Print Version|Feedback
After Madrid’s violent crackdown:
An independent class strategy for the Spanish and Catalan working class!
மாட்ரிட்டின் மூர்க்கமான ஒடுக்குமுறைக்குப் பின்னர்:
ஸ்பானிய மற்றும் கட்டலான் தொழிலாள வர்க்கத்திற்கான ஒரு சுயாதீனமான வர்க்க மூலோபாயம்!
Keith Jones
5 October 2017
ஞாயிறன்று கட்டலோனியா சுதந்திரத்திற்கான சர்வஜன வாக்கெடுப்பில் கலந்து கொள்ள விரும்பிய சாமானிய கட்டலானியர்கள் மீது ஸ்பானிய அரசு தொடுத்த வன்முறை, ஸ்பெயினிலும் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் ஜனநாயக உரிமைகளை மதிக்கும் அனைவரையும் மிகச் சரியாக அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
ஸ்பானிய முதலாளித்துவ வர்க்கம், ஸ்பானிய புரட்சியை பாசிசவாத சப்பாத்தால் நசுக்கி எட்டு தசாப்தங்களுக்கு பின்னரும், தளபதி பிரான்சிஸ்கோ பிராங்கோவின் ஆட்சி முடிவுற்று நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னரும், ஸ்பானிய ஆளும் வர்க்கம் மீண்டும் காட்டுமிராண்டித்தனமான ஒடுக்குமுறையில் தஞ்சம் அடைந்து வருகிறது.
இதில் அவர்கள், ஐரோப்பிய ஒன்றியத்தின் அனைத்து சக்திகளிடம் இருந்தும் வாஷிங்டனிடம் இருந்தும் சிறிதும் தயக்கமின்றி ஆதரவைப் பெற்றுள்ளனர். கட்டலானியர்கள் அவர்களின் அரசியல் கண்ணோட்டங்களை வெளிப்படுத்துவதை தடுப்பதற்காக ஸ்பானிய அதிகாரிகள் அப்பட்டமான வன்முறையைப் பயன்படுத்தியமை, "சட்டத்தின் ஆட்சியில்" உள்ளடங்குவதாக அவை அறிவித்துள்ளன.
ஸ்பெயின் ஒடுக்குமுறையானது, ஐரோப்பா எங்கிலும் வேகமாக எதேச்சதிகார ஆட்சி வடிவங்கள் திரும்பி வருவதன் பாகமாகும். ஸ்பெயினின் வடக்கு எல்லையில் உள்ள பிரான்ஸில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்ரோன் அரசாங்கம், வேலை பாதுகாப்பு மற்றும் சம்பளங்கள் மற்றும் தொழில் விதிமுறைகளை வெட்டும் தொழிலாளர்-விரோத தொழில் சீர்திருத்தத்தை திணித்துள்ளதுடன், பெருமளவிற்கு ஜனநாயக-விரோதமான "அவசரகால நிலை" வழிவகைகளை நிரந்தரமாக்குவதற்கு மத்தியில் உள்ளது.
ஜேர்மனியில், நாஜி மூன்றாம் குடியரசுக்குப் பின்னர் முதல்முறையாக இப்போது பாசிசவாதிகள் நாடாளுமன்றத்தில் நுழைந்துள்ள நிலையில், வெறுப்பான பேச்சுக்கள் என்றழைக்கப்படுவதை கண்காணிப்பது என்ற பெயரில் சமூக-ஊடக சேவை வழங்குனர்களை தணிக்கை செய்ய நிர்பந்திக்கும் ஒரு சட்டம் இப்போது நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிறன்று அதன் மூர்க்கமான ஒடுக்குமுறையை தொடர்ந்து, ஸ்பெயினின் மக்கள் கட்சி (PP) அரசாங்கமும் மற்றும் ஆளும் உயரடுக்கும், முன்னெப்போதும் பயன்படுத்தப்பட்டிராத அந்நாட்டின் அரசியலமைப்பில் உள்ள ஷரத்து 155 ஐ கையிலெடுக்க இப்போது துடித்துக் கொண்டிருக்கின்றனர். அரசாங்கம் சார்பான ஸ்பானிய ஊடகங்களிலேயே கூட "அணுஆயுதத்திற்கு ஒத்த விருப்பத்தெரிவாக" வர்ணிக்கப்படும் ஷரத்து 155, கட்டலோனியாவின் சுயாட்சியை நீக்கவும், அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட பிராந்திய அரசாங்கத்தை கலைக்கவும், மத்திய அரசாட்சியைத் திணிக்கவும் மாட்ரிட்க்கு அதிகாரமளிக்கும்.
ஸ்பானிய ஒருமைப்பாடு என்ற பதாகையின் கீழ், முற்றுமுதலான பாசிசவாதிகள் உட்பட மிகவும் வலதுசாரி சக்திகள் அணிதிரட்டப்பட்டு வருகின்றனர். பிராங்கோவின் முடியாட்சி மீட்சியிலிருந்து அவரது மகுடம் தரிக்க பெற்ற பேரரசர் ஆறாம் ஃபிலிப், செவ்வாயன்று மாலை ஓர் உரை வழங்கினார், அதில் அவர் "அரசின் அதிகாரங்களுக்கு சகிக்கவியலாதளவிற்கு விசுவாசமின்றி" இருப்பதற்காக கட்டலான் அதிகாரிகளைக் குற்றஞ்சாட்டினார்.
ஒரு சுதந்திர முதலாளித்துவ தேசிய-அரசிலிருந்து பிரிந்துசென்று, அனைத்திற்கும் மேலாக உடனடியாக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ அங்கத்துவத்தைப் பெற முயலக்கூடிய கட்டலான் முதலாளித்துவ வர்க்கத்தின் முயற்சியை உலக சோசலிச வலைத் தளம் எதிர்க்கிறது என்பதை அது தெளிவுபடுத்தி உள்ளது. ஆனால் இதை நாம் ஸ்பானிய அரசை பாதுகாக்கும் நிலைப்பாட்டில் இருந்தோ, முதலாளித்துவ ஸ்பெயினின் பிராந்திய ஒருமைப்பாடு என்ற நிலைப்பாட்டில் இருந்தோ அல்ல, ஒரு சோசலிச சர்வதேசவாத முன்னோக்கின் அடித்தளத்தில் ஸ்பெயினிலும் மற்றும் ஐரோப்பா முழுவதிலும் உள்ள தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தி போராடுவதற்காக, தொழிலாள வர்க்க நிலைப்பாட்டிலிருந்து, இடதிலிருந்து எதிர்க்கிறோம்.
கட்டலான் சுதந்திரத்திற்கு எதிராக இன்று அணிதிரட்டப்பட்டு வருகின்ற இதே அரசு எந்திரமும் வலதுசாரி கூறுபாடுகளும், மத்திய கிழக்கிலும் அதற்கு அப்பாலும் ஏகாதிபத்திய போர்களில் பங்கேற்பதற்கும் மற்றும் 2008 க்குப் பின்னர் இருந்து ஸ்பானிய ஸ்தாபகத்தின் அனைத்து பிரிவுகளாலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கடுமையான சிக்கன திட்டநிரலைத் தொடரவும், மீள்ஆயுதமயமாக்கலை முன்னோக்கி அழுத்தமளிக்கவும் வரவிருக்கும் நாட்களில் ஒட்டுமொத்த ஸ்பானிய தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக நிலைநிறுத்தப்படும்.
ஸ்பெயின் தொழிலாளர்கள் இந்த நெருக்கடியில் சுயாதீனமாக தலையீடு செய்வதன் மூலமாக, அவர்களின் வர்க்க நலன்களை வலியுறுத்த வேண்டும். இதன் அர்த்தம், மாட்ரிட்டின் நடவடிக்கைகளை உறுதியோடு எதிர்ப்பதும், ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளுக்குள் தொழிலாளர்களின் ஸ்பெயினுக்காகவும், சிக்கன கொள்கைகள் மற்றும் போருக்கு எதிரான ஒரு பொதுவான போராட்டத்தில் தங்களுடன் இணைத்து கொள்வதற்காகவும் கட்டலோனியாவில் உள்ள அவர்களின் வர்க்க சகோதர சகோதரிகளை வலியுறுத்துவதும் ஆகும்.
பிராந்திய முதல்வரான கார்லெஸ் புய்க்டெமொன்ட் (Carles Puigdemont) தலைமையில், கட்டலான் முதலாளித்துவ வர்க்கத்தின் சுதந்திரத்திற்கு ஆதரவான கன்னை, தொழிலாள வர்க்கம் மீதான அதன் விரோதத்தில் மாட்ரிட் இல் உள்ள அதன் விரோதிகளை விட எந்தவிதத்திலும் குறைந்ததில்லை.
உண்மையில் இப்போதைய இந்த சுதந்திர முயற்சியை அவர்கள் தொடங்கியதற்கான முக்கிய காரணமே, சிக்கனக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் அவர்கள் வகித்த சொந்த பாத்திரம் மீது அதிகரித்து வரும் சமூக எதிர்ப்பை திசைதிருப்பி விடுவதற்கே ஆகும்.
சுய-நிர்ணயம் என்ற பெயரில், அவர்கள் தற்பெருமையோடு தங்களின் சொந்த வர்க்க நோக்கங்ளைப் பின்தொடர்ந்து வருகின்றனர்—அனைத்திற்கும் மேலாக மாட்ரிட் ஒரு மத்தியஸ்தராக சேவையாற்றாதவாறு, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் வாஷிங்டனுடன் அவர்களின் சொந்த உடன்படிக்கைகளை ஏற்படுத்திக் கொள்ள விரும்புகின்றனர்.
ஸ்பெயினின் செல்வச்செழிப்பு குறைந்த பிராந்தியங்களுக்கு உதவ கட்டலோனியா நிறைய வரி வருவாய் வழங்கி வருகிறது என்பதே அவர்களின் பிரதான குற்றச்சாட்டுகளில் ஒன்றாக உள்ளது.
மாட்ரிட் இன் இரத்தந்தோய்ந்த ஒடுக்குமுறைக்கு விடையிறுப்பதில், ஐரோப்பிய ஒன்றியத்தை மத்தியஸ்தம் செய்ய முறையிட்டுள்ள புய்க்டெமொன்ட், கட்டலோனியாவின் பிராந்திய நாடாளுமன்றம் அடுத்த திங்களன்று ஒரு சுதந்திர பிரகடனம் மீது வாக்களிக்குமென அறிவித்தார்.
இவ்விரு நடவடிக்கைகளுமே, கட்டலானிலும் சரி ஸ்பெயினிலும் சரி, தொழிலாள வர்க்கத்தின் நலன்கள் மற்றும் அபிலாஷைகளுக்கு எதிர்முரணாக உள்ளன என்பதோடு, அடிப்படையில் ஜனநாயக விரோதமானதும் ஆகும்.
முதலாவது விடயத்தைப் பொறுத்த வரையில், கட்டலான் தேசியவாதிகள் புரூசெல்ஸ், பேர்லின் மற்றும் பாரீஸிற்கான அவர்களின் விசுவாசத்தை எடுத்துக்காட்ட முயன்று வருகின்றனர். அதாவது ஐரோப்பா எங்கிலும் உழைக்கும் மக்களை வறுமைக்குட்படுத்திய 2008 க்கு பிந்தைய கடுமையான சிக்கன நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கியவர்களும், உலக அரங்கில் தங்களின் ஏகாதிபத்திய நலன்களை இன்னும் ஆக்ரோஷமாக பின்தொடர ஓர் ஐரோப்பிய இராணுவத்தை அபிவிருத்தி செய்து ஐரோப்பாவை மீள்இராணுவமயப்படுத்த தற்போது உறுதி பூண்டிருப்பவர்களுமான, ஐரோப்பிய மூலதனத்தின் மிகவும் சக்திவாய்ந்த பிரிவுகளுக்கு அவர்களின் விசுவாசத்தை எடுத்துக்காட்ட முயல்கின்றனர்.
இரண்டாவது நடவடிக்கையை பொறுத்த வரையில், பிரிவினையை பெரும்பான்மை கட்டலானியர்கள் விரும்பவில்லை என்பதை கருத்துக்கணிப்புகள் மீண்டும் மீண்டும் எடுத்துக்காட்டியுள்ள நிலைமைகளின் கீழ், கட்டலான் தேசியவாதிகள் அதற்கு அழுத்தமளிக்க, ஸ்பெயினின் ஜனநாயக-விரோத தலையீடு மீது நிலவும் புரிந்துகொள்ளத்தக்க மக்கள் கோபத்தைச் சாதகமாக்கிக் கொள்ள முயன்று வருகின்றனர்.
மாட்ரிட் மற்றும் கட்டலான் இருதரப்பு தேசியவாதிகளும் வெகுஜனங்களை துருவமுனைப்படுத்தி, தேசியவாத முறையீடுகளுடன் அவர்களின் போட்டி முகாம்களுக்குப் பின்னால் நிறுத்திக் கொள்ள உத்தேசிக்கின்றன.
ஐபீரிய தீபகற்பத்தை உள்நாட்டு போருக்குள் சிக்க வைக்கும் அபாயகரமான இத்தகைய அபிவிருத்திகளை முகங்கொடுத்துள்ள, கட்டலான் மற்றும் ஸ்பானிய தொழிலாளர்களின் ஒருமித்த தாரக மந்திரமாக இருக்க வேண்டியது — தொழிலாள வர்க்கத்தின் சுய-நிர்ணயத்திற்காக! என்பதாகும். ஸ்பானிய மற்றும் கட்டலான் முதலாளித்துவ வர்க்கத்தின் சகல கன்னைகளும் தொழிலாள வர்க்கத்தின் நலன்களை ஈவிரக்கமின்றி எதிர்க்கின்றன என்பதை புரிந்து கொள்வதன் அடிப்படையில், தொழிலாள வர்க்கம் அதன் சொந்த மூலோபாயத்தை முன்னெடுக்க வேண்டும்.
தொழிலாள வர்க்கம், கட்டலோனியாவிலிருந்து ஸ்பானிய பாதுகாப்பு படைகளை உடனடியாக திரும்ப பெற வேண்டுமென்ற கோரிக்கை உட்பட, முதலாளித்துவ ஸ்பெயினின் அதிகாரத்திற்குள் கட்டலோனியாவை பலவந்தமாக தக்க வைப்பதற்கான எந்தவொரு முயற்சியையும் மற்றும் எல்லா முயற்சிகளையும் எதிர்க்க வேண்டும். தங்களின் பிரிவினைவாத திட்டங்களை நடைமுறைப்படுத்த ஸ்பானிய அரசின் பிராந்திய எந்திரத்தைப் பயன்படுத்துவதற்கான கட்டலான் முதலாளித்துவ வர்க்கத்தின் முயற்சிகளை கட்டலான் தொழிலாளர் எதிர்க்க வேண்டும் என்பதோடு, முதலாளித்துவ வர்க்கத்தின் சகல கன்னைகளது சிக்கன கொள்கைகள் மற்றும் போர்-சார்பான திட்டநிரலை சவால்செய்வதில் ஸ்பெயின் எங்கிலுமான தொழிலாளர்களுடன் அணிதிரள வேண்டும்.
தொழிலாளர்களும் இளைஞர்களும் இந்த சுயாதீனமான வர்க்க மூலோபாயத்திற்காக போராடுகையில், போட்டி முதலாளித்துவ கன்னைகளில் ஒன்றுடனோ அல்லது இரண்டு தரப்புடனுமோ தொழிலாள வர்க்கத்தைப் பிணைத்து வைப்பதற்காக, பப்லோவாத International Viewpoint போன்ற பல்வேறு போலி-இடது சக்திகளின் முயற்சிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கட்டலான் தேசியவாதிகளுக்கு ஒரு முற்போக்கான மூடிமறைப்பை வழங்குவது, பொடெமோஸை பெருமை பாராட்டுவது ஆகிய முயற்சிகளும் இதில் உள்ளடங்கும். இரண்டாவதாக கூறப்பட்டதானது (அதாவது பொடெமோஸ்), ஸ்பானிய அரசு துண்டாடப்படாமல் காப்பாற்றும் பொருட்டு ஒரு மாற்று அரசாங்கத்தை முதலாளித்துவ வர்க்கத்திற்கு வழங்க, மக்கள் கட்சி அரசாங்கத்தின் ஒடுக்குமுறையை வரவேற்றுள்ள சோசலிஸ்ட் கட்சியை தன்னுடன் கூட்டு சேர வேண்டுமென அறிவுறுத்துவதன் மூலம், ஸ்பானிய முதலாளித்துவத்திற்கு அது மீண்டும் அதன் விசுவாசத்தை நிரூபித்துள்ளது.
இப்போதைய இந்த நெருக்கடியானது, பிராங்கோவுக்கு பிந்தைய பலவீனமான ஆட்சிக்கும் மற்றும் ஸ்பானிய முதலாளித்துவத்திற்கும் ஒரு தொழிலாள வர்க்க சவாலை தடுக்கும் நோக்கில் செய்யப்பட்ட எதிர்புரட்சிகர-ஏற்பாட்டின் பாகமாக, 1978 இல் ஸ்ராலினிசவாதிகள் மற்றும் சமூக-ஜனநாயகவாதிகளின் ஒத்துழைப்புடன் மறுஒழுங்கு செய்யப்பட்ட ஸ்பானிய அரசின் உண்மையான குணாம்சத்தை அம்பலப்படுத்திக் காட்டியுள்ளது. இவ்வாரத்தின் சம்பவங்கள் எடுத்துக்காட்டி உள்ளவாறு, ஒரு நாடாளுமன்ற மூடுதிரையுடன், பிராங்கோ ஸ்தாபித்த ஒடுக்குமுறை எந்திரமே இப்போதும் பெருமளவிற்கு சேதமின்றி நீடிக்கிறது.
ஆனால் இது வெறுமனே ஒரு ஸ்பானிய நெருக்கடி கிடையாது. இது ஒட்டுமொத்த ஐரோப்பிய ஒன்றியத்தை சுற்றி வளைத்துள்ள அமைப்புரீதியிலான நெருக்கடியின் பாகமாகவும், விளைவாகவும் இரண்டுமாகவும் உள்ளது, அதாவது இது பெருமந்தநிலை மற்றும் இரண்டாம் உலக போருக்குப் பிந்தைய உலக முதலாளித்துவத்தின் மிகப்பெரும் நெருக்கடியில் வேரூன்றி உள்ளது.
ஐரோப்பிய ஒன்றியமானது, ஒரு ஜனநாயக மற்றும் “சமூக” ஐரோப்பாவின் சமாதானமான ஒருங்கிணைவு என்ற வாதங்கள், 2008 நெருக்கடியின் தாக்குதல்களால் சிதைந்து போயுள்ளன.
ஐரோப்பிய ஒன்றியம் எவ்வாறானதாக இருந்ததோ அவ்வாறே அம்பலப்பட்டு நிற்கிறது: அது ஐரோப்பிய மூலதனத்தின் இலாபங்களை அதிகரிப்பதற்கும், தொழிலாள வர்க்கத்தை ஒடுக்குவதற்கும், உலகளாவிய சந்தைகள் மற்றும் புவிசார் அரசியல் செல்வாக்கிற்காக போட்டியிடுவதற்கும் ஒரு கருவியாகவும், அத்துடன் போட்டித்தன்மை மற்றும் மூலோபாய ஆதாயங்களுக்காக போட்டியிடுவதற்காக ஐரோப்பாவின் எதிர்விரோத தேசிய மற்றும் பிராந்திய முதலாளித்துவ கன்னைகளுக்குமான ஒரு அரங்கமாகவும் உள்ளது.
அடுத்தடுத்து வெற்றி பெற்று வந்த சோசலிஸ்ட் கட்சி மற்றும் மக்கள் கட்சி அரசாங்கங்கள் ஐரோப்பிய ஒன்றியத்துடன் கருத்தொன்றி நடைமுறைப்படுத்தி உள்ள சிக்கன கொள்கைகளால், ஸ்பெயின் சீரழிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பா எங்கிலும் உள்ள தொழிலாள வர்க்கம், அதன் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலை கடுமையாக எதிர்க்கின்றன. ஆனால் தொழிற்சங்கங்கள், சமூக-ஜனநாயக கட்சிகள், ஸ்ராலினிச கட்சிகள், முன்னாள்-ஸ்ராலினிச கட்சிகள் மற்றும் போலி-இடது கட்சிகள் திட்டமிட்டு வர்க்க போராட்டத்தை நசுக்கி உள்ளன. அதிகாரத்தில் இருக்கையில், வெளிவேஷத்திற்கு "இடதாக" காட்டிக்கொள்பவை நலன்புரி அரசில் என்ன எஞ்சியுள்ளனவோ அவற்றை அழிக்க தாக்குமுகப்பாக இருந்துள்ளன என்பதோடு, புலம்பெயர்வோருக்கு எதிரான தப்பெண்ணங்களை உண்டாக்கி தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்த முனைந்தன. தொழிலாளர்களின் அதிருப்தியை வாய்மூட செய்ய முடியாமல் எழும் எதிர்ப்பின் போது, அவை போராட்டங்களைத் தனிமைப்படுத்தியதோடு, ஒரு தேசியவாத, முதலாளித்துவ-சார்பான, ஐரோப்பிய ஒன்றிய சார்பான முன்னோக்கிற்குள் அவர்களை அடைத்துள்ளன.
விசேடமாக இவ்விடயத்தில் குறிப்பிடத்தக்கது சிரிசாவின் அனுபவமாகும், இந்த போலி-இடது கட்சி, சிக்கன நடவடிக்கைக்கான தொழிலாள வர்க்க எதிர்ப்பலையின் மீது ஜனவரி 2015 இல் அதிகாரத்திற்கு வந்திருந்தது. தனிச்சலுகை கொண்ட உயர்மட்ட வர்க்கங்களின் ஒரு கட்சியாக, அது, சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டும் எந்தவொரு முயற்சியையும் எதிர்த்ததுடன், ஐரோப்பிய ஒன்றியம் எனும் நிதி மூலதனத்தின் நிதியியல் செல்வந்த தட்டுக்களதும் மற்றும் எதேச்சதிகாரத்தினதும் கருவியாக இருந்தது. அவர்களின் சிக்கன நடவடிக்கை முறையீடுகளை சற்றே மிதமாக்குவதற்கான அவர்களின் வேண்டுகோள்களை பேர்லினும் புரூசெல்ஸூம் நிராகரித்தபோது, சிரிசா திணித்த வெட்டுக்கள், அதன் சமூக-ஜனநாயக முன்னோடிகள் மற்றும் வெளிப்படையான வலதுசாரி முன்னோடிகளது வெட்டுக்களையும் மிகவும் கடந்து சென்றது.
தொழிலாள வர்க்கம் அரசியல்ரீதியில் முடங்கிப் போயுள்ள நிலையில், சுருங்கிவரும் கேக் (cake) ஒன்றை துண்டிட்டு பங்கிடுவதன் மீது போட்டி முதலாளித்துவ வர்க்க குழுக்களிடையே எழுந்துள்ள முன்பினும் அதிக கடுமையான மோதல்களால் ஐரோப்பா குணாம்சப்பட்டுள்ள நிலையில், அங்கே தேசியவாத சக்திகள் மீட்டுயிர் பெற்றுள்ளன, அவற்றில் பல வெளிப்படையாக நவ-பாசிசவாத குணாம்சத்தைக் கொண்டுள்ளதுடன், அவற்றால் சமூக அதிருப்தியை சாதகமாக்கி கொள்ளவும் முடிந்துள்ளது.
இரண்டு உலக போர்கள், பெருமந்த நிலை மற்றும் பாசிசத்திற்கு இட்டுச் சென்ற இந்த இலாபகர அமைப்புமுறையின் இன்றியமையா முரண்பாடுகள் அவர்களிடையே மீண்டும் புத்துயிர்ப்படைகையில், ஐரோப்பிய முதலாளித்துவம் கண்கூடாகவே அதன் அடியில் அழுகிக் கொண்டிருக்கிறது.
ஐரோப்பிய ஒன்றியம் எனும் 21 ஆம் நூற்றாண்டு பைத்தியக்கார கூடத்திற்கு எதிரான எதிர்ப்பில், தொழிலாள வர்க்கம் அதன் சொந்த மூலோபாயத்தை முன்னெடுக்க வேண்டும்: அதாவது, ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளுக்கான போராட்டத்தில், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராகவும், அதில் உள்ளடங்கியுள்ள சகல வலதுசாரி அரசாங்கங்கள், ஐரோப்பிய வங்கிகள் மற்றும் பெருவணிகங்கள் என இவற்றிற்கு எதிராகவும் ஒரு பொதுவான போராட்டத்தில் தொழிலாளர்களை அணிதிரட்டி, தொழிலாள வர்க்கத்தின் ஒரு எதிர்-தாக்குதலை அபிவிருத்தி செய்ய வேண்டும். தொழிலாளர்களின் ஐரோப்பாவானது, சமூக-பொருளாதார வாழ்வை தொழிலாள வர்க்கம் மீதான சுரண்டலை அதிகரிப்பதற்காக அல்லாமல், பொருளாதார ஒருங்கிணைப்பு மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களை பயன்படுத்தி உழைக்கும் மக்களின் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ், சமூகத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக மறுஒழுங்கமைக்க பயன்படுத்தும்.
ஸ்பெயினில் இந்த சமூக சர்வதேசியவாத மூலோபாயத்திற்கான போராட்டத்திற்கு, ஏகாதிபத்திய ஐரோப்பிய ஒன்றியத்தால் ஒப்புதல் வழங்கப்பட்டு மாட்ரிட் அரசாங்கத்தால் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைக்கு எதிரான சமரசமற்ற எதிர்ப்பு, அவசியமாகிறது.
இந்த அடித்தளத்தில் மட்டுந்தான், கட்டலான் முதலாளித்துவ வர்க்க தேசியவாதிகளுக்கு எதிராக அவசியப்படும் அரசியல் போராட்டத்தை தொடுக்க முடியும், இவ்விதத்தில் மட்டுந்தான் ஒரு சர்வதேசியவாத நோக்குநிலைக்கு தொழிலாள வர்க்கத்தின் முற்போக்கான பிரிவுகளையும் இளைஞர்களையும் அணிதிரட்ட முடியும்.