Print Version|Feedback
Greetings to Chennai meeting from SEP (Sri Lanka) general secretary
இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளரிடமிருந்து சென்னை கூட்டத்திற்கு வாழ்த்துக்கள்
By Wije Dias
10 October 2016
உலக சோசலிச வலைத் தளம் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஆதரவாளர்கள் குழுவினால் சோசலிசமும் போர் உந்துதலுக்கு எதிரான போராட்டமும் என்ற தலைப்பில் சென்னையில் இடம்பெற்ற அக்டோபர் 2 பொதுக் கூட்டத்திற்கு இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளர் விஜே டயஸ் அனுப்பிவைத்த வாழ்த்துக்களை பெருமையுடன் பிரசுரிக்கிறோம்.
அன்புடன் தோழர்களுக்கு,
சோசலிசம் மற்றும் போருக்கு எதிரான போராட்டம் என்ற நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அறிக்கை பற்றி விவாதிக்கவும், ஏகாதிபத்திய போர் உந்துதலில் இந்திய அரசாங்கத்தின் பங்கெடுப்பை எதிர்க்கவும், உலக சோசலிச வலைத் தளம் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஆதரவாளர்கள் குழுவினால் நடத்தப்படும் பொதுக் கூட்டத்திற்கு உளமார்ந்த புரட்சிகர வாழ்த்துக்களை இலங்கையிலுள்ள சோசலிச சமத்துவக் கட்சி தெரிவித்துக் கொள்கிறது.
வளர்ந்து வரும் ஏகாதிபத்திய போர் உந்துதலுக்கு எதிராக சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் இந்திய தொழிலாள வர்க்கத்தை உலகத் தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களுடன் ஒரு பொதுவான போராட்டத்தில் அணிதிரட்டும் குறிக்கோளுடன் நடத்தப்படும் உங்கள் கூட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது.
இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி உட்பட, நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் பிரிவுகள் ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டத்தை எங்கள் அரசியல் பணியின் மையத்தில் கொண்டுள்ளோம். பிப்ரவரி 18ல் நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் அறிக்கையில் விவரித்தது போல, நமது முயற்சி ஒரு பூகோள சோசலிச போர் எதிர்ப்பு இயக்கத்தை கட்டுவதாகும், அது உலகப்போர் அச்சுறுத்தல் வேரூன்றி உள்ள உலக முதலாளித்துவ அமைப்பை தூக்கி வீசுவதன் மூலமாக போர் அச்சுறுத்தலை தோற்கடிப்பதற்காகும்.
ஏகாதிபத்திய ஒழுங்கு முறைக்கு ஒரே மாற்றீடாக நிரந்தரப் புரட்சி தத்துவத்தின் அடிப்படையில் அபிவிருத்தி செய்யப்பட்ட உலக சோசலிச முன்னோக்கின் வரலாற்று செல்லுபடியாகும் தன்மை, அனைத்து வகையான திருத்தல்வாதிகளுக்கும் எதிராக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தினால் பாதுகாக்கப்பட்டுள்ளது. அது இரண்டாம் உலகப் போருக்கு பின்னர், இற்றைக்கு எட்டு ஆண்டுகளுக்கு முன் 2008ல் தொடங்கிய உலக முதலாளித்துவத்தின் ஆழ்ந்த நெருக்கடியுடன் இன்று முற்றிலுமாக ஊர்ஜிதமாகி உள்ளது.
இது நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் பகுப்பாய்வின் சரியான தன்மையை நிரூபித்துள்ளது, அதாவது 25 ஆண்டுகளுக்கு முன்பு, சோவியத் ஒன்றியத்தின் கலைப்பு, முதலாளித்துவத்தின் சேவகர்கள் போலியாக பிரகடனம் செய்தது போல் சோசலிசத்தின் சரிவு அல்ல, ஆனால் ஸ்ராலினிச தேசியவாத வேலைதிட்டத்தின் பிற்போக்கு தன்மையின் ஒரு உச்சநிலை வெளிப்பாடாகும்.
ஏகாதிபத்திய சக்திகள், மாஸ்கோ ஸ்ராலினிச அதிகாரத்துவம் மற்றும் இந்திய துணைக்கண்டத்தில் இருப்பது போன்று காலனித்துவ நாடுகளிலுள்ள தேசிய முதலாளித்துவ வர்க்கம் ஆகியவற்றிற்கு இடையிலான ஒத்துழைப்பின் மூலமாக உருவாக்கப்பட்ட யுத்தத்திற்கு பிற்பட்டகால உடன்படிக்கைகளின் அடிப்படை முரண்பாடுகள் இன்று உலகின் ஒவ்வொரு மூலையிலும் வெடித்தெழுகிறது.
நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் அறிக்கை வலியுறுத்துவது போல், இப்படியான அபிவிருத்திகள், மீண்டும் ஒரு முறை, உலகை ஒரு அழிவுகரமான பூகோள மோதலின் விளிம்புக்கு கொண்டு வந்துள்ளது, சிரியாவில் இராணுவ அணிதிரட்டலின் உக்கிரமானது ஒருபுறம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சக்திகள் மறுபுறம் ரஷ்யாவுக்கு இடையில் ஒரு முழு அளவிலான மோதல் ஏற்படும் அச்சுறுத்தலை கொண்டுள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் “ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பு” என்ற கொள்கை, அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தலாக கருதப்படும் சீனாவுக்கு எதிராக ஆத்திரமூட்டல்களை உருவாக்குவதற்காக கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவிலுள்ள பல நாடுகளை தூண்டி விடுகிறது.
சென்னையில் உங்கள் கூட்டம் நடைபெறும் அதே சமயத்தில் இராணுவ மோதலுக்கான பொறிகள், ஏற்கனவே இந்திய துணைக்கண்டத்தின் வடக்கில் அணு ஆயுத நாடுகளான இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் இடம்கடந்து செல்லத்தொடங்கி விட்டன.
இந்த மோதலின் முழுமையான திட்டத்தை ஒருவர் மதிப்பீடு செய்வதாயின், அதனை பூகோள அபிவிருத்திகளின் உள்ளடகத்தினுள் மட்டும் தான் செய்ய முடியும். 1928இல் மூன்றாம் அகிலத்தின் ஸ்ராலினிச வேலைத்திட்டத்தை விமர்சனம் செய்யும்போது ட்ரொட்ஸ்கி சுட்டிக்காட்டியவாறாக “இன்றைய சகாப்தத்தில், கடந்த காலத்தை விட ஒரு பெரும் அளவுக்கு பாட்டாளி வர்க்கத்தின் தேசிய நோக்கு நிலையானது, உலக நோக்கு நிலையிலிருந்து மட்டுமே ஊற்றெடுக்க வேண்டும் மற்றும் ஊற்றெடுக்க முடியும், மறுபக்கமாக அல்ல”, அவர் பின்னர் வலியுறுத்தினார் “இங்கேதான் கம்யூனிச சர்வதேசியம் மற்றும் தேசிய சோசலிசத்தின் அனைத்து வகையறாக்களுக்கும் இடையிலான அடிப்படையான மற்றும் முதன்மையான வேறுபாடு உள்ளது.”
உலகிலுள்ள ஏனைய அனைத்து பிராந்தியங்களை போல் தென் ஆசியா வளர்ந்து வரும் பூகோள புவிசார்-அரசியல் பதட்டங்களின் கொந்தளிப்புகளுக்குள் இழுக்கப்படுவது அதிகரித்து வருகிறது. ஜம்மு காஷ்மீரிலுள்ள ஊரியில் இந்திய இராணுவத் தளத்தின் மீது நடத்தப்பட்ட ஆயுத தாக்குதலை தொடர்ந்து இந்தியாவிலுள்ள மோடி அரசாங்கம், ஒபாமா நிர்வாகத்தின் ஆதரவுடன், பாகிஸ்தானுக்குள் ஒரு இராணுவ ஊடுருவல் செய்வதற்கு இந்த சம்பவத்தை பயன்படுத்துகிறது, அது பல பத்தாண்டுகளாக கண்டிராத அளவுக்கு பதட்டங்களை இந்த பிராந்தியத்தில் உயர்த்துகிறது.
மோதல் விரிவடைவது, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஒரு போர் அபாயத்தை தோற்றுவித்துள்ளது. அது இரண்டு அணு ஆயுத சக்திகளுக்கிடையில் முதலாவது இராணுவ மோதலாக இருக்கும் அத்துடன் துணைக்கண்டத்தில் உள்ள பல இலட்சக்கணக்காண மக்களுக்கு மரண விளைவுகளை ஏற்படுத்தும். அதற்கு மேலாக சீனாவிற்கு எதிரான ஒரு முன்னணி நிலை நாடாக இந்தியாவை அமெரிக்கா மாற்றி வருகின்ற நிலையில் அவ்வாறான ஒரு போர், விரைவில் ஒரு உலகப் போராக அபிவிருத்தி அடையமுடியும், அது இந்தியாவின் பக்கத்தில் அமெரிக்காவையும், பாகிஸ்தானின் பக்கத்தில் சீனாவையும் ஈடுபடுத்தும்.
மே 2014 இல் மோடி அரசாங்கம் அமைக்கப்பட்டதிலிருந்து வாஷங்டன் சீனாவிற்கு எதிரான அதன் போர் உந்துதலில் இந்தியாவை மேலும் உறுதியாக ஒன்றிணைக்கும் நடவடிக்கைகளை அதிகரித்தது, ஒரு தொடரான இராணுவ மூலோபாய உதவிகளை இந்தியாவுக்கு அள்ளி வழங்குவதன் மூலமாக அதனை செய்தது. சிவில் அணு ஒப்பந்தம் மற்றும் நவீன பாதுகாப்பு தளவாடங்களை கூட்டாக அபிவிருத்தி செய்வது மற்றும் கூட்டாக உற்பத்தி செய்வது போன்ற உடன்படிக்கைகளை செய்தது. திட்ட செயல்படுத்தல் பரிமாற்றம் பற்றிய குறிப்பாணை ஒப்பந்தம் (LEMOA) எனப்படுவதில் மோடி அரசாங்கம் ஒபாமா நிர்வாகத்துடன் கடந்த ஆகஸ்டில் கையெழுத்திட்டது. அது, இந்திய இராணுவத் தளங்களை அமெரிக்கா பயன்படுத்த அனுமதிக்கிறது. இது இரண்டு நாடுகளுக்கிடையிலான நெருக்கமான மூலோபாய உறவுகளில் ஒரு பெரிய அடி எடுத்துவைக்கும் திசையில் உள்ளது. இது பாகிஸ்தானை வெளிப்படையாக மிரட்டி, அச்சுறுத்தி, இப்பிராந்தியத்தில் இந்தியாவின் ஆதிக்கநிலையை நிலைநாட்டுவதற்கு ஊக்கம் கொடுப்பதற்கான மிகப்பெரும் காரணியாக இருந்து வருகிறது. மேலும் இப்படியான அபிவிருத்திகள் இப்பிராந்தியத்தில் உள்ள அனைத்து தீர்க்கப்படாத வரலாற்றுப் பிரச்சனைகளை அரசியல் நிகழ்வின் மேல்மட்டத்திற்கு கொண்டு வந்துள்ளது, அது காலனித்துவத்திலிருந்து விடுபட்டு ஒரு ஜனநாயக மாற்றத்தை உறுதிசெய்யும் திறன் தேசிய முதலாளித்துவத்திற்கு உண்டு என்று கூறிவந்த ஸ்ராலினிச கம்யூனிச (சி.பி.ஐ. மற்றும் சி.பி.எம்) கட்சிகள் மற்றும் அவர்களின் மீது தொங்கி நிற்கும் ஏனைய போலி இடதுகளின் பிற்போக்கு கட்டுக் கதையை தகர்த்து வீசியுள்ளது. இந்தியாவில் தேசிய முதலாளித்துவ காங்கிரஸ், பாகிஸ்தானில் முஸ்லீம் லீக் மற்றும் இலங்கையில் உள்ள இரண்டு முதலாளித்துவக் கட்சிகள் அவர்களது ஏகாதிபத்திய எஜமானர்களுடன் செய்து கொண்ட சூழ்ச்சி உடன்படிக்கைகளின் மூலமாக அவர்களது சுமார் எழுபது வருடகால ஆட்சியின் கீழ் இப்பிராந்தியத்தில் உள்ள பல கோடி உழைக்கும் மக்களுக்கு எதனை வழங்கியுள்ளனர்? மற்றொரு ஏகாதிபத்திய போருக்கு அவர்களை பலிகளாக மாற்றும் அபாயம் மற்றும் முற்றிலுமான சமூக சீரழிவை மட்டும் தான் வழங்கியுள்ளனர்.
தொழிலாள வர்க்கம், ஒடுக்கப்படும் வறியவர்கள் மற்றும் இளைஞர்கள் எதிர்கொள்ளும் வரலாற்றுப் பிரச்சனைகள் பற்றி இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று மற்றும் சர்வதேசிய அடித்தளங்களில் விளக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணம் 2011-ல் சோசலிச சமத்துவக் கட்சியின் ஸ்தாபக மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. 1947-48 ல் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கையின் பெயரளவிலான சுதந்திரம் பற்றி பேசும்போது அந்த சமயத்தில் நான்காம் அகிலத்தின் இந்திய துணைக்கண்ட பகுதியாக இருந்த போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சி (பி.எல்.பி.ஐ) எடுத்த கோட்பாட்டு ரீதியான நிலைப்பாடு பற்றி அந்த ஆவணம் குறிப்பிட்டது.
1948-ஜனவரியில் கல்கத்தாவில் நிகழ்ந்த ஒரு பொதுக்கூட்டத்தின் போது பி.எல்.பி.ஐ-யின் ஒரு தலைவரான கொல்வின் ஆர் டி சில்வா பின்வரும் தொலைநோக்குப் பார்வைக்கொண்ட வார்த்தைகளைப் பேசினார்; “ஒருபுறம் உயிருள்ள இந்தியாவின் உடலை, மறுபுறம் இரண்டு உயிருள்ள தேசிய இனங்களை (அதாவது ஒருபுறம் பஞ்சாபி மற்றும் வங்க தேசிய இனங்களை) கொடூரமாக வெட்டி கூறுபோடுவது வகுப்புவாத பிரச்சனைக்கான தீர்வாகவும் மறுபுறம் சுதந்திரத்திற்கு பாதை திறந்துவிடும் வழிகளாகவும் முன்வைக்கப்பட்டது. இரண்டு கூற்றுக்களுமே பொய்யானவை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. பிரிவினையானது ஒரு அம்சத்தில், மக்களை ஏகாதிபத்திய அடிமைச் சங்கிலியில் மறுபடி இணைக்கும் வழிகளில் ஒன்று மட்டுமே என்று நிரூபிக்கப்பட்டது... மறு அம்சத்தில் சமூக கொந்தளிப்புகளில் இருந்து திசை திருப்பி உள்நாட்டு வகுப்புவாத உணர்வுகளை வழிநடத்தி செல்வதற்கான ஒரே வழியாக பரஸ்பர போர் சிந்தனைக்குள் இரு நாடுகளையும் நிறுத்துவதாகும்”.
“கொல்வின் ஆர் டி சில்வாவின் எச்சரிக்கைகள் தொலைநோக்கு பார்வைக்கொண்டதாக நிரூபிக்கப்பட்டது”. “பிரிவினை இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் ஒரு பிற்போக்கான ஒரு புவிசார் அரசியல் போராட்டத்தின் தோற்றத்திற்கு வழிவகுத்தது, அது பிரகடனம் செய்யப்பட்ட மூன்று போர்களையும், எண்ணற்ற போர் நெருக்கடிகளையும் ஏற்படுத்தியது, முக்கியமான பொருளாதார வளங்களை நாசப்படுத்தியது, இன்று தென் ஆசியாவில் உள்ள மக்களை அணு ஆயுத மோதலினால் அச்சுறுத்துகிறது” என்பது அதன் தொலைநோக்குப் பார்வைக்கு சற்றும் குறைந்ததல்ல என்று என்று சோசலிச சமத்துவக் கட்சியின் ஆவணம் குறிப்பிட்டது.
ஊரி தளங்களின் மீதான தாக்குதலுக்கு பாகிஸ்தானை குற்றம்சாட்டி, தற்போது இந்திய ஆளும்தட்டின் மத்தியில் பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு ஆக்ரோஷமான திட்டங்கள் விவாதிக்கப்படுகிறது. இதில் “துல்லிய தாக்குதல்கள்", ஏவுகணைத் தாக்குதல்கள், பாகிஸ்தானில் உள்ள பிரிவினை முகாம்களை அழிப்பதற்கு பாகிஸ்தான் எல்லைக்குள் அதிரடிநடவடிக்கை மற்றும் பல பத்தாண்டுகளாக நீடிக்கும் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இரத்து செய்தல் ஆகியவை உள்ளடங்கும், இது ஊரிதாக்குதலுக்கு பொறுப்பானவர்களை “தண்டிப்பது” என்ற சாக்கில் செய்யப்படுகிறது. இப்படியான வெறித்தனமான போர் தயாரிப்பில் காங்கிரஸ், ஸ்ராலினிச கட்சிகள், பல்வேறு சிந்தனைக்கூடங்கள், தேசிய மற்றும் பிராந்திய ஊடகங்கள் போன்ற இந்திய அரசியல் ஸ்தாபகத்தின் அனைத்து பகுதிகளும் ஈடுபட்டுள்ளன.
இதற்குப் பதிலடியாக இந்தியாவிற்கு எதிராக நவாஸ் ஷெரீப் அரசாங்கமும் இராணுவ அதிகாரிகளும் பிற்போக்குத்தனமான போர் முழக்க பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளனர். இந்திய அரசாங்கத்தின் கைகளில் கொடூரமான இராணுவ ஒடுக்குமுறையினால் வதைப்படும் இந்திய காஷ்மீரி முஸ்லிம்கள் தொடர்பாக ஷெரீப் முதலைக் கண்ணீர் வடிக்கும் அதேவேளை இராவல்பிண்டியிலுள்ள இராணுவ அதிகாரிகள் இந்தியாவிற்கு எதிரான போர்வெறித்தனமான பேச்சுக்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்ரமசிங்க அரசாங்கம், பாகிஸ்தானால் தூண்டிவிடப்பட்டதாக கூறப்படும் பயங்கரவாதத்தை கண்டனம் செய்யும் சாக்கின் கீழ், இந்திய அரசாங்கத்தின் போர் கூச்சலின் பின்னால் அணி திரண்டுள்ளது. தற்போதைய இலங்கை அரசாங்கம் அமெரிக்காவினால் நடத்தப்பட்ட ஆட்சி மாற்ற நடவடிக்கையின் மூலமாக ஆட்சிக்குகொண்டுவரப்பட்டது. அதற்கு காரணம் முன்னைய ஜனாதிபதி இராஜபக்ஷ சீனாவுடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்தி வந்தார்.
தற்போது சிங்கள மற்றும் தமிழ் முதலாளித்துவ கட்சிகளினால் ஒரு புதிய இனவாத பிரச்சார அலை தொடங்கப்பட்டுள்ளது. முதலாளித்துவ பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு ஏழு வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும், தமிழ் சமூகத்திற்கு எதிரான ஒடுக்குமுறை மற்றும் இராணுவ குவிப்பில் குறிப்பிடத்தக்க தளர்வு எதுவுமே கிடையாது. ஆயிரக்கணக்கான தமிழ் குடும்பங்கள் தமது முன்னைய வீடுகளுக்கு திரும்புவது அல்லது இராணுவத்தினால் ஆக்கிரமிக்கப்பட்ட அவர்களது நிலங்களை திரும்ப பெறுவது இன்னமும் தடுக்கப்பட்டுள்ளது. எண்ணற்ற அரசியல் கைதிகள் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை, காணாமல் போனவர்களின் எண்ணிக்கைப் பற்றிய கணக்கெடுப்பு எதுவுமே கிடையாது.
தமிழ் மக்கள் பேரவை என்ற பெயரில் வட மாகாண சபையின் முதலமைச்சரான சி.வி விக்னேஸ்வரனால் தொடங்கப்பட்ட ஒரு புதிய அமைப்பு, தமிழ் உழைக்கும் மக்களின் துயரங்களை சாதகமாகப் பயன்படுத்தி தமிழ் வகுப்புவாத அடிப்படையில் ஒரு எதிர்ப்பியக்கத்தை சமீபத்தில் தொடங்கியது. அதே சமயம் உத்யோகபூர்வமான முதலாளித்துவக் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு சிறிசேன–விக்ரமசிங்க அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கிறது, அது பாராளுமன்றத்தில் உத்யோகபூர்வ எதிர்கட்சி பதவி வகிக்கிறது. தமிழ் ஆளும் மேல்தட்டின் இரண்டு பிரிவுகளின் பொதுவான பிற்போக்கு தன்மை என்னவென்றால், குறிப்பாக அமெரிக்கா உட்பட ஏகாதிபத்திய சக்திகளுக்கு முன்னால் மண்டியிடுவதுதான், அவை தலையிட்டு தமிழ்மக்களின் பிரச்சனைகளுக்கு “தீர்வுகாண வேண்டும்” என்று மன்றாடுவது தான்.
அரசாங்க கட்சிகள் உட்பட சிங்கள பேரினவாதிகள் அவர்களது முறைக்கு தமிழ் மக்கள் பேரவையின் வகுப்புவாத பிரச்சாரத்தை பயன்படுத்தி தீவின் தெற்கு பகுதியில் சிங்கள பேரினவாதத்தை தூண்டிவிடுகின்றனர், அது அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் ஜனநாயக விரோத கொள்கைகளுக்கு எதிராக அனைத்து சமூகத்தினரையும் சேர்ந்த உழைக்கும் மக்கள் மற்றும் இளைஞர்களின் பரந்த கிளர்ச்சிகள் வளர்ச்சி அடைவதை திசை திருப்புவதாகும்.
இவ்வாறான அனைத்து அபிவிருத்திகளும் சச்சரவுக்கிடமின்றி தென் ஆசியாவில் உள்ள தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு மாற்று அரசியல் முன்னோக்கு வேண்டும் என்ற மையமான பிரச்சனையை எழுப்புகிறது, அதாவது வகுப்புவாத எல்லைகளைக் கடந்து தொழிலாளர்களினதும் விவசாயிகளினதும் அரசாங்கங்களை நிறுவுவதாகும். முதலாளித்துவ ஆட்சியின் கீழ் உழைக்கும் மக்களும் இளைஞர்களும் எதிர்கொள்ளும் ஒரு கடுமையான அபாயம் என்னவென்றால் ஏகாதிபத்தியப் போர் மற்றும் இப்பிராந்தியத்தில் அதன் மறைமுகப்போரும் சமூக எதிர்புரட்சியுமே.
இதற்கு ஒரே பதில், உலக சோசலிச அரசுகளின் ஒன்றியத்தை ஸ்தாபிக்கும் முன்னோக்கின் பாகமாக தொழிலாள வர்க்கத்தின் ஒரு சர்வதேச போர் எதிர்ப்பு இயக்கம் கட்டியெழுப்பபட வேண்டும், அதில் தெற்காசிய சோசலிச அரசுகளின் ஒன்றியம் ஒரு பிரிக்க முடியாத பகுதியாக இருக்கும்.
இந்த முன்னோக்கின் அடிப்படையில்தான் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு உலகம் முழுவதும் உள்ள உழைக்கும் மக்களையும், ஒடுக்கப்படும் சமூகங்களையும், இளைஞர்களையும் அணிதிரட்ட போராடுகிறது. நமது ஆய்வுகள், எமது சர்வதேச ஊடகமான உலக சோசலிச வலைத் தளத்தின் மூலமாக முன்வைக்கப்படுகிறது. முதலாளித்துவத்தின் கீழ் சமூக சீரழிவையும், போரையும் எதிர்க்கும் அனைவரும் இந்தியாவில் ட்ரொட்ஸ்கிச புரட்சிக் கட்சியை கட்டும் போராட்டத்தில் ஒன்றிணையுமாறு நாம் ஊக்கப்படுத்துகிறோம்.
விஜே டயஸ்
பொது செயலாளர்
இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி