தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
Ukraine and the militarization of Europe உக்ரேனும், ஐரோப்பாவின் இராணுமயமாக்கலும்
Peter
Schwarz Use this version to print| Send feedback உக்ரேனிய நெருக்கடி ஐரோப்பாவில் அரசியல் மற்றும் சமூக உறவுகளுக்கு மறுவடிவம் கொடுக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வுபோக்கில், மக்களின் வெகு குறைந்த ஆதரவு பெற்ற மிகவும் வலதுசாரி சக்திகள் அவற்றின் பாதையை வகுத்து வருகின்றன. அவை ஐரோப்பாவை ஒரு இராணுவ கோட்டையாக மாற்ற, அமெரிக்கா, ஜேர்மனி மற்றும் நேட்டோவினால் தூண்டிவிடப்பட்ட அந்த நெருக்கடியை பயன்படுத்தி வருகின்றன. அவை ரஷ்யாவுடன் அணுஆயுத யுத்த அபாயத்தை மட்டும் முன்னெடுக்கவில்லை, மாறாக ஐரோப்பாவை ஒரு இரும்புபிடி ஒழுங்குமுறைக்கு அடிபணியச் செய்யும் அபாயத்திற்கும் உட்படுத்துகின்றன. அமெரிக்க மேலாதிக்கம் கொண்ட நேட்டோ இராணுவ கூட்டணி, தோற்றப்பாட்டளவிற்கு ஐரோப்பிய அரசியலில் கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது. இந்த வாரயிறுதியில், வேல்ஸில் நடைபெறவுள்ள, ஆண்டுக்கு இருமுறை நடக்கும் நேட்டோ மாநாடு, வரலாற்று தாக்கங்களைக் கொண்டிருக்கும் ஒரு புதிய மூலோபாய கொள்கையில் உடன்பாட்டை எட்டும். "எதிர்காலத்தில், இராணுவ கூட்டணி சேர்க்கை மீண்டுமொருமுறை மையத்திற்கு வரும், ஒரு தசாப்தத்திற்கு முன்னர் அனைத்து நடவடிக்கைகளும் உலகின் தூர தூர இடங்களில் வெளிநாட்டு திட்டங்களின் மீது குவிந்திருந்தன" என்று Frankfurter Allgemeine Sonntagzeitung எழுதுகிறது. இதன் மூலம் இது என்னத்தை அர்த்தப்படுத்துகிறதென்றால், பனிப்போரின் போது சோவியத் ஒன்றியதுடனான விவகாரத்தில் இருந்ததைப் போலவே, அந்த கூட்டணியின் பாரிய இராணுவ ஆதாரவளங்கள் மீண்டும் ரஷ்யா மீது குவிக்கப்பட இருக்கின்றன. இதர விடயங்களுக்கு மத்தியில், அம்மாநாடு ரஷ்யாவிற்கு எதிராக ஒருசில நாட்களுக்குள் செயல்பட தயாராக இருக்கும் இரண்டு தலையீட்டு படைகளை உருவாக்குவதில் உடன்பாட்டை எட்டும். அதில் முதலாவது, ஏற்கனவே இருக்கும் நேட்டோ பதிலடி படையின் (NRF - NATO Response Force) வலுவான "முன்னணி படையை" 4,000இல் இருந்து 20,000ஆக உயர்த்துவது—இந்த படை இன்னும் வேகமாக விடையிறுப்பு காட்டக்கூடியதாக இருக்கும். இரண்டாவதாக, எஸ்தோனியா, லித்துவேனியா, லாட்வியா, டென்மார்க், நோர்வே மற்றும் நெதர்லாந்தின் பங்களிப்புடன், பிரிட்டிஷ் தலைமையின்கீழ் 10,000 பேர் கொண்ட பலமான அதிரடி படையை அமைப்பதாகும். இத்தகைய படைகளை வேகமாக நிலைநிறுத்துவதை உறுதிப்படுத்துவதற்காக, பால்டிக் அரசுகள், அத்துடன் போலாந்து மற்றும் ரோமானியா ஆகிய இடங்களில் உளவுத்துறை, உபகரணங்கள் கையாள்கை மற்றும் திட்டமிடலுக்கான தளங்களை ஸ்தாபிக்க நேட்டோ திட்டமிட்டு வருகிறது. 1997இல் கையெழுத்திடப்பட்ட நேட்டோ-ரஷ்யா ஸ்தாபக சட்டம் துல்லியமாக இதன் குறுக்கே நிற்கிறது, அதன்படி பயனற்றுப் போன முன்னாள் கிழக்கு அணியினது பிராந்தியங்களின் மீது பெரும் துருப்புகளைக் கொண்ட இராணுவப் பிரிவுகளை நிறுத்தாமல் இருப்பதற்கு நேட்டோ அதுவே பொறுப்பேற்றிருந்தது. போலாந்து, பால்டிக் அரசுகள் மற்றும் கனடாவும் இந்த உடன்படிக்கையை இரத்து செய்யுமாறு நீண்டகாலமாக கோரி வருகின்றன, அந்த உடன்படிக்கையின்படி ரஷ்யாவும் நேட்டோவும் சமாதானமாக ஒத்துழைக்க உறுதி எடுத்திருந்தன. எல்லா உள்நோக்கங்களோடும், இது இப்போது நடத்தப்பட்டு வருகின்றது. உக்ரேனுக்கு எதிரான ரஷ்யாவினது ஆக்ரோஷம் என்று கூறப்படுவதே, இராணுவ நகர்வுகளுக்கான காரணங்களாக தொடர்ந்து குறிப்பிடப்படுகின்றன. ஆனால் விவகாரங்கள் அவர்கள் தரப்பில் தான் இருக்கின்றன. உக்ரேனிய ஆக்ரோஷம் அமெரிக்கா மற்றும் ஜேர்மனியால் தூண்டிவிடப்பட்டன, அவை தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி விக்டொர் யானுகோவிச்சிற்கு எதிராக ஒரு பதவிக்கவிழ்ப்பை ஆதரித்ததோடு, அதில் வாஷிங்டனும் பேர்லினும் ஸ்வோபோடாவின் பாசிசவாதிகள் மற்றும் Right Sector உடன் ஒத்துழைத்திருந்தன. ரஷ்யாவினது எதிர்நடவடிக்கை முற்றிலுமாக அனுமானிக்ககூடியதாக இருந்தது. உக்ரேனிய நெருக்கடியானது, ஐரோப்பாவை இராணுவமயமாக்க, குறிப்பாக, ஜேர்மனியில் யுத்தம் மற்றும் இராணுவவாதத்திற்கு ஆழ்ந்திருக்கும் மக்கள் எதிர்ப்பைச் சமாளிக்க ஒரு போலிக்காரணமாக தூண்டிவிடப்பட்டு, ஒரு உபாயமாக கையாளப்பட்டது. அந்த நெருக்கடியை தீவிரமாக மோசமடைய செய்ய மற்றும் பிரச்சார நோக்கங்களுக்காக அதைச் சுரண்ட சமீபத்திய மாதங்களில் பயன்படுத்தப்பட்ட பொய்கள் மற்றும் திரித்தல்கள் அனைத்தையும் இந்த கட்டுரையின் கட்டமைப்பிற்குள் பட்டியலிடுவதென்பது சாத்தியமில்லாதது. இருந்தாலும், ரஷ்யாவுடன் நேட்டோ எந்தவொரு பேச்சுவார்த்தை தீர்வையும் எடுப்பதில்லை என்ற ஒரு விடயம் உறுதியாக இருக்கிறது. நேட்டோவின் மூலோபாய போக்கு மாறுவதற்கான உண்மையான காரணம் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய முதலாளித்துவத்தின் தீர்க்கவியலா நெருக்கடியில் தங்கியுள்ளது. 2008 நிதியியல் நெருக்கடிக்குப் பின்னர், அநேகமாக தற்காலிகமாக ஒரு குறுகிய காலத்திற்காவது, ஐரோப்பிய ஒன்றியம் பொதுவான நல்வாழ்வு மற்றும் சமூக பாதுகாப்பிற்குரிய ஒரு புகலிடமாக மாறும் என்ற பொய் சிதைந்து போயுள்ளது. குறிப்பாக கிழக்கு ஐரோப்பிய நாடுகளில், பெரும்பான்மையான மக்கள் வேலைவாய்ப்பின்மை, வறிய ஊதியங்கள் மற்றும் முதுமை, மருத்துவம் மற்றும் சமூக நலத்திட்ட மானியங்களின் பொறிவால் போராடி வருகிறார்கள். உழைக்கும் மக்களின் சமூக நிலைமையோ 25 ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்ராலினிச ஆட்சிகள் பொறிந்த போது இருந்ததை விடவும் இன்னும் மோசமாக இருக்கிறது, அதேவேளையில் ஒரு சிறிய, ஊழல்மிகுந்த மற்றும் குற்றகரமான சிறுபான்மையினரோ மிகப் பெரியளவில் தங்களைத்தாங்களே செல்வ செழிப்பாக்கி கொண்டிருக்கிறார்கள். ஆனால் அக்கண்டத்தின் செல்வச்செழிப்பின் மையமான தெற்கு ஐரோப்பாவிலும் கூட, தொழிலாள வர்க்கம் ஒன்று மாற்றி ஒன்று என சிக்கன அலையை முகங்கொடுத்துள்ளது. ஐரோப்பாவில் சமூக உறவுகள் உடையும் புள்ளிக்கு திருகப்பட்டுள்ளன. கிழக்கு மற்றும் மேற்குக்கு இடையிலான மோதலின் அடிப்படையில் ஐரோப்பாவை மறுவரையறை செய்யும் முயற்சியானது, ஐரோப்பிய ஒன்றிய செயல்திட்டத்தின் திவால்நிலைக்கு ஆளும் மேற்தட்டுக்கள் காட்டும் விடையிறுப்பாகும். ஐரோப்பிய ஒன்றியம் இன்று பரந்த சமூக அடுக்குகளின் மத்தியில் செல்வாக்கிழந்துள்ளது, அது சக்திவாய்ந்த முதலாளித்துவ நலன்களுக்கான ஒரு கருவியாக மிகச் சரியாக பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், ஐரோப்பிய சக்திகளுக்கு இடையே, குறிப்பாக ஜேர்மனி மற்றும் பிரான்ஸிற்கு இடையே மோதல்களும் பதட்டங்களும் அதிகரித்து வருகின்றன. ஏப்ரலில் நாம் எழுதியவாறு, "ஒரு பிளவுபட்ட ஐரோப்பிய ஒன்றியத்தை ஐக்கியப்படுத்துவதும் மற்றும் அனைத்து சமூக எதிர்ப்புகளை மவுனமாக்குவதுமே ரஷ்யா உடனான மோதலின் நோக்கமாகும். முன்னதாக, மூலதனங்களையும் பண்டங்களையும் சுதந்திரமாக நகர்த்துவது மற்றும் பொதுவான நாணயம் போன்ற பொருளாதார பிரச்சினைகளையே ஐரோப்பிய ஒன்றியத்தின் அடையாளம் அடித்தளமாக கொண்டிருந்தது. எதிர்காலத்திலோ, ஐரோப்பிய ஒன்றியத்தை உள்ளார்ந்து ஒருங்கிணைப்பதற்கு அடித்தளமாக உள்ள பொருளாதாரத்தை, ஒரு பொது எதிரிக்கு எதிரான போராட்டம் மாற்றீடு செய்யும்.” இந்த பகுப்பாய்வு முற்றிலுமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆளும் வர்க்கம் அது 100 மற்றும் 75 ஆண்டுகளுக்கு முன்னர் என்ன செய்ததோ அதேபோல—இராணுவவாதம் மற்றும் யுத்தத்துடன்—இந்த நெருக்கடிக்கு எதிர்வினையாற்றி வருகிறது. வெளியுறவு கொள்கையின் மற்றும் சமூகத்தின் இராணுவமயமாக்கல் என்பது ஒட்டுமொத்தமாக ஏகாதிபத்திய நோக்கங்களுக்கும்—அதாவது மேலாதிக்கம், சந்தைகள் மற்றும் மூலப்பொருட்களின் ஆதாரவளங்களைக் கைப்பற்றுவது—அத்துடன் சமூக பதட்டங்களை வெளிப்புறமாக திருப்பிவிடவும் மற்றும் உள்நாட்டில் அரசின் பொலிஸ் அதிகாரங்களைப் பலப்படுத்தவும் சேவை செய்கின்றது. சமூக பிற்போக்குத்தனத்தின் நன்கறியப்பட்ட பிரதிநிதிகள், ரஷ்யாவிற்கு எதிரான யுத்த நடவடிக்கையின் தலையிலேறி நிற்பதொன்றும் தற்செயலான விபத்தல்ல. ரஷ்யாவுடன் மோதலைத் தூண்டிவிடுவதில் ஒருபோதும் சோர்ந்து போகாத நேட்டோ பொதுச்செயலாளர் ஆண்டர்ஸ் ஃபோக் ராஸ்முஸ்சென் தான், அதிதீவிர வலது கட்சியான டேனிஷ் மக்கள் கட்சியின் ஆதரவைச் சார்ந்திருந்த முதல் டேனிஷ் பிரதம மந்திரியாவார். நலன்புரி அரசிலிருந்து குறைந்தபட்ச அரசு வரையில் எனும் நூலின் ஆசிரியரான அவர், செல்வ வளத்தை அடிமட்டத்திலிருப்பவர்களிடம் இருந்து மேல்மட்டத்திலிருப்பவர்களுக்கு மறுபகிர்வு செய்வதை மேற்பார்வை செய்துள்ளதுடன், சகிப்புத்தன்மையுடைய முந்தைய டென்மார்க்கில் ஐரோப்பாவின் மிகவும் கட்டுப்பாடான குடியமர்வு கொள்கையை அறிமுகப்படுத்தினார். 2003இல் அமெரிக்க-பிரிட்டன் படையெடுப்புக்குப் பின்னர் ஈராக்கிற்கு டேனிஷ் துருப்புகளை அவர் அனுப்பியதற்கு வெகுமதியாக அவருக்கு நேட்டோ பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. ஐரோப்பிய கவுன்சிலின் புதிய தலைவராக டோனால்ட் டஸ்க்கின் நியமனமும் இந்த உள்ளடக்கத்தில் பார்க்கப்பட வேண்டும். அந்த போலாந்து பிரதம மந்திரி "கம்யூனிச-விரோத மற்றும் சோவியத்-விரோத எதிர்ப்பின் அனுபவத்தை அன்றாடம் புருசெல்ஸிற்குக்" கொண்டு வருவதாக Süddeutsche Zeitung எழுதியது. அந்த பத்திரிகை தொடர்ந்து எழுதியது, “ஒரு மத்திய ஐரோப்பிய முன்னோக்கிலிருந்து,” பார்த்தால், அது "தற்போதைய நெருக்கடியில் மிகவும் பயனுள்ளதாக" இருக்கும். கியேவில் பெப்ரவரி ஆட்சிக்கவிழ்ப்பை வடிவமைத்த முன்னணி வடிவமைப்பாளர்களில் டஸ்க்கும் இருக்கிறார். இரண்டாம் உலக போர் தொடங்கியதன் உத்தியோகபூர்வ நினைவுவிழாவை ஒரு ரஷ்ய-விரோத ஆர்ப்பாட்டமாக அவரால் மாற்றவும் கூட முடிந்திருந்தது—சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக ஹிட்லரின் நிர்மூலமாக்கும் யுத்தத்திற்கு போலாந்து மீதான படையெடுப்பு தொடக்க புள்ளியாக இருக்கவில்லையென்பதைப் போல காட்டுகிறார். டான்ஸ்க்கிற்கு அருகில் வெஸ்டெர்ப்ளாட்டேயில் செப்டம்பர் 1இல் பேசுகையில், “வெளிப்படையான நேட்டோ நடவடிக்கையை நோக்கமாக கொண்ட எங்களது முனைவுகளைத் தடுக்க யாருக்கும் உரிமையில்லையென்று உரக்க கூறுவதற்கு", 75 ஆண்டுகளுக்கு முந்தைய ஜேர்மன் தாக்குதல் இன்று போலந்தினரை, “நேட்டோவின் திறமையான நடவடிக்கையே எங்கள் நோக்கம் என்ற எமது முன்முயற்சியை தடுக்க எவருக்கும் உரிமை இல்லை என்று சத்தமாக சொல்ல அனுமதிக்கிறது. “மீண்டும் போர் வேண்டாம்" என்ற முழக்கம் பலவீனமானவர்களின் ஓர் அறிக்கையாக மாறி வருவதற்கு எதிராக அவர் எச்சரித்தார். ரஷ்யாவிற்கு எதிரான அதன் நகர்வுடன் நேட்டோ, லித்துவேனிய ஜனாதிபதி டாலி க்ரேபௌஸ்கைய்ட் போன்ற முதலாளித்துவ மீட்சியிலிருந்து தங்களைத்தாங்களே செழிப்பாக்கிக் கொண்ட கடுமையான கம்யூனிஸ்ட்-எதிர்ப்பாளர்களின் கரங்களில் ஐரோப்பாவின் தலைவிதியை ஒப்படைக்கிறது, ரஷ்யா "ஐரோப்பாவுடன் நடைமுறையில் யுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக" டாலி சமீபத்தில் அறிவித்திருந்தார். அதற்கடுத்ததாக ஜனாதிபதி பெட்ரோ போறொஷென்கோ மற்றும் பாசிச அஜோவ் துணை இராணுவப்படை போராளிகள் குழுக்ககளுக்கு நிதியுதவி வழங்கும் ட்னிப்ரோபெட்ரோவ்ஸ்க்கின் மாநில ஆளுநர் ஐஹோர் கோலோமோய்ஸ்கி போன்ற உக்ரேனிய செல்வந்த தட்டுக்களும் அங்கே உள்ளன. இந்த முகாமிலிருந்து ஒரு ஆத்திரமூட்டல் என்பது ஏறத்தாழ தவிர்க்கவியலாமல் ரஷ்யா உடன் ஒரு பேரழிவுகரமான யுத்தத்தை நடத்த போதுமானதாக இருக்கும். ஐரோப்பாவில் இதர அனைத்து ஸ்தாபக கட்சிகளிடமிருந்தும், எதிர்ப்பின் ஒரு தடத்தைக் கூட காண முடியவில்லை. ஜேர்மனியில், சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் பசுமை கட்சியும் முழுமையாக ஜேர்மன் இராணுவவாதத்தின் புதுப்பிப்புக்குப் பின்னால் நிற்கின்றன. அவர்கள் போலாந்தின் மீது ஜேர்மனி தாக்குதல் தொடுத்த 75வது நினைவுதினத்தன்று, செப்டம்பர் 1, ஜேர்மன் வெளியுறவு கொள்கையின் தடைகளை உடைக்க வாக்களித்திருந்தார்கள். டாங்கி-தகர்ப்பு ராக்கெட்டுகளோடு வடக்கு ஈராக்கின் குர்திஷ் பெஷ்மெர்காவை ஆயுதமேந்த செய்வதற்காக, இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின்னர் முதல்முறையாக ஜேர்மன் அரசாங்கம் யுத்த மண்டலத்திற்கு ஆயுதங்களை அனுப்பி வருகிறது. ஆயுதங்கள் அனுப்புவதென்பது மத்திய கிழக்கில் ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் நலன்களைப் பாதுகாக்க சிப்பாய்களை அனுப்புவதற்குரிய ஒரு வெள்ளோட்டம் மட்டுமே ஆகும். இடது கட்சியும் உக்ரேனில் ரஷ்ய "ஆக்ரோஷத்தைத்" தொடர்ந்து கண்டித்து வருகிறது, அவ்விதத்தில் அவர்கள் ஜேர்மன் இராணுவவாதத்திற்கு அவர்களின் ஆதரவையும் அறிவித்துவிட்டார்கள். அவர்கள் எப்போதாவது அரசாங்க கொள்கைகளை விமர்சிக்கிறார்கள் என்றால், அவர்களின் நாடாளுமன்ற ஆதரவு தேவையில்லை என்பதை அவர்கள் அறியும் போது அவ்வாறு செய்கிறார்கள். அவர்களைப் பொறுத்த வரையில், அது பெரும் பெரும்பான்மை மக்களின் எதிர்ப்பைத் திணறடிப்பதற்கும் மற்றும் திசைதிருப்புவதற்கும் ஒரு தந்திரோபாய விடயமாகும். தற்போதைய நெருக்கடியில், ஐயத்திற்கிடமின்றி ரஷ்யா ஒரு ஆத்திரமூட்டலில் பலியாகி இருக்கிறது, ஆனால் ஜனாதிபதி விளாடிமீர் புட்டினின் எதிர்நடவடிக்கைகள், அவரது ஆட்சியின் அரசியல் திவால்நிலைமையை வெளிப்படுத்துகின்றன. சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதிலிருந்து ரஷ்ய ஆட்சி எழுந்தது, அதன் பேரழிவுகரமான விளைவுகள் மிக மிகத் தெளிவாகி வருகின்றன. அரசு சொத்துக்களைக் கொள்ளையடித்ததன் மூலமாக பில்லியன்களை சுருட்டி உள்ள செல்வந்த மேற்தட்டுக்களின் நலன்களைப் பாதுகாக்கும் அடிப்படையில், புட்டின் ஆட்சி அமைப்புரீதியாக ஐரோப்பிய மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் பக்கம் திரும்ப இலாயகற்று இருக்கிறது. அதற்கு மாறாக, அது ரஷ்ய தேசியவாதத்திற்கு முறையிடுகிறது. ரஷ்ய, உக்ரேனிய மற்றும் ஐரோப்பாவின் ஏனைய பகுதிகளின் தொழிலாளர்களுக்கு இடையிலான பிளவுகளுக்கு எண்ணெய் வார்க்கும் இந்த பிற்போக்குத்தனமான கொள்கை, ஏகாதிபத்தியத்தால் பற்றப்பட்டிருக்கும் பிரதான துருப்புச்சீட்டுக்களில் ஒன்றாகும். ஐரோப்பிய முதலாளித்துவத்தின் அரசியலானது, பொறுப்பற்ற ஆக்ரோஷம் மற்றும் விரக்தியின் ஒரு கலவையாகும். அவர்களது அமைப்புமுறையின் மோசமான நெருக்கடியை முகங்கொடுத்துள்ள அவர்கள், 1914 மற்றும் 1939இல் செய்ததைப் போலவே ஒரு பேரழிவை நோக்கி முண்டியடித்துச் செல்கிறார்கள். தொழிலாள வர்க்கத்தால் மட்டுமே அதுபோன்றவொரு பேரழிவைத் தடுக்க முடியும். அது சர்வதேச அளவில் ஒன்றிணைந்து, முதலாளித்துவத்தை தூக்கியெறிய போராட வேண்டும். யுத்தத்திற்கு எதிரான போராட்டம் என்பது சோசலிசத்திற்கான போராட்டத்திலிருந்து பிரிக்க முடியாதது. இதற்கு ஒரு சர்வதேச புரட்சிகர கட்சியை—நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவை—மற்றும் அதன் தேசிய பகுதிகளாக சோசலிச சமத்துவ கட்சிகளைக் கட்டுவது மிக முக்கிய முன்நிபந்தனையாகும். |
|
|