Print Version|Feedback
From Facebook to Policebook
பேஸ்புக்கில் இருந்து போலிஸ்புக்கிற்கு
Andre Damon
2 February 2018
புதனன்று, பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் சக்கர்பேர்க் வெளியிட்ட ஓர் அறிவிப்பில், அதன் பயனர்களது அனைத்து பதிவுகள் மற்றும் சேதிகளைக் கண்காணிக்கவும், சுதந்திர இதழியலைத் தணிக்கை செய்யவும், மற்றும் பயனர்களைக் குறித்து பொலிஸ் மற்றும் உளவுத்துறை முகமைகளுக்கு தகவலளிக்காக செயற்கை அறிவை (Artificial Intelligence) பயன்படுத்துவதற்குமான அந்த சமூக ஊடக நிறுவனத்தின் அசாதாரண திட்டங்களை விவரித்தார்.
பேஸ்புக்கிற்கு 2017 ஒரு "கடுமையான ஆண்டாக" இருந்தது என்று அறிவித்து, அந்நிறுவனத்தின் காலாண்டு வருவாய் அறிக்கையுடன் சக்கர்பேர்க் அவர் பதிவைத் தொடங்கி இருந்தார். அவர் எழுதுகிறார், “உலகம் பதட்டத்துடன் பிளவுபட்டிருப்பதாக உணர்கிறது—இதுவே பேஸ்புக்கில் நிறைந்திருந்தது. தேசிய அரசுகளின் தலையீடுகள் உட்பட எங்கள் களத்தில் துஷ்பிரயோகத்தைக் கண்டோம், பொய்யான, உணர்வுபூர்வமான மற்றும் துருவமுனைப்பட்ட செய்திகள் பரவுவதையும், சமூக ஊடகங்களின் பயன்பாடு குறித்த விவாதத்தையும் கண்டோம்.” “நல்லதை ஊக்குவிப்பதற்கும் பாதிப்பைத் தடுப்பதற்குமான" கடமைப்பாடு பேஸ்புக்கிற்கு உள்ளது, 2018 இல் இதுவே எனது தனிப்பட்ட சவாலாகும்.”
பேஸ்புக்கின் "நியூஸ்ஸ்பீக்" இன் அர்த்தம், "போலி செய்திகள்" மற்றும் "ரஷ்ய தலையீட்டை" எதிர்க்கிறோம் என்ற வேஷத்தில், இந்தாண்டு அந்நிறுவனம் இணையத்தில் தகவல் பரவுவதை ஒடுக்கவும் மற்றும் தரவு தணிக்கையிலும் ஆக்ரோஷமாக ஈடுபடும் என்பதாகும்.
இத்திட்டத்தின் உண்மையான அச்சுறுத்தும் உள்நோக்கங்கள் சக்கர்பேர்க்கின் பதிவில் வரையறுக்கப்படுகின்றன. பேஸ்புக்கின் ஒரு நடவடிக்கை, “முதல் உதவியாளர்கள் உடனடியாக உதவி தேவைப்படும் 100 பேருக்கும் அதிகமானவர்களைக் கண்டறிவதற்கு உதவும் வகையில் தற்கொலை சம்பந்தமான பதிவுகளைக் கண்டறிய புதிய தொழில்நுட்பம் உள்ளது, மற்றும் தேர்தல்களின் போது அந்தந்த நேரத்திலேயே சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளை அடையாளமிடவும் மற்றும் பயங்கரவாத உள்ளடக்கங்களை நீக்கவும் நாங்கள் செயற்கை அறிவை கட்டமைத்துள்ளோம்,” என்றவர் எழுதுகிறார்.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பேஸ்புக் அதன் சமூக ஊடக தளத்தில் பதிவிடப்படும் அனைத்து தகவல்களையும் சேகரிக்க, கண்காணிக்க மற்றும் பொருள்விளங்கப்படுத்த செயற்கையறிவு அமைப்புகளை அறிமுகப்படுத்துகிறது. இதுபோன்று அதிகளவிலான பாரிய கண்காணிப்பு அமைப்புமுறையின் அறிமுகம், எப்போதும் போலவே, வெளிப்படையாக பாராட்டப்பட வேண்டி நோக்கங்கள் என்று நியாயப்படுத்தப்படுகிறது. அனைத்துக்கும் மேலாக, தற்கொலைகள் அல்லது பயங்கரவாத தாக்குதல்களை நிறுத்தும் நோக்கிலான நடவடிக்கைகளுக்கு யார் ஆட்சேபணை தெரிவிப்பார்கள்? ஆனால் இந்த புதிய முறைகளின் உண்மையான நோக்கமோ மிகவும் வேறுபட்டது.
பின்னர் ஜூக்கர்பேர்க் அந்நிறுவனத்தின் செயற்கையறிவு திட்டங்களது விரிவெல்லையைக் குறித்து குறிப்பிடுகிறார்: “பேஸ்புக்கில் அனைத்து தரவுகளது அர்த்தத்தையும் புரிந்து கொள்வதே செயற்கையறிவைக் கொண்டிருப்பதற்கான நமது நோக்கம்.” ஒவ்வொரு பதிவும், புகைப்படம், காணொளி, சேதி, கருத்துரை, உணர்வு வெளிப்பாடும் மற்றும் பகிர்வுகளும் "பாதகமான" உள்ளடக்கமா என்பதை பகுத்தாராயவும், அவசியமாக கருதினால் பொலிஸ் மற்றும் உளவுத்துறை முகமைகளுக்கு தகவல் தெரிவிக்கவும் நிறுவனத்தின் மிக பலமான கணினி அமைப்புமுறைக்குள் செலுத்தப்படும்.
பேஸ்புக் நடவடிக்கைகளது நிஜமான —கபடத்தனமான— நோக்கம், அந்நிறுவனம் மேற்கொண்டு வரும் பிற நடவடிக்கைகளிலும் தெளிவாகிறது. மிகவும் முக்கியமாக, “தவறான தகவல்கள் மற்றும் துருவமுனைப்பாட்டைத் தடுப்பதற்காக, பேஸ்புக்கில் நீங்கள் பார்க்கும் தகவல் பரந்தளவில் நம்பகமான மற்றும் உயர்தரமான ஆதாரவளங்களிடம் இருந்து வருவதை" உறுதிப்படுத்துவதில் நிறுவனம் தீர்மானமாக இருப்பதாக சக்கர்பேர்க் வலியுறுத்தினார்.
எவை இந்த "பரந்தளவில் நம்பகமான" ஆதாரவளங்கள்? “சான்றாக, வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் அல்லது நியூ யோர்க் டைம்ஸ் ஐ எடுத்துக் கொள்ளுங்கள்" பெரும் பில்லியனரான அந்த தலைமை நிறைவேற்று அதிகாரி எழுதினார். “நீங்கள் அவற்றை வாசிக்க விரும்பவில்லை அல்லது அவர்கள் எழுதும் அனைத்திலும் உங்களுக்கு உடன்பாடு இல்லையென்றாலும், அவர்கள் உயர்தரமான பத்திரிகையியலில் இருப்பதாக பெரும்பாலானவர்கள் நம்புகிறார்கள். அடுத்த முனையில், அங்கே நிறைய பேர் பின்தொடரும் வலைப்பக்கங்கள் உள்ளன, ஆனால் அவற்றின் முக்கிய வாசகர்களைத் தவிர பரவலாக அவை நம்பப்படுவதில்லை. அத்தகைய வெளியீடுகளை நாங்கள் சற்று குறைவாக காட்டுவோம்.”
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பெருநிறுவன ஊடகங்கள் ஊக்குவிக்கப்படும் அதேவேளையில், மற்ற பதிவுகள், “நிறைய பேர் பின்தொடர்பவையாக" இருந்தாலும் கூட, பின்னுக்குத் தள்ளப்படும். “சற்றே குறைவாக காட்டுவோம்" என்பதைப் பொறுத்த வரையில், சக்கர்பேர்க் என்ன அர்த்தப்படுத்துகிறார், அவை பரந்த பார்வையாளர்களை எட்டாதவாறு தடுக்கப்படும் என்பதைத் தான். மிகச் சுருக்கமாக கூறுவதானால், அவை தணிக்கை செய்யப்படும்.
மாற்று ஆதாரங்களிடம் இருந்து வரும் செய்திகளைத் தணிக்கை செய்வதற்கும் கூடுதலாக, சக்கர்பேர்க் அவர் பதிவின் தொடக்கத்தில் குறிப்பிடுகையில், “பரபரப்பான காணொளி” விடயங்கள் “மக்களின் நல்வாழ்வுக்கும் சமூகத்திற்கும் நல்லது” அல்ல என்பதால், பேஸ்புக் “குறைந்தளவிலான பரபரப்பூட்டும் காணொளிகளைக் காட்ட” செயல்படும் என்கிறார்.
சக்கர்பேர்க் குறிப்பிடும் பரபரப்பான காணொளிகளில் பொலிஸ் வன்முறை காட்சிகள் உட்பட, இலண்டனில் கடந்தாண்டு சமூக சமத்துவமின்மையை அம்பலப்படுத்திய க்ரீன்ஃபெல் கோபுர பயங்கரம் குறித்த செய்தி போன்ற சமூக வெளிப்படுத்தல்கள், மற்றும் அமெரிக்க இராணுவம் நடத்திய போர் குற்றங்களின் ஆவணங்கள் ஆகியவையும் உள்ளடக்கப்படும். அதுபோன்ற பதிவுகள் "குறைக்கப்படும்", இதை சக்கர்பேர்க் பின்னர் "ஒரு கட்டுரையை அணுகப்படுவதை 80 சதவீத அளவுக்கு குறைப்பதாக" அறிவிக்கிறார்.
“மக்களின் நம்பிக்கைக்குரிய" ஆதாரவளங்களை பேஸ்புக் ஊக்குவிக்கும் என்ற சக்கர்பேர்க்கின் முக்கிய சாக்குப்போக்கு ஒரு மோசடியாகும். உண்மையில், கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட Gallup கருத்துக்கணிப்பின்படி, "செய்திகளை முழுமையாக, துல்லியமாக, நியாயமாக தெரிவிப்பதில்" வெகுஜன ஊடகங்கள் மீதான அமெரிக்கர்களின் நம்பிக்கை கருத்துக்கணிப்பு வரலாற்றிலேயே அதன் குறைந்த மட்டங்களை எட்டி இருந்தது, அதில் பங்கெடுத்தவர்களில் வெறும் 32 சதவீதத்தினரே அவர்களுக்கு "நிறைய" அல்லது "கணிசமான அளவுக்கு" அவற்றின் மீது நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தனர். அதேநேரத்தில், Pew ஆய்வு மையம் நடத்திய கருத்துக்கணிப்பின்படி, செய்திகளைப் படிப்பதற்கான சமூக ஊடகங்களின் பயன்பாடு அமெரிக்க மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கினரை எட்டி, அதிவேகத்தில் வளர்ச்சி அடைந்துள்ளது.
பேஸ்புக் மற்றும் ஏனைய சமூக ஊடக வலையமைப்புகள் பிரபலமாக வளர்ந்திருப்பது, பரந்த அர்த்தத்தில், வெகுஜன ஊடக நிறுவனங்கள் மூலமாக கிடைக்காத தகவல்கள் மற்றும் கண்ணோட்டங்களைப் பயனர்கள் அணுகுவதற்கு அவை அனுமதிக்கின்றன என்ற உண்மையினாலேயே ஆகும். இப்போது, பேஸ்புக் அதன் போக்கை மாற்றியுள்ளதுடன், உத்தியோகபூர்வ சொல்லாடல்களை ஊக்குவிப்பதும், அதை கேள்விக்குட்படுத்தும் சுதந்திர செய்தி ஆதாரங்களை முடக்குவதும் அதன் நோக்கமென்று அறிவித்துள்ளது.
உளவுத்துறை முகமைகள் மற்றும் அரசுகளுடன் நெருக்கமாக இணைந்து இயங்கும் பேஸ்புக், கூகுள், ட்வீட்டர் மற்றும் இன்னும் பிற சமூக ஊடக நிறுவனங்கள், தணிக்கை மற்றும் ஒடுக்குமுறையின் கருவிகளாக மாறுவதற்காக, தகவல் தொடர்பு இயங்குமுறைகளில் அவை வகிக்கும் பாத்திரத்தைப் பயன்படுத்த முயல்கின்றன. இந்த நிகழ்முறையில், அவை 21 ஆம் நூற்றாண்டின் மிக முக்கிய மற்றும் சுதந்திரமான தொழில்நுட்ப அபிவிருத்திகளில் ஒன்றான செயற்கை அறிவின் வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்தை பொலிஸ் கட்டுப்பாடு மற்றும் சர்வாதிகாரத்திற்கான ஒரு இயங்குமுறையாக மாற்றி வருகின்றன.
இணைய தணிக்கைக்கு எதிரான போராட்டமானது உலகெங்கிலுமான தொழிலாளர்கள் முகங்கொடுக்கும் அவசர பணியாகும். இரண்டாம் உலக போருக்குப் பின்னர் பேச்சு சுதந்திரம் மீதான இந்த மிகப்பெரிய அச்சுறுத்தலுக்கு எதிராக உலக சோசலிச வலைத் தளம் முன்னணியில் இருந்து போராடி வருகிறது. இணைய தணிக்கைக்கு எதிராக போராட, ஜனவரி 23 இல், அது சோசலிச, போர்-எதிர்ப்பு, இடதுசாரி மற்றும் முற்போக்கு வலைத் தளங்களின் ஒரு சர்வதேச கூட்டணிக்கு அழைப்புவிடுத்து ஒரு பகிரங்க கடிதம் வெளியிட்டது.
இந்த கூட்டணியின் கோட்பாடுகள்:
- இணையத்தை அணுகுதல் ஓர் உரிமை என்பதோடு அது சுதந்திரமாகவும் அனைவருக்கும் சமமாகவும் கிடைக்க வேண்டும் என்ற கோட்பாட்டால் வழி நடத்தப்பட்ட, பன்முக கண்ணோட்டங்களையும், தகவல்கள் மற்றும் கலாச்சாரங்களையும் சுதந்திரமாக பகிர்ந்து கொள்வதற்கான தளமாகவும், அரசியல் அமைப்புக்கான ஒரு தளமாகவும் இணையத்தைப் பாதுகாத்தல்.
- அரசுகள் மற்றும் தனியார் பெருநிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இருந்து இணையத்தின் முழு சுதந்திரத்திற்காக சமசரமின்றி வலியுறுத்துதல்.
- இணைய நடுநிலைமையையும் மற்றும் சுதந்திரமான, கட்டுப்பாடில்லாத மற்றும் சமமான இணைய அணுகுதலையும் நிபந்தனையின்றி பாதுகாத்தல்.
- வலைத் தளங்கள் மக்கள் பார்வைக்கு அறிய வருவதைத் தடுக்கும் மற்றும் முடக்கும் வகையில் மனித மதிப்பீட்டாளர்களைப் பயன்படுத்துவது உட்பட, தேடல்பொறி மென்பொருள் வழிமுறைகள் மற்றும் வகைமுறைகளில் அரசு மற்றும் பெருநிறுவன மோசடியைத் தடுத்தல் மற்றும் சட்டவிரோதமாக்குதல்.
- இணைய பயனர்களைக் கண்காணிப்பதற்காக, இணைய மற்றும் செயற்கை அறிவு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதைச் சமரசமன்றி எதிர்த்தல்.
- ஜூலியான் அசான்ஜ் மற்றும் எட்வார்ட் ஸ்னோவ்டென் மீதான வழக்குகளைக் கைவிட்டு, அவர்களின் தனிப்பட்ட சுதந்திரத்தை முழுமையாக மீட்டளிக்க கோருதல்.
- இலாபத்திற்காக அல்ல, உயர்ந்த தரமான சேவையை வழங்குவதற்காக, பொது பயன்பாடுகள் மீதான பெருநிறுவன இணைய ஏகபோகங்களை மாற்றி அவற்றை சர்வதேசளவில் ஒருங்கிணைந்த ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர அறிவுறுத்தல்.
- இணைய தணிக்கைக்கு எதிரான போராட்டமும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டமும் முதலாளித்துவ அரசாங்கங்கள் மற்றும் கட்சிகள் மற்றும் அவற்றின் நலன்களுக்கு சேவையாற்றும் அரசியல்வாதிகளுக்கு முறையீடு செய்வதன் மூலமாக நடத்தப்பட முடியாது, மாறாக அவர்களுக்கு எதிரான சமரசமற்ற போராட்டத்தில் மட்டுமே நடத்தப்பட முடியும். அனைத்திற்கும் மேலாக, இந்த போராட்டம் அதனளவில் சர்வதேச தன்மையிலானது, மற்றும் தேசிய பேரினவாதம், இனவாதம் மற்றும் ஏகாதிபத்திய இராணுவவாதத்தின் ஒவ்வொரு வடிவம் மற்றும் வெளிப்பாட்டுக்கு முற்றிலும் எதிரானது. ஆகவே, ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்புக்கு உண்மையிலேயே பொறுப்பேற்பவர்கள் அனைத்து நாடுகளின் தொழிலாள வர்க்கத்தையும் அணித்திரட்டுவதில் அவர்களின் முயற்சிகளை திருப்ப வேண்டும்.
இந்த கோட்பாடுகளில் உடன்படுபவர்கள் அனைவரையும் உலக சோசலிச வலைத் தளத்தை தொடர்பு கொள்ளுமாறும், இணைய தணிக்கைக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்குமாறும் நாங்கள் வலியுறுத்துகிறோம்.