தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
The Fight Against War and the Political Tasks of the Socialist Equality Party Resolution of the SEP (US) Third National Congress யுத்தத்திற்கு எதிரான போராட்டமும் சோசலிச சமத்துவக் கட்சியின் அரசியற்பணிகளும்
Use this version to print| Send feedback அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் மூன்றாவது தேசிய காங்கிரஸ் ஆகஸ்ட் 5 அன்று ஏகமனதாக இத்தீர்மானத்தை நிறைவேற்றியது. காங்கிரஸ், “காசா மீதான இஸ்ரேலிய தாக்குதலை எதிர்ப்போம்!” மற்றும் “புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்போம்! வடக்கு, மத்திய மற்றும் தெற்கு அமெரிக்காவின் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவோம்!” போன்ற தீர்மானங்களையும் நிறைவேற்றியிருந்தது. *** 1. சோசலிச சமத்துவக் கட்சியானது, “சோசலிசமும் ஏகாதிபத்திய யுத்தத்திற்கு எதிரான போராட்டமும்”” என்ற நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிளீன தீர்மானத்தை ஏற்றுக்கொள்கிறது. இந்த காங்கிரஸின் தீர்மானமானது அமெரிக்காவில் உள்ள சோசலிச சமத்துவ கட்சியின் பணிகளுக்கு பயன்படுத்தும் வகையில் அதனை உள்சேர்த்து விரிவுபடுத்துகிறது. 2. இவ்வறிக்கையானது, அனைத்துலகக் குழு “ஏகாதிபத்திய வன்முறை மற்றும் இராணுவவாதத்தின் எழுச்சிக்கு எதிரான புரட்சிகர சர்வதேச மையமாக” ஆவதற்கு இன்னும் காலம் தாமதிக்ககூடாது என அழைப்பை விடுகின்றது. முதலாம் உலக யுத்தம் வெடித்ததன் பின்னர் நூறு ஆண்டுகளும் இரண்டாம் உலக யுத்தம் ஆரம்பித்து 75 ஆண்டுகளும் ஆன பின்னர் அமெரிக்காவினால் தலைமைதாங்கப்படும் ஏகாதிபத்திய அரசுகளானது, மீண்டும் ஒருமுறை மனிதகுலத்தை பேரழிவுக்கு இட்டுச்செல்கின்றன. 3. 1939 மற்றும் 1914க்குப் பின்னர் 2014 போல பதட்டமான ஒரு கோடைகாலம் இருந்திருக்கவில்லை. காங்கிரஸின் ஆரம்பிக்க சற்று முன்னர், அமெரிக்க அரசியல் ஸ்தாபகமும், செய்தி ஊடகமும் ரஷ்ய எதிர்ப்பு உணர்வுகளைத் தட்டி எழுப்புவதற்காக கிழக்கு உக்ரேனில் பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை பற்றிப் பிடித்துக்கொண்டன. அசாதாரணமான வகையில் தனது செயல்களின் விளைவுகளின் ஆபத்தைப் பற்றிக் கவலைப்படாமல், அமெரிக்காவானது ஒரு முற்றுமுழுதான போருக்கு விரைவில் இட்டுச்செல்லக்கூடிய ஒரு இராஜதந்திர நெருக்கடியை தூண்டிவிட்டது. இதற்கிடையில், இஸ்ரேலானது அமெரிக்காவின் ஆதரவுடன் ஏற்கெனவே நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்களைக் கொன்ற நீண்ட குண்டுவீச்சுகளுக்குப் பின்னர், காசாவில் தனது முழுத்திறனையும் பயன்படுத்தி தாக்குதலில் ஈடுபடுவதற்கு இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டது. சர்வதேச நெருக்கடியின் இந்த தீவிரமானது, நிகழ்வுகளின் வேக அளவால் அளவிடப்பட முடியும். கடந்த ஆண்டு மட்டும், அமெரிக்காவானது சிரியாவில் உள்நாட்டுப் போரைத் தூண்டிவிட்டது, ஈரானை அச்சுறுத்தியது, உக்ரேனில் வலதுசாரி ஆட்சிக் கவிழ்ப்பை ஏற்பாடு செய்தது, இராணுவத் துருப்புக்களை திரும்ப ஈராக்கிற்குள் அனுப்பியது, மற்றும் சீனாவை தனிமைப்படுத்தி சுற்றிவளைப்பதை நோக்கமாகக் கொண்ட, “ஆசியாவில் முன்னிலை” ஐ தீவிரப்படுத்தியது. பிரதான ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையிலான, குறிப்பாக அமெரிக்காவிற்கும் ஜேர்மனிக்கும் இடையிலான வெளிப்படையான மோதல்கள் வெளிப்பட இருந்தன. 4. யுத்தமானது, விதிவிலக்கு என்பதற்கு மாறாக, ஏகாதிபத்தியத்தினது நலன்களை முன்னெடுப்பதற்கும் அதன் நலன்களைத் தீர்க்க விழைவதற்குமான பிரதான வழிமுறையாக ஆகியிருக்கிறது. தீர்மானம் விளக்குகிறவாறு யுத்தத்திற்கு எதிரான போராட்டமானது, சர்வதேச இயக்கத்தின் வேலையின் மையத்தில் வைக்கப்படவேண்டும். உலக ஏகாதிபத்தியத்தின் மையமாக, சர்வதேச போர்த்திட்டமிடலின் அறையாக மற்றும் எதிர்ப்புரட்சிகர மையமாக அமெரிக்கா இருப்பதால், இந்த நாட்டில் ஒரு சக்திமிக்க போர் எதிர்ப்பு இயக்கம் தோன்றாமல் போருக்கு எதிரான உலக அளவிலான எதிர்ப்பு அணிதிரட்டப்பட முடியாது. ஏகாதிபத்தியம் மற்றும் முதலாளித்துவ தேசிய அரசை ஒழிக்கும் சர்வதேச தொழிலாளர் போராட்டத்தில் அமெரிக்கத் தொழிலாள வர்க்கம் கட்டாயம் அதன் இடத்தை எடுத்தாக வேண்டும். 5. இது, சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் அதன் அனைத்து உறுப்பினர்கள் மீதும் ஆழமான அரசியற் பொறுப்புக்களை சுமத்துகிறது. யுத்தத்திற்கு எதிராக பாரிய உள்ளார்ந்த எதிர்ப்பு இருக்கும் அதேவேளை, இந்த எதிர்ப்பானது வேலைத்திட்டம், முன்னோக்கு மற்றும் தலைமை இல்லாது இருக்கிறது. போருக்கு எதிரான புரட்சிகரப் போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை தலைமை ஏற்கும் தகுதிகொண்டதாக்க விழையும் அல்லது தொழிலாள வர்க்கத்திற்கு தலைமை ஏற்று நடத்தும் இயக்கம், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மற்றும் சோசலிச சமத்துவக் கட்சி ஆகிய இவற்றுக்கு வெளியே ஒரு இயக்கமும் கிடையாது. அதற்கு, வெளிநாட்டில் யுத்தத்திற்கும் உள்நாட்டில் சுரண்டலுக்கும்– ஏகாதிபத்தியத்திற்கும் முதலாளித்துவத்திற்கும் இடையிலான தீர்வுகாண இயலாத தொடர்பைப் பற்றிய புரிதலில் தொழிலாள வர்க்கத்திலும் அதன் முன்னணிப்படையிலும் ஒரு அபிவிருத்தி தேவைப்படுகிறது. ஏகாதிபத்தியமும் அமெரிக்க முதலாளித்துவத்தின் வரலாற்று நெருக்கடியும் 6. இருபதாம் நூற்றாண்டின் முதற்பாதியில், புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கிடையிலான மோதல்கள் இரண்டு பெரிய யுத்தங்ளைத் தூண்டிவிட்டன. அவற்றுக்கிடையில் கிட்டத்தட்ட 100 மில்லியன் மக்கள் கொல்லப்பட்டனர். இந்த யுத்தங்கள், சந்தைகள், மூலப்பொருட்கள், உழைப்பு வளங்கள் இவற்றை அடைவதற்கும் செல்வாக்கு மண்டலங்களை பெறுவதற்குமாக பிரதான ஏகாதிபத்தியங்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல்களில் இருந்து எழுந்தன. இந்த காலகட்டம் முழுவதும் உலக முதலாளித்துவத்தை குலுக்கிய பொருளாதார நெருக்கடியுடன் சேர்ந்து, இந்த மோதல்கள் முதலாளித்துவ அமைப்பு முறையில் உட்பொதிந்துள்ள அடிப்படை முரண்பாடுகளான உற்பத்தியின் பூகோளமயமான தன்மை மற்றும் தேசிய அரசு அமைப்புக்கு இடையிலானதும் மற்றும் சமூகமயமாக்கப்பட்ட உற்பத்திக்கும் மற்றும் உற்பத்தி சாதனத்தில் தனிச்சொத்துடைமையாக இருப்பதிலும் வெளிப்படுத்தப்படுகின்றது. 7. ஒரு நூற்றாண்டுக்கு பின்னர், இந்த முரண்பாடுகள் என்றுமில்லா அளவு அதிக உக்கிரம் அடைந்துள்ளன. பொருளாதார வாழ்வின் பூகோளமயமாக்கம் – உற்பத்தியை உலக அளவில் ஒருங்கிணைத்தல், நாடுகடந்த நிறுவனங்ளின் தோற்றம், உலக சந்தையில் நாள்தோறும் டிரில்லியன் டாலர்கள் பரிவர்த்தனை செய்யப்படும் சர்வதேச நிதி அமைப்பு முறையின் எழுச்சி ஆகியன – ஏகாதிபத்திய யுத்தத்தின் ஆபத்தைக் குறைக்கவில்லை, மாறாக இன்னும் சொல்லப்போனால் தீவிரமடையவே செய்துள்ளது. ஒருபுறம், பொருளாதார அபிவிருத்தியின் புறநிலை தர்க்கம் ஒன்றிணைந்த மற்றும் அறிவார்ந்த வகையில் தயாரிக்கப்பட்ட திட்டத்தின் அடிப்படையில் முழு உலகையும் ஒருங்கிணைப்பதை நோக்கியதாக இருக்கிறது. மற்றொருபுறம், உற்பத்தியில் தனிச்சொத்துடைமை மற்றும் உலகம் போட்டி மிக்க பகை அரசுகளாக பிளவுண்டு இருப்பது அதிகரித்த அளவில் குழப்பங்களையும் மோதலையும் உண்டு பண்ணுகிறது. 8. உலக முதலாளித்துவத்தின் முரண்பாடுகள் அமெரிக்காவில் அதன் செறிந்த மற்றும் மிகவும் ஆபத்தான வெளிப்பாடுகளைக் காண்கிறது. அமெரிக்க ஆளும் வர்க்கம், உலகப் பொருளாதாரத்தின் ஒவ்வொரு பகுதியையும், உலக அரசியல் அனைத்தையும் அதன் நலன்களுக்கு கீழ்ப்படுத்தும் இலக்கை தன்முன் அமைத்திருக்கிறது. எந்த கண்டத்தில் என்றாலும், எந்தவொரு நாடோ அல்லது அதன் அரசாங்கமோ அதன் விருப்பிற்கு வளைந்துகொடுக்காமல் இருக்க முடியாது: ஐரோப்பா, ஆசியா, மத்திய கிழக்கு, இலத்தின் அமெரிக்கா மற்றும் ஆபிரிக்கா, ஆர்ட்டிக், மின்வெளி மற்றும் அண்டவெளி என அது கட்டுப்படுத்த விரும்பாத பிராந்தியமும் இல்லை. 9. அமெரிக்கா ஒரு கால்நூற்றாண்டாக உண்மையில் தொடர்ச்சியான மற்றும் வெடித்தெழும் மோதலில் ஈடுபட்டு வருகிறது. 1991 டிசம்பரில் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது முக்கியமான திருப்பு முனையைக் குறித்தது. முன்சென்ற தசாப்தங்கள் வெளிப்பாட்டைக் கண்டிருந்த ஆழமான உள்ளார்ந்த சிக்கலான பிரச்சினைகள் பற்றி சொல்லத்தேவையில்லை, அமெரிக்க ஆளும் வர்க்கம் சோவியத் ஒன்றியத்தின் முடிவை “வரலாற்றின் முடிவு” மற்றும் முதலாளித்துவத்தின் இறுதிவெற்றி என்று விளங்கப்படுத்தியது. மிகவும் தீக்குறியாக, ஆளும் வர்க்கமானது அதன் மிக முக்கியமான புவிசார் அரசியல் எதிராளி கலைந்து போனது, தனது நீண்டகால பொருளாதார வீழ்ச்சிக்கு – அதாவது போருக்குப் பிந்தைய ஒழுங்கின் மையமாக இருந்த இந்த வீழ்ச்சிக்கு எதிர்வினை ஆற்றுவதற்கு, தனது இராணுவ மேலாதிக்கத்தை பயன்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாக பார்த்தது. ஸ்ராலினிசக் காட்டிக்கொடுப்பு மற்றும் ஏகாதிபத்தியத்துடனான அதன் “சமாதான சகவாழ்வு” கொள்கை இருப்பினும், சோவியத் ஒன்றியத்தின் இருப்பானது அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்கு ஒரு தடையாக வேலைசெய்தது. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி ஒரு “ஒற்றைத்துருவ நகர்வு”” என்பதன் ஆரம்பத்தைக் குறிப்பதாக கூறப்பட்டது. இது போட்டியற்ற அமெரிக்க அரசு என்பதால் பண்பிடப்பட்டது. 10. 1991ல், ஸ்ராலினிச அதிகாரத்துவம் முதலாளித்துவத்திற்கு மாறுகையில் மற்றும் சோவியத் ஒன்றியத்தில் தேசியமயமாக்கப்பட்ட சொத்துறவுகள் இல்லாமற் செய்கையில், முதலாவது ஜனாதிபதி புஷ், கட்டுப்படுத்தப்பட முடியாத அமெரிக்க இராணுவ மேலாதிக்கத்தினை அடிப்படையாகக் கொண்ட “புதிய உலக ஒழுங்கை”” அறிவித்தார். புதிய ஒழுங்கின் பண்பானது ஈராக்கிற்கு எதிரான வளைகுடாப் போரை தொடுப்பதற்கு எடுத்த முடிவில் வெளிப்பாட்டைக் கண்டது, இதன் மூலம் மத்திய கிழக்கில் எண்ணெய்வளமிக்க பிராந்தியத்தில் தனது உரிமைப்பங்கைக் கோரியது. இந்தப் போர் அமெரிக்க இராணுவ வல்லமையையும் அதைப் பயன்படுத்துவதற்கான வாஷிங்டனின் விருப்பினையும் எடுத்துக்காட்டுவதற்கு வேண்டுமென்றே திட்டமிடப்பட்டது மற்றும் தூண்டிவிடப்பட்டது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூலோபாய வல்லுநர்களின் சிந்தனையில் மேலாதிக்கம் செய்ய வந்த இந்த குரூர கருத்தியலானது, வோல் ஸ்ட்ரீட் இதழில், படையெடுப்பிற்கு மத்தியில் பின்வருமாறு தொகுத்துக் கூறப்பட்டது: “கொள்கையின் ஒரு நியாயமான கருவி பலாத்காரம்”, “அது வேலை செய்கிறது. செல்வந்தத் தட்டை பொறுத்தவரை செய்தி இதுதான்: புலம்புவதை நிறுத்தி, மிகவும் துணிவாக சிந்திப்பதற்கு அமெரிக்கா தலைமை ஏற்கமுடியும், இப்பொழுது அது ஆரம்பமாகிறது.”” 11. ஓராண்டிற்கு பின்னர், 1992ல், “முன்னேறிய தொழில்துறை நாடுகள் எமது தலைமையை சவால்செய்வதை ஊக்கம் குன்றச்செய்வதற்கு அல்லது பெரிய பிராந்திய அல்லது பூகோள பங்கை விரும்புவதற்கு கூட”, “அமெரிக்க பெரும் மூலோபாயம்” என்று விளக்கிக்காட்டும் ஒரு புதிய மூலோபாயப் பத்திரத்தை பென்டகன் முன்வைத்தது. அமெரிக்கா முடிவுறாது மற்றும் இடைவிடாது இராணுவ பலத்தைப் பயன்படுத்துவதற்கு இப்பத்திரம் உறுதி வழங்கியது. உலகின் ஒவ்வொரு பகுதியிலும் நடைபெறும் அரசியல் அபிவிருத்திகள் எப்படி அவை அமெரிக்க மேலாதிக்கத்தை பாதிக்கின்றன என்பது தொடர்பானதில் பார்க்கப்பட்டன. உலக நிகழ்வுகளின் பெரிய நாட்டாண்மை என்று தன்னை உறுதியாய்க் கூறிக்கொண்டு, அமெரிக்க ஆளும் வர்க்கமானது, உடனடி மற்றும் நேரடி பொருளாதார நலன்கள் இல்லாதிருக்கும் இடங்களில் கூட தலையிடுவதற்கு நிர்பந்திக்கப்பட்டது. தோல்வி என்பது ஒருபுறம் இருக்கட்டும், பின்னோக்கி வைக்கும் எந்த அடியும் பலவீனத்தின் அடையாளமாகப் பார்க்கப்படும் என்பதுடன் பூகோள விளைபயன்களையும் கொண்டிருக்கும். 12. அமெரிக்க நலன்களின் பூகோளப் பண்பானது, 1980களில் ஆப்கானிஸ்தானில் சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக பினாமிப் போரை திட்டமிட உதவி இருந்த, முன்னாள் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜெபிக்கினீவ் பிரிஜேஜென்ஸ்கி உட்பட, ஆளும்வர்க்கத்தின் அரசியல் மூலோபாய வல்லுநர்களால் விளக்கப்பட்டது. 1997ல் வெளியிடப்பட்ட பெரும் சதுரங்கப்பலகை என்பதில் பிரிஜேஜென்ஸ்கி, மேற்கு ஐரோப்பா முதல் சீனா, மற்றும் மத்திய கிழக்கு, மத்திய ஆசியா, ரஷ்யா மற்றும் இந்தியத் துணைக்கண்டம் வரை பரவி இருக்கும் பரந்த நிலப்பகுதியின் மக்களை, யுரேஷியாவைக் கட்டுப்படுத்துவது மிகமுக்கியமானது என்று விளக்கினார். அமெரிக்காவின் பூகோள முதன்மைத்துவம், யுரேஷிய கண்டத்தின் மீது எவ்வளவு காலம் மற்றும் எவ்வளவு சக்திமிக்க வகையில் அதன் பெரும்பான்மை நீடித்திருக்கும் என்பதை நேரடியாய் சார்ந்துள்ளது” என அவர் எழுதினார். [1] 13. இந்த மூலோபாயத்துடன் பொருந்தும் வழியில், அமெரிக்கா வரிசைக்கிரமமான இராணுவ நடவடிக்கைகளை எடுத்தது. வளைகுடா போருக்கு முன் நிகழ்வாக பனாமாவில் அமெரிக்க ஆக்கிரமிப்பு (1989) நடைபெற்றது மற்றும் அதைத்தொடர்ந்து சோமாலியாவில் (1992-93), ஹைத்தியில் தலையீடு (1993-96) மற்றும் 1999ல் கொசோவோ போர் நடைபெற்றன. கடைசியாய் குறிப்பிட்ட யுத்தமானது, கிளிண்டன் நிர்வாகத்தால் “மனித உரிமைகள்” என்ற பெயரில் நடத்தப்பட்டது. அது யூகோஸ்லாவியாவை உடைப்பதற்கும் கிழக்கு ஐரோப்பாவிலும் மத்திய ஆசியாவிலும் அமெரிக்க அதிகாரத்தை முன்னெடுப்பதற்கும் பத்தாண்டுகால திட்டமிட்ட போர்க்களச்செயற்பாட்டின் உச்சக்கட்டமாக இருந்தது. வளைகுடா யுத்தத்தைப் போல, இது அமெரிக்க வல்லமையை விளக்கிக்காட்டல் மற்றும் இராணுவ தொழில்நுட்ப விதியை நடைமுறையில் சோதனைசெய்வதாக இருந்தது —இந்தவகையில், துல்லியமாய் வழிகாட்டப்பட்ட குண்டுகளின் அபிவிருத்தி— அமெரிக்காவை தரைவழித் துருப்புக்கள் இல்லாமல் யுத்தம் தொடுப்பதற்கு அனுமதிக்கும். சேர்பியாவில் இரண்டு மாதகால குண்டுவீச்சுக்களில் அமெரிக்க இராணுவமானது ஒரு அமெரிக்க இழப்பும் இல்லாமல், சமூக கட்டமைப்பை சின்னாபின்னமாக்கியது மற்றும் நூற்றுக்கணக்கான மக்களைக் கொன்றொழித்தது. அமெரிக்க ஏகாதிபத்தியமும் “பயங்கரவாதத்தின் மீதான யுத்தமும்”” 14. பூகோள மேலாதிக்கத்தின் மூலோபாயம் ஆளும் வர்க்கத்திற்கு பல பிரச்சினைகளை முன்வைத்தது. முதலாவதாக, பொது எதிர்ப்புக்கு எதிராக பூகோளப் பேரரசிற்கான மனித, பொருளாதார மற்றும் சமூக செலவிடலை நம்பமுடியாத அளவுக்கு ஈடுபடுத்துவது. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் அமெரிக்கா நடத்திய எந்த யுத்தமும் பெரும்பான்மையினரால் விரும்பப்படவில்லை. ஆளும் வரக்கமானது, “வியட்நாம் யுத்த அறிகுறி” என்று அது குறித்த ஒன்றால் -பெயரிடுவோமாயின், வெளியில் இராணுவத்தலையீடு சம்பந்தமான அமெரிக்க மக்களின் ஆழ்ந்த ஐயுறவாதத்தால் தொல்லைக்கு ஆளானது. உலகை ஆதிக்கம் செய்ய யுரேஷியாவை ஆதிக்கம் செய்வதற்கான ஒரு வேலைத்திட்டத்தில் உருவரைப்படுத்தியவாறு கூட, பிரிஜேஜென்ஸ்கி அமெரிக்காவானது “வெளிநாட்டில் தன்விருப்பம்போல் செயல்பட உள்நாட்டில் அளவுக்கு அதிக ஜனநாயகமாக” இருக்கிறது என்று, வரும் பேரிடரை முன்காட்டுகிறவாறு கூறுகிறார். இது “அமெரிக்காவின் பலத்தை, சிறப்பாக இராணுவ ரீதியாய் மிரட்டி அடக்கும் அதன் திறனைப் பயன்படுத்துவதை” மட்டுப்படுத்துகிறது. ....(அவர்) அதிகாரத்தில் ஈடுபடுவது என்பது, உள்நாட்டு நலன் பற்றிய பொதுமக்களின் உணர்வுக்கு திடீர் அச்சுறுத்தலோ சவாலோ வருகின்ற விதிவிலக்கான சூழ்நிலைகளில், வெகுஜனப் பேரார்வத்தை அரசு ஆணையால் செயற்படும்படி செய்வதல்ல.” [2] 15. 2001 செப்டம்பர் 11ல் பயங்கரவாதிகளின் தாக்குதல் நடந்த சூழ்நிலைகள் ஒரு சுதந்திரமான விசாரணைக்கு ஒருபோதும் உட்படுத்தப்படவில்லை, அவை “திடீர் அச்சுறுத்தல் அல்லது சவால்” ஆக பற்றிக்கொள்ளப்பட்டன. அரசு எந்திரத்தின் பகுதிகளின் தொடர்பின் அளவு என்னவாயிருப்பினும், தாக்குதல்களானது கடுமையான மூலோபாயக் குறிக்கோள்களுக்காக பயன்படும் கொள்கைகளை நியாயப்படுத்தவே பயன்படுத்தப்பட்டன. இரண்டாம் புஷ் நிர்வாகமானது அறிவித்த ஒரு முடிவடையா “பயங்கரவாதத்தின் மீதான யுத்தம்” – ஆரம்பத்திலிருந்தே வெளிநாட்டில் இராணுவ நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதற்கும் அமெரிக்காவிற்குள்ளே ஜனநாயகத்தை அழிப்பதற்கும் பயன்படுத்தப்பட்ட ஒரு பூதாகரப் பொய், ஒரு சாக்குப்போக்கு என்பதைத் தவிர வேறொன்றுமாக இல்லை. செப்டம்பர் 14ல் உலக சோசலிச வலைத் தளம் எழுதியவாறு, உலக வர்த்தக மையம் மற்றும் பென்டகன் மீதான தாக்குதலானது, ஆளும் செல்வந்தத் தட்டில் உள்ள மிகவலதுசாரி சக்திகள் பல ஆண்டுகளாக ஆரவாரித்துக் கொண்டிருந்த, ஒரு பரந்த செயல் விளைவுடைய அரசியல் நிகழ்ச்சிநிரலை நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு சந்தர்ப்பமாக வலிந்து கைக்கொள்ளப்பட்டிருக்கிறது.” [3] 16. பெரும்பான்மையான 9/11 விமானக் கடத்தல்காரர்கள் சவுதி அரேபியாவிலிருந்து வந்தவர்கள் மற்றும் சவுதி முடியாட்சியால் நிதியளிக்கப்பட்டிருந்தது என்ற உண்மை இருப்பினும், தாக்குதல்கள் ஆப்கானிஸ்தானில் உடனடியாக படையெடுப்பதற்கு பயன்படுத்திக்கொள்ளப்பட்டன. ஆப்கானிஸ்தான், ஆற்றல் வளமிக்க காஸ்பியன் கடல் பிராந்தியம் மற்றும் தெற்கு ஆசியா இரண்டிலும் நடவடிக்கைகளுக்கான ஒரு முக்கிய புவிசார் மூலோபாய மையமாகும். புஷ் “தீய அச்சுகள்” என்று அவரே முத்திரைகுத்திய ஈரான், ஈராக் மற்றும் வடகொரியாவுக்கு போர் அச்சுறுத்தலை விஸ்தரித்தார். இது 2002 அளவில், அமெரிக்கா எதிர்கால அச்சுறுத்தல் எனக் கருதும் எந்த நாட்டிற்கும் எதிராக “முன்னரே தாக்கித் தனதாக்கிக்கொள்ளும்” போரைத் தொடுப்பதற்கு உரிமை கோரும் தேசியப் பாதுகாப்பு மூலோபாயத்தால் பின்தொடரப்பட்டது. இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின்னர் ஏற்படுத்தப்பட்ட சர்வதேசவிதியின் அடிப்படைக் கட்டமைப்பு -தற்காப்பில் மட்டும் நியாயப்படுத்தப்படுவதாக இருந்த யுத்தமானது– வேண்டாமென்று விலக்கப்பட்டது. புதிய மூலோபாயமானது நூரெம்பேர்க் விசாரணைகளில் நாஜி தலைவர்கள் குற்றம்சாட்டப்பட்ட பிரதான போர்க்குற்றத்தை, அதாவது வலியத்தாக்கும் போருக்கு அனுமதி வழங்கியது. 17. 2003ல் ஈராக் மீதான படையெடுப்பில் நடைமுறைப்படுத்தப்பட்ட “முன்னரே தாக்கித் தனதாக்கிக் கொள்ளும்” போர்க் கொள்கை, “பேரழிவு ஆயுதங்கள்” மற்றும் சதாம் ஹூசைன் அரசாங்கத்திற்கும் அல்கொய்தாவுக்கும் இடையில் இருந்திராத உறவு பற்றிய பொய்களின் அடிப்படையில் தொடங்கப்பட்டது. இந்த யுத்தத்தின் உண்மைக் குறிக்கோள் மத்திய கிழக்கின் எண்ணெய் வளம் மிக்க பகுதிகள் மீதான கட்டுப்பாட்டை உத்தரவாதப்படுத்துதற்கும், அதேவேளை ஏனைய சக்திகளின் செல்வாக்கை எதிர்கொள்வதற்குமாக இருந்தது. ஆப்கான் மற்றும் ஈராக்கில் நடத்தப்பட்ட யுத்தமானது, குவாண்டநாமோ கடூழியச்சிறையை நிறுவுதல் மற்றும் உலகமெங்கும் இரகசிய சிஐஏ “கரும் பகுதி” சிறைகளை ஏற்படுத்துதல் இவற்றுடன் சேர்ந்து, அமெரிக்க கொள்கையில் சித்திரவதையை அறிமுகப்படுத்தலால் தொடரப்பட்டது. 18. உலக மேலாதிக்க மூலோபாயத்தால் முன்வைக்கப்பட்ட இரண்டாவது அடிப்படைப் பிரச்சினை அதன் இயல்பிலேயே அமெரிக்க முதலாளித்துவத்தின் கீழுள்ள முரண்பாடுகளை அது தீர்க்க முடியாது என்பதாகும். 1999ல், பால்கன் யுத்தங்களுக்குப் பின்னர், சோசலிச சமத்துவக் கட்சி “துல்லியமாய் வழிநடத்தப்படும் ஆயுதம் பற்றிய வெறி” பொருளாதார அபிவிருத்தியின் மிக அடிப்படைப் போக்குகளை அலட்சியப்படுத்தியது என்று விளக்கியது, “[ஆயுத தளவாட துறையில்] இந்த சாதகமோ அல்லது இந்த தொழிற்துறையின் உற்பத்திப் பொருட்களோ உலக மேலாதிக்கத்தை உத்திரவாதம் செய்ய முடியாது” என்று நாம் எழுதினோம். அமெரிக்காவின் ஆயுதங்களின் நவீனமயம் இருப்பினும் உலக முதலாளித்துவ விவகாரங்களில் அமெரிக்காவின் நிதி தொழிற்துறை அடித்தளத்தின் ஒப்புயர்வற்ற பங்கு அது 50 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததை விடவும் மிகவும் குறைந்த அளவே உறுதியுடையதாக இருக்கிறது.” [4] 2003ல் ஈராக்கின் மீதான அமெரிக்க படையெடுப்பின் போது, உலக சோசலிச வலைத் தளம் எதிர்பார்த்தது: தொடங்கி இருக்கிற மோதல்களின் ஆரம்பக் கட்டங்களின் விளைபயன் எதுவாயிருப்பினும், அமெரிக்க முதலாளித்துவமானது படை சந்திக்குமிடத்தில் பேரழிவினைக் கொண்டிருக்கிறது. அது உலகினை வெற்றிகொள்ள முடியாது. அது மத்திய கிழக்கு மக்களின் மீது காலனித்துவ தளைகளை மீளத் திணிக்க முடியாது. அதன் உள்ளார்ந்த நலிவுகளுக்கு போர் என்ற ஊடகத்தினூடாக ஒரு சரியான தீர்வைக் காணமுடியாது. இன்னும்சொல்லப்போனால், போரால் தோற்றுவிக்கப்பட்ட முன்கூட்டிக்கண்டிராத கஷ்டங்கள் மற்றும் அதிகரித்துவரும் எதிர்ப்பு அமெரிக்க சமூகத்தின் உள்ளார்ந்த முரண்பாடுகள் அனைத்தையும் உக்கிரப்படுத்தவே செய்யும். [5] 19. இந்த முன்கணிப்பு முற்றிலும் உறுதிப்படுத்தப்பட்டது. அனைத்துலகக் குழு முன்கூட்டிப் பார்த்தவாறு அதன் அனைத்து இராணுவ நடவடிக்கைகளின் விளைபொருள் பேரழிவுகரமானதாக இருந்திருக்கிறது. இது ஈராக்கைவிடவும் வேறு எங்கும் உண்மையாய் இல்லை. ஆளும்வர்க்கத்தின் மூலோபாயக் குறிக்கோள்களின் நிலைப்பாட்டிலிருந்து கூட, அமெரிக்காவானது ஈராக்கில் அதன் குறியிலக்குகளில் எதையும் நிறைவேற்றவில்லை. சதாம் ஹூசைன் அரசாங்கத்தைக் கவிழத்த, அதனைத் தொடர்ந்து மில்லியன் கணக்கான ஈராக்கியர்களின் இறப்பை ஏற்படுத்திய, புஷ் நிர்வாகத்தின் சட்டவிரோத யுத்தமானது நாட்டை உள்நாட்டு யுத்தத்தில்தான் மூழ்கடித்துள்ளது. வாஷிங்டனின் பிரித்தாளும் கொள்கையால் எரியூட்டிப் பேணப்படும் குறுங்குழு மோதல்கள், முழு மத்திய கிழக்கையும் ஒரு பிராந்திய யுத்தத்தில் இழுத்துவிடும் பெரும் பேரழிவினைக்கூட உருவாக்கியுள்ளன. 20. வெளிநாட்டில் இராணுவ வன்முறையானது அமெரிக்க மற்றும் உலக முதலாளித்துவ நெருக்கடியின் கீழுள்ள முரண்பாடுகளைத் தீர்க்கத் தவறிவிட்டது. கடந்த இரு தசாப்தங்கள் வரிசைக்கிரமமான நிதிப்புயல்கள் விரிவடைவதைப் பார்த்திருக்கின்றன: 1997 ஆசியப் பொருளாதார நெருக்கடி, நீண்டகால மூலதன நிர்வாகத்தின் குலைவு மற்றும் 1998 ரஷ்யா பணம்கொடுக்கத் தவறுகை, 2001ல் டாட்காம் குமிழி வெடிப்பு, குறைந்த பிணையுள்ள அடைமான சந்தை மற்றும் 2008 உலக ரீதியான நிதி நெருக்கடி ஆகியன. அமெரிக்க முதலாளித்துவத்தின் பொருளாதார அடித்தளங்கள் தொடர்ந்து சீரழிந்து வருகின்றன; அதன் உலக அந்தஸ்து தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது. இந்த நெருக்கடிகளின் மத்தியில் கத்ரினா சூறாவளி பேரழிவானது, அமெரிக்காவில் உள்கட்டமைப்பு குலைந்து போயிருப்பதையும் வறுமை மற்றும் சமூக சமத்துவமின்மை மிகப் பெரிய மட்டங்களில் இருப்பதையும் உலகுக்கு அம்பலப்படுத்தியது. 21. உலக முதலாளித்துவத்தின் ஆழமடைந்துவரும் நெருக்கடியுடன், அமெரிக்க ஏகாதிபத்தியம் இராணுவ படைபலத்தின் மீது தங்கி இருப்பது மட்டுமே அதிகரித்தது. 1928ல் ட்ரொட்ஸ்கி குறித்தவாறு, “நெருக்கடிகளின் காலகட்டத்தில் அமெரிக்காவின் தலைமைநிலையானது செழுமைக்கால கட்டத்தில் இருந்ததைவிடவும் மிக முற்றிலுமாய், மிக வெளிப்படையாய், மிக ஈவிரக்கமற்றதாக செயல்படும்.” யுத்தமானது அமெரிக்க கொள்கையின் நிரந்தர வடிவமாக ஆகியிருக்கிறது. ஒபாமா நிர்வாகத்தின் கீழ், அமெரிக்கா ஆப்கானில் யுத்தத்தை வெடிக்கச்செய்தது மற்றும் அதனை பாக்கிஸ்தானுக்கு விரிவுபடுத்தியது, லிபியாவில் யுத்தத்தை நடத்தியது, மற்றும் இப்பொழுது ஈராக்கில் துருப்புக்களை மீண்டும் இறக்குகிறது. சூடான், யேமன், பாக்கிஸ்தான், ஈரான், சிரியா மற்றும் உக்ரேன் உள்பட ஆட்சி மாற்றத்தை நோக்கமாய் கொண்ட இராணுவத் தலையீடு, ஏவுகணை மற்றும் விமானத்தாக்குதல்கள் அல்லது மறைமுக நடவடிக்கைகளுக்காக ஓய்வொழிவின்றி விரிவடைந்துவரும் எண்ணிக்கையில் நாடுகள் இலக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. ஒபாமா தனது நிர்வாகத்தின் தொடக்கத்தில், நோபல் அமைதிப் பரிசு ஏற்பு உரையில், அமெரிக்காவினாலான ஒருதலைப்பட்ச இராணுவ நடவடிக்கைக்கான உரிமையானது, தற்காப்பு அல்லது ஆக்கிரமிப்புக்கு எதிராக ஒரு தேசத்தைப் பாதுகாத்தல் இவற்றுக்கு அப்பாலும் நீள்கிறது” என வலியுறுத்தினார். அவருக்கு முன்பு பதவியில் இருந்தவர்களை விட இன்னும் கூடுதலாக சென்று, எங்கெங்கு அமெரிக்காவின் “முக்கிய நலன்கள் பணயம் வைக்கப்படுகிறதோ” அங்கெல்லாம் இராணுவத் தலையீடு செய்யும் அமெரிக்க உரிமையை ஒபாமா வலியுறுத்தினார். 22. அதன் குறிக்கோள்களின் தர்க்கமானது, அமெரிக்காவை அதிகரித்தளவில் அதன் பிரதான போட்டியாளர்கள் மீது அதன் கவனத்தைத் திருப்புமாறு நிர்பந்திக்கிறது. இவ்விலகலானது அதிகமாக அவசியமானதாக ஆகின்றபோது அமெரிக்க பொருளாதார ஸ்தானம் அதிமாக அரித்தழிக்கப்படுகிறது. இந்த விலகலானது, சீனாவை சுற்றிவளைக்கும் நோக்கம் கொண்ட இராணுவக் கூட்டுக்கள் மற்றும் ஒப்பந்தங்களின் ஒரு அணி சம்பந்தப்படும், ஒபாமா நிர்வாகத்தின் “ஆசியாவில் முன்நிலை” என்பதில் அடிக்கோடிட்டுக் காட்டப்படுகிறது. அமெரிக்க ஏகாதிபத்திய மூலோபாய வல்லுநர்கள் சீனப் பொருளாதாரத்தின் அளவு விரைவில் அமெரிக்கப் பொருளாதாரத்தின் அளவை விஞ்சிவிடும் என்ற வீச்சுக்களைக் கவனித்துள்ளனர், இப்போக்கை எதிர்கொள்வதற்கு அவர்கள் தீர்மானகரமாக இருக்கின்றனர். சீனாவின் எழுச்சி அமெரிக்காவின் செல்வாக்கிற்கு அச்சுறுத்தலாக ஆசியாவில் மட்டுமல்லாமல், முழு உலகிலும் அமெரிக்காவின் செல்வாக்கிற்கு அச்சுறுத்தலாகப் பார்க்கப்படுகிறது. அதேவேளை, சோவியத் ஒன்றியத்தின் கலைப்புக்குப் பின்னர் கூட, ரஷ்யாவானது கிழக்கு ஐரோப்பாவிலும் மத்திய கிழக்கிலும் கொள்கையை ஆணையிடுவதற்கான அமெரிக்கத் திறனிற்கு ஒரு தடையாகப் பார்க்கப்படுகிறது – 2013 கோடையில் சிரியாவில் குண்டு வீசும் தனது திட்டங்களிலிருந்து ஒபாமா நிர்வாகம் மதிப்பிழக்கும்படி பின்வாங்கியதில் இந்தக் கவலையானது உறுதிப்படுத்தப்பட்டது. ரஷ்யாவை எதிர்கொள்வதற்கு இந்த ஆண்டு பிப்ரவரியில் அமெரிக்காவும் ஜேர்மனியும் உக்ரேனில் ரஷ்ய ஆதரவு அரசாங்கத்தைத் தூக்கி வீசுவதற்கும் வாஷிங்டனுக்கு கடமைப்பட்ட ஒரு ஆட்சியை நிறுவுதற்கும் பாசிச சக்திகளின் தலைமையில் எதிர்ப்புக்களை ஊக்கப்படுத்தவும் ஒழுங்கமைக்கவும் உதவின. 23. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அபிலாஷைகளுக்கான தணியாததாகமானது, அது நவகாலனித்துவ அந்தஸ்துக்கு குறைக்க விரும்பும் ரஷ்யாவுடனும் சீனாவுடனும் மட்டுமல்லாமல் ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் உள்ள பிரதான ஏகாதிபத்திய அரசுகளுடனும் கூட தவிர்க்கவியலாது மோதல்களைத் தோற்றுவிக்கும். அமெரிக்க ஏகாதிபத்தியம் புவிசார் அரசியல் வெற்றிடத்திற்குள் இயங்கவில்லை. ஈராக்கிய அழிவானது, ஏனைய ஏகாதிபத்திய சக்திகளை தங்களின் சொந்த மூலோபாயத்தை மீள்மதிப்பீடு செய்யவும் தங்களின் சொந்த சுதந்திரமான விருப்பங்களை உறுதிப்படுத்தவும் தூண்டிவிட்டிருக்கின்றன. ஏகாதிபத்திய அரசுகள் என்னென்ன தற்காலிக கூட்டுக்கள் வைத்திருந்தாலும், அனைத்துலகக் குழுவின் தீர்மானம் விளக்கியவாறு, அவற்றுக்கு மத்தியில் நிரந்தர நிகழ்வுப் பொருத்தம் கொண்ட நலன்கள் எதுவும் இல்லை. 24. ஜேர்மனிக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பிளவுகள் திடீரென்று தோன்றுவதற்குப் பின்னால் இந்த கருத்துப்பாடுகள்தான் உள்ளன, இது பேர்லினில் அமெரிக்க உளவாளிகள் மீதான முறைகேட்டால் தூண்டிவிடப்பட்டது. ஜேர்மன் ஏகாதிபத்தியம், கிழக்கு ஐரோப்பாவிலும் அதிகரித்த அளவில் முக்கியத்துவம் வாய்ந்த கருங்கடல் பிராந்தியத்திலும் உள்ள ஒரு மூலோபாய போட்டியாளராக அமெரிக்காவை பார்க்கிறது மற்றும் அதேபோல ரஷ்யாவிலும் சீனாவிலும் கூட பார்க்கிறது. ஜேர்மன் ஆளும்வர்க்கத்தின் மூலோபாய வல்லுநர்கள் தங்களின் சொந்த நலன்களை அமெரிக்காவின் அசட்டுத் துணிச்சல் மற்றும் தோல்வியுற்ற நடவடிக்கைகள் என்று தாங்கள் உணருபவற்றுக்கு துணையாக்குவது பற்றி அதிகரித்த அளவில் கவலையுடையவர்களாக இருக்கின்றனர். பலவீனமாக அமெரிக்க ஏகாதிபத்தியம் தோன்றுகையில், அதிகமான அளவில் ஏனைய ஏகாதிபத்தியங்கள் சுதந்திரமான கொள்கையை ஆதாரமாகக் கொள்கின்றன. ஆசியாவில், ஜப்பான் அமெரிக்க ஆதரவுடன் மீள் இராணுவமயமாக்கலை கொண்டிருப்பது அதன் அரசியற்சட்டத்தில் அமைதிவாத பிரிவை சக்திமிக்கவகையில் இரத்துச்செய்கிறது. ஆனால் ஜப்பானும்கூட சுதந்திரமான நலன்களைக் கொண்டிருக்கிறது. இருபதாம் நூற்றாண்டின் முதற்பாதியில் இரு உலக யுத்தங்களை வெடித்தெழச்செய்த அடிப்படையான ஏகாதிபத்திய மோதல்கள் மறைந்துவிடவில்லை, அவை புதிய வடிவங்களையே எடுத்துள்ளன. நிதிமூலதனம், ஏகாதிபத்தியம் மற்றும் சமூக எதிர்ப்புரட்சி 25. அமெரிக்க முதலாளித்துவத்தின் வீழ்ச்சியானது அமெரிக்காவிற்குள்ளேயே ஏகாதிபத்திய வன்முறையோடு நேரடியாகப் பிணைக்கப்பட்டுள்ள இன்னொரு சமூக மாற்றத்தை தொடர்புபடுத்துகிறது, அது: நிதிமூலதனத்தின் அதிகரித்துவரும் மேலாதிக்கம் ஆகும். தொழிலாள வர்க்கத்தின் அனைத்துவிதமான கடந்த கால வெற்றிகளை பறித்துவிடும் அதன் முயற்சியில், வோல் ஸ்ட்ரீட் மற்றும் பங்குச்சந்தைகளின் (equity markets) ஆணைகளால் அதிகரித்தவண்ணம் இயக்கப்படும் அமெரிக்க ஆளும் வர்க்கமானது, வெறிகொண்ட வேலை வெட்டுக்கள் மற்றும் கார்ப்பொரேட் நிறுவனங்களை ஒன்றிணைத்தல் ஆகியனவற்றைத் தொடங்கின. அமெரிக்காவிற்கு வெளியே உற்பத்தி மாற்றப்படுகையில், நாட்டிற்குள்ளே செல்வத்திரட்சியானது, அதிகரித்த அளவில் உற்பத்தி முதலீடு மற்றும் உண்மைப் பொருளாதாரம் என்றழைக்கப்படுவதுடனான எந்த தொடர்பிலிருந்தும் அதிகரித்த அளவில் முறித்துக்கொண்டுள்ளது. 1980களில், நிதி தொழிற்துறையில் பெருநிறுவனங்களது இலாபம் 6 சதவீதம் மட்டுமே அடையப்பட்டது. இன்றோ அது 40 சதவீதத்திற்கும் அதிகமானது. 26. லெனின் எழுதினார்: “ஏகாதிபத்தியம் அல்லது நிதிமூலதனத்தின் மேலாதிக்கம் முதலாளித்துவத்தின் உச்சக்கட்டமாகும். அதில் (பண மூலதனத்தை உற்பத்தி மூலதனத்தில் இருந்து) பிரித்தல் பரந்த விகிதாச்சாரத்தை எட்டி இருக்கிறது. மூலதனத்தின் ஏனைய அனைத்து வடிவங்களின் மீதாக நிதி மூலதனத்தின் மேலாதிக்கம், நிலம் மற்றும் கடன் பத்திரங்களில் இருந்து நிலையான வருமானம் பெறுபவர்கள் மற்றும் நிதிய தன்னலக்குழு மேலோங்கியிருப்பதை அர்த்தப்படுத்துகிறது; அதன் அர்த்தம் நிதிரீதியாய் பலமிக்க சிறிய எண்ணிக்கையிலான அரசுகள் ஏனையவற்றுக்கு மத்தியில் முனைப்பாக இருக்கும்.” [6] முதலாம் உலக யுத்தத்தின் தோற்றம் மற்றும் பண்பு தொடர்பாக செய்யப்பட்ட இந்த ஆய்வானது, அமெரிக்காவில் உலக நிதி அமைப்பின் மையம் இருப்பதுடன், பூகோள முதலாளித்துவத்தின் தற்போதைய நிலைக்கு எல்லா வகையிலும் மிகப் பொருத்தமாக உள்ளது. 27. அதன் புவிசார் மூலோபாய நலன்களைப் பின்பற்றுவதோடு, அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் முடிவுறா யுத்தக் கொள்கையானது, அமெரிக்காவிற்குள்ளேயான சமூக மற்றும் பொருளாதார நெருக்கடிகளின் விளைபயன்களின் பீதியால், அசாதாரண அளவுக்கு போனது. இராணுவவாதம் மற்றும் யுத்தத்தை புகலிடமாகக்கொள்வது சமூகப் பதட்டங்களை வெளியே திசைதிருப்புவதற்கான வழிமுறையாக பார்க்கப்படுகிறது. நிதிய பிரபுத்துவம் ஒரு சமூக வெடிமருந்தின் உச்சியில் நிற்கிறது. மாபெரும் பொருளாதார பெருமந்த நிலைக்கு முன்னர் இருந்து பார்த்திருந்திராத மட்டங்களுக்கு சமூக சமத்துவமின்மை திரும்பிவிட்டது. இமானுவேல் சாயெஸ் மற்றும் கேப்ரியல் சக்மேன் ஆகியோரால் ஏப்பிரலில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின்படி, அமெரிக்காவில் உயர் மட்டத்திலுள்ள 0.5 சதவீதத்தினர் செல்வத்தில் தங்கள் பங்கை 1978ல் சுமார் 17 சதவீதத்திலிருந்து இன்று 35 சதவீதத்திற்கு சற்றுக் கீழ் வரை கொண்டுள்ளனர். உயர்மட்ட 0.1 சதவீதத்தினர் அதிர்ச்சியூட்டும்படி அனைத்து செல்வங்களிலும் 20 சதவீதத்தை ஏகபோகமாகக் கொண்டுள்ளனர்.[7] நாட்டின் செல்வத்தின் பெரும் பங்கானது வங்கிகள், ஊகவணிகர்கள் மற்றும் வோல் ஸ்ட்ரீட் வணிகர்களால் ஏகபோகமாக கொள்ளப்பட்டுள்ளது. 28. உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்தில், மக்கள் தொகையில் பெரும்பான்மையினருக்கான வாழ்நிலைமைகள் அழிவுகரமானதாக இருக்கின்றது. அமெரிக்காவானது பெருளாதாரத் தேக்கம், பெரும் வேலையின்மை மற்றும் வறுமையால் பீடிக்கப்பட்டிருக்கிறது. வோல் ஸ்ட்ரீட்டின் கைகளுக்குள் அனைத்துவளங்களையும் வழிப்படுத்தும் இயக்கத்தில், ஆரம்ப காலங்களில் தொழிலாள வர்க்கத்தால் வென்றெடுக்கப்பட்ட ஒவ்வொரு சமூக வெற்றியும் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஒபாமா நிர்வாகத்தின் சுகாதார பராமரிப்பு வேலைத்திட்டம், தொழில்வழங்குனரால் அதற்காக செலுத்தவேண்டிய பங்கு அதேபோல மருத்துவப் பராமரிப்பு மற்றும் மருத்துவ உதவி இவற்றை அகற்றுவதற்கான உந்துகோலாக இருக்கின்றது. பொதுக்கல்வி நிறுவனங்கள் இலாப நோக்கிற்கானதாக பதிலீடு செய்யப்பட்டு வருகின்றன. அமெரிக்க மற்றும் உலக வாகன உற்பத்தித் தொழிற்துறையின் மையமாக முன்பு விளங்கிய, நாட்டிலேயே உயர்தலைவீத வருவாயைக் கொண்டிருந்த டிட்ராயிட் திவாலுக்குள் தள்ளப்பட்டுவிட்டது. இது ஓய்வூதியங்களையும் நலத்திட்ட பயன்களையும் அழிப்பதற்கும், நகர சொத்துக்களை விற்பதற்கும், வாழ்வின் மிக அடிப்படைத் தேவையான தண்ணீர் கிடைக்காதபடி துண்டிக்க ஆணையிடும் ஒரு தேர்ந்தெடுக்கப்படாத மற்றும் சக்திமிக்க நிதி நிர்வாகியால் தலைமைதாங்கப்படுகிறது. நாடுமுழுவதும் இளைஞர்களின் நிலைமைகள் துயரமிக்கதாக இருக்கின்றன. முழுத் தலைமுறையும் தொடர்ச்சியான கடன்களின் பெருக்கத்தையும் உத்தரவாதம் கொண்ட தரமான வேலைக்கு நம்பிக்கை இல்லாத பொருளாதார பாதுகாப்பின்மையையும் எதிர்கொள்கின்றது. 29. அரசு நிறுவனங்கள் அனைத்தும் மிகவும் செல்வாக்கிழந்துவிட்டன. ஒரு நிறுவனம் என்ற முறையில் ஜனாதிபதி மீதான பொதுமக்களது நம்பகத்தன்மை 29 சதவீதம் வீழ்ச்சி அடைந்திருக்கிறது, அதேவேளை உச்சநீதிமன்றத்தின் மீதான நம்பிக்கை 30 சதவீதமாக நிற்கிறது. காங்கிரஸ் மீதான நம்பிக்கை மிக குறைவானதாக 7 சதவீதம் ஆனது, இது வரலாற்றிலேயே மிகத்தாழ்ந்த மட்டம் ஆகும். ஜூலையில் நடத்தப்பட்ட ஒரு தனிப்பட்ட வாக்கெடுப்பு 18-29 வயதினருக்கு இடையிலானோர் மத்தியில் பெரும்பான்மையினர் கிட்டத்தட்ட ஒவ்வொரு முக்கியமான அரசியல் பிரச்சினையிலும் ஒரு கட்சியையும் நம்பவில்லை என்கின்றனர் என்று கண்டது. அமெரிக்க ஆளும் வர்க்கமானது வர்க்கப்பதட்டங்களை சமரசம் செய்வதற்கு பாரம்பரிய வழிமுறைகளை இனியும் கொண்டிருக்கவில்லை. முக்கியமான சமூக சீர்திருத்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி 50 ஆண்டுகளாகின்றது. கடந்தகாலத்தைச்சார்ந்த புதிய பொருளாதார அணுகல் கொள்கை மற்றும் மாபெரும் சமூக வேலைத்திட்டங்கள் மற்றும் அவற்றில் என்னென்ன எஞ்சி இருக்கின்றனவோ அவை கிழித்தெறியப்பட்டுக் கொண்டிருக்கின்றன. தொழிற்சங்கங்கள் நீண்டகாலமாக தொழிலாளர் அமைப்புக்களாக இல்லை. இன்று அவை பெருநிறுவனங்கள் மற்றும் அரசின் துணைமுகவாண்மைகளாக தொழிற்படுகின்றன, அவற்றின் பிரதான பங்கு, தொழிலாளர்கள் மீது ஆளும் வர்க்கத்தின் கோரிக்கைகளைத் திணிப்பதாக இருக்கின்றன. சமூகப் பதட்டங்களை நசுக்குவதற்கு ஆளும் வர்க்கமானது மேலும் மேலும் போலீசையும் சிறையையும் நோக்கித் திரும்புகின்றது, சுமார் இரண்டு மில்லியன் பேர்களை சிறைக்கம்பிகளுக்கு பின்னால் வைத்துள்ளது, காட்டுமிராண்டித்தனமான நடைமுறையான மரண தண்டனையை பராமரிக்கவும் விரிவுபடுத்தியும் வருகின்றது, உள்ளூர் போலீஸ்துறையை துணைநிலை இராணுவப் படையாக உருமாற்றியும் வருகின்றது. 30. ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பும் வெளிநாட்டில் சூறையாடலும் வெளிநாட்டுக் கொள்கையில் நிதிமூலதனத்தின் செயல்பாட்டு முறையாகும். உள்நாட்டுக் கொள்கையில் அது சமூக எதிர்ப்புரட்சி மற்றும் சர்வாதிகாரமாக இருக்கின்றது. ருடோல்ப் ஹில்பேர்டிங்கை மேற்கோள்காட்டி, லெனின் குறிப்பிட்டார்: நிதிமூலதனமானது சுதந்தரத்திற்காக அல்ல, மேலாதிக்கத்திற்காக முயற்சிக்கிறது. இந்த வழியில் எப்போதும் அரசியல் பிற்போக்கானது, ஏகாதிபத்தியத்தின் சிறப்பியல்பாக இருக்கின்றது, லெனின் தொடர்ந்தார்: “ஊழல், பெரிய அளவில் இலஞ்சம் மற்றும் அனைத்துவகையான மோசடிகளும்தான்.” [8] 31. ஜனாதிபதி பதவி, காங்கிரஸ், நீதிமன்றம் மற்றும் ஊடகத்துறை அனைத்தும் நிதியாதிக்க மேற்குடியால் கட்டுப்படுத்தப்படுகிறது, மக்கள்தொகையின் பரந்த பகுதியினரால் அவை அதிகரித்த அளவில் அவ்வாறாகப் பார்க்கப்படுகின்றன. பொருளாதார வாழ்வின் அனைத்தும் வோல் ஸ்ட்ரீட் மற்றும் பங்குச்சந்தையின் ஆணைகளுக்கு கீழ்ப்படுத்தப்படுகின்றன, இச்சூழ்நிலையானது 2008 நெருக்கடியினை பின்தொடர்ந்து உக்கிரப்படுத்தப்பட்டது. பொருளாதாரத்தை திவாலாக்கிய நிதிய தன்னலக்குழு நெருக்கடியைப் பயன்படுத்தி, அதன் சொந்தக் கரங்களுக்குள் செல்வத்தை வரலாற்று ரீதியாக முன்எதிர்பார்த்திராத வகையில் மாற்றிக்கொள்வதற்கு ஒழுங்கு செய்வதை உருவாக்கியது. ஒபாமா நிர்வாகத்திலிருந்தும் பெடரல் ரிசர்வ்விலிருந்தும் டிரில்லியன் கணக்கான டாலர்கள் இலவச பணத்தால் ஊக்கம்பெற்ற, நிறுவனங்களது இலாபங்கள் என்றுமிராத வகையில் உயர்ந்தன மற்றும் வோல் ஸ்ட்ரீட் ஆனது மனம்போனபோக்கில் ஊகவாணிப வகைக்கு திரும்பியதானது, நிதிய உருகலுக்கு இட்டுச்சென்றுள்ளது 32. இந்த நிலைமைகளின் கீழ் ஆளும் வர்க்கமானது, அரசுக்கான ஒரு கருத்தியல் அடித்தளத்தை நிறுவுதல் மற்றும் அதிருப்தியை குற்றகரமானதாக்கி நியாயப்படுத்தல் ஆகிய இரண்டுக்குமான ஒரு இயங்குமுறையாக யுத்தத்தை பார்க்கிறது. இராணுவாத வன்முறை மற்றும் அதி சமூக சமத்துவமின்மை ஆகியவற்றின் சமூக ரீதியான நச்சுச்சேர்க்கையானது அமெரிக்காவிற்குள்ளே ஜனநாயக வடிவங்கள் நிலைமுறிந்துபோனதில் வெளிப்பட்டது. கடந்த வருடத்தில், தேசிய பாதுகாப்பு முகவாண்மையின் முறைகேட்டை பகிரங்கமாக அம்பலப்படுத்தியவரான எட்வார்ட் ஸ்நோவ்டென், முழு மக்கள்தொகையினதும் அரசியல் மற்றும் சமூகத் தொடர்புகளையும் நடவடிக்கைகளையும் கண்காணிக்கும் பொருட்டு உண்மையில் அனைத்து மின்னணுவியல் செய்தித்தொடர்புகளையும் திரட்டும் சட்டவிரோத உளவு ஸ்தாபனத்தை அம்பலப்படுத்த உதவி இருக்கிறார். எந்தவிதமான நீதிமன்ற நடைமுறைகளும் இல்லாமல் அமெரிக்க குடிமக்களை படுகொலை செய்வதற்கான உரிமையை ஒபாமா உறுதிப்படுத்துகிறார், மற்றும் அவ்வாறு செய்திருப்பதை ஒப்புக்கொள்கிறார். 33. ஒரு பரந்த மற்றும் கணக்கு கூறவேண்டியிராத இராணுவ – உளவு-போலீஸ் எந்திரம் நாட்டின் உற்பத்தித்திறனின் பரந்த பங்கை உறிஞ்சிக்கொண்டு தனக்குத்தானே சட்டம் போட்டுக்கொண்டு செயல்படுகிறது. யுத்த தொழிற்துறையின் அளவானது, 53 ஆண்டுகளுக்கு முன்னர் ஜனாதிபதி ஐசனோவர் “இராணுவ தொழில்துறை வளாகத்தின்” அதிகாரம் பற்றி எச்சரித்தபொழுது இருந்ததை விட இன்று மிகப் பெரிய அளவினதாக இருக்கிறது. அமெரிக்காவானது சராசரியாக ஒரு டிரில்லியன் டாலர்களை அல்லது அதன் முழு உள்நாட்டு உற்பத்தியிலும் கிட்டத்தட்ட 7 சதவீதத்தை இராணுவ உளவு ஸ்தாபனத்தக்கு நிதியூட்டுவதற்கு செலவிடுகிறது, அழிவுச் சாதனங்களுக்கு நிதியூட்ட அர்ப்பணிக்கப்பட்ட இந்த வளங்கள், அமெரிக்காவிற்குள்ளே தொழிலாள வர்க்கத்தின் அவசரத்தேவைகளை பலியிட்டு பெறப்படுகின்றன. “மனித உரிமைகள்” ஏகாதிபத்தியத்தின் எழுச்சி 34. அமெரிக்க ஆளும் வர்க்கமானது “பயங்கரவாதத்தின் மீதான போரை” வெளிநாட்டில் போரை நடத்துவதற்கான வெகுஜன ஆதரவை உருவாக்கும் ஒரு கருத்தியல் சாக்காக பார்த்தது. இன்னும், இடைவிடா போர் ஆதரவு பிரச்சாரம் இருப்பினும், ஒவ்வொரு வாக்கெடுப்பும் இழிபுகழ் பெறுவதாக இருக்கிறது என்று காட்டுகிறது. 2008ல் ஒபாமா தேர்வு செய்யப்படுகையில், அவர் “மாற்றத்திற்கான” வேட்பாளர் என்று சந்தைப்படுத்தப்பட்டது, பெரும்பாலும் புஷ்நிர்வாகத்தின் போர்க்கொள்கைகளுக்கு இருந்த பெரும் எதிர்ப்பின் விளைவினாலாகும். ஆயினும், கடந்த ஆறு ஆண்டுகள் நிலவும் அரசியல் கட்டமைப்பின் வடிவமைப்பிற்குள் மக்கள் எதையும் மாற்றுவதற்கான இயங்குமுறை எதுவும் இருக்கவில்லை என்பதை முடிவாய் எடுத்துக்காட்டியது. ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் நிதி ஆதிக்க மேற்தட்டினரின் ஏகாதிபத்திய கொள்கைக்கு சரிசமமாக அர்ப்பணித்துள்ளனர். ஊடகத்திற்குள்ளே, அரசியல் நிறுவனத்தின் பொய்கள் பற்றி ஒருபோதும் கேள்விக்கு உட்படுத்தப்படுவதில்லை அல்லது அம்பலப்படுத்தப்படுவதில்லை. 35. யுத்தத்தை சட்டபூர்வமாக்குவதிலும் எதிர்ப்பைக் கட்டுப்படுத்துவதிலும் முக்கிய பங்கு போலி இடது அமைப்புகளால் ஆற்றப்பட்டது, அவர்களில் பலர் 1960களின் போர் எதிர்ப்பு இயக்கத்திறகுள் தங்களின் வேர்களைக் கொண்டுள்ளனர். அவர்களின் தனிவகைப்பட்ட பங்களிப்பு என்னவெனில், அமெரிக்க ஏகாதிபத்தியத்தை முற்போக்கான மனிதநேய சக்தி என்று முன்வைத்து, அப்பட்டமான ஆக்கிரமிப்பை, “மனித உரிமைகள்” பாதுகாப்பு என்று வடிவம் கொடுத்ததும் சந்தைப்படுத்தியதும் ஆகும். பதினொரு ஆண்டுகளுக்கு முன்னர், ஈராக் படையெடுப்பின்பொழுது, பத்து மில்லியன் கணக்கான மக்கள் அமெரிக்கா உள்பட உலகெங்கிலும் உள்ள பிரதான நகரங்களில் ஒன்றிணைந்த உலகளாவிய எதிர்ப்புக்களில் பங்கேற்றனர். கடந்த பத்தாண்டு இராணுவவாதத்தின் பெரும் வெடிப்பைக் கண்டது. ஆயினும், 2003 பிப்ரவரியில் எதிர்ப்புக்களுக்கு பெரும்பாலும் தலைமை ஏற்ற நடுத்தரவர்க்க அமைப்புக்கள், போர் எதிர்ப்பு உணர்வை உள்ளடக்கிவைக்க படிமுறைரீதியாக வேலை செய்தன மற்றும் அரசியல் நிறுவனத்துக்கு ஆதரவாய் வழிநடத்திக்கொண்டன. 36. இந்த அரசியற்போக்குகள், ஏகாதிபத்தியத்தின் முகாமுக்குள் நகர்தலானது, அடிப்படை வர்க்கப் பிரச்சினைகளில் கட்டுண்டிருக்கும் அரசியல் மறு அணிசேர்தலில் ஏற்பட்ட மாற்றங்களின் ஒரு வெளிப்பாடாக இருந்தன. 1960களில் அது தோன்றியவாறு, போர் எதிர்ப்பு இயக்கமானது தீவிர நடுத்தரவர்க்கப் பகுதிகளால் ஆதிக்கம் செய்யப்பட்டது. 1973 ல் கட்டாய இராணுவ சேவை முடிவானது, எதிர்ப்புக்ளை கலைக்கவும் தொழிலாள வர்க்கத்தின் மீது இன்னும் நேரடித்தாக்குதலை எளிதாகச்செய்யவும் பொருட்டு, நடுத்தர வர்க்கத்தின் ஒரு பகுதியை தனிமைப்படுத்துவதற்கும் அரசியல் நிறுவனத்துக்குள் ஒன்றிணைப்பதற்குமான, ஆளும் வர்க்கத்தின் பரந்த மூலோபாயத்தின் ஒரு பகுதியாக இருந்தது. அடையாள அரசியலை வளர்த்தெடுப்பது இந்த செயற்பாட்டில் முக்கிய பங்காற்றியது. பின்நிகழ்வுற்ற பத்தாண்டுகளில் நடுத்தர வர்க்க போர் எதிர்ப்பு இயக்கத்தை தலைமைதாங்கிய சமூகத் தட்டுக்கள் சரியாக வலது பக்கம் நகர்ந்தன, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கொள்கை இரண்டு தொடர்பானதிலும் ஆளும் வர்க்கத்தின் வலதுபக்கம் செல்லும் வளைவரை கோட்டின் பாதையை அடியொற்றி அவ்வாறு நகர்ந்தன. 37. அரசியல் நிறுவனத்தை மேலாதிக்கம் செய்யும் பெருநிறுவன மற்றும் நிதியப் பிரபுத்துவத்திற்கு அப்பால், நடுத்தர வர்க்கத்தின் சலுகைமிக்க குறிப்பிடத்தக்க பகுதிகள் அதாவது உயர்மட்ட 5 அல்லது 10 சதவீதத்தினர் தங்களின் செல்வம், இந்த காலகட்டத்தில் கணிசமான அளவு வளர்ச்சி பெற்ற பங்குச்சந்தை மற்றும் நிலம்- வீடு- மனை விற்பனை வணிகத்திலும் பிணைக்கப்பட்டுள்ளது என்பதைக் கண்டனர். எவ்வாறாயினும், அமெரிக்க பங்குப் பரிவர்த்தனை சந்தைகளின் பலமானது, அமெரிக்க முதலாளித்துவத்தின் மேலாதிக்கம் செய்யும் அதன் உலக அந்தஸ்து மற்றும் உள்நாட்டில் சுரண்டலை தீவிரப்படுத்தல் இவற்றின் மீது தம் அடிப்படையை கொண்டிருக்கின்றன. இவ்வாறு ஏகாதிபத்தியத்திற்கான ஒரு புதிய தொகுதி வளர்த்தெடுக்கப்பட்டது. 1990களில் பால்கன் யுத்தங்கள் ஒரு பிரதான திருப்புமுனையாக இருந்தது, இவை கிளிண்டன் நிர்வாகத்தால் மனித உரிமைகளுக்கான யுத்தமாக முன்னிலைப்படுத்தப்பட்டன. அப்பொழுது உலக சோசலிச வலைத் தளம் பின்வருமாறு எழுதியது: புறநிலை செயல்வகை மற்றும் நீண்ட பங்குச்சந்தை பூரிப்பின் சமூக விளைபயன்களானது, உயர்நடுத்தர வர்க்க பகுதிகள் மத்தியில் ஒரு புதிய அடிபணிந்த ஒரு பிரிவை ஏகாதிபத்தியம் திரட்டிக்கொள்ளக்கூடியதாக இருந்தது. ஊடகத்தால் முன்னிலைப்படுத்தப்பட்டு, பெருமளவில் அடிமையான மற்றும் முறைகேடுற்ற கல்வியாளர் சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட, ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் நிலைகொண்டுள்ள பிற்போக்கு, அனுசரித்து போகும் மற்றும் சிடுமூஞ்சித்தனமான அறிவுஜீவித சூழல் மக்கள் தொகையின் உயர்சலுகைமிக்க அடுக்கின் சமூகக் கண்ணோட்டத்தை எதிரொலிக்கிறது, அது அதன் புதிதாகப் பெற்ற வளத்தின் அரசியற் பொருளாதார அடித்தளத்தைப் பற்றி விமர்சன ஆய்வை ஊக்குவிப்பதில் குறைந்த ஆர்வமே காட்டுகிறது. [9] 38. ஒபாமா நிர்வாகத்தின் இயங்குமுறை மற்றும் அடையாள அரசியல் மூலம், உயர் நடுத்தரவர்க்கத்தின் சில பகுதிகள் மற்றும் கற்றோர் குழு, போலி இடது அரசு முதலாளித்துவ அமைப்புகள் மற்றும் பப்லோவாத அமைப்புகள் ஆகியன ஏகாதிபத்தியத்திற்கு தங்களை சமரசம் செய்துகொண்டது மட்டுமல்லாமல், “மனித உரிமைகள் ஏகாதிபத்தியத்தின்” மிக ஆர்வம்கொண்ட வக்காலத்து வாங்குபவர்களாகவும் மாறி உள்ளன. 39. கடந்த ஆறு ஆண்டுகளாக, இந்த அமைப்புக்கள் அமெரிக்க இராணுவ மற்றும் புலனாய்வு முகவாண்மைகளின் நடவடிக்கைகளில் என்றும் அதிகரிக்கும் நேரடிப்பாத்திரத்தை ஆற்றி இருக்கின்றன. எகிப்தில், அவை பரந்த புரட்சிகர இயக்கத்தை தடம்புரளச்செய்ய உதவின. முதலில் இராணுவத்தின் “ஜனநாயக” பாத்திரத்தில் பிரமைகளை ஊக்கப்படுத்தின, பின்னர் இயக்கத்தை முஸ்லிம் சகோதரத்துவத்தின் பின்னே இட்டுச்சென்றன, இறுதியில் இராணுவத்தை அரசியல் அதிகாரத்திற்கு திரும்பக் கொண்டுவந்த ஒரு ஆட்சிக்கவிழ்ப்பின் பின்னே வழிநடத்தின. லிபியாவில், முயம்மர் கடாபியின் அரசாங்கத்தை தூக்கி எறிய நேட்டோ தலையீட்டிற்கு ஆதரவளித்தன, குடிமக்களின் வாழ்வைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கை என இதனை முன்வைத்தன. சிரியாவில், அல்கொய்தா மற்றும் ஏனைய இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புக்களால் முன்னெடுக்கப்படும் சிஐஏ ஆதரவு உள்நாட்டு யுத்தத்தை ஜனநாயகத்திற்கான ஒரு புரட்சிகர இயக்கம் என மறைக்க உதவின. ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு போலி இடது இயக்கத்தின் முக்கிய தலைவர் இந்தத்தட்டினரில் பரந்த அளவு உணரப்படும் ஒரு உணர்வை வெளிப்படுத்தும் வகையில், சிரியாவில் ஏகாதிபத்திய நடவடிக்கைக்கு ஆதரவளிப்பதை நியாயப்படுத்தும் ஒரு பகுதியாக “சிந்திக்காத ஏகாதிபத்திய எதிர்ப்பு” என அதைக் கண்டித்தார். 40. உக்ரேனில் ஏகாதிபத்திய ஆதரவு ஆட்சி-மாற்ற நடவடிக்கையில், போர் ஆதரவு கல்வியாளர்கள் மற்றும் போலி இடது அமைப்புக்கள் ஒரு பாசிச ஆட்சிக் கவிழ்ப்பு சதியை மூடிமறைக்கும் முயற்சியில் தங்களின் சேவைகளை வழங்கின. இது ஆரம்பத்திலிருந்து அமெரிக்காவாலும் ஜேர்மனியாலும் [பிரெஞ்சு புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சியின் வார்த்தைகளில் சொல்வதானால்] ”ஜனநாயகத்திற்கான வெகுஜனக் கிளர்ச்சி” என ஆதரிக்கப்பட்டது மற்றும் [அமெரிக்காவில் சர்வதேச சோசலிச அமைப்பின்படி] “யானுகோவிச் ஆட்சியைத் தூக்கி எறிவதற்கான வெகுஜன எழுச்சி” என ஆதரிக்கப்பட்டது. இந்த நடவடிக்கையை ஆதரிக்கும் விதத்தில், இந்த சக்திகள் நாஜிக்களுடன் வேலை செய்த மற்றும் மனித இன அழிப்பில் பங்கேற்ற உக்ரேனிய தேசியவாத சக்திகளை புகழும் வலது பிரிவு மற்றும் ஸ்வோபோடா உள்ளடங்கிய பாசிச குழுக்களுடன் நேடியாகத் தங்களை அணிசேர்த்துக் கொண்டன. ரஷ்ய சோசலிச இயக்கத்தில் முன்னனி நபரான இல்யா புட்ரைட்ஸ்கிஸ் பாசிஸ்டுகளுடன் வேலை செய்வதை வெளிப்படையாக நியாயப்படுத்தினார்: “அவர்கள் இல்லாமல் ஹ்ருஷ்செவ்ஸ்கோவோ மீது எந்த தடைகளும் இருந்திருக்காது அல்லது ஆக்கிரமிப்பு அமைச்சரவை ‘புரட்சியின் தலைமையகமாக’ ஆகியிருக்காது” என்றார். 41. அமெரிக்கா மற்றும் ஐரோப்பா வலுச்சண்டைக்கு போவதை போலி இடது சக்திகள் எந்த இயங்குமுறை மூலம் நியாயப்படுத்த விரும்புகின்றன என்றால், ரஷ்யாவையும் சீனாவையும் “ஏகாதிபத்திய” நாடுகள் என்று தவறாகப் பண்பிடுவதன் மூலமாகும். அவர்களின், ரஷ்யாவையும் சீனாவையும் அனைத்து வரலாற்று உள்ளடக்கத்திலிருந்தும் அகற்றிக் கிழித்தெடுக்கும் இந்தப் பண்பிடலானது, ஆசியா மற்றும் கிழக்கு ஐரோப்பா இரண்டிலும் ஏகாதிபத்திய சக்திகளால் செய்யப்படும் அதிகரித்த ஆபத்தான ஆத்திரமூட்டல்களை ஏற்கும் விதத்தில் பொதுக்கருத்தை பக்குவப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சோவியத் ஒன்றியமும் மற்றும் 1949 புரட்சிக்குப் பின்னரான சீனாவும் “அரசு முதலாளித்துவம்” என்றும், முதலாளித்துவ மீட்சியுடன் இடம்பெற்ற உருமாற்றங்கள், ஆட்சிகளின் சமூக அடித்தளங்களில் எந்த மாற்றத்தையும் பிரிதிநித்துவப்படுத்தவில்லை என்றும் கூறும் புனைகருத்துடன் கட்டுண்டிருக்கிறது. இருநாடுகளிலும் தேசியமயமாக்கப்பட்ட சொத்துடைமை உறவுகளை அழித்தலானது, அவற்றை காலனித்துவ அந்தஸ்திற்கு குறைப்பதற்கான நிதிமூலதனத்தினாலான முயற்சிகளுடன் பிணைக்கப்பட்டது, அவற்றை ஏகாதிபத்திய சக்திகளின் புதிய மையங்களாக உயர்த்துவதோடு பிணைக்கப்பட்டதல்ல. 42. 1929ல் எழுதுகையில் லியோன் ட்ரொட்ஸ்கி, சோவியத் ஒன்றியத்தில் முதலாளித்துவ மீட்சியின் சமூகப் பொருளாதார விளைபயன்களை மிக முன்னறிவுடன் எதிர்பார்த்தார். “ஏகாதிபத்தியமாக”” ஆவதற்கும் அப்பால், “ஜாரிச ரஷ்யாவுக்கு, உலக யுத்தத்தின்போக்கால் முன்தீர்மானிக்கப்பட்ட கீழ்நிலை அந்தஸ்தைக் கூட, முதலாளித்துவ ரஷ்யா இப்பொழுது எடுக்க முடியாது, இன்று ரஷ்ய முதலாளித்துவம் எந்த முன்னேற்றமும் இல்லாத சார்புநிலை கொண்ட, அரைக்காலனித்துவ முதலாளித்துவமாக இருக்கும்.”[10] சோசலிச சமத்துவக் கட்சியானது சீனா மற்றும் ரஷ்யா இரண்டிலும் உள்ள ஆட்சிகளை சமரசமற்ற வகையில் எதிர்க்கிறது. முதலாளிகள் மற்றும் தன்னலக்குழுக்களின் சிறுதட்டின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்திக்கொள்ளும் அவை, ஏகாதிபத்தியத்திடமிருந்து உண்மையான சுதந்திரத்தை பெற்றிருக்கவில்லை மற்றும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் சூழ்ச்சிக்கு ஒரு கொள்கைவழிப்பட்ட எதிர்ப்பைக் காட்ட திராணியற்றதாகவும் இருக்கின்றன. எவ்வாறாயினும், இந்த ஆட்சிகளுக்கு எமது எதிர்ப்பானது, சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை ஒரு சுயாதீனமான அரசியல் சக்தியாக அணிதிரட்டப் போராடுவதில் வேரூன்றி இருக்கிறது. 43. ஆளும் வர்க்கத்தின் அனைத்து முகவாண்மைகளுடனான ஈவிரக்கமற்ற விமர்சனத்தினூடாக அனைத்து முதலாளித்துவ மற்றும் குட்டிமுதலாளித்துவ அரசியல் சக்திகளுடனான எதிர்ப்பில், தனது சொந்த அரசியல் சுயாதீனத்தை நிலைநாட்டுவதன் மூலம் மட்டுமே தொழிலாள வர்க்கமானது, ஏகாதிபத்திய யுத்தத்தை எதிர்க்க வழிதேடும் அனைவரையும் அதன் பக்கம் வென்றெடுக்க முடியும். அமெரிக்காவில் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுதந்திரத்திற்கு சுயாதீனத்திற்கு, [பெருமுதலாளிகளின் இரு பிரதான கட்சிகளான] ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிக்கு எதிரான மற்றும் இந்தக் கட்சிகளின் சுற்றுப்பாதையில் செயல்பட்டுக்கொண்டு அவற்றின் அரசியல் மேலாளுமையை பராமரிப்பதற்கு விழையும் அனைத்து அமைப்புக்களுக்கும் எதிரான ஒரு ஈவிரக்கமற்ற போராட்டம் அவசியப்படுகிறது. சோசலிச சமத்துவக் கட்சியைக் கட்டி எழுப்பு! 44. ஏகாதிபத்திய யுத்தத்தைத் தோற்றுவித்த அதே முரண்பாடுகள்தான் வர்க்கப் போராட்டம் பெரிய அளவில் தீவிரமடைதலை உருவாக்குகிறது. நிதிய பிரபுத்துவத்தினரின் தீர்வு ஒற்றைத் தலைமையின் கீழ் உலகப் பொருளாதாரத்தை ஒன்றிணைக்க முயல்கையில், உலக முதலாளித்துவத்தின் அடக்கமுடியாத நெருக்கடிக்கு, ஏகாதிபத்தியம் ஒரு கொள்ளையடிக்கும் தீர்வாகும். இதுதான் யுத்தத்தின் பாதை. அதே நெருக்கடிக்கு சோசலிசப் புரட்சி என்பது முற்போக்கான தீர்வாகும், இது தொழிலாள வர்க்கத்தின் தீர்வாகும். கேள்வி இதுதான்: எது மிக வேகமாய் அபிவிருத்தியடையும், யுத்தத்தை நோக்கிய போக்கா அல்லது சமூகப் புரட்சியை நோக்கிய போக்கா? ஆளும் வர்க்கத்தின் மற்றும் அதன் சமூக அமைப்பின் காட்டுமிராண்டித்தனமா அல்லது தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் அணிதிரளலா? இந்தக் கேள்விக்கு விடை அரசியல் அரங்கில்தான் தீர்க்கப்படும். இரண்டாம் உலக யுத்தத்தின்போது ட்ரொட்ஸ்கி எழுதியவாறு, மனிதகுலத்தின் நெருக்கடியானது புரட்சிகர தலைமை நெருக்கடியாக சுருக்கப்பட்டு விட்டது. இந்த நெருக்கடியின் தீர்வானது கட்சியின் நடவடிக்கைகள் மற்றும் முடிவுகளின் மீது தங்கி இருக்கிறது. 45. ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம் தொழிலாள வர்க்கத்திற்குள் தத்துவார்த்த ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் அமைப்பு ரீதியாகவும் வேரூன்றப்பட்டாக வேண்டும் என்று சோசலிச சமத்துவக் கட்சி வலியுறுத்துகிறது. பொருளாதார நெருக்கடி மற்றும் ஆளும் வர்க்கத்தின் போர்க்கொள்கைகள் இவை இரண்டினதும் விளைவுகளால் பாதிக்கப்படுவது தொழிலாள வர்க்கம்தான். முதலாளித்துவ வர்க்கத்திற்கு எதிரான எதிர்ப்பில் நலன்களைக் கொண்டிருப்பது தொழிலாள வர்க்கம்தான். மேலும் தொழிலாள வர்க்கம் மட்டும்தான் ஒரு சர்வதேச வர்க்கமாகும். அதன் நலன்கள் அனைத்து தேசிய எல்லைகளையும் கடந்து செல்கிறது. 150 ஆண்டுகளுக்கு முன்பே மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் விளக்கினர், “உழைக்கும் மனிதர்களுக்கு நாடு கிடையாது” என்று. 46. தொடர்ச்சியான அரசியல் வேலையினூடாக தொழிலாள வர்க்கத்தின் மிகவும் முன்னேறிய பகுதிகளைக் கல்வியூட்டவும் அவர்களின் நனவை உயர்த்தவும் சோசலிச சமத்துவக் கட்சியானது கட்டாயம் முயற்சிக்க வேண்டும். அவ்வாறு செய்கையில், ஆளும் வர்க்கத்தின் ஊதுகுழல்கள் மற்றும் ஊடகத்திலிருந்து ஊற்றெடுக்கும் பொய்ம்மைப்படுத்தல்கள் மற்றும் அவற்றின் பிரச்சாரத்தை அது கட்டாயம் எதிர்த்துப் போராட வேண்டும். அனைத்துவகையான தேசியவாத மற்றும் பிற பேரினவாத வடிவங்களுக்கு எதிராக தொழிலாளர்களுக்கு தடுப்பூசிபோட அது கட்டாயம் முயற்சி செய்யவேண்டும், ஒவ்வொரு நாட்டிலும் உள்ள அனைத்து தொழிலாளர்களின் போராட்டங்களுடன் ஒரு ஒற்றுமையை ஊக்குவிக்க வேண்டும். ஏகாதிபத்தியத்தின் தோல்வி ஒரு சர்வதேச இயக்கத்தின் மூலம் மட்டுமே சாத்தியமாகும், ஆனால், சர்வதேச கட்சியைக் கட்டுவது என்பதன் அர்த்தம் ஒரு சர்வதேச வேலைத்திட்டத்திற்கும் முன்னோக்கிற்கும் தொழிலாள வர்க்கத்தை வென்றெடுக்க ஒவ்வொரு நாட்டிலும் போராடுவது என்பதாகும். 47. தொழிலாள வர்க்கத்திற்குள் ஒரு இயக்கத்தைக் கட்டி எழுப்புவதற்கான போராட்டத்துக்கு, போலி இடது மற்றும், அனைத்துலகக் குழு தீர்மானத்தின் வார்த்தைகளில் சொல்வதானால், “யுத்தத்திற்குப் பின்னே அணிவகுத்து நிற்கும் எண்ணிறைந்த முன்னாள் அமைதிவாதிகள், தாராண்மைவாதிகள், பசுமைகள் மற்றும் அராஜகவாதிகள்” அனைவரையும் படிமுறைரீதியாய் அம்பலப்படுத்துவது தேவைப்படுகிறது. ஏகாதிபத்தியம் நடத்தும் ஆக்கிரமிப்புக்கு “மனித உரிமைகள்” மற்றும் அடையாள அரசியல், புதிய நியாயப்படுத்தல்களாக ஆகியிருக்கின்ற அந்த விஷயங்களில் தொழிலாள வர்க்கம் கட்டாயம் கல்வியூட்டப்பட வேண்டும். ஏகாதிபத்தியத்திற்கெதிரான போராட்டத்திற்கு கூர்மையான அரசியல் வேறுபடுத்தல் தேவைப்படுகிறது. 1916ல் லெனின் எழுதினார், “ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டமானது சந்தர்ப்பவாதத்திற்கு எதிரான போராட்டத்துடன் பிரிக்கவியலாத வகையில் பிணைந்திராவிட்டால் அது மோசடியும் பித்தலாட்டமும் ஆகும்.” லெனினது நாட்களில், உலக யுத்தத்திற்கு ஆதரவளித்த சோசலிஸ்டுகள் என்று கூறப்படுபவர்கள் அனைவருடனும் அதேபோல அதை மூடிமறைத்த அனைவருடனும் துண்டித்துக்கொள்ளல் மற்றும் அம்பலப்படுத்தல் பற்றிய பிரச்சினையாக அது இருந்தது. இன்று அது ஏகாதிபத்தியத்தை ஆதரிக்கும் அனைவருடனும், குறிப்பாக தொழிற்சங்கங்கள் தொடங்கி நேஷன் இதழ்வரை, சர்வதேச சோசலிச அமைப்பு (International Socialist Organization), மற்றும் சோசலிச மாற்றீடு (Socialist Alternative) வரையிலான ஜனநாயகக் கட்சியின் துணை அமைப்புக்கள் மற்றும் சலுகைமிக்க உயர் நடுத்தர வர்க்கம் சார்பில் பேசும் அமைப்புக்களின் அணிவரிசைக்கும் எதிரான போராட்டமாக இருக்கிறது. 48. யுத்தத்திற்கு எதிரான போராட்டமானது கட்சி வேலையின் அனைத்துக் கூறுகளில் இருந்தும் பிரிக்கப்பட்டதல்ல, மாறாக மேலும் ஒரு ஒன்றிணைந்த பகுதி ஆகும். இரண்டாம் உலக யுத்தத்தின்போது 1939ல் ஏற்றுக் கொள்ளப்பட்ட தீர்மானத்தில் அமெரிக்க சோசலிச தொழிலாளர் கட்சி வலியுறுத்தியதாவது: “தற்போதய காலகட்டத்தின் பண்பானது, ஐயத்திற்கிடமில்லாத வகையில் கட்சியின் பிரதான பணியை ஆணையிடுகிறது: யுத்தத்திற்கு எதிரான போராட்டத்தில் ...... என்ன அவசியப்படுகிறதெனில் தற்காலிக அல்லது அங்கொன்றும் இங்கொன்றுமான நடவடிக்கை அல்ல, மாறாக தாக்குப்பிடிக்கக் கூடிய, கருத்தூன்றி செய்யப்பட்ட மற்றும் நீடித்து நிலைக்கவல்ல கொள்கை ஆகும்.” அதன்படி இன்று அது அவசியமானதாகும். யுத்தத்திற்கு எதிரான போராட்டமானது, அதன் சமூக மற்றும் அரசியல் உரிமைகள் அனைத்தையும் பாதுகாப்பதில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கான கட்சியின் போராட்டத்துடன் கட்டாயம் இணைக்கப்பட வேண்டும். 49. ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம் என்பது முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டமாகும். யுத்தத்தை எதிர்ப்பதில் சம்பந்தப்பட்டுள்ள அனைத்து அடிப்படை பிரச்சினைகளும் – தயார்நிலை இராணுவத்தை இரத்துச்செய்வதற்கான கோரிக்கை, வெளிநாடுகளில் இருந்து அனைத்து அமெரிக்க படைகளையும் திரும்பப்பெறல், இராணுவ உளவு அமைப்பை கலைத்தலுக்கான கோரிக்கை – ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் உலகப் பொருளாதாரத்தை மறு ஒழுங்கமைக்கவும், அதாவது தனியார் இலாபத்திற்கென இல்லாமல் சமூகத்தேவையை நிறைவேற்ற உற்பத்தியை அறிவார்ந்த மற்றும் ஜனநாயக ரீதியில் திட்டமிட, தொழிலாள வர்க்கத்தை அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றச்செய்வதற்கு அதனை சுயாதீனமான அரசியல் மற்றும் புரட்சிகர அணிதிரட்டலுக்கான தேவையை எழுப்புகிறது.. 50. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியின் பலமானது, அதன் வேலைத்திட்டம், உலகப் பொருளாதார அபிவிருத்தியின் தர்க்கத்திற்கு பொருந்துகிறதும் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் நலன்களை தெளிவாகப் பேசக்கூடியதும் என்ற உண்மையில் இருந்து எழுகிறது. கட்சியின் வளர்ச்சி என்பது ஒரு புறநிலை நிகழ்வுப்போக்கின் நனவான வெளிப்பாடாகும். ஆயினும், இந்த வளர்ச்சி தானாகவே நிகழ்ந்து விடப்போவதில்லை. ஒரு புரட்சிகர வேலைத்திட்டத்திற்கு கட்டாயம் போராடியே தீரவேண்டும். கட்சியின் கட்டமைப்பிற்குள்ளே வேலை செய்யும் ஒவ்வொரு உறுப்பினரின் பணி அதுவேயாகும், தொழிலாள வர்க்கத்தின் எதிர்வரும் போராட்டங்களுக்கான கருவையும் தலைமையையும் வளர்த்தெடுப்பதற்கு மிக முக்கியமான தொழிற்சாலைகள், வேலைத் தளங்கள், பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் சோசலிச சமத்துவக் கட்சியின் தளத்தைக் கட்டி எழுப்புதலாகும். அனைத்துலகக் குழுவின் தீர்மானம் முடிவுரைக்கின்றவாறு, “அனைத்துலகக் குழுவின் தலைமையின் கீழ் நான்காம் அகிலத்தைக் கட்டி எழுப்புதல் பிரதான மூலோபாய பிரச்சினையாக இருக்கிறது.” அமெரிக்காவில் இதன் பொருள் சோசலிச சமத்துவக் கட்சியை கட்டி எழுப்புவதாகும். Footnotes: [1] Zbigniew Brzezinski, The Grand Chessboard, 1997, p. 30. [2] Ibid., p. 35. [3] “Why the Bush administration wants war,” World Socialist Web Site, WSWS Editorial Board, September 14, 2001. [4] “After the Slaughter: Political Lessons of the Balkans War,” David North, June 14, 1999. [5] “The crisis of American capitalism and the war against Iraq,” World Socialist Web Site, David North, March 21, 2003. [6] Imperialism, the Highest Stage of Capitalism, V.I. Lenin, Collected Works Vol. 22. [7] Emmanuel Saez and Gabriel Zucman, “The Distribution of US Wealth, Capital Income and Returns since 1913,” March 2014. [8] “Imperialism and the Split in Socialism,” V.I. Lenin, Collected Works, Vol. 23. [9] “After the Slaughter: Political Lessons of the Balkan War,” David North, op.cit. [10] “Is Parliamentary Democracy Likely to Replace the Soviets?” Writings of Leon Trotsky (1929), p. 55. Copyright © 1998-2014 World Socialist Web Site - All rights reserved |
|
|