World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French labor law reform sets stage for historic attack on workers’ rights

பிரெஞ்சு தொழிலாளர் சட்ட சீர்திருத்தம் தொழிலாளர்களது உரிமைகள் மீதான வரலாற்று தாக்குதல்களுக்குக் களம் அமைக்கிறது

By Francis Dubois
22 February 2016

Back to screen version

ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்டின் சோசலிஸ்ட் கட்சியால் (PS), உத்தியோகபூர்வமாக மார்ச் 9 இல் வெளியிடப்படுவதற்கு முன்னரே கடந்த வாரம் ஊடகங்களில் வெளியான பிரெஞ்சு தொழிலாளர் சட்ட சீர்திருத்த மசோதா, தொழிலாள வர்க்கத்தின் சமூக உரிமைகள் மீதான ஓர் அடிப்படை தாக்குதலாகும். பிரான்ஸ் ஏற்கனவே அவசரகால நெருக்கடி நிலையின் கீழ் வைக்கப்பட்டிருக்கையில், இந்த மசோதா பிரெஞ்சு ஆளும் வர்க்கத்திற்கு இரண்டாம் உலக போருக்குப் பின்னர் முன்னுதாரணமற்ற ஒரு பொருளாதார சர்வாதிகாரத்திற்கான கருவியை வழங்குகிறது.

சோசலிஸ்ட் கட்சியின் தொழிலாளர்துறை மந்திரி Myriam El Khomri இன் மேற்பார்வையில் தயாரிக்கப்பட இந்த சட்டமசோதா, ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட உள்ளது. பிரான்சில் செயல்படும் வணிகங்களின் போட்டித்தன்மையை பாதுகாப்பதை மற்றும் ஊக்குவிப்பதை அதன் நோக்கமாக குறிப்பிடும் இச்சீர்திருத்தம், பிரான்சில் சோசலிஸ்ட் கட்சியால் முழு அளவில் தயாரிக்கப்பட்டு வரும் சமூக எதிர்புரட்சியைக் குறிக்கிறது.

அந்த தொழிலாளர் சட்டத்தால் உத்தரவாதம் அளிக்கப்படும் பாதுகாப்புகள், ஒவ்வொரு தனித்தனி நிறுவனத்திலும் தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளிகளுக்கு இடையிலான பேரம்பேசல்களைக் கொண்டு பிரதியீடு செய்யப்பட உள்ளன, பின்னர் அதுவே "பொதுவான சட்ட கோட்பாடாக" மாறிவிடும். இவை, அந்த தொழிலாளர் சட்டத்தின் கீழ் மற்றும் தொழில்துறை-மட்டத்திலான உடன்படிக்கைகளின் கீழ் உள்ள தொழிலாளர்களின் தனிப்பட்ட உரிமைகளைக் கையாள்வதற்குத் துருப்புச்சீட்டாக மாறிவிடும்.

வாராந்தர வேலை நேரத்தை நீடிப்பதும் மற்றும் இலகுவாக்குவதும் மற்றொரு முக்கிய நடவடிக்கையாகும். லியோனல் ஜோஸ்பனின் சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்ட 35 மணி நேர வாராந்தர வேலை நேரம் ஓரங்கட்டப்பட்டு வருகிறது. ஒரு வேலையில், அதிகபட்ச வேலை நேர மணித் தியாலங்களின் எண்ணிக்கை, வாராந்தர 44 மணி நேரம் மற்றும் நாளொன்றுக்கு 10 மணி நேரம் என்பதிலிருந்து 48 ஆக, அல்லது வாராந்தர 60 மணி நேரம் மற்றும் சில இடங்களில் நாளொன்றுக்கு 12 மணி நேரம் என்று செல்கிறது.

இந்த புதிய அதிகரிப்பு நீண்ட காலத்திற்குத் திணிக்கப்படும். முதலாளிமார்கள் தொழிலாளர்களது ஒப்பந்த காலம் முடியும் வரையில் மாதத்திற்கு 48 மணி நேர வேலையில் வைத்திருந்து, பின்னர் எஞ்சிய கட்டுப்பாடுகளை மீறாமல் இருக்க அவர்களை வேலையை விட்டு நீக்கிவிட முடியும், இதற்காக "குறுகிய-கால" ஒப்பந்தங்களுக்கு நன்றி கூற வேண்டும். நிறுவனங்கள் அவற்றின் தேவைகளுக்கு ஏற்ப ஓய்வு நேரங்களை வெட்டுவதற்கான உரிமையும் பெறுகின்றன. இது இழப்பைச் சந்தித்து வரும் நிறுவனங்களுக்கு மட்டுமல்ல, மாறாக "அவற்றின் போட்டித்தன்மையை அதிகரிக்க" விரும்பும் நிறுவனங்களுக்கும் பொருந்தும். முதல் எட்டு மணிநேர கூடுதல் நேர வேலைக்கான கூலி, 25 சதவீதத்திற்கு பதிலாக, 10 சதவீதம் கொடுக்கப்பட உள்ளது.

சிக்கலான சூழ்நிலைகளின் முட்டுக்கட்டைகளை நீக்க" முதலாளிமார்கள் "பொதுவாக்கெடுப்பை" ஏற்பாடு செய்து கொள்ளும் உரிமையைப் பெற்றிருப்பார்கள். தொழிலாளர் சக்தியின் ஒரு சிறுபான்மையைப் பிரதிநிதித்துவம் செய்யும் தொழிற்சங்கங்களால், ஒட்டுமொத்த தொழிலாளர் சக்தியின் மீதும் முடிவுகளைத் திணிக்கும் அத்தகைய வாக்கெடுப்புகளை ஒழுங்கமைக்க முடியும். இது பொது வாக்கெடுப்பில் முதலாளிமார்கள் முன்மொழியும் நிபந்தனைகளை நிராகரித்தால் ஆலைகளை மூடும் அச்சுறுத்தல்களுடன், தொழிலாளர்களின் நெற்றிப்பொட்டில் எப்போதும் துப்பாக்கி முனையை வைத்திருக்க அவர்களை அனுமதிக்கும்.

மற்றொரு முக்கிய வழிவகை பாரிய வேலைநீக்கங்களாகும்., இது இப்போது கணிசமான சட்டக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டுள்ளது,, பாரிய வேலைநீக்கங்கள் சுலபமாக்கப்படும் மற்றும் ஊக்குவித்தலும் செய்யப்படும். நிறுவனங்கள்சிக்கலில் [அவை இருப்பதாக] நிரூபிப்பதற்கு ஏற்ற எந்தவித ஆதாரத்தின்" அடித்தளத்திலும் பாரிய வேலைநீக்கங்களைச் செய்ய முடியும்.

தொழிலாளர்கள் சட்டரீதியில் எதிர்க்க முடியாதவாறு, அல்லது எந்தவிதமான சட்டபூர்வ மேற்பார்வையும் இன்றி (என்ன மாதிரியானதாக இருந்தாலும்), நிறுவனங்கள் பாரிய வேலை நீக்கங்களைச் செய்யக்கூடிய நிலைமைகளில், "தொழில்நுட்ப மாற்றம்,” அல்லது "போட்டித்தன்மையை பேண அவசியப்படுவதால் நிறுவனத்தை மறுஒழுங்கமைத்தல்" என்பன போன்ற வெற்று காரணங்களும் உள்ளடங்கும். இவ்விதத்தில் ஒரு நிறுவனம் குறிப்பிடத்தக்க அளவிற்கு இலாபம் ஈட்டினாலும், ஆனால் குறைவாக இலாபமீட்ட தொடங்குகையில், அதனால் பாரிய வேலைநீக்கங்களை நியாயப்படுத்த முடியும்.

இந்த மசோதாவின் கீழ், ஒரு பன்னாட்டு பெருநிறுவனம் அதன் உலகளாவிய நிலைமையின் அடிப்படையில் பாரிய வேலைநீக்கங்களை அது நடத்த வேண்டியிருக்கிறது என்று நிரூபிக்க வேண்டியதில்லை, மாறாக தேசிய நிலைமைகளின் அடிப்படையில் நிரூபித்தாலே போதுமானது. இவ்விதத்தில் ஒரு பன்னாட்டு நிறுவனம் அதன் பிரெஞ்சு துணை நிறுவனத்தில் ஒரு "கடினமான நிலைமையை" உருவாக்கிக் காட்ட, எளிதாக அதன் கணக்குவழக்குகளைப் பயன்படுத்திக் கொள்ள முடியும், அதன் அடிப்படையில் வேலைகளையும் வெட்ட முடியும்.

தொழிலாளர்களின் வழக்கறிஞர் ஒருவர் Judith Krivine, L’Express க்குக் கூறுகையில், “இது தொழிலாளர்களுக்குப் பேரழிவுகரமானது, இது பொருளாதார காரணங்களுக்காக நடத்தப்படும் பாரிய வேலைநீக்கங்களின் எண்ணிக்கையைக் கணிசமான அளவுக்கு உயர்த்துவதற்கான ஒரு வழியாகும்,” என்றார்.

ஒரு நிறுவனம் ஒரு தொழிலாளருக்கு இழப்பீடுகளை வழங்க வேண்டுமென ஏதோவிதத்தில் ஒரு தொழிலாளர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினாலும், இந்த மசோதா இத்தகைய அபராதங்களை முன்கூட்டியே குறிப்பிடுவதுடன், அவற்றின் அளவைக் குறித்து குறிப்பிடுவதற்கு நீதிபதிகளை அனுமதிக்கவில்லை. Europe1 செய்தியின்படி, வேலைநீக்கங்களை ஒழுங்கமைக்கையில்குறைந்தளவில் மனசாட்சிப்படி செயல்படும் பெருநிறுவனங்கள் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுவது இலாபகரமாக இருக்குமா என்று கணக்கிடக்கூடுமென இப்போது சிலர் கூறுகின்றனர்,” என்றது.

இதனினும் அதிக வஞ்சகமானது, எரிச்சலூட்டும் வகையில் "வேலைகளை மேம்படுத்துவதற்காக" என்றழைக்கப்படும் உடன்படிக்கைகளாகும். இது புதிய ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக என்று கூறி கூலிகளை வெட்டவும் மற்றும் வேலை நேரங்களை அதிகரிக்கவும் நிறுவனங்களை அனுமதிக்கிறது. இத்தகைய நிலைமைகளின் கீழ் தனது ஒப்பந்தத்தில் ஒரு மாற்றத்தை ஏற்க மறுக்கும் ஒரு தொழிலாளரைப் "பொருளாதார காரணங்களுக்காக" அல்லாமல், மாறாக "நிஜமான மற்றும் ஆழமான காரணத்திற்காக" வேலையிலிருந்து நீக்க முடியும், அதாவது எந்தவித இழப்பீடும் கொடுக்காமல் நீக்க முடியும்.  

பிரெஞ்சு ஆளும் வர்க்கம் தொழிலாளர்கள் மீது முன்னொருபோதும் இல்லாதளவில் சமூக தாக்குதல்களுக்குத் தயாரிப்பு செய்து வருகிறது என்பதற்கு இத்தகைய ஒரு மசோதா தயாரிக்கப்பட்டிருப்பதே ஓர் அறிகுறியாகும். நிதியியல் சந்தைகள் வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில் மற்றும் தொலைதூரத்தில் ஒரு புதிய உலகளாவிய பொருளாதார நெருக்கடி தென்படுகின்ற வேளையில், முதலாளிமார்களின் கூட்டமைப்புகள், அரசு மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் கூலிகளை வெட்டவும் மற்றும் பாரிய வேலைநீக்கங்களை நடத்தவும் தயாரிப்பு செய்கின்றன.

நவம்பர் 13 பாரிஸ் பயங்கரவாத தாக்குதல்களுக்கு, அவசரகால நெருக்கடி நிலை மற்றும் சட்ட ஒழுங்கு பிரச்சாரத்தைக் கொண்டு ஆளும் வர்க்கம் விடையிறுத்தது, அதற்கு அடியிலிருப்பது இந்த சமூக-பொருளாதார நெருக்கடி தான். கடன்கள் மற்றும் அதன் போட்டித்தன்மையின்மையால் பலவீனமடைந்துள்ள பிரெஞ்சு முதலாளித்துவம், பாரிய எதிர்ப்புக்கு முன்னால் ஒருதுளி ஜனநாயக சட்டபூர்வத்தன்மை இல்லாமல் இந்த முறைமைகளைத் திணிக்க தயாரிப்பு செய்து வருகிறதுஅதுவும் முதலாளிமார்களுக்கும் மற்றும் விலைக்கு வாங்கப்பட்ட தொழிற்சங்கத்திற்கும் இடையிலான தற்போதைய "சமூக பேச்சுவார்த்தை" மோசடி வகைப்பட்ட பிரச்சினையில் இருக்கின்ற நிலையில் இது நடந்து வருகிறது.

ஹோலாண்ட் இவ்விதத்தில் மக்கள் எதிர்ப்பின் குரல்வளையை நெரிக்க ஒருபுறம் அவசரகால நெருக்கடி நிலைக்கும் மற்றும் மறுபுறம் தற்போது என்ன பாதுகாப்புகள் இருக்கின்றதோ அதை குறுக்காக வெட்டுவதற்காக தொழிலாளர் சட்டத்தை நாசமாக்குதவற்கும் தயாரிப்பு செய்து வருகிறார்.

கடந்த இலையுதிர் காலத்திலிருந்து தயாரிக்கப்பட்டு வந்த இந்த சீர்திருத்தத்தை, பத்திரிகைகள் ஆழ்ந்த சிக்கனத் திட்டத்தைக் கொண்டு ஜேர்மன் போட்டித்தன்மையை ஊக்குவித்த ஜேர்மனியின் ஹார்ட்ஸ் IV சட்டங்களுடன் அல்லது 1981 இல் அமெரிக்காவில் PATCO விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களின் தொழிற்சங்கத்தை ரீகன் நிர்வாகம் நசுக்கியதுடன் ஒப்பிட்டன. அமெரிக்க தொழிற்சங்கத்தால் வேலைநிறுத்தம் தனிமைப்படுத்தப்பட்டமை மற்றும் PATCO நசுக்கப்பட்டமை ஆகியவை, தொழிலாளர்கள் மீது ஆளும் வர்க்கத்தின் தாக்குதல்களைத் திணிக்க உதவிய அமெரிக்க தொழிற்சங்கங்கள் பெருநிறுவன அதிகாரத்துவங்களாக மாறியதில் ஒரு முக்கிய படியாகும்.

தொழிற்சங்கங்கள் மற்றும் அவற்றின் கூட்டாளிகளான ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் போலி-இடது புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சி போன்றவற்றின் ஆதரவுடன் அதிகாரத்திற்கு வந்த சோசலிஸ்ட் கட்சி இத்தகைய சீர்திருத்தங்களை முன்னெடுப்பது, இடதில் இருக்கும் வெற்றிடத்தைக் குறிக்கிறது. வழமையாக “இடது” என்று குறிக்கப்படும் கட்சிகள், உண்மையில் தொழிலாளர்களுக்கு வன்முறையானரீதியில் விரோதமாகி உள்ளதுடன், நனவுபூர்வமாக வலதிற்கு நகர்ந்துள்ளன. அவை, தொழிலாளர் சட்ட பாதுகாப்பிலிருந்து அகற்றப்பட்ட முறைமைகளைத் திணிக்க விரும்புகின்ற, முதலாளித்துவ மற்றும் குட்டி-முதலாளித்துவ வர்க்க அடுக்குகளுக்காக பேசுகின்றன. அத்தகைய தொழிலாளர்நலச் சட்டங்களை நிதியியல் சந்தைகளின் கட்டளைகளைக் கொண்டு பிரதியீடு செய்வதே இந்த அடுக்குகளின் நோக்கமாகும்.

வலதுசாரி குடியரசு கட்சியின் ஒரு நிர்வாகியான Pierre-Yves Bournazel, “Myriam El Khomri ஐ வலதிற்கு வரவேற்கிறோம்,” என்று எழுதினார்.

மெடெஃப் வணிக கூட்டமைப்பின் தலைவர் பியர் கட்டாஸ், அந்த மசோதா "சரியான திசையில் இருப்பதாக" பாராட்டியதுடன், தொழிலாளர் சந்தையின் "கதவுகளைத் திறந்துவிட" “அதன் வழியில் பயணிக்குமாறு" சோசலிஸ்ட் கட்சிக்கு அழைப்புவிடுத்தார்.

பிரெஞ்சு தொழிற்சங்கங்கள் இப்போது அந்த முறைமைகளுக்காக ஒப்பாரி வைத்து கூப்பாடு போடுகின்ற போதினும், அவற்றின் திடீர் சீற்றம் நம்புவதற்குரியதல்ல. அவற்றுடன் கலந்தாலோசிக்காமல் அரசாங்கம் இந்த முறைமைகளை வெளிப்படையாக கொண்டு வரவில்லை.

இச்சீர்திருத்தங்களது "இலகுதன்மையின் சற்றே வறட்டுவாத பார்வையைக்" இப்போது குறை கூறிவரும் பிரெஞ்சு ஜனநாயக தொழிலாளர் கூட்டமைப்பு (CFDT), முன்னதாக "தொழிலாளர்களுக்கான தொழிலாளர்நல சட்டத்தின் மீது சிறந்த வெளிப்படைத்தன்மைக்கு அது உத்தரவாதமளிப்பதாகவும் மற்றும் சமூக பேரம்பேசல்களை மீளபலப்படுத்துவதாகவும்" அதை புகழ்ந்திருந்தது.

தொழிலாளர் சட்டங்களின் இந்த சீர்திருத்தம், நிறுவன-மட்டத்திலான புதிய வகை உடன்படிக்கைகள் அனைத்திலும் தொழிற்சங்கங்கள் பங்குபற்றுவதற்கு அழைப்புவிடுக்கிறது. முதலாளிமார்களும் மற்றும் அரசாங்கமும் இத்தாக்குதல்களைக் கூட்டாக திணிக்க தொழிற்சங்கங்களுடன் ஓர் உடன்பாட்டை ஏற்படுத்த முடியுமென வெளிப்படையாக நம்புகின்றனர்.