தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை US shift on Sri Lankan war crimes probe exposes Tamil nationalists இலங்கை போர் குற்ற விசாரணை மீதான அமெரிக்க நிலைமாற்றம் தமிழ் தேசியவாதிகளை அம்பலப்படுத்துகிறது
By K. Nesan Use this version to print| Send feedback இலங்கை உள்நாட்டு போர் முடிவில் தமிழ் மக்கள் படுகொலை குறித்த ஒரு சர்வதேச விசாரணைக்கான அதன் அழைப்பை, வாஷிங்டன் திரும்ப பெறுவதாக அமெரிக்க துணை வெளியுறவுத்துறை செயலர் நிசா பிஸ்வாலின் அறிவிப்பு, தமிழ் தேசியவாதத்தின் திவால்நிலைமையை அம்பலப்படுத்துகிறது. ஒரு சர்வதேச விசாரணை கோரி 2014 இல் அமெரிக்கா முன்வைத்த தீர்மானம், அப்போதைய இலங்கை ஜனாதிபதி மகிந்த இராஜபக்ஷவின் சீனாவை நோக்கிய நிலைப்பாட்டினை கைவிடச்செய்வதற்காக அவருக்கு அழுத்தமளிக்கும் ஓர் சிடுமூஞ்சி தந்திரமாகும். ஜனவரியில் இராஜபக்ஷாவை பதவியிலிருந்து வெளியேற்றி சிறிசேனவை ஜனாதிபதியாக நியமித்த அமெரிக்க-இயக்கத்திலான ஆட்சி மாற்ற நடவடிக்கை, இலங்கையை மீண்டும் அமெரிக்க வெளியுறவு கொள்கையின் சுற்றுவட்டத்தில் கொண்டு வந்துள்ளது. கொழும்பில் அதன் பினாமி ஆட்சியின் உயர்மட்ட அதிகாரிகளால் நடத்தப்பட்ட குற்றங்களை விசாரிப்பதில் வாஷிங்டனுக்கு இனி எந்த ஆர்வமும் இல்லை என்பதால், அது துரிதமாக விசாரணைக்கான அழைப்பை உதறித்தள்ளியது. தமிழ் மக்களின் ஒரு பரந்த அரசியல் தீர்வின் பாகமாக ஒரு சர்வதேச விசாரணையில் அது பங்குவகிக்குமென்ற நப்பாசைகளை முன்னிலைப்படுத்திக் கொண்டே, தமிழ் தேசிய கூட்டமைப்பு (TNA), புதிய இலங்கை ஆட்சிக்கு முழுமூச்சுடன் ஆதரவளித்தது. தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமையிலான வட மாகாண சபை (NPC) அதுபோன்றவொரு விசாரணைக்கு ஆதரவாக பெப்ரவரியில் ஒரு தீர்மானமும் கூட நிறைவேற்றியது. ஆனால் பிஸ்வாலின் கருத்துக்களுக்குப் பின்னர், இத்தகைய நப்பாசைகள் தகர்க்கப்பட்டு விட்டன. தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஐந்து அங்கத்தவர் பிரதிநிதிகள் குழு ஒன்று கொழும்பில் பிஸ்வாலைச் சந்தித்தது. அந்த கூட்டத்திற்குப் பின்னர், “லங்காஸ்ரீ" வானொலி பேட்டி ஒன்றில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் சர்வதேச விசாரணை கோருவதிலிருந்து பின்வாங்கும் அமெரிக்க கொள்கை மாற்றம் குறித்து ஒன்றுமே தெரிவிக்கவில்லை. எதிர்காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ன நடவடிக்கை எடுக்குமென வினவியபோது, சம்பந்தன் பின்வருமாறு தெரிவித்தார்: “நாங்கள் வேண்டிய எல்லா நடவடிக்கைகளும் எடுப்போம். இது குறித்து எங்களால் பகிரங்கமாக கதைக்கவியலாது, அப்படி செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. எமது தேர்தல் அறிக்கையில் நாங்கள் சகலமும் குறிப்பிட்டு, எமது பிரச்சாரத்தை மக்களிடம் விளங்கப்படுத்தி உள்ளோம். நாம் எமது வேலையைத் தொடர்வோம்.” தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை மக்கள் அறிய வேண்டியதில்லையென சம்பந்தன் வலியுறுத்துவது, தொழிலாளர்கள், ஏழைகள் மீதான தமிழ் தேசியவாதிகளின் முழுமையான அலட்சியத்தினைக் காட்டுகிறது, இதே மக்களிடம் தான் ஒரு சில வாரங்களுக்கு முன்னர் சம்பந்தன் நாடாளுமன்றத்திற்கு 20 தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்தவர்களைத் தேர்ந்தெடுக்குமாறு கேட்டிருந்தார். அவரைப் பொறுத்த வரையில், மூடிய கதவுகளுக்குப் பின்னால் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் இடையிலான சூழ்ச்சிகளைக் குறித்து தெரிந்து கொள்வதற்கு இந்த மக்களுக்கு எந்த உரிமையும் இல்லை. யாழ்பாணத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்தவரான எம். ஏ. சுமந்திரன், வாஷிங்டனால் முன்மொழியப்பட்ட சர்வதேச பங்களிப்போடு இலங்கை அதிகாரிகளின் ஓர் உள்ளக விசாரணையை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்றுக் கொள்ளும் என்பதை சமிக்ஞை செய்கின்றார். அவர் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸிற்கு கூறுகையில், “அது முற்றிலுமாக இலங்கையின் உள்நாட்டு இயங்குமுறையாக இருந்தால் எமக்கு நீதி கிடைக்காது. அதுவொரு சர்வதேசமயப்பட்ட விசாரணையாக இருக்க வேண்டும். சர்வதேச வல்லுனர்கள் அதில் கலந்து கொள்வது அவசியம்,” என்றார். திரைமறைவின் பின்னே வாஷிங்டன், கொழும்பு ஆட்சியை ஸ்திரமின்மைக்கு உள்ளாக்கும் போர் குற்றங்கள் குறித்த எந்தவித வாயடிப்புக்களையும் அது பொறுத்துக் கொள்ளாதென்பதை தமிழ் தேசியவாதிகளுக்கு தெளிவுபடுத்தி இருந்தது. ஜூலையில் அமெரிக்காவுக்கு விஜயம் செய்த வட மாகாண சபை முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் போக்கை வாஷிங்டனே தீர்மானிக்கும் என்ற செய்தியுடன் வீட்டுக்கு திருப்பி அனுப்பபட்டார். இலங்கை Sunday Times குறிப்பிட்டது, அமெரிக்க செனட் துறையிடமிருந்து அவர் "கடுமையான பாடம்" பெற்றுள்ளார், அதில் "இனப்படுகொலை குற்றச்சாட்டுக்கள் குறித்த அவரது வார்த்தைஜாலங்களுக்கு பதிலாக வட மாகாணத்தின் நல்லிணக்கம், மீள்கட்டுமானம் மற்றும் புனர்வாழ்வை நோக்கி இயங்குமாறு கூறப்பட்டுள்ளார். சிறிசேன, ரணில் விக்கிரசிங்க அரசாங்கத்துடன் செயற்பட இதுவொரு நல்வாய்ப்பென அவருக்கு கூறப்பட்டுள்ளது.” விக்னேஸ்வரன் அவர் செல்லும் பாதைக்கான உத்தரவுகளை வாஷிங்டனிடமிருந்து உரக்கவும் தெளிவாகவும் பெற்றிருந்தார். அவர் திரும்பிய பின்னர் வெளியிட்ட ஒரு பத்திரிகை அறிக்கையில், தமிழ் மக்களின் நலன்களை உண்மையிலேயே பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு கட்சிக்கு தமிழர்கள் வாக்களிப்பார்கள் என்றார். அப்போதிலிருந்து அவர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கூட்டங்கள் அல்லது எந்தவித ஏனைய அரசியல் நிகழ்வுகளிலும் கலந்துகொள்வதை தவிர்த்துள்ளார். அமெரிக்க கொள்கை மாற்றம், தமிழ் தேசியவாத வட்டாரங்களுக்குள் ஓர் அரசியல் நெருக்கடியை கட்டவிழ்த்துவிட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களும் ஆதரவாளர்களும் ஏமாற்றத்தை வெளிப்படுத்தினர். பயம் கலந்த பரிதாபகரமான துணிவோடு, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற அங்கத்தவர் ஸ்ரீதரன் தமிழ்வின் க்கு கூறுகையில், “அமெரிக்கா கூறுவதை நாம் ஏற்க வேண்டியதில்லை, நமக்கு சர்வதேச மத்தியஸ்தம் தேவை.” என்றார். ஆனால் தமிழ் நாளிதழ் தினக்குரல் பின்வருமாறு எழுதியது, “இப்பிராந்தியத்தில் பெரிய சக்திகளின் கைகளில் அவர்களது பல்வேறு நலன்களுக்காக சிறிய தேசங்களும் சிறுபான்மையினரும் விளையாட்டு பொம்மை ஆக்கப்படுகின்றனர் என்பது தெளிவானது”. இலங்கை உள்நாட்டு போர் குற்றங்கள் பிரிக்கவியலாதவாறு அந்நாட்டின் முதலாளித்து ஆட்சியுடன் பிணைந்துள்ளன. இலங்கை ஆளும் வர்க்கத்தின் பல்வேறு கன்னைகளுக்கும் சரி அல்லது அவர்களது வெளிநாட்டு ஆதரவாளர்களுக்கும் சரி இக்குற்றங்களை விசாரிப்பதிலோ அல்லது அதற்கு பொறுப்பானவர்களை தண்டிப்பதிலோ எந்த ஆர்வமும் கிடையாது. உள்நாட்டு போரின் போது செய்யப்பட்ட நாசங்களுக்கும் படுகொலைகளுக்கும் அரசியல்ரீதியில் யார் பொறுப்பென அடையாளங்காண்பது ஒன்றும் கடினமானதல்ல. தமிழ் மக்கள் மீதான இலங்கை அரசின் முழுஅளவிலான போர் பிரகடனத்தில், தற்போதைய அமெரிக்க ஆதரவு அரசாங்கமும் மற்றும் எதிர்கட்சிகளின் தலைவர்களுமே சம்பந்தப்பட்டிருந்தனர். 2006 இல் போர் புதுப்பிக்கப்பட்டதில் ஜனாதிபதி சிறிசேன, அப்போதைய அரசாங்கத்தின் ஒரு அமைச்சராகவும், பின்னர் சண்டையின் இறுதி கட்டங்களில் ஆளுங்கட்சியின் ஓர் உயர்மட்ட அதிகாரியாகவும் நேரடியாக சம்பந்தப்பட்டிருந்தார். அப்போதைய எதிர்கட்சி தலைவராக இருந்த பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க போருக்கு எதிராக ஒரு அடையாள எதிர்ப்பைக் கூட ஒருபோதும் பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தவில்லை. ஜனவரியில் சிறிசேனவை ஜனாதிபதியாக நியமித்த அமெரிக்க ஆட்சி மாற்ற நடவடிக்கையில் பலமாக சம்பந்தப்பட்டிருந்த கிளிண்டன் அமைப்பின் ஓர் அங்கத்தவரான சந்திரிகா குமாரதுங்கா, மகிந்த இராஜபக்ஷாவிற்கு முன்னர் 1994 இல் இருந்து 2005 வரை ஜனாதிபதியாக இருந்தார். 2009 இல் போரை முன்னின்று நடத்தியவர் இராணுவ தளபதி சரத் பொன்சேகா. அவர் அரசாங்கத்தை கவிழ்க்க சதி செய்தார் என்பது போன்ற குற்றச்சாட்டுகளில் இராஜபக்ஷவின் இன் கீழ் பெப்ரவரி 2010 இல் கைது செய்யப்பட்டு, பின்னர் மே 2012 இல் விடுவிக்கப்பட்டார். ஜனவரியில் பதவியேற்று இரண்டே வாரங்களுக்குள், சிறிசேன அவருக்கு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பை வழங்கி, இராணுவ பதவியும் அளித்து அலங்கரித்தார். அவருக்கு மார்ச்சில் பீல்டு மார்ஷலாக பதவி உயர்வு வழங்கப்பட்டது. மே 7 அன்று, மேஜர் ஜெனரல் ஜகத் டயஸை சிறிசேன இராணுவ தலைமை தளபதியாக நியமித்தார். டயஸ் இறுதிப்போரின் போது இராணுவத்தின் 57வது பிரிவில் தளபதியாக இருந்திருந்தார். 2009இல் போருக்குப் பின்னர் இராஜபக்ஷ அவரை ஜேர்மனி மற்றும் சுவிட்சர்லாந்திற்கான தூதராக நியமித்தார். 2011 முடிவில், ஜகத் டயஸ் போர் குற்றங்களுக்காக சுவிட்சர்லாந்தில் வழக்குகளை முகங்கொடுத்தார். டயஸ் கடுமையாக மனித உரிமைகளை மீறியுள்ளார் என்றும், சித்திரவதை மற்றும் சட்டத்தை மீறிய படுகொலைகளில் சம்பட்டிருக்கலாமென சந்தேகிப்பதாகவும் குற்றஞ்சாட்டி அரசியலமைப்பு மற்றும் மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய மையம் (ECCHR) அறிக்கை ஒன்றை சமர்பித்தது. இத்தகைய பிரமுகர்களைக் கொண்ட ஓர் அரசாங்கத்தை ஆதரிப்பதன் மூலமாக, தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்நாட்டு போர் குற்றங்கள் தண்டிக்கப்படாமல் போவதை அனுமதிப்பதற்கு உடந்தையாய் மாறியுள்ளது. 2015 ஜனாதிபதி தேர்தல்களின் போது, இலங்கையில் சிறிசேன ஒரு "ஜனநாயக மாற்றத்தைக்" கொண்டு வருவார் என்ற அடித்தளத்தில் அவரை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரித்தது. சர்வதேச விசாரணை, ஓர் அரசியல் தீர்விற்கான முன்னறிவிப்பு என்று கூறி, தமிழ் தேசிய கூட்டமைப்பு 2014 அமெரிக்க தீர்மானத்தைப் புகழ்ந்துரைத்தது. அது அக்கறை கொண்டிருப்பது வெகுஜனங்களின் ஜனநாயக அபிலாசைகள் மீதல்ல, மாறாக அவர்களின் முதுகுக்குப் பின்னால் தமிழ் முதலாளித்துவவாதிகள் ஆதாயமடையும் வகையில் ஏகாதிபத்தியத்துடனான ஓர் உடன்படிக்கைக்காக உழைப்பதிலேயே அது அக்கறை கொண்டுள்ளது. |
|
|