World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

India: NLC contract workers launch indefinite strike

இந்தியா: NLC ஒப்பந்த தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கினார்கள்

By Arun Kumar
6 September 2014

Back to screen version

தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில், மத்திய அரசுக்கு சொந்தமான நெய்வேலி பழுப்புநிலக்கரி நிறுவன (NLC) ஆலையின் சுமார் 11,000 ஒப்பந்த தொழிலாளர்கள் புதனன்று இரவு அவர்களின் வேலைகளிலிருந்து வெளிநடப்பு செய்தார்கள்.

முன்னர் மெட்ராஸ் என்றிருந்த, மாநில தலைநகர் சென்னையின் தென்மேற்கில் சுமார் 200 கிலோமீட்டரில் அமைந்துள்ள NLC ஆலை, அதிக இலாபமீட்டக்கூடிய அரசுக்கு சொந்தமான மற்றும் அரசால் நிர்வகிக்கப்படும் பெருநிறுவனமாகும். அது நெய்வேலியில் ஆண்டுக்கு 28.5 மில்லியன் டன் திறன் வாய்ந்த மூன்று திறந்தவெளி சுரங்கங்களைச் செயல்படுத்தி வருவதோடு, ராஜஸ்தான் மாநிலத்தின் பார்சிங்கரில் ஆண்டுக்கு 2.1 மில்லியன் டன் திறன் வாய்ந்த ஒரு திறந்தவெளி பழுப்புநிலக்கரி சுரங்கத்தையும் செயல்படுத்தி வருகிறது. அது நெய்வேலியில் மூன்று அனல்மின் நிலையங்களையும் மற்றும் பார்சிங்கரில் ஒன்றையும் நிர்வகித்து வருகிறது.

வேலைகளை முறைப்படுத்த அல்லது நிரந்தரமாக்க வேண்டுமென்ற நீண்டகால கோரிக்கைக்கு அப்பால், அந்த தொழிலாளர்கள் நிரந்த தொழிலாளர்களின் பாகமாக ஆக்கும் வரையில் தற்போது ரூ. 5,000இல் இருந்து 8,000 ரூபாய் வரையில் (83 டாலரில் இருந்து 133 டாலர் வரையில்) இருக்கும் அவர்களின் ஊதியத்தை ரூ. 25,000க்கு (416 டாலராக) உயர்த்தி அளிக்குமாறும், அவர்களின் மாத ஊதியத்தில் தற்போதிருக்கும் 8.33 சதவீத போனஸ் அளவை 20 சதவீத அளவிற்கு வழங்கவும் கோரி வருகிறார்கள்.

தொழிற்சங்க கூட்டமைப்பான கூட்டு நடவடிக்கை கவுன்சில் (JAC) இந்த வேலைநிறுத்த நடவடிக்கைக்கு அழைப்பு விடுத்தது, அதில் இந்திய தொழிற்சங்கங்களின் மையம் (CITU), எதிர்கட்சியான திராவிட முன்னேற்ற கழகத்துடன் இணைந்த  தொழிலாளர் முன்னேற்ற முன்னணி (LPF), தமிழ்நாட்டின் ஆளும் கட்சியான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்துடன் இணைந்த அண்ணா தொழிலாளர்கள் மற்றும் பணியாளர் சங்கம் (AWSU)  ஆகியவை உள்ளடங்கும். அனைத்து இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (AITUC) கூட  வேலைநிறுத்தத்தில் இணைந்தது. CITU மற்றும் AITUC  ஆகிய இரண்டு தொழிற்சங்கங்களும் முறையே இரண்டு பிரதான ஸ்ராலினிச நாடாளுமன்ற கட்சிகளான இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) ஆகியவற்றுடன் இணைந்தவை ஆகும்.

மொத்த என்எல்சி தொழிலாளர்களில் பாதியளவிற்கு உள்ள ஒப்பந்த தொழிலாளர்கள் பல ஆண்டுகளாக நிரந்தரத்தன்மையைக் கோரி வருகின்றனர். அவர்களில் பலர் பதினைந்து, இருபது மற்றும் சிலர் முப்பது ஆண்டுகளாக கூட என்எல்சி ஆலையில் சேவை செய்திருக்கிறார்கள். கருப்பு அடையாள வில்லை குத்திய போராட்டம் மற்றும் ஆகஸ்ட் 26இல் இருந்து 30 வரையில் சுரங்க கதவருகில் கூட்டங்கள் நடத்துவது உட்பட கடந்த சில வாரங்களாகவே தொழிற்சங்கங்கள் போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தன.

செவ்வாயன்று, தொழிலாளர்துறை துணை கமிஷனர் பி. சிவராஜன் முன்னிலையில் என்எல்சி நிர்வாகத்துடன் நடந்த JACஇன் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.

கடந்த காலத்தில் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை கவுன்சிலின் உறுப்பினர்கள் மற்றும் சங்கங்கள் - LPF, AWSU மற்றும் ஸ்ராலினிச CITU ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்தக்கோரி வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடவில்லை, ஆனால் இந்த விஷயம் தொடர்பாக AITUC அழைப்பு விடுத்த வேலைநிறுத்தங்களில் பங்கெடுத்தனர். எவ்வாறாயினும் இந்த தடவை அவை வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தன, ஏனெனில் அந்த தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களின் தொடர்ச்சியான காட்டிக்கொடுப்புகளுக்கு இடையிலும் தங்களது உரிமைக்காக போராடும் விருப்பத்தை மீண்டும் மீண்டும் எடுத்துக்காட்டி இருக்கிறார்கள், அப்படியான தொழிலாளர்கள் மத்தியில் செல்வாக்கை இழக்க நேரிடும் என்ற அச்சம் தான். 

மீண்டுமொருமுறை தொழிற்சங்கங்கள், வேலைநிறுத்தம் செய்யும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஆதரவாக நிரந்தர தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை. இது தொழிலாளர்களை பிளவுபடுத்தி வைப்பதில் என்எல்சி நிர்வாகத்திற்கும் அரசாங்கத்திற்கும் உதவுவதற்காக மட்டுமல்ல, மாறாக உற்பத்தியைத் தொடர்ந்து கொண்டே தொழிலாளர்களின் போர்குணத்தை விரயமாக்குவதற்காகவும் ஆகும்.

NLC, இந்த ஒப்பந்த தொழிலாளர்களில் சிலருக்கு நிரந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் 10 சதவீத அளவுக்கு மிக குறைவாக சம்பளம் வழங்குகிறது. பெருநிறுவன நிர்வாகமோ நிரந்தரத்தன்மை வழங்க முற்றிலும் மனமின்றி இருக்கிறது, அத்துடன் தற்போதைய நியமன முறையையே தொடர தீர்மானமாக இருக்கிறது.

சர்வதேச நிதியியல் மூலதனத்தின் கடந்த தசாப்தகால கோரிக்கைகளைப் பின்தொடர்ந்து ஒப்பந்த தொழிலாளர்களைச் சுரண்டுவதென்பது இந்தியாவின் நடைமுறையாக மாறியுள்ளது. முன்னாள் இந்திய தேசிய காங்கிரஸ்-தலைமையிலான ஆளும் கூட்டணி போலவே, தற்போதைய பிரதம மந்திரி நரேந்திர மோடியின் இந்து மேலாதிக்கவாத பாரதீய ஜனதா கட்சி (பாஜக) அரசாங்கமும் இந்த பெருநிறுவன நிகழ்ச்சிநிரலுக்கு அதன் முழு ஆதரவை வழங்குகிறது.

ஒப்பந்த தொழிலாளர்களை முறைப்படுத்துமாறு NLCக்கு பரிந்துரைத்த ஏப்ரல் 2013 உச்ச நீதிமன்ற தீர்ப்பை நிர்வாகம் நடைமுறைப்படுத்துமாறு தொழிற்சங்கங்கள் கோருகின்றன. ஆனால் இந்த தீர்ப்பு நிர்வாகத்திற்கு கணிசமான ஓட்டைகளை வழங்கி வெறுமனே வார்த்தையளவில் உள்ளது. உச்சநீதிமன்றம் ஒப்பந்த தொழிலாளர்களை முறைப்படுத்த எந்தவொரு காலக்கெடுவும் விதிக்கவில்லை. அதன்படி, “வேலையிடம்" உருவாகும் போது ஒப்பந்த தொழிலாளர்கள் நிரந்த தொழிலாளர்களாக மாற்றப்படுவார்கள் என NLC கூறியது.

NLC நிர்வாகம் சுமார் 200 தொழிலாளர்களை முறைப்படுத்தும் அதன் திட்டத்தை இறுமாப்புடன் அறிவித்திருந்தது. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஒரு பணிமூப்பு பட்டியலை அது தயாரித்திருப்பதாகவும், ஒரேமூச்சில் 750க்கும் அதிகமான ஒப்பந்த தொழிலாளர்களை அதனால் எடுக்க முடியாதென்றும் NLC நிர்வாகிகள் வாதிட்டார்கள்.

தொழிலாளர்கள் அவர்களின் கோரிக்கைகளை வென்றெடுக்க, நிர்வாகத்திற்கும் அரசாங்கத்திற்கும் அழுத்தமளிக்க வேண்டுமென தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களை வலியுறுத்தி வருகின்றன. இந்த வாதம் பயனற்றதென்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. 2008இன் சென்னை உயர்நீதிமன்ற பரிந்துரைக்கு ஒப்புதல் வழங்கிய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பே கூட, ஐந்தாண்டுகள் கழித்து வந்ததாகும். NLC கொள்கையை ஆதரிக்கும் அரசாங்கத்திற்கு எதிரான வர்க்க போராட்டத்திற்கு தொழிலாளர்களை தயார் செய்வதற்கு பதிலாக, தொழிற்சங்கங்களோ தொழிலாள வர்க்கத்தின் உரிமைகளைப் பாதுகாக்க நீதிமன்றங்களை உபயோகிக்கலாம் என நப்பாசைகளை விதைத்து அந்த வழக்கை பதிவு செய்திருந்தன. அதையும் அவை, பல தொடர்ச்சியான வேலைநிறுத்தங்கள் மற்றும் தொழிலாளர்களின் போராட்டங்களை விற்றுத்தீர்த்த பின்னரே செய்திருந்தன.

முந்தைய காங்கிரஸ் தலைமையிலான UPA அரசாங்கத்தின் பங்குகளை விற்கும் திட்டத்தின்கீழ் NLC பங்குகளில் 5 சதவீதத்தை விற்க அது முடிவெடுத்ததற்கு எதிராக, NLC ஆலையின் மிகப் பெரிய ஒருங்கிணைந்த போராட்டம் ஒன்று கடந்த ஆண்டு ஜூலையில் நடந்தது. அது அரசுடைமை நிறுவனங்களைத் தனியார்மயமாக்குவதன் பாகமாக இருந்தது. ஸ்ராலினிச தலைமையிலான CITU மற்றும் AITUC உட்பட தொழிற்சங்கங்கள் அந்த வேலைநிறுத்தத்தைக் காட்டிக் கொடுத்தன. (பார்க்கவும்: "இந்தியா: தனியார்மயமாக்க-எதிர்ப்பு வேலைநிறுத்தம் விலைபேசப்பட்டதில் கோபமடைந்திருக்கும் என்.எல்.சி. தொழிலாளர்கள்")

இந்த என்எல்சி ஒப்பந்த தொழிலாளர் வேலைநிறுத்தம், வணிகத்திற்கு நேசமான மோடி அரசாங்கம், மே மாதம் அதிகாரத்திற்கு வந்ததற்குப் பின்னர் நடக்கும் ஒரு பொதுத்துறை நிறுவனத்திற்கு எதிரான மிகப் பெரிய வேலைநிறுத்தமாகும். ஒரு "சிவப்பு கம்பளத்துடன்" சர்வதேச முதலீட்டாளர்களை ஈர்க்க மோடி ஆக்ரோஷமாக தொழிலாள வர்க்க விரோத பொருளாதார நடவடிக்கைகளை முன்னுக்கு தள்ளி வருகிறார்.

தொழிலாளர்களுக்கு ஒரு மட்டுப்படுத்தப்பட்ட பாதுகாப்பு வழங்கும் தொழிலாளர் சட்டங்கள் தற்போது தாக்கப்பட்டு வருகின்றன. தொழிலாளர்களைச் சுரண்டுவதன் மீதிருக்கும் தடைகளை நீக்கும் பொருட்டு அத்தகைய "வழக்கற்று போன, காலத்திற்கு ஒவ்வாத" சட்டங்களை நீக்க திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

மோடி அவரது சுதந்திர தின உரையின் போது, இந்தியாவை உலகின் ஒரு உற்பத்தி மையமாக மாற்ற முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார். உலக முதலாளித்துவ பொருளாதார நெருக்கடியின் தீவிரத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள், “காலத்திற்கு ஒவ்வாத" தொழிலாளர் சட்டங்களை நீக்குவது, ஏழைகளுக்கான மானியங்களை வெட்டுவது, மற்றும் பொதுத்துறை தொழில்துறைகளை ஒட்டுமொத்தமாக தனியார்மயமாக்குவது உட்பட தொழிலாள வர்க்கத்தின் மீது தாக்குதல்களைத் தீவிரப்படுத்த கோரி வருகிறார்கள்.

WSWS உடன் பேசிய ஒரு என்எல்சி ஒப்பந்த தொழிலாளர் முருகன் கூறுகையில், இப்போதைய வேலைநிறுத்தம் ஊடகங்களால் பெரிதும் இருட்டடிப்பு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார். NLC ஒப்பந்த தொழிலாளர்கள் மத்தியில் நிலவும் பொதுவான உணர்வை வெளிப்படுத்தும் விதமாக முருகன் கூறுகையில், “எல்லா ஒப்பந்த தொழிலாளர்களும் நிரந்தரமாக்கப்படுவார்கள் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எங்களுக்கு தொழிற்சங்கங்களின் மீதும் நம்பிக்கை இல்லை. எங்களின் உரிமையை நாங்கள் வென்றெடுக்க விரும்புகிறோம். நாங்கள் ஊதிய உயர்விலும் கவனம் செலுத்துகிறோம்; சமமான வேலை சமமான ஊதியம் கிடைக்க வேண்டுமென நினைக்கிறோம். நாங்கள் நிரந்தர தொழிலாளர்களின் பாகமாக மாற்றப்படும் வரையில் எங்களின் ஊதியங்கள் மாதத்திற்கு 25,000 ரூபாயாக உயர்த்தப்பட வேண்டுமென விரும்புகிறோம். வாழ்க்கை செலவுகள் வேகமாக உயர்ந்திருக்கின்ற நிலையில் எங்களால் இந்த அற்ப சம்பளங்களில் வாழவே முடியவில்லை," என்றார்.