World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French government exploits Islamist murder of Hervé Gourdel to expand Iraq war

பிரெஞ்சு அரசாங்கம் ஈராக்கிய யுத்தத்தை விரிவாக்க ஏர்வே கூர்டெலின் இஸ்லாமிய படுகொலையைப் பயன்படுத்துகிறது

By Pierre Mabut
29 September 2014

Back to screen version

செப்டம்பர் 24இல் பிரான்ஸைச் சேர்ந்த 55 வயது நிரம்பிய மலையேறுபவரான ஏர்வே கூர்டெல், அல்ஜீரியாவில் ISISக்கு (ஈராக் மற்றும் சிரியாவின் இஸ்லாமிக் அரசு) விசுவாசமான ஒரு குழுவால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு, மத்திய கிழக்கில் பிரெஞ்சு அரசாங்கம் மற்றும் ஊடகங்கள் அவற்றின் யுத்த நடவடிக்கையை அதிகரிப்பதற்கு ஒரு சந்தர்ப்பமாக இருந்தது.

அல்ஜீரியாவின் கபிலி பிராந்தியத்தில் மலையேறிக் கொண்டிருந்த கூர்டெல், ISIS உடன் தொடர்புபட்ட ஜண்ட் அல்-கலிஃபா குழுவால் பிணைக்கைதியாக பிடிக்கப்பட்டார். சோசலிஸ்ட் கட்சி (PS) அரசாங்கம் ஈராக்கில் அதன் இராணுவ தலையீட்டை அதிகரிக்க முனைந்து வருகின்ற நிலையில், அந்த கொடூரமான படுகொலை தற்போது யுத்தம் மற்றும் சட்டம்-ஒழுங்கிற்காக வெறித்தனமாக அழைப்புவிடுக்கும் ஓர் ஊடக பிரச்சாரத்தை ஊதிப்பெரிதாக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. பிரெஞ்சு பாதுகாப்பு மந்திரி ஜோன்-ஈவ் லு திரியோன் (Jean-Yves Le Drian) சிரியா மீதான குண்டுவீச்சுத்தான் இப்போது "முன்னாலிருக்கும் பிரச்சினை" என்று அறிவித்தார்.

மூன்று நாட்களுக்கு அனைத்து அரசு கட்டிடங்களிலும் கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்கவிட அரசாங்கம் உத்தரவிட்டது. பிரான்சின் பலமான ஐந்து மில்லியன் முஸ்லீம் சமூகத்தின் தலைவர்கள் அந்த படுகொலையைக் கண்டித்து வெள்ளியன்று பிரெஞ்சு நகரங்களின் மசூதிகளின் முன்னால் பேரணிகளை ஏற்பாடு செய்தார்கள். பாரிசில் உள்ள மிகப்பெரிய மசூதி தலில் பௌபெகேரின் மதகுரு, “இஸ்லாம் மற்றும் அதன் மதிப்புகளைத் தவறாக திருப்பிவிடும் ஒரு இழிவார்ந்த சித்தாந்தத்தின் பெயரில், பயங்கரவாதிகளின் அந்த காட்டுமிராண்டித்தனமான மற்றும் இரத்ததாகமெடுத்த கொடூரத்தைக்" கண்டித்தார்.

பொதுமக்களைப் பீதியூட்ட ஒரு சளைக்காத பிரச்சாரமும் இதனோடு சேர்ந்துள்ளது. அதன் பயங்கரவாத-எதிர்ப்பு வழிமுறைகளைப் பலப்படுத்த மற்றும் வெளிநாட்டில் உள்ள பிரெஞ்சு குடிமக்களை "சுதாரிப்புடன்" இருக்குமாறு எச்சரிப்பதற்காக அரசாங்க பாதுகாப்பு கமிட்டி வியாழனன்று கூடியது. போக்குவரத்து நிலையங்கள் மற்றும் வணிக வளாகங்களில் இராணுவ பிரசன்னம் அதிகரிக்கப்பட உள்ளது, சுற்றுலா தளங்கள், மத தளங்கள், மற்றும் அரசு கட்டிடங்களுக்கும் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும். அவ்வபோது அடையாள ஆவண சரிபார்ப்புகளும் நடத்தப்பட உள்ளன.

எந்த பகுதியையும் இனி முற்றிலுமாக பாதுகாப்பானதென கருத முடியாது," என வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்தது. வெளிநாட்டில் உள்ள பிரெஞ்சு மக்களுக்கு "சுதாரிப்புடன்" இருக்குமாறு விடுக்கப்பட்ட எச்சரிக்கை, 31 நாடுகளிலிருந்து 40 நாடுகளுக்கு அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இந்த விரிவாக்கப்பட்ட பட்டியலில் இந்தோனேஷியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், உஸ்பெக்கிஸ்தான், கோமோரோஸ், புருண்டி, தான்சானியா, உகாண்டா மற்றும் சோமாலியா ஆகியவையும் உள்ளடங்கும்.

ஈராக் மற்றும் சிரியாவில் ISIS படைகளில் இணையும் இளம் பிரெஞ்சு பிரஜைகளின் பாய்ச்சலைத் தடுத்து நிறுத்தும் ஒரு முயற்சியாக கூறப்பட்ட நடவடிக்கையில், செப்டம்பர் 18 அன்று, அரசாங்கம் பேச்சு சுதந்திரம் மற்றும் நடமாடும் சுதந்திரத்தின் அடிப்படை ஜனநாயக உரிமைகளைத் தாக்கும் புதிய பயங்கரவாத-எதிர்ப்பு சட்டங்களை அறிமுகப்படுத்தியது.

இதன்படி, பயணங்களைத் தடுக்க ஆறு மாதங்களுக்கு கடவுச்சீட்டுக்கள் திரும்ப எடுத்துக்கொள்ளப்படும். அந்த சட்டத்திற்கு தேசிய நாடாளுமன்ற வாக்கெடுப்பில், வலதுசாரி தேசிய முன்னணியில் இருந்து இடது முன்னணி வரையில், அனைத்து கட்சிகளும் முழு ஆதரவளித்திருந்தன, பசுமைக்கட்சி வாக்கெடுப்பைத் தவிர்த்திருந்தது. பிரெஞ்சு ISIS போராளிகளின் எண்ணிக்கை 900ஆக இருக்குமென அரசாங்கம் மதிப்பிடுகின்ற போதினும், இந்த புதிய சட்டம் ISISஉடன் தொடர்புபட்டதாக கருதப்படும் இணைய தளங்களைப் பரிசீலிக்கும் அல்லது அத்தகைய ஆவணங்களை வைத்திருப்பவர்கள் எவரையும் ஒரு பயங்கரவாதியாக முத்திரை குத்துகிறது.

இத்தகைய யுத்தங்கள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களில் அடியில் ஒரு பாரிய அரசியல் மோசடி இருக்கிறது. பிரெஞ்சு ஏகாதிபத்தியமும் அதன் நேட்டோ கூட்டாளிகளும் முதலில் லிபியாவில் மற்றும் பின்னர் சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான அவற்றின் பினாமி போர்களின் பாகமாக, பல்வேறு அல் கொய்தா-தொடர்புபட்ட போராளி குழுக்களைப் பாரியளவில் ஆயுதமேந்த செய்வதை மேற்பார்வையிட்டுள்ளன என்பது நன்கறிந்த ஒன்றாகும். சிரியாவில், இஸ்லாமிய முன்னணி குழு மற்றும் கடந்த ஆண்டு நேட்டோ ஊக்குவித்த ஏனைய "மிதமான போராளிகள்", அவை அல் நுஸ்ரா முன்னணி மற்றும் ISIS போன்ற அல் கொய்தா-தொடர்புபட்ட சக்திகளுடன் வேலை செய்தன என்பதை மறைக்கவில்லை.

போலி-இடது புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சியின் ஒரு செய்தி தொடர்பாளர் ஒலிவியே பெசன்ஸெநோ, சிரிய எதிர்ப்பு போராளிகள் குழுக்களுக்கு பிரெஞ்சு அரசாங்கம் "கருணையோடு" ஆயுத உதவி செய்ய பகிரங்கமாகவே கூட அழைப்புவிடுத்தது. பின்னர் ஹோலாண்ட் தெளிவுபடுத்தியதைப் போல, பிரெஞ்சு உளவுத்துறை பெசன்ஸெநோவின் ஆலோசனையை ஏற்றுக் கொண்டதுடன், சிரியாவில் இஸ்லாமிய குழுக்களுக்கு நேரடியாக ஆயுத உதவிகளைச் செய்தது. (பார்க்கவும்: “சிரிய "கிளர்ச்சியாளர்களுக்கு" நேரடியாக ஆயுதங்கள் வினியோகித்ததை பிரான்ஸ் ஒப்புக்கொள்கிறது")

பரந்த மக்கள் எதிர்ப்பின் முகத்திற்கு முன்னால் இன்னும் அதிக யுத்தங்களைத் தொடுக்க ஒரு போலிக்காரணமாக, இத்தகைய பிற்போக்குத்தனமான நடவடிக்கைகளிலிருந்து வரும் பதிலடியைப் பாரிஸ் தற்போது பாசாங்குத்தனமாக பயன்படுத்தி வருகிறது.

இந்த உள்ளடக்கத்தில் ஏர்வே கூர்டெலின் அரசு மரியாதை என்பது முற்றிலும் வஞ்சகமானதாகும். கூர்டெல் அல்ஜீரியாவில் ஒரு இஸ்லாமிய போராளியால் படுகொலை செய்யப்பட்டார் என்றபோதினும், அவரது மரணத்தின் பிரதான எழுத்தாளர்கள் வாஷிங்டன், பாரிஸ், மற்றும் இதர நேட்டோ தலைநகரங்களில் இருக்கும் அதிகாரிகள் ஆவர், அவர்கள் கடந்த பல ஆண்டுகளாக மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆபிரிக்கா எங்கிலும் இஸ்லாமிய போராளிகள் குழுக்களைப் பாரியளவில் ஆயுதமேந்த செய்ய உதவி வந்திருக்கிறார்கள்.

வியாழனன்று நியூ யோர்க்கின் ஐ.நா பொது அவையில், புதிய ஈராக்கிய பிரதம மந்திரி ஹைதர் அல்-அபாதி செய்தியாளர்களிடையே கூறுகையில், இஸ்லாமிக் அரசு நியூ யோர்க் மற்றும் பாரிஸ் மெட்ரோ அமைப்புகளின் மீது பயங்கரவாத தாக்குதல்களை நடத்த தயாரிப்பு செய்து வருவதைக் குறித்து பாக்தாத்திலிருந்து அவருக்கு "நம்பகமான" செய்தி கிடைத்திருப்பதாக தெரிவித்தார். அதுபோன்ற ஒரு திட்டமிட்ட தாக்குதல் குறித்த எந்த உறுதிப்படுத்தும் செய்தியும் இல்லையென பிரெஞ்சு பிரதம மந்திரியின் அலுவலகம் தெரிவித்தது.

எந்தவொரு சம்பவமும், வாஷிங்டன் உடன் இணைந்து, ஈராக் மற்றும் சிரியாவில் அவரது இராணுவ தீவிரப்பாட்டைப் பின்தொடர்வதிலிருந்து பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்டை நிறுத்தப் போவதில்லை. ஓராண்டுக்கு முன்னர் சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தை வெளியேற்ற சிரியாவிற்கு எதிரான தற்காலிகமாக-கைவிடப்பட்டிருந்த யுத்த முனைவின் முன்னணியில் ஹோலாண்ட் இருந்தார். அசாத்திற்கு எதிரான அதன் யுத்தத்தில் பிரான்ஸ், வலதுசாரி இஸ்லாமிய போராளி குழுக்களின் அனைத்து தரப்புகளையும் சிரியாவில் ஆதரித்துள்ள நிலையில், தற்போது அங்கே ISIS படைகளைத் தாக்க அவர் தயங்குகிறார்.

அரசாங்கம் கூர்டெலின் காட்டுமிராண்டித்தனமான படுகொலை மீதான மக்களின் கோபத்தை மற்றும் கொந்தளிப்பை, ஓராண்டுக்கு முன்னர் அதனால் தொடங்க முடியாமல் போன யுத்தத்தை பின்தொடர்வதற்காக, திசைதிருப்ப முயன்று வருகிறது.