World Socialist Web Site www.wsws.org |
The impact on Europe of the Scottish independence referendum ஸ்காட்லாந்து சுதந்திரத்திற்கான சர்வஜன வாக்கெடுப்பின் ஐரோப்பா மீதான தாக்கம்
Chris
Marsden and Robert Stevens சுதந்திரத்திற்கான ஸ்காட்டிஷ் சர்வஜன வாக்கெடுப்பு, பிரிட்டனுக்கும் மற்றும் முழு ஐரோப்பாவிற்கும் ஒரு வரலாற்று திருப்புமுனையாகும். செப்டம்பர் 18 வாக்கெடுப்பின் விளைவுகள் இருதரப்பினருக்கும் பெரும்பான்மை இருக்காது என்ற நிலையில், ஒரு சமீபத்திய கருத்துக்கணிப்பு முதன்முறையாக பிரிந்து போவதற்கு ஆதரவானவர்களுக்கு ஒரு பெரும்பான்மை இருப்பதாக காட்டியிருப்பது, அக்கண்டம் முழுவதிலும் ஆளும் வட்டாரங்களில் ஒரு நெருக்கடியைத் தூண்டிவிட்டது. பல அரசியல் தலைவர்களும், செல்வாக்குமிக்க பிரபலங்களும் ஸ்காட்டிஷ் சுதந்திரத்தை எதிர்ப்பதற்கு ஓரணியில் நிற்பதுடன், அதன் பேரழிவுகரமான தாக்கங்களை எச்சரித்து வருகிறார்கள். முதல் சான்றாக, இந்த பிரதிபலிப்பானது ஸ்காட்லாந்து பிரிந்தால் இங்கிலாந்தின் பொருளாதார நெருக்கடி மட்டும் ஆழமடையாது, மாறாக அதனுடன் சேர்த்து ஒட்டுமொத்த ஐரோப்பாவையும் கீழே இழுக்கும் என்ற அச்சத்தால் உந்தப்பட்டிருக்கிறது. பிரிந்துபோவதற்கு ஆதரவான வாக்குகள் கிடைத்தால் பவுண்டின் மதிப்பில் 15 சதவீதம் சரியும் என்ற அனுமானங்களுக்கு இடையே, கடந்த மாதத்தில் சுமார் 17 பில்லியன் பவுண்டு மதிப்பிலான இங்கிலாந்து பங்குகள், பத்திரங்கள் மற்றும் இதர நிதியியல் சொத்துக்கள் முதலீட்டாளர்களால் விற்கப்பட்டுள்ளன. பிரிந்துபோவதற்கு ஆதரவான வாக்குகள் கிடைக்கும் என்ற அச்சத்தில், "வோல் ஸ்ட்ரீட் வங்கி லெஹ்மென் பிரதர்ஸின் பொறிவுக்குப் பின்னர், பிரிட்டிஷ் முதலீடுகள், மிகப் பெரிய அளவில் விற்றுத்தள்ளப்பட்டதாக" டைம்ஸ் குறிப்பிட்டது. அந்த லெஹ்மென் பொறிவு தான், 2008 பூகோள நிதியியல் நெருக்கடியை மற்றும் சர்வதேச அளவில் முதலாளித்துவ அமைப்புமுறையின் உடைவைத் தூண்டிவிட்டிருந்தது. குறிப்பாக ஐரோப்பா ஏற்கனவே மோசமான நிலைமையில் இருக்கின்ற நிலையில், இங்கிலாந்து பொருளாதாரத்தின் ஒரு பொறிவும் அதேயளவுக்கு பேரழிவுகரமானதாக இருக்கும். இந்த மாதம் தான், ஐரோப்பிய மத்திய வங்கி அந்த கண்டத்தின் பொருளாதாரத்திற்கு ஊக்கமளிக்கும் மற்றும் பணச்சுருக்கத்திற்குள் மூழ்கிவிடாமல் தடுக்கும் ஒரு கடைசி பிரயத்தன முயற்சியில் 0.05 சதவீதம் வட்டிவிகிதங்களை வெட்டியது, அத்துடன் முதல் தொடக்கமாக 100 பில்லியன் யூரோ மதிப்பிலான தனியார்-துறை பத்திரங்களை வாங்கவும் உடன்பட்டது. பிரான்ஸ் ஏற்கனவே பூஜ்ஜிய வளர்ச்சியில் இருக்கிறது, ஜேர்மனி மற்றும் இத்தாலி பொருளாதாரங்களோ ஒரு "மூன்று மடங்கு கீழ்நோக்கிய" பின்னடைவின் எச்சரிக்கைகளுக்கு இடையே சுருங்கிப் போயுள்ளன. 307 ஆண்டுகளுக்கு முந்தைய ஐக்கியத்திற்கான சட்டத்திற்குப் (Act of Union) பின்னர், இங்கிலாந்தில் ஓர் உடைவு, அவற்றின் சொந்த அரசுகளினது ஸ்திரப்பாட்டின் மீது ஏற்படுத்தும் தாக்கம் குறித்து ஐரோப்பிய ஆளும் மேற்தட்டுக்கள் அதிகமாக கவலையடைந்துள்ளன. பிரிட்டன் உடைய முடியுமென்றால், பின் ஐரோப்பாவின் பல இதர பகுதிகளிலும் அதேமாதிரியான நிகழ்வுகள் ஏற்பட முடியும். ஸ்காட்லாந்தின் சம்பவங்கள் இத்தாலி, பெல்ஜியம், ஸ்பெயின் மற்றும் ஏனைய இடங்களில் உள்ள பிரிவினைவாத இயக்கங்களாலும் தீவிரமாக பின்தொடரப்பட்டு வருகின்றன. கடந்த வியாழனன்று கட்டாலோனியாவிற்கு சுதந்திரமளிக்க வேண்டுமென பார்சிலோனாவில் நூறு ஆயிரக் கணக்கானவர்கள் ஓர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். பலர் ஸ்காட்டிஷ் சால்டையர் கொடியை ஏந்தியிருந்தார்கள், கட்டாலன் சுதந்திரம் மீது நவம்பர் 9இல் ஓர் உத்தியோகபூர்வமற்ற வெகுஜன வாக்கெடுப்பு நடத்துவதை ஸ்பெயின் அங்கீகரிக்குமாறு கோர அவர்கள் ஸ்காட்லாந்தின் சட்டபூர்வ வாக்கெடுப்பை மேற்கோளிட்டுக் காட்டினார்கள். ஏனைய இடங்களிலும், ஸ்காட்லாந்தில் இருப்பதைப் போன்ற ஒரு பிரிவினைவாத இயக்கம் இல்லாமல் இருப்பது ஐரோப்பிய ஆளும் மேற்தட்டுக்களுக்கு சற்றே சௌகரியமாக இருக்கிறது. ஸ்காட்லாந்தில், பழைய ஸ்தாபக கட்சிகள் சிக்கன நடவடிக்களைத் திணித்ததாலும் மற்றும் அவர்களின் போர்வெறியின் காரணமாகவும் அவற்றை நோக்கி இருந்த ஆழ்ந்த விரோதத்தை, ஸ்காட்டிஷ் தேசிய கட்சியாலும் (SNP) மற்றும் அதனுடன் இணைந்துள்ள பல்வேறு அமைப்புகளாலும் பெரிதும் வெற்றிகரமாக சுரண்ட முடிந்திருந்ததன் விளைவாகவே அவை அங்கே ஆதரவை பெறக்கூடியதாக இருந்தது. இது இங்கிலாந்தில் உள்ள ஆளும் பழமைவாத-தாராளவாத ஜனநாயக கூட்டணியோடு மட்டும் மட்டுப்படவில்லை. இங்கிலாந்திற்குள் ஸ்காட்லாந்து இணைந்திருப்பதற்கு ஒரு காரணத்தை வழங்குவது ஒருபுறம் இருக்கட்டும், தொழிற்கட்சியால் இத்தகைய கட்சிகளுக்கு ஒரு மாற்றீடாக முன்னிற்க இயலாமல் இருந்திருக்கிறது, ஏனென்றால் அது ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானிய சட்டவிரோத யுத்தங்களுக்கு அளித்த ஆதரவிற்காக, சுதந்திர-சந்தை பிரச்சாரங்களை அது தீவிரமாக ஊக்குவித்தற்காக, வங்கிகளுக்கு வழங்கிய 2008 பிணையெடுப்புகளுக்காக, மற்றும் 2010இல் அதிகாரத்திலிருந்து வெளியேற்றப்படுவதற்கு முன்னர் அது திணிக்கத் தொடங்கிய கடுமையான சிக்கன நடவடிக்கைகளுக்காக பரவலாக அது வெறுக்கப்படுகிறது. வேறெந்த ஐரோப்பிய கட்சியும் ஒரு நல்ல நிலையில் இல்லை. அவையனைத்தும் தற்போதைய அமைப்பு மீதான அதிருப்தி மற்றும் எதிர்ப்பின் அளவைக் கண்டு, அவை ஆரம்பநிலையில் இருந்தாலும் கூட, நடுக்கத்துடன் காணப்படுகின்றன. வியாழக்கிழமை வாக்குகளின் முடிவு என்னவாக இருந்தாலும், ஸ்காட்டிஷ் வாக்கெடுப்பால் உருவாக்கப்பட்ட ஆழ்ந்த பதட்டங்கள் முன்னொருபோதும் இல்லாதளவிற்கு ஆட்சியின் நெருக்கடியைச் சுட்டிக் காட்டுகின்றன. கடந்த சில நாட்களில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்புகளோ பெரும்பான்மையினர் சுதந்திரமடைவதற்கு எதிராக இருப்பதைக் காட்டுகின்றன, அது பிரிவினையால் உண்டாகும் பொருளாதார தாக்கம் குறித்த அச்சங்களைப் பிரதிபலிக்கிறது. அவ்வாறிருந்தாலும் கூட, சுதந்திரம் வேண்டும் என்ற வாக்குகள் தெளிவாக ஈடிணையில்லா அரசியல் நெருக்கடிக்கு சமிக்ஞையாக இருக்கையில், வேண்டாம் என்ற வாக்குகள் சிறிய வித்தியாசத்தில் வென்றாலும் ஒருமுறை திறந்துவிட்ட பன்டோராவின் பெட்டியை (ஒருமுறை திறந்தால் பல சிக்கலான தொடர்பிரச்சினைகளை உருவாக்கும் நிகழ்வுபோக்கு இவ்வாறு குறிக்கப்படுகிறது) மூடிவிடப் போவதில்லை. இதில் எதுவும் ஸ்காட்டிஷ் தேசிய கட்சியின் அல்லது வேறெங்கும் இருக்கும் அதுபோன்ற இயக்கங்களின் பிரிவினைவாத திட்டங்களுக்கு ஒரு முற்போக்கான குணாம்சத்தை அளிக்காது. மாறாக, அவற்றின் எழுச்சி முற்றிலும் பிற்போக்கானதே. எண்ணெய் மற்றும் வரி வருவாய்களில் பத்து பில்லியன் கணக்கான பவுண்டுகள் உட்பட ஸ்காட்லாந்தின் சொத்துக்களில் ஒரு பெரும் பங்கை அபகரிப்பதற்கும் மற்றும் குறைந்த வணிக வரிகளை அளித்தும் தொழிலாள வர்க்கத்தின் மீது சுரண்டலை அதிகரித்தும் பிரதான பெருநிறுவனங்களுடன் உறவுகளைப் பாதுகாத்து வருவதற்கும் கிடைக்கும் சாத்தியக்கூறுகளால் வெறியூட்டப்பட்ட, முதலாளித்துவத்தின் ஒரு கன்னையின் மற்றும் மத்தியதட்டு வர்க்க ஆதரவாளர்களின் ஒரு கூட்டத்தின் நலன்களை ஸ்காட்டிஷ் தேசியவாதம் வெளிப்படுத்துகிறது, அவற்றைத்தான் ஸ்காட்டிஷ் தேசிய கட்சி பிரதிநிதித்துவம் செய்கிறது. அதே கொள்ளையடிக்கும் பிரிவினர் தான் இத்தாலியின் பிரிவினைவாத வடக்கு கழகத்திலும் (Northern League), பெல்ஜியத்தின் விலாம்ஸ் பெலாங்கிலும் (Vlaams Belang), ஸ்பெயினின் கட்டாலன் மற்றும் பாஸ்க் (Basque) தேசியவாதிகளிடேயேயும், மற்றும் அந்த கண்டம் முழுவதிலும் உள்ள அதேபோன்ற உருவாக்கங்களிலும் கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கின்றன. பிரிவினைவாத திட்டத்திற்கு அடியிலிருக்கும் உண்மையான வர்க்க நலன்கள், முற்போக்கான சமூக கொள்கைகளை நடைமுறைப்படுத்த ஸ்காட்டிஷ் தேசிய கட்சியால் பலமுறை அளிக்கப்பட்ட வாக்குறுதிகளோடு பொருத்தமற்றதாக இருக்கின்றன என்பது பல தொழிலாளர்களுக்கு தெரியும். இத்தகைய சூழ்நிலைகளின் கீழ், ஸ்காட்டிஷ் சோசலிஸ்ட் கட்சி (SSP), தீவிர சுதந்திர பிரச்சார இயக்கம், மற்றும் முன்னாள் SSP தலைவர் டோமி ஷெரீடன் உட்பட சுதந்திரத்திற்கு ஆதரவான போலி-இடது ஊதுகுழல்களால் தேசியவாதத்தை முன்னெடுப்பதில் ஒரு முக்கிய பங்கு வகிக்கப்படுகிறது. அவை, பைனான்சியல் டைம்ஸாலும் விடுபட்டுவிடாமல், சுதந்திரம் வேண்டுமென்ற பிரச்சாரத்திற்கு ஆதரவை திரட்டுவதில் ஒரு "முக்கிய காரணியாக" வர்ணிக்கப்பட்டுள்ளன. ஏனென்றால், ஸ்காட்டிஷ் தேசிய கட்சி இனது வாதங்கள் ஒருபுறம் இருந்தாலும் கூட, அவை சுதந்திரமென்பது வெஸ்ட்மின்ஸ்டெரால் திணிக்கப்படும் வலதுசாரி கொள்கைகளுடன் முறித்துக் கொள்வதை குறிக்கும் என்று வாதிட்டு, உழைக்கும் மக்களின் மத்தியில் நிலவும் சமூக மற்றும் அரசியல் அதிருப்தியை ஸ்காட்டிஷ் தேசிய கட்சிக்குப் பின்னால் திருப்ப வேலை செய்கின்றன. ஆனால் வெறுமனே, சுதந்திரத்திற்குப் பின்னால் ஸ்காட்டிஷ் தேசிய கட்சி ஆளும் கட்சியாகிவிடும் என்பதால் பிரிவினைவாதம் பிற்போக்கானது என்றல்ல, மாறாக ஆளும் வர்க்கத்தால் அவ்வாறு இருப்பதாலாகும். ஸ்காட்லாந்து, மற்றும் ஐரோப்பாவின் தொழிலாள வர்க்கத்திற்கு பிரிவினைவாதத்தைத் தழுவுவது என்பது, முழுக்கண்டத்தையும் பால்கன்மயமாக்குவதற்கு மட்டுமே இட்டுச் செல்கிறது. அங்கே ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாளர்களை மற்றும் அந்த சிறிய பகுதிகளின் அடிமட்டத்தில் இருக்கும் சகோதரத்துவ இனங்களை ஒன்றுக்கு எதிராக மற்றொன்றை மோதவிட்டு, பேரழிவையே உண்டாக்கும். அது உழைக்கும் மக்களுக்கு இடையிலான உறவுகளில் நஞ்சூட்டி அவர்களை முதலாளித்துவ வர்க்கத்தின் எதிர்விரோத பிரிவுகளுக்குப் பின்னால் வரிசையில் நிற்க வைக்கின்ற தேசிய பகைமைகளின் வெடிப்பை அதற்குள் கொண்டு வருகிறது. ஐரோப்பாவின் ஒவ்வொரு பாகத்திலும் மற்றும் உலகம் முழுவதிலும், சர்வதேச வங்கிகள் மற்றும் பன்னாட்டு பெருநிறுவனங்கள் மற்றும் அவை கட்டுப்படுத்தும் அரசாங்கங்களின் கரங்களில் தொழிலாளர்கள் ஒரு கூர்மையான ஒரேமாதிரியான தாக்குதல்களை முகங்கொடுத்து வருகின்ற நிலைமைகளின் கீழ், மற்றும் ஒரு சர்வதேசியவாத மற்றும் சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் அனைத்து தேசிய எல்லைகளையும் கடந்து தொழிலாளர்களின் போராட்டங்களை ஐக்கியப்படுவதற்கு பூகோளமயப்பட்ட பொருளாதார வாழ்க்கை முன்னொருபோதும் இல்லாத அடித்தளத்தை, மற்றும் அவசியத்தை, உருவாக்கிவிட்டுள்ள நிலைமைகளின் கீழ், ஏமாற்று-இடதோ பிரிவினைவாதத்தை ஊக்குவித்து வருகின்றன. போலி-இடதின் தேசியவாதிகள் முதலாளித்துவவாதிகளின் அழுக்கான வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள். ஒரு சுதந்திர ஸ்காட்லாந்து முற்போக்கான தன்மையை கொண்டிருக்கும் என்பது குறித்த அவர்களின் பொய்கள், சோசலிச போராட்டத்திற்கான அவர்களது விரோதத்தில் எடுத்துக்காட்டப்படுகின்றன, அதைக் கண்டு அவர்கள் தனிப்பட்டரீதியில் பயப்படுகிறார்கள் மற்றும் எதிர்க்கிறார்கள், பகிரங்கமாக அது சாத்தியமில்லையென்று புறக்கணிக்கிறார்கள். உண்மையில், சிறிய மற்றும் இன்னும் நிலைத்துநிற்க முடியாத நாடுகளின் கூட்டத்தை உருவாக்குவது தொழிலாளர்களுக்கு ஒரு முன்னோக்கிய பாதையை வழங்குகிறது என்ற கருத்தானது அனைத்திலும் மிகவும் யதார்த்தமற்ற முன்னோக்காகும். பிரிட்டிஷ் சோசலிச சமத்துவக் கட்சி ஒளிவுமறைவின்றி ஸ்காட்டிஷ் வாக்கெடுப்பில் சுதந்திரம் "வேண்டாமென" வாக்கிடுமாறு அழைப்புவிடுக்கிறது. ஸ்காட்டிஷ், இங்லீஷ் மற்றும் வேல்ஷ் தொழிலாளர்கள் ஒருவருக்கு எதிராக ஒருவர் தங்களைத்தாங்களே பிளவுபடுத்திக் கொள்ள அனுமதிக்கக்கூடாது, ஆனால் பொதுவான வர்க்க எதிரிக்கு எதிராக, அவர்கள் என்ன கொடியை அசைத்தாலும், அவர்களுக்கு எதிரான ஒரு ஐக்கியப்பட்ட போராட்டத்தை நடத்த வேண்டும். இங்கிலாந்தில் உள்ள நிதியியல் செல்வந்த மேற்தட்டு மற்றும் அதன் கட்சிகளின் சர்வாதிகாரத்திற்கு கொடுக்கப்படும் பதில், ஒரு புதிய ஸ்காட்டிஷ் அரசின் உருவாக்கம் அல்ல, அது அதேமாதிரியான சமூக சக்திகளால் தான் ஆதிக்கம் செலுத்தப்படும், மாறாக ஒரு தொழிலாளர்களின் அரசாங்கம் மற்றும் ஒரு சோசலிச பிரிட்டனுக்கான போராட்டமே அதற்குரிய விடையாகும். எமது ஐரோப்பிய மற்றும் சர்வதேச தோழர்களுடன் இணைந்து, ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளை ஸ்தாபிப்பதன் மூலமாக அக்கண்டம் முழுவதிலும் முதலாளித்துவ ஆட்சிக்கு ஒரு முடிவுகட்ட நாம் முன்னிற்கிறோம். |
|