Print Version|Feedback
Jörg Baberowski: A right-wing extremist professor
ஜோர்ஜ் பார்பெரோவ்ஸ்கி: ஒரு அதிதீவிர வலதுசாரி பேராசிரியர்
By Johannes Stern
29 March 2017
சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பும் (IYSSE) மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியும் (Sozialistische Gleichheitspartei, SGP) கடந்த சில காலமாக கூறிவந்ததை ஜேர்மன் நீதிமன்ற தீர்ப்பு ஒன்று உறுதிப்படுத்தி உள்ளது: அதாவது பேர்லின் ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தில் கிழக்கு ஐரோப்பிய வரலாற்றுத்துறை தலைவர் பதவியில் உள்ள ஜோர்க் பார்பெரோவ்ஸ்கியை ஒரு வலதுசாரி தீவிர கொள்கையாளராக குறிப்பிடலாம் என்று கொலோன் மாவட்ட நீதிமன்றம் மார்ச் 15 இல் தீர்ப்பு வழங்கி உள்ளது.
அந்நீதிமன்றத்தின்படி, பார்பெரோவ்ஸ்கியின் நிலைப்பாடுகள் அவரை ஒரு "வலதுசாரி தீவிரவாதியாக" முத்திரை குத்துவதற்கு "போதிய தொடக்க புள்ளியை" வழங்குகின்றன. மாணவர்கள் அப்பேராசிரியரின் கருத்துக்களை விமர்சிப்பது "அவதூறுபடுத்துவது" ஆகாது என்றும், “ஏனென்றால் சம்பந்தப்பட்ட ஆவணங்களுக்கு அவசியமான ஆதாரங்கள் இருக்கின்றன" என்பதையும் அத்தீர்ப்பு பட்டவர்த்தனமாக தெளிவுபடுத்தி உள்ளது.
பார்பெரோவ்ஸ்கி கடந்த நவம்பரில், பிரேமன் பல்கலைக்கழகத்தின் மாணவர் பொதுக்குழு (General student committee - Asta) வெளியிட்ட ஒரு துண்டறிக்கை மற்றும் பத்திரிகை குறிப்பின் அடிப்படையாக கொண்டு கொலோன் நீதிமன்றத்திடம் தடையாணை கோரியிருந்தார். பிரேமன் பல்கலைக்கழகத்தின் மாணவர் அமைப்பாக Asta, அப்பயிலகத்தில் பார்பெரோவ்ஸ்கி திட்டமிட்டிருந்த ஒரு சொற்பொழிவை எதிர்த்து அதன் பிரச்சாரத்தின் பாகமாக அந்த ஆவணங்களை வெளியிட்டிருந்தது.
அந்த வழக்கில் Asta இன் வாதங்களை கேட்காமலேயே நீதிமன்றம் தடையாணை வழங்கியது. அகதிகள் மீதான பார்பெரோவ்ஸ்கியின் தாக்குதல் மற்றும் அவரது பிற்போக்குத்தனமான வன்முறை தத்துவம் ஆகியவற்றை Asta மேற்கோளிடக் கூடாதென அது தடை விதித்தது. குறிப்பாக அது, அந்த பேராசிரியரை ஒரு வலதுசாரி தீவிரவாதியாக அடையாளம் காட்டுவதற்கு Asta க்கு தடைவிதித்தது.
அதையடுத்து மாவட்ட நீதிமன்றத்தில் அந்த தடையாணைக்கு எதிராக Asta செய்த மேல்முறையீடு, பெப்ரவரி 15 இல் வாய்வழி விவாதமாக விசாரிக்கப்பட்டது. இப்போது அந்த நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது என்னவென்றால் பிரேமன் பல்கலைக்கழக மாணவர் அமைப்பான Asta பார்பெரோவ்ஸ்கியின் குறிப்பிட்ட கருத்துக்களை மேற்கோளிடக் கூடாது என்றாலும், ஒரு வலதுசாரி தீவிரவாதியாக அவரைக் குறித்த அதன் மதிப்பீடு அனுமதிக்கப்படுகிறது.
பேர்லினில் வசித்து பணியாற்றி வரும் பார்பெரோவ்ஸ்கி, கொலொனில் நகரில் திட்டமிட்டு பிரேமன் பல்கலைக்கழக Asta மாணவர் அமைப்புக்கு எதிராக வழக்கு தொடுத்தவர் என்பதால், அனைத்திற்கும் மேலாக இது அவருக்கு ஒரு பேரழிவுகரமான தீர்ப்பாகும். கொலோன் நீதிமன்றம் “வழமையாகவே பிரசுரங்களுக்கு தடை விதிப்பதற்கு" இழிபெயர் பெற்றதாகும் (Frankfurter Rundschau). இருந்தாலும் இந்த வழக்கு மிகவும் தெளிவாக இருப்பதுடன், மாணவர்கள் பார்பெரோவ்ஸ்கியை ஒரு வலதுசாரி தீவிரவாதியாக அடையாளம் காண்பதை கொலோன் நீதிமன்றத்தால் தடுக்க இயலாதளவிற்கு பார்பெரோவ்ஸ்கியின் தீவிர வலது திட்டநிரல் மிகவும் வெளிப்படையானதாகும்.
பார்பெரோவ்ஸ்கி, போருக்குப் பிந்தைய சகாப்த ஜேர்மன் வரலாற்றாளர்களிடையே மிகவும் நன்கறியப்பட்ட நாஜி வக்காலத்துவாதி ஏர்ன்ஸ்ட் நோல்ட இற்கு-Ernst Nolte- அவர் ஆதரவை அறிவித்திருந்தார். “நோல்ட க்கு அநீதி இழைக்கப்பட்டது. வரலாற்றுரீதியில் கூறுவதானால், அவர் சரியாகவே இருந்தார்,” என்று 2014 தொடக்கத்தில் பார்பெரோவ்ஸ்கி Der Spiegel சஞ்சிகை கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டார். அதே கட்டுரையில், ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தின் அந்த பேராசிரியர், “ஹிட்லர் மனநிலை பாதிக்கப்பட்டவரும் அல்லர், வக்கிரமானவரும் அல்லர். தனது மேசையில் யூதர்களை அழிப்பது குறித்து எவரும் பேசுவதை அவர் விரும்பவில்லை,” என்று குறிப்பிட்டிருந்தார்.
பார்பெரோவ்ஸ்கி எழுத்துக்களை வாசிக்கையில், ஒருவர் திருத்தல்வாதத்தின் துர்நாற்றத்தை முகங்கொடுப்பார். போருக்கு முந்தைய வரலாறைத் தொடர்புபடுத்தி, 2009 இல் பிரசுரித்த ஒரு கட்டுரையில் அவர் குறிப்பிடுகையில், ஸ்ராலினிசம் மற்றும் நாஜிசம் குறித்த ஒரு ஒப்பீடு "தார்மீக முன்னோக்கில் இருந்து போல்ஷிவிக்குகளுக்கு ஆதரவாக" இருக்காது என்று எழுதினார். அவரது வேறு வேறு எழுத்துக்களில், இரண்டாம் உலக போரின் போது சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக கிழக்கில் நடந்த நிர்மூலமாக்கும் போர், ஏதோ நாஜிக்களால் திட்டமிடப்பட்டதல்ல என்பதாகவும், மாறாக ஸ்ராலினால் ஜேர்மன் இராணுவத்தின் (Wehrmacht) "மீது திணிக்கப்பட்டதாகவும்" முன்வைக்கப்படுகின்றன. அவரது சமீபத்திய நூலான வன்முறைக்குரிய இடங்கள் (Spaces of Violence) என்பதில், அவர், “இராணுவ நடவடிக்கை படைகளில் கூட அங்கே யூத-எதிர்ப்புவாதத்தால் தூண்டிவிடப்பட்டவர்கள் இருக்கவில்லை” என்று கூறுமளவிற்கு துணிகிறார்.
நாஜிக்கள் மற்றும் மூன்றாம் ரைஹ் (நாஜி ஆட்சி, 1933–45) இன் குற்றங்களை பார்பெரோவ்ஸ்கி குறைத்துக் காட்டுவது, அகதிகளுக்கு எதிரான அவர் வெறுப்பிலும் மற்றும் போர் மற்றும் வன்முறைக்கு அவர் அழைப்பு விடுப்பதிலும் உள்ள வெறும் ஒரு துணுக்கு தான்.
பிரேமன் பல்கலைக்கழக Asta மாணவர் அமைப்பு, ஏனைய விடயங்களுக்கு இடையே, Frankfurter Allgemeine Zeitung உடனான பார்பெரோவ்ஸ்கியின் ஒரு நேர்காணலில் இருந்து இந்த பின்வரும் கருத்தை மேற்கோளிட்டது, “குறுகிய காலத்தில் பல மில்லியன் கணக்கான அகதிகளை ஏற்றுக் கொண்டிருப்பது, ஒரு சமூகமாக ஒருங்கிணைத்திருக்கும் மற்றும் ஸ்திரப்பாட்டை உறுதிப்படுத்தும் நமது பாரம்பரிய தொடர்ச்சியை சிக்கலுக்குள்ளாக்குகின்றது. […] நாம் வாசித்து உணர்ந்துள்ள பொது அனுபவங்கள் தான் ஒரு காலத்தில் நமது சமூகத்தை ஒருங்கிணைத்து வைத்திருந்த சமூக பிணைப்புகள்.”
ஜேர்மனியில், எல்லா இடங்களிலும், உள்ள பாரம்பரியங்களில் இதுபோன்ற புத்திஜீவித மற்றும் அரசியல் கண்ணோட்ட நிலைப்பாடு இருப்பதை விவரிக்க வேண்டிய அவசியமே இல்லை. 1930 களில், நாஜிக்கள் "ஜேர்மன் இனத்தை தூய்மைப்படுத்துவது" குறித்து உளறிக் கொண்டிருந்தார்கள். இதன் கொடூரமான விளைவுகள் நன்கறியப்பட்டதே.
அத்தீர்ப்பின்படி, பார்பெரோவ்ஸ்கியின் இரண்டு கருத்துக்களை மேற்கோளிடுவதில் இருந்து பிரேமன் பல்கலைக்கழக Asta மாணவர் அமைப்பு தொடர்ந்து தடை செய்யப்பட்டுள்ளது. “எங்கெல்லாம் பிரஜைகள் சம்பந்தப்படாமல் இருக்கிறார்களோ, இயல்பாகவே ஆக்கிரமிப்பு நடக்கிறது,” என்று பார்பெரோவ்ஸ்கி கூறியதை Asta அமைப்பு மேற்கோளிட்டது. ஆனால், “ஜேர்மனியில் இதுவரையில் யாரும் கொல்லப்படவில்லை, கடவுளுக்குத்தான் நன்றி கூற வேண்டும்,” என்ற பார்பெரோவ்ஸ்கியின் குறிப்புகளை Asta அமைப்பு குறிப்பிட்டிருக்கவில்லை. அகதி மையங்கள் எரிக்கப்பட்டிருந்தன, இதுவே போதும் என்பதையும் பார்பெரோவ்ஸ்கி சேர்த்துக் கொண்டிருந்தார். “ஜேர்மனியில் புலம்பெயர்வால் இப்போது நமக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகளில் மத்தியில், இங்கே நாம் அனுபவிப்பது தீங்கில்லாதது தான்” என்றார்.
நீதிமன்றத்தைப் பொறுத்த வரையில், இந்த கருத்துக்கள், பார்பெரோவ்ஸ்கியின் கண்ணோட்டத்தில் அகதிகள் மீதான ஆத்திரம், Asta வாதிட்டதைப் போல, “முடிவெடுக்கும் நிகழ்முறையில் இருந்து விலகி இருக்கும் பிரஜைகளின் இயல்பான பிரதிபலிப்பாக" உள்ளது என்ற முடிவுக்கு வர அனுமதிக்கவில்லை.
அக்டோபர் 2014 இல் ஜேர்மன் வரலாற்று அருங்காட்சியகத்தின் ஒரு குழு விவாதத்தில் பார்பெரோவ்ஸ்கி கூறிய பின்வரும் கருத்துக்களை மேற்கோளிடுவதை தடுப்பதையும் கொலோன் நீதிமன்றம் எடுத்துக்காட்டியது: “பணயக்கைதிகளை பிடிக்க விருப்பமில்லை என்றால், பயங்கரவாதிகள் செய்வதைப் போல, கிராமங்களை எரியுங்கள், மக்களைத் தூக்கிலிடுங்கள், பயத்தையும் பீதியையும் பரப்புங்கள், இதுபோன்றவற்றை செய்ய ஒருவர் தயாராக இல்லையென்றால், பின்னர் அவரால் அதுபோன்றவொரு மோதலை ஒருபோதும் ஜெயிக்க முடியாது,” என்றார்.
நீதிமன்றத்தை பொறுத்த வரையில், பார்பெரோவ்ஸ்கி "மேற்குறிப்பிட்ட பத்தியில் போர்முறைகளை பயன்படுத்துவதை துல்லியமாக ஒப்புக் கொள்ளவில்லை.” பின்னர் நிறைவுரையில் குறிப்பிடுகையில், “ஆகவே ஒட்டுமொத்தத்தையும் ஒதுக்கி வைப்பது நல்லது. ஆகவே ஒருபுறம்: ஆம், நிச்சயமாக, ஜேர்மனி அதுபோன்றவொரு பாத்திரம் ஏற்க வேண்டும் என்பதோடு, குறிப்பாக அதை பாதிக்கும் அத்தகைய மோதல்களில் ஜேர்மனி பொறுப்பேற்பது அவசியமாகும். ஆனால் ஒருவர் இரண்டு விடயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் (a) என்ன விதமான போருக்கு ஒருவர் தயாராக இருக்க வேண்டும், (b) ஒருவரால் ஜெயிக்க முடியுமா. உங்களால் ஜெயிக்க முடியாது என்றால் பின்னர் நீங்கள் அதிலிருந்து விலகி இருக்க வேண்டும். இந்த விடயத்தில் இது தான் என் கருத்து,” என்றார்.
இதுபோன்ற நிபந்தனைக்குட்பட்ட வனப்புரை கருத்துக்கள் தீவிர வலதிற்கு எடுத்துக்காட்டுகளாகும். பயங்கரவாத முறைகளைப் பயன்படுத்தாவிட்டால், அவர்களை தோற்கடிக்க முடியாது என்று இவ்விதமாக அந்த வாதம் செல்கிறது. அனைத்திற்கும் மேலாக, பார்பெரோவ்ஸ்கி சர்வதேச விதிகளை மீறும் ஏகாதிபத்திய போரில் ஆக்கிரமிப்பு முறைகளுக்கு எதிராக எச்சரிக்கும் ஒரு அக்கறை கொண்ட சமரசவாதியாக வாதிடவில்லை, மாறாக இரத்தம் கொதிப்பேறிய போர்வெறியராக வாதிடுகிறார் என்பது தெளிவாக உள்ளது. போரில் ஜெயிக்க எதிரியை விட அதிக மூர்க்கமாக செயல்படுவதற்கு ஜேர்மனி தயாராக இருந்தால் மட்டுமே அது இராணுவரீதியில் தலையீடு செய்ய வேண்டும் என்பதை அவர் பேணுகிறார்.
“ஜேர்மனி: ஒரு தலையீடு செய்வதற்குரிய சக்தியா?” என்று தன்னைத்தானே வெளிப்படுத்திக் காட்டும் வகையில் தலைப்பிடப்பட்டிருந்த, ஜேர்மன் வரலாற்று அருங்காட்சியகத்தின் குழு விவாதத்தில், பார்பெரோவ்ஸ்கி அவரது போர்வெறி மற்றும் வன்முறை கற்பனைகளுக்கு மீண்டும் மீண்டும் கட்டுப்பாடற்ற சுதந்திரத்தை வழங்கினார். “ISIS போன்ற ஒரு அமைப்பின் விடயத்தில், இராணுவம் வேகமாக படுகொலை தாக்குதல்களைக் கையாளலாம். அதுவொரு பிரச்சினை இல்லை. அதை அமெரிக்கர்களால் தீர்க்க முடியும். கொலைப்படைகளை கொண்டு இந்த குழுக்களின் தலைவர்களை இல்லாதொழிக்க முடியும். அதுவும் பிரச்சினை இல்லை. அது செய்து முடிக்கக் கூடியது தான்,” என்றார்.
எவ்வாறிருப்பினும், இதற்குமாறாக, “ஒரு நீண்டகால உள்நாட்டு போரில் அரசு கட்டமைப்புகள் முழுவதுமாக அழிக்கப்பட்டிருந்தால்,” “இதற்கு நிறைய பணம் செலவாகும் என்பதோடு, ஒரு அதிகார வெற்றிடத்திற்குள் சிப்பாய்களும் ஆயுதங்களும் அனுப்பப்படவேண்டும் என்பதை" ஒருவர் "உணர்ந்து கொள்ள வேண்டும்.” ஆனால் அனைத்திலும் மிக முக்கிய விடயம் என்னவென்றால் "இதற்கு, அரசியல் தைரியமும் அரசியல் மூலோபாயமும் அவசியம், மேலும், அனைத்திற்கும் மேலாக, இதை செயலில் கொண்டு வர அங்கே நாம் சென்றடைய வேண்டியிருக்கும். மேலும் அதற்குரிய மதிப்பு அதற்கு உண்டு. அதற்கு பணம் செலவாகும். நாம் அங்கே சிப்பாய்களை அனுப்ப வேண்டியிருக்கும். ஈராக், சிரியா மற்றும் லிபியா போன்ற நாடுகளில் அவர்களாலேயே தமது பிரச்சினைகளை இதுவரையில் தீர்க்க முடியவில்லை.”
இதை மாணவர்கள் முழுமையாக மேற்கோளிடவில்லை என்பதால் இந்த கருத்தை அவர்கள் பொய்மைப்படுத்தி உள்ளார்கள் என்ற நீதிமன்றத்தின் வாதம் ஒரு சட்ட கேலிக்கூத்தாகும். ஆகவே பிரேமன் பல்கலைக்கழக Asta மாணவர் அமைப்பு இரண்டாவது விசாரணையில் இந்த தடையை நீக்குவதற்கு மேல்முறையீடு செய்ய உள்ளது.
எவ்வாறிருப்பினும், மிகப்பெரிய புத்திஜீவித மற்றும் அரசியல் மோசடி என்னவென்றால் பார்பெரோவ்ஸ்கியால் ஒரு பல்கலைக்கழகத்தில் அவர் பதவியை சுதந்திரமாக பயன்படுத்த முடிகிறது என்பதும், அவரது வலதுசாரி தீவிர கொள்கை நிலைப்பாடுகளை அரசியல்வாதிகள் மற்றும் ஊடகங்களிடையே உள்ள அவரது தொடர்புகளின் ஒரு வலையமைப்பிற்குள் பரப்ப முடிகிறது என்பதும் தான், மேலும் சகல விமர்சனங்களுக்கு எதிராக அவருக்கு உதவிக்கு நிற்கும் ஒரு அடிபணிந்துபோகும் சோம்பேறி கல்வித்துறை சமூகத்தில் ஆதரவை பெற்றுள்ளார். பார்பெரோவ்ஸ்கியின் துறை பாசிசவாத நாற்றத்தை பரப்பி வருவது குறித்து ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தின் IYSSE பிரிவு சுட்டிக்காட்டியபோது, அந்த வரலாற்றுத்துறை பயிலகம் கீழ்தரமான அவதூறுகளுடன் விடையிறுத்ததுடன், அப்பல்கலைக்கழக நிர்வாகம் அக்குழுவை தணிக்கை செய்ய அச்சுறுத்தியது. பழமைவாத நாளிதழ் Frankfurter Allgemeine Zeitung இன் இலக்கிய துணை இதழ் "ட்ரொட்ஸ்கிச வம்பிழுப்பு" என்று தலைப்பிட்டு அந்த விடயத்தின் மீது ஒரு கட்டுரை பிரசுரித்தது.
நீதிமன்ற தீர்ப்பும் அது தூண்டிவிட்ட எதிர்வினைகளும், பார்பெரோவ்ஸ்கியின் பாதுகாவலர்களை அம்பலப்படுத்தி உள்ளது. அவர் ஒருபோதும் ஒரு மதிப்பார்ந்த பேராசிரியராக பார்க்கப்பட மாட்டார், மாறாக இப்போது அவர் ஜேர்மனி மற்றும் அமெரிக்காவின் வலதுசாரி தீவிர கொள்கை குழுக்களுடன் உள்ள ஒவ்வொருவருடனும் தொடர்புபடுத்தி பார்க்கப்படுகிறார். சமீபத்திய நாட்களில், நவ-பாசிசவாத கட்சியான ஜேர்மனிக்கான மாற்றீடு அரசியல்வாதி Björn Höcke உம், அவருடன் சேர்ந்து வலதுசாரி தீவிர கொள்கைவாத Compact இதழ், தீவிர வலது நாளிதழ் Junge Freiheit மற்றும் Politically Incorrect உட்பட பல்வேறு வலதுசாரி வலைப்பதிவுகளும் அவரை ஆதரித்தன. கடந்தகாலத்தில் பார்பெரோவ்ஸ்கியை தீவிர வலது அமெரிக்க வலைத் தளமான Breitbart News மற்றும் நாஜிக்களின் யூதயின விரோத கிழிஞ்சலான Der Störmer இன் நவீன பதிப்பான Daily Stormer ஆகியவை பாராட்டியுள்ளன.