Print Version|Feedback
German grand coalition planning major military build-up
ஜேர்மன் பெரும் கூட்டணி பெரியளவில் இராணுவ தயாரிப்பிற்கு திட்டமிடுகிறது
By Peter Schwarz
14 February 2018
ஜேர்மனியின் புதிய அரசாங்கத்தினது எதிர்கால கொள்கையின் திசை எவ்வாறிருக்கவேண்டும் என்பது தொடர்பான அதிகாரப்போட்டியை வெறுமனே தனிநபர்களுக்கு இடையிலான போட்டியாகவும், தலைமுறைகளுக்கு இடையிலான கருத்து முரண்பாடுகளாகவும், அல்லது சோகமான கிரேக்க துயரங்கள் மீதான மோதல்களாகவும் விவரித்து சமீபத்திய நாட்களில் டஜன் கணக்கான கருத்துரைகள் ஊடகங்களில் வெளியாகி உள்ளன. Süddeutsche Zeitung நாளிதழ் சமூக ஜனநாயகக் கட்சி (SPD) தலைவர் மார்டீன் சூல்ஸை ஒரு "பரிதாபகரமானவர்" என்று குறிப்பிட்டதுடன், SPD இன் தற்போதைய வெளியுறவு அமைச்சர் சிக்மார் காப்ரியேல் குறித்து “போட்டி, பகுதிவெற்றி, தோல்வி” என்று ஒரு கட்டுரைக்கு தலைப்பிட்டது.
இந்த மோதல்களைத் தூண்டிவிட்டு வரும் அரசியல் பிரச்சினைகள் குறித்த ஒரு பகுப்பாய்வை ஒருவர் தேடினால் பிரயோசனமற்றதாகத்தான் இருக்கும். இதற்கு ஒரு சாதாரணமான காரணம் உள்ளது. வெளியுறவு கொள்கை மீது, குறிப்பாக அமெரிக்கா உடனான ஜேர்மனியின் உறவுகள் விடயத்தில், அரசியல் கட்சிகளுக்கு இடையிலும், அவற்றிற்கு உள்ளேயும் கடுமையான மோதல்கள் கிளர்ந்தெழுந்து வருகின்றன. ஆனால் இதை யாரும் பகிரங்கமாக விவாதிக்க விரும்பவில்லை, ஏனென்றால் பின்னர் அவர்கள் திட்டமிட்டு வரும் பாரிய இராணுவ தயாரிப்பு பகிரங்கமாகிவிடும். இது மக்களிடையே பலமான எதிர்ப்பையும் சந்திக்கும்.
வெளியுறவு கொள்கைகளுக்கான ஜேர்மன் கவுன்சில் (DGAP) பிரசுரிக்கும் IP சஞ்சிகையின் ஜனவரி/பெப்ரவரி பதிப்பில், “இக்கட்டான நிலைமையில்" என்று தலைப்பிட்ட ஒரு பகுதி உள்ளது, இது வெளியுறவு கொள்கைகள் தொடர்பாக மூடிய கதவுகளுக்குப் பின்னால் நடந்து வரும் விவாதங்களைக் குறித்த ஒரு துணுக்கை வழங்குகிறது.
இந்த பகுதி இரண்டு முகாம்களை வேறுபடுத்தி காட்டுகிறது: “அமெரிக்கா, ட்ரம்ப் பதவி காலத்திற்குப் பின்னர், தாராளவாத உலக ஒழுங்கின் அச்சாணியாக மீண்டும் அதன் பாத்திரத்தை வகிக்க திரும்பும்” என்று நம்புகின்ற "அட்லாண்டிக்வாதிகள்", டொனால்ட் ட்ரம்ப்பின் பதவிக் காலத்திலும் அட்லாண்டிக் இடையிலான உறவுகளைப் பேண" விரும்புகின்றனர். “அமெரிக்காவின் பின்வாங்கல் நிரந்தரமானது,” என்று அஞ்சும் "அட்லாண்டிக்வாதத்திற்கு பின்னான காலத்தவர்கள்", “அமெரிக்காவிடமிருந்து தங்களை விடுவித்துக் கொண்டு,” “ஐரோப்பா மீது இன்னும் பலமாக ஒருமுனைப்பட" வேண்டுமென விரும்புகிறார்கள்.
இரண்டு தரப்புமே "ஜேர்மனி மற்றும் ஐரோப்பா எதிர்கொண்டிருக்கும் சவால்களின் அளவினை உணரத் தவறுவதாக" IP இன் ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இந்த சவால்கள் முக்கியமாக இராணுவத்துறையில் இருப்பதாக பார்க்கப்படுகிறது. அமெரிக்காவுடன் கூட்டணியைப் பேணுவதானாலும் சரி, குறிப்பாக வாஷிங்டனிடம் இருந்து விடுவித்துக் கொள்வதானாலும் சரி இரண்டுக்குமே இராணுவ செலவுகளைப் பாரியளவில் அதிகரிப்பது அவசியமாக இருக்கும்.
நீண்டகால ஓட்டத்தில் அமெரிக்காவுடன் கூட்டணியைப் பேணுவதற்கான முயற்சி செயல்படுத்தப்பட்டாலும் கூட, அங்கே "நடப்பு நடைமுறைக்கு திரும்ப முடியாது.” “நேட்டோவிற்குள் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவுக்கு இடையே சுமையைச் சமமாக பகிர்ந்து கொள்வதற்கான" கோரிக்கை ட்ரம்புக்குப் பின்னரும் இருக்கும் என்பதுடன், அமெரிக்கா "அதிகரித்தளவில் ஐரோப்பிய அமைதிவாதத்தைச் சகித்துக் கொள்ள விரும்பவில்லை,” என்று IP குறிப்பிடுகிறது.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அமெரிக்காவின் எதிர்கால போர்களில் ஜேர்மனி பங்கெடுக்க தயாராக இருந்து, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 2 சதவீதம் என்ற நேட்டோ இலக்கை எட்ட குறைந்தபட்சமாக இராணுவ செலவுகளை இரட்டிப்பாக்கினால் மட்டுமே அட்லாண்டிக்வாதிகளின் முன்னோக்கு யதார்த்தமாகும். இது வருடாந்தர இராணுவச் செலவுகளை 30 பில்லியன் யூரோவுக்கும் 40 பில்லியன் யூரோவுக்கும் இடையே கொண்டுசெல்லும்.
IP ஆசிரியர்களின் கருத்துப்படி, அட்லாண்டிக்வாதத்திற்கு பின்னான காலத்தவர்களின் திட்டங்களோ இன்னும் அதிக செலவு மிக்கதாக இருக்கும். IP எழுத்தாளர்கள், “இராணுவ பலத்தின் முக்கியத்துவம் தொடர்ந்து தீவிரமடைந்து வருவது குறித்தும், எல்லா பாதுகாப்பு விடயங்களிலும் ஐரோப்பியர்கள் அமெரிக்காவை சார்ந்திருப்பதைக் குறித்தும்" குறைமதிப்பீடு செய்வதாக அவர்களை குற்றஞ்சாட்டுகிறார்கள்.
எவ்விதத்திலும், “இந்த அரசாங்கம் பாதுகாப்புதுறைக்கென உள்நாட்டு மொத்த உற்பத்தியில் செலவிடப்படும் தற்போதைய 1.2 சதவீதத்தை விட கூடுதலாக செலவிட வேண்டியிருக்கும்,” என்று IP கட்டுரை குறிப்பிட்டு செல்கிறது. இன்னும் அதிக முக்கியமானது என்னவென்றால், “எதிர்வரவிருக்கும் காலத்தில் ஐரோப்பிய பாதுகாப்பு கொள்கையில் இந்த அரசாங்கம் மிகவும் செயலூக்கத்துடன் பாத்திரம் [வகிக்கிறது], அது "அந்நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் பலத்தின் யதார்த்தத்திற்கு பொருத்தமாக இருக்கின்றது.”
மற்ற ஐரோப்பிய சக்திகள் ஜேர்மனியால் "பாதுகாக்கப்பட" தங்களைத்தாங்களே அனுமதிக்கும் என்ற கருத்து, IP எழுத்தாளர்களால் ஒரு நப்பாசையாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. “1945 க்குப் பின்னர் ஐரோப்பிய ஒருங்கிணைவு அமெரிக்க பாதுகாப்பு உத்தரவாதத்தினால் மட்டுமே சாத்தியமாக்கப்பட்டது,” என்பதை நினைவூட்டும் அவர்கள், “எப்போதுமே நேட்டோவுக்குள் பிளவுகள் என்பது ஐரோப்பாவிற்குள்ளேயே பிளவுகள் என்பதாகும்,” என்று குறிப்பிட செல்கிறார்கள்.
பிரிட்டன் வெளியேறியதற்குப் பின்னர் "ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் ஒரே அணுஆயுத சக்தியாகவும், அதையும் விட மிகப் பெரிய அணுஆயுதமில்லா தளவாடங்களைக் கொண்ட இராணுவ பலத்துடனும் விளங்கும் பிரான்சை ஜேர்மனி சார்ந்திருக்க விரும்பினால், அது "அனுமானிக்கத்தக்க வகையில், ஒரு சமரச உடன்பாட்டு வடிவில், பொருளாதார கொள்கை மீது விட்டுக்கொடுப்புகளைச் செய்ய வேண்டியிருக்கும், இதை செய்வதற்கு ஏதோவொரு விதத்தில் அது நீண்டகாலமாக மறுத்து வந்துள்ளது.”
இந்த பிரச்சினைகள் எல்லாம் பழமைவாத கட்சிகளுக்கும் சமூக ஜனநாயகக் கட்சிக்கும் இடையிலான கூட்டணி பேச்சுவார்த்தைகளின் போது விரிவாக விவாதிக்கப்பட்டிருக்கும் என்பதிலும், இவையே வரவிருக்கும் அரசாங்கத்தின் வெளியுறவு கொள்கையைத் தீர்மானிக்கும் என்பதிலும் எந்த ஐயமும் இல்லை. IP இதழின் அதே பதிப்பு, ஒரு விபத்தில் உயிரிழந்த IP இன் தலைமை ஆசிரியர் Sylke Tempel க்கான நினைவாஞ்சலி நிகழ்வில், 11 டிசம்பர் 2017 அன்று, வெளியுறவு மந்திரி காப்ரியேல் பேசிய ஓர் உரையையும் உள்ளடக்கி உள்ளது. அதில் அவர், அதில் உள்ளடங்கிய எல்லா விளைவுகளுடன், வெளிப்படையாகவே தன்னை அட்லாண்டிக்வாதத்திற்கு பின்னான காலத்தவர்களின் முகாமில் நிறுத்திக் கொள்கிறார்.
“ட்ரம்ப் ஜனாதிபதி பதவியின் கீழ் உள்ள ஒரு விதிவிலக்கான காலத்திற்குப் பின்னர், நாம் நமது பழைய பங்காண்மைக்குத் திரும்பலாம் என்று அட்லாண்டிக் கடந்து சிந்திக்கும் பல ஜேர்மனியர்களின் நம்பிக்கையை" காப்ரியேல் பகிர்ந்து கொள்ளவில்லை. “இனி 'பழையபடி திரும்புவதை' சாத்தியமில்லாது" செய்யும் புதிய உண்மைகள் ட்ரம்பின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் பாத்திரத்தை "ஒரு பாதுகாப்பிற்குரியதாக சுயமாகவே எம்மை நோக்கிய தன்மை "உடையத்" தொடங்கி உள்ளது. “ஈரான் உடனான உடன்படிக்கையில் ஆகட்டும் அல்லது உலகளாவிய சுதந்திர வர்த்தகம் ஆகட்டும்—மத்திய பிரச்சினைகளில் நாம் அமெரிக்காவுடன் முரண்பட்டுள்ளோம்,” என்ற உண்மையில் இதைக் காணலாம்.
அமெரிக்காவில், அவர்கள் "நம்மை ஒரு போட்டியாளராக, சில வேளைகளில் ஒரு எதிராளியாகவும் கூட கருதுகிறார்கள்,” என்று காப்ரியேல் குறிப்பிட்டார். “உலகம் இப்போது ஓர் உலகளாவிய சமூகமாக தெரியவில்லை, மாறாக, ஏற்கனவே கோஹன் மற்றும் மெக்மாஸ்டரால் நியூ யோர்க் டைம்ஸின் பிரபல கட்டுரையில் குறிப்பிடப்பட்டவாறு, போர்க்களமாக தெரிகிறது, அதில் ஒருவரையொருவர் பிணைக்கும் உடன்படிக்கைகளை விட மோதல்களே உலகை நெறிப்படுத்தும்,” என்றார்.
1945 க்கு முந்தைய ஜேர்மன் வல்லரசு கொள்கைகளுக்குத் திரும்புவதே இதன் அர்த்தம் என்பதில் காப்ரியேல் எந்தவொரு ஐயத்திற்கும் இடம் வைக்கவில்லை. “உலகின் பிரச்சினைகளில் இருந்து நம்மை தடுத்து வைத்துக் கொள்ள முடியாது,” என்றார். “இதன் அர்த்தம் நாமும் நமது நலன்களை வரையறுக்க வேண்டியுள்ளதுடன், இனியும் மதிப்புகள் அடிப்படையிலான வெளியுறவு கொள்கையைப் பின்பற்றுவதற்காக என்ற நல்லெண்ண கூற்றுடன் கட்டுண்டு கிடக்க முடியாது. நமது நலன்களை நெறிப்படுத்த வேண்டும் மற்றும் உலகின் மீது ஒரு மூலோபாய பார்வை கொண்டிருக்க வேண்டும் என்பதை நாம் உணர வேண்டுமென நான் நினைக்கிறேன்.”
இராணுவவாதம் மற்றும் வல்லரசு கொள்கைகளது புதுப்பிப்பே, கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம், கிறிஸ்துவ சமூக ஒன்றியம் மற்றும் சமூக ஜனநாயகக் கட்சிக்கு இடையே ஒப்புக் கொள்ளப்பட்ட கூட்டணி உடன்படிக்கையின் மூலக்கருவை உருவாக்குகிறது. “உலகிற்கான சமாதானம், சுதந்திரம் மற்றும் பாதுகாப்பிற்கு ஜேர்மனியின் கடமைப்பாடு" என்ற 20 பக்கங்கள் கொண்ட அத்தியாயம், மேற்கு பால்கன்களில் இருந்து, ரஷ்யா, உக்ரேன், ஆப்கானிஸ்தான், துருக்கி, மத்திய கிழக்கு, ஆபிரிக்கா, இலத்தீன் அமெரிக்கா மற்றும் ஆசியா வரையில் எண்ணற்ற நாடுகள், பிராந்தியங்கள் மற்றும் கண்டங்களை மீண்டுமொரு ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்க மண்டலங்களாக குறிப்பிடுகிறது.
“நவீன இராணுவம்" என்ற பகுதி, இராணுவம் "அதனிடம் ஒப்படைக்கப்பட்ட கடமைகளை அவற்றின் எல்லா பரிமாணங்களில் இருந்து முறையாக பூர்த்தி செய்வதற்காக”, “சிப்பாய்களுக்குச் சாத்தியமான அளவில் சிறந்த தளவாடங்கள், பயிற்சி மற்றும் கவனிப்பு கிடைக்கச் செய்ய" உறுதியளிக்கிறது. இதற்கும் கூடுதலாக, சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் பழமைவாத கட்சிகள், “தகமைகளின் குறிக்கோள்கள் மீதும், தகமைகளின் இடைவெளிகளை அடைப்பதன் மீதும் நேட்டோவிடம் ஒப்புக் கொள்ளப்பட்டதை நாங்கள் எட்ட விரும்புகிறோம்,” என்ற வரையறையோடு 2024 க்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதத்திற்கு இராணுவ செலவுகளை அதிகரிக்க பொறுப்பேற்றுள்ளன.
பேர்லினில் உள்ள வெளியுறவு கொள்கை சிந்தனை குழாம்களின் நெருக்கமான கூட்டுறவுடன், பரந்தளவிலான மீள்ஆயுதமயப்படுத்தல் மற்றும் வல்லரசு அபிலாஷைகளுக்காக வேலை செய்யப்பட்டுள்ளதை இக்கூட்டணி உடன்படிக்கை தெளிவுபடுத்துகிறது. “வெளியுறவு, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி கொள்கையில் செயல்படுவதற்கான மூலோபாய தகைமைகளைப் பாதுகாத்தல்" என்ற பகுதியில், அந்த ஆவணம் குறிப்பிடுகிறது, “நிலவும் சர்வதேச சவால்களுக்கு இடையே, ஜேர்மனி அதன் மூலோபாய பகுப்பாய்வுக்கான தகைமைகளைப் பலப்படுத்திக் கொண்டு, அதன் மூலோபாய தொடர்புகளைத் தீவிரப்படுத்த வேண்டும்.” மேற்கூறியதை எட்டுவதற்காக, அரசாங்கம் "வெளியுறவு, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி கொள்கையில் நிபுணத்துவத்தை விரிவாக்குவதில் முதலீடு" செய்யும், மற்றும் "இப்போதைய அமைப்புகளையும்" பலப்படுத்தும். மத்திய பாதுகாப்பு கொள்கை பயிலகம், முனீச் பாதுகாப்பு கருத்தரங்கம், வெளியுறவு விவகாரங்களுக்கான ஜேர்மன் பயிலகம் மற்றும் வெளியுறவுகளுக்கான ஜேர்மன் கவுன்சில் ஆகியவை இத்தகைய அமைப்புகளில் உள்ளடங்குகின்றன.
சோசலிச சமத்துவக் கட்சி (Sozialistische Gleichheitspartei – SGP) இந்த பெரும் கூட்டணியை எதிர்க்கிறது, புதிய தேர்தல்களுக்கு கோரிக்கை விடுப்பதுடன், இந்த கூட்டணி பேச்சுவார்த்தைகளின் போது எட்டப்பட்ட அனைத்து இரகசிய உடன்படிக்கைகளையும் மற்றும் அவற்றில் பங்குபற்றியவர்களின் பட்டியலையும் வெளியிடுமாறு கோருகிறது. SGP, இந்த கூட்டணி அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிக்குமாறு சமூக ஜனநாயகக் கட்சியின் (SPD) அனைத்து உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கிறது.