World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்: ஆசியா :சீனா Chinese president visits Sri Lanka to strengthen strategic ties சீன ஜனாதிபதி மூலோபாய உறவுகளை வலுப்படுத்த இலங்கைக்கு விஜயம் செய்தார்By
Deepal Jayasekera சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங், பிரதானமாக பிரமாண்டமான திட்டங்களில் முதலீடு வழங்குவதன் மூலம், கொழும்புடனான பெய்ஜிங்கின் மூலோபாய உறவுகளை வலுப்படுத்தும் முயற்சியாக, இந்த வாரம் இலங்கைக்கு இரண்டு நாள் பயணத்தை மேற்கொண்டார். 28 ஆண்டுகளின் பின்னர் ஒரு சீன ஜனாதிபதி தீவிற்கு மேற்கொண்ட முதல் பயணம் இதுவாகும். சீனாவுக்கு எதிராக அமெரிக்காவின் "ஆசியாவில் முன்னிலை” கொள்கைக்குப் பின்னால், பிராந்தியத்தில் உள்ள நாடுகளை அணிதிரட்டுவதற்காக அமெரிக்கா மற்றும் ஜப்பான் மேற்கொள்ளும் ஆக்கிரோசமான நகர்வுகளை எதிர்கொள்ளும் முயற்சியாக, மூன்று நாடுகளுக்கான தெற்காசியப் பயணத்தின் ஒரு பாகமே அவரின் இந்த விஜயமாகும். ஷீ, இலங்கையை அடையும் முன் இரண்டு நாட்கள் மாலைதீவுகளில் இருந்தார். பின்னர் மூன்று நாள் பயணமாக இந்தியா சென்றார். இதற்கு சமமாக, ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே, தெற்காசியா மற்றும் இந்தியப் பெருங்கடலில் ஜப்பானிய செல்வாக்கை தக்கவைத்துக்கொள்வதற்கும் சீனாவின் செல்வாக்கை கீழறுப்பதற்குமான முயற்சியை சமிக்ஞை செய்யும் வகையில், செப்டம்பர் 7-8ம் திகதிகளில் இலங்கைக்கு ஒரு அரிதான இரண்டு நாள் பயணத்தை மேற்கொண்டிருந்தார். மாலைதீவில், ஷீ பல முதலீட்டு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டார். முன்னதாக இந்திய ஜிஎம்ஆர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த மாலே சர்வதேச விமான நிலையத்தை பல மில்லியன் டாலர் செலவில் மேம்படுத்தல், அதேபோல் வீடுகள், சாலைகள் மற்றும் பிரமாண்டமான பாலம் போன்ற உள்கட்டமைப்பு திட்டங்களை கட்டியெழுப்புதலும் இவற்றில் அடங்கும். இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடல் வழியாக தீர்க்கமான தேவைகளான எரிசக்தி மற்றும் மூலப்பொருட்களைப் பெறுவதற்கான நுழைவாயிலை தக்கவைத்துக்கொள்ளும் ஒரு மூலோபாய நகர்வான, பெய்ஜிங்கின் 21 ஆம் நூற்றாண்டு கடல்சார் பட்டுப் பாதை (Maritime Silk Road) திட்டத்துக்கும் ஷீ ஆதரவைப் பெற்றார். இலங்கையில், தனது சமதரப்பினரான மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்திய ஷீ, 27 இருதரப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். "மூலோபாய கூட்டுறவு பங்காண்மையை" ஆழப்படுத்துவதற்கான ஒரு "நடவடிக்கைத் திட்டம்" இதில் குறிப்பிடத் தக்கதாகும். ஏனைய ஒப்பந்தங்கள் மின்சார துறை, தொழில் துறை, கடலோர நில விரிவாக்கம், நீர் வழங்கல் மற்றும் பிற பகுதிகளிலும் பில்லியன் கணக்கான டாலர்கள் செலவில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளாகும். கூட்டறிக்கை பிரகடனம் செய்ததாவது: இரு தரப்பினரும் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் மற்றும் பாதுகாப்பு தொடர்பான அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், இராணுவ கல்வியாளர்கள் பரிமாற்றம் மற்றும் இராணுவத் தேவைகளுக்கு ஒத்துழைத்தல் போன்ற துறைகளில் ஒத்துழைக்கவும் உடன்படுகின்றனர்.” "வருகைகள் வேகத்தை நிலைநாட்டுவதற்காகவும்". “அனைத்து மட்டங்களிலும் இரு நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் இராணுவ படைகளுக்கும் இடையேயான விஜயங்களின் அளவை பேணுவதற்கும்”, மேலும் உடன்பாடு காணப்பட்டுள்ளது. சீனாவின் கடல்சார் பட்டுப்பாதை திட்டத்துக்கும் ஷீ கொழும்பின் ஆதரவை வென்றார். இதில் “செயல்முறையில் பங்கேற்கவும் ஒத்துழைக்கவும்" இலங்கை உடன்பட்டுள்ளதோடு 1.4 பில்லியன் அமெரிக்க டாலர் சீனக் கடனுடன் ஒரு செயற்கை தீவில் கொழும்பு துறைமுக நகரம் ஒன்றை கட்டியெழுப்பும் நடவடிக்கையும் தொடங்கி வைக்கப்பட்டது. இலங்கையின் "மிகப் பெரிய அபிவிருத்தி திட்டமாக" முன்னிலைப்படுத்தப்படும் இந்த துறைமுகமானது, அதை கட்டியெழுப்பும் சைனா கொம்மியூனிகேஷன் கன்ஸ்றக்ஷன் (China Communication Construction) நிறுவனத்தின்படி, பெய்ஜிங்குக்கு அதன் மூலோபாய முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டும் வகையில், "ஆசியாவின் கடல்சார் பட்டுப் பாதையின் மையமாக" இருக்கும். இராஜபக்ஷவும் ஷீயும் 900 மெகாவாட் அனல் மின்நிலையமொன்றின் இறுதி கட்டத்தையும் ஆரம்பித்து வைத்தனர். 1.3 பில்லியன் டாலர் மதிப்புள்ள சீன முதலீட்டு திட்டமான இந்த மின் நிலையம், வடமேல் மாகாணத்தில் நுரைச்சோலையில் கட்டப்பட்டு வருகின்றது. பொருளாதார உறவுகளை மேலும் வளர்க்க, இரு அரசாங்கங்களும் "சீனா-இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை தொடங்குவதாக அறிவித்ததோடு அவற்றை விரைவில் செயல்படுத்துவதற்கான தமது உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்தினார்." 2005ல் இராஜபக்ஷ ஆட்சிக்கு வந்ததில் இருந்து, சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகமானது 2013ல் 3 பில்லியன் டாலர் வரை 368 சதவிகிதத்தால் அதிகரித்தது. கடந்த ஆண்டு, சீனாவானது அமெரிக்காவை விஞ்சி, இந்தியாவுக்கு அடுத்த இலங்கையின் இரண்டாவது பெரிய வர்த்தக பங்காளியாக மாறியது. பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராஜபக்ஷவின் யுத்தத்துக்கு பெய்ஜிங் கொடுத்த தடையற்ற ஆதரவுக்கு ஈடாக, அவரிடம் இருந்து பொருளாதார மற்றும் பூவிசார் அரசியல் சலுகைகளைப் பெறுவதன் மூலம், இந்து சமுத்திரத்தில் தீர்க்கமான கடல் பாதைக்கு அருகில் அமைந்துள்ள இலங்கையில் சீனா தனது செல்வாக்கை வளர்த்துக்கொண்டது. இராஜபக்ஷவை பொறுத்தவரையில், புலிகளுக்கு எதிரான உள்நாட்டு யுத்தத்தின் போது அவரது இராணுவம் இழைத்த போர்க்குற்றங்களை சுரண்டிக்கொண்ட அமெரிக்கா மற்றும் மேற்கத்தைய சக்திகளால் திணிக்கப்படும் அழுத்தத்தை எதிர்கொள்வதற்கு, சீனா உடனான நெருக்கமான உறவுகள் தீர்க்கமானவை ஆகும். இராஜபக்ஷவின் யுத்தத்தை முழுமையாக ஆதரித்த அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும், நாட்டை சீனாவிடம் இருந்து தூர விலகச் செய்வதற்கு அவரை நெருக்குவதற்காக "மனித உரிமைகள்" பிரச்சினையை வஞ்சகத்தனமாக பயன்படுத்தி வருகின்றன. இராஜபக்ஷவுக்கான பெய்ஜிங்கின் ஆதரவை கோடிட்டுக் காட்டி, ஷீ கொழும்பில் அரசாங்கத்துக்கு சொந்தமான டெயிலி நியூஸ் பத்திரிகையில் ஒரு கடிதத்தை வெளியிட்டார். சீனா, "எந்த சாக்குப் போக்கின் கீழும் இலங்கையின் உள் விவகாரங்களில் எந்த நாடும் தலையிட முயல்வதை எதிர்க்கிறது," என்று அவர் எழுதியிருந்தார். துறைமுக வசதிகள், அதிவேக வீதிகள் மற்றும் புதிய சர்வதேச விமான நிலையம் உட்பட உட்கட்டமைப்பு திட்டங்களுக்காக சீன நிதியைப் பெற இராஜபக்ஷ அரசாங்கம் ஏங்குகிறது. 2013 செப்டம்பரில் 6 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான முதலீட்டுடன், இந்தியாவுக்கு பதிலாக இலங்கையின் மிகப்பெரிய முதலீட்டாளராக சீனா மாறிவிட்டது. இராஜபக்ஷ, வளைந்து கொடுக்கும் செய்தி ஊடகங்களின் உதவியுடன், தனது அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகள் மீது தொழிலாள வர்க்கம் மற்றும் கிராமப்புற உழைப்பாளிகள் மத்தியில் வளர்ந்து வரும் கோபத்தை தணிப்பதற்காக, ஷீயின் வருகையை ஒரு சாகச விளம்பரமாகப் பயன்படுத்திக்கொண்டார். ஷீயின் வருகையால் கொண்டுவரப்பட்ட "நாட்டிற்கான நலன்கள்" பற்றி தூக்கிப் பிடிக்கும் செய்திகளால் ஊடகங்கள் நிறைந்து போயிருந்தன. "கொழும்பு துறைமுக நகரக் கனவு நனவாகின்றது," "துறைமுக நகருடன் கொழும்பு முகமலர்ச்சி பெறுகிறது”, மற்றும் “துறைமுக நகரம் ‘ஆசியாவின் அதிசயமாக’ நாட்டின் நிலையை உறுதிப்படுத்தும்” என்ற தலைப்புகள் ஊடக முகங்களில் காணப்பட்டன. நாட்டில் “ஒவ்வொரு பிரஜைக்கும் மலிவாக மின்சாரத்தை” வழங்குவதற்கான வழியாக நுரைச்சோலை மின் திட்டத்தை பாராட்டிய இராஜபக்ஷ, மின்சாரக் கட்டணத்தில் 25 சதவீத குறைப்பையும் எரிபொருள் விலையில் கொஞ்சம் இறக்கத்தையும் உடனடியாக அறிவித்தார். அடுத்தடுத்து ஏற்பட்ட அதிகரிப்பிற்கு பிறகு வரும் இந்த விலை குறைப்பு, ஊவா மாகாண சபை தேர்தலிலும் அடுத்த ஆண்டு இடம்பெறும் சாத்தியமுள்ள பொதுத் தேர்தலிலும் வாக்காளர்களை ஏமாற்றுவதற்கான ஒரு முயற்சியே ஆகும். சீனாவின் முதலீடுகளை புகழும் அதேவேளை, இலங்கை ஆளும் உயரடுக்கின் சில பிரிவுகள், அமெரிக்க மற்றும் ஏனைய மேற்கத்திய சக்திகளுடனான உறவுகள் சரிவதையிட்டு கவலை வெளியிட்டுள்ளன. இந்த பதட்டமானது மத்திய கிழக்கில் வாஷிங்டனின் புதுப்பிக்கப்பட்ட யுத்தம் மற்றும் ரஷ்யாவுடனும் சீனாவுடனுமான மோதல் நிலைமைகளின் மத்தியிலேயே வருகிறது. செப்டம்பர் 14, சண்டே டைம்ஸ் பத்திரிகையின் ஆசிரியர் தலைப்பு, இராஜபக்ஷ அரசாங்கத்துடனான சீனாவின் நிதி உடன்படிக்கைகளின் இரகசியம் மற்றும் வேகமும், “ஒரு வகையில் கூறினால், இலங்கை சீனாவின் பைக்குள் இருக்கின்றது என்ற சதி கோட்பாடுகளுக்கு எரியூட்டுவதாகவும் மற்றும் உண்மையான அச்சத்தை எழுப்புவதாகவும்” இருப்பதாக முறைப்பாடு செய்துள்ளது. “பெய்ஜிங் உடனான அதன் உறவுகளில் சில கட்டுப்பாடுகளை திணிப்பதோடு சீனக் கடன் சுமையின் கீழ் நசிபட்டாலும், இந்த நாடு அடிபணிந்துவிடவில்லை என்று காட்டவேண்டும்” என்று அரசாங்கத்துக்கு அது ஆலோசனை வழங்குகிறது. “இதை செய்வதற்கான வழிகளில் ஒன்று, ஏனைய நாடுகளுடன் உறவுகளை புத்துயிர்பெறச் செய்வது அல்லது வலுப்படுத்துவதன் மூலம் சமநிலைப்படுத்துவது ஆகும்” என்று அது மேலும் கூறுகிறது. தனது வலதுசாரி அமெரிக்க சார்பு சாதனைக்கு பேர் போன, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் (யூஎன்பி) தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஷீயின் வருகையை வரவேற்ற போதிலும், அரசாங்கத் திட்டங்களில் ஊழல்கள் பற்றி குற்றஞ்சாட்டினார். ஒரு "ஊழல் எதிர்ப்பு பிரச்சாரத்தை" பரிந்துரைத்த அவர், அபிவிருத்தி உதவிகள், மானியங்கள், வணிக மற்றும் மனிதாபிமான நிதி வழங்கல்கள் போன்றவை உட்பட பொருளாதார நடவடிக்கை துறை முழுவதும் இந்த பிரச்சாரம் சென்றடையும், என்று யூஎன்பீ நம்புகிறது” என அவர் தெரிவித்தார். இலங்கை போர் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணைக்கு அழைப்பு விடுத்து மார்ச் மாதம் ஐநா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்ட அமெரிக்க ஆதரவிலான தீர்மானத்தில் வெளிப்படுத்தப்பட்டவாறு, தீவிரமாகி வரும் அமெரிக்க அழுத்தத்துக்கு பதிலிறுப்பாக, இராஜபக்ஷ அமெரிக்க மூலோபாய நலன்களுடன் இணைந்துகொள்வதற்கான தனது விருப்பத்தை சமிக்ஞை செய்துள்ளார். மிக சமீபத்தில், ஒரு சீன நட்பு நாடான வட கொரியாவின் ஏவுகணை திட்டம் பற்றி கவலை தெரிவிப்பதில், அவர் ஜப்பான் பிரதமர் அபேயுடன் இணைந்துகொண்டார். அதே சமயம், சீனாவுடனான தனது அரசாங்கத்தின் உறவுகளை பேணும் இராஜபக்ஷ, உலகளவில் வளர்ச்சியடைந்து வரும் புவிசார் அரசியல் பதட்டங்களுக்கு மத்தியில் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு சமநிலைப்படுத்தும் செயலில் ஈடுபட்டு வருகின்றார். |
|