தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ் French Prime Minister Valls denounces striking Air France pilots வேலைநிறுத்தம் செய்கின்ற ஏர் பிரான்ஸ் பைலட்டுகளை பிரெஞ்சு பிரதமர் வால்ஸ் கண்டனம் செய்கிறார்
By Stéphane Hugues Use this version to print| Send feedback வேலைகளை ஒப்பந்த சேவை அமர்த்தம் செய்வதற்கு எதிராக ஏர் பிரான்ஸ் பைலட்டுகள் நடத்தி வருகின்ற வேலைநிறுத்தத்தை பலவந்தமாக முடிவுக்குக் கொண்டு வருவதற்கு நிர்வாகமும் பிரெஞ்சு அரசாங்கமும் செய்து வரும் முயற்சிகளையும் மீறி வேலைநிறுத்தம் நேற்றும் தொடர்ந்து நடைபெற்றது. 58 சதவீதத்திற்கும் அதிகமான பைலட்டுகள் வேலைநிறுத்தத்தில் பங்குபெற்றனர், வெறும் 48 சதவீத விமானங்கள் மட்டுமே பயணத்திற்குக் கிளம்பின. குறிப்பாக தெற்கு பிரான்சின் விமானநிலையங்களில் வேலைநிறுத்தப் பங்கேற்பு கணிசமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. SNPL (தேசிய விமான பைலட்டுகள் சங்கம்) மற்றும் SPAF (ஏர் பிரான்ஸ் பைலட்டுகள் சங்கம்) ஆகியவை செப்டம்பர் 30 வரை வேலைநிறுத்தத்தை தொடர்வதற்கு உறுதி பூண்டிருப்பதோடு இந்தத் தேதியை கடந்தும் போராட்டத்தைத் தொடரும் உரிமையையும் கையிருப்பில் கொண்டிருப்பதாக கூறியுள்ளன. இந்த வேலைநிறுத்தம் நேற்று மாலை பிரதமர் மானுவேல் வால்ஸிடம் இருந்து ஒரு அசாதாரணமான பொதுத் தாக்குதலைத் தூண்டியது. வேலைநிறுத்தம் செய்த பைலட்டுகளை "சுயநலவாதிகள்" என்று அவர் தாக்கியதோடு, விமானநிறுவனத்தின் அத்தனை துணை நிறுவனங்களிலும் ஒரே வகை ஒப்பந்தத்தைக் கோரிய அவர்களது கோரிக்கைகள், மலிவுக் கட்டண விமானசேவைகளின் அபிவிருத்திக்கு - அதாவது, பைலட்டுகள் மீது ஊதிய வெட்டுகளைத் திணிக்க ஏர் பிரான்ஸ் மற்றும் PS அரசாங்கம் தீட்டும் தீட்டங்களுக்கு - "எதிராக" இருப்பதாக கண்டனம் செய்தார். "சிக்கலான சூழ்நிலைகளின் கீழும் பேச்சுவார்த்தையை ஸ்தாபிப்பதற்கும் தொடர்வதற்கும் நாங்கள் அனுமதித்தோம்" என்று வால்ஸ் மேலும் சேர்த்துக் கொண்டார். "ஆனால் இந்த வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்தாக வேண்டும் என்பதை மீண்டும் நாங்கள் மிகத் தெளிவாகக் கூறுகிறோம்." வேலைநிறுத்தத்திற்கு வெகுஜன அனுதாபம் பெருகி வருகின்ற நிலைமையில் பிரான்சின் ஆளும் சோசலிஸ்ட் கட்சி (PS) நாளுக்கு நாள் எதையாவது செய்வதற்கு கையைப் பிசைந்து கொண்டிருக்கிறது என்பதன் எச்சரிக்கையாகவே வால்ஸின் கருத்துகள் அமைந்திருக்கின்றன பைலட்டுகளை மீண்டும் வேலைக்குத் திரும்பச் செய்வதற்கான மூர்க்கமான நடவடிக்கைகள் குறித்து திரைக்குப் பின்னால் அரசாங்கம் ஆலோசனை செய்து கொண்டிருக்கிறது. Transavia Europe என்ற ஒரு செலவு குறைந்த துணைநிறுவனத்தை அமைக்கும் திட்டங்களை Air France-KLM தள்ளிவைப்பதற்கு வால்ஸ் அரசாங்கம் நெருக்குதலளித்து இரண்டே நாட்கள் தான் ஆகியிருக்கின்றன. போர்ச்சுகல் போன்றதொரு மலிவான ஊதிய மட்டங்களையும் பலவீனமான தொழிலாளர் சட்டங்களையும் கொண்டதொரு நாட்டில் துணைநிறுவனத்தைக் கொண்டிருந்தால் நீண்ட வேலைநேரம் பணியாற்றக் கூடிய அத்துடன் அதிக தொழிலாளர் பாதுகாப்புகளும் இல்லாமல் பைலட்டுகளையும் மற்ற ஊழியர்களையும் குறைந்த ஊதியத்தில் பணியமர்த்த முடியும் என்பதே நிறுவனத்தின் நோக்கமாக இருந்தது. அவ்வாறு நடந்தால் இன்னும் அதிகமாய் சுரண்டப்படும் Transavia Europe தொழிலாளர்களுக்கு வேலைகள் மொத்தமாக இடம்மாற்றப்பட்டு விடும் என்ற நியாயமான அச்சம் ஏர் பிரான்ஸ் பைலட்டுகளுக்கு இருந்தது. இப்போது ஏற்கனவே இருக்கும் குறைந்த செலவின துணைநிறுவனமான Transavia France இல் இருந்தும் இதேபோன்ற அபாயத்தை எதிர்கொள்ள நேரும் என்ற அச்சத்தால் தான் பைலட்டுகள் தங்களது வேலைநிறுத்தத்தை இப்போது தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் ஏர் பிரான்ஸ் பைலட்டுகள் Transavia France இல் வேலை செய்வதற்கு நடைமுறையில் இருக்கின்ற ஒப்பந்தங்களை கிழித்தெறியப் போவதாக ஏர் பிரான்ஸ் - KLM தலைமை நிர்வாக அதிகாரியான அலெக்சான்ட்டர் டு ஜூனியாக் அச்சுறுத்தியிருந்தார். அங்கே ஊழியர்களுக்கு அளிக்கப்படும் ஊதியம் குறைவு என்பதால், Transavia France க்கு பணிபுரியும் ஏர்பிரான்ஸ் பைலட்டுகள் இப்போது வரை வித்தியாசத்தை சரிக்கட்ட கூடுதலாக ஒரு போனஸ் தொகையைப் பெற்று வருகிறார்கள். எப்படியாயினும், பைலட்டுகள் மீது ஒரு கணிசமான ஊதிய வெட்டினை திணிப்பதே தங்களது இறுதி நோக்கம் என்பதை வால்ஸ் மற்றும் ஜூனியாக்கின் அச்சுறுத்தல்கள் தெளிவாக்கி விட்டிருக்கின்றன. ஏர் பிரான்ஸ் பைலட்டுகள் மீதான தாக்குதல் என்பது ஐரோப்பாவெங்கிலும் மலிவுக் கட்டண விமான சேவைகளையும் மலிவு ஊதிய வேலைகளையுமே விமானப் போக்குவரத்துக்கான மேலாதிக்கமான மாதிரியாகத் திணிப்பதற்கு நடத்தப்படுகின்ற ஒரு தாக்குதலின் பாகமே ஆகும். கடந்த 30 ஆண்டுகளில் அமெரிக்க விமானசேவை நிறுவனங்களும் கூட ஊதியங்களையும் ஓய்வூதியங்களையும் வெட்டும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்ட தாராளமயம், நிறுவன இணைவுகள் மற்றும் பெருநிறுவனத் திவால் நிலைகள் ஆகியவற்றைக் கொண்டு தத்தமது ஊழியர்கள் மீது இதேபோன்றதொரு மாதிரியையே திணித்து வந்திருக்கின்றன. தொழிலாள வர்க்கத்தின் மீதான இந்தத் தாக்குதலானது ஐரோப்பாவெங்கிலும், குறிப்பாக பிரான்சில், தாட்சண்யமின்றி பின்பற்றப்படுகிறது. பிரான்சில் மற்ற ஐரோப்பிய நாடுகளைக் காட்டிலும் மலிவுக் கட்டண விமான சேவைகள் என்பவை காண்பதற்குக் குறைவான நிலையில் இப்போது இருக்கின்றன. பிரிட்டனில் ஒரு சிறிய விமானசேவை நிறுவனமான மோனார்க் ஏர்லைன்ஸ் சமீபத்தில் அத்தனை ஊழியர்களுக்கும் 30 சதவீத ஊதிய வெட்டினை அமல்படுத்தியதோடு, 900 ஊழியர்களை ஆட்குறைப்பும் செய்து விட்டது. மிகப்பெரும் ஐரோப்பிய விமானசேவை நிறுவனமான லுப்தான்சா, ஓய்வுக்கான ஆரம்ப வயதை 55 இல் இருந்து 60 ஆக உயர்த்தி, பணிபுரியும் 5400 பைலட்டுகளும் ஆரம்பநிலை ஓய்வுக்கான தமது உரிமையை விட்டுக் கொடுப்பதற்கு கோரிக் கொண்டிருக்கிறது. இதில் லுப்தான்சாவுக்கு காக்பிட் பைலட்டுகள் சங்கத்தின் இரகசிய ஒத்துழைப்பும் இருக்கிறது. இது ஏற்கனவே 2010 இல் குறுகிய காலச் செலவினங்களில் 20 சதவீத வெட்டுக்கு ஒப்புக் கொண்டது என்பதோடு, ஓய்வூதியப் பிரச்சினையில் பைலட்டுகளின் போராட்டத்தை குறுகிய கால வேலைநிறுத்தங்களுடன் மட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறது. Transavia-Europe ஒப்பந்தத்தை பைலட்டுகள் மீது உடனடியாகத் திணிக்க ஏர் பிரான்ஸ் மற்றும் பிரான்ஸின் சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்தால் இயலாத நிலையானது ஒரு முக்கியமான அரசியல் நெருக்கடியைத் தூண்டி விட்டிருக்கிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் வால்ஸை பிரதமராக நியமித்த ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டின் முடிவில்லாத சிக்கன நடவடிக்கைக் கொள்கைகளுக்கு எதிராக தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் இடையே மிகப் பிரம்மாண்டமான கோபம் பெருகிக் கொண்டிருக்கிறது. கருத்துக்கணிப்பு வாக்குகளில் வெறும் 13 சதவீத ஆதரவுடன், பிரான்சின் வரலாற்றிலேயே மிகவும் வெகுஜன வெறுப்புக்கு ஆளான ஜனாதிபதியாக, ஹாலன்ட், கோபம் மற்றும் உதாசீனத்துடனேயே மிகப் பரவலாக பார்க்கப்படுகிறார். பைலட்டுகளின் வேலைநிறுத்தம் போன்ற எந்தவொரு இயக்கமும் PS இன் சிக்கன நடவடிக்கைத் திட்டங்களுக்கு எதிராக ஒரு வெகுஜன இயக்கத்தைத் தூண்டி விடக் கூடும் என்று ஆளும் உயரடுக்கும் அரசாங்கமும் அஞ்சுகின்றன. அதனால் தான் ஏர் பிரான்ஸ் பைலட்டுகளுக்கு வளைந்து கொடுப்பதற்கு வால்ஸ் நெருக்குதலளித்தார். வெகு விரைவாக அரசாங்கத்தை வீழ்த்தும் திறம்படைத்த ஒரு போராட்டமாக மாறும் வகையில் தொழிலாளர்களின் மற்ற அடுக்குகளையும் ஈர்ப்பதற்கு முன்பாக வேலைநிறுத்தத்தை இது நிறுத்தி விடும் என்பதே அவரது நம்பிக்கையாக இருந்தது. வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர நெருக்கும் அதேவேளையில், ஏர் பிரான்ஸ் ஊழியர்களை ஐரோப்பாவின் மற்ற மலிவுக் கட்டண விமானசேவை நிறுவனத் தொழிலாளர் நிலைமைகளுக்குச் சமமாக கொண்டுவருவதற்கு - அவர்களை Transavia France இல் மலிவு ஊதியங்களுக்கு வேலைசெய்வதற்கு நிர்ப்பந்திப்பதன் மூலமாகவோ அல்லது Wizzair போன்ற மற்றொரு மலிவுக் கட்டண விமானசேவை நிறுவனத்தை விலைக்குவாங்குவதன் மூலமாகவோ - அவர்கள் மீது வெட்டுகளைத் திணிப்பதற்கான ஏதேனும் ஒரு வழியை ஏர் பிரான்ஸும் வால்ஸும் தேடிக் கொண்டிருக்கின்றனர். ஒட்டுமொத்த ஏர்பிரான்ஸ் -KLM குழுமத்திற்குமான ஒரு பொதுவான வேலை ஒப்பந்தம் என்ற பைலட்டுகளின் கோரிக்கைக்கு உடன்படாமலேயே பேச்சுவார்த்தைகளை முறித்து வேலைநிறுத்தத்தையும் முடிவுக்குக் கொண்டு வந்து விட முடியும் என்று ஜூனியாக் நம்பிக் கொண்டிருக்கிறார். ஏர் பிரான்ஸ் பைலட்டுகள் வேலை நிலைமைகளைப் பாதுகாப்பதற்கான தமது போராட்டத்தில், PS மற்றும் ஒட்டுமொத்த ஐரோப்பிய ஒன்றியம், மற்றும் குறிப்பாக தொழிற்சங்க அதிகாரத்துவத்தில் இருக்கும் அவற்றின் சேவகர்களது (இவர்கள் வேலைநிறுத்தத்தை முற்றிலுமாகத் தனிமைப்படுத்தி வந்திருக்கின்றனர்) சிக்கன நடவடிக்கை திட்டநிரலுக்கு எதிரான ஒரு அரசியல் போராட்டத்திற்கு முகம் கொடுக்கின்றனர். மற்ற ஐரோப்பிய நாடுகளில் போலவே, Air France-KLMம் தொழிலாளர்கள் மீதான தனது தாக்குதலை முன் தள்ளுவதற்கு தொழிற்சங்கங்களைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. கேபின் சிப்பந்திகள் மற்றும் தரைத்தள ஊழியர்கள் போன்ற மற்ற தொழிலாளர் பிரிவுகளை பிரதிநிதித்துவம் செய்கின்ற தொழிற்சங்கங்கள், வேலைநிறுத்தத்தை கண்டனம் செய்வதற்கான ஊடக முயற்சிகளின் முன்னிலை இலக்காகி இருக்கின்றன. இவ்வாறாக, ஏர் பிரான்ஸில் பிரெஞ்சு ஜனநாயக தொழிலாளர் கூட்டமைப்பின் (CFDT) பொதுச் செயலாளரான Béatrice Lestic புகார் கூறினார்: "வேலைநிறுத்தம் எவ்வளவு நீண்டு செல்கிறதோ அந்த அளவுக்கு செலவு அதிகமாகிச் செல்கிறது, அத்தனை ஊழியர்களும் தான் அதற்கான விலையைக் கொடுத்தாக வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளில் நாங்கள் ஏராள முயற்சிகள் செய்தோம், அவை அத்தனையும் கடந்த 10 நாட்களில் துடைத்தழிக்கப்பட்டு விட்டிருக்கிறது." இந்த பிற்போக்குத்தனமான அவதூறுமழை என்பது பிரெஞ்சு தொழிற்சங்க அதிகாரத்துவங்களில் நிரம்பிக் கிடக்கும் தொழிலாளர்-விரோத பெருநிறுவன குண்டர்களது கண்ணோட்டத்தின் சிறப்பியல்பாக இருந்து வரக் கூடியதாகும். தொழிலாளர்கள் தமது வேலை நிலைமைகளைப் பாதுகாப்பதற்காகச் செய்யும் எந்தவொரு முயற்சியும் CFDT எந்தத் தொழிலாளர்களை பிரதிநிதித்துவம் செய்வதாக மோசடியாக கூறிக் கொள்கிறதோ அந்தத் தொழிலாளர்கள் மீதான தாக்குதல்களை முன் தள்ளுவதற்காக ஏர் பிரான்சிடம் இருந்து தனக்குக் கிடைத்து வரக் கூடிய இலாபங்களில் கைவைத்து விடுமே என்பது தான் Lestic இன் முக்கிய கவலையாக இருக்கிறது. ஏர் பிரான்ஸ் தொழிலாளர் எண்ணிக்கையில், குறிப்பாக விமான சிப்பந்திகள் மற்றும் தரைத்தள ஊழியர்களது எண்ணிக்கையில், 15 சதவீத வெட்டு; ஊதிய அதிகரிப்பு நிறுத்திவைப்பு; வேலை நாட்கள் அதிகரிப்பு; மற்றும் மற்ற உற்பத்தித் திறன் அதிகரிப்பு நடவடிக்கைகள் என “Transform 2015” என்பதாகக் கூறப்பட்ட ஏர் பிரான்சின் முந்தைய சுற்று செலவினக் குறைப்பு நடவடிக்கை ஒன்றிற்கு பேச்சுவார்த்தை நடத்துவதில் Lestic உதவியிருந்தார். |
|
|