Print Version|Feedback
Socialism and the Fight Against Imperialist War
சோசலிசமும் ஏகாதிபத்தியப் போருக்கு எதிரான போராட்டமும்
Statement of the International Committee of the Fourth International
3 July 2014
1. முதலாம் உலகப் போர் வெடித்த ஒரு நூறு ஆண்டுகளுக்கும் இரண்டாம் உலகப் போர் தொடங்கி 75 ஆண்டுகளுக்கும் பின்னர் ஏகாதிபத்திய அமைப்புமுறையானது மீண்டுமொரு முறை மனிதகுலத்தை ஒரு பேரழிவைக் கொண்டு அச்சுறுத்துகிறது.
2. 2008 இல் வெடித்த உலக முதலாளித்துவத்தின் பொறிவானது உலகின் ஒரு புதிய பங்கீடு மற்றும் மறுபங்கீடுக்காய் ஏகாதிபத்திய சக்திகள் நடத்துகின்ற ஒரு கொள்ளையடிக்கும் முனைப்பை பரந்த அளவில் முடுக்கி விட்டிருக்கிறது. ஏற்கனவே, சோவியத் ஒன்றியத்தின் கலைப்புக்குப் பிந்தைய இரண்டு தசாப்தங்களில் முக்கிய ஏகாதிபத்திய சக்திகளானவை, பால்கன்கள், மத்திய கிழக்கு, மத்திய ஆசியா மற்றும் ஆபிரிக்காவிலான போர்களில் அழிவையும் மில்லியன் கணக்கான மக்களின் உயிரிழப்பையும் ஏற்படுத்தியிருக்கின்றன. மனிதத் துயரத்திற்கு அலட்சியம் காட்டும் குணத்தை மீண்டும் மீண்டும் அவை நிரூபித்து வந்திருக்கின்றன. இப்போது முக்கிய சக்திகள் எல்லாம் ஒரு அணுஆயுத தீ பற்றவைக்கப்படும் அபாயத்தை சீண்டிப் பார்க்கும் அளவுக்கு ஏகாதிபத்திய நெருக்கடி பண்புரீதியாக ஒரு புதிய கட்டத்தை எட்டி விட்டிருக்கிறது.
3. ஒரு புதிய உலகப் போருக்கான அபாயமானது முதலாளித்துவ அமைப்பின் அடிப்படை முரண்பாடுகளில் இருந்து —ஒரு உலகப் பொருளாதாரத்தின் அபிவிருத்திக்கும் அது உற்பத்தி சாதனங்களின் தனியார் உரிமைத்துவம் வேர்கொண்டிருக்கும் குரோதமுடைய தேசிய அரசுகளுக்குள்ளாக பிளக்கப்பட்டிருப்பதற்கும் இடையிலானது— எழுகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியமானது யூரோ-ஆசிய நிலப்பரப்பில், இன்னும் குறிப்பாகச் சொல்வதென்றால் ரஷ்ய மற்றும் சீனப் புரட்சிகளின் காரணத்தால் பல தசாப்தங்களுக்கு அது புறந்தள்ளி வைக்கப்பட்டிருந்த பகுதிகளில், மேலாதிக்கம் செய்வதற்கு செய்கின்ற முனைப்பில் இது மிகக் கூர்மையான வெளிப்பாட்டைக் காண்கிறது. மேற்கில், அமெரிக்காவானது, ஜேர்மனியுடன் சேர்ந்து கொண்டு, உக்ரேனை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்காக ஒரு பாசிசத் தலைமையிலான ஆட்சிக்கவிழ்ப்புக்கு ஏற்பாடு செய்தது. ஆனால் அதன் அபிலாசைகள் அத்துடன் நின்று விடவில்லை. ரஷ்யக் கூட்டமைப்பை சிதறச் செய்வதும், அதன் பரந்த இயற்கை வள ஆதாரங்களை சூறையாடுவதற்கு வழியமைக்கும் வகையில் அதனை ஒரு வரிசையான அரைக்காலனிகளாக்குவதும் தான் அதன் இறுதி நோக்கம். கிழக்கில், சீனாவைச் சுற்றிவளைப்பதும் அதனை ஒரு அரைக்காலனியாக ஆக்குவதும் தான் ஒபாமா நிர்வாகத்தின் ஆசியாவை நோக்கிய திருப்பத்தின் நோக்கமாக அமைந்திருக்கிறது. தொழிலாள வர்க்கத்திடம் இருந்து பிழிந்தெடுக்கப்படுகின்றதும் முதலாளித்துவப் பொருளாதாரத்திற்கு ஜீவநாடியானதுமான உபரி மதிப்பின் முக்கியமான உலக ஆதாரங்களில் ஒன்றாக இருக்கும் மலிவு உழைப்பின் மீது மேலாதிக்கத்தை உறுதிசெய்வது தான் இங்கே அதன் நோக்கமாக இருக்கிறது.
4. தற்போதைக்கு இந்த நோக்கங்கள் அனைத்தையுமே மற்ற பெரிய ஏகாதிபத்திய சக்திகளது ஒத்துழைப்புடன் தான் அமெரிக்கா முன்னெடுத்துக் கொண்டிருக்கிறது. ஆயினும், இந்த சக்திகளின் நலன்கள் எப்போதும் ஒன்றுபடும் என்பதில்லை. இருபதாம் நூற்றாண்டில் அமெரிக்காவுடன் இரண்டு போர்களில் இறங்கியிருந்த ஜேர்மன் ஏகாதிபத்தியமானது தனது ஏகாதிபத்திய இலட்சியங்களுக்கு மீண்டும் புத்துயிரூட்டிக் கொண்டிருக்கிறது. மேற்கு ஐரோப்பாவில் தனது மேலாதிக்கமான நிலையை உறுதிசெய்து கொண்டு விட்டிருக்கும் நிலையில், இப்போது அது ஒரு உலக சக்தியாவதற்கு முனைந்து கொண்டிருக்கிறது. இதேபோல, ஆசியாவில் ஜப்பானும் பிராந்திய மேலாதிக்கத்திற்கான தனது சொந்த நீண்டகால அபிலாசைகளை முன்னெடுப்பதற்காக மீண்டும் இராணுவமயமாக்கத்தை மேற்கொண்டு வருகிறது. இந்தத் திருப்பத்திற்கு அங்கீகாரம் கோருகின்ற பொருட்டு, 1930கள் மற்றும் 1940களில் நாஜிக்களும் மற்றும் ஜப்பானிய ஏகாதிபத்திய இராணுவமும் செய்த மாபெரும் குற்றங்களை மூடிமறைத்துவிட திட்டமிட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
5. பிரிட்டன், பிரான்ஸ், கனடா மற்றும் ஆஸ்திரேலியா உட்பட ஏகாதிபத்திய சக்திகள் அனைத்துமே தமக்கான செல்வாக்கு பிராந்தியங்களை உருவாக்குகின்ற இந்த போட்டியில் முழுதாகப் பங்கெடுத்திருக்கின்றன. மத்திய கிழக்கு, ஆபிரிக்கா மற்றும் ஆசியாவில் இருக்கும் முன்னாள் காலனித்துவ நாடுகளும் மற்றும் அரைக் காலனித்துவ நாடுகளும் மட்டுமல்ல, ஆர்க்டிக், அந்தார்க்டிக் இன்னும் விண்வெளிப் பகுதி அத்துடன் இணையவெளி என உலகின் ஒவ்வொரு பகுதியுமே கடுமையான மோதலுக்கான ஒரு மூலகாரணமாக ஆகியிருக்கின்றன. இந்த மோதல்கள் தனது பங்கிற்கு பிரிவினைவாதப் போக்குகளுக்கும், இனப் பிரிவினைகளுக்கும், வகுப்புவாத மோதல்களுக்கும் இட்டுச்செல்லத்தக்க பதட்டங்களை வளர்த்தெடுக்கின்றன.
6. ரஷ்யா மற்றும் சீனாவின் ஆட்சிகள் இந்த ஏகாதிபத்திய போர் உந்துதலுக்கு எதிரான ஒரு எதிர்ப்பலம் எதனையும் கொண்டிருக்கவில்லை. இவ்விரண்டு நாடுகளுமே ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் நடத்தப்பட்ட முதலாளித்துவ மீட்சி நடவடிக்கைகளில் இருந்து எழுந்த குற்றவியல்தனமான நிதிப் பிரபுத்துவ அணியையே பிரதிநிதித்துவம் செய்கின்றன, அவற்றின் நலன்களைப் பாதுகாக்கவே முனைகின்றன. ரஷ்யா மற்றும் சீனாவின் பரந்த மக்கள் இப்போது முகம்கொடுக்கின்ற மிகப் பயங்கரமான அபாயங்களுக்குரிய அரசியல் பொறுப்பு இவற்றுக்குரியது என்பது மட்டுமல்ல, தேசியவாதத்தை இவை கிளறிவிடுவதானது தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்தவே சேவை செய்து கொண்டிருக்கிறது.
7. ஒரு புரட்சிகர மார்க்சிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் சர்வதேசத் தொழிலாள வர்க்கம் தலையிடவில்லை என்றால், இன்னுமொரு ஏகாதிபத்திய இரத்த ஆறு ஓடுவது சாத்தியம் என்பது மட்டுமல்ல தவிர்க்கமுடியாததாகவும் கூட இருக்கிறது. 20 ஆம் நூற்றாண்டின் இரண்டு உலகப் போர்களும் உலகப் பொருளாதாரத்திற்கும் காலாவதியாகிப் போன தேசிய-அரசு அமைப்புமுறைக்கும் இடையிலான முரண்பாடுகளில் இருந்தே எழுந்திருந்தன. ஒவ்வொரு ஏகாதிபத்திய சக்தியுமே இந்த முரண்பாட்டை, உலக மேலாதிக்கத்திற்காய் முயற்சிப்பதன் மூலமாகத் தீர்க்க முனைந்தன. ஆனால் கடந்த மூன்று தசாப்த காலங்களின் உற்பத்தியின் பூகோளமயமாக்கமானது, உலகப் பொருளாதாரம் ஒருங்கிணைவு காண்பதில் மேலுமொரு பண்புரீதியான பாய்ச்சலை விளைவித்ததுடன், முதலாளித்துவத்தின் அடிப்படை முரண்பாடுகளை தீவிரத்தின் புதியதொரு உச்சத்திற்கு கொண்டுவந்து சேர்த்திருக்கிறது.
8. உலகளாவிய மட்டத்தில் ஒருங்கிணைந்த பொருளாதாரத்தை பகுத்தறிவுடனான ஒரு அடிப்படையில் ஒருங்கிணைப்பதும், இவ்வாறாய் உற்பத்தி சக்திகளின் ஒத்திசைவான அபிவிருத்தியை உறுதி செய்வதும், முதலாளித்துவத்தின் கீழ் சாத்தியமற்றது என்பதையே ஏகாதிபத்திய மற்றும் தேசிய அரசு நலன்களிடையிலான மோதல் வெளிப்படுத்துகிறது. எப்படியிருப்பினும், ஏகாதிபத்தியத்தை அதன் முடிவின் எல்லைக்கு இட்டுச்செல்லும் அதே முரண்பாடுகள் தான் சோசலிசப் புரட்சிக்கான புறநிலையான உத்வேகத்தையும் வழங்குகின்றது. உற்பத்தியின் உலகமயமாக்கமானது தொழிலாள வர்க்கத்தின் பாரியதொரு பெருக்கத்திற்கு இட்டுச் சென்றுள்ளது. எந்த தேசத்திற்கும் விசுவாசத்திற்கான கடமைப்பாடற்ற இந்த சமூக சக்தி மட்டுமே போருக்கு மூலகாரணமாய் திகழும் இலாப அமைப்புமுறைக்கு ஒரு முடிவு கட்டத் திறன்படைத்ததாகும்.
9. சமூக ஏற்றத்தாழ்வு பெருகுவது, எதேச்சாதிகார ஆட்சி வடிவங்களில் சென்றுமுடிவது என தொழிலாள வர்க்கம் முகம்கொடுக்கின்ற அத்தனை மிகப்பெரும் பிரச்சினைகளுமே இந்தப் போராட்டத்தின் பிரிக்கவியலாத பாகங்களே ஆகும். போருக்கு எதிரானதொரு போராட்டமில்லாமல் சோசலிசத்திற்கான எந்தப் போராட்டமும் இருக்க முடியாது, சோசலிசத்துக்கான போராட்டமில்லாமல் போருக்கு எதிரான எந்தப் போராட்டமும் இருக்க முடியாது. அரசியல் அதிகாரத்தைக் கையிலெடுப்பதற்கான போராட்டம், வங்கிகள் மற்றும் மிகப்பெரும் பெருநிறுவனங்களை கையகப்படுத்துவது, அத்துடன் தொழிலாளர்’ அரசுகளின் ஒரு உலகக் கூட்டமைப்பை கட்டியமைக்கின்ற கடமையை ஆரம்பிப்பது என ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில், இளைஞர்களையும் ஒடுக்கப்பட்ட மக்களையும் தனக்குப் பின்னால் அணிதிரட்டிய தொழிலாள வர்க்கத்தின் மூலமாகவே போர் எதிர்க்கப்பட வேண்டும்.
10. போருக்கு எதிரான போராட்டத்தை தனது அரசியல் வேலையின் மையத்தானத்தில் இருத்த நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு தீர்மானித்துக் கொண்டுள்ளது. ஏகாதிபத்திய வன்முறை மற்றும் இராணுவவாதம் மறுஎழுச்சி காண்பதற்கு எதிரான புரட்சிகர எதிர்ப்பின் சர்வதேச மையமாக அது ஆக வேண்டும். இந்தக் கடமையை முன்னெடுக்கும் நோக்கம் கூட வேறெந்தவொரு அமைப்பிற்கும் கிடையாது. எண்ணிலடங்கா முன்னாள் சமாதானவாதிகளும், தாராளவாதிகளும், பசுமைவாதிகளும் மற்றும் அராஜகவாதிகளும் மனித உரிமைகள் என்பதான மோசடியான பதாகையின் கீழ் ஏகாதிபத்தியப் போர் முனைப்பின் பின்னால் தங்களை நிலைநிறுத்திக் கொண்டிருக்கின்றனர். இதேபோல பப்லோவாதிகள் மற்றும் அரசு முதலாளித்துவத்தினர் போன்ற போலி இடது போக்குகள், ”தொட்டதெற்கெல்லாம் ஏகாதிபத்திய-எதிர்ப்பு என முழங்குவதை” கண்டனம் செய்திருப்பதுடன், ரஷ்யா மற்றும் சீனாவுக்கு எதிரான அமெரிக்க மூர்க்கத்தனத்தின் பின்னால் அணிவகுத்துள்ளனர்.
11. அனைத்துலகக் குழுவின் தலைமையின் கீழ் நான்காம் அகிலத்தைக் கட்டியெழுப்புவதே மையமான மூலோபாயப் பிரச்சினை ஆகும். இதுமட்டுமே தொழிலாள வர்க்கத்தை சர்வதேசரீதியாக ஐக்கியப்படுத்துவதற்கு ஒரேயொரு சிந்திக்கத்தக்க வழிமுறையாக இருக்கிறது. மே 4 அன்று நடத்தப்பட்ட இணையவழி மே தினக் கூட்டத்தில் 92 நாடுகளில் இருந்து பங்குபெற்றமையானது, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் புரட்சிகர முன்னோக்கிற்கு ஆதரவு பெருகியிருப்பதையும் சோசலிசப் புரட்சிக்கான உலகக் கட்சியாக அது அபிவிருத்தி காண்பதற்கான சாத்திய வளத்தையும் வெளிப்படுத்தியது. உலகெங்கிலும் புதிய நாடுகளில் மற்றும் பிராந்தியங்களில் அதன் பிரிவுகளை அபிவிருத்தி செய்வதற்காக உழைப்பதே இப்போது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பணியாக இருக்கிறது.
Adopted by the International Committee of the Fourth International on June 9, 2014.