Print Version|Feedback
German foreign minister distances himself from the United States
ஜேர்மன் வெளியுறவுத்துறை மந்திரி தன்னை அமெரிக்காவிடமிருந்து விலக்கிக் கொள்கிறார்
By Peter Schwarz
21 June 2016
ஜேர்மன் வெளியுறவுத்துறை மந்திரி பிராங்க் வால்டர் ஸ்ரைன்மையர் தெளிவாக தன்னைத்தானே அமெரிக்காவிடமிருந்து விலக்கிக் கொண்டு, அதேவேளையில் ஓர் உலகளாவிய வல்லரசாக ஆவதற்கான ஜேர்மனியின் உரிமையை வலியுறுத்துகிறார்.
முன்னணி அமெரிக்க வெளியுறவு கொள்கை ஆய்விதழான Foreign Affairs இல், ஜூன் 13, “ஜேர்மனியின் புதிய உலகளாவிய பாத்திரம்" என்று தலைப்பிட்ட ஸ்ரைன்மையர் இன் ஒரு கட்டுரை பிரசுரமானது. அதில், ஸ்ரைன்மையர் "ஓர் அரை நூற்றாண்டுக்கும் மேலாக அதன் வெளியுறவு கொள்கையை வழிநடத்திய கோட்பாடுகளுக்கு மீள்வரையறை செய்ய" நிர்பந்திக்கப்பட்டுள்ள "ஒரு ஐரோப்பிய சக்தியாக" ஜேர்மனியைக் குறிப்பிடுகிறார்.
ஸ்ரைன்மையர் அமெரிக்க வெளியுறவு கொள்கையின் பேரழிவுகரமான விளைவுகளை, குறிப்பாக மத்தியக் கிழக்கில் ஏற்பட்டதைக் குறிப்பிட்டுக் காட்டி அதிகாரத்திற்கான ஜேர்மனியின் அபிலாஷைகளை நியாயப்படுத்துகிறார். “ஜேர்மனி சர்வதேச அரங்கில் அதன் புதிய பாத்திரத்தை கோர முனையவில்லை,” என்று அவர் எழுதுகிறார். “மாறாக அதை சுற்றி இருக்கும் உலகம் மாறிய போதினும், அது ஸ்திரமாக இருந்ததன் மூலமாக அதுவொரு மத்திய பங்களிப்பாளராக உருவெடுத்தது. ஈராக் போர் விளைவுகளால் அமெரிக்கா நிலைதடுமாறிய போதும், ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்து பல நெருக்கடிகளால் போராடிய போதும், ஜேர்மனி ஸ்திரமாக நின்றிருந்தது,” என்றார்.
ஈராக் போர் குறித்து அவர் கூறுகையில், “படைகளைக் கொண்டு புஷ் நிர்வாகம் அப்பிராந்தியத்தை மீள்ஒழுங்கு செய்ய தவறியது என்பது மட்டுமல்ல, மாறாக இந்த சாகசத்திற்கான அரசியல், பொருளாதார மற்றும் இராணுவம் தவிர்ந்த செலவுகளும் கூட அமெரிக்காவின் ஒட்டுமொத்த நிலைமையைப் பலவீனப்படுத்தியது,” என்றார். “ஒருமுனை உலகம் மீதான பிரமை மங்கிவிட்டது,” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார். தொடர்ந்து கூறுகையில், “தேசிய பிரத்தியேகவாதம் (exceptionalism) மீது—அது எந்த நாடாக இருந்தாலும் சரி—சகல நம்பிக்கையையும் நமது வரலாற்று அனுபவம் அழித்துவிட்டது,” என்றவர் வலியுறுத்தினார்.
எனினும், 1991 சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதற்கு பின்னர் வலியுறுத்தப்பட்டவாறு, அமெரிக்காவே "உலகின் ஒரே சக்தியாக" இருக்கப் போகிறது என்ற வாதத்திற்கு இதைவிட தெளிவான ஒரு நிராகரிப்பு ஒன்று இருக்கவில்லை.
அமெரிக்கா மீதான அவரது விமர்சனம் மத்திய கிழக்கோடு மட்டுப்பட்டதல்ல, மாறாக, அது ரஷ்யாவை நோக்கிய மனோபாவத்தின் மீதும் ஒருங்குவிந்துள்ளது என்பதை கடந்த வாரயிறுதியில் ஸ்ரைன்மையர் தெளிவுபடுத்தினார். ரஷ்யாவுக்கு எதிராக நேட்டோ படைகள் அனுப்புவதில் ஜேர்மனியே கூட ஒரு பிரதான பாத்திரம் வகித்து வருகிறது என்றாலும், Bild am Sonntag உடனான ஒரு நேர்காணலில், அவர், அந்நடவடிக்கையை கூர்மையாக விமர்சித்திருந்தார்.
“போர் முரசு கொட்டுவதன் மூலமாக மற்றும் போர் ஓலங்கள் மூலமாக நாம் நிலைமையை இப்போது தூண்டிவிடக்கூடாது,” என்று அப்பத்திரிகைக்கு ஸ்ரைன்மையர் தெரிவித்தார். “கிழக்கு எல்லையில் அக்கூட்டணியினது டாங்கிகளது அடையாள அணிவகுப்பானது, பாதுகாப்பை அதிகரிக்குமென யாரேனும் நினைத்தால் அவர் தன்னைத்தானே முட்டாளாக்கிக் கொள்கிறார் என்றாகும். ஒரு புதிய மோதலுக்கு ஒரு சாக்குபோக்கை வழங்க கூடாதென எமக்கு நன்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது… ” என்றார்.
“நமது பார்வையை இராணுவத்தின் பக்கம் குறுக்கி ஒருமுகப்படுத்தி, அச்சுறுத்தும் கொள்கையில் மட்டும் இரட்சிப்பை தேடுவது இப்போது ஆபத்தானதாக" போய் முடியும் என்று ஜேர்மன் வெளியுறவு மந்திரி எச்சரித்தார். பாதுகாத்துக் கொள்வதற்காக பரஸ்பரம் தயாராக இருத்தல் என்பது பேச்சுவார்த்தை மற்றும் கூட்டு ஒத்துழைப்பின் முன்வரல்கள் ஆகியவற்றிற்கு தயாராக இருப்பதுடன் சேர்ந்து செல்ல வேண்டும் என்பதை வரலாறு கற்றுக் கொடுத்துள்ளதாக ஸ்ரைன்மையர் தெரிவித்தார். “சர்வதேச கடமைப்பாடுகளை முன்னெடுக்கும் ஒரு பங்காண்மையில் ரஷ்யாவை ஈடுபடுத்துவதில்" அங்கே ஆர்வம் இருக்க வேண்டும்.
ஸ்ரைன்மையர் இன் நேர்காணல், இதன் குறிப்புகளில் சில முன்கூட்டியே பிரசுரிக்கப்பட்டிருந்த நிலையில், ஜேர்மனியில் அனைத்து கட்சிகளின் மத்தியிலும் கடுமையான முரண்பாடுகளைத் தூண்டிவிட்டுள்ளது. அது, கிழக்கு ஐரோப்பாவில் நடக்கும் இப்போதைய நேட்டோ நடவடிக்கைகள் மற்றும் வார்சோவில் இராணுவ கூட்டணியின் உச்சிமாநாட்டில் அடுத்த மாதம் ஒப்புக்கொள்ளப்பட உள்ள ரஷ்ய எல்லையில் நேட்டோ துருப்புகளது நிரந்தர நிலைநிறுத்தம் மீதான ஒரு விமர்சனமாக பொதுவாக பொருள்விளக்கம் செய்யப்பட்டது. போலாந்தில் ஜூன் 7 இல் தொடங்கி ஜூன் 17 வரை நடந்த ஆபரேஷன் அனகொண்டா ஒத்திகையில், 24 நாடுகளைச் சேர்ந்த 31,000 படையினர் பங்குபற்றி இருந்தனர்.
முன்னணி கிறிஸ்துவ ஜனநாயக யூனியன் (CDU) அரசியல்வாதிகளும், பசுமை கட்சியின் சில பிரதிநிதிகளும் மற்றும் பழமைவாத பத்திரிகையும் அந்த சமூக ஜனநாயக வெளியுறவுத்துறை மந்திரியைக் கூர்மையாக தாக்கினர். அவர்கள் அவரை "புட்டினுக்கு வக்காலத்துவாங்குபவராக" (சமூக ஜனநாயக யூனியனின் நிர்வாகக்குழு அங்கத்தவர் ஜென்ஸ் ஸ்பாஹ்ன்); ரஷ்யா தரப்பிலிருந்து உக்ரேன் ஆக்கிரமிப்பு நடந்த உண்மை குறித்து மௌனமாக இருப்பதாக (ஐரோப்பிய பாராளுமன்றத்தின் பசுமை கட்சி அணியின் தலைவர் ரிபெக்கா ஹார்ம்ஸ்); “மேற்கு விட்டுக்கொடுக்கும்கொள்கை பக்கம் சாய்கிறது என்ற கிரெம்ளினின் நம்பிக்கையை" பலப்படுத்துவதாக (பழமைவாத Frankfurter Allgemeine Zeitung இன் துணை ஆசிரியர் பெர்தோல்டு கோஹ்லெர்); மற்றும் நடவடிக்கைகளில் ஜேர்மன் இராணுவம் பங்கெடுப்பதை அவர் ஆதரித்திருந்தார் என்பதால் சமூக ஜனநாயகக் கட்சிக்குள் தனக்கென ஒரு பிம்பத்தை உருவாக்குவதாக (நாடாளுமன்ற வெளியுறவு குழுவின் CDU தலைவர் நோபேர்ட றொட்கன்) அவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
மறுபுறம் ஸ்ரைன்மையர் சமூக ஜனநாயகக் கட்சியிடம் மற்றும் பசுமை கட்சியின் பிரிவுகளிடமிருந்து, இடது கட்சியிடமிருந்து, மற்றும் அதி தீவிர ஜேர்மனிக்கான மாற்றீடு (AfD) இன் துணை தலைவர் அலெக்சாண்டர் கௌலாந்திடமிருந்து ஆதரவைப் பெற்றார்.
பசுமை கட்சியின் முன்னாள் சுற்றுச்சூழல் மந்திரி யூர்கென் ரிட்டின், இவர் வெளியுறவு மந்திரி பதவிக்கு ஆர்வமுடன் இருப்பதாக கூறப்படுகிற நிலையில், ஸ்ரைன்மையர் ஐ நியாயப்படுத்தி, பால்டிக் நாடுகள் உண்மையில் ரஷ்யாவால் அச்சுறுத்தபடவில்லை, அவை அச்சுறுத்தப்படுவதாக உணர்கின்றன என்று அறிவித்த அவர், ஆகவே நேட்டோ பின்பற்றும் போக்கு கேள்விக்குரியதாகிறது என்றவர் வாதிட்டார்.
SPD வெளியுறவு கொள்கை வல்லுனர் றொல்வ் முற்ஷெனிச் கூறுகையில், ஸ்ரைன்மையர் SPD நாடாளுமன்ற குழுவிற்காக பேசியதாக தெரிவித்தார். சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் மற்றும் பாதுகாப்புத்துறை மந்திரி ஊர்சுலா வொன் டெர் லெயன் (இருவருமே CDU) ஸ்ரைன்மையர் இன் கொள்கையை ஏற்க வேண்டுமென அவர் பரிந்துரைத்தார். போலாந்தும் பால்டிக் நாடுகளும் அணுஆயுத தளவாடங்கள் பிரச்சினையையும் மையத்திற்குக் கொண்டு வந்துள்ள நிலையில் அவற்றின் முறையீடுகள் மிகைப்படுத்தலாக இருப்பதாக அவர் அறிவித்தார். அவற்றிற்கு தெளிவாக சமிக்ஞை வழங்கப்பட வேண்டும், அதை தான் ஸ்ரைன்மையர் இப்போது செய்துள்ளார். மீண்டும் ரஷ்யா உடன் பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும் என்றார்.
பல ஆண்டுகளாக ஸ்ரைன்மையர் நெருக்கமான ஒத்துழைப்பாளராக இருந்துள்ள முன்னாள் சான்சிலர் ஹெகார்ட் ஷ்ரோடர் இந்த வாரயிறுதியில் பேசினார். சோவியத் ஒன்றியம் மீதான ஜேர்மன் தாக்குதலின் 75 ஆம் நினைவாண்டு நேர்காணல் ஒன்றில், அவர் "அதை நிர்மூலமாக்க, அதன் மக்களை அடிமைப்படுத்த மற்றும் அவர்களை அழிக்க" ஜேர்மனி சோவியத் ஒன்றியம் மீது படையெடுத்த போது நாஜி ஜேர்மனியால் நடத்தப்பட்ட "சகாப்தகால குற்றத்தை" அவர் நினைவுகூர்ந்தார்.
நேட்டோ நடவடிக்கைகளில் ஜேர்மன் இராணுவம் பங்கெடுப்பதை "நமது வரலாற்று பின்புலத்திற்கு எதிரான மிகப்பெரும் தவறாக" கருதுவதாக ஷ்ரோடர் தெரிவித்தார். “(ரஷ்யாவிற்கு எதிரான) தடையாணைகளை முற்போக்கானரீதியில் நீக்குவதற்கு வெளியுறவு மந்திரி ஸ்ரைன்மையர் இன் முயற்சியை" அவர் ஆதரித்தார். அவர் "நாங்கள் நண்பர்கள், அது அவ்விதத்தில் தான் இருக்கிறது,” என்று கூறி, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் உடனான அவரது சொந்த நட்புறவை வெளிப்படையாகவே நியாயப்படுத்தினார்.
அந்த முன்னாள் சான்சிலர் அமெரிக்காவை நோக்கி அவரது விரல்களைத் திருப்பினார். “நெருக்கடிகளை உருவாக்கியது ரஷ்யா மட்டுமே கிடையாது,” என்றார். ஜோர்ஜ் டபிள்யு. புஷ் இன் ஈராக்கிய போர் "குறைந்தபட்சமாக IS (இஸ்லாமிக் அரசு) உருவானதோடு மட்டுமின்றி, மத்தியக் கிழக்கு போர்கள் மற்றும் உள்நாட்டு போர்களில் ஒரு தீர்க்கமான காரணமாக" இருந்தது. எவ்வாறிருந்த போதினும் ஷ்ரோடர் கூறுகையில், “அமெரிக்காவை அரசியல் அறிவின் அடையாளமாக மதிப்பவர்கள் மத்திய அரசாங்கத்தில் இருக்கிறார்கள்,” என்றார்.
ஸ்ரைன்மையர் அவரே அவரது கருத்துக்களைத் திங்களன்று நியாயப்படுத்தினார். ரஷ்யா உடனான பேச்சுவார்த்தையின் முக்கியத்துவத்திற்கு அழுத்தமளிக்க அவர் கவலை கொண்டதற்கு காரணம் அது [பேச்சுவார்த்தையின் முக்கியத்துவம்] இத்தருணத்தில் முற்றிலும் மறந்து போயிருந்ததாக அவர் உணர்ந்ததாக, லூக்சம்பேர்க்கில் நடந்த வெளியுறவு மந்திரிமார்கள் கூட்டத்தின் போது தெரிவித்தார். எவ்வாறிருப்பினும் அவர் வேல்ஸ் இல் 2014 நேட்டோ உச்சி மாநாட்டின் முடிவுகளைக் குறித்து கேள்வி எழுப்பவில்லை. அங்கே, உக்ரேனிய நெருக்கடிக்கு விடையிறுப்பாக நேட்டோவின் கிழக்கு பக்கவாட்டு தாக்குதல் படையை குறிப்பிடத்தக்க அளவிற்குப் பலப்படுத்த முடிவெடுக்கப்பட்டு இருந்தது.
இடது கட்சியின் தலைவர் ஷாரா வாக்ன்கினெக்ட் உம் ஸ்ரைன்மையரை ஆதரித்தார் மற்றும் அவரை சமாதானத்தின் பாதுகாவலராக சித்தரித்தார். “ரஷ்ய எல்லைக்கு அருகில் ஆத்திரமூட்டும் நேட்டோ போர் பயிற்சிகள், ஐரோப்பிய சமாதானத்திற்கு ஒரு பொறுப்பற்ற அச்சுறுத்தல்,” என்றவர் தெரிவித்தார்.
ஸ்ரைன்மையர் இனது ஷ்ரோடரின் இனது கவலை எல்லாம் சமாதானம் சம்பந்தப்பட்டதல்ல. ஷ்ரோடர் சான்சிலராக இருந்த போது சான்சிலர் அலுவலகத்தின் தலைவராக ஸ்ரைன்மையர் இருந்தபோதுதான், 1945க்குப் பின்னர் முதல்முறையாக, யூகோஸ்லாவியாவிற்கும் அடுத்து ஆப்கானிஸ்தானிற்கும் போருக்காக ஜேர்மன் படையினர் அனுப்பட்டனர். மேலும் ஸ்ரைன்மையரும் கூட ஜேர்மன் இராணுவவாதத்தின் ஒரு முன்னோடியாவார், இவர் 2014 மூனிச் பாதுகாப்பு கருத்தரங்கில் ஜேர்மனி "உலக விவகாரங்களில் வெறுமனே பக்கவாட்டில் இருந்து கருத்துக் கூறுவதை விட பலமானது,” என்றும், “ஜேர்மனி வெளியுறவு மற்றும் பாதுகாப்பு கொள்கை [அதாவது இராணுவ] அரங்கில் முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும், மிகவும் தீர்மானகரமாக இருக்க வேண்டும் மற்றும் மிகவும் உறுதியுடன் ஈடுபட வேண்டும்" என்றும் அறிவித்திருந்தார்.
ஸ்ரைன்மையரின் மாறுபட்ட கருத்தானது, மாறாக, ரஷ்யா மற்றும் சீனா மீதான சுற்றிவளைப்புடன் சேர்ந்து, மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவின் மறுபங்கீட்டு போர்கள், ஏகாதிபத்திய சக்திகளுக்கு உள்ளேயே மோதல்களுக்கு இட்டுச் செல்கின்றன என்பதையே தெளிவாக்குகிறது. அமெரிக்காவும் ஜேர்மனியும் கூட்டாளிகளாக இருந்தாலும் கூட, பொருளாதார மற்றும் அரசியல் நலன்களில் போட்டியிட்டு வருகின்றன. பிரிட்டன் வெளியேறினால் ஐரோப்பிய ஒன்றியத்தின் உருக்குலைவு இன்னும் தீவிரமடையும் என்ற நிலையில், இத்துடன் அமெரிக்காவில் டோனால்ட் ட்ரம்ப் இன் எழுச்சி ஆகியவை ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான மோதல்களைத் தீவிரப்படுத்துகின்றன.
ஜேர்மன் பெரு-வணிகங்களது வட்டாரங்களில் கணிசமான ஆதரவை அனுபவித்து வரும் ஸ்ரைன்மையர், குறிப்பாக அமெரிக்காவிடம் இருந்து ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் அரசியல் மற்றும் இராணுவ சுதந்திரத்தை அதிகமாக விரும்பும் ஜேர்மன் உயரடுக்குகளின் பிரிவுக்காக பேசுகிறார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், “சோசலிசமும் ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டமும்" என்ற அறிக்கையில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு எச்சரிக்கையில், “தற்போதைக்கு இந்த நோக்கங்கள் அனைத்தையுமே மற்ற பெரிய ஏகாதிபத்திய சக்திகளது ஒத்துழைப்புடன் தான் அமெரிக்கா முன்னெடுத்துக் கொண்டிருக்கிறது. ஆயினும், இந்த சக்திகளின் நலன்கள் எப்போதும் ஒன்றுபடும் என்பதில்லை. இருபதாம் நூற்றாண்டில் அமெரிக்காவுடன் இரண்டு போர்களில் இறங்கியிருந்த ஜேர்மன் ஏகாதிபத்தியமானது தனது ஏகாதிபத்திய இலட்சியங்களுக்கு மீண்டும் புத்துயிரூட்டிக் கொண்டிருக்கிறது. மேற்கு ஐரோப்பாவில் தனது மேலாதிக்கமான நிலையை உறுதிசெய்து கொண்டு விட்டிருக்கும் நிலையில், இப்போது அது ஒரு உலக சக்தியாவதற்கு முனைந்து கொண்டிருக்கிறது,” என்று குறிப்பிட்டது.
இது இப்போது உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது.