World Socialist Web Site www.wsws.org |
The bombing of Syria and unending US war சிரியா மீதான குண்டுவீச்சும், முடிவில்லா அமெரிக்க யுத்தமும்
Bill Van
Auken மீண்டுமொருமுறை அமெரிக்க இராணுவ எந்திரம், மத்திய கிழக்கின் ஒரு பாதுகாப்பற்ற நாட்டின் மீது—இந்த முறை சிரியாவின் மீது—க்ரூஸ் ஏவுகணைகளைச் செலுத்தி, குண்டுகளை வீசியிருக்கிறது. 2003இல் ஈராக்கிற்கு எதிராக நடத்திய "அதிரடி-ஆக்கிரமிப்பு" மற்றும் 2011இல் லிபியாவில் ஆட்சி மாற்றத்திற்காக நடத்திய "மனிதாபிமான" யுத்தம் போலவே, வாஷிங்டன் பொய்களின் அடிப்படையில் அமெரிக்க மக்களை ஆக்கிரமிப்பு யுத்தத்திற்குள் பலவந்தமாக தள்ளுகிறது. அமெரிக்க இராணுவவாதத்தின் இந்த சமீபத்திய வெடிப்பில் அநேகமாக எது மிகவும் அதிர்ச்சியூட்டும் விதத்தில் வேறுபட்டு இருக்கிறதென்றால், அமெரிக்க ஜனாதிபதி முற்றிலும் மேம்போக்கான முறையில், வாஷிங்டன் இன்னுமொரு நாட்டின் மீது தாக்குதல் நடத்தியுள்ளதென அறிவித்ததுதான். பராக் ஒபாமா செவ்வாயன்று வெள்ளை மாளிகையின் புல்வெளியில் ஹெலிகாப்டரில் ஏறுவதற்கு முன்னதாக வெறும் மூன்று நிமிடங்கள் பேசினார். “உலகம் இதுவரை அறிந்திராத மிகச்சிறந்த இராணுவம்" என்ற பாராட்டுடன் தொடங்கி, அவர் வழங்கிய சுருக்கமான கருத்துக்கள், அமெரிக்க ஆளும் வர்க்கம் அதன் இராணுவ தலையீடுகளை, நியாயப்படுத்துவது தேவையற்றது என்பது மட்டுமல்ல, விவரிப்பதற்கு கூட கடமைப்பட்டிருப்பதாக உணரவில்லை என்பதைத்தான் தெளிவுபடுத்தியது. அவற்றை பொதுமக்கள் வெறுமனே ஏதோ வாழ்வின் நிரந்தர உண்மையாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸைப் பொறுத்தவரையில், குண்டுவீச்சு தொடங்குவதற்கு முன்னரே, ஐந்து-வார தேர்தலுக்கு-முந்தைய விடுமுறைக்காக அது வெகுதூரம் நகரை விட்டோடிவிட்டது. போர் தொடுப்பது மீதான அதன் அரசியலமைப்பு அதிகாரத்தை அது முற்றிலுமாக கைத்துறந்து விட்டிருக்கின்ற அதேவேளையில், வாக்குப்பதிவின்போது இந்த மிக முக்கிய கேள்வி ஒரு பிரச்சினையாகிவிடாமல் தடுப்பதற்காக அது வேலை செய்து வருகிறது. ஜனநாயக கட்டுப்பாடு குறித்தும் மற்றும் மக்கள் ஆதரவு இல்லை என்ற சாக்குபோக்குகளுக்கு மத்தியிலும், அனைத்து நிஜமான முடிவுகளும் அரசின் மிக சக்திவாய்ந்த பிரிவுகளால், பரந்த இராணுவ-உளவுத்துறை அமைப்பால் எடுக்கப்படுகின்றது என்பது அதிகளவில் மிகத் தெளிவாக இருக்கிறது. குறிப்பிடத்தக்க விதத்தில், சிரிய யுத்தம் குறித்த முதல் பொது அறிவிப்பு வெள்ளை மாளிகையிலிருந்து வரவில்லை, மாறாக பெண்டகனிலிருந்தான் வந்துள்ளது. ஒபாமா இந்த கொலைகார அமைப்பின் வெறும் ஒரு ஊதுகுழலாக சேவை செய்கிறார், அத்துடன் தரைப்படை துருப்புகளைக் கொண்டு செல்லப் போவதில்லை என்ற அவரது தொடர்ச்சியான வாக்குறுதிகளோ, தளபதிகள் அவர்களின் மூலோபாயத்தை நடைமுறைப்படுத்தி வருகையில் விரைவிலேயே ஓரங்கட்டப்பட உள்ளன. மேலும் ஒரு நாட்டிற்கு எதிராக யுத்தம் தொடங்குவதென்பது ஏறத்தாழ வழக்கமான, ஒரு முடிவில்லாத மற்றும் அமெரிக்க அரசியல் சூழ்நிலையின் தொடர்ச்சியான அம்சங்களில் ஒன்றாகிவிட்டது என்ற உணர்வு அங்கே இத்தகைய நடவடிக்கைகளில் நிலவுகிறது. இந்த கடிவாளமற்ற இராணுவவாதம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய நலன்களைப் பின்தொடர்வதில் மட்டும் ஒரு கருவியாக இருக்கவில்லை, மாறாக சமூக ஸ்திரமின்மையை ஒழுங்குமுறைப்படுத்தவும், முன்னேறிய முதலாளித்துவ நாடுகளிலேயே மிக சமூகரீதியில் துருவமுனைப்பட்டுள்ள நாட்டில் கிளர்ந்தெழும் ஆழ்ந்த பதட்டங்களை வெளியே நோக்கி திருப்பிவிடவும், ஒரு கருவியாக இருக்கிறது. செவ்வாயன்று அவரது சுருக்கமான அறிக்கையில் ஒபாமா, "நமது நண்பர்கள் மற்றும் பங்காளிகளான சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜோர்டன், பஹ்ரெய்ன், மற்றும் கட்டார்," ஆகியவற்றுடன் "தோளோடு தோள் சேர்ந்து நிற்பதில் பெருமைப்படுவதாக" அவரே அறிவித்தார். அவை சிரியாவிற்கு எதிராக அமெரிக்க விமான குண்டுவீச்சில் சிறிய ஒத்துழைப்பு பாத்திரங்களை வகித்தன. அவர்களின் நண்பர்களைப் தெரிந்தால் அவர்களைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்ளலாம். வாஷிங்டன், மத்திய கிழக்கின் அரச ஒட்டுண்ணிகள் மற்றும் விபச்சாரர்களுடன் "தோளோடு தோள் சேர்த்து" “பயங்கரவாதத்திற்கு" எதிரான யுத்தத்திற்கு செல்கிறது, அவர்கள் சமீபத்திய காலம் வரையில் இப்போது இலக்கில் வைக்கப்பட்டிருக்கும் இதே "பயங்கரவாதிகளுக்கு" நிதியளித்து பிரதான வள்ளல்களாக சேவை செய்து வந்தார்கள். ஒபாமாவால் அமெரிக்க யுத்தத்திற்குப் பின்னால் அணிவகுக்க செய்யமுடிந்த ஒரே அரசுகள் அந்த நான்கு முடியாட்சிகளாகும், அவை சவுதி அரேபியா உட்பட பெரிய எண்ணெய் பெருநிறுவனங்களின் துணைநிறுவனங்கள் என்பதற்கு சற்றே மேலதிகமாக இருக்கின்றன, அவற்றின் வழக்கமான தலையைத் துண்டித்து கொல்லும் நடவடிக்கை ISISக்கு ஒரு உத்வேகமாக சேவை செய்கிறது, அத்துடன் ஐந்தாவது—அதாவது ஜோர்டன்—அது இஸ்ரேலின் ஒரு வாடிக்கை அரசாக செயல்படுகிறது. ஊடகங்களால் ஒபாமாவிற்கான ஒரு "அதிரடி வெற்றியாக" புகழப்படும் இந்த இழிந்த கூட்டணி, வாஷிங்டனின் புதிய யுத்தத்தினது முற்றிலும் ஊழல்மிகுந்த மற்றும் சட்டவிரோத குணாம்சத்தை மட்டுமே அம்பலப்படுத்துகிறது. பெருநிறுவன-கட்டுப்பாட்டில் உள்ள சில ஊடகங்கள், இந்த தலையீடு துல்லியமாக சிரியாவிற்கு எதிராக திட்டமிடப்பட்ட, முந்தைய விமான தாக்குதல்களிலிருந்து ஒபாமா நிர்வாகம் ஒதுங்கிக் கொள்ள நிர்பந்திக்கப்பட்ட ஓராண்டிற்குப் பின்னர் வருவதைக் குறிப்பிட்டுக் காட்டி கவலைப்படுகின்றன. ஓராண்டுக்கு முந்தைய அந்த தாக்குதல், முற்றிலுமாக வேறு போலிக்காரணத்தின் அடிப்படையில்—அதாவது சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் ஆட்சி அவரது சொந்த மக்களுக்கு எதிராக இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியது என்ற அடிப்படையில் தொடங்கப்படுவதாக இருந்தது, ஆனால் அந்த பொய் பின்னர் மதிப்பிழந்து போனது. மக்களின் எதிர்ப்பை முகங்கொடுத்ததாலும், பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட ஒரு வாக்கெடுப்பு அதன் சர்வதேச வேஷத்தை அகற்றியதாலும், யுத்தத்திற்கு ஆதரவாக வாக்களிக்க அமெரிக்க காங்கிரஸ் மறுத்ததாலும், ஒபாமா, சிரியாவின் இரசாயன ஆயுதங்களை அழிப்பது மற்றும் ஈரானின் அணுஆயுத திட்டங்களின் மீது பேச்சுவார்த்தைகளைப் புதுப்பிப்பது ஆகியவற்றை உள்ளடக்கிய மாஸ்கோவினால் மத்தியஸ்தம் செய்யப்பட்ட ஓர் உடன்படிக்கையை ஏற்க நிர்பந்திக்கப்பட்டார். அப்போதிருந்து, வெள்ளை மாளிகையும் பெண்டகனும், இப்போதைய பயங்கரவாத அச்சுறுத்தல்கள் குறித்த பெருநிறுவன ஊடகங்களால் திரும்ப திரும்ப கூறப்படும் ஒரு புதிய பொய்களின் தொகுப்புடன் நியாயப்படுத்தப்பட்ட அவர்களின் யுத்தத்திட்டங்களை மறுதிருத்தம் செய்து வந்துள்ளன. வெள்ளை மாளிகை, பெண்டகன், அரசுத்துறை அல்லது ஊடகங்களால் அது குறித்து எதுவுமே கூறப்படவில்லை என்பது தான் உண்மையாக இருக்கிறது என்ற மூலக்கூற்றே இந்த புதிய அமெரிக்க யுத்தத்தின் ஒரு தெளிந்த மதிப்பாய்வு செய்வதற்கான மதிப்பார்ந்த தொடக்க புள்ளியாக உள்ளது. அமெரிக்க விமான தாக்குதல்களின் பிரதான இலக்கான அதாவது ஈராக் மற்றும் சிரியாவின் இஸ்லாமிக் அரசு அமெரிக்காவிற்கு உடனடி அச்சுறுத்தலை கொடுக்கவில்லை என்று சமீபத்திய வாரங்களில் மீண்டும் மீண்டும் கூறப்பட்டு வந்த நிலையில், நிர்வாகம் திடீரென இதுவரையில் அறியப்படாத பயங்கரவாத பிரிவான “குராசான் குழு" (Khorasan Group) சிரியாவில் இருப்பதாகவும், அதன் திட்டங்கள் "அபிவிருத்தி செய்யப்பட்ட நிலையில்" இருப்பதாக செய்திகள் கிடைத்திருப்பதாகவும், அதுவொரு உடனடி அபாயத்தை முன்னிறுத்துவதாகவும் அறிவித்துள்ளது. தொலைக்காட்சியில் பேசும் தலைவர்களும், கைக்கூலிபெறும் பாதுகாப்புத்துறை நிபுணர்களும் அந்த குராசான் அபாயம் எனப்படுவதை, அது நீண்டகாலமாகவே இருந்த ஒன்றாகவும் மற்றும் அதுபற்றி நன்கு அறிந்திருந்ததாகவும் அதை ஓர்வெல்லியன் பாணியில் குறைகூறி, தமது ஒரேமாதிரியான பிரதிபலிப்பை காட்டியுள்ளனர். யதார்த்தம் என்னவென்றால் இப்போதைய யுத்தம் அப்பிராந்தியத்தில் முந்தைய அமெரிக்க தலையீடுகளின் பேரழிவுகர விளைவுகளிலிருந்து நேரடியாக வளர்கிறது. ஈராக்கில் எட்டு ஆண்டுகளுக்கும் மேலான யுத்தம் மற்றும் ஆக்கிரமிப்பின் போது, ஈராக்கிய சமூகத்தை நாசப்படுத்தியமை மற்றும் நூறு ஆயிரக்கணக்கான அந்நாட்டு மக்களைப் படுகொலை செய்தமை இரண்டுமே அதில் உள்ளடங்கும். அதேபோன்ற பேரழிவு, வாஷிங்டன் மற்றும் அதன் கூட்டாளிகளால் ஒத்துஊதப்பட்ட மற்றும் ஆதரிக்கப்பட்ட ஆட்சி-மாற்றத்திற்கான ஒரு குறுங்குழுவாத உள்நாட்டு யுத்தம் மூன்றாண்டுகளாக சிரியா மீதும் கொண்டுவரப்பட்டிருக்கின்றது. ISIS என்பது மிகப்பரந்தளவிற்கு சிரியாவில் அமெரிக்க தலையீட்டின் நேரடி விளைபொருளாகும், அது, அதற்கு முன்னர் லிபியாவில் போலவே, ஆட்சி-மாற்ற யுத்தத்தில் அதன் தரைப்படை துருப்புகளாக குறுங்குழுவாத இஸ்லாமிய ஆயுதக்குழுக்களை பலமாக சார்ந்திருந்தது. அமெரிக்க உளவுத்துறைக்கு ISISஇல் உள்ள முன்னணி நபர்களை தெரியும் என்பதுடன், அவர்களுடன் சேர்ந்து அது வேலை செய்திருக்கிறது. அவர்களின் குற்றங்களும் மற்றும் அட்டூழியங்களும் CIAஇன் அழுக்கு யுத்தங்களின் தனித்துவமான அடையாளங்களை தாங்கி உள்ளன. இந்த ஆயுதக்குழுக்களது நடவடிக்கைகள் ஈராக்கில் சுன்னி மக்களின் கிளர்ச்சியுடன் ஒற்றோடு ஒன்றிணைந்தபோது, அமெரிக்காவினால் பயிற்சியளிக்கப்பட்ட ஈராக்கிய பாதுகாப்பு படைகளைச் சிதைக்க மற்றும் அந்நாட்டின் பெரும் பகுதிகளில் கட்டுப்பாட்டை இழக்க இட்டுச் செல்கிறது. இங்குதான் ISISஇன் நிகழ்ச்சிநிரல் வாஷிங்டனுடன் மோதலுக்கு வருகிறது. இருந்தபோதினும், அமெரிக்க தலையீட்டின் பிரதான நோக்கம் ஓராண்டுக்கு முன்னர் என்னவாக இருந்ததோ அதுவே தான், அதாவது மூலோபாயரீதியில் முக்கியமான மற்றும் எண்ணெய் வளம்மிகுந்த மத்திய கிழக்கின் மீது அமெரிக்க மேலாதிக்கத்தை அழியாது காப்பாற்றி வைப்பது, மற்றும் டமாஸ்கஸின் பிரதான கூட்டாளிகளுக்கு எதிராக—ஈரான் மற்றும் ரஷ்யாவிற்கு எதிராக—இன்னும் அதிக பேரழிவு யுத்தங்களுக்குத் தயாரிப்பு செய்வது ஆகிய நோக்கத்துடன், அசாத் அரசாங்கத்தைப் பதவியிலிருந்து கவிழ்ப்பதும் மற்றும் அமெரிக்க-கட்டுப்பாட்டைக் கொண்ட கைப்பாவை ஆட்சியை அங்கே கொண்டு வருவதும் ஆகும். சிரியாவிற்கு எதிராக குண்டுவீச்சு நடவடிக்கையைத் தொடங்கியுள்ள அதே நிர்வாகம், ஒரேநேரத்தில், ரஷ்யா மற்றும் சீனாவுடனான யுத்தத்திற்கு தயாரிப்பு செய்வதில் வாஷிங்டனின் அணுஆயுத கையிருப்புகளை மேம்படுத்த 1 ட்ரில்லியன் டாலர் திட்டத்தையும் தொடங்கி வருகிறது. இந்த அபிவிருத்திகள் முதலாம் உலக போர் மற்றும் இரண்டாம் உலக போர் தொடங்கியதற்குப் பின்னர் பார்த்திராத அளவுக்கு ஏகாதிபத்திய இராணுவவாதத்தின் ஒரு மீளெழுச்சியின் பாகமாக உள்ளன. தற்போதைய மோதல் விரிவடைந்து வருவதானது, மனிதகுலத்தை ஒரு பேரழிவுகரமான மூன்றாம் உலக யுத்தத்திற்குள் இழுத்துச் செல்லும் சாத்தியக்கூறைக் கொண்டிருக்கிறது. மத்திய கிழக்கு மற்றும் உலகெங்கிலும் கட்டவிழ்ந்துவரும் சம்பவங்கள், நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவால் கொண்டு வரப்பட்ட தீர்மானம்—"சோசலிசமும் ஏகாதிபத்தியப் போருக்கு எதிரான போராட்டமும்"—மற்றும் அமெரிக்க சோசலிச சமத்துவ கட்சியால் கொண்டு வரப்பட்ட தீர்மானம்—"யுத்தத்திற்கு எதிரான போராட்டமும் சோசலிச சமத்துவக் கட்சியின் அரசியற்பணிகளும் ஆகிய தீர்மானங்களுக்கு ஒரு சக்திவாய்ந்த நிரூபணமாக உள்ளன. இந்த ஆவணங்களைக் கவனமாக ஆராய்ந்து, சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவை கட்டியெழுப்புவதில் இணைய முடிவெடுக்குமாறு நாங்கள் எமது வாசகர்களை வலியுறுத்துகிறோம். அதிகரித்துவரும் யுத்த அச்சுறுத்தலுக்கு பதிலளிக்கும் ஒரே வழிவகையாக முதலாளித்துவத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை சர்வதேசரீதியில் ஐக்கியப்படுத்துவதற்காக நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவும் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியும் மட்டுமே போராடி வருகின்றன. |
|