ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Hundreds attend lecture by David North in Frankfurt, Germany

ஜேர்மனி, பிராங்பேர்ட்டில் டேவிட் நோர்த் வழங்கிய விரிவுரையில் நூற்றுக்கணக்கானோர் பங்குபெற்றனர்

By our correspondents 
25 October 2016

சனிக்கிழமையன்று பிராங்பேர்ட் பல்கலைக்கழகத்தின் உரை அரங்கு 3 இல், சோசலிச சமத்துவத்திற்கான சர்வதேச மாணவர் மற்றும் இளைஞர் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் டேவிட் நோர்த் வழங்கிய விரிவுரையை கேட்பதற்கு ஏறக்குறைய 250 மாணவர்களும் தொழிலாளர்களும் கூடியிருந்தனர்.

இந்த மிகச்சிறந்த வரவேற்பும் வருகைதந்த அதிகமானோர் வெளிப்படுத்திய மிக சாதகமான பிரதிபலிப்பும் இந்த நிகழ்வின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டின. வங்கித்துறைக்கு புகழ்பெற்ற இந்த பெருநகரத்தின் கல்விவளாகங்களில் இன்னமும் ஊடுருவிப் படர்ந்துள்ள செல்வாக்கைக் கொண்டிருக்கக் கூடியதும், அத்துடன் சமூக ஜனநாயகக் கட்சி (SPD), பசுமைக் கட்சி, இடது கட்சி மற்றும் தொழிற்சங்கங்களின் வலது-சாரி அரசியலுக்கான சித்தாந்த அடிப்படையை வழங்கிக் கொண்டிருப்பதுமான பிராங்பேர்ட் பள்ளி மீதான ஒரு மார்க்சிச விமர்சனத்தை கேட்பதற்கு மாணவர்கள் பலரும் மிகவும் ஆர்வமுடன் இருந்தனர்.

IYSSE சார்பாக கிறிஸ்தோப் வாண்ட்ரியர் பிரதான உரை நிகழ்த்துபவரை அறிமுகம் செய்து கூட்டத்தைத் தொடங்கி வைத்தார். ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் டேவிட் நோர்த் நான்கு தசாப்தங்களுக்கும் அதிகமாய் ஒரு முன்னணிப் பாத்திரத்தை வகித்து வந்திருக்கிறார், அத்துடன் 20 மற்றும் 21 ஆம் நூற்றாண்டின் மையமான அரசியல் மற்றும் வரலாற்றுப் பிரச்சினைகள் பலவும் குறித்து ஏராளமான புத்தகங்களையும் வெளியிட்டிருக்கிறார்.

வாண்ட்ரியர் தனது அறிமுகத்தில் விளக்கினார்: “பிராங்பேர்ட் பள்ளி, பின்நவீனத்துவம் மற்றும் போலி-இடது அரசியல் ஆகிய கருத்தாக்கங்களை நோர்த் தனது புத்தகத்தில் ஆராய்கின்ற சமயத்தில், வெறுமனே ஒரு கல்வியாராய்ச்சி விவாதத்தின் நிலைப்பாட்டில் இருந்து அவர் அதனைச் செய்யவில்லை, மாறாக புரட்சிகர அரசியலின் நிலைப்பாட்டில் இருந்து அவர் அதனைச் செய்கிறார்.” வாண்ட்ரியர் இவ்வாறு நிறைவு செய்தார்: “இந்தப் புத்தகம் மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், ட்ரொட்ஸ்கி மற்றும் லுக்சம்பேர்க் ஆகியோர் விளக்கிய விதத்தில் செவ்வியல் மார்க்சிசத்தை பாதுகாப்பதும் அதனை அபிவிருத்தி செய்வதுமாகும்.”

பிராங்பேர்ட் உரையில் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் சுமார் 250 பேர் பங்குபெற்றனர்

மார்க்சிஸ்டுகளை பொறுத்தவரை, சமூக அபிவிருத்தியின் புறநிலை விதிகளைப் புரிந்துகொள்வதென்பது உலகத்தை மாற்றுவதற்கான புரட்சியாளர்களின் போராட்டத்திற்கு அடித்தளமானதாகும் என்பதை நோர்த் தனது உரையில் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறினார். அவை புரிந்து கொள்ளப்பட வேண்டும், வெளிப்படுத்திக் காட்டப்பட்டாக வேண்டும். இதுவே பிராங்பேர்ட் பள்ளி மற்றும் பின்நவீனத்துவம் ஆகிய கருத்தாக்கங்களை அவற்றின் வரலாற்று மற்றும் சமூக உள்ளடக்கத்தில் பரிசீலித்துப் பார்ப்பதற்கு அவசியமான நிலைப்பாடாக இருக்கிறது. இந்தப் போக்குகள் தமது அகநிலைவாதத்தைக் கொண்டு, உயர்-நடுத்தர வர்க்கங்கள் தொழிலாள வர்க்கத்தை நோக்கி வெளிப்படுத்துகின்ற நிராகரிப்பையும் பகைமையையும் வெளிப்படுத்துகின்றன.

இந்த அடிப்படையான புள்ளியை நோர்த் தனது உரையின் ஆரம்பத்திலேயே வலியுறுத்தினார். “கிரீசில் சிரிசாவின் முழு வெட்கக்கேடான சரணாகதிக்கு பின்னர், கிரேக்க குட்டி-முதலாளித்துவ வர்க்கத்தின் மிக வசதியான மற்றும் மிகவும் சுய-திருப்தியடைந்துள்ள பிரிவுகளின் நலன்களை பிரதிநிதித்துவம் செய்கின்ற ஒரு பிற்போக்குத்தனமான கட்சியாக அது அம்பலப்பட்டதன் பின்னர், கல்விச்சாலை பின்-மார்க்சிசத்தின் முக்கிய கூறுகளுக்கும் —பிராங்பேர்ட் பள்ளி மற்றும் பின்நவீனத்துவத்தின் பல வகையறாக்களின் பிரதிநிதிகளால் பயன்படுத்தப்படும் திட்டமிட்டு தெளிவற்றதாக்கப்பட்ட வார்த்தைஜாலங்களின் என்ன வேடமணிந்து அவை வந்தபோதும்— தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்கு மிகவும் குரோதமான அரசியல் திட்டநிரல்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பிருப்பதை மறுப்பதென்பது சாத்தியமில்லாததாகும்.”

அவர் தனது ரஷ்யப் புரட்சியும் முடிவுறாத இருபதாம் நூற்றாண்டும் மற்றும் கால் நூற்றாண்டு போர் ஆகிய புத்தகங்களில் விவாதிக்கும் சமீப தசாப்தங்களிலான மையமான சமூக மற்றும் அரசியல் அபிவிருத்திகளை குறித்து நோர்த் விரிவாகப் பேசினார். சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதன் பின்னர், முதலாளித்துவத்தின் அடிப்படைப் பிரச்சினைகள் அனைத்துமே மீண்டும் எழுந்திருப்பதை அவர் விளக்கினார். சமூக சமத்துவமின்மை முன்கண்டிராத விகிதாசாரங்களை எட்டியிருக்கிறது, பொருளாதார நெருக்கடி தொடர்ந்து மோசமாகிக் கொண்டிருக்கிறது, அத்துடன் ஒரு மூன்றாம் உலகப் போர் அபாயமும் பெருகிச் சென்று கொண்டிருக்கிறது. இது குறிப்பாக அமெரிக்காவின் இரண்டு வலது-சாரி மற்றும் இராணுவவாத ஜனாதிபதி வேட்பாளர்களில் தெளிவாய் வெளிப்படுகிறது.

இந்த மிகவும் அச்சுறுத்துகின்ற நிகழ்வுகளின் வெளிச்சத்தில், ஒருவர் “ஏன் அங்கே பரந்த மக்களின் ஒரு சர்வதேச, புரட்சிகர, முதலாளித்துவ-விரோத, மற்றும் சோசலிச இயக்கம் இல்லை” என்று கேட்டாக வேண்டும் என்றார் நோர்த்.

புறநிலை மற்றும் அகநிலைக் காரணிகளின் ஒரு சிக்கலான இடைத்தொடர்பு இதற்கு காரணம் என்ற அதேநேரத்தில், ஸ்ராலினிசத்தினால் நடத்தப்பட்ட காட்டிக்கொடுப்பும் மார்க்சிஸ்டுகளின் ஒரு ஒட்டுமொத்தத் தலைமுறையை ஸ்ராலினிச அதிகாரத்துவம் உருத்தெரியாமல் அழித்ததும் இதில் ஒரு முக்கியமான பாத்திரத்தை ஆற்றின என்றார் அவர். பிராங்பேர்ட் பள்ளி மற்றும் பின்நவீனத்துவத்தின் தத்துவங்கள் இந்த காட்டிக்கொடுப்பிற்கான பொறுப்பை தொழிலாளர்கள் தலையில் சுமத்தப் பார்த்தன என்பதோடு ஷொப்பன்ஹெவர் (Schopenhauer) மற்றும் நீட்சேயின் பகுத்தறிவற்ற கருத்தியலை (irrationalist idealism) பயன்படுத்தி மார்க்சிசத்தை வலதில் இருந்து தாக்கின.

“தொழிலாள வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்ட மார்க்சிசத்தையும் சோசலிசப் புரட்சி முன்னோக்கையும் நிராகரிப்பதில்தான் அவர்களது தத்துவங்களது அரசியல் உந்துசக்தி அமைந்திருந்தது” என்றார் நோர்த். 1968 மே-ஜூன் நிகழ்வுகளுக்குப் பின்னர் பின்நவீனத்துவம் அபிவிருத்தி செய்யப்பட்டிருந்தது, அது மார்க்சிசத்திற்கு எதிராக, குறிப்பாக ட்ரொட்ஸ்கிசத்திற்கு எதிராக செலுத்தப்பட்டது. நடுத்தர வர்க்கத்தின் வசதியான அடுக்குகளது “பழமைவாத, ஆழமான அவநம்பிக்கை பெற்ற மற்றும் விரக்தியான கண்ணோட்டத்தை” அது பிரதிபலித்தது.

“ஆனால் பின்நவீனத்துவத்தின் பல வகையறாக்களையும் பிராங்பேர்ட் பள்ளியின் மற்ற எச்சசொச்சங்களையும் பின்பற்றி நடப்பவர்களின் எழுத்துகளில், முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான புரட்சிகரப் போராட்டம் தனக்கு அடித்தளமாய் கொள்ளத்தக்க எந்தவொரு வேலைத்திட்டத்தையும் காணமுடியாது” என்றார் நோர்த். மார்க்சிசம் மட்டுமே அதை வழங்கியது. “தொழிலாள வர்க்கம் இப்போதைய நெருக்கடியின் தர்க்கத்தை புரிந்து கொண்டு, புறநிலை அவசியத்துக்குத் தக்கவாறு தனது நடைமுறையில் திருத்தங்கள் செய்து கொள்ள வேண்டும். அத்தகைய ஒரு புரிதல் என்பது மார்க்சிசத்தின் அடிப்படையில் மட்டுமே சாத்தியமானதாகும்” என்று கூறி நோர்த் நிறைவுசெய்தார். 

அந்த முழு உரையையும் உலக சோசலிச வலைத் தளத்தில் வாசிக்கலாம்.

இந்த உரை ஒரு சக்திவாய்ந்த தாக்கத்தைக் கொண்டிருந்தது, மிகக் கவனத்துடன் பார்வையாளர்கள் அதனைக் கேட்டனர். பல்கலைக்கழக வளாகங்களில் நடத்தப்படும் கல்வியாராய்ச்சி விவாதங்களில் பொதுவாக தவிர்க்கப்படுகின்ற பல பிரச்சினைகளை நோர்த் எடுத்துப் பேசினார். சித்தாந்தப் போக்குகள் அரசியல் அபிவிருத்திகளில் கொண்டிருந்த ஆரம்ப மூலத்தை அவர் பலமுறை சென்று அலசியதோடு பின்நவீனத்துவம் மற்றும் பிராங்பேர்ட் பள்ளி தத்துவங்களை அபிவிருத்தி செய்த சமூக அடுக்கின் நோக்கங்கள் மற்றும் உணர்நிலைகளையும் விளக்கினார்.

உரையை தொடர்ந்த விவாதத்தில், பிராங்பேர்ட் பள்ளியின் மூலங்கள் குறித்த கேள்வியை வாண்ட்ரியர் எழுப்பினார். அவர் கூறினார்: “இப்போதெல்லாம் ஏறக்குறைய ஒவ்வொரு மாணவருக்குமே ஒரு வலது-சாரிக் கொள்கை என்றால் என்னவென்று தெளிவாகத் தெரிகிறது, உதாரணத்திற்கு, பேராசிரியர் ஆக்செல் ஹோனெத் தனது ’சோசலிசம் என்னும் சிந்தனை’யைக் கொண்டு அதை பிரதிநிதித்துவம் செய்கிறார். தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதும் இல்லாமல் தனியார் சொத்துகளை ஒழிப்பதும் இல்லாமல் ஒரு முழுக்கவும் வெற்று சோசலிசமாக அது இருக்கிறது. ஆனால் பலரும் தங்களுக்குள் கேட்டுக் கொள்கின்றனர்: “ஆரம்பத்தில் அவ்வாறில்லாமல் வேறுமாதிரியாய் இருந்ததா என்ன? சமூக ஆராய்ச்சிக்கான ஸ்தாபனம், அது 1923 இல் ஸ்தாபிக்கப்பட்ட போது, அதில் முற்போக்கான கூறுகள் இருந்தன என்பதில் உண்மையில்லையா?”

பிராங்பேர்ட் பள்ளியின் ஆரம்ப ஸ்தாபகர்கள் சோசலிச-விரோதிகளாகவும் மார்க்சிச விரோதிகளாகவும் இருக்கவில்லை என்று நோர்த் பதிலளித்தார். 1923 ஆம் ஆண்டின் நிகழ்வுகளுக்கு அவர் கவனத்தை ஈர்த்தார். ரஷ்யாவில், லெனினுக்கு வந்த பக்கவாதநோயால் ஒரு செயலூக்கமான அரசியல் வாழ்வை அவரால் நடத்த முடியாமல் போனது. ட்ரொட்ஸ்கி மேலும் மேலும் தனிமைப்படுத்தப்பட்டார், அதிகாரத்தில் இருந்து அகற்றப்பட்டார். ஜேர்மனியில் 1923 அக்டோபரில் புரட்சி தோல்வியில் முடிந்தது.

“இவை அனைத்துமே ஜேர்மன் புத்திஜீவித் தட்டின் பரந்த பிரிவுகள் மறுநோக்குநிலை காண்பதற்கு தீர்மானகரமாய் பங்களிப்பு செய்தன” என்று நோர்த் கூறினார். “தொழிலாள வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு புரட்சிகர முன்னோக்கில் அவர்கள் நம்பிக்கை இழந்திருந்தனர்.”

அதே ஆண்டில், ஜோர்ஜ் லூக்காஸ் வரலாறும் வர்க்க நனவும் என்ற தனது படைப்பை வெளியிட்டார். இது விமர்சனத் தத்துவத்தின் உருவாக்கத்தில் மிகப்பெரும் செல்வாக்கு செலுத்தியது. அவர் தனது புத்தகத்தில் அபிவிருத்தி செய்கின்ற ‘உண்மைப்படுத்தல்’ என்ற ஒன்று இறுதியாக தொழிலாள வர்க்கம் புறநிலை யதார்த்தத்தை புரிந்து கொள்ளும் திறனற்றது என்பதாய் வந்து முடிகிறது” என்று நோர்த் விளக்கினார்.

இரண்டாம் அகிலத்தில் செயலூக்கத்துடன் இயங்கி பின்னாளில் ஒரு பாசிச புத்திஜீவியாக மாறிய பிராங்பேர்ட்டைச் சேர்ந்த ஹெண்ட்ரிக் டி மான் என்ற பேராசிரியர் இதில் ஒரு முக்கியமான பாத்திரத்தை வகித்தார். ”தொழிலாள வர்க்கத்தின் நனவு அபிவிருத்தி காண்பதில் புறநிலை முதலாளித்துவ அபிவிருத்தியின் பின்விளைவுகளைக் காட்டிலும் மனோவியல் காரணிகளே கூடுதல் முக்கியத்துவமானவை என்பதே அவரது கருத்தாக்கமாக இருந்தது. பிராங்பேர்ட் பள்ளியின் புத்திஜீவித அபிவிருத்தியில் இது ஒரு தீர்மானகரமான உந்துசக்தியாக செயல்பட்டது” என்றார் நோர்த்.

பொதுவாக, சோசலிசப் புரட்சி குறித்த மார்க்சிச தத்துவத்திற்கு எதிராய், நனவின்மை மற்றும் பகுத்தறியாமையின் பாத்திரத்தின் மீது அழுத்தமளிக்கப்பட்டது. தொழிலாள வர்க்கத்தை நோக்கிய ஒரு ஆழமான அவநம்பிக்கையுடன் இது கரம்கோர்த்து சென்றது என்று நோர்த் கூறினார். ஹோர்கெய்மர், அடோர்னோ மற்றும் மார்க்யூஸ, ஆகியோருடன் ஜேர்மனியின் கல்விச்சாலை அறிவுவட்டத்தின் பரந்த அடுக்குகளும் ஷொப்பன்ஹெவர் மற்றும் நீட்சேயின் அகநிலை கருத்துவாதத்தினால் செல்வாக்கு செலுத்தப்பட்டிருந்தன. மார்க்யூஸ மீது ஹேய்டெக்கரின் செல்வாக்கும் இருந்தது. “அகநிலை நனவு மற்றும் மனோவியல் காரணிகள் மீது முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. அவர்களைப் பொறுத்தவரை புரட்சிக்கு வழிவகுக்கும் புறநிலைக் காரணிகளுக்கு இவை முட்டுக்கட்டை போடுகின்றன.”

வில்ஹேம் ரைய்ச்சை ஒரு சிறந்த உதாரணமாகக் கூறலாம் என்றார் நோர்த். ரைய்ச் பாசிசத்தை, அடிப்படையாக பாலியல் வார்த்தைகளைக் கொண்டு பகுப்பாய்வு செய்ய விழைந்தார். பாசிசத்தை வெல்வதற்கு ஒரு அரசியல் வேலைத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தொழிலாளர்களை வென்றெடுப்பது என்பது முற்றிலும் நம்பிக்கைதராத ஒன்று ஏனென்றால் “அவர்கள் அதைப் புரிந்து கொள்வதில்லை, புரிந்து கொள்ளவும் மாட்டார்கள்” என்று ரைய்ச் திட்டவட்டமாய் அறிவித்தார். அதற்குப் பதிலாய் பாலியல் கொள்கைகளின் வழியாக தொழிலாள வர்க்கத்திற்கான அணுகலை ஒருவர் காண வேண்டுமாம்.

“அத்தகையதொரு அடிப்படையில் பாசிசத்திற்கு எதிரான போராட்டமென்பது சாத்தியமில்லாதது” என்றார் நோர்த்.

கலந்து கொண்ட இளைஞர்களில் பலரும் இந்த உரையால் மிகவும் கவரப்பட்டிருந்தனர். இந்த உரையைக் கேட்பதற்காக கொலோன் (Cologne) இல் இருந்து பிராங்பேர்ட் பயணம் செய்து வந்திருந்த ஆரோன் என்ற மாணவர், “இது ஒரு மிக முக்கியமான நிகழ்வு என்று கருதுகிறேன்” என்றார். “ஒரு ட்ரொட்ஸ்கிசவாதியின் உரையைக் கேட்பதற்கான ஒரு தனிச்சிறப்பான சந்தர்ப்பமாக அமைந்தது. போலி-இடது மற்றும் அவநம்பிக்கைப் பிரச்சினைகளை தெளிவுபடுத்துவது மிக அவசியமானதாகும், ஏனென்றால் அவை மிகப் பிரம்மாண்டமான அளவில் முக்கியப் பாத்திரத்தை வகித்திருக்கின்றன.”


ஆரோன்

தத்துவார்த்தப் பிரச்சினைகளுக்கும் நடப்பு சூழ்நிலைக்கும் இடையிலான உறவையும் ஆரோன் சுட்டிக்காட்டினார். அவர் கூறினார்: “போர் அபாயம் குறித்து எனக்குக் கவலையாக இருக்கிறது. மொசூல் மீதான தாக்குதலில் இருக்கும் அபாயத்தை ஒருவர் பார்க்கலாம், மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்படுகின்றனர்”.

அவர் மேலும் கூறினார்: “அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான மோதல் தீவிரப்பட்டிருப்பது என்பது மிக உண்மையானதாகும். ஊடகங்கள் இந்த அபாயத்தை மேசையின் கீழ் ஒளிக்கின்ற நிலைமைகளின் கீழ், மக்களுக்கு இந்த அச்சுறுத்தல் குறித்துக் கல்வியூட்டுவது மிக முக்கியமானதாகும்.”

இந்தக் கூட்டத்திற்கு முந்தைய நாட்களில், இந்த நிகழ்வு குறித்த அறிவிப்பு சுவரொட்டிகள் பிராங்பேர்ட்டில் ஆர்வத்தைத் தூண்டியிருந்தது. சுவரொட்டியை கடந்து சென்றவர்கள் பெரும்பாலும் நின்று அதில் இடம்பெற்றிருந்த மார்க்சின் மேற்கோள்களை வாசித்து செல்லத் தவறவில்லை. அவ்வாறு இடம்பெற்றிருந்த மேற்கோள்களில் ஒன்று: “மெய்யியல், தனது சடரீதியான ஆயுதத்தை பாட்டாளி வர்க்கத்தில் காண்கிறது, அதைப் போலவே பாட்டாளி வர்க்கமும் தனது சிந்தனாரீதியான ஆயுதத்தை மெய்யியலில் காண்கிறது… இந்த விடுதலையின் தலை மெய்யியல் என்றால், அதன் இருதயம் பாட்டாளி வர்க்கமாகும்.”

இந்த உரைக்குக் கிட்டிய சக்திவாய்ந்த பதிலிறுப்பானது பிராங்பேர்ட் பள்ளியின் இரண்டு ஆதரவாளர்களை விமர்சனத் தத்துவத்தை பாதுகாத்து விவாதத்தில் குறுக்கிடுவதற்குத் தூண்டியது. இவர்களில் ஒருவர், ட்ரொட்ஸ்கி ஃபிராய்டை விரும்பி வாசித்தார் என்பதையும், ரஷ்யப் புரட்சியின் வரலாறு புத்தகத்தில் சாரின் மனோவியலை எழுதினார் என்பதையும் குறிப்பிட்டுக் காட்டினார். “அடோர்னோவிலும் ஹோர்கெய்மரிலும் காணக்கிடைக்கக்கூடிய புரட்சிகர உந்து சக்திகளை நாங்கள் எடுத்துக் கொண்டிருக்கிறோம் என்று நாங்கள் சொல்லியிருந்தோமானால், அது இன்னும் கூடுதல் இயங்கியல் ரீதியானதாக இருந்திருக்காதா என்ன?” என்று வினவினார்.

அடுத்தவர் வில்ஹேம் ரைய்ச்சை பாதுகாக்க முயற்சித்தார். “நேற்றுத்தான் நான் இந்த உரையை எங்களது வாசிப்பு வட்டத்தில் வாசித்தேன்… அந்தக் காலத்தில் கம்யூனிச வேலைத்திட்டம் ஏன் பரந்த மக்களிடம் எடுபடாமல் போனது என்ற பிரச்சினையை ரைய்ச் அலசுகிறார். இன்று, IYSSE மற்றும் நான்காம் அகிலத்தின் வேலைத்திட்டம் ஏன் பரந்த மக்களால் எடுபடுவதில்லை என்று ஒருவர் கேட்கலாம். இவையெல்லாம் பொருந்துகின்ற கேள்விகள்.”

நோர்த் பதிலளித்தார்: “ஒருவர் எப்போதும் விடயங்களை ஒரு ஸ்தூலமான வரலாற்று உள்ளடக்கத்தில் ஆராய வேண்டும். 1930-33ல் ஜேர்மனியில் சோசலிச வெகுஜன இயக்கம் தோன்றியதுபோல் அதேவகையில் இன்று ஏன் தோன்றவில்லை என்ற பிரச்சினையை”.

அச்சமயத்தில் தொழிலாள வர்க்கத்தில் ஒரு புரட்சிகர சோசலிச வெகுஜன இயக்கம் இருந்தது. சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய இரண்டு கட்சிகள் இருந்தன, அவை தொழிலாள வர்க்கத்தின் செயலூக்கமான ஆதரவை அனுபவித்தன, அத்துடன் சமூக ஜனநாயக தொழிலாளர்களின் நம்பிக்கையை வென்றெடுக்கும் பணியை, ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி கொண்டிருந்தது.

“தொழிலாளர் இயக்கத்தில் மனோவியல் என்பது ஒரு சிக்கலான பிரச்சினை” என்றார் நோர்த். “மார்க்சிசத்திற்கு மனோவியலில் எந்த ஆர்வமும் இல்லை என்று கூறுவதைக் காட்டிலும் உண்மைக்குப் புறம்பான ஒன்று இருக்க முடியாது. ஆயினும் இது வர்க்கங்கள் மற்றும் சமூக அடுக்குகளின் மனோவியல் மீது அக்கறை கொள்கிறதே தவிர, தனிமனிதர்களின் மனோவியல் மீது அல்ல”.

ட்ரொட்ஸ்கி தனது வேலைத்திட்டத்தை இந்தப் பணிக்காய் செலுத்தினார், பாசிசத்திற்கு எதிரான ஒரு ஐக்கிய முன்னணி என்ற கொள்கையை அவர் முன்வைத்தார். சமூக ஜனநாயகக் கட்சியின் தொழிலாளர்களிடம் ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி  சொல்ல வேண்டியது: “உண்மைதான், நமக்கிடையே பல கருத்துபேதங்கள் இருக்கின்றன, ஆனாலும் ஹிட்லருக்கும் நாஜிக்களுக்கும் எதிராக நாம் ஒன்றாகப் போராடியாக வேண்டும். நாஜிக்கள் அதிகாரத்தை கைப்பற்றுவதை தடுக்க ஒரு ஐக்கிய முன்னணியை உருவாக்க நாங்கள் தயாராய் இருக்கிறோம்.” இது சமூக ஜனநாயகக் கட்சியின் தொழிலாளர்களின் நம்பிக்கையை வெல்லக் கூடிய அதேநேரத்தில், நாஜிக்களை எதிர்க்க தயாராய் இராத அக்கட்சியின் தலைவர்களையும் அம்பலப்படுத்தியிருக்கும்.

”இது தொழிலாளர்களின் மனோவியல் குறித்த ஒரு உண்மையான அறிவை வெளிப்படுத்தியது” என்றார் நோர்த். ”நான் மேற்கோள் காட்டிய [ரைய்ச்சின்] உரைகளில், பாலியல் விடயத்தில் ஜேர்மன் தொழிலாள வர்க்கம் காட்டிய தவறான அணுகுமுறை தான் அதன் பிரதான பிரச்சினையாக இருந்தது என்பதை தவிர நம்பிக்கையூட்டக்கூடிய ஒன்றையும் நான் காணவில்லையே.” 

பிராங்பேர்ட் பள்ளியின் தத்துவாசிரியர்களுக்கு பொதுவாக ஸ்தூலமான அரசியல் வேலைத்திட்டங்களிலும் மூலோபாயங்களிலும் ஆர்வம் கிடையாது. மனோவியல்  மற்றும் பகுத்தறியாமை ஆகிய பிரச்சினைகளுக்குத் திரும்புவதன் மூலம், அரசியல் பிரச்சினைகளை பகுப்பாய்வு செய்வதற்கு அவர்கள் முதுகை காட்டுகின்றனர். “அவர்கள் அபாரமான புத்திஜீவிகளாய் இருந்தனர், என்றாலும் அவர்கள் யாருக்கும் தொழிலாளர் இயக்கத்துடன் தொடர்பு இருந்ததில்லை. பெரும் நிகழ்வுகள் குறித்து அவர்கள் சொல்வதற்கு அதிகம் ஏதும் இருக்கவில்லை” என்று நோர்த் தொடர்ந்து கூறினார்.

உதாரணமாய், சோவியத் சோசலிஸ்டுகளின் ஒரு ஒட்டுமொத்த தலைமுறையையும் அழித்த ஸ்ராலினின் மாஸ்கோ விசாரணைகள் குறித்து ஹோர்கெய்மர் மவுனம் சாதித்தார் என்றால், ஏர்ன்ஸ்ட் புளோக் அந்த விசாரணைகளை மனமுவந்து வரவேற்றார்.

பார்வையாளர்களில் இருந்த இன்னுமொரு விமர்சனபூர்வ மாணவர், இந்த உரை “முதலாளித்துவத்தையும் கம்யூனிசத்தையும்” மட்டுமே கையாண்டது, மூன்றாம் உலகத்தை ஏறக்குறைய முற்றிலுமாய் உதாசீனம் செய்து விட்டது என்பதால் அதில் தனக்கு நம்பிக்கை ஏற்படவில்லை என்று தெரிவித்தார். “உலகின் பெரும்பான்மை எங்கேயிருக்கிறது?” என்று அவர் வினவினார். பூமிக்கோளத்தின் பெரும்பான்மையான வாசிகள் முதலாளித்துவவாதிகளாகவோ அல்லது கம்யூனிஸ்டுகளாகவோ இல்லை, மாறாக மதம்சார்ந்தவர்களாக இருக்கிறார்கள். முஸ்லீம் சகோதரத்துவமும் “அரசியல் சிந்தனையின் இன்னுமொரு சாத்தியத்தை” பிரதிநிதித்துவம் செய்கிறது இல்லையா? என்றார் அவர்.

“இதை நான் ஒப்புக்கொள்ளவில்லை” என்று நோர்த் பதிலளித்தார். ”ஒவ்வொரு நாட்டிற்கும், உலகின் ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் தனித்துவமான குணாம்சங்கள் இருக்கின்றன, ஆனாலும் மத்திய கிழக்கின் நிலைமை என்பது அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும், இலத்தீன் அமெரிக்காவிலும் மற்றும் ஆசியாவின் பெரும் பகுதிகளிலும் இருக்கக் கூடிய அதே பிரச்சினைகளது ஒரு அதீத வெளிப்பாடு தான். “இது புரட்சிகரத் தலைமை குறித்த பிரச்சினை” என்று அவர் வலியுறுத்தினார்.

அரபு உலகத்தின் தொழிலாள வர்க்கங்கள் மீது ரஷ்ய புரட்சி ஏற்படுத்திய தாக்கத்தையும் எவ்வாறு வெகுஜன கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒவ்வொரு இடத்திலும் தோன்றின என்பதையும் நோர்த் விளக்கச் சென்றார். “எகிப்தில், சிரியாவில் அல்லது பாலஸ்தீனத்தில் என மத்திய கிழக்கின் ஒவ்வொரு நாட்டிலும், ட்ரொட்ஸ்கிக்கும் ஸ்ராலினுக்கும் இடையிலான மோதல்தான் முக்கிய பிரச்சினையாக இருந்தது.”

ட்ரொட்ஸ்கி தனது நிரந்தரப் புரட்சி தத்துவத்தில், தேசிய முதலாளித்துவ வர்க்கம் இனியும் ஒரு முற்போக்கான புரட்சிகர பாத்திரத்தை வகிக்க இயலாது என்று அறிவித்திருந்தார். ஆயினும், ஸ்ராலினோ இந்த நாடுகளில் இருந்த தொழிலாள வர்க்கங்கள் அங்கு ஆதிக்கம் செலுத்திய முதலாளித்துவ-தேசிய இயக்கங்களுக்கு தங்களை கீழ்ப்படியச் செய்து கொள்வதற்கு அவற்றை நிர்ப்பந்தித்தார். அவை “பேரழிவுகரமான விளைவுகளை”க் கொண்டிருந்தன.

நோர்த் தன்னை விமர்சித்தவரை நோக்கி நேரடியாகத் திரும்பிக் கூறினார்: “நீங்கள் கூறிய எல்லாமே, உங்களது ஒட்டுமொத்த முதலாளித்துவ, மூன்றாம் உலகக் கொள்கையும், ஸ்தூலமான அபிவிருத்திகள் மீது ஆய்வு செய்வதைத் தவிர்த்து விடுகிறது. வெகுஜன நனவில், மதம் மீண்டும் ஒரு முக்கிய காரணியாக ஆகியிருக்கிறது என்ற உண்மையானது ஸ்ராலினிஸ்டுகளின் காட்டிக்கொடுப்பின் ஒரு பின்விளைவாகும்.”

எகிப்தில் 2011 இன் அரபு வசந்தத்தில் இது துயரகரமான வகையில் ஊர்ஜிதப்படுத்தப்பட்டது என்று அவர் தொடர்ந்து கூறினார். “எகிப்தின் புரட்சி ஏன் தோல்வியடைந்தது? காரணம் அதற்கு ஒரு மார்க்சிச தலைமை இல்லாதிருந்தது. அதுதான் தீர்மானகரமான புள்ளியாகும், அது ஒவ்வொரு நாட்டிற்கும் பொருந்தும்.”

அதன்பின் நோர்த் விவாதத்தை கூர்மையாகக் கவனித்துக் கொண்டிருந்த இளம் மாணவர்களை நோக்கித் திரும்பினார். “இந்தக் கேள்விகளை ஆய்வு செய்யுங்கள்!” என்று அவர் கூறினார். “காலங்கள் துரிதகதியில் மாற்றம் கண்டுவருகின்றன. மக்கள் தீவிரமயப்படுவர். ஒரு புதிய போரின் அபாயம் மிகவும் உண்மையானதாகும்.”


இலக்கிய மேசையில் பரந்த ஆர்வம்

கூட்டம் உத்தியோகபூர்வமாக முடிவுக்கு வந்த பின்னரும் கூட நூலகத்திலும் அரங்கிலும் விவாதங்கள் வெகுநேரத்திற்கு நீடித்தன. எல்லாவற்றையும் புரிந்து கொள்வதற்கு அத்தனை எளிதாக இருக்கவில்லை என்று பலரும் குறிப்பிட்டனர், ஆனாலும் பங்கேற்ற ஒருவர் குறிப்பிட்டதைப்போல “இந்த பகுப்பாய்வு சந்தேகத்திற்கிடமில்லாமல் நேரடியானதாகவும் காலப்பொருத்தம் வாய்ந்ததாகவும் இருந்தது.”

சுவரொட்டிகளைப் பார்த்து வந்திருந்த இன்னுமொரு மாணவர் கூறினார்: “இத்தகைய பிரச்சினைகளை சர்ச்சைக்குரிய விதத்தில் விவாதிப்பது நல்ல விடயம் என்றே நான் கருதுகிறேன். கல்விவட்டங்கள் மற்றும் பொதுமக்களின் அந்நியப்படலை நாம் எவ்வாறு கடப்பது? – என்பதே கேள்வி. இது ஒரு முக்கியமான புள்ளியாக எனக்குப் படுகிறது. விமர்சன ரீதியானவிஞ்ஞானம், என்ன அர்ப்பணித்திருக்கிறது என்பது கேள்வி?. இது மிகப் பொருத்தமான ஒரு கேள்வியாகும்.”

***

பிராங்பேர்ட் பள்ளி, பின்நவீனத்துவம் மற்றும் போலி-இடது அரசியல் மேஹ்ரிங் புக்ஸில் கிடைக்கிறது.