World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை போர் எதிர்ப்பு கூட்டத்துக்கான சோசலிச சமத்துவக் கட்சி பிரச்சாரம் பரந்த ஆதரவை வென்றது
By Subash Somachandran சோசலிச சமத்துவக் கட்சியும் (சோசக) சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (ஐவைஎஸ்எஸ்இ) அமைப்பும், செப்டெம்பர் 7 ஞாயிற்றுக் கிழமை, யுத்தத்தினால் நாசமாக்கப்பட்ட வட இலங்கையின் யாழ்ப்பாணத்தில் “அமெரிக்காவின் ஆசியா நோக்கிய திருப்பமும் உலகப் போர் அச்சுறுத்தலும்” என்ற தலைப்பில் பகிரங்க கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளன. இதற்காக சோசக மற்றும் ஐவைஎஸ்எஸ்இ உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் யாழ்ப்பாணத்தில் முன்னெடுத்த பிரச்சாரத்திற்கு பரந்த ஆதரவு கிட்டியது. ஐந்து சந்தி, குருநகர், திருநெல்வேலி மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் போன்ற இடங்களில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. “சோசலிசமும் ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டமும்” என்ற நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் தீர்மானத்தின் ஆயிரக்கணக்கான பிரதிகளும் மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தில் வெளியான மூன்றாம் உலக யுத்தத்துக்கான உந்துதல் பற்றிய பல ஆய்வுக் கட்டுரைகளும் பிரச்சாரத்தின் போது விநியோகிக்கப்பட்டன. கடந்த மூன்று தசாப்தங்களாக ஆட்சியில் இருந்த அரசாங்கங்களால் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட இனவாத யுத்ததினால் சீரழிக்கப்பட்ட வட மாகாணம், 2009 மே மாதம் புலிகளின் தோல்வியுடன் யுத்தம் முடிவுக்கு வந்த போதிலும், கடந்த 5 வருடங்களாக இன்னமும் இராணுவக் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. பிரதேசத்தை விட்டு இராணுவம் வெளியேறுவதற்கு மாறாக நிரந்தரக் கட்டிடங்களுடன் ஆக்கிரமிப்பு இறுக்கப்பட்டுள்ளதோடு மக்களின் வாழ்க்கையின் எல்லா அங்கங்களிலும் இராணுவம் தலையிட்டு வருகின்றது. ஒரு அரசியல் பதட்டமுள்ள இடமாக இருந்து வரும் யாழ்ப்பாண பல்கலைக்கழகம், இராணுவப் புலனாய்வாளர்களினதும் ஆளும் தட்டுக்களினதும் கடும் கண்காணிப்பின் கீழ் உள்ளது. மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களின் சுயாதீனமான அரசியல் நடவடிக்கைகளுக்கும் ஒன்று கூடல்களுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளதுடன் பல்கலைக்கழகம் இராணுவ புலனாய்வாளர்களின் கண்காணிப்பின் கீழ் உள்ளது.
கடந்த
மே
மாதம்,
யுத்தத்தின்
போது
கொல்லப்பட்ட
மக்கள்
நினைவு
கூரப்படுவதை
தடுப்பதற்காக
இராணுவம்
பல்கலைக்கழகத்தை
சட்ட
விரோதமாக
மூடியதுடன்,
மாணவர்
தலைவர்களுக்கும்
விரிவுரையாளர்களுக்கும்
மரண
அச்சுறுத்தல்
விடுத்து
வளாகத்தில்
துண்டுப்
பிரசுரங்கள்
ஒட்டப்பட்டிருந்தன.
இதற்கு
எதிராக
குரல்கொடுத்த
ஆசிரியர்
சங்கத்தின்
தலைவர்
ஆர்.
இராஜகுமாரன்
கொழும்பு
பயங்கரவாத
தடுப்பு
பிரிவினரால்
விசாரிக்கப்பட்டார். சோசக பிரச்சாரகர்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நூற்றுக்கணக்கான துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுடனும் கலந்துரையாடினர். இதன் போது அங்கு குறுக்கிட்ட பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், பல்கலைக்கழகத்துக்குள் பிரச்சாரம் செய்ய முடியாது என்றும், தடுத்து நிறுத்த மேலிடத்திலிருந்து உத்தரவு வந்திருப்பதாகவும் கூறி சோசக அங்கத்தவர்களை பாதுகாப்பு அதிகாரியின் அலவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களின் சுய விபரங்கள் மற்றும் தொலைபேசி இலக்கங்களும் பதிவுசெய்யப்பட்டதோடு, அனுமதியின்றி துண்டுப் பிரசுரம் விநியோகித்ததாக எழுதி கையொப்பம் வாங்கிக்கொண்ட பின்னரே விடுவிக்கப்பட்டனர். இவ் விசாரணை வேளையில் நடந்த நிகழ்வுகளை அவதானித்தபோது, இராணுவம், பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு கட்டளைகள் விடுத்து இயங்க வைப்பதை புரிந்துகொள்ளக்கூடியாதக இருந்தது. துண்டுப் பிரசுரங்களை ஆர்வமாக பெற்று வாசித்த அரசியல் விஞ்ஞான பீட மாணவர்கள் சிலர், உலக யுத்த அபாயம் பற்றிய சோசக உறுப்பினர்களின் விளக்கத்தை கவனமாக கேட்டனர். இலங்கையில் அமெரிக்காவின் தலையீடு பற்றி பேசிய ஒரு மாணவி, “அமெரிக்கா தனது பூகோள நலனின் அடிப்படையிலேயே உலகம் பூராவும் யுத்தங்களை நடத்தி வருகின்றது. ஆசியாவில் சீனாவுக்கு எதிராக தனது நலன்களை காக்கவே இலங்கையில் கூட மனித உரிமை மீறல் மற்றும் யுத்தக் குற்றச்சாட்டுக்களை பயன்படுத்திக்கொண்டு தலையீடு செய்கின்றது” என்றார். மூன்றாவது உலகப் போர் அச்சுறுத்தல் பற்றி வெகுஜனங்களுக்கு தெளிவுபடுத்துவது சோசக மட்டுமே என்பதை இன்னொரு மாணவர் உறுதிப்படுத்தினார். “உலக யுத்தம் அச்சுறுத்தல் பற்றி இங்கு உங்களைத் தவிர வேறு யாரும் கூறவில்லை. அமெரிக்கா ஏனைய நாடுகள் மீது யுத்தம் தொடுப்பதை நாங்கள் அறிவோம். அவ்வாறு ஒரு உலக யுத்தம் வெடித்தால் மனிதப் பேரழிவே வரும்” என்றார். யாழ்ப்பாண நகரில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஐந்து சந்தி பிரதேசத்தில் வாழும் முஸ்லீம்கள் மத்தியில் சோசக உறுப்பினர்கள் கலந்துரையாடினர். இங்குள்ள மக்கள் யுத்த நிலமைகளின் போது 1991ல் புலிகள் அமைப்பினால் ஜனநாயக விரோதமாக வெளியேற்றப்பட்டவர்கள். தற்போது மீளக்குடியேறி வருகின்றனர். பெரும்பாலனவர்களுக்கு எந்தவிதமான அடிப்படை வசதிகளுமில்லை. யுத்தகாலத்தில் அழிவடைந்த வீடுகள் பல இன்னமும் திருத்தப்படாத நிலையில் இருக்கின்றன. அஸாத், தனது வீடு இடிக்கப்பட்ட நிலையில் அங்குள்ள ஒரு பொதுக் கட்டிடத்தின் ஒதுக்குப் புறமான இடத்தில் தங்கியுள்ள ஒரு குடும்பத் தலைவராவார். இன்று பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்கள் காட்டி மிராண்டித் தனமானவை என அவர் கண்டனம் செய்தார். “நாட்டின் தலைவர்கள் தங்களின் நலன்களுக்காக அப்பாவி மக்களைக் கொன்று குவிக்கின்றார்கள். இதே மாதிரித் தான் (இலங்கை ஜனாதிபதி) இராஜபக்ஷவின் அரசாங்கமும் முல்லைத்தீவில் ஒரு சிறிய பிரதேசத்தில் அடைத்து வைத்து குண்டுவீசி மக்களைக் கொலை செய்தது. சகல மக்கள் படுகொலைகளையும் நாங்கள் கண்டிக்கின்றோம்,” என்றார் “முஸ்லீம் மக்களின் பிரதிநிதிகள் என்று கூறித் திரியும் கட்சிகள் எமக்காக எந்தவிதமான வேலைத் திட்டங்களையும் முன்னெடுக்கவில்லை,” என அவர் மேலும் கூறினார். “நாங்கள் இந்த இடத்தில் 5 வருடங்களுக்கு மேல் இருக்கின்றோம். எமக்கு நல்ல இடத்தில் வீடு கட்டித் தரப்படவில்லை”. பழைய இரும்பு சேகரித்து விற்பனை செய்யும் ஒரு வியாபாரியான நசூர்தீன், உலகத்தின் பெரிய ஜனநாயகம் என்று கூறிக் கொள்ளும் அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற நாடுகள், பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் மேற்கொள்ளும் தாக்குதல்களை போலியாக கண்டிக்கின்றன என்றார். “உண்மையில் அந்த நாடுகள் இஸ்ரேலின் தாக்குதல்களை ஆதரிக்கின்றன. இதேமாதிரியே, இலங்கையில் இராஜபக்ஷ அரசாங்கம் (சிங்கள அதிதீவிரவாத அமைப்பான) பொதுபல சேனாவை தூண்டிவிட்டு முஸ்லீம்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகின்றது. அதே வேளை, காசா மீதான இஸ்ரேல் தாக்குதலையும் இந்த அரசாங்கம் போலியாக கண்டிக்கின்றது.” குருநகர் பிரதேசத்தில் இடம்பெற்ற பிரசாரத்தில் பெரும் ஆதரவு கிடைத்ததுடன் கூட்டத்துக்கு ஆதரவாக 3900 ரூபா நிதியும் திரட்டப்பட்டது. அங்கு ஒரு அழகு நிலையத்தினை நடத்தும் பெண், அதிகரித்துவரும் பொருளாதார வீழ்ச்சியின் விளைவை விளக்கினார்: “எங்கள் வாழ்க்கையை நடத்துவதற்காக ஒரு தொழிலைத் தொடங்கினால் அதனை தொடர்ச்சியாக நடத்த முடியாமல் உள்ளது. எங்களிடம் வாடிக்கையாளர் வருவது குறைவடைந்துள்ளது. இந்தச் சமூகத்தில் பலருக்கு வேலைவாய்ப்பு இல்லை, அழகு நிலையங்கள் பல அமைக்கப்பட்டுள்ளன. இதனால் போட்டிகள் அதிகமாக உள்ளது. “எமது தொழிலை நம்பி நாங்கள் கடன்பட்டுள்ளோம். எப்படி கட்டுவது என்பது தெரியாமல் திண்டாடுகின்றோம். எமது உறவினர்கள் பலர் கட்டுப் பணத்துக்கு வாகனங்கள் வாங்கி அதனைக் கட்ட முடியாமல் வாகனத்தினையும் இழந்துள்ளனர். லீசிங் கம்பனிகளும் வங்கிகளும் மக்களின் பணத்தினை சுருட்டிச் செல்லவே முயற்சி செய்கின்றன. இந்த நிலைமையில் உலக யுத்த அச்சுறுத்தல் ஒன்று ஏற்படுமெனில் மக்களின் திண்டாட்டத்தை நினைத்துக்கூடப் பார்க்க முடியாதுள்ளது” என அவர் கூறினார். அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய சக்திகள் உலகை மீண்டும் ஒரு உலக யுத்த பேரழிவுக்குள், இம்முறை அனுவாயுதங்களுடன், தள்ளிச் செல்கின்ற நிலையில், அதன் விளைவாக உலகம் பூராவும் அரசியல் நெருக்கடிகளும் சமூக நெருக்கடிகள் உக்கிரமடைந்து வருகின்றன. முதலாளித்துவ அமைப்பு முறையின் கீழ் மனித குலம் உயிர்வாழ முடியாது என்பது மேலும் மேலும் தெளிவாகி வருகின்ற நிலையில், அதை மாற்றியமைப்பதற்கான சோசலிச வேலைத் திட்டம் பற்றி கலந்துரையாடுவதற்கே சோசக மற்றும் ஐவைஎஸ்எஸ்இ நாடு பூராவும் ஏற்பாடு செய்யும் கூட்டங்களின் பாகமாக யாழ்ப்பாணத்தில் இந்தக் கூட்டத்தை ஒழுங்கு செய்துள்ளது. இந்த இன்றியமையா பிரச்சினைகள் பற்றி கலந்துரையாட எமது கூட்டத்துக்கு வருகைதருமாறு நாம் தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் குடும்பப் பெண்களுக்கும் அழைப்பு விடுக்கின்றோம். திகதி: செப்டெம்பர் 7, ஞாயிறு, பி.ப. 2 மணி இடம்: யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபம். |
|