தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ரஷ்யா மற்றும் முந்தைய USSR Obama commits US to war against Russia in defense of Baltic states பால்டிக் அரசுகளைப் பாதுகாப்பதில் ரஷ்யாவிற்கு எதிரான யுத்தத்திற்கு ஒபாமா அமெரிக்காவை பொறுப்பாக்குகிறார்
Barry
Grey Use this version to print| Send feedback கடந்த வார வேல்ஸ் நேட்டோ மாநாட்டுடன் தொடர்புபட்ட பல உரைகள் மற்றும் பத்திரிகை கூட்டங்களில், ரஷ்யாவின் எல்லையை ஒட்டியுள்ள எஸ்தோனியா, லித்துவேனியா மற்றும் லாட்வியா ஆகிய பால்டிக் அரசுகளில் அமெரிக்க இராணுவம் ஒரு நிரந்த பிரசன்னத்தைக் கொண்டிருக்குமென ஜனாதிபதி பராக் ஒபாமா பகிரங்கமாக அறிவித்தார். இந்த நாடுகளின் அரசாங்கங்கள் முறையீடு செய்யும் ரஷ்ய ஆக்ரோஷத்திற்காக மாஸ்கோவை தாக்குவதன் மூலமாக விடையிறுக்க, அமெரிக்க விமானப்படை மற்றும் தரைப்படை என்றென்றைக்கும் அங்கே நிறுத்தப்பட்டிருக்குமென அவர் தீர்க்கமாக அறிவித்தார். வேல்ஸிற்குப் பின்னர் எஸ்தோனியா தலைநகர் டாலினிற்குச் சென்ற ஒபாமா, ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்கா மற்றும் நேட்டோவின் பல இராணுவ நகர்வுகளையும் அறிவித்ததுடன், முன்னாள் சோவியத் குடியரசுகளான உக்ரேன், ஜோர்ஜியா மற்றும் மோல்டோவாவின் இராணுவ படைகளுக்கு முட்டு கொடுக்கும் விரிவான பொருளாதார தடைகளையும் அறிவித்தார். அந்த மூன்று நாடுகளையும் அமெரிக்க-மேலாதிக்க நேட்டோ இராணுவ கூட்டமைப்பில் சேர்ப்பதற்கு வாஷிங்டன் அழுத்தம் அளிக்குமென்பதையும் அவர் தெளிவாக சேர்த்துக் கொண்டார். இத்தகைய அறிக்கைகள் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்கா மற்றும் நேட்டோ இராணுவ அச்சுறுத்தல்களின் ஓர் ஆழ்ந்த தீவிரத்தன்மையை எடுத்துக்காட்டுகின்றன. எந்தவித பொது விவாதமும் இல்லாமல், முற்றிலும் அமெரிக்க மக்களின் விருப்பத்திற்கு மாறாக, ஒபாமா நிர்வாகம் கிழக்கு ஐரோப்பாவின் மூன்று சிறிய நாடுகளின் பொருட்டு உலகின் இரண்டாவது மிகப் பெரிய அணுஆயுத சக்தியுடன் யுத்தத்திற்குச் செல்ல அந்நாட்டை பொறுப்பாக்கி உள்ளது. செப்டம்பர் 3இல் எஸ்தோனிய ஜனாதிபதி டூமாஸ் ஹென்றிக் இல்வெஸூடனான ஒரு கூட்டு பத்திரிகையாளர் கூட்டத்தில் ஒபாமா அறிவித்தார், “ஆகவே எஸ்தோனியாவின் பாதுகாப்பிற்கு அமெரிக்காவின் கடமைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவதற்காகவே, முதலும் மிகமுக்கியமாக, இங்கே நான் வந்துள்ளேன். நேட்டோ கூட்டணியில் உள்ளவாறு, நாம் 5ஆம் ஷரத்தின் விதிமுறைகளை நம்முடைய கூட்டு பாதுகாப்பிற்காக ஏற்றுள்ளோம். அந்தவொரு கடமைப்பாட்டை உடைக்க முடியாது. அது உறுதியானது. அது நிலைபேறுடையது.” அந்நாளின் இறுதியில் "எஸ்தோனிய மக்களுக்கு" அளித்த உரையில், ஏதாவது இருந்ததென்றால், அது பால்டிக் நாடுகளில் அமெரிக்க இராணுவ படைகளின் கடமைப்பாடு குறித்தும், ரஷ்யாவைத் தாக்க அவை தயாராக இருப்பது குறித்தும் ஒபாமா இன்னும் மேலதிகமாக வெளிப்படையாக இருந்தார் என்பது தான். “இன்று, நிறைய நேட்டோ ரோந்து விமானங்கள் பால்டிக் பிரதேச வானில் வட்டமிடுகின்றன,” என்றவர் தெரிவித்தார். “நிறைய அமெரிக்க படைகள் தரைப்படைகளுக்கு பயிற்சியளித்து வருவதுடன், ஒவ்வொரு பால்டிக் நாட்டிலும் சுழற்சிமுறையிலும் இருந்து வருகின்றன. நிறைய நேட்டோ கப்பல்கள் கருங்கடலில் ரோந்து சுற்றிக் கொண்டிருக்கின்றன... எத்தனை காலத்திற்குத் தேவையோ அதுவரையில் இத்தகைய பாதுகாப்பு முறைமைகளை நம்முடைய கூட்டுறவு நீடிக்குமென நான் நம்புகிறேன்... “5ஆம் ஷரத்து முற்றிலும் தெளிவாக இருக்கிறது. ஒரு நாட்டின் மீது ஒரு தாக்குதல் என்பது அனைவரது மீதும் தாக்குதல் என்றாகும். ஆகவே, அதுபோன்ற தருணத்தில், நீங்கள் ஒருவேளை மீண்டும் 'உதவிக்கு யார் வருவார்கள்' என்று கேள்வி எழுப்பினால், உங்களுக்கே பதில் தெரியும்—அமெரிக்க இராணுவ படைகள் உள்ளடங்கிய நேட்டோ கூட்டணி வரும், அது 'இப்போதே, இங்கே இருக்கிறது!' நாங்கள் இங்கே எஸ்தோனியாவிற்காக இருக்கிறோம். நாங்கள் இங்கே லாட்வியாவிற்காக இருக்கிறோம். நாங்கள் இங்கே லித்துவேனியாவிற்காக இருக்கிறோம்... “இங்கே பால்டிக்கில்... அமெரிக்க இராணுவ தரைப்படைகள் உள்ளடங்கலாக—அமெரிக்க படைகள் தொடர்ந்து எஸ்தோனியா மற்றும் லாட்வியா மற்றும் லித்துவேனியா முழுவதும் சுழற்சிமுறையில் இருக்கும்.” [அழுத்தம் சேர்க்கப்பட்டது] அவர் கூறுகையில், “நாம் நேட்டோவின் அதிரடி விடையிறுப்பு படையை விரிவாக்க வேண்டி உள்ளது, அதன்மூலம் அதை மிக விரைவாக பயன்படுத்த முடியும், மேலும் வெறுமனே அச்சுறுத்தல்களுக்கு எதிர்நடவடிக்கை காட்டுவது மட்டுமல்லாமல், அவற்றை பின்வாங்கச் செய்யவும் முடியும்,” என்று வலியுறுத்தும் அளவிற்கு சென்றார். நேட்டோ உச்சிமாநாட்டைத் தொடர்ந்து, இரண்டு நாட்கள் கழித்து ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில், ஒபாமா அதே ஆக்ரோஷ தொனியை மீண்டும் பலமாக வலியுறுத்தினார். ஒட்டுமொத்தமாக 6.6 மில்லியன் மக்களைக் கொண்ட மூன்று சிறிய நாடுகளின் அரசாங்கங்களுக்குரிய நடவடிக்கைக்காக, கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட அந்த கடமைப்பாடுகளுடன், அமெரிக்க மக்களின், உண்மையில் உலக மக்களின், தலைவிதியையும் அமெரிக்க அரசாங்கம் இணைத்துக் கட்டுகிறது. அந்த மூன்று அரசாங்கங்களுமே அதிதீவிர தேசியவாத மற்றும் வெறிப்பிடித்த ரஷ்ய-விரோத வலதுசாரி அரசாங்கங்களாகும். அவை சோவியத் ஒன்றியத்திலிருந்து பிரிந்து, முதலாளித்துவ மீட்சியை தொடங்கிய பின்னர், அரசு சொத்துக்களை சூறையாடியதன் மூலமாக தங்களின் செல்வவளத்தைக் குவித்து கொண்ட ஒரு குற்றகரமான செல்வந்த மேற்தட்டு அடுக்கை பிரதிபலிக்கின்றன. தனிநபர்களால் தலைமை வகிக்கப்படும் இந்த மூன்று அரசாங்கங்களும் அமெரிக்க உளவுத்துறை மற்றும் பெண்டகனுடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டுள்ளன. அவை தொழிலாளர் வர்க்கத்தை ஏழ்மையாக்கும் அனைத்துவிதமான சிக்கன திட்டங்களையும் திணித்து வருகின்றன; அனைத்து சமூக பாதுகாப்புகளையும் நீக்கி வருகின்றன; மற்றும் மேற்கத்திய மூலதனம் கட்டுப்பாடில்லாத இலாபங்களைப் பெறுவதற்கு அவற்றின் அந்தந்த பொருளாதாரங்களைத் திறந்துவிட்டு வருகின்றன. எஸ்தோனிய தலைநகரில் ஒபாமாவுடன் மேடையை பகிர்ந்து கொண்ட எஸ்தோனிய ஜனாதிபதி டூமாஸ் ஹென்றிக் இல்வெஸ், அமெரிக்காவில் படித்து வளர்ந்தவராவார். 1984இல் இருந்து 1993 வரையில் அமெரிக்கா செயல்படுத்தி வந்த Radio Free Europeஇன் எஸ்தோனிய பிரிவின் தலைவராக வேலை செய்தார். பெரும்பாலும் இரும்பு பெண்மணி என்றும் இரும்பு மங்கோலியா என்றும் குறிப்பிடப்படும் லித்துவேனிய ஜனாதிபதி டாலியா க்ரேபௌஸ்கைய்ட், சோவியத் ஒன்றியத்திலிருந்து லித்துவேனியா பிரிந்து வந்த பின்னர் உடனே வாஷிங்டன் டிசியின் ஜோர்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் மூத்த செயலதிகாரிகளுக்கான சிறப்பு பாடப்பிரிவுகளில் படிக்கச் சென்றவராவார். 1990களில் அவர் வில்லினியஸில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் லித்துவேனிய அரசாங்கத்தின் முழு அதிகாரம் அளிக்கப்பெற்ற அரசு தூதராக பணியாற்றினார். லாட்வியாவின் பிரதம மந்திரி லியாம்டோடா ஸ்ட்ரௌஜூமா வலதுசாரி ஐக்கிய கட்சியின் ஓர் அங்கத்தவர் ஆவார். இந்த மூன்று அரசாங்கங்களுமே அமெரிக்க கைப்பாவை அரசாங்கங்களாகும். அவை அதிகளவில் ஸ்திரமின்றியும், உள்மோதலால் பிளவுபட்டும் உள்ளன. தொழிலாள வர்க்க வாழ்க்கை தரங்கள் அழிக்கப்பட்டமை மற்றும் ஆளும் செல்வந்த மேற்தட்டின் ஊழல் ஆகியவற்றால் கோபத்துடன் சீற்றத்தில் இருக்கும் மக்களுக்கு தலைமை தாங்கி வருகின்றன. அவை ரஷ்யாவிற்கு எதிரான ஆக்ரோஷ நடவடிக்கைக்கு மிகவும் வெறித்தனமாக வக்காலத்துவாங்குபவையாக உள்ளன. ரஷ்யாவிடமிருந்து பால்டிக் அரசுகளுக்கு இல்லாதவொரு அச்சுறுத்தலை வாஷிங்டன் உருவாக்கி வருகிறது. 20க்கும் அதிகமான ஆண்டுகளுக்கு முன்னர், சோவியத் ஒன்றிய கலைப்பினது நிகழ்வுபோக்கின் போது, இந்த நாடுகள் மாஸ்கோவின் ஒப்புதலுடன் தான் சுதந்திரமடைந்தன. இப்போது அவை ரஷ்யாவிடமிருந்து ஓர் உடனடி அச்சுறுத்தலை முகங்கொடுத்திருப்பதாக கூறப்படும் வாதம், நேட்டோவை விரிவாக்கக்கூடாதென்ற மற்றும் முன்னாள் சோவியத் பிராந்தியத்திற்குள் நேட்டோ இராணுவ படைகளை நிலைநிறுத்தக்கூடாதென்ற உடன்படிக்கைகளை மீறுவதற்கு ஒரு போலிக்காரணமாக இருக்கிறது. புவிசார்-அரசியல் நிலைப்புள்ளியிலிருந்து, எஸ்தோனியா, லித்துவேனியா மற்றும் லாட்வியாவின் தலைவிதி அமெரிக்காவிற்கு தோற்றப்பாட்டளவில் எவ்விதத்திலும் முக்கியத்துவமற்றதாகும். ஆனால் ரஷ்யாவைப் பொறுத்த வரையில், அமெரிக்கா மற்றும் நேட்டோவின் தரைப்படை மற்றும் விமானப்படைகள் மற்றும் இராணுவ படைத்தளவாடங்களை அதன் எல்லையிலிருந்து வெறும் ஒருசில மைல்கள் தூரத்தில் நிலைநிறுத்துவதென்பது ஓர் உயிர்வாழ்வு சார்ந்த அச்சுறுத்தலாகும். மெக்சிகோ, மத்திய அமெரிக்கா அல்லது கரீபிய பகுதிகளில் ரஷ்யா அதன் துருப்புகளை நிலைநிறுத்துகிறதென அது அறிவித்தால் வாஷிங்டன் எவ்வாறு எதிர்வினை காட்டும்? ஐம்பத்தி-இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், கியூபா ஏவுகணை நெருக்கடியில், கியூபாவில் மாஸ்கோ ஏவுகணைகளை நிலைநிறுத்துவது அமெரிக்க தேசிய பாதுகாப்பிற்கு ஒரு தாங்கொணா அச்சுறுத்தல் என்று கென்னடி நிர்வாகம் அறிவித்தது. குருஷேவ் அவற்றை அகற்றாவிட்டால் அணுஆயுதம் யுத்தம் வரும் என கென்னடி அச்சுறுத்தினார்.. ரஷ்ய அரசாங்கத்தாலும், இராணுவத்தாலும், வாஷிங்டன் மாஸ்கோவை தாக்க தயாரிப்பு செய்து வருகிறது என்று நம்புவதைத் தவிர தற்போதைய நெருக்கடியிலிருந்து வேறெந்த தீர்மானத்திற்கும் வர முடியாது. மாஸ்கோ அதன் இராணுவ கோட்பாட்டை மறுசீரமைத்து வருவதாக ரஷ்ய அதிகாரிகள் நேட்டோ உச்சிமாநாட்டிற்கு விடையிறுப்பாக அறிவித்திருக்கிறார்கள். 1950கள் மற்றும் 1960களில், பனிப்போர் உச்சத்தில் இருந்தபோது, வெளியுறவு கொள்கையில் வேண்டுமென்றே செய்யப்படும் அடாவடித்தனத்தைக் குறிக்க "அபாயகொள்கைத்தனம்” (brinksmanship) என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. ஒபாமா நிர்வாகம் இன்று என்ன செய்து கொண்டிருக்கிறதோ அவை, அக்காலப்பகுதியில் அமெரிக்க நிர்வாகம் என்ன செய்ததோ அதையும் விட வெகுதூரம் கடந்து செல்கிறது. அப்போது, வாஷிங்டன் மற்றும் மாஸ்கோவிற்கு இடையிலான அவநம்பிக்கை மற்றும் பதட்டங்கள் மிக உயர்ந்த அளவில் இருந்ததால், ஒப்பீட்டளவில் ஒரு சிறிய சம்பவம் கூட கட்டுப்பாட்டை மீறி தீவிரமடைந்து, ஒரு அணுஆயுத போருக்குக் செல்லுமென்ற கவலைகள் அடிக்கடி எழுந்திருந்தன. அந்த காரணத்திற்காக, இரண்டு தரப்பும் மற்றொன்றின் நோக்கங்களைத் தவறாக புரிந்து கொள்ளாமல் இருப்பதைத் தடுக்கும் விதத்தில் இரண்டு தலைநகரங்களுக்கு இடையே “அவசர தொலைத்தொடர்பு" (hot line) என்றழைக்கப்படுவது அமைக்கப்பட்டிருந்தது. இன்றோ, ஒபாமா நிர்வாகம் மற்றும் அதன் நேட்டோ கூட்டாளிகளால் நடத்தப்படும் நகர்வுகள், ரஷ்யாவில் சாத்தியமான மிகப்பெரும் அளவுக்கு அச்சவுணர்வை உருவாக்குவதற்கேற்பவும் மற்றும் இராணுவரீதியில் விடையிறுப்பு காட்டுவதற்கு அதை தூண்டுவதற்கேற்பவும் வடிவமைக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. ஜூன் 1941இல் சோவியத் ஒன்றியத்தின் மீது நாஜி ஜேர்மனியால் நடத்தப்பட்ட அதிர்ச்சிகரமான தாக்குதலை தொடர்ந்து, அந்த மக்கள் இப்போதும் அந்த பாரிய உயிரிழப்புகளால் காயப்பட்டிருக்கிறார்கள். அதற்கடுத்த நான்காண்டுகால போக்கில் 27 மில்லியன் சோவியத் மக்கள் அவர்களின் வாழ்வை இழந்தார்கள். ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்க-நேட்டோ யுத்தவெறியூட்டல்களுக்காக குறிப்பிடப்பட்ட அனைத்து காரணங்களும் பொய்களாகும். ஆரம்பத்திலிருந்தே உக்ரேன் நெருக்கடியில், வாஷிங்டனும் பேர்லினும் தான் ஆக்ரோஷமாக இருந்தன. அவை, ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒரு கூட்டு உடன்படிக்கைக்குள் நுழைவதில்லை அல்லது சர்வதேச நாணய நிதியத்தால் கட்டளையிடப்படும் ஒரு சிக்கன திட்டத்தை ஏற்க முடியாதென்று விக்டர் யானுகோவிச் முடிவெடுத்ததைத் தொடர்ந்து, கடந்த பெப்ரவரியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி யானுகோவிச்சின் அரசாங்கத்தை தூக்கியெறிந்த நவ-பாசிசவாத சக்திகள் தலைமையிலான ஒரு ஆட்சிகவிழ்ப்பு சதிக்கு ஒத்து ஊதின. அப்போதிருந்து அவை ரஷ்யாவைப் பலவீனப்படுத்தும் மற்றும் தனிமைப்படுத்தும் ஒரு கொள்கையைப் பின்தொடர அந்த நெருக்கடியைப் பயன்படுத்தியுள்ளன. ரஷ்யாவிற்கு எதிராக இராணுவ, அரசியல் மற்றும் பொருளாதார நகர்வுகளின் நோக்கம் அதை அமெரிக்க மற்றும் ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் கட்டளைகளுக்கு அடிபணிய செய்ய அதை நிர்பந்திப்பதாகும். அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் யுத்த ஆத்திரமூட்டல்கள் சர்வதேச தொழிலாள வர்க்கம் தலையிடாவிட்டால், ஒரு முழு அளவிலான அணுஆயுத யுத்தமாக தீவிரமடையக்கூடிய ஒரு நெருக்கடியைத் தூண்டிவிடும், நேட்டோ மற்றும் ரஷ்ய படைகளுக்கு இடையிலான ஒரு சம்பவம் என்பது வெறும் ஒரு கால அவகாசம் சார்ந்த ஒரு விஷயமாக மட்டுமே உள்ளது. |
|
|