World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை Sri Lankan police arrest estate workers in a witch-hunt campaign வேட்டையாடல் நடவடிக்கையில் இலங்கை பொலிஸ் தோட்டத் தொழிலாளர்களை கைது செய்ததுBy M.
Devarajah மார்ச் 11 அன்று சோசலிச சமத்துவக் கட்சி ஆதரவாளர் ஜி. வில்பிரட் உட்பட, மத்திய மலையகத்தின் கிளனியுஜி தோட்டத்தின் டீசைட் டிவிசனை சேர்ந்த 8 இளம் தொழிலாளர்களை மஸ்கேலிய பொலிசார் போலிக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்தனர். பெப்ரவரியில் வேலைச் சுமையை அதிகரிப்பதற்கு எதிராக டீசைட் தொழிலாளர்கள் நடத்திய மூன்று நாள் வேலை நிறுத்தத்திற்கு எதிரான அச்சுறுத்தலின் ஒரு பாகமே இந்த கைது நடவடிக்கைகளாகும். மஸ்கெலிய பெருந்தோட்ட கம்பனிக்கு சொந்தமான, கிளனியுஜி தோட்ட நிர்வாகம், வில்பிரட்டுக்கும் ஏனைய ஏழு தொழிலாளர்களுக்கும் எதிராக உள்ளக விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளது. இந்த விசாரணை மார்ச் 21 நடைபெற உள்ளது. உதவி வெளிக்கள உத்தியோகத்தரான பி. ஏப்பிரகாமை திட்டியமை மற்றும் அவரை தாக்கியமை, வேலைத் தளத்தில் வேலைக்கு இடையூறு விளைவித்தமை ஆகியவை உட்பட எட்டு குற்றச்சாட்டுக்கள் அடங்கிய குற்றப் பத்திரிகை ஒன்று அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அக்குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் அவர்களை வேலையிலிருந்து நீக்குவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாகவும் அக்குற்றப் பத்திரிகையில் நிர்வாகம் சமிக்ஞை செய்துள்ளது. சோசலிச சமத்துவக் கட்சி இந்த கைது நடவடிக்கையை பகிரங்கமாக கண்டனம் செய்கின்றது. இது, வெறுமனே எட்டு தொழிலாளர்களை மாத்திரமன்றி கிளனியுஜி தொழிலாளர்களையும் மற்றும் பரந்தளவில் தோட்டத் தொழிலாளர்களையே அச்சுறுத்துவதை இலக்காகக் கொண்டதாகும். கம்பனியும் பொலிசும் சில தொழிலாளர்களை அச்சம்பவத்திற்கு சாட்சியாக கொண்டுவர முயற்சிக்கின்றன. இது தொழிலாள வர்க்கத்தை வஞ்சத்தனமாக பிளவுபடுத்துவதற்காக, ஒரு பகுதி தொழிலாளர்களை இன்னொரு பகுதி தொழிலாளர்களுக்கு எதிராக திருப்பிவிடுவதற்கு மேற்கொள்ளும் முயற்சியாகும். தமது ஐக்கியத்துக்கும் தமது உரிமைகளை பாதுகாப்பதற்கான போராட்டத்துக்கும் குழி பறிக்கும் இந்தப் பொறியில் விழுந்துவிட வேண்டாம் என நாம் தொழிலாளர்களுக்கு அறிவுறுத்துகின்றோம். சோசலிச சமத்துவக் கட்சி ஆதரவாளர் வில்பிரட், வேலை நிறுத்தத்தில் முன்னணியில் நின்றதுடன் தொழிற்சங்கங்களின் காட்டிக் கொடுப்புகளுக்கு எதிராக தொழிலாளர்கள் மத்தியில் ஒரு நடவடிக்கை குழுவை அமைப்பதற்கான பிரச்சாரத்திலும் ஈடுபட்டிருந்தார். எம். நெஸ்டூரியன், எஸ். டக்கலஸ் நியூமன், எப். பிராங்ளின், எப். அன்ரன் யூலியன், ஜெ. ஜக்சன் ஜோய், எஸ். பெனடிற், ரி. ஜெயராம் ஆகியோரே ஏனைய கைது செய்யப்பட்ட தொழிலாளர்கள் ஆவர். பொலிசார் தொழிலாளர்களை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தி விளக்கமறியலில் வைத்தனர். அடுத்த நாள் மீண்டும் அவர்கள் நீதிமன்றத்தின் முன் கொண்டுவரப்பட்டு 50,000 சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். பொய் முறைப்பாட்டின் பேரிலேயே இத் தொழிலாளர்களை பொலிசார் கைதுசெய்தனர். மேற்பார்வையாளரை அடித்தனர் என்பது ஒரு குற்றச்சாட்டு, தொழிலாளர்கள் மீது குளவி கொட்டுவதற்காக கூட்டுக்கு கல்லெறிந்தனர் என்பது மற்றையது. டீசைட் தோட்டத்தை சேர்ந்த ஒரு தொழிலாளி உலக சோசலிச வலைத் தளத்திற்கு கூறியதாவது: “வேலை நிறுத்தத்தின் பின்னர், கிளனியுஜி தோட்ட நிர்வாகமானது இலங்கை தொழிலாளர் காங்கிரசின் (இதொகா) கிளைத் தலைமைத்துவத்தின் ஆதரவுடன் தொழிலாளர்கள் மேல் புதிய சுமைகளை சுமத்துகின்றது. கட்டுக் கதைகளின் மூலமான இந்த கைது, தொழிலாளர்களை கைது செய்யுவும் மிரட்டுவதற்கும் நிர்வாகத்தினால் உருவாக்கப்பட்ட ஒன்றாகும்.” குளவி கொட்டியது தற்செயலாக நடந்தே அன்றி, கல் எறியப்படவில்லை. கடந்த பல வருடங்களாக பல தோட்டங்களில் தொழிலாளர்களை குளவிகள் கொட்டுவது பொதுவான சம்பவமாகியுள்ளதோடு நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டதுடன் பலர் கவலைக்கிடமான நிலையிலும் இருந்துள்ளனர். இதற்கான பிரதான காரணம் நிர்வாகங்கள் தோட்டங்களை துப்பரவு செய்யாமையே. வில்பிரட்டும் ஏனைய தொழிலாளர்களும் சம்பவத்தை கேள்விப்பட்டு நடந்ததை அறிய அங்கு சென்றார்கள். அந்த இடத்திற்கு பெண் தொழிலாளர்களை அனுப்பியமை சம்பந்தமாக அவர்கள் மேற்பார்வையாளருடன் வாதத்தில் ஈடுபட்டார்கள். இதொகா வினால் ஊக்குவிக்கப்பட்ட மேற்பார்வையாளர், தன்னை தொழிலாளர்கள் தாக்கியதாக பொலிசில் முறைப்பாடு செய்தார். தொழிலாளர்கள் கிளறிவிட்டதனாலேயே குளவிகள் கொட்டின என்ற தோட்ட நிர்வாகத்தின் கட்டுக் கதையை, சில ஊடகங்களும் வெளியிட்டதாக தொழிலாளர்கள் குற்றம் சாட்டினர். ஒரு தொழிலாளி கூறியதாவது: “சக்தி தொலைக் காட்சியே இந்த பொய் கதையை ஒலிபரப்பியது. அதன் நிருபர், டீசைட் தோட்டத்திலேயே இருக்கின்றார். அவர் இங்கு இதொகா வின் கிளைத் தலைவராக இருப்பதுடன் நிர்வாகத்துடன் நெருக்கமாக வேலை செய்கின்றார். ஆனால் இந்த தொலைக்காட்சி சேவை கடந்த மாதம் நடைபெற்ற எமது மூன்று நாள் வேலை நிறுத்தத்தை பற்றி ஒன்றுமே கூறவில்லை.” எந்தவிதமான கூலியும் இல்லாமல் தேயிலைக் கொழுந்தின் அளவை 18 கிலோ வரை 2 கிலோவால் அதிகரித்தமைக்கு எதிராக டீசைட் தோட்டத் தொழிலாளர்கள் பெப்ரவரி 10 இல் வேலை நிறுத்தத்தில் குதித்தார்கள். அவர்கள் தொழிற்சங்கங்களுக்கு புறம்பாக சுயாதீனமாக வேலை நிறுத்தம் செய்தார்கள். வேலை நிறுத்தத்திற்கு முன்பு இந்த தோட்டத்தில் பெரும்பான்மையான தொழிலாளர்கள் இதொகா வில் அங்கத்துவம் வகித்தார்கள். எனினும், போராட்டத்திற்கு ஆதரவு கொடுக்காததால், நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தின் போது அதிலிருந்து விலகினார்கள். மலையக மக்கள் முன்னணி மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் (தொதேச) கிளைகளும் அங்கிருக்கின்றன. தொதேச தலைவர் பி. திகாம்பரம் அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சராவார். தொதேச ஆரம்பத்தில் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு கொடுத்த போதிலும், பின்னர் அதன் பிரதேச தலைவர் நகுலேஸ்வரன் வேலை நிறுத்தத்திற்கு குழி பறிக்க தலையீடு செய்தார். கொழுந்து பறிக்கும் இலக்கை குறைப்பதற்கு நிர்வாகம் உடன்பட்டதாகவும், நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து மேலதிக வேலைக்கான கொடுப்பனவைப் பெற முடியும் எனவும் அவர் அறிவித்தார். இப்போது, எட்டு தொழிலாளர்களை கைது செய்ய பொலிஸ் முயற்சித்த வேளை, தொதேச தலைவர்கள், கிளனியுஜி தோட்ட நிர்வாகம் மற்றும் மஸ்கேலிய பொலிஸ் அதிகாரியுடனும் பேச்சுவார்த்தை நடத்தி, எட்டு தொழிலாளர்களையும் நீதிமன்றத்திற்கு செல்லுமாறும் அங்கு அவர்களுக்கு பிணை வழங்கப்படும் எனவும் அறிவுறுத்தினர். எனினும், தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு அடுத்த நாளே பிணையில் விடுதலை செய்யப்பட்டார்கள். டீசைட் தோட்டத்தில் கண்டதுபோல், தொழிற்சங்கங்கள் தோட்டக் கம்பனிகளுடனும் அரசாங்கம் மற்றும் பொலிசுடனும் மிகவும் நெருக்கமாக வேலை செய்கின்றன. உண்மையில், அவை தொழிலாளர்கள் மீது மேலும் சுமைகளை திணிப்பதற்கு பெருந்தோட்டங்களில் தொழிற்துறை பொலிஸ்காரனாக செயற்படுகின்றன. தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களை காட்டிக் கொடுப்பதற்காக பெருந்தோட்டக் கம்பனிகளுடன் மோசமான கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுகின்றன. தோட்டங்களில் தொழிலாளர்களை ஒடுக்குமுறை நிலைமைகளில் வைத்திருப்பதற்காக பொலிஸ் மிரட்டல்கள் வழமையாக நடைபெறுவதோடு, தொழிற்சங்கங்கள் பொலிஸ் பக்கமே சாய்கின்றன. கடந்த மாதத்தில் தலவாக்கலைக்கு அருகில் உள்ள கிரேட் வெஸ்டன் தோட்டத்தில் தொழிலாளர்கள் பொலிஸ் மிரட்டலுக்கு உள்ளானார்கள். அத்தோட்டத்தில் ஒரு இளைஞன் தலவாக்கலை பொலிசாரால் கைது செய்யப்பட்ட பின்னர், சந்தேகத்திற்கிடமான முறையில் நீர்த்தேக்கத்தில் மூழ்கி மரணமானார். அந்த மரணத்திற்கு எதிர்பு தெரிவித்த தொழிலாளர்களை பொலிஸ் தாக்கியது. பின்னர் 20 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு நீதவான் விசாரணையை தடுத்தமை மற்றும் சட்டவிரோதமாக ஒன்று கூடியமை போன்ற குற்றச்சாட்டுக்கள் அவர்கள் மீது சுமத்தப்பட்டன. தொழிலாளர் மத்தியில் அமைதியின்மை அதிகரித்து வரும் நிலமையிலேயே இத்தகைய கைதுகளும் தொல்லைகளும் நடைபெற்று வருகின்றன. இரண்டு வருட கூட்டு ஒப்பந்தம் ஏப்பரலில் முடிவடைவதோடு அற்ப சம்பள அதிகரிப்புக்கு உடன்பட்டு தொழிற்சங்கங்கள் இன்னொரு வியாபாரத்துக்குத் தயாராகின்றன. ஆனால் தொழிலாளர் மத்தியில் நியாயமான சம்பளத்திற்கான கோரிக்கை வலுவடைகின்றது. சம்பளம் மற்றும் ஏனைய உரிமைகள் தொடர்பாக போராட்டங்கள் வெடிக்கும் என்று அச்சமடைந்துள்ள பெருந்தோட்டக் கம்பனிகளும் பொலிஸ் மற்றும் அரசாங்கமும் தொழிலாளர்களை அடக்குவதற்கு முயற்சிக்கின்றன. இந்த வேட்டையாடலை எதிர்க்குமாறு, டீசைட், கிளனியுஜி மற்றும் மஸ்கெலிய பெருந்தோட்டத்துக்குச் சொந்தமான ஏனைய தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு சோசலிச சமத்துவக் கட்சி அழைப்புவிடுக்கின்றது. டீசைட்டில் உள்ள தொழிலாளர்களை பாதுகாக்க முன்வருமாறு பெருந்தோட்டங்களிலும் ஏனைய துறைகளிலும் உள்ள தொழிலாளர்களுக்கும் நாம் அழைப்பு விடுக்கின்றோம். |
|