Print Version|Feedback
Sri Lanka: Political lessons of the Hambantota port strike
இலங்கை: அம்பாந்தோட்டை துறைமுக வேலைநிறுத்தத்தின் அரசியல் படிப்பினைகள்
By the Socialist Equality Party (Sri Lanka)
21 December 2016
அம்பாந்தோட்டை துறைமுக தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்துக்கு எதிராக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் கட்டவிழ்த்து விட்ட முன்னெப்போதும் இல்லாத அளவிலான அரச அடக்குமுறையின் முக்கிய தாக்கங்கள் குறித்து இலங்கை தொழிலாள வர்க்கத்தை சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) எச்சரிக்கிறது.
தங்களது தொழிலை பாதுகாப்பதற்காக 480க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் எட்டு நாள் வெளிநடப்புக்கான தனது பிரதிபலிப்பை, நீதிமன்ற ஆணைகள், அமைச்சின் இறுதி நிபந்தனைகள், பொலிஸ் மற்றும் ஆயுதமேந்திய கடற்படையினர், கருங்காலிகள், அரச அனுசரணையிலான ஆத்திரமூட்டல்கள் மற்றும் மூர்க்கமான ஊடகப் பிரச்சாரங்களுமாக, இந்த அரசாங்கம் தனது கையிருப்பிலுள்ள அனைத்து வழிமுறைகளையும் கட்டவிழ்த்துவிட்டதன் மூலம் காட்டியது.
இந்த கொடூரமான அடக்குமுறை, ஆளும் வர்க்கம் எதிர்கொண்டுள்ள மிகப்பெரும் பொருளாதார அரசியல் நெருக்கடியின் பிரதிபலிப்பாகும். உலகப் பொருளாதார சரிவு மற்றும் வெகுஜன ஆதரவு தொடர்ந்தும் வீழ்ச்சியடைவதை எதிர்கொள்ளும் அரசாங்கமானது தொழிற்சங்கங்கள் மற்றும் இடது என்று அழைக்கப்படும் கட்சிகளின் செயலூக்கமான ஆதரவோடு, தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகள் போராடிப் பெற்ற அனைத்து சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளை அழிக்க உறுதிபூண்டுள்ளது.
இந்த நிலைமைகள், முதலாளித்துவ இலாப நோக்கு அமைப்பு முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஒரு சோசலிச மற்றும் சர்வதேசிய வேலைத்திட்டத்தின் அடிப்படையில், கிராமப்புற ஏழைகள் மற்றும் இளைஞர்களை அணிதிரட்டி தலைமை வகிக்க தொழிலாள வர்க்கத்தின் ஒரு புதிய புரட்சிகர தலைமையை கட்டியெழுப்ப வேண்டிய அவசர தேவையை சுட்டிக் காட்டுகின்றது.
துறைமுகத் தொழிலாளர்கள், இலங்கை துறைமுக அதிகார சபையில் (இ.து.அ.ச.) நிரந்தர தொழில் கோரி, டிசம்பர் 7 வெளியேறினர். அவர்கள் முதலில் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் முந்தைய அரசாங்கத்தின் கீழ், 2013ல் நாட் கூலி தொழிலாளர்களாக சேர்த்துக்கொள்ளப்பட்டனர். அவர்கள் நிரந்தரமாக்கப்படுவர் என வாக்குறுதியளிக்கப்பட்டது. தற்போதைய அரசாங்கம், துரிதமாக தனியாருக்கு சொந்தமான ஒரு கூட்டு நிறுவனமாக அம்பாந்தோட்டை துறைமுகத்தை மாற்றுவதற்காக, சீனாவுக்கு சொந்தமான மேர்சன்ட் ஃபோர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்ட உடன், தங்களை நிரந்தரமாக்க கோரும் தொழிலாளர்களின் கோரிக்கை புதிய அவசரமான வடிவத்தை எடுத்தது. மேர்சன்ட் ஃபோர்ட் ஹோல்டிங்ஸ், 80 சதவிகிதம் உரிமை கொண்டிருப்பதோடு புதிய நிறுவனத்தில் துறைமுக அதிகார சபை 20 சதவீதத்தையே தன்வசம் வைத்திருக்கும்.
அரசாங்கம் துறைமுகத் தொழிலாளர்களை முதலில் முன்னாள் இராஜபக்ஷ ஆட்சியின் ஆதரவாளர்கள் எனக் காட்ட முயற்சித்தது. வேலை நிறுத்தம் செய்பவர்களை தனிமைப்படுத்த மேற்கொண்ட அதன் வெறுக்கத்தக்க முயற்சிகள், தற்காலிக தொழிலாளர்கள் சம்பந்தமாக பொது மக்களின் ஆதரவு பெருகிய நிலையில் தோல்வி கண்டது. சம்பந்தப்பட்டவர்கள் சிறிய எண்ணிக்கையிலானவர்களாக இருந்த போதிலும், வேலைநிறுத்தம் துறைமுகத்தில் வேகமாக பணிகளை ஸ்தம்பிக்க வைத்து, கப்பல்கள் துறைமுகத்தைவிட்டு வெளியேற முடியாமல் ஆக்கியது.
டிசம்பர் 10 அன்று, அரசாங்கம் நூற்றுக்கணக்கான கடற்படை சிப்பாய்களை அணிதிரட்டியது. கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ன தனிப்பட்ட முறையில் இவர்களை வழிநடத்தினார். வெளிநடப்பை நிறுத்தும் முயற்சியாக பொல்லுகள் மற்றும் துப்பாக்கி குழாய்களாலும் வேலைநிறுத்தக்காரர்களை கடற்படையினர் தாக்கினர்.
நான்கு தொழிலாளர்கள் கடற்படை தாக்குதலினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, தாக்குதலின் போது ஒரு பத்திரிகையாளருடன் வைஸ் அட்மிரல் விஜேகுணரட்ன முரட்டுத்தனமாக மல்லுகட்டுவதை காட்டும் ஒரு வீடியோ பதிவு சமூக வலைத் தளங்களில் வைரலாக பரவி வருகின்றன. வேலைநிறுத்தத்தை குழப்ப கருங்காலி வேலை செய்வதற்காக வேறு ஒரு தொழிலாளர் வாடகை நிறுவனத்திடம் இருந்து அணிதிரட்டப்பட்ட தொழிலாளர்களும், அந்த பொறுப்பை ஏற்க மறுத்து வெளியேறிவிட்ட நிலையில், அரசாங்கம் துறைமுக வேலைகளை கையாள கடற்படை சிப்பாய்களை பயன்படுத்த தொடங்கியுள்ளது.
டிசம்பர் 14 அன்று, அரசாங்கம், வேலை நிறுத்தம் செய்யும் துறைமுக தொழிலாளரின் உரிமைகளை அபகரிக்கும் ஏழு அம்ச நீதிமன்ற உத்தரவு ஒன்றைப் பெற்றது. அதே நேரம், துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவும் ஒரு இறுதி எச்சரிக்கைகை விடுத்தார்: டிசம்பர் 15, பிற்பகல் 2 மணிக்குள் வேலைக்குத் திரும்பாத எந்த ஊழியரும் வேலையை கைவிட்டவராக கருதப்படுவார், என அவர் எச்சரித்தார்.
இந்த முழு அளவிலான ஜனநாயக விரோத தாக்குதல்களுக்கு எதிராக போராடுவதற்கு அரசியல் தலைமையும் வேலைத்திட்டமும் இன்மையால், அம்பாந்தோட்டை துறைமுகத் தொழிலாளர்கள் அவர்களின் போராட்டத்தை கைவிட்டு டிசம்பர் 15 வேலைக்குத் திரும்ப நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.
இந்த அரசியல் பின்னடைவுக்கு, சிறிசேன-விக்கரமசிங்கவின் அரசாங்கத்தை ஆட்சிக்கு கொணடுவர உதவிசெய்த "இடது" என அழைக்கப்படும் அனைத்து அமைப்புகளும், மற்றும் வேலைநிறுத்தம் செய்த துறைமுகத் தொழிலாளர்களை ஏனைய தொழிலாள வர்க்கத்திடமிருந்து தனிமைப்படுத்திய மாகம்புர துறைமுக தொழிலாளர் சங்கம் (MPWU) உட்பட தொழிற்சங்கங்களும் அரசியல் ரீதியில் பொறுப்பாளிகளாவர்.
இலங்கையின் "போலி-இடதுகளுக்காக" பேசும் நவ சம சமாஜக் கட்சி தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன, தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் செய்வதற்கான உரிமை மீது மேற்கொள்ளப்பட்ட மிருகத்தனமான அரசாங்கத் தாக்குதலை, கடற்படை தளபதியின் "தவறு" என்று அறிவித்தார். பிரதமர் விக்கிரமசிங்க கடற்படையினரை அணிதிரட்ட ஆணையிட்டதை பகிரங்கமாக ஒப்புக்கொண்ட பின்னரும், மற்றும் "தொழிலாளர்கள் கப்பலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டால் அதன் பின் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் பொதுமக்களாக இருக்க முடியாது, அவர்கள் கடல்கொள்ளையர்கள்” என பிரதி பாதுகாப்பு அமைச்சர் ருவன் விஜேவர்தன அறிவித்த பின்னரும் கூட, கருணாரத்ன இந்த கருத்தை வெளியிட்டார்.
முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷவும், அரசாங்கம் கடற்படையை அணிதிரட்டியதன் பிற்போக்குத் தன்மையை மறைக்க முயன்றார்: அவர் "அரசாங்கம் கடற்படையை பயன்படுத்தியமை, தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடித்த போர் வீரர்களை இழிவுபடுத்துவதாகும்," என்றார்.
மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தொழிற்சங்க பிரிவின் தலைவர் கே டி லால் காந்த, துறைமுக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்களை சந்தித்து, அரசாங்கத்தின் மீது "போதுமான அழுத்தத்தை" கொடுத்தால் கோரிக்கைகளை வெல்லலாம், எனக் கூறி, மாகம்புற துறைமுகத் தொழிலாளர் சங்கம் சம்பந்தமாக மாயைகளை பரப்பினார். தனது சொந்த தொழிற்சங்கம் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக என்ன செய்யப் போகிறது என்பதைப் பற்றி செய்ய முழு அமைதியாக இருந்துவிட்டார்.
இவற்றுக்கு மாறாக, சோசலிச சமத்துவக் கட்சி, வேலைநிறுத்தம் செய்தவர்கள் எதிர்நோக்கும் அச்சுறுத்தல்கள் பற்றி அவர்களை எச்சரிக்க தலையீடு செய்து, தேவையான அரசியல் தயாரிப்புக்களை பற்றி, குறிப்பாக தொழில் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களின் மூல காரணமான இலாப நோக்கு அமைப்பு முறைக்கு எதிராக போராடுவதற்கு, தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன வேலைத் திட்டத்தின் அவசியம் பற்றி கலந்துரையாடியது.
MPWU தலைமைத்துவம், தொழிலாளர்கள் சோசலிச சமத்துவக் கட்சியினருடன் கலந்துரையாடுவது குழப்பத்தை ஏற்படுத்தும் என்று கூறி அவர்கள் பேசுவதை நிறுத்த முயற்சித்த போதிலும், சோசலிச சமத்துவக் கட்சியின் எச்சரிக்கையின் பொருத்தமும் அரசியல் உண்மையும் நிகழ்வுகளால் நிரூபிக்கப்பட்டுள்ளன.
வேலை நிறுத்தம் முடிந்த உடனேயே, அரசாங்கம் துறைமுக வளாகத்தில் நிரந்தரமாக ஒரு ஆயுத கடற்படை படைப்பிரிவை நிறுவ முடிவெடுத்ததுடன் தற்காலிக தொழிலாளர்களின் எதிர்கால தொழில் பற்றி எந்த உத்தரவாதமும் வழங்க மறுத்துவிட்டது. இதற்கிடையில், தொழிற்சங்க நடவடிக்கைக்கு தலைமை வகித்தவர்களுக்கு எதிரான வேட்டையாடல் விசாரணைகள் நடைபெறும்.
சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம், அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடியின் பாதிப்பின் மத்தியில், மேலும் மேலும் ஒடுக்குமுறையான சமூகக் கொள்கைகளை திணிப்பதுடன், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவந்த “போலி-இடதுகள்” தூக்கிப் பிடித்த போலி வாய்சவடால்களான, "நல்லாட்சி" தோற்றத்தையும் தூக்கியெறிந்து வருகின்றது.
அதன் உத்தேச புதிய சுதந்திர வர்த்தக வலயத்திற்கு வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்க, அரசாங்கமும் அதன் உள்ளூர் எடுபிடி ஆதரவாளர்களும், தொழிலாளர்களின் கடந்த தலைமுறையினர் வெற்றி கொண்ட அனைத்து சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளை கடுமையாக அழிப்பதற்கு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
சர்வதேச முதலீட்டை உள்ளீர்த்துக்கொள்வதை பாதுகாக்க ஆளும் உயரடுக்கானது பிராந்தியத்தில் உள்ள தனது சமதரப்பினருடன் கழுத்தறுப்பு போட்டியில் ஈடுபட்டுள்ளது. அதனாலேயே, முதலாளித்துவ வர்க்கத்தின் எந்தவொரு பகுதியினதும் மற்றும் அதன் அரசியல் பிரதிநிதிகளதும் அனுதாபத்தை தக்க வைத்துக்கொள்ள முடியும் என்ற கட்டுக்கதையை நம்புவது, தொழிலாளர்களுக்கும் ஏழைகளுக்கும் அபாயகரமானதாக இருக்கும். அரசாங்கத்தின் தாக்குதலும் அம்பாந்தோட்டை துறைமுக தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் மோசமான நிலைமைகளும், ஒரு விபத்து அல்ல, மாறாக, தொழிலாள வர்க்கத்தின் பரந்த தட்டினர் எதிர்கொள்ளும் பொதுவான நிலைமையாகும்.
அரசியல் முன்னோக்கும் புரட்சிகரத் தலைமையும் இன்றி, உழைக்கும் மக்களால் தமது அடிப்படை உரிமைகள் மற்றும் கடந்தகால வெற்றிகளைப் பாதுகாக்க முடியாது. இதனாலேயே, சோசலிச சமத்துவக் கட்சி, தொழிலாள வர்க்கத்தின் அனைத்துப் பிரிவுகளதும் அடிப்படை ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளுக்கான போராட்டத்தை முன்னெடுக்க, தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமான நடவடிக்கை குழுக்களை உருவாக்க அழைப்புவிடுக்கிறது. முதலாளித்துவத்தை தூக்கி வீசி, தெற்காசிய சோசலிச குடியரசு ஒன்றியத்தின் பகுதியாக, சோசலிச வேலைத் திட்டத்தை அமுல்படுத்தும் தொழிலாளர்கள்-விவசாயிகள் அரசாங்கத்தை ஸ்தாபிப்பது அவசியமாகும்.
இந்தப் பணியை நிறைவேற்றுவதானது சோசலிச சர்வதேசியவாதத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர கட்சியைக் கட்டியெழுப்புவதிலேயே தங்கியிருக்கின்றது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியான சோசலிச சமத்துவக் கட்சி, அத்தகைய ஒரு கட்சியை கட்டியெழுப்புவதில் ஈடுபட்டுள்ளதுடன், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் மிகவும் சிந்தனை மிகுந்த, அக்கறைகொண்ட தட்டினரை அதனுடன் இணைந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றது.