World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

அடக்குமுறைகளுக்கு மத்தியிலும் யாழ் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் அரங்கேற்றிய நாடகம்

By Subash Somachandran
27 August 2014

Back to screen version

ஜூன் 27ம் திகதி யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைத்துறையின் இறுதியாண்டு மாணவர்களால்எங்கள் கதை என்னும் தெரு நாடகம் (நாடக ஆற்றுகை) பல்கலைக்கழக அதிகாரிகளின் தடையின் மத்தியிலும் அரங்கேற்றப்பட்டது. இந்த நாடகத்துக்கு அதிகாரிகளால் விதிக்கப்பட்ட தடையானது, யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் கருத்து வெளிப்பாட்டு சுதந்திர உரிமையின் மீதான ஒரு அப்பட்டமான தாக்குதலாகும்.

நாடகம் நடத்தப்பட்ட தினத்தில், சிரேஷ்ட மாணவ ஆலோசகரால் (மாணவர்களைக் கண்காணிக்க நிர்வாகத்தால் நியமிக்கப்பட்ட விரிவுரையாளர்) தடையை வலியுறுத்தி அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்தில், நாடகம்பல்கலைக்கழக உயர் நிர்வாகிகளை அவமானப்படுத்தும் வகையிலும், பல்கலைக்கழக கல்வியை குழப்பும் வகையிலும், சமூகத்துக்கு பல்கலைக்கழகம் பற்றி தவறான செய்திகளை வழங்குவதாகவும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் அக்கடிதம், தங்களின் தடை உத்தரவினை மீறி இந்த நாடகத்தினை அரங்கேற்றினால், “நாடகத்தில் பங்கேற்றோருக்கு எதிராக எதிர்காலத்தில் எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு அவர்களே பொறுப்பு என மிரட்டியிருந்தது.

2009ல் யுத்தம் முடிந்த பின்னர், யாழ் பல்கலைக்கழகம் இராணுவப் புலனாய்வாளர்களின் தொடர்ச்சியான கண்காணிப்பின் கீழேயே உள்ளது. போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்தும் மாணவர்கள் கைது செய்யப்பட்டார்கள். பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்களுக்கு மரண அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுகின்றன. மாணவர் தலைவர்கள் அவ்வப்போது குண்டர் தாக்குதல்களுக்கு உள்ளாகி வந்துள்ளனர். தற்பொழுது மாணவர்களினது சுயாதீனமான ஒன்று கூடல்கள் மற்றும் கலந்துரையாடல்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது

கடந்த மே மாதத்தில் கூட, யுத்தத்தில் இறந்த உறவினர்களை நினைவு கூர்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளக்கூடும் என்ற காரணத்தினால் யாழ் பல்கலைக் கழகத்தினை ஒரு வாரம் ஜனநாயக விரோதமாக இராணுவம் இழுத்து மூடியது. அதன் தொடர்ச்சியாக மாணவர்களையும் பேராசிரியர்களையும் அச்சுறுத்தியது. மிக ஆரம்ப கட்ட எதிர்ப்புக்காட்டுபவர்கள் கூட பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கொழும்பு 4ம் மாடிக்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கும், சித்திரவதைக்கும் உட்படுத்தப்பட்டுள்ளனர். இப்போதும் கூட அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலேயே தாங்கள் இருப்பதாக மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் கூறுகின்றார்கள்.

மாணவர்களின் கல்விப்பாடமுறை, விரிவுரையாளர்கள் தெரிவு, ஊழியர்கள் நியமனம் உட்பட ஒவ்வொரு சின்னச்சின்ன விடயங்களையும் அரசியல் ரீதியாக அணுகும் பல்கலைக்கழக நிர்வாகம், “அரசியல் சார்ந்த விடயங்கள் இருக்கக்கூடாது என்ற நிபந்தனையின் அடிப்படையில் நாடகத்துக்கான அனுமதி வழங்கியமை, அது யாருடைய நலனின் பேரில் செயற்படுகிறது என்பதற்கு மிக அண்மைய உதாரணமாகும்.

இந்த மிரட்டல்களின் அடிப்படையில், தங்கள் மீது விசாரணை மற்றும் விரிவுரைகளில் கலந்துகொள்வது தடைசெய்யப்படலாம், தாங்கள் இறுதியாண்டு மாணவர்களாதலால் ஏதாவது கல்வி ரீதியான பழிவாங்கல்களுக்கு ஆளாக்கப்படலாம் என நாடகத்துக்கு பொறுப்பான மாணவர்கள் அஞ்சி நாடகத்தினை நிறுத்துவதற்கு முடிவெடுத்திருந்தனர். ஆனாலும், நூற்றுக் கணக்கான மாணவர்கள் நாடக குழுவினருக்கு ஆதரவாக கோஷமிட்டு, “நாடக குழுவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டால், அதற்கு எதிராக நாங்கள் ஒன்றுபட்டுப் போராடுவோம் என ஆதரவு கொடுக்க முன்வந்தனர். இருநூறுக்கும் மேற்பட்டோர் சுற்றி நிற்க நாடகம் ஆரம்பமானது. அங்கு விரிவுரையாளர்களையோ அல்லது நிர்வாகிகளையோ காணமுடியவில்லை.

பல்கலைக்கழக ஒடுக்குமுறை நிலமைகளையும், இறுதியாண்டு மாணவர்கள் பட்டப்படிப்பு முடிந்தபின்னர் வேலை பெறமுடியாத அவர்களின் நியாயமான ஏக்கங்களையும், இந்த 23 நிமிட நாடகம் மையமாக கொண்டுள்ளது.

நாடகம், இது எங்கள் கதை, உங்கள் கதை, எங்கள் எல்லோரினதும் கதை என்ற ஒரு கவர்ச்சி வாக்கியத்தோடு பார்வையாளர்களை நாடகத்திற்குள் ஈர்க்கிறது. “மலைகளைப்போல் உயர்வானவர்களாயும், பள்ளத்தாக்குகள் போல் ஆழமானதாகவும், எங்கள் முன்னோர்கள் போல் உறுதியானவர்களாகவும் என்ற பாடலுடன் ஆரம்பமாகி அது தனது நோக்கத்தை வெளிப்படுத்த தவறவில்லை.

இயல்பாக இயங்கிக்கொண்டிருக்கு ஒரு சமூகம் தாக்குதலுக்குள்ளாகிறது சமூக வாழ்க்கைமுறை முற்றாக அழிக்கப்படுகிறது. சிறிய குட்டைக்குள் இருக்கும் குறைந்தளவு தண்ணீருக்காக ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு ஓடுகின்றார்கள், ஆனால் அவர்களுக்கு தண்ணீர் கிடைக்காமல் மரணத்தைத் தழுவுகின்றனர்.

அடுத்த காட்சி, இவ்வாறு வீழ்ந்து கிடக்கும் மக்களை அதிகாரம் படைத்த ஒரு சர்வாதிகாரி அடிமைப்படுத்தி, அவர்கள் மேல் சவாரி செய்து கொண்டு, தான் வைத்தது தான் சட்டம் என்ற அடிப்படையில் ஆட்சி செலுத்துகிறார். “பத்து தத்துவங்களை முன்வைத்து அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுகிறது. மாணவர்கள் மத்தியில் வரும் எதிர்ப்புக்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படுகிறது.

தமது எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்காது அமைதியாக வெளியில் நிற்பவர்கள் மீது நாடகம் கோபத்தை காட்டுகிறது. தமது கருத்துக்களுடன் உடன்படாதவர்கள் தொடர்பாக முடிவெடுப்பதற்கு ஒபாமாவை தொடர்புகொள்கிறார்கள். அவர், அவர்களைஉதவாக்கரைகள் என அழைக்கலாம் என ஆலோசனை வழங்குகிறார். தமது கருத்துடன் உடன்படாதவர்களைஉதவாக்கரைகள் என நாடகத்தினர் திட்டித் தீர்ப்பதோடு தமது பங்கிற்கு அவர்களைசனியன்மூதேசிநாய்கள்பேய்கள் என்றும் சேர்த்துக்கொண்டனர். உடன்படாதவர்களை முழங்காலில் இருத்தி தாக்குகிறார்கள்.

இந்தக் காட்சி, 1980 களில் ஆயுதப்போராட்ட இயக்கங்கள் அரும்பிக்கொண்டிருந்த வேளையில், தமது கருத்துக்களுடன் உடன்படாதவர்களைதுரோகிகள்உளவாளிகள் என வரைவிலக்கணம் செய்து, மின்கம்பங்களில் கட்டி கொலைசெய்து கொண்டாடிய பாரம்பரியங்களையும், அதன் தொடர்சியாக இன்றைய நாடகக் குழுவினரின்ஜனநாயகத் தன்மையின் உட்பொருளையும் பேயுருவில் கண்முன் நிழலாடச் செய்துள்ளது.

உண்மையில் இந்த காட்சிகள், இன்றைய ஆட்சியின் தன்மையையும், அதற்கு சேவைசெய்யும் EPDP, இராணுவம் மற்றும் EPDP சார்பான அதிகாரிகளின் நடவடிக்கைகளையும் மட்டும் அடையாளப்படுத்தவில்லை. அத்தோடு தமிழ் தேசிய வாத வேலைத்திட்டத்திற்கு வெகுஜனங்கள் மத்தியில் ஆதரவில்லாத நிலையையும், அதற்கு TNA, TNPF மத்தியில் உள்ள பிரதிபலிப்பையும் வெளிக்காட்டுகிறது.

நாடகத்தில் அடுத்த காட்சிகள், பல்கலைக்கழகத்துக்குள் மாணவ மாணவிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், அரசாங்க ஆதரவு அதிகாரிகளின் தகுதியற்ற தன்மை, நிர்வாக சூழ்ச்சிக்கையாளல்கள், ஊழல், பாலியல் துஷ்பிரயோகம், பட்டதாரி மாணவர்கள் பல்கலைக்கழகத்தினை விட்டு வெளியேறிய பின்னர் தொழில் கிடைக்காமை என்பவற்றினைக் காட்டுகின்றது.

இக் காட்சிகளுக்கூடாக குறிப்பாக உயர்கல்வி மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் வெளிக்கொணரப்பட்ட போதிலும், நாடகம் காட்டுவதுபோல், அந்தப் பிரச்சினைகளுக்கான முழுப்பொறுப்பாளி குறிப்பிட்ட ஒரு அரசாங்கமோ அல்லது அதற்குச் சார்பான ஒரு நிர்வாகமோ அல்லது தனிப்பட்ட அதிகாரிகளோ அல்ல. மாறாக, இலாப நோக்கத்தை அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவ அமைப்பு முறையேயாகும். நடப்பில் உள்ள அரசாங்கத்தை, இன்னொரு அரசாங்கத்தாலும், அதிகாரிகளாலும் பிரதியீடு செய்வதற்கூடாக சமூகப் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டுவிட முடியாது.

முதலாளித்துவ ஆட்சிமுறை தொடர்ந்து நீடிப்பதற்கு உதவிய ஜனநாயக ஆட்சி வடிவங்கள் எல்லாம், சமூக சமத்துவமின்மையின் இன்றைய மட்டத்துடன் பொருந்துவதாக இல்லை. வரலாற்று ரீதியாக திவாலாகிப் போயுள்ள முதலாளித்துவ அமைப்பு முறை, புரட்சிகர சோசலிச முன்னோக்கினால் தூக்கியெறியப்பட வேண்டும். இதற்கு குறைந்த ஒரு வேலைத்திட்டத்தால் எந்தவொரு அடிப்படை பிரச்சினையையும் தீர்ப்பதை கற்பனைகூட செய்து பார்க்கமுடியாது.

யுத்தம், இனவாதம், அடக்குமுறை, இலஞ்சம், ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் போன்ற அனைத்தும் இன்று நாம் வாழும் முதலாளித்துவ அமைப்பு முறையின் தீர்க்கமுடியாத நெருக்கடிகளின் விளைவுகளே ஆகும். இந்த நாடகம், எத்தனை நெருக்கடியின் மத்தியில் அரங்கேற்றப்பட்டபோதும், இனவாத யுத்தத்திற்கான மூல காரணத்தை பற்றியோ அல்லது யுத்தத்திற்குப் பின்னரான ஒட்டுமொத்த சமூகமும் முகங்கொடுக்கும் புறநிலையான பிரச்சினைகளைப் பற்றியோ அல்லது இன்றைய அரசியல் நிலைமைகளுக்கும் இலங்கை முழுவதும் உள்ள பல்கலைக்கழக மாணவர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கும் இடையே உள்ள உறவு பற்றியோ எந்தவித கவனமும் செலுத்தவில்லை.

மாறாக தற்போதைய அரசாங்கத்தையும், அதன் அதிகாரிகளையும் ஒரு வலதுசாரி, தேசியவாத அடித்தளத்தில் விமர்சிப்பதோடு, அடுத்து என்ன? என்ற கேள்வியை வெற்றிடத்தில் விட்டுவிடுகிறது. அது சாத்தியமான வகையில் UNP தலைமையிலான TNA ஐ உள்ளடக்கிய ஒரு கூட்டணி அரசாங்கத்துக்கு சமிக்ஞை காட்டுவதாகவே இருக்கிறது. “தங்களின் கதைக்குஇது எங்கள் எல்லோரினதும் கதை என சாயம் பூசுவது, பழைய பாரம்பரியத்தின் புதிய முயற்சி மட்டுமேயாகும்.

ஏதாவதொரு முதலாளித்துவ எதிர் கட்சிக்குப் பின்னால் அணிதிரள்வதன் மூலமோ அல்லது இன்று மனித குலத்தை மூன்றாவது உலக யுத்தப் பேரழிவை நோக்கி இழுத்துச் செல்லும் ஏகாதிபத்திய சக்திகளுக்கு அழைப்பு விடுப்பதன் மூலமோ இன ஒடுக்குமுறைக்கு முடிவுகட்டிவிட முடியாது. இலாபத்துக்காக உற்பத்தி செய்யும் முதலாளித்துவ அமைப்பு முறையின் தவிர்க்க முடியாத விளைவுகளான இன ஒடுக்குமுறை சமூக நல வெட்டுக்கள் மற்றும் மனித குலம் எதிர்கொள்ளும் ஏனைய பிரச்சினைகளுக்கும் முடிவுகட்ட வேண்டுமெனில், முதலாளித்துவ அமைப்பு முறைக்கே முடிவுகட்டுவது அவசியமாகும். இதைச் செய்யக்கூடிய ஒரே சமூக சக்தி தொழிலாள வர்க்கம் மட்டுமே ஆகும். ஆகவே ஐக்கியப்பட்ட சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாள வர்க்கத்தினதும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தினதும் தலைமையின் கீழ் அணிதிரள்வதன் மூலம் மட்டுமே மாணவர்கள் தமது கல்வி உரிமைகளையும் கருத்து வெளியிடும் சுதந்திரத்தையும் பாதுகாக்க முடியும்.