தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
Capitalist breakdown and the drive to war முதலாளித்துவத்தின் நிலைமுறிவும், யுத்தத்திற்கான உந்துதலும்
Nick Beams Use this version to print| Send feedback ஐரோப்பிய மத்திய வங்கி (ECB) அதன் உத்தியோகப்பூர்வ வட்டி விகிதங்களை மேலும் குறைக்க எடுத்த முடிவுகளும் மற்றும் சொத்து-பின்புல பத்திரங்களை வாங்கும் முன்முயற்சியும் குறிப்பிடத்தக்கவை தான் என்றாலும், இந்த வார நிர்வாக குழு கூட்டத்தின் மிகவும் அதிர்வூட்டும் அம்சமாக இருந்தவை அவை அல்ல. மாறாக, 2008இல் பூகோள நிதியியல் அமைப்புமுறை உடைவின் ஆறு ஆண்டுகளுக்குப் பின்னரும், பொருளாதாரத்தை "மீட்சிக்கு" கொண்டு வரும் கொள்கைகளைக் காண்பதன் அருகில் கூட அவர்கள் இல்லை என்பது மட்டுமல்ல, நிலைமை இன்னமும் மோசமடைந்து வருகிறது என்ற உண்மையை நிதியியல் அதிகாரங்கள் எதிர்கொண்டிருக்கையில், அந்த கூட்டத்தில் நிலவிய அத்தீராப்பிரச்சினை மீதிருந்த ஆழ்ந்த புரிதல் தான் குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது. யூரோ மண்டல வெளிப்பாடு இன்னமும் 2007இல் இருந்ததை விடவும் குறைந்தமட்டத்தில் இருப்பதுடன், அந்த படுமோசமான நிலைமை ECB தலைவர் மரியோ திராஹியின் கருத்துக்களிலும் பிரதிபலித்தது. அவர் "கீழ்நோக்கிய அபாயங்கள்,” “சுழற்சி அடிப்படையிலான வளர்ச்சி வேகத்தின் ஒரு இழப்பு,” மற்றும் "எதிர்காலம் மீதான நம்பிக்கையின்மை" ஆகியவற்றை குறிப்பிட்டார். இந்த கருத்துக்களை அடிக்கோடிடும் வகையில், அதற்கடுத்த நாள் பிரசுரமான ஓர் அறிக்கை, இரண்டாம் காலாண்டில் யூரோ பகுதியில் முதலீடு வீழ்ச்சி அடைந்திருப்பதை வெளிப்படுத்தியது. ஐரோப்பிய பொருளாதாரத்தில் மோசமடைந்துவரும் போக்குகள் பூகோளமயப்பட்ட அபிவிருத்திகளின் மிகவும் தெளிவான வெளிப்பாடு மட்டுமே ஆகும். உலகின் மூன்றாவது மிகப் பெரிய ஒரு-நாட்டு பொருளாதாரமான ஜப்பானில், நிதியியல் மற்றும் நாணய ஊக்கப்பொதி திட்டங்கள் மூலமாக ஒரு ஊக்குவிப்பை வழங்கி இருந்ததாக கூறப்பட்ட "அபேனோமிக்ஸ்", “கையிருப்புக் காலியாகிவிட்டது" என்பது பரவலாக ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது. உலகின் இரண்டாவது மிகப் பெரிய பொருளாதாரமான சீனாவில், 2008க்குப் பின்னர் பெரும் பொருளாதார விரிவாக்கத்தை அளித்த சொத்துச் சந்தை மற்றும் வீடு-நில விற்பனைச்சந்தையின் முதலீட்டில் ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சிக்கு இடையே, நிதியியல் அமைப்புமுறை ஸ்திரமின்மையின் மீது கவலைகள் அதிகரித்துவரும் நிலையில், அதன் பொருளாதாரம் "நலிந்து வருவதாக" கூறப்படுகிறது. “ஒளிரும் புள்ளியாக" (bright spot) கருதப்படும் அமெரிக்க பொருளாதாரம் இந்த ஆண்டின் முதல் அரையாண்டில் ஒட்டுமொத்தமாக வெறும் 1.0 சதவீதம் மட்டுமே பொருளாதார வளர்ச்சி கண்டுள்ளது என்ற உண்மையானது, மோசமடைந்து வரும் பூகோள பொருளாதார நிலைமைக்கு அறிகுறியாகும். இந்த உண்மைகளும் புள்ளிவிபரங்களும் 2008 செப்டம்பர்-அக்டோபர் நிதியியல் பொறிவு ஒரு சந்தர்ப்பவசமான நிகழ்வல்ல, மாறாக தொடர்ந்து நிகழ்ந்துவரும் பேரிடரின் தொடக்கமாகும் என்பதைத் தெளிவுபடுத்துகின்றன. இந்த உடைவு எந்தளவிற்கு உள்ளதென்பதை அமெரிக்க நீதிமன்றத்தின் ஆகஸ்ட் 22 விசாரணையில் முன்வைக்கப்பட்ட ஆதாரம் அம்பலப்படுத்திக் காட்டுகிறது. அமெரிக்க பெடரல் முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு ஆவணத்தில், அமெரிக்க பெடரல் ரிசர்வ் தலைவர் பென் பெர்னன்கே நெருக்கடி உச்சத்தில் இருக்கையில் இவ்வாறு குறிப்பிட்டார்: “2008 செப்டம்பர் மற்றும் அக்டோபர் நெருக்கடியானது, பெருமந்தநிலைமை உட்பட, உலக வரலாற்றில் மிக மோசமான நிதியியல் நெருக்கடியாகும். அமெரிக்காவில் உள்ள 13 மிக முக்கிய நிதியியல் நிறுவனங்களில் 12 நிறுவனங்கள் ஒரே வார அல்லது இரண்டு வார காலத்திற்குள்ளேயே தோல்வியின் அபாயத்திற்கு வந்திருந்தன.” அந்த உடைவின் நீண்டகால தாக்கங்களை பொருளாதார, சமூக மற்றும் அரசியல் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் காண முடியும். இலாபகர அமைப்புமுறையின் நெருக்கடிக்கு எந்தவொரு பொருளாதார தீர்வும் இல்லாமல், உலகமெங்கிலும் உள்ள ஆளும் மேற்தட்டுக்கள், மிசோரி பேர்குஷன் சம்பவங்களில் மிகத்தெளிவாக எடுத்துக்காட்டுவதைப்போல, எந்தவொரு எதிர்ப்பையும் இராணுவ வழிவகைகளைக் கொண்டு நசுக்கும் தீர்மானத்துடன், தொழிலாள வர்க்கத்தின் மீது அவற்றின் தாக்குதல்களை அதிகரித்து வருகின்றன. அமெரிக்க பெடரல் ரிசர்வின் புள்ளிவிபரங்களே காட்டியப்படி சமூக சமத்துவமின்மை அதிகரித்து வருகிறது. பொருளாதார "மீட்சி" என்றழைக்கப்பட்ட காலத்தில், 2010இல் இருந்து 2013 வரையில் அமெரிக்காவின் மத்தியதட்டு குடும்ப வருமானங்கள் 5 சதவீத அளவிற்கு குறைந்திருந்ததை அது எடுத்துக்காட்டுகிறது. முன்பில்லாத அளவிற்கு அதிகரித்துவரும் இராணுவவாதத்தால் குணாம்சப்பட்டுள்ள புவிசார்-அரசியல் நிலைமையோ, 1939க்குப் பின்னர் எந்தவொரு காலக்கட்டத்திலும் இல்லாதளவிற்கு மற்றொரு உலகப் போருக்கான சாத்தியக்கூறைக் கொண்டு வந்திருக்கிறது. 1914இல் முதலாம் உலக போர் வெடித்ததற்கு அடியிலிருந்த காரணங்களைப் பகுத்தாராய்ந்து, லியோன் ட்ரொட்ஸ்கி உலக பொருளாதார நெருக்கடிக்கும் இராணுவவாத திருப்பத்திற்கும் இடையிலான தொடர்பை வரைந்து காட்டி இருந்தார். அவரது கருத்துக்கள் இன்றும் மிகச் சரியாக பொருந்துகின்றன. 2008க்கு முந்தைய காலக்கட்டத்தைப் போலவே முதலாம் உலக போர் வெடிப்பதற்கு இட்டுச் சென்ற ஆண்டுகளும், பெரும் கொந்தளிப்பான பொருளாதார வளர்ச்சியால் குறிக்கப்பட்டிருந்தன. ஆனால் 1913-14 வாக்கில், அந்த வளர்ச்சி வரம்பை எட்டியதோடு, உலகப் பொருளாதாரம் ஒரு அடிப்படை மாற்றத்தைக் கண்டது. 1890களின் மத்தியிலிருந்து, முதலாளித்துவ அபிவிருத்தியின் அடிப்படை வளைகோட்டு போக்கு சீராக மேல்நோக்கி வளர்ந்திருந்தது என்று ட்ரொட்ஸ்கி விவரித்தார். ஆனால் இந்த மேல் நோக்கிய வளர்ச்சி ஒரு உடைவிற்கான நிலைமைகளையும் உருவாக்கின. ட்ரொட்ஸ்கி எழுதினார், “1914இல் ஒரு நெருக்கடி வெடித்தது, அது வெறுமனே ஒரு இடையிடையே நிகழ்கின்ற ஏற்றத்தாழ்வுகளைக் குறிக்கவில்லை, மாறாக அது நீண்டகால பொருளாதார மந்தநிலையின் ஒரு சகாப்தம் தொடங்குவதை குறித்தது. இந்த முட்டுச்சந்தை உடைப்பதற்குரிய ஒரு முயற்சியே அந்த ஏகாதிபத்திய யுத்தமாகும்.” முதலாளித்துவ வர்க்கம் "சந்தை மட்டுப்பாடுகளுக்கு அஞ்சி விலகுகையில்", முந்தைய காலக்கட்டத்தின் வேகத்திற்கு மேற்கொண்டு பொருளாதார அபிவிருத்தி என்பது "முற்றிலும் சிரமமானதாக" இருந்தது. “இவ்விதத்தில் உருவான வர்க்க பதட்டங்கள், அரசியலால் இன்னும் மோசமாக்கப்பட்டு, அது ஆகஸ்ட் 1914இல் யுத்தத்திற்கு இட்டுச் சென்றது.” வரலாறு மீண்டும் ஒரேமாதிரியாக நிகழாது என்பது உண்மை தான். ஆனால் 1914க்கு இட்டுச் சென்ற காலக்கட்டத்திற்கும் நம்முடைய இந்த காலக்கட்டத்திற்கும் இடையிலான சமாந்திரங்கள் எவ்வாறிருந்த போதினும் குறிப்பிடத்தக்கவையாக இருக்கின்றன. 2006இல், நிதியியல் அமைப்புமுறை அதிகளவில் கொந்தளிப்பை அனுபவிக்கத் தொடங்குவதற்கு வெறும் ஓராண்டிற்கு முன்னர், உலகப் பொருளாதாரம் அதன் மூன்று தசாப்தங்களுக்கும் அதிகமான காலத்தை விட மிக உயர்ந்த வளர்ச்சி மட்டங்களை எட்டியிருந்தது. அந்த சம்பவங்களின் உத்தியோகப்பூர்வ கருத்துக்களின்படி, அமெரிக்க பொருளாதாரம் "மிகப் பெரிய நிதானத்துடன்" இருந்ததாகவும், அது 1970கள் மற்றும் 1980களில் எதிர்கொண்டிருந்த பிரச்சினைகளை இறுதியாக கடந்து விட்டதாகவும் குணாம்சப்படுத்தப்பட்டது. சீனாவும் "எழுச்சி பெற்றுவரும் சந்தைகள்" என்றழைக்கப்படுபவையும் உலக பொருளாதாரத்திற்கு ஒரு புதிய அடித்தளத்தை வழங்கி வந்ததாக கூறப்பட்டது. ஆபிரிக்காவே கூட உலகளாவிய முதலாளித்துவ விரிவாக்கத்திற்கான ஒரு புதிய அடித்தளமாக பார்க்கப்பட்டது. ஆனால் அந்த விரிவாக்கம் உதிர்மணலில் கட்டமைக்கப்பட்டிருந்தது —அதாவது நிதியியல் ஊகவணிகம் மற்றும் ஒட்டுண்ணித்தனத்தின் அதிவேக வளர்ச்சியின் மீது அமைந்திருந்தது. காசநோயால் பாதிக்கப்பட்ட நோயாளியைப் போல, முதலாளித்துவம் ஒரு பேரிடருக்குள் மூழ்குவதற்கு முன்னதாக வெளிறிப் போயிருந்தது. நிதியியல் சந்தைகளுக்கு முடிவில்லாமல் பணத்தைப் பாய்ச்சுவதைத் தவிர ஆளும் வர்க்கத்திற்கு வேறெந்த வழியும் இருக்கவில்லை, அதுவும் நிறுத்தப்பட்டு வரும் விளைவுகளால் அச்சுறுத்தப்பட்டிருப்பதுடன், முதலாளித்துவ வல்லரசுகள் ஒவ்வொன்றும் அவற்றின் எதிராளிகளை விலையாக கொடுத்து ஒரு தீர்வைத் தேட முனைந்திருக்கின்ற நிலையில், ஆளும் வர்க்கம் இராணுவவாதத்தைத் தீவிரப்படுத்துவதைச் சேர்த்துக் கொண்டிருக்கிறது. மோசமடைந்துவரும் சமூக நிலைமைகள் மற்றும் அதிகரித்துவரும் சமத்துவமின்மையால் உருவாக்கப்படும் சமூக வெடிப்புக்கு எதிராக முதலாளித்துவ ஒழுங்குமுறையைக் காப்பாற்ற அரசாங்கங்கள் ஒரு பொலிஸ்-இராணுவ அரசு எந்திரத்தை உருவாக்கி வருகின்ற அதேவேளையில், அவை பதட்டங்களை வெளியில் திருப்பிவிட முயன்று வருகின்ற நிலையில், யுத்த உந்துதல் உள்நாட்டு வர்க்க மோதலின் அதிகரிப்பாலும் எரியூட்டப்பட்டு வருகின்றன. சோசலிச சர்வதேசவாத வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒரு பாரிய போர்-எதிர்ப்பு இயக்கத்தை அபிவிருத்தி செய்வதே—அனைவருக்கும் ஒரு கண்ணியமான எதிர்காலத்தை வழங்கக்கூடிய பொருளாதார செல்வவளத்தின் உற்பத்தியாளர்களான—சர்வதேச தொழிலாளர் வர்க்கத்தின் முன்னாலிருக்கும் ஒரே வழியாகும். தொழிலாளர் வர்க்கம் அரசியல் அதிகாரத்தின் சக்கரத்தை அதன் சொந்த கரங்களில் எடுக்க வேண்டும் என்பதுடன், இலாபத்தின் கட்டளைகளுக்கிணங்க அல்லாமல், மனித தேவையின் அடிப்படையில் உலக பொருளாதாரத்தை மறுகட்டமைப்பு செய்வதை நோக்கி அதைத் திருப்ப வேண்டும். பூகோள முதலாளித்துவம் மனிதயினத்தை மூழ்கடித்துவரும் இந்த பேரழிவிலிருந்து வெளிவருவதற்கு அங்கே வேறெந்த வழியும் இல்லை. |
|
|