World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை Tamil nationalists support US-backed opposition in Sri Lankan election தமிழ் தேசியவாதிகள் இலங்கை தேர்தலில் அமெரிக்க-ஆதரவு எதிர்க் கட்சி வேட்பாளரை ஆதரிக்கின்றனர்
By K.Nesan இலங்கையில் பிரதான தமிழ் தேசியவாத கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஜனாதிபதி தேர்தலில் அமெரிக்க-ஆதரவு வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குகிறது. தமிழ் கூட்டமைப்பு, அதன் உறுப்பினர்கள், தமிழ் புத்திஜீவிகள் மற்றும் அறிஞர்களுடன் கலந்துரையாட வேண்டிய தேவையை சுட்டிக் காட்டி, தேர்தலில் தனது நிலைப்பாட்டை அறிவிக்க பல வாரங்களாக தாமதித்தது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் இந்தியாவில் இருந்து வருகை தந்த பின்னரே டிசம்பர் 30 அன்று நடந்த செய்தியாளர் மாநாட்டில் சிறிசேனவை ஆதரிப்பதாக அறிவித்தது. சம்பந்தன் புது டெல்லியில் தங்கியிருந்தார்; அவரது பயணம் மற்றும் அவர் யாருடன் ஆலோசித்தார் என்ற விடயங்கள் ஊடகங்களுக்கு வெளிப்படுத்தப்படவில்லை. சிறிசேனவை ஆதரிக்கும் தமிழ் கூட்டமைப்பின் ஊடக அறிக்கை, ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் கீழ் முன்கண்டிராதளவு தாக்குதல்களை கண்ட "ஜனநாயகம், நல்லாட்சி மற்றும் சட்ட ஆட்சியை" மீள ஸ்தாபிக்கும் நோக்கம் கொண்டே ஒரு களங்கப்படாத வேட்பாளராக அவரை விமர்சனமற்ற வகையில் அங்கீகரித்தது. "எதிர்க் கட்சிகளின் பொதுவேட்பாளரின் வெற்றியின் பின்னர் கலந்தாலோசனை மற்றும் கருத்தொருமிப்பை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய அரசியல் கலாச்சாரத்தை" அந்த அறிக்கை புகழ்ந்தது. டெயிலி மிரர் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், “மைத்திரிபால சிறிசேன நாட்டை ஒரு தேசமாக ஒன்றிணைப்பார் என நாம் நம்புகிறோம். கடந்த கால சான்றுகளை திரும்பிப்பார்க்கையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படுவார் என நாம் நம்புவதற்கு எந்த காரணமும் கிடையாது", என்று சம்பந்தன் மீண்டும் வலியுறுத்தினார். உண்மையில், இராஜபக்ஷவின் சான்றுகளை விட சிறிசேனவின் சான்றுகள் அதிகம் வித்தியாசமானவை அல்ல. சுகாதார அமைச்சராக இருந்த, இராஜபக்ஷ இல்லாத நேரங்களில் பாதுகாப்பு அமைச்சராக செயல்பட்ட சிறிசேன, எதிர்க்கட்சி வேட்பாளராவதற்காக அரசாங்கத்தை விட்டு வெளியேறினார். உள்நாட்டு யுத்தத்தின் போது செய்யப்பட்ட குற்றங்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்களுக்கு அவரும் பொறுப்பாளியாவார். 1967ல் இருந்து ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (ஸ்ரீலசுக) உறுப்பினராக இருந்து வந்த சிறிசேன, கடந்த 10 ஆண்டுகளாக அதன் பொதுச் செயலாளராகவும் இருந்துள்ளார். சிங்கள இனவாத கருத்தியலை முன்னிலைப்படுத்தி 1951ல் ஸ்தாபிக்கப்பட்ட ஸ்ரீலசுக, 1956ல் பாராளுமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்றதோடு 1958ல் தமிழர்களுக்கு எதிராக முதலாவதாக நடந்த பெரும் இனவாத வன்முறைக்கு வழிவகுத்த, சிறுபான்மையினருக்கு எதிரான பாரபட்சங்களை அரசியலமைப்பு மயப்படுத்திய, சிங்களம் மட்டும் சட்டத்தை நடைமுறைப்படுத்தியது. இராஜபக்ஷ ஜனநாயகத்தை பூண்டோடு அழித்து, தனது குடும்பத்தை மேம்படுத்தி மற்றும் அரசியல் விசுவாசிகளை ஊக்குவித்ததோடு ஜனாதிபதி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி சர்வாதிகாரத்துக்கு வழிவகுத்துள்ளார் என சிறிசேன குற்றஞ்சாட்டினார். எவ்வாறெனினும், 2009ல் பெரும் மனிதப் படுகொலைகளுடனும் புலிகளின் தோல்வியுடனும் முடிவுக்கு வந்த தமிழர்களுக்கு எதிரான இனவாத யுத்தத்தை 2006ல் இராஜபக்ஷ மீண்டும் தொடங்கியதைப் பற்றி அவர் மௌனம் சாதிக்கின்றார். அமெரிக்கா, இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் இராஜதந்திர மற்றும் இராணுவ உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட ஈவிரக்கமற்ற இராணுவத் தாக்குதல், ஆயிரக்கணக்கான பொதுமக்களின் கொடூரமான படுகொலையை விளைவாக்கியதோடு 280,000க்கும் அதிகமான மக்கள் இராணுவம் நடத்திய முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். தனது நிர்வாகம் வடக்கில் இராணுவ ஆக்கிரமிப்பை தளர்த்தாது, ஒரு சர்வதேச யுத்தக் குற்ற விசாரணையை அங்கீகரிக்காது, அல்லது வடக்கு மற்றும் கிழக்குக்கு அதிகார பரவலாக்கல் சம்பந்தமாக பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்காது என்பதை பல அறிக்கைகளில் சிறிசேன வலியுறுத்தியுள்ளார். ஜனவரி 5 நடந்த செய்தியாளர் கூட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் ஆகிய சிறுபான்மை கட்சிகளின் ஆதரவை சிறிசேன அறிவித்தமை, அவரது 100-நாள் தேர்தல் விஞ்ஞாபனத்துடன் ஏற்படுத்திக்கொண்ட உடன்பாட்டை அடிப்படையாகக் கொண்டதாகும். அதில் அவர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை அகற்றுவதாகவும் ஏனைய அரசியலமைப்பு மாற்றங்களைச் செய்வதாகவும் உறுதியளித்துள்ளார். அவர் சிறுபான்மை கட்சிகளுடன் அவர்களது பிரச்சினைகள் பற்றிய எந்த ஒப்பந்தங்களிலும் கையெழுத்திடவில்லை. "எனக்கு வடக்கில் இருந்து இராணுவத்தை விலகிக்கொள்ளும் எண்ணம் இல்லை. ஜனாதிபதி என்ற வகையில், தேசிய பாதுகாப்பு எனது பிரதான பொறுப்பாகும்" என்று அவர் கூறினார். தமிழ் மற்றும் முஸ்லீம் சிறுபான்மையினரை பற்றிய சிறிசேனவின் அணுகுமுறை, இராஜபக்ஷவின் அணுகுமுறையை விட வேறுபட்டதல்ல. அவருடைய கருத்துக்களில் எதாவது கடும்போக்கு அணுகுமுறை பிரதிநிதித்துவம் செய்யப்படுகிறதென்றால், அவர் தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில், சிறுபான்மையினர் சம்பந்தமாகவும் தொழிலாள வர்க்கம் சம்பந்தமாகவும் இராஜபக்ஷவை விட இன்னும் ஈவிரக்கமற்றவராக இருப்பார் என்பதாகும். இருப்பினும், சிறிசேனவுக்கான தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிபந்தனையற்ற ஆதரவானது, அதுவும் ஆட்சி மாற்றத்திற்கான வாஷிங்டனின் சூழ்ச்சித் திட்டத்தின் பாகமாக இருப்பதை காட்டுகிறது. "மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்குமாறு வெளி சக்திகள் கூட்டமைப்புக்கு உத்திரவிட்டுள்ளன. தமிழ் தேசிய கூட்டமைப்பின் இரா.சம்பந்தன் மற்றும் முன்னாள் இலங்கை ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் ஆட்சி மாற்றத்திற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்களிப்பு சம்பந்தமாக ஒரு இரகசிய ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளனர்," என தமிழ்நெட் கருத்து தெரிவித்துள்ளது. 2010 ஜனாதிபதித் தேர்தலில், உள்நாட்டு யுத்தத்தின் போது இராணுவத்துக்கு தலைமை வகித்த ஜெனரல் சரத் பொன்சேகாவை ஜனாதிபதி வேட்பாளராக ஆதரித்த இதேபோன்ற ஒரு எதிர்க் கட்சிகளின் கூட்டணியை வாஷிங்டன் அமைத்தது. அவரை வேட்பாளராக நிறுத்தியதும், ராஜபக்ஷவை தோற்கடிப்பதற்கான வாஷிங்டனின் முயற்சிதான் என்று சமீபத்திய விக்கிலீக்ஸ் ஆவணங்கள் வெளிப்படுத்துகின்றன. அமெரிக்க தூதர் பட்ரீசியா ஏ. புடெனீஸ் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் (SLMC) பஷீர் ஷேகு தாவூத்தும், பொன்சேகாவை ஆதரிப்பதற்காக வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சி (யூஎன்பி), ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஏனைய எதிர்க் கட்சிகளின் கூட்டணியை வடிவமைத்திருந்தனர். தமிழ் கூட்டமைப்பு ஆரம்பத்தில் பொன்சேகாவை ஏற்றுக்கொள்ள தயக்கம் காட்டிய போதிலும் பின்னர் கூட்டணியில் சேர்ந்துகொண்டது. "இரண்டு தீமைகளில் பொன்சேகாவை விட இராஜபக்ஷவை குறைந்த தீமையாக எண்ணி ஆதரவளிக்கப் போவதாக" சம்பந்தன் புடெனிஸ்ஸிடம் கூறினார். சம்பந்தன் பொன்சேகாவை ஆதரிப்பதற்கு புடெனிஸ் எப்படி செயற்பட்டார் என்பது ஆவணத்தில் இல்லை. போர் முடிவுக்கு வந்த பின்னர், தமிழ் தேசிய கூட்டமைப்பானது, சீனாவிற்கு எதிரான ஒபாமா நிர்வாகத்தின் இராணுவ கட்டமைப்பு மற்றும் ராஜதந்திர தாக்குதல் கொள்கையான "ஆசியாவில் முன்னிலைக்கு" ஏற்ப செயற்பட்டுள்ளது. உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக் கட்டங்களில் அமெரிக்க ஆதரவுடன் இராஜபக்ஷ அரசாங்கம் இழைத்த மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்களை வஞ்சத்தனமாக சுரண்டிக்கொண்ட வாஷிங்டன், ஐநா மனித உரிமைகள் பேரவையில் (UNHRC) ஒரு தீர்மானத்துக்கு அணுசரனையளித்தது. 2014 மார்சில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதோடு மனித உரிமைகள் உயர் ஸ்தானிகரின் அலுவலகம் 2014 ஜூனில் ஆரம்ப விசாரணைகளைத் தொடங்கியது. இந்த விசாரணையின் நோக்கம், வாஷிங்டனே சம்பந்தப்பட்டுள்ள போர் குற்றங்களுக்குத் தண்டனை வழங்குவதல்ல, மாறாக சீனாவுடனான உறவுகளை முறித்துக் கொண்டு, அமெரிக்காவின் வழியில் பயணிக்குமாறு இலங்கை அரசாங்கத்தை நெருக்குவதே ஆகும். தமிழ் தேசிய கூட்டமைப்பு, அமெரிக்க அனுசரணையிலான தீர்மானத்துக்கு ஆதரவளித்தது. நவம்பர் 2011ல், சம்பந்தன் தலைமையிலான ஒரு குழு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அழைப்பின் பேரில் அமெரிக்காவுக்கு 10 நாள் விஜயம் மேற்கொண்டிருந்தது. இலங்கை வரும் அமெரிக்க பிரதிநிதிகள் தமிழ் கூட்டமைப்பின் தலைவர்களை வழமையாக சந்தித்தனர். வெளிப்படையாக, நிபந்தனையின்றி சிறிசேனவுக்கு ஆதரவு வழங்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு எடுத்த முடிவானது, இராஜபக்ஷவின் கீழ் சாத்தியமற்றதாக இருந்த ஒரு அரசியல் தீர்வைப் பெற அமெரிக்க ஏகாதிபத்தியத்தில் தங்கியிருக்கும் ஒரு முயற்சியாகும். விலைபோகும் தமிழ் முதலாளித்துவம் தமிழ் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளை பரந்தளவில் சுரண்டுவதற்கு வழிவகுக்கும் ஏகாதிபத்தியத்துடனான ஒரு அரசியல் தீர்வுக்கே தமிழ் கூட்டமைப்பு பாடுபடுகிறது. அது உழைக்கும் மக்களின் இழப்பில் தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் அதிகாரப் பகிர்வு மூலம் கிடைக்கும், சிங்களம் மற்றும் தமிழ் முதலாளித்துவ தட்டுக்களுக்கு இடையிலான ஒரு இனவாத அடிப்படையிலான அதிகாரப் பரவலாக்கல் ஒழுங்கை இலக்காகக் கொண்டுள்ளது. சோசலிச சமத்துவக் கட்சி (சோசக) தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்கும் வேட்பாளர் சிறிசேன மற்றும் இராஜபக்ஷவையும் நிராகரிக்குமாறும், எமது வேட்பாளர் பாணி விஜேசிரிவர்தனவுக்கு வாக்களிக்குமாறும் தமிழ் பேசும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கின்றது. |
|