட்ரம்ப் உருக்கு மற்றும் அலுமினிய இறக்குமதிகள் மீது வரி விதிக்கும் ஆணையில் கையெழுத்திட்டார், அதேவேளையில் ஒரு வர்த்தக போரைத் தொடங்கும் அவர் விருப்பத்தையும் பெருமைபீற்றினார். இது உலகப் பொருளாதாரம் மீது கணிப்பிடமுடியாத பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடியதாகும்.


* ட்ரம்ப் அவரின் உயர்மட்ட இராணுவ மற்றும் இராஜாங்க உதவியாளர்களுக்கு கூட குறிப்பிடாமல், வட கொரிய தலைவர் கிம் ஜொங்-யுன் உடன் ஒரு சந்திப்புக்கு ஒப்புக் கொண்டார், அந்த சந்திப்பு நடைபெறாமல் போனாலோ அல்லது தோல்வியடைந்தாலோ அதை ஒரு சர்வதேச ஆத்திரமூட்டலுக்கு ஒத்திகையாக்கும் ஒரு முயற்சியாகவும், போருக்கான சாக்குபோக்காக மாறக்கூடிய ஒன்றாக அது பரவலாக பார்க்கப்படுகிறது.

* பென்சில்வேனியாவில் ஒரு பிரச்சார பேரணியில் ட்ரம்ப் உரையாற்றுகையில், ஊடகங்களை அச்சுறுத்தியதுடன், அரசியல் எதிர்ப்பாளர்களை கொச்சையான மற்றும் இனவாத வார்த்தைகளில் கண்டித்தார் மற்றும் போதை மருந்து வினியோகஸ்தர்களைத் தூக்கிலிட அழைப்புவிடுத்தார்.

இவையெல்லா நிகழ்வுகளும் ஒரேமாதிரியான தன்மையைக் கொண்டுள்ளன: அதாவது, ட்ரம்ப் தன்னை இன்னும் கூடுதலாக முசோலினியின் பாணியில் நடத்திக் காட்டுகிறார், மேலும் அமெரிக்க சமூகத்தில் உள்ள எவ்வகையான தவறுகளையும் தன்னால் மட்டுமே தீர்க்கமுடியும் என்று 2016 பிரச்சாரத்தில் அவர் அடிக்கடி அறிவித்ததை நடைமுறையில் நிறுத்துகிறார். அவர் தன்னை அமெரிக்கா மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாகவோ, அல்லது இரண்டு பிரதான முதலாளித்துவ கட்சிகளில் ஒன்றின் தலைவராகவோ அல்ல, மாறாக ஒரு தனிப்பட்ட ஆட்சியாளராக, இலத்தீன் அமெரிக்க அல்லது பாசிச பாணியிலான ஒரு எதேச்சதிகாரியாக, அனைத்து பிரதான சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகளுக்கும் தீர்வளிப்பவராக நடந்து கொள்கிறார்.

இடைத்தேர்தல்கள் முடிந்து ஐந்து நாட்களுக்குப் பின்னர், இராணுவத்தினர் தினத்திற்கு முன்னோட்டமாக, இப்போது வாஷிங்டனில் ஓர் இராணுவ அணிவகுப்பை நடத்த ட்ரம்ப் உத்திரவிட்டுள்ளார். கருத்துக்கணிப்புகளில் எதிர்பார்க்கப்படும் எதிர்மறை முடிவுகளைச் சரிக்கட்டுவற்காக, வெள்ளை மாளிகை மற்றும் தலைமைச் செயலகத்தின் மேலே விண்ணில் போர் விமானங்கள் பறக்க, இராணுவ பலத்தின் காட்சிப்படுத்தலைப் பயன்படுத்தலாமென அவர் உத்தேசிக்கிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இது ட்ரம்ப் என்னசெய்யவுள்ளார் என்ற கேள்வியைத் தான் எழுப்புகிறது: ட்ரம்பின் தரம் என்ன?

ட்ரம்பிடம் இருந்து இன்னும் "ஆச்சரியங்கள்" வரும். தான் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் ஒரு கோமாளியாக அவரை உதாசீனப்படுத்தும் ஒரு போக்கு பத்திரிகைகளில் நிலவுகிறது. இதனுடன் சேர்ந்து அரசியல் அபாயத்தின் ஓர் குறைமதிப்பீடு வருகிறது.

லாஸ் வேகாஸின் அட்லாண்டிக் நகரின் நிழலுலகிலும் மற்றும் நியூ யோர்க் ரியல்எஸ்டேட் சந்தை சூழலுக்குள் இயங்கி பழகிய, ஒரு குற்றவாளி வகையைச் சேர்ந்தவர் ட்ரம்ப். அவர் "va banque” (தரகு பிடிக்கும்) விளையாட்டில் நாட்டம் கொண்டவர். அனைத்திற்கும் மேலாக, உள்நாட்டு அரசியல் நெருக்கடியைத் தீர்ப்பதற்கான ஒரு முயற்சியில் அங்கே போர் தொடங்கும் அமெரிக்க அரசியல் பாரம்பரியம் ஒன்றும் உள்ளது, அதுபோன்ற எந்தவொரு போரும் மிகவும் பேரழிவுகரமான விளைவுகளைக் கொண்டு வரும்.

உத்தியோகபூர்வ அரசியல் வட்டாரங்களில் எந்தவொரு விடையிறுப்போ அல்லது குறிப்பிடத்தக்க எதிர்ப்போ முற்றிலுமாக இல்லை என்பது சமஅளவில் வெளிப்படையாக உள்ளது. பெரிதும் ட்ரம்பின் சொந்த மந்திரிசபையே கூட, தங்களின் சொந்த அரசியல் ஆதரவு வட்டம் எதுவும் இல்லாத, பெரும்பாலும் ட்ரம்பை போலவே பிற்போக்கான மற்றும் அலட்சியமான, ஜனநாயக உரிமைகள் மற்றும் அரசியலமைப்பு வழிவகைகளைப் புறக்கணிக்கின்ற மில்லியனர்கள் மற்றும் பில்லியனர்களை, உள்ளிணைத்துள்ளது.

ஜனநாயகக் கட்சியினரோ அரசியலமைப்பு வழிமுறைகளுக்கு எதிராக அதிகரித்து வரும் இந்த சதிக்கு எதிர்ப்பாளர்களாக இல்லை, அவர்கள் அதை முறிப்பதன் மற்றொரு வடிவமாக இருக்கிறார்கள். அவர்கள், வெள்ளை மாளிகையின் தலைமை இராணுவ தலைவர் (White House chief of staff) ஜோன் கெல்லி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எச். ஆர். மெக்மாஸ்டர், மற்றும் பாதுகாப்புத்துறை செயலர் ஜேம்ஸ் மாட்டீஸ் என நிர்வாகத்தின் உயர்மட்ட பதவிகளில் உள்ள மூன்று இராணுவ அதிகாரிகளை, "அறையில் வயது முதிர்ந்தவர்கள்" இருப்பதாகவும், அவர்கள் ட்ரம்பின் மிதமிஞ்சிய ஆட்டத்திற்கு கடிவாளமிடுவார்கள் என்றும் கூறி அம்மூவரையும் முன்வைக்கின்றனர்.

இடைத்தேர்தல்களில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களைக் குறித்த ஒரு விரிவான ஆய்வில் உலக சோசலிச வலைத் தளம் (WSWS) ஆவணப்படுத்தியவாறு, அக்கட்சி முக்கியமாக CIA ஆல் "சிநேகிதமாக கையகப்படுத்தபடும்" நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. அந்த முகமைக்கு தலைமை கொடுக்க சித்திரவதையாளர் ஹாஸ்பெல்லை வேட்பாளராக்கிய ஜனநாயகக் கட்சியின் விடையிறுப்பு, செனட் நிதிக்குழு குறித்து இரண்டாம் நிலையில் உள்ள ஜனநாயகக் கட்சியாளர் டயான் ஃபைன்ஸ்டைன் தொகுத்தளித்தார்: “அந்த முகமை மீது அப்பெண்மணிக்கு நம்பிக்கை இருப்பதாக தெரிகிறது, இது நல்ல விடயம் தான்,” என்றார்.

அதன் ட்ரம்ப் குறித்த விமர்சனங்களில் 2016 தேர்தலில் ரஷ்ய குறுக்கீட்டது என்ற இட்டுக்கட்டப்பட்ட குற்றச்சாட்டுக்களை மையப்படுத்தி உள்ள ஜனநாயகக் கட்சியினர், ஒபாமா நிர்வாகத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட பலமான ரஷ்ய-விரோத கொள்கையில் எந்த நிராகரிப்பையும் எதிர்க்கும் இராணுவ-உளவுத்துறை எந்திரத்தின் பிரிவுகளது குரலாக செயல்படுகின்றனர்.

அமெரிக்காவிலும் —உலகெங்கிலும்— உழைக்கும் மக்களுக்கு முதலாளித்துவ அரசியலின் கட்டமைப்புக்குள் எந்த மாற்றீடும் கிடையாது. எந்தவொரு அறியப்பட்ட அரசியலமைப்பு அல்லது சட்ட கட்டமைப்புக்கு வெளியே செயல்பட்டு, ஒரு பாசிசவாத சமூக அடித்தளத்தை விதைக்க முனைந்து, ஒருபுறம், அதிதீவிர-வலது தீவிரகொள்கையாளராக ட்ரம்ப் ஆட்சி செய்து வருகிறார். மறுபுறம், இணைய தணிக்கை மற்றும் உள்நாட்டில் சமூக பதட்டங்களை ஒடுக்குவதற்கு அது தனது “பதிலாக” இதுவரையில் எந்தவொரு ஜனநாயக கருத்துருவையும் கைவிட்டுள்ள ஓர் அரசியல் எதிர்ப்பை காட்டுவதுடன் அதேவேளையில் அது உலகின் இரண்டாவது மிகப் பெரிய அணுஆயுத சக்தியுடன் போருக்கு அறிவுறுத்தி வருகிறது.

பழைய ஆட்சி வடிவங்களும், 230 ஆண்டு பழமையான அரசியலமைப்பு கட்டமைப்பு மொத்தமும், இரண்டு கட்சிகளையும் கட்டுப்படுத்துகின்ற உயர்மட்டத்தில் உள்ள ஒரு சிறிய செல்வ செழிப்பான உயரடுக்கிற்கும் மற்றும் பரந்த பெருந்திரளான வறிய மக்களுக்கும் இடையே அமெரிக்க சமூகத்தைப் பிளவுபடுத்துகின்ற அதிகரித்த சமூக சமத்துவமின்மை தாக்கத்தின் கீழ் சிதைந்து வருகிறது.

ட்ரம்ப் நிர்வாகத்தின் குணாம்சத்தை, அதை உருவாக்கிய முதலாளித்துவ அமைப்புமுறையிலிருந்து பிரிப்பது சாத்தியமே இல்லை. அதற்கு எதிராக அணித்திரட்டப்பட வேண்டிய சமூக சக்தி தொழிலாள வர்க்கமாகும். இந்தாண்டு ஏற்கனவே அமெரிக்காவிலும், சர்வதேச அளவிலும், வர்க்க போராட்டத்தின் பலமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. இந்த அபிவிருத்தி அடைந்து வரும் புறநிலை இயக்கத்திற்கு, ஒரு சோசலிச நனவை மற்றும் ஒரு சோசலிச அரசியல் தலைமையை அறிமுகப்படுத்துவதே அவசர பணியாகும்.