தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
ஜேர்மனி ஈராக்கிற்கு துருப்புகளை அனுப்புகிறது
By Wolfgang Weber Use this version to print| Send feedback இந்த வாரம், ஜேர்மன் இராணுவம் (Bundeswehr) ஈராக்கிற்கு சிப்பாய்களின் ஒரு முதல் குழுவை அனுப்பியது. ஆறு சிப்பாய்களைக் கொண்ட அந்த நடவடிக்கை, ஆயுதங்கள் மற்றும் இராணுவ தளவாடங்களை ஒப்படைப்பதில் ஒத்துழைக்க இராணுவ தொடர்பு சாவடி என்றழைக்கப்படுவதை எர்பிலில் அமைக்க உள்ளது. அந்த குழு எண்ணிக்கையில் சிறிதாக இருந்தாலும், ஈராக்கிற்கு ஜேர்மன் இராணுவத்தின் நிபுணர்களை அனுப்புவதென்பது பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும், அத்துடன் மிக விரைவிலேயே அதை விஸ்தரிக்கவும் முடியும். 2003இல் ஜேர்மன் அரசாங்கம் ஈராக்கிற்கு எதிரான அமெரிக்க தலைமையிலான யுத்தத்தை, ஒரு இராணுவ சாகசம் என்று வர்ணித்து, அதன் எதிர்ப்பை அறிவித்திருந்தது. இப்போதோ அது 180 பாகை திருப்பம் எடுத்துள்ளதுடன், அமெரிக்கா அந்நாட்டில் குண்டுவீசுவதைத் தொடங்கியுள்ள நிலையில் அதில் ஈடுபடுவதற்காக ஈராக்கிற்கு ஆயுதங்களையும், சிப்பாய்களையும் அனுப்பி வருகிறது. நிவாரணப் பொருட்களும், ஆயுதங்களும் ஐ.நா பணியாளர்களால் பெறப்பட்டு வினியோகிக்கப்படுமென முதலில் அது வாதிட்டிருந்தது, ஆனால் இப்போதோ ஜேர்மன் இராணுவம் நேரடியாக இந்த பணியில் ஒத்துழைத்து, மேற்பார்வையிட வேண்டுமென அரசாங்கம் முடிவெடுத்திருக்கிறது. அனுப்புவதற்குரிய முதல் தொகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டுவிட்டதாகவும், அடுத்த சில நாட்களில் அது வடக்கு ஈராக்கில் போய் சேருமென்றும் ஜேர்மன் இராணுவத்தின் பத்திரிகை மற்றும் செய்தி தொடர்புத்துறை அறிவித்தது. இந்த தொகுப்பில் 4,000 பாதுகாப்பு கவசங்கள், 4,000 போர்கால தலைக்கவசங்கள், நூற்றுக் கணக்கான ரேடியோக்கள், கண்ணிவெடிகள் கண்டறியும் கருவிகள் மற்றும் இரவுநேரத்தில் பார்க்க உதவும் சாதனங்கள் உள்ளடங்கின்றன. அடுத்த தொகுப்பும் எந்தளவிற்கு சாத்தியமோ அந்தளவிற்கு விரைவாக அனுப்பப்படுமென கிறிஸ்துவ ஜனநாயக யூனியன்/கிறிஸ்துவ சமூக யூனியனின் ஜேர்மன் நாடாளுமன்றக் (Bundestag) குழுவின் தலைவர் வோல்கர் கௌடர் அறிவித்தார். அவற்றில் டாங்கி-எதிர்ப்பு ஆயுதங்கள், மற்றும் கண்ணிவெடிகள், துப்பாக்கிகள், வெடிகுண்டுகளைச் செயலிழக்கச் செய்யும் உபகரணங்கள் உள்ளடக்கப்படும். திங்களன்று நடக்கவுள்ள ஒரு நாடாளுமன்ற விவாதத்தற்கு முன்னரே, சிப்பாய்களை நிலைநிறுத்துவது குறித்து அரசாங்கம் ஏற்கெனவே முடிவெடுத்துவிட்டது. அதன்மூலமாக அது நாடாளுமன்றம் மீதான அதன் அலட்சியத்தையும், அவமதிப்பையும் எடுத்துக்காட்டி இருக்கிறது, ஆகவே ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவுகளை நடைமுறைப்படுத்த முத்திரை குத்துவது மட்டுமே நாடாளுமன்றம் வகிக்கும் பாத்திரமாக இருக்கும். ஈராக்கில் இராணுவ தலையீடு என்பது இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜேர்மன் அரசாங்கம் மற்றும் ஜேர்மன் ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்ட ஒரு புதிய இராணுவவாத வெளியுறவு கொள்கையின் பாகமாக இருக்கிறது. அது அனைத்து நாடாளுமன்ற கட்சிகளாலும் ஆதரிக்கப்படுவதோடு, பரந்த மக்கள் எதிர்ப்புக்கு எதிராக ஆளும் மேற்தட்டின் ஒரு வெளிப்படையான சூழ்ச்சியின் வடிவத்தில் நடைமுறைக்கும் கொண்டு வரப்படுகிறது. அந்த ஆயுத வினியோகங்களை மக்களில் 70 சதவீதத்தனர் எதிர்க்கின்றனர் என்பதைக் கருத்துக்கணிப்புகள் வெளிப்படுத்தியதற்கு அடுத்த நாள் அந்த நாடாளுமன்ற விவாதம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதேநேரத்தில், அதிகாரத்திலிருக்கும் கட்சிகளோ அவ்விடயத்தில் நாடாளுமன்றம் எடுத்துக் கூறுவதற்கு ஒன்றுமில்லை என்பதை தெளிவுபடுத்தி இருந்தன. ஆயுத வினியோகங்கள் மற்றும் துருப்புகளைத் தேர்ந்தெடுப்பதையும் எந்தளவிற்கு இருக்க வேண்டுமென்பதையும் முடிவு செய்யும் ஒரு சிறிய குழுவின் உறுப்பினர்களாலும், ஜேர்மன் இராணுவத்தின் தலைமையாலும் அம்முடிவு எடுக்கப்பட்டிருந்தது. கடந்த ஞாயிறன்று ஜேர்மன் தொலைக்காட்சியின் "கோடை" நேர்காணல் என்றழைக்கப்படுவதில் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல், “எந்தவொரு சூழ்நிலையிலும் ஈராக்கில் ஜேர்மன் சிப்பாய்களின் எதிர்ப்பு நடவடிக்கைகள்" இருக்காதென திட்டவட்டமாக நிராகரித்தார். ஆனால் வெறும் நான்கு நாட்களுக்குப் பின்னர், மிக விரைவிலேயே போரிடுவதற்கு இட்டுச் செல்லக்கூடிய நிலைமைகளின் கீழ் ஈராக்கில் ஜேர்மன் சிப்பாய்களை நிலைநிறுத்த ஒப்புக் கொண்டுள்ளார். ஆப்கானிஸ்தானில் அதன் தலையீடுகளைத் தொடர்ந்து, ஜேர்மன் இராணுவத்தின் நடவடிக்கை, பள்ளிக்கூடங்கள் கட்டுவது மற்றும் கிணறு வெட்டுவது போன்ற "முற்றிலும் மனிதாபிமான நடவடிக்கைகளாக" கூறப்பட்டதில் பங்கெடுத்து இருந்ததாக அப்போது பெரிதும் சித்தரிக்கப்பட்டது. யதார்த்தத்தில், கனரக ஆயுதமேந்திய சிப்பாய்கள் பின்னர் "மனிதாபிமான சிப்பாய்களை" பாதுகாக்க அனுப்பப்பட்டு, போர் நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதிக்கப்பட்டார்கள். இறுதியில், 2009 இலையுதிர் காலத்தில் (ஆப்கானிஸ்தானின்) குண்டூஸில் படுகொலைகளில் போய் முடிந்த கொடூர வகை முறைகளைப் பயன்படுத்தி ஜேர்மன் இராணுவம் முற்றிலுமாக யுத்தத்தில் ஈடுபட்டது. “இனப்படுகொலைகளாக" வர்ணித்து "இஸ்லாமிய IS [இஸ்லாமிய அரசு] போராளிகள் குழுக்களின் அட்டூழியங்களைக்" காரணங்காட்டி சான்சிலர் மேர்க்கெல் சமீபத்திய இராணுவ நடவடிக்கையை நியாயப்படுத்தினார். “பெரும் துன்பத்தில் இருக்கும் நிராதரவான மக்களுக்கு உதவியும், ஆதரவும் தேவைப்படும் அளவிற்கு ஈராக்கில் இனப்படுகொலை நடந்து வருகிறது," என்று சமூக ஜனநாயகக் கட்சி (SPD) நாடாளுமன்ற தலைவர் தோமஸ் ஓப்பெர்மேன்னே Handelsblatt பத்திரிகைக்குத் தெரிவித்தார். ஈராக்கில் நிலைமை "அதிர்ச்சியூட்டுவதாக" இருக்கிறது, ஆனால் குர்திஷ் போராளிகள் குழுக்கள் "இஸ்லாமிய அரசுக்கு எதிராக எதிர்த்து நிற்கும்" தகைமையைப் பெற்றிருக்கிறார்கள் என்று ஜெனரல் ஹான்ஸ்-லோதர் தோம்ரோஸ் அறிவித்தார். ஈராக்கில் ஜேர்மன் சிப்பாய்கள் நிலைநிறுத்தப்படுவது குறித்த ஊடக அறிக்கைகள், “கிறிஸ்துவர்கள் போன்ற மத சிறுபான்மை அங்கத்தவர்கள் அடிக்கடி படுகொலை" செய்யப்படுவது குறித்து ஐ.நா எச்சரித்துள்ளது என்பதையே மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றன. அமெரிக்க வெளியுறவுத்துறை தகவலின்படி, அமெரிக்கா, கனடா, குரோஷியா, அல்பானியா, இத்தாலி, பிரான்ஸ், டென்மார்க் மற்றும் இங்கிலாந்து ஆகிய அனைத்தும் யுத்தப் பிரதேசத்திற்கு ஆயுதங்களை அனுப்புகின்றன என்பதையும் அவை வலியுறுத்துகின்றன. செக் குடியரசு ஏற்கனவே ஒட்டுமொத்தமாக 1.5 மில்லியன் யூரோ மதிப்பில் கலாஷ்னிகோவ் எந்திர துப்பாக்கிக்கேற்ற மில்லியன் கணக்கான தோட்டாக்களை, கையெறிகுண்டுகளை மற்றும் டாங்கி-எதிர்ப்பு ஆயுதங்களை அனுப்ப தயாரிப்பு செய்துள்ளது. சர்வதேச ஆயுத ஏற்றுமதி குறித்து வெளிப்படையாக குவியும் செய்திகள், ஈராக்கில் ஜேர்மன் இராணுவ தலையீடு ஒன்றும் புதிதல்ல என்பதையும், ஜேர்மனி ஒரு நல்ல துணைவன் என்பதையும் போன்ற ஒரு பிம்பத்தை உருவாக்க நோக்கம் கொண்டுள்ளன. உண்மையில், ஈராக்கில் சிப்பாய்களை நிலைநிறுத்துவது என்பது உலகின் எங்கேனும் நடக்கும் யுத்தங்களிலோ அல்லது உள்நாட்டு யுத்தங்களிலோ ஜேர்மனி சிப்பாய்களுடன் மற்றும் ஆயுதங்களுடன் களமிறங்காது என்று இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின்னர் அனைத்து ஜேர்மன் அரசாங்கங்களாலும் பிரகடனப்படுத்தப்பட்ட கோட்பாட்டை பகிரங்கமாக முறிப்பதாகும். இந்த கோட்பாடு முதலாம் மற்றும் இரண்டாம் உலக யுத்தங்களில் ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் பேரழிவுகரமான யுத்த குற்றங்களுக்கு விடையிறுப்பாக இருந்தது. 1945க்குப் பின்னர், ஜேர்மன் பொருளாதாரரீதியிலும் இராணுவரீதியிலும் மேலாதிக்க உலக அதிகாரமான அமெரிக்காவிடம் அடிபணிந்திருந்தது. ஆனால் ஸ்ராலினிச ஆட்சியின் பொறிவும், சோவியத் ஒன்றியத்தின் கலைப்பும் நிலைமையை மாற்றியமைத்ததோடு, வல்லரசுகளுக்கு இடையே மோதல்களை தீவிரப்படுத்தியது. இப்போது, மாபெரும் கூட்டணியால் (பழமைவாதிகள் மற்றும் சமூக ஜனநாயகவாதிகளால்) அதிகாரம் கைப்பற்றப்பட்டதை தொடர்ந்து, ஜேர்மனி மூச்சடைக்கும் வேகத்தோடு, இரக்கமின்றி ஓர் இராணுவவாத போக்கைத் தொடங்கியுள்ளது. கடுமையான மக்கள் எதிர்ப்பிற்கு இடையேயும், ஜேர்மனியை ஓர் உலகளாவிய இராணுவ சக்தியாக ஸ்தாபிக்க ஆளும் வர்க்கம் தீர்மானகரமாக இருக்கிறது. |
|
|