Print Version|Feedback
Kremlin instructs Russian industry to prepare for war mobilization
போர் அணிதிரள்வுக்கு தயாராகுமாறு கிரெம்ளின் ரஷ்ய தொழிற்துறைக்கு அறிவுறுத்துகிறது
By Alex Lantier
24 November 2017
ரஷ்ய தொழிற்துறை அதன் அனைத்து முயற்சிகளையும் போர் உற்பத்தியை நோக்கி திருப்ப தயாராக இருக்குமாறு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் ரஷ்ய தொழிற்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக பிரிட்டிஷ் பத்திரிகைகளில் நேற்று செய்திகள் வெளியாயின. 2014 இல் ஜேர்மனி அதன் வெளியுறவுக் கொள்கையில் உத்தியோக மீள்இராணுவமயமாக்கலை கொண்டு வந்த நிலையில், ஸ்வீடன் கட்டாய இராணுவச் சேவையை மறுஅறிமுகம் செய்துள்ள நிலையில், இது, 1914 இல் உலக போர் வெடித்து வெறும் ஒரு நூற்றாண்டுக்குப் பின்னர், ஐரோப்பா மற்றும் உலகெங்கிலுமான நாடுகள் மீண்டும் முழுமையான போருக்குத் தயாரிப்பு செய்து வருகின்றன என்பதை தெளிவாக்குகிறது.
செய்திகளின்படி, சோச்சி மாநாட்டில் துருக்கிய மற்றும் ஈரானிய அதிகாரிகளுடன் சிரிய போர் குறித்து விவாதித்த புட்டின் அங்கேதான் இக்கருத்துக்களை வெளியிட்டிருந்தார். அவர் பேசுகையில், செப்டம்பர் மாதம் ரஷ்ய தரைப்படை சிப்பாய்களுடனான ரஷ்ய இராணுவத்தின் வருடாந்தர ஜபாட் இராணுவ பயிற்சிகள் (Zapad military exercise) மீது ஒரு மதிப்புரையை வழங்கினார்.
புட்டின் கூறினார், “இராணுவ உற்பத்தி மற்றும் சேவைகளை, நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் அதிகரிப்பதற்கான நமது பொருளாதார தகைமை, இராணுவ பாதுகாப்புக்கான மிக முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். இதை எட்டுவதற்கு, மூலோபாய நிறுவனங்களும் சரி சாதாரண மிகப் பெரிய நிறுவனங்களும் சரி, அனைத்தும், அவை யாருக்கு சொந்தமாக இருந்தாலும், தயாராக இருக்க வேண்டும்.”
பெரியளவிலான அணுஆயுத போருக்கு ரஷ்யாவால் அதன் பொருளாதார ஆதாரவளங்களை முழுமையாக ஒன்று திரட்ட முடியுமா என்பதை பரிசோதிக்கவே இந்தாண்டின் ஜபாட் பயிற்சி வடிவமைக்கப்பட்டிருந்தது என்பதை அவர் கருத்துக்கள் தெளிவுபடுத்தின. ஒத்திகைக்காக வடிவமைக்கப்பட்ட ரஷ்யாவுக்கு எதிரான வெளிநாட்டு தரைவழி படையெடுப்புகள் மற்றும் பெரியளவிலான ஏவுகணை தாக்குதலுக்கு இடையே, மூலோபாய அணுஆயுத படைகளால் அவர்களின் ஏவுகணைகளை —ரஷ்யாவை தாக்கும் ஒரு நாட்டை நிர்மூலமாக்க வடிவமைக்கப்பட்ட அந்நாட்டின் மிகப்பெரிய ஹைட்ரஜன் குண்டுகளை— செலுத்த பயிற்சியளிப்பதே இந்த பயிற்சிக்கு அமைக்கப்பட்டிருந்த ஒத்திகை காட்சியாக இருந்தது.
இதுபோன்றவொரு போரில், பொருளாதாரத்தை இராணுவம் கட்டுப்பாட்டில் எடுத்து, பொதுமக்களின் தேவைகளுக்கான உற்பத்தியை குறைத்து, பாரியளவிலான விமானப்படை மற்றும் ஏவுகணை வேட்டையாடல்களில் உயிர்பிழைத்திருக்க தகமையுள்ள எந்தவொரு தொழில்துறையையும் போர் முன்முயற்சிகளை நோக்கி திருப்பிவிடும்.
புட்டின் தெரிவித்தார், “முதலில் அணிதிரள்வதற்கான எங்களின் தயார்நிலையையும் மற்றும் உள்நாட்டு ஆதாரவளங்களை பயன்படுத்தி துருப்புகளின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான தகைமையையும் பரிசோதித்தோம். காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தவர்கள் இந்த பயிற்சிக்கு அழைக்கப்பட்டனர், இராணுவ படைகளுக்கு தங்களின் வாகனங்கள் மற்றும் சாதனங்களை வழங்குவதிலும், போக்குவரத்து தொடர்புகளுக்கு தொழில்நுட்ப பாதுகாப்பை வழங்குவதிலும் படைத்துறைசாரா நிறுவனங்களின் தகைமையையும் பரிசோதித்தோம். … போக்குவரத்து வகைமுறைகள் மற்றும் சரக்கு கையாளும் சேவைகளையும், அத்துடன் இராணுவத்திற்கான உணவு மற்றும் மருந்துகள் குறித்தும் நாங்கள் மதிப்பீடு செய்தோம். பாதுகாப்பு நிறுவனங்களது விரைவாக உற்பத்தியை அதிகரிப்பதற்கான தகைமையை மீண்டுமொருமுறை மீளாய்வு செய்ய வேண்டியுள்ளது.”
புட்டினின் கருத்துக்கள் சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு அவசர எச்சரிக்கையாகும். உலகளாவிய முதலாளித்துவம் ஒரு வரலாற்று அரசியல் பொறிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தேசிய-அரசு அமைப்புமுறைக்கும் பொருளாதார உற்பத்தியின் உலகளாவிய தன்மைக்கும் இடையிலான முரண்பாட்டில் வேரூன்றிய, மூன்றாம் உலக போர் அபாயம், உடனே நிகழக்கூடிய அளவுக்கு அதிகரித்து வருகிறது. சோச்சி மாநாட்டில் புட்டின் என்ன பகிரங்கமாக அறிவித்தாரோ, அதைத்தான் நேட்டோ அரசாங்கங்கள் மக்களின் முதுகுக்குப் பின்னால் செய்து கொண்டிருக்கின்றன: பிரதான அணுஆயுத சக்திகளுக்கு இடையே நேரடியாக முற்றுமுதலான உலகளாவிய போருக்கு, அவசியமானால், அவர்களின் சொந்த மக்களுக்கு எதிராகவும், தயாரிப்பு செய்து கொண்டிருக்கின்றன.
நேட்டோ நாடுகளின் கொள்கைகளில் ரஷ்யாவின் ஆக்ரோஷமான தலையீடு குறித்து குற்றஞ்சாட்டி கண்டித்து, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஊடகங்களில் ரஷ்யா மீதான ஒருமித்த தாக்குதல்கள், ஏகாதிபத்திய பாசாங்குத்தனத்தால் முற்றாக நிரம்பியுள்ளன. ரஷ்யா அதன் சொந்த மண்ணில் இராணுவ பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்றால், நேட்டோ அதிகாரங்களோ ரஷ்யாவைச் சுற்றி வளைத்து, ரஷ்யாவின் எல்லைகள் வரைக்குமே கூட அவற்றின் துருப்புகளுடன் அணிவகுத்து செல்கின்றன.
இரண்டு வாரங்களுக்கு முன்னர், ரஷ்யாவுடன் சண்டையிடுவதற்காக அமெரிக்க மற்றும் ஐரோப்பிய துருப்புகளை அட்லாண்டிக் மற்றும் ஐரோப்பிய கண்டம் எங்கிலும் நகர்த்துவதற்கு கடற்படை தளங்களையும் மற்றும் படை தளவாடங்களுக்கான தளங்களையும் கட்டமைப்பது குறித்து விவாதிக்க நேட்டோ புரூசெல்ஸில் ஒரு மாநாட்டை நடத்தியது. அம்மாநாட்டு திட்டநிரலை மீளாய்வு செய்திருந்த ஜேர்மன் செய்தியிதழ் Der Spiegel, “அப்பட்டமான வார்த்தைகளில் கூறுவதானால்: நேட்டோ ரஷ்யாவுடன் சாத்தியமாக கூடிய ஒரு போருக்குத் தயாரிப்பு செய்து வருகிறது,” என்று நிறைவு செய்திருந்தது.
ரஷ்யாவில் போலவே, நேட்டோ அதிகாரிகளும் வங்கிகள் மற்றும் இராணுவத்தின் கட்டளைக்கு சமூக மற்றும் பொருளாதார வாழ்வு முழுவதையும் அடிபணிய வைக்கும் திட்டங்களுடன் அதுபோன்றவொரு போருக்குத் தயாராகி வருகின்றனர். உளவுத்துறை முகமைகள், பொலிஸ் மற்றும் வங்கிகளுடன் நேட்டோ அதன் போர் திட்டங்களை நெருக்கமாக ஒருங்கிணைத்து வருகிறது என்பதை நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டொல்டென்பேர்க் புரூசெல்ஸ் மாநாட்டில் தெளிவுபடுத்தினார். அவர் கூறினார், இத்திட்டமிடலுக்கு "ஒட்டுமொத்த அரசு அணுகுமுறை அவசியப்படுகிறது. ஆகவே நமது பாதுகாப்பு அமைச்சர்கள் இராணுவத் தேவைகளைக் குறித்து நமது உள்துறை, நிதித்துறை மற்றும் போக்குவரத்து அமைச்சர்களுக்கு தெரியப்படுத்தி வைப்பது மிகவும் முக்கியமாகும்,” என்றார்.
மாஸ்கோவிலிருந்து பார்த்தால், பூமியைச் சுற்றிலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆக்ரோஷமான இராணுவ நடவடிக்கையின் அச்சுறுத்தல்கள், ரஷ்யாவை ஒரு சுருக்குக்கயிறால் கட்டி வருவதற்கு ஒத்துள்ளது. இந்த அச்சுறுத்தல்கள் ரஷ்யாவின் ஐரோப்பிய மேற்கு எல்லை மீது மட்டும் ஒருங்குவிந்தில்லை. ஆகஸ்ட்டில் இருந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பல முறை அணுஆயுத நிர்மூலமாக்கலைக் கொண்டு வட கொரியாவை அச்சுறுத்தி உள்ளார், இந்நாடு கிழக்கு ரஷ்யா மற்றும் சீனா இரண்டினது எல்லையை ஒட்டியுள்ளது. மே மாதம் ட்ரம்ப் சவூதி அரேபியா சென்று, மத்திய கிழக்கில் ரஷ்யாவின் தெற்கில் உள்ள பிரதான கூட்டாளிகளான ஈரான் மற்றும் சிரியாவுக்கு எதிராக கடுமையான போக்கை எடுக்குமாறு ரியாத்திற்கு அழுத்தமளித்த பின்னர், அப்பிராந்தியமும் முற்றுமுதலான போரின் விளிம்பில் நிற்கிறது.
அதேநேரத்தில், மத்திய கிழக்கில் நிலைநிறுத்தப்பட்ட அமெரிக்க இராணுவ மற்றும் ஒத்துழைப்பு பணியாளர்களின் எண்ணிக்கை 54,325 ஆக திடீரென 30 சதவீதம் உயர்ந்திருப்பதை இவ்வாரம் தொடக்கத்தில் பென்டகன் வெளியிட்ட புள்ளிவிபரங்கள் எடுத்துக்காட்டுகின்றன.
ஒரு கால் நூற்றாண்டுக்கு முன்னர், 1991 இல், ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் சோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றியம். (USSR) கலைக்கப்பட்டதன் பேரழிவுகரமான அரசியல் விளைவுகளை, மனிதயினம் நேருக்கு நேராக முகங்கொடுத்து நிற்கிறது. பனிப்போர் சகாப்தத்தின் ஏகாதிபத்திய பொய்கள், அதாவது சோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றியமே உலகின் இராணுவ ஆக்கிரமிப்புக்கு மூலக்காரணம் என்பது, அதன் கலைப்புக்குப் பின்னர் அபிவிருத்தி கண்ட ஏகாதிபத்திய தாக்குதலால் மறுத்தளிக்கப்பட்டன. ஈராக், யூகோஸ்லாவியா, ஆப்கானிஸ்தான், லிபியா மற்றும் சிரியா என சோவியத்தின் முன்னாள் நேச நாடுகளை நேட்டோ அதிகாரங்கள் தாக்கின அல்லது ஆக்கிரமித்தன, அல்லது வட கொரியா விடயத்தைப் போல அவற்றை தனிமைப்படுத்தி பொருளாதாரரீதியில் குரல்வளையை நெரித்தன, இவற்றினால் அந்த ஒட்டுமொத்த பிராந்தியங்களும் சீரழிந்தன.
இந்த போர்கள் எல்லாம் மில்லியன் கணக்கானவர்களின் உயிர்களை மட்டும் விலையாக எடுக்கவில்லை, மாறாக இரண்டாம் உலக போருக்குப் பின்னர் மிகப்பெரிய அகதிகள் நெருக்கடியை உருவாக்கி, 60 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறி செல்லவும் நிர்பந்தித்தது.
ரஷ்யா முழுமையான போருக்கு தயாராக இருக்க வேண்டுமென புட்டினின் அழைப்பால் வெளிப்பட்டிருக்கும் நெருக்கடியானது, பல தசாப்தங்களாக உலகெங்கிலும் நேட்டோ சக்திகளால் தொடுக்கப்பட்ட மூர்க்கமான போர்களின் விளைவாகும். அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் பொருளாதார வீழ்ச்சியை ஈடுகட்டவும், அதிகரித்து வரும் வேலைவாய்ப்பின்மை மற்றும் சமூக சீரழிவுகளால் உந்தப்பட்ட வர்க்க பதட்டங்களை வெளிப்புறமாக திருப்பிவிடவும் அதன் இராணுவ பலத்தைப் பிரயோகிப்பதற்கான முயற்சிகள் இருக்கையில், இவற்றுக்கு வாஷிங்டனின் ஐரோப்பிய கூட்டாளிகளும் தான் துணைபோயினர் என்ற நிலையில், இவை உலகை ஓர் அணுஆயுத மனிதயின பேரழிவின் விளிம்புக்கு கொண்டு வந்துள்ளன.
இது இப்போது முதலாளித்துவ அரசின் உயர்மட்டங்களில் பகிரங்கமாக விவாதிக்கப்படுகிறது. “காங்கிரஸில் விவாதிக்காமலேயே, தகவல் அளிக்காமலேயே அமெரிக்க அணுஆயுதங்களை பயன்படுத்தி வட கொரியாவுக்கு எதிராக ஒரு முன்கூட்டிதாக்கும் போரை ஜனாதிபதி தொடங்கலாம் என்பதால், வெள்ளை மாளிகையில் இப்போதே கூட" திட்டங்கள் ஆயத்த நிலையில் இருக்கக்கூடும் என்று கடந்த வாரம் அமெரிக்க செனட்டில் மாசசூசெட்ஸ் செனட்டர் எட் மார்கெ எச்சரித்தார். கட்டுப்படுத்த முடியாத ஒரு ஜனாதிபதிக்கு, வெள்ளை மாளிகை ஒரு "வயோதிபரை பராமரிக்கும் மையமாக" மாறியுள்ளது, அவர் நடைமுறையளவில் எந்நேரத்திலும் ஓர் அணுஆயுத போரைத் தொடங்க தேர்ந்தெடுக்கலாம் என்று மற்றொரு செனட்டர் தெரிவித்தார்.
சோவியத்திற்கு-பிந்தைய முதலாளித்துவ செல்வந்த தட்டுக்களின் திவாலான ரஷ்ய தேசியவாதத்தில் வேரூன்றிய கிரெம்ளினின் கொள்கை, ஏகாதிபத்திய போர் முனைவை எதிர்க்க தகைமையற்றதும் மற்றும் பிற்போக்குத்தனமானதும் ஆகும். சர்வதேச தொழிலாள வர்க்கத்தில் நிலவும் போர்-எதிர்ப்பு உணர்வுக்கு முறையிட விருப்பமின்றியும் மற்றும் முறையிட முடியாமலும், நிதியியல் ரீதியில் ஏகாதிபத்திய மையங்களைச் சார்ந்துள்ள கிரெம்ளின், நேட்டோ அதிகாரங்களுடனான உறவுகளை முறித்துக் கொள்ளும் முயற்சிக்கும் அவர்களுடன் ஒரு முற்றுமுதலான இராணுவ மோதல் அபாயத்தை எடுக்கும் முயற்சிக்கும் இடையே ஊசலாடிக் கொண்டிருக்கிறது. அதுபோன்றவொரு மோதல் விரைவிலேயே மனிதயின உயிர் வாழ்வையே அச்சுறுத்தும் மிகப்பெரியளவிலான அணுஆயுத போராக தீவிரமடையக்கூடும் என்பதை மூலோபாயவாதிகள் தெளிவாக முன்கணிக்கின்றனர்.
தொழிலாள வர்க்கம், சர்வதேச அளவில், போர் மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிரான அதன் புரட்சிகரமான எதிர்ப்பில், அரசியல்ரீதியில் நனவுபூர்வமாக தலையீடு செய்வதற்கு வெளியே, அங்கே போர் முனைவை நிறுத்துவதற்கு எந்த வழியும் இல்லை. பெருந்திரளான தொழிலாளர்களுக்கு இந்த அரசியல் நெருக்கடியின் ஆழம் குறித்தும், ஒரு பேரழிவுகரமான போரின் வேகமாக அதிகரித்து வரும் அபாயம் குறித்தும் முழுமையான புரிதல் இல்லை என்பதே இன்றைய சூழ்நிலையின் மிகப்பெரும் ஆபத்தாக உள்ளது.
இந்நிலைமைகளின் கீழ், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஊடகங்களில் ரஷ்யாவைக் கண்டிக்கும் ஒரு பிரச்சாரத்திற்கு இடையே, அரசாங்கங்கள் இணையம் மற்றும் சமூக ஊடகங்கள் மீதான தணிக்கையை அதிகரிக்க கோரி வருகின்றன. கூகுள், போர்-எதிர்ப்பு மற்றும் சோசலிச வலைத் தளங்களை, முதலும் முக்கியமுமாக உலக சோசலிச வலைத் தளத்தை தணிக்கை செய்து வருகிறது. இதனால் தான் உலக சோசலிச வலைத் தளம் (WSWS) தொழிலாள வர்க்கத்தில் ஒரு சோசலிச மற்றும் ஏகாதிபத்திய-எதிர்ப்பு முன்னோக்குடன் ஒரு சர்வதேச போர்-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டமைக்க அழைப்பு விடுப்பதுடன், தணிக்கை மற்றும் போருக்கு எதிரான அதன் ஆவணங்களைப் பரப்புவதில் அதன் வாசகர்களின் ஆதரவைக் கோருகிறது.