World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா The Factory: Documentary brings Indian auto workers’ struggle to an international audience திஃபேக்டரி: ஆவணப்படம் இந்திய வாகன உற்பத்தித் துறை தொழிலாளர்களின் போராட்டத்தை சர்வதேச பார்வையாளர்களுக்கு எடுத்துச்செல்கிறதுBy
Sampath Perera திரைப்படைப்பாளி ராகுல் ராய் உருவாக்கியிருக்கும் தி ஃபேக்டரி (The Factory) என்ற 132 நிமிடங்கள் ஓடும் ஒரு ஆவணப்படம், இந்தியாவின் துரிதமாக விரிவடைந்து வருகின்றதும் உலகளாவ ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதுமான வாகன உற்பத்தித் துறையில் தொழிலாளர்கள் முகம் கொடுக்கும் கொடூரமான நிலைமைகளின் மீதும் அத்தொழிலாளர்களது பெருகிச் செல்வதும் மேலும் மேலும் அதிகரித்துச் செல்வதுமான வெடிப்புமிக்க எதிர்ப்பின் மீதும் வரவேற்கத்தக்க வெளிச்சத்தைப் பாய்ச்சுகிறது. வட இந்தியாவில் ஹரியானாவில், புது டெல்லியில் இருந்து 30 மைல் தூரத்தில் அமைந்திருக்கும் மானேசரில் ஜப்பானிய வாகன உற்பத்தி நிறுவனமான சுசுகியின் ஒரு துணைநிறுவனமான மாருதி சுசுகி இந்தியாவின் (MSI) கார் தயாரிப்பு தொழிற்சாலை தான் விவாதிக்கப்படும் “ஃபேக்டரி” ஆகும். இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனத்திற்கும் அந்நிறுவனத்தின் எடுபிடி தொழிற்சங்கம் ஒன்றிற்கும் எதிராக மானேசரின் MSI தொழிலாளர்கள் முன்நிறுத்திய ஒரு நெடிய போராட்டத்தை ராய் ஆவணப்படுத்தியுள்ளார். இந்தப் போராட்டமானது போலிஸ், நீதிமன்றங்கள் மற்றும் ஹரியானாவின் காங்கிரஸ் கட்சி தலைமையிலான மாநில அரசாங்கம் ஆகியவற்றுடனான ஒரு முட்டுமோதலுக்குள் அவர்களைக் கொண்டுசென்றது. புதிய, சுயாதீன தொழிற்சங்கத்தின் தலைவர்களையும் மற்றும் இன்னும் பல போர்க்குணமிக்க தொழிலாளிகளையும், ஜோடித்த வழக்குகளுக்குள் சிக்கவைப்பதில் நிறுவனமும், அரசும் மற்றும் அரசியல் ஸ்தாபகமும் ஒன்றுக்கொன்று ஒத்துழைத்து வேலைசெய்ததை அம்பலப்படுத்துவதைச் சுற்றி இந்த படத்தின் மையம் சுழல்கிறது. 2012 கோடை முதலாய், 148 மானேசர் தொழிலாளர்கள் கொலை, தீவைப்பு மற்றும் பிற பெரும் குற்றங்களை இழைத்ததான இட்டுக்கட்டப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு வரையிலும், அவர்கள் அனைவரும் இந்தியாவின் படுபயங்கரமான தண்டனை அமைப்புமுறையின் இரும்புப்பிடிகளுக்குள் சிக்குண்டிருந்தனர். பல வருட சட்ட யுத்தங்களுக்குப் பின்னர், 112 தொழிலாளர்கள் பிணை பெறுவதில் சமீபத்தில் வெற்றி கண்டுள்ளனர். மாருதி சுசுகி தொழிலாளர் சங்கத்தின் ஒட்டுமொத்த நிர்வாகிகள் உள்ளிட்ட மற்ற 36 தொழிலாளிகளும் தொடர்ந்து சிறையிலே பரிதவித்து வருகின்றனர். இந்தத் தொழிலாளிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்காய் ராய் குரல் கொடுக்கிறார். அதன்போது அவர், இந்திய தொழிலாள வர்க்கத்தின் ஒரு முக்கியமான போராட்டத்தின் உணர்ச்சிகரமான சித்திரத்தையும், இந்திய முதலாளித்துவத்தினால் பெரிதும் தம்பட்டம் அடிக்கப்படுகின்ற “வளர்ச்சி”யை உந்தித் தள்ளுகின்ற மிருகத்தனமான சுரண்டல் மற்றும் எதேச்சாதிகாரக் கட்டமைப்புகள் மீதான ஒரு சுட்டெரிக்கும் குற்றப்பத்திரிகையையும் வழங்குகிறார். தி ஃபேக்டரி ஆவணப்படத்தில் குறைபாடுகள் இல்லாமலில்லை. கூர்கான்-மானேசர் தொழிலகப் பகுதியில் கணிசமான செல்வாக்கு செலுத்தும் ஸ்ராலினிச தலைமை கொண்ட தொழிலாளர் கூட்டமைப்புகள், அனைத்திந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (AITUC) மற்றும் இந்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு (CITU) ஆகியற்றின் பாத்திரம் மற்றும் அவற்றை இணைத்துள்ள முறையே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) மற்றும் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPM) ஆகிய நாடாளுமன்றக் கட்சிகளின் பாத்திரம் குறித்து மிகக் குறைவாகவே பேசப்படுகிறது. இந்த விடுபடலின் முக்கியமான தாக்கங்கள் இந்தத் திறனாய்வின் இறுதியில் பரிசீலனைக்குட்படுத்தப்படுகிறது. இருந்தபோதிலும், தி ஃபேக்டரி தவறவிடக் கூடாத ஒரு முக்கியமானதொரு படமாகும். ஜூலை 18, 2013 க்கும் ஜூலை 18, 2014 க்கும் இடையிலான காலத்தின் மீது - அதாவது 148 தொழிலாளர்கள் மீது வழக்கு ஜோடிக்கப்படுவதற்கும் அத்துடன் 2500 தொழிலாளர்கள், இவர்களில் அநேகம் பேர் ஒப்பந்தத் தொழிலாளர்கள், வெளியேற்றப்படுவதற்கும் ஒரு சாக்காக சேவை செய்த வேலையிடக் கைகலப்பு நடந்த தினத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டுதினங்களுக்கு இடையிலான காலத்தின் மீது - இப்படம் கவனம் செலுத்துகின்றது. கடந்த காலத்தில் மாருதி சுசுகி தொழிலாளர்கள் நடத்தியிருந்த போராட்டங்களின், அத்துடன் இந்த “ஃபேக்டரி”யின் வரலாற்றின் படக்காட்சிகளையும் கூட ராய் இதில் சேர்த்துள்ளார். 2010 இன் சமயத்திலேயே, நிறுவனத்தின் தொழிற்சங்கத்திற்கு எதிராக ஒரு புதிய அமைப்பை உருவாக்க தொழிலாளர்கள் முனைந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை, தொழிற்சங்கங்களை பதிவு செய்யும் ஒரு அரச அமைப்பு MSI நிர்வாகத்திற்கு துப்புக் கொடுக்கிறது. மாருதி சுசுகி தொழிலாளிகள் சங்கம் என்ற இந்தப் புதிய அமைப்பு வரிசையான வெடிப்புமிக்க வேலைநிறுத்தங்களுக்குத் தலைமைகொடுக்கிறது, ஆயினும் 2011 நவம்பரில் அதன் தலைவர்கள் நிர்வாகத்தினால் விலைக்கு வாங்கப்பட்டு விட்ட நிலையில் அது உருக்குலைகிறது. தொழிலாளர்கள் விடாமுயற்சியுடன் போராடி 2012 ஆரம்பத்தில் மூன்றாவதாய் MSWU என்ற ஒரு அமைப்பை உருவாக்குகிறார்கள். தொழிலாளர்களின் விடாப்பிடியான எதிர்ப்பின் இந்த சூழலில் தான் நிறுவன நிர்வாகத்தின் குண்டர்கள் ஜூலை 18, 2012 அன்று மானேசர் ஆலையின் வேலையிடத்தில் தொழிலாளர்களுடன் ஒரு கைகலப்பை தூண்டினார்கள். தொழிற்சாலை தீப்பற்றுவதிலும் ஒரு மேலாளர் - தங்கள் மீது அனுதாபம் கொண்ட ஒரே மேலாளராக தொழிலாளர்கள் கருதிய ஒரு மனிதர் (MSMU அங்கீகாரத்திற்காக அரசின் தொழிலாளர் நலத் துறையில் விண்ணப்பிக்க தனது மேலதிகாரிகளின் ஆட்சேபனைகளையும் மீறி அவர் தொழிலாளர்களுக்கு உதவியிருந்தார்) - மரணமடைவதிலும் இது முடிந்தது. நிறுவனத்தின் ஒட்டச்சுரண்டல் முறைக்கான எதிர்ப்பை உடைத்தெறிவதற்கு நிர்வாகமும், போலிசும் மற்றும் மாநில அரசாங்கமும் இந்த நிகழ்வுகளை வாகாகப் பற்றிக் கொண்டன. தொழிற்சாலை தீப்பற்றி எரிவதான மற்றும் சேதத்திற்குள்ளாகி இருப்பதான படங்களை பின்புலத்தில் கொண்டு வெளியான நிறுவன-ஆதரவு செய்திச் சுருள்கள், ஹரியானாவின் காங்கிரஸ் கட்சி ஆட்சியின் மாநில அரசாங்கத்தின் ஒரு அமைச்சர், இந்த அமளியில் சந்தப்பட்ட ஒவ்வொருவரையும் “தீவைப்பு, தாக்குதல் அத்துடன் கொலைமுயற்சி” குற்றச்சாட்டில் நிறுத்த உறுதியெடுப்பதைக் காட்டுகின்றன. MSWU இன் ஒட்டுமொத்தத் தலைமையும் அத்துடன் போர்க்குணமிக்க உறுப்பினர்களில் பலரும் சிறையிலடைக்கப்பட்டு விட்ட நிலையில், தங்களது தோழர்களை விடுதலை செய்வதற்கும் MSI வெளியேற்றியிருந்த 2500 தொழிலாளர்களை மீண்டும் வேலையிலமர்த்துவதற்குமான போராட்டத்திற்கு தலைமை கொடுக்க MSWU இன் ஒரு இடைக்கால கமிட்டியை தேர்வுசெய்ய மானேசர் தொழிலாளர்கள் ஒன்றுகூடுகிறார்கள். போராட்டத்தின் இந்தக் கட்டத்தில் தான் தி ஃபேக்டரி படம் விரிந்து செல்கிறது. பழிவாங்கப்பட்ட MSI தொழிலாளி ஒருவர், இடைக்கால கமிட்டியில் இவர் ஒரு உறுப்பினர், எதிர்ப்புப் பேரணி ஒன்றுக்குத் தலைமை கொடுக்கையில், சற்று நின்று, கூடியிருந்தவர்களிடம் விண்ணப்பங்கள் செய்வதுடன் படம் தொடங்குகிறது. “எங்கள் தோழர்களில் 150 பேர் 2012 ஜூலை 18 முதல் சிறையிலிருந்து வருகின்றனர்”, அத்துடன் “2500 தொழிலாளர்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள்” என்கிறார் அவர். தங்களது தோழர்களை பிணையில் விடுதலை செய்ய அரசாங்கத்திடமும் ஹரியானா முதலமைச்சரிடமும் அவர்கள் வைத்த விண்ணப்பங்கள் அரும்பிலேயே நிராகரிக்கப்படுகின்றன. எந்தக் குற்றமும் செய்திராத தொழிலாளர்களை பல ஆண்டுகளுக்கும் சிறையிலடைப்பதில் அரசாங்கத்துடனும் நிறுவனத்துடனும் சேர்ந்து நீதித்துறையும் எப்படி வேலை செய்தது என்பதை இந்த ஆவணப்படம் அம்பலப்படுத்துகிறது. “நாங்கள் விசாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கவில்லை, தண்டிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம்” என்று பிரதிவாதி வழக்கறிஞர் ஒருவர் அறிவிக்கிறார். “ஒரு பன்னாட்டு நிறுவனம் இதில் சம்பந்தப்பட்டுள்ளது. அரசு முழுக்க முழுக்க பன்னாட்டு நிறுவனத்திற்கு ஆதரவாய் செயல்படுகிறது.” வழக்கு தொடுத்த தரப்பின் நான்கு “கண்ணால் கண்ட சாட்சியங்களுமே” குற்றத்தைச் செய்தவர்களை “அகர வரிசையில்” கண்டிருந்தனர் என்ற உண்மையை பிரதிவாதிகளது ஒரு வழக்கறிஞர் எடுத்துக்காட்டுகையில் இந்த ஜோடிப்பின் குரூரமான தன்மை அம்பலப்படுத்தப்படுகிறது! அவர்களில் முதலாமானவர் தொழிற்சாலையின் ஒரு பக்கத்தில் தீவைப்பில் ஈடுபட்ட A முதல் G வரையான முதலெழுத்துக்களைக் கொண்டு பெயரமைந்தவர்களைக் கண்டதாகக் கூறுகிறார், இரண்டாமானவர் H முதல் P வரையான முதலெழுத்துக்களைக் கொண்டு பெயரமைந்தவர்கள் குற்றம் புரிந்ததைக் கண்டதாய்க் கூறுகிறார், இப்படிப் போகிறது. தொழிலாளர்களை அச்சுறுத்த காங்கிரஸ் கட்சியின் மாநில அரசாங்கம் போலிசை எவ்வாறு அணிதிரட்டியிருந்தது என்பது காட்சிபூர்வமாக பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. ஒரு தொழிலாளர் பேரணியை எதிர்கொள்ளத் தயாராகின்ற ஒரு போலிஸ் அதிகாரி, மானேசரில் தொழிற்சாலைகளைப் பாதுகாக்க ஒரு “முழு பேட்டாலியன்” நடவடிக்கையில் இருக்கிறது என்றும் போலிஸ் “தொழிலக அமைதிக்கு முன்னுரிமை” அளிக்கிறது என்றும் பெருமைபொங்கக் கூறுகிறார். அங்கிருந்து கேமரா தொழிலாளர்களைக் கலைய வைக்க முயற்சிக்கின்ற ஒரு நீதிபதியை நோக்கி நகர்கிறது. “பேரணி நடத்த உங்களுக்கு அனுமதி இல்லை” என்கிறார் அவர். எதிர்ப்பைக் காட்டும் உரிமை தங்களுக்கு இருப்பதாக தொழிலாளர்கள் எதிர்த்துக் கூறும்போது, நீதிபதி கோபத்துடன் பதிலளிக்கிறார், “சூழ்நிலை அனுமதிக்கும் போது மட்டுமே உங்களுக்கு ஜனநாயக உரிமைகள் இருக்கின்றன”. ஒரு முன்னாள் தொழிலாளியால் அளிக்கப்படும் வெள்ளைப் பலகை விவரிப்புடன் தொழிற்சாலையின் கண்காணிப்புக் கேமராக்களில் இருந்தான படச்சுருளையும் கலந்து தொழிற்சாலைக்குள்ளான கொடூரமான வேலையிட நிலையை ராயின் தி ஃபேக்டரி அம்பலப்படுத்துகிறது. ஒவ்வொரு 50 விநாடிகளுக்கும் ஒருமுறை மானேசர் அசெம்பிளி லைனில் இருந்து ஒரு கார் வெளியில் செல்கிறது. தொழிலாளிகளுக்கு காலையில் ஒரு ஏழு-நிமிட இடைவெளியும், மதிய உணவுக்கு 30 நிமிடங்களும், பின் தேநீர் இடைவெளியாக இன்னுமொரு ஏழு நிமிடங்களும் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. சில தொழிலாளிகளுக்கு, சிற்றுண்டிச் சாலைக்கு வந்து திரும்பவே 20 நிமிடங்கள் வரை ஆகி விடுகிறது. தொழிற்சாலையின் சம்பளங்களைப் பொறுத்தவரை பகல்கொள்ளை என்று தான் சொல்லவேண்டும். மாதாந்திரமாக ஒரு தொழிலாளிக்கு மாறாத சம்பளமாக 8,000 ரூபாயும் (122 அமெரிக்க டாலர்கள்) வேலையைப் பொறுத்து மாறக்கூடியதாக 8,000 ரூபாயும் வழங்கப்படுகிறது. ஒரேயொரு நாள் வரவில்லை என்றாலும், மாறக்கூடிய சம்பளத்தில் 25 சதவீதம் வெட்டப்பட்டு விடும், இரண்டு நாள் வரவில்லை என்றால் 50 சதவீதம் காலி. மூன்று நாட்களுக்கும் மேல் போனால் மொத்த 8,000 ரூபாயும் கிடைக்காது. தங்களுக்குக் கொடுக்கப்படுகின்ற அவமதிப்பான இழிவான தண்டனைகளை முன்னாள் தொழிலாளர்கள் கூறுகின்றனர். வேலையிடத்தில் செய்த ஒரு தவறுக்காக ஒரு தொழிலாளி “பள்ளிக் குழந்தையைப் போல காதுகளைப் பிடித்துக் கொண்டிருக்கும்படி” செய்யப்பட்டார், இன்னொருவர் அனைவரும் பார்க்க “8 மணி நேரமும் அங்கே கால்கடுக்க நிற்கும்படி” செய்யப்பட்டார். பெருநிறுவனம்-அரசாங்கத்தின் கூட்டான பழிவாங்கல் நடவடிக்கைக்கு இலக்கானவர்களின் வாழ்க்கைகளைப் படம்பிடித்துக் காட்டும் ஏராளமான நெகிழ்வான காட்சிகளும் தி ஃபேக்டரியில் இடம்பெற்றுள்ளன. சிறையிலிருக்கும் தொழிலாளர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதற்கு விலங்குகள் அடைத்துச் செல்லப்பட்டுவது போல ஒரு வண்டியில் அடைத்துக் கொண்டு செல்லப்படுகின்றனர், அங்கு அந்தக் கணநேரத்தில் அவர்களும் வெளியில் கூடியிருக்கும் அவர்களது உறவினர்களும் ஒருவரையொருவர் பார்வையில் தேடுகின்றனர். ஒரு இளம் மனைவி சிறையிலிருக்கும் தனது கணவனைக் குறித்துப் பேசுகிறார். “அவரிடம் எதுவுமே இல்லை என்று எங்களது முதல் சந்திப்பில் அவர் கூறினார்” எனினும் அவர் “அவர் ஒரு மிகச்சிறந்த கணவராய் இருந்தார்” என்று மேலும் சேர்த்துக் கொள்கிறார். பின் உடனே தன்னைத் திருத்துகிறார், “’இருந்தார்’ இல்லை, ‘இருக்கிறார்’”. இப்போது அவர் தனது மாமியாரின் புற்றுநோய் சிகிச்சைக்கும் உதவ வேண்டியிருப்பதால் இரண்டு வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறார். “அவருக்காக தொடர்ந்து போராடுவேன்” என்கிறார். தன்னுடைய தவழும் பெண்குழந்தைக்கு “தன்னுடைய அப்பா எப்படியிருப்பார்” என்று கூடத் தெரியாது என்று இன்னுமொரு இளம் மனைவி நினைவுகூர்கிறார். சிறையிலிருக்கும் தனது கணவரைக் காண முழுக்க ஒருநாளை விழுங்கக் கூடிய ஒரு பயணத்தை அந்தப் பெண் தொடங்கிக் கொண்டிருக்கிறார். அடுத்தநாள், அவரது கணவர் நீதிமன்றத்திற்குக் கொண்டுவரப்படவிருக்கும் தினத்தில்தான், அவர்களது திருமணநாள் வருகிறது. ஒரு அபூர்வமான மலர்ச்சியான உணர்வு அவரது முகத்தில் வந்து செல்கிறது. “சூழ்நிலைகள் என்னவானாலும் சரி, ஒருபோதும் அவரை விட்டு விலகமாட்டேன்” என்கிறார் அவர். நீதிக்காக நிற்கக் கூடிய ஒரு “சுதந்திரமான நீதித்துறை” குறித்த பிரமை எதனையும் ராய் நிராகரிக்க முனைகிறார். மாருதி-சுசுகி தொழிலாளர்களுக்கு எதிரான பெருநிறுவனம்-அரசாங்கம் கூட்டுச்சதியை அவர் திறம்பட அம்பலப்படுத்துகிறார். இந்த அடிப்படையில், தி ஃபேக்டரி ஆவணப்படமானது ஐக்கியப்பட்ட தொழிலாளர் போராட்டத்திற்கான ஒரு அவசியம் என்ற கருப்பொருளுக்கு மீண்டும் மீண்டும் திரும்புகிறது. ஆயினும், அந்த இடத்தில்தான் தி ஃபேக்டரி படத்தின் வரம்பும் மிகக் குறுகியதாக இருக்கிறது. தி ஃபேக்டரி படத்தின் ஒரு காட்சியில், MSWU இன் ஒட்டுமொத்தத் தலைமையும் சிறையில் அடைபட்டிருக்கும் நிலையில் போராட்டத்திற்குத் தலைமை கொடுத்து வியக்கத்தக்க போர்க்குணத்தை வெளிப்படுத்துகின்ற MSWU இடைக்கால கமிட்டியின் தலைவர், சிறையிலிருப்பவர்களின் இடத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு வாழ்த்துத் தெரிவிக்கிறார். MSWU தனது அடிப்படைக் கோரிக்கைகளில் எதனையும் வென்றிருக்கவில்லை என்ற உண்மை நிலையிலும் அவர் நிர்வாகத்துடன் ஒத்துழைத்துச் செல்ல உபதேசிக்கிறார். MSWU இன் புதிய நிர்வாகிகள், நிறுவன நிர்வாகத்துடன் மோதல் நேருமோ என்று அஞ்சி, தங்களது பழைய தோழர்களின் விடுதலைக்கான ஒரு புதிய பிரச்சாரத்தை தொடக்குவதற்கு - அவர்களின் உறவினர்கள் விண்ணப்பங்கள் செய்கின்ற போதிலும் - தயக்கம் காட்டுகின்றனர். இந்த இடத்தில் எழுகின்ற அத்தியாவசியமான பிரச்சினைகள் அதற்கு மேல் ஆராயப்படாமல் போகின்றன. செப்டம்பரின் பின்பகுதியில் மசாசூட்ஸ், கேம்பிரிட்ஜில் படத் திரையிடலுக்குப் பிந்தைய ஒரு விவாதத்தில், மாருதி சுசுகி தொழிலாளர்கள் முகம்கொடுக்கின்ற “மிகக் கடினமான சூழ்நிலை” என்று அவர் அழைத்த ஒன்றை ராய் விவரித்தார். “மதில் சுவரில் முதுகுபட அவர்கள் நிற்கிறார்கள்” என்றார் அவர். “அவர்களால் என்ன செய்ய முடியும்?” மானேசர் தொழிலாளர்கள் ஒரு கடினமான சூழ்நிலைக்கு முகம்கொடுத்திருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. கூர்கான்-மானேசர் பகுதி முழுவதிலும் மற்றும் அவற்றைத் தாண்டியும் தொழிலாளர்களை பயமுறுத்தி வைப்பதற்கு இவர்களை உதாரணமாக்குகின்ற தீர்மானத்துடன் இருக்கும் இந்திய பெருவணிகம், அரசு மற்றும் அரசியல் ஸ்தாபகம் ஆகிய பெரும் வலிமையான சக்திகள் அவர்களுக்கு எதிராக நிலைகொண்டுள்ளன. ஆனால் அவர்களைப் போன்றே, ஊதியங்களையும் வேலை நிலைமைகளையும் கீழிறக்குவதற்கு அரசுடன் கூட்டுச்சேர்கின்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கு முகம் கொடுத்து நிற்கின்ற, இந்தியாவிலும் மற்றும் உலகெங்கிலும் இருக்கின்ற தொழிலாளர்கள் என்ற சக்திவாய்ந்த கூட்டாளிகள் MSI தொழிலாளர்களுக்கும் இருக்கின்றனர். பலியாகியிருக்கும் மாருதி சுசுகி தொழிலாளர்களை பாதுகாத்து தொழிலாள வர்க்கம் ஏன் அணிதிரப்பட்டப்படவில்லை என்பது ஆராயப்பட வேண்டுமானால், போர்க்குணமிக்க தொழிற்சங்கவாதத்தின் வரம்புகளை ஆராய்வதும், அனைத்துக்கும் மேல், ஸ்ராலினிச தொழிற்சங்கக் கூட்டமைப்புகள் மற்றும் நாடாளுமன்றக் கட்சிகளது அரசியலை ஆராய்வதும் அதற்கு அவசியமானதாக இருக்கிறது. இதில் இரண்டாவதாகக் கூறியவை தான் மானேசர் தொழிலாளர்களது போர்க்குணமிக்க போராட்டமானது அது முதலில் 2011 இல் வெடித்த சமயத்தில், கூர்கான்-மானேசர் பகுதியின் மற்ற தொழிலாளர்கள் நடத்திய ஆதரவுப் போராட்டங்களை ஒடுக்கி அதனைத் தனிமைப்படுத்தின என்பதோடு, அனுபவமற்ற தொழிற்சங்கத் தலைமையின் மீது செல்வாக்கு செலுத்தி அதன் கோரிக்கைகளைத் தணித்தன. அதன்பிறகு, நிறுவனமும் அரசும் 2012 இல் மானேசர் தொழிலாளர்களுக்கு எதிரான தங்களது பழிவாங்கும் நடவடிக்கையை தொடக்கிய சமயத்தில், ஸ்ராலினிஸ்டுகள், சமயத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தொழிலாளர்களுக்கு ஆதரவாய் எந்த குறிப்பிடத்தக்க நடவடிக்கையையும் ஒழுங்கமைக்கத் தவறினர் என்பதோடு காங்கிரஸ் அரசாங்கத்திடமும், ஹரியானாவின் தொழிலாளர் நலத்துறையிடமும் மற்றும் நீதிமன்றங்களிடமும் விண்ணப்பங்கள் செய்வதில் அவர்கள் நம்பிக்கை வைக்க வலியுறுத்தினர். தி ஃபேக்டரி படத்தில் காட்சியில் தோன்றும் பிரதிவாதி வழக்கறிஞர்களில் ஒருவரான ராஜேந்திர பதக், 2014 ஜனவரியில் உலக சோசலிச வலைத் தளத்திற்கு அளித்த ஒரு நேர்காணலில், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராய் இருந்ததற்காக தான் வருந்த நேர்ந்ததாக கூறியிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். “மாருதி சுசுகி தொழிலாளர்களுக்கு என்று CPM எதுவுமே செய்யவில்லை” என்று கூறிய பதக் “அத்துடன் அவர்களைப் பாதுகாப்பதற்கும் நடைமுறைரீதியாய் எதையும் செய்யவில்லை” என்றார். இந்தக் கேள்விகளை ராய் ஆராயத் தவறியமை அவரது தனிநபர் தோல்வி அல்ல. பல தசாப்தங்களாகவே, இந்தியாவில் புத்திஜீவி மற்றும் கலாச்சார வட்டங்கள் உள்ளிட்ட ”இடது” அரசியல் ஸ்ராலினிஸ்டுகளாலேயே ஆதிக்கம் செலுத்தப்பட்டதாய் இருந்து வந்திருக்கிறது. அவர்கள் 1917 அக்டோபர் புரட்சியின் தொடர்ச்சியைப் பேணுபவர்களாய் மோசடியாய் கூறிக் கொண்டு அதேசமயத்தில் முதலாளித்துவ ஸ்தாபகத்தின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக செயல்பட்டுக் கொண்டு மார்க்சிசம் என்று ஏமாற்றி ஒரு தேசியவாத-சீர்திருத்தவாத அரசியலை கையளித்து வந்திருந்தனர். தொழிலாள வர்க்கத்தை தொழிற்சங்கப் போராட்டங்களுடன் மட்டுப்படுத்தி வைக்கவே CPI மற்றும் CPM நீண்டகாலமாய் வேலை செய்து வந்திருக்கின்றன என்பதோடு அரசியல்ரீதியாக தொழிலாள வர்க்கத்தை காங்கிரஸ் மற்றும் பிற முதலாளித்துவக் கட்சிகளுக்கே கீழ்ப்படியச் செய்து வந்திருக்கின்றன. மாருதி சுசுகி தொழிலாளர்களின் தீரமிக்க போராட்டத்தை திரைக்குக் கொண்டு வந்ததற்காக ராய் பாராட்டுக்குரியவர் ஆவார். தொழிலாளர்களின் எதிர்ப்பும், ஒற்றுமையும், சுய-தியாகமும் அவரை தனிப்பட்ட வகையில் நெகிழச் செய்திருக்கிறது, புத்திஜீவிதரீதியாக கிளர்ச்சியடையச் செய்திருக்கிறது என்பது தெளிவாக வெளிப்படுகிறது. ஆனால் தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களையும் வலிகளையும் புனைவுப் படைப்புகளிலோ அல்லது ஆவணப்படங்களிலோ சித்தரிக்க முனைகின்ற ராய் அல்லது பிற இந்திய திரைப்படைப்பாளிகளுக்கு, ஸ்ராலினிசத்தின் அரசியல் பாரம்பரியத்திற்கு எதிர்நிற்பது ஒரு திருப்பகரமான சவாலாய் அமையும். இருபதாம் நூற்றாண்டில் சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் மற்றும் சோசலிச இயக்கத்தின் வரலாற்றை, எல்லாவற்றுக்கும் மேல், ரஷ்யப் புரட்சியை ஸ்ராலினிசம் காட்டிக்கொடுத்ததற்கும் மார்க்சிசம் ஸ்ராலினிசத்தால் சீரழிக்கப்பட்டதற்கும் எதிராக, லியோன் ட்ரொட்ஸ்கியாலும் நான்காம் அகிலத்தாலும் நடத்தப்பட்ட போராட்டத்தை, ஆய்வுசெய்வது அதற்கு அவசியமாக இருக்கிறது. ஆயினும், தி ஃபேக்டரி இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் சாத்தியமான மிகப் பரந்த எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் பார்க்க வேண்டிய ஒரு ஈர்ப்பை செய்யும் படைப்பு ஆகும். திஃபேக்டரியின் விளம்பர முன்னோட்டத்தை Youtube இல் காணலாம். |
|