World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

A landslide “no” to EU austerity in Greece

கிரீஸில் ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நடவடிக்கைக்கு பிரமாண்டமான அளவில் "வேண்டாமென" வாக்குகள்

Alex Lantier
6 July 2015

Back to screen version

கிரீஸில் சிக்கன நடவடிக்கை மீதான நேற்று நடந்த வெகுஜன வாக்கெடுப்பில் பிரமாண்டமாக கிடைத்த "வேண்டாமென்ற" வாக்குகள், ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் மற்றும் 2008 பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர்  அதனால் ஐரோப்பாவெங்கிலும் பின்பற்றப்பட்டுள்ள சிக்கன நிகழ்ச்சிநிரலுக்கு பெருந்திரளான மக்களின் நிராகரிப்பாகும்.

அந்த வாக்குகள், ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்க அரசாங்கம் மற்றும் கிரேக்க ஆளும் வர்க்கத்திடமிருந்து வந்த அச்சுறுத்தல்கள் மற்றும் மிரட்டல்களுக்கு பணிய மறுத்த, அரசியல் தைரியத்தின் ஓர் அசாதாரணமான நடவடிக்கையாகும். ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான மிகப் பாரியளவிலான ஏதென்ஸ் ஆர்ப்பாட்டத்துடன் சேர்ந்து, ஞாயிறன்று அதிகரித்தளவில் வழங்கப்பட்ட "வேண்டாம்" எனும் வாக்குகள், சிக்கன நடவடிக்கை மற்றும் அரசியல் பிற்போக்குத்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய ஒரேயொரு சமூக சக்தி தொழிலாள வர்க்கம் தான் என்பதை மீண்டுமொருமுறை எடுத்துக்காட்டி உள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தினது சிக்கன கோரிக்கைகளின் முந்தைய தொகுப்புக்கு ஆதரவாக, "வேண்டும்" என்று வாக்களிக்க கோரும் பிரச்சாரத்திற்கு பேர்லின் தலைமை தாங்கியது. கிரீஸின் சிரிசா தலைமையிலான அரசாங்கத்தை வெளியேற்றுவதற்கு அழுத்தமளிக்க, அதுபோன்றவொரு வாக்குகளை பயன்படுத்துவதே அவர்களின் நோக்கமென்பதை ஜேர்மன் அரசாங்க அதிகாரிகள் தெளிவுபடுத்தி இருந்தனர்.

"வேண்டாம்" எனும் வாக்குகள் பெரும்பான்மையானால் கிரீஸின் நிதியியல் அமைப்புமுறைக்கு கடன் வழங்குவதை வெட்டுதன் மூலமாகவும் அந்நாட்டை திவாலாக்குவதன் மூலமாகவும் ஐரோப்பிய ஒன்றியம் விடையிறுக்கும் என்று வெகுஜன வாக்கெடுப்புக்கு முன்னதாக, பேர்லின் எச்சரித்திருந்தது. இதன் அடுத்தபடியாக யூரோ மண்டலத்திலிருந்து கிரீஸை வெளியேற்றுவது நடக்கும்.

கிரேக்க ஊடகங்களும், "வேண்டும்" என்று வாக்கிடுமாறு சளைக்காமல் பிரச்சாரம் செய்தன. பிரதம மந்திரி அலெக்சிஸ் சிப்ராஸை தாக்குவதற்கும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன கோரிக்கைகளை கிரேக்க மக்கள் ஆதரிக்குமாறு கோரியும் அந்த வெகுஜன வாக்கெடுப்புக்கு முன்னதாக ஓய்வூபெற்ற கிரேக்க இராணுவ அதிகாரிகள் பகிரங்கமாக தலையீடு செய்தனர். இது ஓர் அப்பட்டமான அரசியல் மிரட்டல் நடவடிக்கையாகும். கிரேக்க தளபதிகளின் ஏழாண்டுகால சர்வாதிகாரத்தின் பாதிப்புகளால் இன்னமும்  உழைச்சலுக்குள்ளாகியிருக்கும் ஒரு நாட்டில், அந்நடவடிக்கை இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு சதியின் ஒரு மறைமுகமான அச்சுறுத்தலைக் கொண்டிருந்தது.

கிரேக்க மக்களில் முழுமையாக 61.3 சதவீதத்தினர், அதிகளவில் தொழிலாள வர்க்கத்தினர் மற்றும் மக்களின் வறிய அடுக்கினர், "வேண்டாம்" என்று வாக்களித்து விடையிறுத்தனர். ஊடக கருத்துக்கணிப்புகளோ நெருக்கமான வாக்குகளை அனுமானித்திருந்த நிலையில் வந்த இந்த பிரமாண்டமான வாக்குகள், கிரீஸ், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் அரசியல் ஸ்தாபகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

உள்துறை அமைச்சகத்தின் புள்ளிவிபரங்களின்படி, கிரீஸின் மொத்தம் 13 நிர்வாக பகுதிகளிலும் "வேண்டாம்" எனும் வாக்குகளே தீர்க்கமாக வென்றன. ஐரோப்பிய ஒன்றிய கொள்கைகளது தாக்கத்தின் கீழ் ஏற்பட்ட பொருளாதார பொறிவினால் வேலைவாய்ப்பற்றிருக்கும் கிரேக்க இளைஞர்களில் மூவரில் இருவர் "வேண்டாம்" என்று வாக்களித்தனர்.

ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் தலைமையின் கீழ் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்கைகளுக்கு மக்கள் ஆதரவும் இல்லை, ஜனநாயக சட்டபூர்வதன்மையும் இல்லை என்ற உண்மையை இந்த "வேண்டாமென" வாக்குகள் அம்பலப்படுத்தின.

2009க்குப் பின்னரில் இருந்து, பிரதான சக்திகள் ஐரோப்பிய மக்களிடமிருந்து நூறு பில்லியன் கணக்கான யூரோக்களை தந்திரமாக அபகரித்ததன் மூலமாக இதில் கிரீஸில் இருந்து மட்டும் 65 பில்லியன் யூரோ, அல்லது கிரீஸின் 3.7 மில்லியன் குடும்பங்கள் ஒவ்வொன்றிடமிருந்தும் 17,000 யூரோவிற்கு அதிகமாக கைப்பற்றிஉலகளாவிய பொருளாதார நெருக்கடியின் தாக்கத்திலிருந்து ஐரோப்பிய முதலாளித்துவத்தை மீட்டெடுப்பதற்கு முயன்றுள்ளன.

ஐரோப்பா முழுவதிலுமான தொழிலாள வர்க்கத்தின் மீதான ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நடவடிக்கைக்கு, ஞாயிற்றுக்கிழமை வாக்குகள் எதிர்ப்பை வெளிப்படுத்திக் காட்டியதன் மூலமாக, கிரேக்க மக்கள் சிக்கன நிகழ்ச்சிநிரலில் ஏதேனும் சிறிய திருத்தங்களைக் கோரவில்லை, மாறாக அதை முற்றிலுமாக புறக்கணிக்க கோரியுள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நடவடிக்கையை முடிவுக்கு கொண்டு வரும் அதன் வாக்குறுதிகளின் அடிப்படையில் ஜனவரியில் சிரிசா தேர்ந்தெடுக்கப்பட்ட போது ஒருமுறையும், பின்னர் நேற்றைய வெகுஜனவாக்கெடுப்பின் போது மீண்டுமொரு முறையும் என கிரேக்க மக்களால் இரண்டுமுறை  மறுதலிக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய நிலைப்பாடுகள், கிரேக்க மக்களின் உணர்வுகளை மிதித்து நசுக்க மற்றும் ஒரு பொருளாதார சீரழிவு கொள்கையைத் திணிப்பதற்காக, கிரீஸின் ஆளும் உயரடுக்குடன் கூடி வேலை செய்துவரும் நிதி மூலதனத்தின் ஓர் இரக்கமற்ற கருவி என்பது அம்பலப்பட்டுள்ளது.

இந்த "வேண்டாமெனும்" வாக்குகள் சிரிசாவின் கோழைத்தனம் மற்றும் திவால்நிலைமையை மேற்கொண்டும் எடுத்துக்காட்டுகின்றன. “நீங்கள் எனக்கு அளித்திருக்கும் தீர்ப்பு ஐரோப்பாவுடன் முறித்துக் கொள்வதற்கானதல்ல" என்று கூறியதுடன், பிரதம மந்திரி சிப்ராஸ் ஞாயிறன்று இரவு தேசிய தொலைக்காட்சியில், கிரீஸ் சார்பில் பேரம்பேசுபவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்துடன் சிக்கன நடவடிக்கை குறித்து பேசுவதற்குத் திரும்புவார்கள் என்று வலியுறுத்தும் அளவிற்குச் சென்றார்.

ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நடவடிக்கைக்கு மக்களின் மேலோங்கிய எதிர்ப்பால் சிப்ராஸை விட வேறுயாரும் அந்தளவிற்கு பீதியடையவில்லை, முதலில் ஏதென்சில் வெள்ளியன்று நடந்த "வேண்டாம்" எனும் ஆர்ப்பாட்டத்திலும் சரி, பின்னர் ஞாயிறன்று வாக்குகளிலும் சரி இது எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. கடந்த ஜனவரியில் அதிகாரத்திற்கு வந்த பின்னர், அவரும் அவரது அரசாங்கமும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிரான சமூக எதிர்ப்பைக் கட்டுப்படுத்தவும் மற்றும் சிதறடிக்கவும் முயன்றுள்ளனர் மற்றும் தொழிலாள வர்க்கத்தை சிக்கன நடவடிக்கையுடன் மற்றும் முதலாளித்துவத்துடன் பிணைக்க முயன்றுள்ளனர்.

அந்த வெகுஜன வாக்கெடுப்பு பிரச்சாரத்தின் போதே சிரிசா தலைமையிலான அரசாங்கத்தின் நடவடிக்கை கோழைத்தனமாகவும் மற்றும் இரட்டை-முகத்துடனும் இருந்தது. சிப்ராஸ் மற்றும் நிதி மந்திரி யானிஸ் வாரௌஃபாகிஸ் உட்பட உயர்மட்ட அரசாங்க அதிகாரிகள், “வேண்டும்" என்று தரப்பினர் வெல்லுமானால் அதற்கு பிரதிபலிப்பாக அவர்கள் இராஜினாமா செய்யவிருப்பதாகவும் மற்றும் அவர்களை அடுத்து வருபவர்கள் ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நடவடிக்கைகளை திணிக்க அவர்களுக்கு உதவ இருப்பதாகவும் சுட்டிகாட்டியிருந்தனர். “வேண்டாம்" என்ற தரப்பு வெல்லுமானால் அவர்களின் பிரதிபலிப்பாக கிரேக்கத்தினால் பரிந்துரைக்கப்படும் மற்றும் நடைமுறையில் புருசெல்ஸால் கோரப்பட்ட எல்லா சமூக வெட்டுக்களுக்கும் ஒப்புக்கொண்ட ஒரு உடன்படிக்கைக்கு ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு பேச்சுவார்த்தைக்கு முயல இருப்பதாக அவர் கடந்த புதனன்று அறிவித்தார்.

அதன் சொந்த அரசாங்கத்திற்குள்ளேயே நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை நடத்தும் ஒரு மறைமுக முயற்சியாக இருந்த சிரிசாவின் வெகுஜன வாக்கெடுப்பு தந்திரம், அதன் கண் முன்னாலேயே வெடித்து சிதறியது. மேர்க்கெலை போலவே சிப்ராஸூம் மற்றும் அவரது குழுவும் "வேண்டாமெனும்" வாக்குகளால் அதிர்ந்து போயினர். அவர்களது பேரம்பேசுவோர்கள் எவ்வளவு துரிதமாக முடியுமோ அவ்வளவு வேகமாக புருசெல்ஸிற்கு சென்றனர். கூடுதல் சிக்கன நடவடிக்கைகளுக்கு பிரதியீடாக புதிய நிதியியல் உதவித்தொகைக்கான ஓர் உடன்படிக்கை, 24 இல் இருந்து 48 மணி நேரத்திற்குள் எட்டப்படுமென வாரௌஃபாகிஸ் மற்றும் சிரிசாவின் செய்திதொடர்பாளர் கப்பிரியேல் சாக்கலாரிடிஸ் தனது எதிர்பார்ப்பை தெரிவித்தனர்.

ஆனால் அந்த வெகுஜன வாக்கெடுப்புக்கு பின்னர், கிரேக்க தொழிலாள வர்க்கம் முகங்கொடுக்கும் கேள்வி இதுதான்: அடுத்து என்ன? என்பதாகும். சிக்கன நடவடிக்கைக்கு எதிரான போராட்டத்தை எவ்வாறு முன்னோக்கி எடுத்துச் செல்வது? “வேண்டாம்" எனும் வாக்குகளுக்கு விடையிறுப்பாக சிரிசாவும் ஐரோப்பிய ஒன்றியமும் அவர்களது கொள்கைகளை மாற்றிக் கொள்வார்கள் என்ற எந்தவொரு பிரமைகளையும் கொண்டிருக்ககூடாது.

இந்த வெகுஜன வாக்கெடுப்பில் அது அனுபவித்துள்ள இந்த பின்னடைவுக்கு எவ்வாறு விடையிறுப்பது என்பதன் மீது ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் என்னவெல்லாம் பிளவுகள் எழுந்தாலும் கிரீஸை நசுக்குமாறும் அதை யூரோ மண்டலத்திலிருந்து வெளியேற்றுமாறும் சில கன்னைகள் அழைப்புவிடுப்பதுடன், ஏனையவை சிரிசாவுடன் ஓர் உடன்படிக்கையை பேரம்பேச வேலை செய்யுமாறு அழைக்கின்ற நிலையில்அவர்கள் தொழிலாளர்களுக்கு எதிரான இரக்கமற்ற சிக்கன நடவடிக்கையெனும் வர்க்க கொள்கையை மாற்றிக் கொள்ளப் போவதில்லை. கிரீஸின் நிதி பரிவர்த்தனை முறைக்குரிய நாணயமாக இனி யூரோ இருக்காது, கிரீஸ் பிரத்யேகமாக அதற்கு "இணையான செலாவணியை" அறிமுகப்படுத்த வேண்டுமென இவ்வாரயிறுதியில் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற தலைவர் மார்டின் சூல்ஸ் சுட்டிக் காட்டினார்.

இந்த அனுபவத்தின் அரசியல் படிப்பினைகளைப் பெறுவது மிக மிக முக்கியமாகும். சிக்கன நடவடிக்கைகளுக்கு கிரீஸிலும் சரி சர்வதேச அளவிலும் சரி தொழிலாள வர்க்கத்திற்குள் மிகப் பெரியளவில் எதிர்ப்பு உள்ளது. ஆனால் தொழிலாள வர்க்கம் சிரிசாவிலிருந்து உடைத்துக் கொண்டு, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஏகாதிபத்திய சக்திகள் மற்றும் கிரீஸிற்குள்ளேயே உள்ள அவற்றின் ஆதரவு அடித்தளத்திற்கு கிரீஸ் முதலாளித்துவ வர்க்கத்திற்கு எதிரான ஒரு புரட்சிகர போராட்டத்தை தொடுத்தால் மட்டுமே, இந்த எதிர்ப்பை ஒன்றுதிரட்ட முடியும்.

கடந்த வெள்ளியன்று ஏதென்ஸில் நூறு ஆயிரக் கணக்கானவர்களின் ஒரு கூட்டத்திற்கு முன் அதிர்ச்சியடைந்து காணப்பட்ட சிப்ராஸ் கூறுகையில், பாரிய ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் ஒரு "போராட்டம்" அல்ல என்றார். “ஞாயிறன்று முடிவு என்னவாக இருந்தாலும், திங்களன்று கிரேக்க மக்களை எதுவும் பிளவுபடுத்தி விடாது" என்றவர் அறிவித்தார்.

இதுவொரு பச்சைப்பொய்யாகும். இந்த "வேண்டாம்" எனும் வாக்குகளே தொழிலாள வர்க்கத்திற்கும் கிரீஸ், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் ஆளும் உயரடுக்களுக்கும் இடையே உள்ள சமூக பிளவைத் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. இந்த வெகுஜன வாக்கெடுப்பு முடிவு ஐரோப்பாவிற்குள்ளும் மற்றும் அனைத்திற்கும் மேலாக கிரீஸிற்குள்ளேயே கூட பெரும் வர்க்க பதட்டங்களை முன்னுக்குக் கொண்டு வந்துள்ளது.

சிரிசா, மக்களின் விருப்பதை நிராகரித்து ஐரோப்பிய ஒன்றியத்துடன் அதன் பேச்சுவார்த்தைகளை தொடர முனைகின்ற போது, உள்நாட்டு எதிர்ப்பைக் கையாள முன்பினும் அதிகளவில் நேரடியாக பாதுகாப்பு சக்திகள் மீது தன்னைத்தானே நிறுத்திக் கொள்ளும். சிரிசாவின் உள்நாட்டு மந்திரி நிக்கோஸ் வொவ்ற்சிஸ், சமூக கிளர்ச்சியை நசுக்க கலகம் ஒடுக்கும் பொலிஸ் மற்றும் இராணுவ பிரிவுகளை பாரியளவில் நிலைநிறுத்துவதற்கு, நெமிசிஸ் (Nemesis - கிரேக்க புனைகதைகளில் பழிவாங்குதலுக்கு பொறுப்பான கடவுள்) நடவடிக்கை என்ற குறிச்சொல்லில் பெயரிடப்பட்ட திட்டத்தை மேற்பார்வையிட்டு வருகிறார்.

கிரீஸில் சிக்கன நடவடிக்கைக்கு எதிரான போராட்டம் என்பது, ஒட்டுமொத்த சமூக அமைப்புமுறைக்கும் எதிரான ஒரு போராட்டம் என்பதற்கு அதுபோன்ற தயாரிப்புகளே மிகத் தெளிவான எச்சரிக்கையாகும். ஏகாதிபத்திய சக்திகள் மற்றும் கிரீஸிற்குள் இருக்கும் சர்வதேச நிதி மூலதனத்தின் உள்நாட்டு முகவர்களான கிரேக்க முதலாளித்துவம் மற்றும் அதன் அரசியல் பிரதிநிதிகள் அனைவருக்கும் எதிரான ஒரு புரட்சிகர, சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை ஒன்றுதிரட்டும் ஒரு தீர்க்கமான போராட்டம் அதற்கு அவசியமாகிறது.