World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ் French Prime Minister Valls travels to Berlin பிரெஞ்சு பிரதம மந்திரி வால்ஸ் பேர்லினுக்கு பயணிக்கிறார்
By Stéphane Hugues பிரெஞ்சு பிரதம மந்திரி இமானுவெல் வால்ஸ், பிரெஞ்சு அரசு வரவு-செலவு திட்டத்திற்கு சான்சிலர் அங்கேலா மேர்க்கெலின் ஒப்புதலைப் பெற திங்களன்று அவரை பேர்லினில் சந்தித்தார். ஜேர்மனியை பகிரங்கமாக கண்டித்த மற்றும் பிரெஞ்சு பொருளாதார கொள்கையில் ஒரு மாற்றத்திற்கு அழைப்புவிடுத்த இரண்டு அரசாங்க மந்திரிகள், ஆர்னோ மொண்டபூர்க் மற்றும் பெனுவா அமோனை, நீக்கியதால் தூண்டிவிடப்பட்ட கடந்த மாத மந்திரிசபை மாற்றியமைப்பிற்குப் பின்னர், அது வால்ஸின் முதல் வெளிநாட்டு பயணமாகும். ஆழமாக செல்வாக்கிழந்த வால்ஸினது சோசலிஸ்ட் கட்சி (PS) அரசாங்கத்திற்கு மேர்க்கெல் ஆர்வமற்ற ஆதரவைத் தெரிவித்தார். பிரான்ஸ் நடைமுறைப்படுத்திவரும் சமூக வெட்டுக்கள் நிச்சயமாக "குறிப்பிடத்தக்கவை தான்" என்றபோதினும், பிரான்ஸ் மாஸ்ட்ரிச்ட் உடன்படிக்கைக்கு இணக்கமாகவும் இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார். பிரெஞ்சு அரசாங்கத்தின் பொறுப்புறுதி உடன்படிக்கையின் சமூக வெட்டுக்களில் பேர்லின் 50 பில்லியன் யூரோ வெட்டுக்களை ஏற்றுக் கொள்கிறது என்றாலும், அது, மேற்கொண்டும் பாரீஸ் அதன் வரவு-செலவு திட்ட பற்றாக்குறையைக் குறைக்க வேண்டுமென, மாஸ்ட்ரிச்ட் உடன்படிக்கையினது கட்டளைப்படி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.4 சதவீதத்திலிருந்து 3 சதவீதத்திற்கு குறைக்க வேண்டுமென, தொடர்ந்து அழுத்தம் அளித்து வருகிறது. செவ்வாயன்று, வால்ஸ் சக்திவாய்ந்த ஜேர்மன் தொழில்துறை கூட்டமைப்பில் (BDI) உரையாற்றினார். “நான் வணிகத்தை விரும்புகிறேன்!" (Ich mag die Unternehmen!) என்ற இந்த வார்த்தைகளோடு வால்ஸ் ஜேர்மனியில் அவரது உரையைத் தொடங்கினார், அதற்கு அங்கே கூடியிருந்த தொழிலதிபர்களிடமிருந்து பலத்த கைத்தட்டல் கிடைத்தது. வால்ஸ் தொடர்ந்தார், “ஜேர்மனியால் அதன் சீர்திருத்தங்களை வெற்றிகரமாக செய்ய முடிகிறதென்றால், பிரான்ஸால் ஏன் முடியாது? நிச்சயமாக, அது சிறிது காலமெடுக்கும் தான். ஆனால் விருப்பம் இருக்கும்போது, தெளிவான நிலைநோக்கு இருக்கும்போது, ஒட்டுமொத்த நாடும் ஒன்றுதிரட்டப்படும்போது பின் அங்கே விடயங்கள் நகராமல் இருப்பதற்கு எந்த காரணமும் இருக்காது." பின்னர் அவர் சமூக வெட்டுக்களுக்கான பாரீஸின் நிகழ்ச்சிநிரலை விவரித்தார், அவற்றில் பெரும்பாலானவை ஒரு தசாப்தத்திற்கு முன்னர் சான்சலர் ஹெகார்ட் ஷ்ரோடரின் சமூக-ஜனநாயக அரசாங்கத்தால் ஜேர்மன் தொழிலாளர் வர்க்கத்தின் மீது திணிக்கப்பட்ட ஹார்ட்ஸ் IV சீர்திருத்தங்களை முன்மாதிரியாக கொண்டிருந்தது. வால்ஸ், ஜேர்மன் வணிக நலன்களை ஒட்டிக்கொள்வதென்பது, சிக்கன நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடற்ற சந்தை முதலாளித்துவத்திற்கு வெட்கக்கேடான வகையில் வக்காலத்துவாங்கும் ஒன்றாக, PSஇன் நடவடிக்கைகளில் மேலுமொரு அடிவைப்பை குறிக்கிறது. இந்த உரை, பிரெஞ்சு முதலாளிகள் கூட்டமைப்புக்கு வழங்கிய ஒரு சமீபத்திய உரையில் இதேபோன்ற அறிவிப்பைப் பின்தொடர்ந்து வருகிறது. தொழிலாளர்களின் வேலைகள் மற்றும் வேலையிட நிலைமைகளைப் பாதுகாக்கும் சட்டங்கள் அனைத்தையும் நீக்குவது மற்றும் சமூக வேலைத்திட்டங்களுக்கு பிரெஞ்சு தொழில்வழங்குனர்களின் பங்களிப்புகளைப் படிப்படியாக குறைப்பது ஆகியவற்றிற்கு அதில் உறுதியளிக்கப்பட்டது. தங்களது கொள்கைகளின் பேரழிவுகரமான சமூக தாக்கங்களையும், பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி —இரண்டு உலக போர்களில் ஒன்றோடொன்று மோதியுள்ள அவ்விரு நாடுகளுக்கு— இடையே தீவிரமடைந்துவரும் பதட்டங்களை மூடிமறைக்க முயலும் வால்ஸ் மற்றும் மேர்க்கெலின் முயற்சிகளுக்கு இடையிலும், ஐரோப்பிய முதலாளித்துவத்தின் திவால்நிலைமை அதிகளவில் முன்னுக்கு வந்து கொண்டே இருக்கிறது. தொழிலாளர்களும், இளைஞர்களும் ஏற்கனவே கிரீஸ், அயர்லாந்து, போர்ச்சுக்கல் மற்றும் ஸ்பெயின் போன்ற ஐரோப்பிய நாடுகளில் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் வங்கி பிணையெடுப்புகள், நாட்டின் கடன்சுமையை அதிகரித்து எவ்வாறு தொழிலாள வர்க்கத்தை ஏழ்மையாக்கின என்பதைக் கண்டுள்ளனர். இருந்தாலும் பேர்லினும் பாரீஸூம் இரண்டுமே அவற்றை முன்னோக்கி நகர்த்தி வருகின்றன, அந்த நிகழ்வுபோக்கில், வரலாற்றுரீதியில் ஐரோப்பிய ஒன்றியத்தின் அடியிலிருக்கும் பிரான்கோ-ஜேர்மன் அச்சு பலவீனப்பட்டு வருகிறது. பிரான்சில், நவ-பாசிச தேசிய முன்னணி (FN) ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் யூரோ நாணயத்திலிருந்து பிரான்சை வெளியே எடுக்கும் ஒரு தளத்தின் மீது அடித்தளத்தை அமைத்து வருகிறது. பிரான்சின் வலதுசாரி மக்கள் இயக்கத்திற்கான யூனியனுக்கு (UMP) உள்ளேயே கூட, ஜேர்மன் உடனான பதட்டங்களின் அறிகுறிகள் அதிகரித்து வருகின்றன. கிரேக்க கடன் நெருக்கடியில் பிணையெடுப்புகள் மீதெழுந்த கடுமையான மோதல்களுக்கு இடையே, பிரான்சை யூரோவிலிருந்து வெளியே எடுத்துவிடுவதாக 2010இல் மேர்க்கெலை அச்சுறுத்திய முன்னாள் ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி, கடந்த வாரயிறுதியில் அவர் அரசியலுக்கு-மீண்டும் வந்திருப்பதை அறிவித்த நேர்காணலில், பிரான்கோ-ஜேர்மன் உறவுகளைக் குறித்து குறைந்த ஆர்வத்தையே வெளிப்படுத்தினார். அவர் கூறினார், “ஜேர்மனியும் பிரான்சும் ஐரோப்பாவில் முதலிரண்டு பொருளாதாரங்கள் ஆகும். நாங்கள் சேர்ந்து யூரோ மண்டலத்தின் GDPஇல் 50 சதவீதத்தைப் பிரதிநிதித்துவம் செய்கிறோம். பிரான்ஸிற்கு ஜேர்மனி ஒரு தேர்வு மட்டுமே இல்லை, அது ஒரு நடைமுறை உண்மை," என்றார். வால்ஸ் அரசாங்கத்தின் சிக்கன கொள்கைகள் தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்கள் மத்தியில் ஒரு சமூக வெடிப்பை நோக்கி தள்ளி வருகின்றன. LeFigaro மற்றும் Libération போன்ற பிரதான முதலாளித்துவ நாளிதழ்கள், வால்ஸ் அரசாங்கத்ததின் நிலைமையை "ஆட்சியின் நெருக்கடியாக" குணாம்சப்படுத்தி உள்ளன. பிரான்சில் நிலவும் இந்த அரசு விவகாரங்களும் மற்றும் எந்தவொரு பகிரங்கமான தாக்குதலும் FNஇன் தேர்தல் வெற்றியை ஊக்குவிக்கும் என்ற அச்சமும் வால்ஸின் விஜயத்தின் போது அவரை பகிரங்கமாக அதிகளவில் விமர்சிப்பதிலிருந்து மேர்க்கெலைத் தடுத்திருந்தது. எவ்வாறிருந்தபோதினும், பிரான்சின் கடன்களைக் குறைப்பதற்கோ அல்லது கேடுவிளைவிக்கும் சிக்கன கொள்கைகளின் வேகத்தைக் குறைப்பதற்கோ பிரான்சிற்கு எதையும் விட்டுக் கொடுக்கக் கூடாதென ஜேர்மனியின் உள்ளிருந்துவரும் அழுத்தத்தின் கீழ் மேர்கெல் இருந்தார். ஜேர்மனிக்குள்ளேயே கூட, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரான்கோ-ஜேர்மன் உறவுகளின் இப்போதைய நிலை மீது விரோதம் அதிகரித்து வருகிறது. ஜேர்மனிக்கான மாற்றீடு (Alternative für Deutschland, AfD) என்ற ஒரு புதிய கட்சி ஜேர்மனியில் தோன்றியுள்ளது, FNஐ போலவே, அதன் முறையீடுகளில் ஒன்று யூரோவிலிருந்து உடைத்துக் கொள்ள வேண்டும் என்பதாகும். சமீபத்தில், கிழக்கு ஜேர்மனியின் துரின்ஜியா பகுதியில், AfD 10.6 சதவீத வாக்குகளைப் பெற்றது, அதேபோல பேர்லினுக்கு அருகில் உள்ள பிராண்டன்பேர்க் மாநிலத்தில் அது 12.2 சதவீத வாக்குகளைப் பெற்றது. "கண்ணீருடன் படுகுழியைப் பாருங்கள்" என்ற ஒரு கட்டுரையில், ஜேர்மனியின் தாராளவாத Sueddeutsche Zeitungஇன் ஸ்ரெபான் கோர்னிலியுஸ் குறிப்பிடுகையில், வால்ஸ் ஒரு சிறந்த "உளவியல்வாதியாக" இருக்க வேண்டும், சிக்கன நடவடிக்கைகளைத் தழுவ பிரெஞ்சு மக்களிடம் இன்னும் பலவந்தமாக வாதிட வேண்டும் என்றார். “அந்நாடு மிகவும் கடுகடுப்பாக இருக்கிறது, வரலாற்று முக்கியத்துவம் மிகுந்த உள்ளூர் அரசாங்க சீர்திருத்தம் மற்றும் 35 மணிநேர வார வேலை சட்டத்தைப் பலவீனப்படுத்தியமை போன்ற அவரது கொள்கைகளது சிறிய வெற்றிகளைக்கூட அவர் [வால்ஸ்] உரிமைகோர விரும்பவில்லை," என்று ஸ்டீபன் குறைகூறுகிறார். சிக்கன நடவடிக்கையை வெளிப்படையாக ஊக்குவிக்க தவறுவதாக கூறப்படுவது குறித்து வால்ஸைக் குற்றஞ்சாட்டிய அவர், அந்தவொரு முடிவை "விசித்திரமானதாக" குறிப்பிட்டார். எவ்வாறிருந்த போதினும், அனைத்திற்கும் மேலாக, பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் அமெரிக்கா உள்ளடங்கிய நேட்டோ சக்திகள் தலைமையிலான ஏகாதிபத்திய யுத்தங்களும் மற்றும் சிக்கன நடவடிக்கைகளும் பிரான்ஸ் மற்றும் ஜேர்மன் ஏகாதிபத்தியத்திற்கு இடையிலான பதட்டங்களைக் கொதிநிலைக்குக் கொண்டு வந்துள்ளன. தெற்கு ஐரோப்பா முழுவதிலும் காட்டுமிராண்டித்தனமான சிக்கன நடவடிக்கைகளை திணிக்க ஆதரவளித்ததற்கு அப்பாற்பட்டு, கிரேக்க கடன் நெருக்கடிக்கு பிரெஞ்சு ஏகாதிபத்தியம் காட்டிய முக்கிய மூலோபாய எதிர்வினை தொடர்ச்சியான யுத்தங்களைத் தொடங்கியதாக இருந்தது. ஜேர்மனிக்கு எதிராக பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் நிலையை உயர்த்த மற்றும் சிக்கன கொள்கைகளுக்கு உள்நாட்டில் இருந்த எதிர்ப்பைத் திசைதிருப்ப முதலில் சார்க்கோசியும் பின்னர் ஹோலாண்டும் யுத்தத்தை முன்னேடுத்தனர்—சார்க்கோசியின் கீழ் லிபியா, ஐவரி கோஸ்ட் மற்றும் சிரியாவிலும், பின்னர் ஹோலாண்டின் கீழ் மாலி, மத்திய ஆபிரிக்க குடியரசு மற்றும் இப்போது ஈராக்கிலும் யுத்தம் தொடுக்கப்பட்டுள்ளது. ஜேர்மனியில், மேர்க்கெலும் மற்றும் ஜேர்மன் அரசியல் ஸ்தாபகமும், உக்ரேன் மீது ரஷ்யாவிற்கு எதிராக ஒரு பினாமி போர் தொடுத்தும் மற்றும் அதன் வெளியுறவு கொள்கையை மீள்இராணுவமயமாக்கியும், இப்போது அதேபோன்ற கொள்கைகளுக்கு திரும்பி வருகின்றனர். ஜேர்மன் பத்திரிகையின் பிரிவுகள் "சம்பிரதாயங்களை" உடைக்க மற்றும் நாஜி சர்வாதிகாரி அடோல்ஃப் ஹிட்லருக்கு அரசியல்ரீதியாக மறுவாழ்வளிக்க நகர்ந்து வருகின்றன. (பார்க்கவும்: “An attempt to rehabilitate Hitler”) பாரீசும் பேர்லினும், இயல்பாகவே, ஒன்று மற்றொன்றின் பொது சம்மதத்தை மற்றும் இந்த சூறையாடும் யுத்தங்களுக்கு ஆதரவையும் கூட கோரியுள்ளன மற்றும் பெரிதும் பெற்றும் உள்ளன. இருந்தபோதினும், யுத்தங்கள் பரவுகையில் மற்றும் பிரான்ஸ், ஜேர்மனி, ஏனைய நேட்டோ சக்திகளுக்கு இடையே கொள்ளையடித்ததைப் பகிர்ந்து கொள்ள வேண்டியது அதிகரிக்கையில், அவற்றிற்கு இடையில் இராணுவ பதட்டங்களும் முன்னுக்கு வருகின்றன. வால்ஸ் மற்றும் மேர்கெல்லின் வெற்று முழக்கங்கள் இருந்தாலும் கூட, அவை ஒன்றொன்றும் அவற்றின் சொந்த ஏகாதிபத்திய வேறுபட்ட நலன்களுடன், இப்போது அதிகளவில் ஒன்றையொன்று எதிர்கொண்டு வருகின்றன. |
|